டாமர் மற்றும் நீல்சன் இருவரும் தங்களது தனிமையைப் போக்கிக்கொள்ள துணை வேண்டுமென்பதற்காக தொடர் கொலைகளைச் செய்ததாகக் கூறியிருந்தார்கள். இருவருக்கும் நண்பர்கள் மற்றும் பழகியவர்கள் என யாருமில்லை. அவர்களுக்கும் சமுதாயத்துக்கும் உள்ள தொடர்பே ஓரினச்சேர்க்கை பார்களில் இருக்கும் அற்ப சொற்ப தருணங்கள் மட்டுமே. நீல்சன் கொலை செய்த பிறகு இறந்த உடல்களோடு பேசிக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பானாம். டாமர் கொலை செய்தவர்களின் உடலைச் சாப்பிடுவதன் மூலம் அவர்கள் தன்னுடன் இருப்பதாக நம்பியிருக்கிறான். இதன் மூலமாக அவர்கள் அவனோடு பிரிக்க முடியாதபடி கலந்துவிடுவார்கள் என்பது அவனது பைத்தியக்காரத்தனமான நம்பிக்கை.
-From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens
மறுநாள் காலையில் மார்த்தாண்டன் தடயவியல் துறையினரிடம் அறிக்கையை வாங்கிக்கொள்ள புறப்பட்டுப் போய்விட்டார். மகேந்திரன் மட்டுமே காவல்நிலையத்தில் இருந்தார்.
அங்கே வந்த இதன்யா பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்க யாரை அனுப்பப்போகிறீர்கள் என விசாரித்தாள்.
“மானிங் கான்ஸ்டபிள் போயிட்டார் மேடம்” என்றார் மகேந்திரன்.
“நானும் முரளி சாரும் கலிங்கராஜன் வீட்டுக்குக் கிளம்புறோம்… ஜான் எதாச்சும் பேசுனாரா?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“எங்க மேடம்? நேத்துல இருந்து சொன்னதையே சொல்லிட்டு இருக்கான் அந்தாளு”
சலித்துக்கொண்டார் மகேந்திரன்.
“டி.என்.ஏ டெஸ்ட் ரிப்போர்ட் வந்ததும் தானா வாய் திறக்கும்… அதுவரைக்கும் டென்சன் ஆகாதிங்க.. மார்த்தாண்டன் எப்ப வருவார்?”
“இன்ஸ்பெக்டர் சார் ஜி.ஹெச்சுக்குப் போயிட்டுத் தான் வருவார் மேடம்… அவர் கூட கான்ஸ்டபிள் கனகு போயிருக்காப்ல”
“ஜி.ஹெச்சுக்கா? ஏன்?”
“பெரியவருக்குக் குடும்பம்னு சொல்லிக்க யாருமில்ல மேடம்… அவரோட பாடிய கலெக்ட் பண்ண யாரும் வரமாட்டாங்க… அதனால நானே அதை முறைப்படி வாங்கி இறுதிச்சடங்கு செஞ்சிடுறேன்னு சார் சொல்லிட்டார் மேடம்”
மகேந்திரன் சொல்லவும் இதன்யாவுக்கு ஒரு நொடி மார்த்தாண்டனின் இளகிய உள்ளத்தை எண்ணி மனம் நெகிழ்ந்துபோனது. அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அங்கிருந்து வெளியேறியவள் முரளிதரனுடன் காவல் வாகனத்தில் ஏறி சாந்திவனத்துக்கு வந்து சேர்ந்தாள்.
கடந்த முறை வந்த போது சல்யூட் வைத்த பெரியவர் அமர்ந்திருந்த சிறிய வீடு பூட்டிக் கிடந்தது. அவர் அமரும் இருக்கை காலியாய் இருந்தது.
மரணம் தான் எத்தனை பெரிய சுத்தக்காரன். ஒருவர் இருந்த தடயத்தைக் கூட விட்டு வைக்காமல் அவரது இருப்பையே சுத்தமாகத் துடைத்து எடுத்துக்கொண்டு போய்விடுகிறானே!
வீட்டின் அழைப்புமணியை அழுத்தியதும் கதவு திறந்தது. கதவைத் திறந்தவள் நவநீதம். அவளது முகம் வாடியிருக்கவும் இதன்யாவுக்குள் எண்ணற்ற கேள்விகள் எழுந்தன.
“கலிங்கராஜன் இருக்குறாரா?” முரளிதரன் வினவவும்
“ஐயா ஹாஸ்பிட்டலுக்குப் போக கிளம்பிட்டிருக்காங்க” என சோர்ந்த குரலில் பதில் வந்தது அவளிடமிருந்து.
இதன்யாவுக்கோ சென்னைக்குக் கிளம்பும் முன்னர் ஜானோடு அவளை இரகசியப்பாதையின் அருகே பார்த்த நினைவு வந்தது.
விசாரணையின் போது அது சம்பந்தமாகப் பேசிக்கொள்ளலாமென தீர்மானித்தவள் முரளிதரனோடு கலிங்கராஜனைச் சந்திக்கச் சென்றாள்.
அரசு மருத்துவமனைக்குக் கிளம்பிக்கொண்டிருந்தவர் இருவரையும் பார்த்ததும் “வாங்க சார்… என்ன விசயம்?” என கேட்க
“உங்க வீட்டுல உள்ள சர்வெண்ட்ஸ் எல்லாரையும் விசாரிக்கணும் சார்” என்றாள் இதன்யா.
“முருகையா மர்டர் கேஸ் சம்பந்தமாவா?”
“இனியா மர்டர் கேஸ் சம்பந்தமா” முத்தாய்ப்பாக இதன்யா கூறவும் கலிங்கராஜனின் முகத்தில் அவநம்பிக்கை பரவியது.
ஆக, என்னைச் சுற்றி யாருமே உண்மையானவர்கள் இல்லையா என்ற நிராசையோடு “தாராளமா விசாரிங்க மேடம்” என்றார் மனிதர்.
தொடர்ந்து “முருகையாவோட பாடிய வாங்கி அவருக்குச் செய்ய வேண்டியதை செஞ்சு வழியனுப்ப வேண்டிய கடமை எனக்கு இருக்கு… ரொம்ப நல்ல மனுசன் மேடம்” என்றார் வருத்தத்தோடு. அதில் பொய்யில்லை.
இதன்யா அப்படியா என்பது போல பார்த்தவள் “செய்யுங்க சார்.. எத்தனை முதலாளிங்களுக்கு இந்த மாதிரி நல்ல மனசு இருக்கு… சொல்லுங்க” என்கவும்
“என் குடும்பத்துக்கு முப்பது வருசத்துக்கு மேல விசுவாசமா உழைச்சவரு… என் மூத்தமகளுக்கு எல்லா விதத்துலயும் பாதுகாப்பா இருந்ததார்…. ஜான் பேச்சைக் கேட்டு அவரை நிறைய தடவை தப்பா நினைச்சிருக்கேன்… அவருக்கு என் மகள் மேல இருந்த அக்கறை கூட எனக்கு இருந்ததில்ல… இப்ப ரெண்டு பேருமே இந்த வீட்டுல இல்ல… அவங்களைப் புரிஞ்சிக்காம இருந்ததுக்கான தண்டனையா குற்றவுணர்ச்சியோட எஞ்சியிருக்குற வாழ்நாளை எப்பிடி கழிக்கப்போறேன்னு தெரியல” என சோர்வாகப் பதிலளித்த மனிதர் குமாரியை அழைத்தார்.
வந்தவரிடம் “எல்லா சர்வெண்ட்சையும் இவங்க விசாரிக்கப்போறாங்க… விசாரணைக்கு ஒத்துழைப்பு குடுக்கணும்னு சொல்லிடுங்கம்மா” என்று ஆணையிட்டுவிட்டு அரசு மருத்துவமனைக்குக் கிளம்பிச் சென்றுவிட்டார்.
இதன்யாவும் முரளிதரனும் ஹாலில் அமர்ந்திருக்க பணியாட்கள் ஒவ்வொருவராக வந்தார்கள்.
கிளாரா அவளது அறையிலிருந்து எட்டிப் பார்ப்பது தெரிந்தாலும் பார்க்காததைப் போல காட்டிக்கொண்டாள் இதன்யா.
தோட்டத்தைப் பராமரிக்கும் நால்வரும் இனியாவைப் பற்றி சொன்னது எதுவும் புதியத் தகவல் இல்லை. ஒன்றே ஒன்று தவிர.
“இனியாக்கு ராமபாணப்பூ மேல கொள்ளை பிரியம்… பக்கத்துல ஏகலைவன் சார் வீட்டுல அந்தக் கொடி உண்டு… ஒருதடவை அது வேணும்னு சார் கிட்ட கேட்டு திட்டு வாங்குச்சு அந்தப் பொண்ணு… பாவம், செடி கொடி வளக்குறதுல ரொம்பப் பிரியம் இனியாக்கு”
ஏற்கெனவே நிஷாந்தின் விசாரணையிலும் இனியா ஏகலைவனின் வீட்டுக்கொடியைப் பற்றி கூறியது ஞாபகம் வந்தது இதன்யாவுக்கு. அந்த நால்வரையும் முரளிதரனின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு இனியா விசாரிக்க விரும்பியது குமாரியிடம். அவரைத் தனியே விசாரிக்க விரும்புவதாக அவள் கூறவும் அந்த வீட்டில் தனக்கு ஒதுக்கப்பட்ட அறைக்கு அழைத்துச் சென்றார் குமாரி.
அறையை அடையும் முன்னர் ஆயிரம் முறையாவது குமாரியின் கண்கள் கிளாராவின் அறையை நோட்டமிட்டிருக்கும். கூடவே நவநீதத்தின் பார்வை குமாரியைத் துப்பாக்கி தோட்டாவாகத் துளைப்பதையும் கவனித்தபடி அவரது அறைக்குள் நுழைந்தாள் இதன்யா.
இருவரும் அமர்ந்ததும் இதன்யா அவரிடம் கேட்ட முதல் கேள்வியே இனியாவுக்கும், கிளாராவுக்கும் இடையில் என்ன பிரச்சனை என்பதுதான்.
அக்கேள்வி அசாதாராணமான முறையில் குமாரியைத் திணறடித்தது. பதில் சொல்லாமல் விழித்தவரை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தாள் இதன்யா.
“நீங்க கிளாராவுக்கு நம்பிக்கையான ஆள்னு கேள்விப்பட்டேன்… கண்டிப்பா உங்களுக்கு இது தெரிஞ்சிருக்குமே”
“அது… இனியாவோட…” என திணறியவர் பின்னர் ஏதோ யோசனை தோன்றவும் “இனியாவோட லவ் பத்தி மேடமுக்குத் தெரிஞ்சிடுச்சு… அவங்க அவளைத் திட்டுனாங்க… அதனால இனியாக்கு மேடம் மேல கோவம்” என்றார்.
“நம்புற மாதிரியான பொய் தான்” இதன்யா நிதானமாக உரைக்கவும் குமாரி அதிர்ந்தார்.
“இல்ல மேடம்… இதுதான் உண்மை” என்றார் அவசரமாக.
“இறந்தவ வந்து உண்மைய சொல்லப்போறதில்லங்கிற தைரியம்”
இதன்யாவின் குரலில் இருந்த உஷ்ணத்தால் வாயடைத்துப்போனார் குமாரி.
“லுக்! பசங்க என் கிட்ட சொன்னவரைக்கும் கிளாரா ஏதோ தப்பு பண்ணி இனியா கிட்ட மாட்டிருக்காங்க… அதுக்குக் காரணம் நீங்க தான்… இன்னும் ஓப்பனா சொல்லணும்னா மிஸ்டர் ஏகலைவன் கூட கிளாரா பேசுனதை இனியா பாத்திருக்காங்க… அதை நீங்க கிளாரா கிட்ட போட்டுக் குடுத்து அவங்க ரெண்டு பேருக்குள்ளவும் சண்டை மூட்டி விட்டிருக்கிங்க… இது எனக்கு முன்னாடியே தெரிஞ்ச விசயம் தான்… உங்க வாயால உண்மைய சொல்லுங்க… கிளாராக்கும் ஏகலைவனுக்கும் என்ன சம்பந்தம்? அவங்களுக்குள்ள தப்பான உறவு எதுவும் இருந்து அதை இனியா தெரிஞ்சுக்கிட்டதால அவங்க ரெண்டு பேரும் இனியாவைக் கொன்னுருப்பாங்களோனு எனக்கு டவுட் இருக்கு… அதுக்கு அவங்களுக்கு நீங்க துணையா இருந்திருக்கிங்க”
“இல்ல மேடம்… நான் எதுவும் பண்ணல… கிளாராம்மா கொலை பண்ணுற அளவுக்குக் கொடூரமானவங்க இல்ல… குழந்தைங்க புரிஞ்சிக்காம பேசுறாங்க… பெரியவங்க உறவு பத்தி புரிஞ்சிக்கிற அளவுக்கு குழந்தைங்களுக்குப் பக்குவம் போதாது மேடம்”
“ஓ! குழந்தைங்களுக்குப் பக்குவமில்ல… சரி அதை விட்டுருவோம்… ஜானும் நவநீதமும் கிளாராவை நீங்க கைக்குள்ள போட்டு வச்சிருக்கிங்க, உங்களை கேக்காம கிளாரா எந்த முடிவும் எடுக்க மாட்டாங்கனு சொன்னாங்க… அது உண்மையா? அப்ப கட்டாயம் கிளாரா – ஏகலைவன் உறவு உங்களுக்குத் தெரிஞ்சிருக்குமே”
“ஐயோ மேடம்… அவங்க ரெண்டு பேரும் இவ்ளோ மோசமா என்னை பத்தி பேசிருப்பாங்கனு நான் நினைச்சுக் கூட பாக்கல… அவங்க ஒரு தடவை இந்த வீட்டுல பணம் திருடி இனியா கிட்ட மாட்டிக்கிட்டாங்க… அதை பத்தி இனியா கிட்ட நான் தான் சொன்னேன்… அந்தக் கோவத்துல இப்பிடிலாம் என்னை பத்தி இல்லாததும் பொல்லாததுமா பேசிருக்காங்க”
படபடப்புடன் பேசிய குமாரியின் பதற்றம் இதன்யாவுக்குத் தவறு செய்து மாட்டிக்கொண்டவரின் பதற்றமாகவேத் தோன்றியது. குறுக்கே பேசாமல் அவர் என்ன சொல்கிறார் என கவனிக்க ஆரம்பித்தாள்.
விசாரணையில் ஒருவரைப் பற்றி அவரிடமே கேட்டுத் தெரிந்துகொள்வதை விட அவரைப் பிடிக்காத நபரிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது பல நேரங்களில் கை கொடுக்கும்.
யாரும் பிடிக்காதவர்களைப் பற்றி உயர்வாகப் பேசப்போவதில்லை. அதே நேரம் கட்டுப்பாட்டை இழந்து பேசுவதில் துப்பு கொடுத்து மாட்டிக்கொள்வார்கள். இதில் குமாரி, நவநீதம், ஜான் எல்லாம் இரண்டாம் ரகம்.
“நவநீதமும் ஜானும் தான் கிளாராம்மாவ சாத்தான் க்ரூப்ல சேர்த்து விட்டது… அதுல இருந்து நான் அவங்களை மீட்டது பிடிக்காம நவநீதம் என்னைப் பத்தி தப்பா சொல்லிருக்கலாம் மேடம்”
“ஓ… அவங்க ஏன் கிளாராவை அந்தக் குரூப்ல சேர்த்துவிட்டாங்க? ஏதாச்சும் காரணம் இருக்கணுமே… காசு பணம் இல்லாதவங்க சாத்தானை கும்பிட்டா வாழ்க்கை மாறும்னு நினைக்குறதுல நியாயம் இருக்கு… உங்க கிளாராம்மாக்கு என்ன குறை?”
இவ்வளவு நேரம் கொதித்த குமாரி இப்போது மீண்டும் அதிர்ந்து வாயடைத்துப் போனார்.
“என்ன பதில் வரல? ஜானும் நவநீதமும் உங்க மேல இருக்குற கோவத்துல பழி போட்டதாவே வச்சுக்கலாம்… நீங்க அப்பாவி… ஆனா உங்க கிளாராம்மாக்கு சாத்தான் குரூப்ல சேரவேண்டிய அவசியம் ஏன் வந்துச்சு?”
குமாரி கைகளைப் பிசைந்தார். பின்னர் மெதுவாக “கலிங்கராஜன் ஐயாவோட பிசினசுக்காக கிளாராம்மா அந்த குரூப்ல சேர்ந்தாங்க மேடம்” என்றார்.
அது உண்மையாக இருக்குமென இதன்யாவுக்குத் தோன்றவில்லை., இருப்பினும் நம்பியதைப் போல காட்டிக்கொண்டாள்.
“சரி… உங்க கிளாராம்மாக்கும் ஏகலைவனுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஏகலைவன் சார் கலிங்கராஜன் ஐயாவோட பிசினஸ்ல பணம் போடுறதா இருந்தார்.. அதை வச்சு தான் பழக்கம்… மத்தபடி ரெண்டு வீட்டு முதலாளிங்களும் காலங்காலமா பக்கத்துவீட்டுக்காரங்களா இருந்தாங்கங்கிற உறவு மட்டும் தான்”
இது அப்பட்டமான பொய் என்று இதன்யாவுக்குத் தோன்றியது. ஏகலைவன் இன்னும் திருமணம் ஆகாத பிரம்மச்சாரி. அவனது சட்டையை மார்போடு அணைத்தவண்ணம் நின்ற கிளாராவை எப்படி இதன்யாவால் நல்லவிதமாக எண்ண முடியும்? கூடவே கலிங்கராஜனுக்கும் தன் மனைவியின் நடத்தையில் சந்தேகம். இந்த குமாரி வேண்டுமென்றே சில உண்மைகளை மறைக்கிறார்.
இவர் கொலையாளியாக இல்லாமல் இருக்கலாம். கொலையில் நேரடியாகச் சம்பந்தப்படாதவராகக் கூட இருக்கலாம். ஆனால் இவர் மறைக்கும் உண்மைக்குப் பின்னே கொலைகாரன் பற்றிய பெரிய தகவலொன்று ஒளிந்திருக்கலாம் அல்லவா!
குமாரியிடம் இதற்கு மேல் தோண்டித் துருவும் எண்ணமில்லை இதன்யாவுக்கு. அடுத்து நவநீதத்தை விசாரிக்க வேண்டியுள்ளதே!
அங்கிருந்து வெளியேறியவள் நவநீதத்தை விசாரிக்க தோட்டத்திற்கு அழைத்துச் சென்ற போது மகேந்திரனிடமிருந்து வாட்சப் செய்தி வந்தது.
என்னவென வாசித்தவள் விசாரணையை மறந்து முரளிதரனை அழைத்துக்கொண்டு சாந்திவனத்திலிருந்து காவல்நிலையத்துக்குக் கிளம்பினாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

