உதிரப்போகும் நேரத்தில் நறுமணத்தோடு
கிளையிடம் மலர் விடைபெற
தனது வாசனையை நினைவாக விட்டுச் செல்ல
பிரிவின் தருணத்தில் வாசனை அடர்த்தியாக
இதுவொரு விசித்திரமான வசந்தகாலம்!
-அட்சரனின் வேதா
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“என்ன அச்சு? நான் ஒரு விஷயம் கேள்விப்பட்டேனே? உண்மையா?”
காலையில் வந்ததும் வராததுமாக இலக்கியா விசாரித்தாள்.
“அப்பிடி என்ன கேள்விப்பட்ட நீ?” என்றபடி சர்வதேச புத்தகக் கண்காட்சிக்கு ஹெல்வட்டாஸின் சார்பில் சமர்ப்பிக்கப்படக் கூடிய கேட்டலாக் ஒன்றைத் தயார் செய்துகொண்டிருந்தான் அட்சரன்.
“நீயும் வேதாவும் பேட்ச் அப் ஆகிட்டீங்களாமே?”
ராகமாக இழுத்தபடியே அவனுக்கு எதிரே அமர்ந்தாள்.
அட்சரன் தண்ணீர் தம்ளரை எடுத்து அருந்தியபோதே “அப்புறம் ஹனிமூன் எல்லாம் போகப்போறதா கேள்விப்பட்டேன்?” என்று வேண்டுமென்றே சீண்டவும் அவனுக்குக் குடித்துக்கொண்டிருந்த தண்ணீர் புரையேறியது.
சிரமப்பட்டுத் தன்னைச் சமாளித்தவன் “ஹனிமூனா? அவ படிச்சிட்டிருக்கா” என்று சொல்லவும் இலக்கியா தனது கையிலிருந்த மொபைலைக் காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ! பிருந்தா கேட்டுச்சா? அச்சுவும் வேதாவும் பேட்ச் அப் ஆயாச்சு. நீங்க இனிமே உங்க லைஃபைப் பாருங்க.” என்று அவள் மடமடவெனப் பேசவும் அட்சரன் கண்களால் ‘என்ன வேலை பார்த்திருக்கிறாய்’ என வினவினான்.
“ஒரு நிமிஷம்! அச்சு உங்ககிட்ட பேசணுமாம்”
மொபைலைத் திணித்தவள் ரகசியக்குரலில் “ஒழுங்கா இவளுக்கு ஃபுல்ஸ்டாப் வச்சிடு” என்று சொல்ல அட்சரன் பற்களைக் கடித்துக்கொண்டு மொபைலை வாங்கி பேச ஆரம்பித்தான்.
“கங்கிராட்ஸ் அட்சரன். உங்க மேரேஜ் லைஃபுக்கு என்னோட வாழ்த்துகள்”
பிருந்தா வாழ்த்தவும் “தேங்க்ஸ் பிருந்தா! அப்புறம் சாரி! நான் உங்ககிட்ட மேரேஜ் விவகாரத்தைச் சொல்லிருக்கணும்” என்றான் சங்கடத்தோடு.
“இட்ஸ் ஓ.கே. நீங்க என்கிட்ட ஃப்ரெண்ட்லியாதானே பழகுனீங்க. நான்தான்… ப்ச்… இதை மறந்துடுவோம். நான் கேரளத்துக்கு இன்னைக்கு நைட் ஃப்ளைட்ல ரிட்டர்ன் போயிடுவேன். புக் ரிலேட்டடா ஏதாச்சும் அவசியம்னா மட்டும் காண்டாக்ட் பண்ணுறேன்”
பிருந்தாவிடம் பேசிவிட்டு அழைப்பைத் துண்டித்தவன் இலக்கியாவை முறைத்தபடி அவள் கையில் போனைக் கொடுத்தான்.

“என்ன முறைப்பு? ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்ட. இனி ஏகப்பத்தினி விரதனா வாழப்பாரு. அதை விட்டுட்டு ஏகப்பட்ட பத்தினி விரதனா ஆக முயற்சி பண்ணுன, அங்கிள் கிட்ட போட்டுக் குடுத்துடுவேன்”
மிரட்டிவிட்டுப் போகிறவளைப் பார்த்துத் தலையில் அடித்துக்கொண்டான் அவன்.
அதே நேரம் வேதவதிக்கு லயோலா கல்லூரியின் முதுகலை வணிகவியல் வகுப்பறையும் புதிதாகக் கிடைத்த தோழியான பிரியம்வதாவும் புதிய இடத்தில் அவளுக்கு வரும் பிரமிப்பையும் பயத்தையும் போக்கிவிட்டதால் அவள் அங்கே இயல்பாகப் பொருந்திப் போனாள்.
அடுத்தடுத்த நாட்களில் ஆர்வத்தோடு கல்லூரிக்குக் கிளம்புகிறவளின் முகத்தில் துளி கூட பயம் தெரியவில்லை.
அவள், பிரியம்வதா இன்னும் மூன்று பெண்கள் சேர்ந்த ஐவர் குழுவில் கலகலப்புக்கும் சிரிப்புக்கும் மட்டுமே இடமிருந்தது. பிரியம்வதா கொஞ்சம் குறும்புக்காரப்பெண். புதியவர்களிடம் தயக்கமின்றி பேசுபவளும்கூட.
வகுப்பறையிலும் படிப்பிலும் அவள் வேதவதிக்குத் துணையாக இருந்தாள் எனலாம்.
இந்தப் புதிய சூழலில் வேதவதியின் பயமும், கூச்சமும் விடைபெறத் தொடங்கியதில் கல்லூரியோடு சேர்த்து ஒரு வாரமாக அவள் பகுதி நேர மேலாளராகப் பணிக்குச் செல்லும் ராஜி சூப்பர் மார்க்கெட்டும் ஒரு காரணம் எனலாம்.
அங்குள்ள ஊழியர்கள் முதலில் முதலாளியின் மருமகள் என்று பயபக்தியோடு பழகினாலும் அவர்களிடம் அவள் இயல்பாகப் பழகிய காரணத்தினால் அவர்களும் தங்களது கூட்டை விட்டு அவளிடம் மரியாதையும் சிநேகமும் காட்டினார்கள்.
பத்து நாட்கள் இவ்வாறாகக் கடந்திருக்க சரியாக வாரவிடுமுறைக்கு முந்தைய இரவில் மறுநாள் அருள்மொழி – வானதிக்கு வைக்கப்போகும் விருந்துக்கான மெனுவைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள் வேதவதியும் ராஜேஸ்வரியும்.

“தேங்காய் பால் சாதத்துக்கு எல்லாமே எடுத்து வச்சிட்டேன். பால் மட்டும் காத்தால நீ எடுத்துடு. காய்கறி எல்லாம் அச்சுவ கட் பண்ணச் சொல்லிடுவோம்”
“அவருக்கு அதெல்லாம் கட் பண்ணத் தெரியுமா?”
“அவன் இந்த வீட்டுல நான் சமைக்குறதை தினமும் பாக்குறான்ல. மெனோபாஸ் டைம்ல அவனும் அவரும்தான் சமையலைப் பாத்துக்கிட்டாங்க. எனக்கு என்னவோ வீட்டு வேலைக்கு ஆள் வைக்குறதுல பிரியமில்ல வேதா. என் கையால நானே செய்யணும். அப்பதான் திருப்தி. எல்லாத்துக்கும் மிஷின் இருக்குல்ல. அதனால வேலையும் சுளுவா முடியுது. அதுக்காக அடுக்களை வாசமே ஆகாதுனு ஒரு ஆம்பளைப்பையனை விட்டு வச்சுடக்கூடாது. நீயும் கத்துக்க. நாளை பின்ன உனக்கு மகன் பிறந்தா அவனையும் அப்பப்ப செய்யவிடு”
“மகனா?” திருதிருவென விழித்த வேதவதி தன்னை ராஜேஸ்வரி சந்தேகமாக நோக்கியதும் அசட்டுச்சிரிப்பை உதிர்த்தாள்.
“உன் சிரிப்பே சரியில்லையே”
அனுபவச்சாலி மாமியாரிடம் மாட்டிக்கொள்ளாதவிதமாய்க் கதை சொல்லி மெதுவாகத் தனது அறைக்கு நழுவினாள் வேதவதி.
அந்த அறையின் பால்கனி அவளுக்குப் பிடித்த இடம். அதிலும் இரவில் சிலுசிலுவெனக் காற்று வேறு வீசும் என்பதால் அங்கே அமர்ந்துவிடுவாள். அவளுக்காக அங்கே ஒரு பீன்பேகும் போட்டிருந்தார் ராஜேஸ்வரி.
மருமகளுக்கு எது பிடித்தாலும் செய்து கொடுத்துவிடும் துடிப்பு அவருக்கு.
அங்கே மடிக்கணினியோடு போய் அமர்ந்துவிட்டவள் அன்றைய தினம் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட்டுக்கான தலைப்புகளை இணையத்தில் தேட ஆரம்பித்தாள்.
சில நிமிடங்கள் கழித்து ஏதோ ஒரு குறுகுறுப்பில் பக்கத்துப் பால்கனியைப் பார்த்தவள் அங்கே அட்சரன் அமைதியாய் நின்று அவளை நோட்டமிடுவதைக் கண்டதும் விறைப்பாக முகத்தை வைத்துக்கொண்டாள்.
“என்ன?”
“ஒன்னுமில்ல. டைம் பாஸ் ஆகலனு வந்தேன். நீ கதை எழுதுறதைப் பாத்ததும் டிஸ்டர்ப் பண்ணவேண்டாம்னு தோணுச்சு. அதான் சைலண்டா நிக்குறேன்”
“நான் ஒன்னும் கதை டைப் பண்ணல. அசைன்மெண்ட் ரெடி பண்ணிட்டிருக்கேன்”
“சீரியஸ்லி? இனி எழுதப்போறதில்லையா?” அவனது குரலில் தீவிர பாவனை.
“அது என் பர்சனல். உங்களுக்கு அதுல என்ன இன்ட்ரெஸ்ட்?”
“ஐயோடா! நல்லா எழுதுற பொண்ணாச்சேனு அக்கறைல கேட்டேன்”
“உங்க அக்கறை எனக்கு எதுக்காம்? நீங்க அக்கறை காட்டாம இருந்திருந்தா இந்நேரம் என் லைஃப் அமைதியா இருந்திருக்கும்”
“இந்த உலகத்துல உசுரைக் காப்பாத்துனவனை இவ்ளோ மட்டமா பேசுறவ நீ ஒருத்திதான்.”

“நானா உங்களைக் காப்பாத்தச் சொன்னேன்?”
“ஏன் பேசமாட்ட? அன்னைக்கு எமதர்மன் கூட லாங் ட்ரைவ் போகத் தயரான உன்னோட உயிரை அவர்கிட்ட இருந்து காப்பாத்துனதுக்கு இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ. சத்தியவான் உயிரைக் காப்பாத்துன சாவித்திரி மாதிரி உன் உயிரை இந்த அட்சரன் காப்பாத்திருக்கான். மறந்துடாத”
வேதவதி சட்டென மடிக்கணினியை மூடி வைத்தாள்.
“உங்களுக்கு என்ன வேணும் இப்ப? சும்மா இருந்தவகிட்ட வம்பு வளர்க்குறீங்க?”
“நீ எனக்கு அத்தைப்பொண்ணு பாரு, வம்பிழுக்குறதுக்கு.” என்றவன் “சீரியசா கேக்குறேன், உன் மேனுஸ்கிரிப்ட்டைக் குடு” என்றான்.
வேதவதி அவனைக் கடுப்பாய் முறைத்துவிட்டு மடிக்கணினியோடு இடத்தைக் காலி செய்தாள்.
“ஏய் வேதா” என்று அழைத்தவனின் குரல் காற்றில் கலந்தது.
“ரொம்ப கில்டியா இருக்குனு கேட்டேன். ஓவராதான் பண்ணுறா” என்று அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே யாரோ அவன் பின்னே வந்து நின்றார்கள்.
சட்டெனத் திரும்பியவன் வேதவதி அங்கே நிற்கவும் அமர்த்தலாகக் காட்டிக்கொண்டான்.
“உங்க இஷ்டத்துக்கு என் கதையப் பந்தாடுவீங்களா? என் மேனுஸ்கிரிப்ட்டைச் சுக்கல் சுக்கலா கிழிச்சுக் காத்துல ப்பூனு ஊதிப் பறக்க விட்டாலும் விடுவேன், உங்ககிட்ட தரமாட்டேன்”
கை நீட்டிக் கண்களை உருட்டி அவள் கடுப்போடு சொன்ன விதம் அவனுக்குள் சிரிப்பை வரவழைப்பதாய்!
“அவ்ளோ ஈகோ” என்று தலை சரித்துச் சிரிப்போடு அவன் சொல்ல
“அதை யார் சொல்லுறது? உலகத்துல இருக்குற எல்லாரோட ஈகோவையும் மூட்டை கட்டித் தராசோட ஒரு பக்கத்துல வச்சிட்டு இன்னொரு பக்கம் உங்க ஒருத்தரோட ஈகோவ வச்சா ரெண்டு தட்டும் சமமா நிக்கும். நீங்க என்னோட செல்ஃப் ரெஸ்பெக்ட்டுக்கு ஈகோனு செல்லப்பேர் வைக்குறீங்க” என்றவளின் முகத்தில் அத்துணை ரோஷம்.
அட்சரனுக்கு அவள் பேசாமல் அப்பாவியாய் விழித்தப் பொழுதுகள் எல்லாம் ஏதோ முன்ஜென்மம் போலத் தோன்றியது.
“எவ்ளோ பேசுற நீ?” என்றவனின் குரலில் சின்னதொரு பாராட்டு ஒளிந்திருந்ததை அவள் கண்டுகொள்ளவில்லை.
“இப்ப நான் பேசுறதும் உங்களுக்குக் குத்தமா தெரியுதா?”
“நான் அப்பிடி சொன்னேனா? லிசன்! நமக்குள்ள இருக்குற பிரச்சனை, அதை விட்டுடு. வேதா கஜேந்திரன்ங்கிற எழுத்தாளரோட எழுத்துக்கு ஒரு அடையாளம் கிடைக்கணும்னு நினைக்குறேன். நல்ல எழுத்தை மிஸ் பண்ண விருப்பமில்ல” பேண்ட் பாக்கெட்டுகளில் கைகளை வைத்தபடி உதட்டைப் பிதுக்கினான் அவன்.
“நீங்க என் ஸ்பைரலை மூஞ்சில தூக்கியெறிஞ்சீங்க. அதை நான் மறக்கமாட்டேன்” அவன் முகத்தினருகே கையை ஆட்டி அவள் சொன்னதும் சட்டெனக் கையைப் பற்றிக்கொண்டான் அட்சரன்.
“ஆமா! தப்புதான் அது. நான் இல்லனு சொல்லலையே. அதுக்குச் சாரியும் கேட்டேனே. இன்னும் என்ன செய்யணும் உனக்கு? ஒன்னு சொல்லட்டுமா? மேல் ஈகோ திமிர்த்தனமா ஆட்டிடியூடா இருக்கும். ஆனா ஃபீமேல் ஈகோ இருக்குதே, அது எல்லாத்தையும் அழிச்சிடும். இந்தக் கல்யாணம், சண்டை எல்லாத்தையும் தூக்கி ஓரமா வை. நாம பிரிஞ்சாலும் உனக்கு லிட்டரரி ஏஜெண்டா இருக்குறதுல எனக்கு எந்தப் பிரச்சனையும் கிடையாது. வேதவதிக்குள்ள இருக்குற வேதா கஜேந்திரன்ங்கிற படைப்பாளிய நான் இழக்க விரும்பல. இதை இன்னொரு விதமாவும் யோசிக்கலாம்”
“எப்பிடி?”
“நடந்த பிரச்சனைல நான் மட்டும்தான் விக்டிம்னு நினைச்சு நான் உன்னை ரொம்ப படுத்திட்டேன்ல. அதுக்குச் சின்னதா ஒரு பிராயசித்தம்னு வச்சுக்க.”
வேதவதி ஒற்றைப் புருவத்தை மட்டும் ஏற்றியிறக்கினாள்.
“அப்பிடி என் மேனுஸ்கிரிப்ட்டைக் குடுத்தாலும் இதுதான் என் கடைசி கதையா இருக்கும். என் முதல் புத்தகம்தான் என்னோட கடைசி கதை. யோசிச்சுப் பாத்தாலே விசித்திரமா இருக்குல்ல. எனக்கு இது பிடிக்கல”
“அப்ப தொடர்ந்து எழுது”
“எவ்ளோ சாதாரணமா சொல்லுறீங்க?” கேட்டவளின் குரலில் ஆதங்கம்.
“என்ன? அழப்போறியா?”
வேதவதி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
“எனக்கு அந்த இன்சிடெண்ட்ல எங்கம்மா அழுதது ஒரு ட்ராமா (trauma) மாதிரி மனசுல பதிஞ்சிடுச்சு. அதுல இருந்து என்னால வெளிய வரமுடியும்னு தோணல. ஐ அம் நாட் ப்ளேமிங் யூ. ஆனா நடந்த பிரச்சனைல நான் வேதா கஜேந்திரனைத் தொலைச்சிட்டேன்னு தோணுது. ஐ காண்ட் ரைட்”
கண்ணீரோடு சிரிப்பவர்கள் அழுது அரற்றுபவர்களை விடப் பெரும் சோகத்தை நமக்குள் கடத்திவிடுவார்கள்.

பெரிய கருவிழிகளில் எழுத முடியாத துயரத்தின் சாயலாய்க் கண்ணீரும், உதடுகளில் கழிவிரக்கத்தின் விளைவாய் முறுவலும் கலந்து நின்றவளின் தோற்றம் வெகு எளிதில் அட்சரனின் மனதுக்குள் பெரும் பாதிப்பை உண்டாக்கிவிட்டது.
அனிச்சையாய் அவனது கரம் நீண்டு அவளது கன்னத்தைத் தாங்கிக்கொண்டது.
“ஐ டோண்ட் திங்க் சோ. படைப்பாளிகள் என்னைக்குமே தொலையமாட்டாங்க. அவங்களுக்கு ஒரு இடைவெளி மட்டும்தான் தேவைப்படும். ஐ ஹோப், வேதா கஜேந்திரன் வில் பவுன்ஸ் பேக் ஃப்ரம் திஸ் ட்ராமா (வேதா கஜேந்திரன் சீக்கிரம் அந்த ட்ராமால இருந்து மீண்டு வருவானு நம்பிக்கை இருக்கு)”
“அஹான்?” கேலிப்பார்வை அவளிடம்.
“வாழ்க்கையோட்டத்துல தொலைஞ்சு போறதும், மீண்டு வர்றதும் ஒரு சைக்கிள் மாதிரி திரும்ப திரும்ப நடந்துக்கிட்டே இருக்கும் வேதா, லைக் சூரியன் உதிக்குறதும் மறையுறதும் மாதிரி.”
விருப்பு வெறுப்பு கிண்டல் கேலிக்கு இடமளிக்காத சாதாரண உரையாடல் இருவரையும் இலகுவாக இயல்பாக உணரவைத்தது. கொஞ்சம் இதமாகவும்.
ஆனால் வேதவதி பெண்ணாயிற்றே! ஒரு ஆடவனின் கரம் ஆறுதலாய்க் கன்னம் தாங்கியிருந்தாலும் அது கொடுக்கக் கூடிய குறுகுறுப்பை அவளது நரம்பு மண்டலங்கள் தாமதித்து உணர்ந்துகொண்டன.
சட்டென அட்சரனின் கரத்தைத் தட்டிவிட்டவள் “டோண்ட் டச் மீ” என்று சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்ய முற்பட்டாள்.
“மேனுஸ்கிரிப்ட்டை மறந்துடாத”
அவன் சொல்லவும் திரும்பிப் பார்த்தவள் சின்னதொரு முறைப்போடு அங்கிருந்து ஓடிவிட்டாள்.
மறுநாள் விடியலில் அட்சரன் கண் விழித்தபோது வீடே பரபரப்பாக இருந்தது. அன்றைய தினம் அருள்மொழியும் வானதியும் விருந்துக்கு வருகிறார்கள் அல்லவா!
ராஜேஸ்வரியும் வேதவதியும் கொண்டாட்ட மனநிலையில் இருந்தார்கள்.
அட்சரன் நிதானமாகக் காலை கடன்களை எல்லாம் முடித்துவிட்டு மொபைலைப் பார்த்தபடி அன்னையைத் தேடித் தரைத்தளத்துக்கு வந்தான்.
இறங்கி வந்தவனின் மீதே மோதிக்கொண்டாள் பரபரப்பாக மாடியறைக்குச் செல்ல ஓடிவந்த வேதவதி. அதிலும் அவளது தலை அவனது மார்பில் நச்சென்று மோதிய வேகத்தில் வலி கண்டுவிட்டது அட்சரனுக்கு.
வேதவதியும் தலையைத் தடவிக்கொண்டாள். அவளுக்கும் வலிதான்.
அட்சரன் வலியில் முகத்தைச் சுருக்கிக்கொண்டு நெஞ்சைத் தடவியபடியே “கண்ணை எங்கடி வச்சிருக்க? இவ்ளோ பெரிய உருவம் வந்தது கூடவா தெரியல? ம்மா! என் நெஞ்செலும்பு உடைஞ்சிருக்கும் போல. ஈ.சி.ஜி பாத்தே ஆகணும்” என்று சொல்ல
“நான் குளிக்கப் போற அவசரத்துல…” என இழுத்த வேதவதி “ரொம்ப வலிக்குதா?” என அக்கறையோடு கேட்க
“இல்ல! பட்டாம்பூச்சி நெஞ்சுல கிஸ் பண்ணிட்டுப் போன மாதிரி சுகமா இருந்துச்சு. மண்டைய வச்சு நங்குனு மோதிட்டுக் கேள்விய பாரு. உன் தலைக்குள்ள ஸ்கல் இருக்கா? இல்ல இரும்புக்கவசம் இருக்கா?” என்றான் அவன்.
வேதவதிக்கு வலியில் சுழித்த அவனது முகத்தைக் கண்டதும் பரிதாபமானது.
“சாரி! தெரியாம இடிச்சிட்டேன். வலிக்குதா இன்னும்?” என்று அவனது நெஞ்சைத் தடவிக்கொடுக்கக் கை உயர்த்தினாள்.
“ஏய்! டோண்ட் டச் மீ.” என்றான் அவன் அவளைப் போலவே.
வேதவதிக்கு அதில்தான் கடுப்பானது.
“இவர் பெரிய காதல் மன்னன். அப்பிடியே நாங்க மயங்கி இவரைத் தொட்டுட்டாலும்… ரொம்ப ஓவராப் பண்ணாதீங்க”
“நீ மயங்கலனுதான் நான் காத்துக் கிடக்குறேன் பாரு! ப்பே”
அலட்சியமாய் அவன் கையை அசைக்கவும் சட்டென அவனது புஜத்தில் சுளீரென அடித்துவிட்டாள் வேதவதி.
“அந்த வலியோட இந்த வலியும் சேர்ந்துக்கட்டும்.” என்று கடுகடுத்துவிட்டு ஓடி மறைந்தாள் அவனது பார்வையிலிருந்து.
அவளிடம் கத்தப் போனவன் அந்தப் பக்கம் தந்தை வந்ததும் தற்காலிகமாய் அமைதியானான். பின்னர் அன்னை கொடுத்த சுற்றுவேலைகளில் நிரந்தரமாகவே அவன் வேதவதியிடம் சண்டை பிடிக்கும் எண்ணத்தை விட்டுவிட்டான். அதை விட முக்கியமானதாய் அருள்மொழி – வானதியின் வருகை அவனுக்குத் தோன்றிவிட்டது அன்றைய தினத்தில்! அந்தளவில் வேதவதி அவனிடமிருந்து தப்பித்துக்கொண்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

