“வெற்றியை நோக்கி ஓடுறேன், என் கனவை நிறைவேத்த ஓடுறேன்னு சொல்லுறவங்களை எல்லாம் பிரமிப்போட பாக்குற குணம் எனக்குக் கிடையாது… ஏன்னா அப்பிடி ஓடுறவங்க அந்த ஓட்டத்துல அவங்க மேல அன்பு வச்சிருக்குறவங்களைப் புறக்கணிக்கிறாங்கனு எனக்குத் தோணும்… அடுத்தவங்களை விடுங்க… தன்னைப் பத்தி கூட யோசிக்காம இருபத்து நாலு மணி நேரமும் ஆம்பிசனை பத்தி மட்டுமே சிந்திச்சு வாழ்க்கையோட முக்கியமான தருணங்களையும் அன்பான மனுசங்களையும் தவறவிட்டவங்களை நானே சந்திச்சதுண்டு… அவங்க இழந்ததை நினைச்சு தீவிரமான மனபாதிப்புக்கு ஆளாகுற வரைக்கும் சிலரோட நிலமை போனது உண்டு… வெற்றிகரமான மனுசனா இருக்கிறதை விட மரியாதையும், மதிப்பும் தெரிஞ்ச மனுசனா இருக்குறது சிறந்ததுனு ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொல்லிருக்கார்… அப்பிடி ஒருத்தனா தான் நான் வாழ விரும்புறேன்… எந்த ஓட்டத்துலயும் என்னை நேசிக்கிறவங்களை இழக்குற முட்டாள்தனத்தை நான் எப்பவுமே செய்யமாட்டேன்”
-ராகவர்தன்
உப்பிய வயிற்றுடன் மணையில் அமர்ந்திருந்த துவாரகாவின் கன்னங்களில் சந்தனம் சிரித்தது. இரு கரங்களையும் கண்ணாடி வளையல்களும், வெள்ளி மற்றும் தங்கத்தில் செய்யப்பட்ட காப்புகளும் வரிசையாக அலங்கரித்துக்கொண்டிருந்தன.
அகல்யா சந்தனத்தைப் பூசியவர் பூக்களைத் தூவி துவாரகாவையும் விஷ்ணுவர்தனையும் ஆசிர்வதித்தார். கையோடு கொண்டு வந்த காப்புகளை அவளுக்கு அணிவித்தார். கூடவே சில கண்ணாடி வளையல்களையும் அணிவித்து கன்னத்தை வருடி கொஞ்சினார்.
துவாரகாவின் வதனத்தில் தெரிந்த பூரிப்பும், பளபளப்பும் அவளுக்குக் கூடுதல் பொலிவைக் கொடுத்திருந்தன.
அதைக் கவனித்த அனுக்ரஹாவுக்கு மனம் நிறைந்து போனது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“டி அனு! நீ கொண்டு வந்த காப்பை போட்டு விடு” சொன்னவர் விஷ்ணுவர்தனின் அன்னை தனலெட்சுமி.
ஆயிரம் வருத்தங்கள் அவருக்கு அனுக்ரஹா மீது இருக்கலாம். ஆனால் வெறுப்பு இல்லை. அவர் சொன்னதும் ஆசையாக காப்புகளுடன் துவாரகாவை அவள் நெருங்கும்போதே வந்திருந்த உறவினர்களில் சலசலப்பு எழுந்தது.
துவாரகாவின் அன்னைக்கு அனுக்ரஹாவைச் சிறுவயதிலிருந்தே தெரியும் என்பதால் அவர்களை அமைதிபடுத்தியவர் “நீ போட்டுவிடும்மா” என்றார்.
அவளும் துவராகாவின் கரங்களில் வளையல்களை அணிவித்தாள்.
கூடவே “இதே போல குட்டியோட கையில நான் தான் ஃபர்ஸ்ட் வளையல் போடுவேன்… அந்த உரிமைய நான் யாருக்கும் குடுக்கமாட்டேன்” என்று கூற
“நான் சொன்னதைக் கேட்டா உனக்கு டபுள் உரிமை வரும்” எனப் பூடகமாகப் பேசினாள் துவாரகா. அவள் கண்களில் அதிகப்படி ஆர்வம்.
“நோ வே!”
தலையாட்டி மறுத்த அனுக்ரஹாவைச் சோர்வாகப் பார்த்தவள் அடுத்து வந்த கவிதாவைக் கண்டதும் வராதச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டாள்.
“மருமகனுக்கு ஆம்பளை புள்ளைய பெத்துக் குடு”
ஏதோ சொல்லத் துடித்த நாவைக் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி சிரித்து வைத்தாள்.
அவர் சென்றதும் “இந்தம்மாவ பாத்தாலே காண்டாகுது எனக்கு… இதுல இவங்க மக எனக்கு ஓரகத்தி வேற ஆகப்போறா… இந்த அனு மட்டும் கொஞ்சம் புரிஞ்சு நடந்தா இந்நேரம் எல்லாம் நல்லபடியா முடிஞ்சிருக்கும்” எனச் சோககீதம் வாசித்தாள் கணவனின் காதில்.
விஷ்ணுவர்தனுக்கும் மனைவியின் ஆசையில் உடன்பாடு தான். சிறுமியாகப் பார்த்து வளர்ந்த பெண்! அவளது குணாதிசயம் இன்னதென தனது குடும்பத்துக்கே அத்துப்படி. அன்பானவள் வேறு! ஆனால் ராகவர்தன் இதற்கு சம்மதிக்க வேண்டுமே!
அனுக்ரஹாவும் ராகவர்தனும் குணத்தில் மட்டுமில்லை, சொல்லில் செயலில் கூட எதிரெதிர் துருவங்கள். போதாக்குறைக்கு இருவருக்குமிடையே சிறுவயதிலிருந்தே சுமூகமான நட்பும் உறவும் இருந்ததில்லை.
இப்படிப்பட்டவர்களை வாழ்க்கையில் ஒன்றிணைப்பது புத்திசாலித்தனமானக் காரியமாக தனலெட்சுமிக்குப் படவில்லை. தம்பியின் எண்ணம் கூட அதுவாகத் தான் இருக்க வேண்டும் என்பது விஷ்ணுவர்தனின் ஊகம்.
அவனிடம் அனுக்ரஹாவைப் பற்றிய பேச்சை எடுத்தாலே அலட்சியப்படுத்திவிடுவான். அல்லது காது கேட்காதது போல கடந்துவிடுவான். இதில் எங்கிருந்து திருமணப்பேச்சை எடுப்பது?
வீட்டில் சந்தித்துக்கொண்டால் கூட அறிமுகமற்ற மனிதர்களைப் போல நடந்துகொள்பவர்களை என்ன கணக்கில் சேர்ப்பது என்று வீட்டாருக்கே தெரியவில்லை.
வளைகாப்புக்குச் சௌமித்ராவும் வருகை தந்திருந்தாள். வம்படியாக அவளைச் சென்னையிலிருந்து வரவைத்திருந்தார் கவிதா.
அனுக்ரஹாவைப் பார்த்துச் சங்கடமாகப் புன்னகைத்து வைத்தாள் அவள்.
அனுக்ரஹா காப்பு போட்டதைக் கண்டதும் கவிதா தன் மகளிடமும் துவாரகாவுக்கு வளையல் அணிவிக்குமாறு கூற அவளோ மறுத்தாள்.
“அந்த அனு இவங்களுக்குச் சொந்தம் கூட இல்லடி… நீ இந்த வீட்டுக்கு மருமகளாகப் போற… இப்பவே மூத்த மருமக கூட ராசியானா தான் உன்னால இங்க நல்லபடியா வாழமுடியும்… இந்த வீட்டுல துவாரகா வச்சது தான் சட்டமாம்”
கவிதா வற்புறுத்தி அனுப்பி வைக்க வேறு வழியின்றி துவாரகாவின் கரத்தில் வளையல் அணிவித்தாள் சௌமித்ரா.
துவாரகாவுக்கு அவள் மீது எந்த வெறுப்பும் இல்லை. எனவே புன்னகையோடு வளையல்களை ஏற்றுக்கொண்டாள்.
கவிதா தன்னை நோக்கி வந்த மகளிடம் “ராகவ் கூட போய் நில்லுடி… ரெண்டு வார்த்தை வாத்சல்யமா பேசு” என்க
“ப்ச்! இன்னும் எதுவும் முடிவாகலம்மா… நீ கொஞ்சம் சும்மா இரு” என்று கடிந்து கொண்டாள் அவள்.
“நானும் தனாவும் பேசுனாலே எல்லாம் முடிஞ்ச மாதிரி தான்… ஒழுங்கா அவன் கிட்ட நல்லபடியா பேசு” என்று அவர் அதட்டவும் வேறு வழியின்றி ராகவர்தனின் அருகே போய் நின்று கொண்டாள் சௌமித்ரா.
அவளது உடல்மொழியில் தெரிந்த தவிப்பை யார் உணர்ந்தார்களோ இல்லையோ அனுக்ரஹா உணர்ந்துகொண்டாள்.
கண்களால் சௌமித்ராவிடம் தனியே வருமாறு அழைப்பு விடுத்தவள் தனியாக வந்ததும் என்ன பிரச்சனை என விசாரித்தாள்.
“அம்மா கிட்ட இன்னும் என்னோட லவ் பத்தி சொல்லலை அனு… சொன்னா எப்பிடி ரியாக்ட் பண்ணுவாங்கனு பயமா இருக்கு”
“சின்னா என்ன சொல்லுறான்?”
“அவனுக்கு என் மேல ரொம்ப வருத்தம் அனு… அவனோட வருத்தம் நியாயமானது தானே? ப்ச்! ஃபெமினிஷம் எல்லாம் ஃபேஸ்புக்லயும் ட்விட்டர்லயும் பேசுறப்ப நல்லா இருக்கு… வீட்டுக்குள்ள எனக்குப் பிடிச்சவனைப் பத்தி பேசுறதுக்கே பயமா இருக்கு… எவ்ளோ பெரிய ஹிப்போக்ரடிக் நானு?’
சௌமித்ரா தன்னை நொந்துகொள்ளவும் அனுக்ரஹாவுக்குப் பரிதாபமாக இருந்தது.
அது என்னவோ காதல், குடும்பம் என்று வந்துவிட்டால் பெண்கள் மட்டுமே அதீத தவிப்புக்கும், மனவுளைச்சலும் ஆளாவது போல அவளுக்குத் தோன்றியது. மதில் மேல் பூனையாக எந்தப் பக்கம் தாவினாலும் பாதிப்பு என்ற நிலை பெண்களுக்கு!
“டோண்ட் வொரி… வீட்டுல சொல்ல ரொம்ப டிலே பண்ணாத… சின்னா பாவம்… அவன் என்னை உனக்குப் பாத்திருக்குற மாப்பிள்ளை கிட்ட பேசச் சொல்லுறான்” என்றாள் அனுக்ரஹா.
சௌமித்ரா முகத்தில் அதைக் கேட்டதும் பிரகாசம்.
“அவன் சொன்னது சரி தானே… உங்க ரெண்டு பேரோட ஃபேமிலிக்கு இடையிலயும் ரொம்ப நல்ல உறவு இருக்கு… நீ சொன்னா அவர் கேட்டுப்பார் அனு… எனக்காக ராகவ் கிட்ட பேசுறியா?” என்று கெஞ்சத் துவங்கினாள்.
அனுக்ரஹாவுக்கு ‘அவனிடமா?’ என்ற மருட்சி. கூடவே ஒதுக்கமும் கூட.
யோசிக்க நேரமே எடுக்காமல் உடனடியாக மறுத்தாள்.
“என்னால அவன் கிட்ட பேசவே முடியாது… அவனுக்கும் எனக்கும் எப்பவுமே ஆகாது சௌமி… என்ன செஞ்சா நான் ஹர்ட் ஆவேன்னு தேடி தேடி என்னைக் காயப்படுத்துவான்… ப்ச்! இது சரியா வராது”
“என்ன சரியா வராது?”
திடுமென ஒலித்த ராகவர்தனின் குரலில் துள்ளிக் குதிக்காதக் குறையாகத் திரும்பினார்கள் இரு பெண்களும்.
டக்-இன் செய்த நேவி ப்ளூ வண்ண சட்டை, வெண்ணிற பேண்ட்டின் பாக்கெட்டில் கைகளை நுழைத்த வண்ணம் நின்றவன் கேட்ட தொனியில் அத்துணை அழுத்தம்!
‘இவனுடைய கேள்விக்கு நான் ஏன் பதிலளிக்க வேண்டும்?’
அனுக்ரஹாவுக்குள் இருந்த ஈகோவுக்குக் கொம்பு முளைத்தது.
“நீங்க பேசுங்க சௌமி… என்னைப் பிரபா கூப்பிட்ட மாதிரி கேட்டுச்சு” என்று விலகப் போனவளை நகர விடாமல் நிற்க செய்தது குறுக்கே தடையாய் வந்த ராகவர்தனின் கரம்!
வெகு கவனமாக அதிலிருந்து சில மில்லிமீட்டர்கள் தொலைவில் நின்றுவிட்டாள் அனுக்ரஹா.
“எனக்குச் சௌமித்ராவோட அம்மா தான் அவளைத் தேடுனதா ஞாபகம்” அவன் அமர்த்தலாகச் சொன்னதும் தலையை உயர்த்தி அவனை முறைத்தாள் அனுக்ரஹா.
சௌமித்ரா இன்னும் அங்கேயே நிற்கவும் “கொஞ்சம் பெர்ஷனலா பேசணும்” என்றான் ராகவர்தன் அனுக்ரஹாவைச் சுட்டிக்காட்டி.
உடனே ‘விட்டால் போதுமென’ அங்கிருந்து அவள் போய்விட ராகவர்தன் நிதானமாக அனுக்ரஹாவைப் பார்த்தான்.
பார்வை என்றால் சும்மா விழிகளை ஒட்டவைத்து பின் எடுப்பது அல்ல.
வெகு நிதானமாக அவளது சிகையலங்காரத்தில் தப்பித்து கன்னத்தை முத்தமிட்டுக் கொண்டிருந்த கூந்தல் இழையில் ஆரம்பித்து கால் நகத்துக்குப் போட்டிருந்த ‘பேர்ல்’ வண்ண நகப்பூச்சு வரை ஒவ்வொன்றாக அலசும் பார்வை அது.
அதில் அனுக்ரஹா அசௌகரியமாக உணர்ந்தாள். அவனுக்கு முதுகு காட்டி நின்றுகொண்டாள். சற்று முன்னர் துவாரகா சொன்னாளே, இருவருக்கும் திருமணம் ஆகப்போகிறது, இனியாவது இயல்பாகப் பேசிக்கொள்ளுங்கள் என்று! அப்போது அதிர்ந்தாலும் அதற்கு அர்த்தம் இருவருக்கும் அவரவர் குடும்பங்களில் வரன் தேடி வருகிறார்கள் என்பது புரிந்த பிற்பாடு அந்த அதிர்ச்சி மறைந்து போனது. இப்போது இவன் எந்த அதிர்ச்சியைப் பரிசளிக்க வந்திருக்கிறான்?
“என்ன விசயம்?” என்று மொட்டையாக வினவினாள்.
ராகவர்தன் அலட்டிக்கொள்ளாமல் “என்னோட ஃபியான்சி கிட்ட தனியா பேசுற அளவுக்கு என்ன சீக்ரேட் இருக்கு உன் கிட்ட?” என்று விசாரிக்க
“இது உன்னோட ஏ.சி.பி ஆபிஸ் இல்ல, நானும் நீ விசாரிக்க வேண்டிய சஸ்பெக்ட் இல்ல… டோனை மாத்துனா நல்லது” என நறுக்கெனப் பதிலளித்தாள் அவள்.
ராகவர்தன் அந்தப் பதிலில் சினமடையவில்லை. சுவாதீனமாக அவளைக் கடந்து போய் அவள் முன்னே சுவரை ஒட்டிக் கிடந்த சிறிய மேஜை மீது அமர்ந்து ஒரு காலைத் தரையில் ஊன்றிக்கொண்டான்.
“எனக்கு ஆர்டர் போடுற அளவுக்கு நீ வளர்ந்துட்டியா?” என்று கேட்டவனின் குரலில் எள்ளல் ஒட்டியிருக்க அனுக்ரஹாவின் நாசி கோபத்தில் விடைத்தது.
அதைப் பார்த்ததும் அவனது இதழ் சிரிப்பில் வளைந்தது.
“இங்க வர்றப்ப சௌமித்ராவ கல்யாணம் பண்ணிக்க ஓ.கே சொல்லலாமா வேண்டாமானு யோசிச்சேன்… இப்ப வேண்டாம்னு முடிவே பண்ணிட்டேன்”
அனுக்ரஹாவின் விழிகளில் ஒரு நொடி வந்து போன குதூகலத்தைக் காண அவன் தவறவில்லை. அவன் காண்பதற்குள் பாவனையை மாற்றிக்கொண்டதாக நினைத்தவள் வழக்கம் போல ராகவர்தனின் எண்ணப்போக்கைப் புரிந்துகொள்ளவில்லை.
“இதை ஏன் என் கிட்ட சொல்லுற?” எங்கோ பார்ப்பது போல காட்டிக்கொண்டாள்.
“உனக்கு அங்கிள் மாப்பிள்ளை பாத்திருக்கிறதா சொன்னார்”
செய்தி அறிவிப்பாளர் தொனி அவனிடம்.
அனுக்ரஹா அதிர்ந்து போனாள். அப்படி என்றால் துவாரகா விளையாட்டாகப் பேசவில்லை. தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் எப்படி தந்தை இந்தக் காரியத்தைச் செய்யலாம் என்ற கோபம் அவளுக்குள் முகிழ்த்தது. அவளது முகபாவனையைக் கவனித்த ராகவர்தன் மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்து வசதியாக அமர்ந்துகொண்டான்.
அவன் தன்னைக் கவனிப்பதை அறிந்ததும் முகபாவனைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டாள் அனுக்ரஹா.
“எனக்குத் தெரியாது… எனிஹவ், பொண்ணுனு இருந்தா மாப்பிள்ளை பாக்க தான் செய்வாங்க” சின்னாவிடம் சொன்ன அதே பதில்.
“இத்தனை நாளா நீ பொண்ணுங்கிறது அங்கிளுக்கு மறந்து போயிருந்துச்சா?”
கிண்டலாய் ஒலித்த அவனது குரலுக்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை அவள்.
“நீ அவரோட கையை மீறிப் போறதுக்குள்ள உனக்குக் கல்யாணம் பண்ணி வச்சிட்டா கௌரவமா இருக்கும்னு அங்கிள் யோசிக்குறார்… ஆனா அவர் அப்பிடி யோசிக்குறதுக்குக் காரணம் நான் தான்”
வெகு நிதானமாக அவன் சொல்லவும் அனுக்ரஹாவின் இதயத்தில் ஜீரோ டிகிரி குளிர். உடல்மொழியில் தடுமாற்றம் தெரிந்தது!
“ஒன்னுமில்ல… ஆல்கஹால், ட்ரக், மமிதா மர்டர்… இதெல்லாம் கனெக்ட் பண்ணி பாத்துக்க… உனக்கு விடை கிடைச்சிடும்”
அடுத்த நொடி சீறலாக “ஏன் இப்பிடி பண்ணுன ராகவ்?” என்று அவள் கேட்டதும் தான் அவனுக்குத் திருப்தியானது.
“நம்ம அனு சென்னைல ஒர்க் பண்ணுறா… நீயும் அங்க தானே ட்ரான்ஸ்பர் ஆகுற… அவளைக் கொஞ்சம் பாத்துக்கடானு அங்கிள் ஒன் இயருக்கு முன்னாடி நான் சென்னைக்கு ட்ரான்ஸ்பர் ஆனப்ப சொன்னார்… அப்ப இருந்து நீ என் கண்காணிப்புல தான் இருக்க… எந்தப் பிரச்சனையும் இல்லனா நான் ஏன் இதெல்லாம் அங்கிள் கிட்ட சொல்லப்போறேன்? ப்ராப்ளம் வந்துச்சு… சொன்னேன்”
வேண்டுமென்றே அலட்சியம் காட்டி அவன் சொன்ன பதிலில் வெளிப்படையாகத் தனது கோபத்தைக் காட்டினாள் அனுக்ரஹா.
“ப்ராப்ளம் முடிஞ்சாச்சு… தேவையில்லாம அவர் கிட்ட ஏன் நீ சொன்ன? லிசன்! நான் இன்னமும் ஸ்கூல் படிக்கிற அனுக்ரஹா இல்ல… நான் வளர்ந்துட்டேன்… எனக்கானப் பிரச்சனைகளை நானே டாக்கில் பண்ணுற அளவுக்கு எனக்கு மெச்சூரிட்டி வந்தாச்சு… அவர் சொன்னார்னா நீ என்னை கண்காணிப்பியா? எனக்கு இதெல்லாம் சுத்தமா பிடிக்காதுனு தெரிஞ்சும் ஏன் மறுபடி மறுபடி நீ இதையே பண்ணுற ராகவ்? அவர் பாக்குற எந்த மாப்பிள்ளைக்கும் நான் கழுத்தை நீட்டப்போறதில்ல”
ராகவர்தன் தனது காதில் சுண்டுவிரலால் குடையவும் அனுக்ரஹாவின் கோபம் பன்மடங்கானது.
“நீ…”
“அங்கிள் பாத்த பையனுக்கு நீ நோ சொன்னா, அவர் உன்னை என் தலையில கட்டிடுவார்… நீயும் சௌமித்ராவும் பேசுனதைக் கேட்டதுமே சௌமித்ராவ நான் கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு அம்மாக்கு வாட்சப்ல மெசேஜ் அனுப்பிட்டேன்… நவ் ஐ அம் சிங்கிள்… யூ ஆர் இன் டேஞ்சர் ஜோன்”
அவன் இவ்வாறு சொன்னதும் கப்சிப்பாகிப் போனாள் அனுக்ரஹா. யாராவது எரிகிற கொள்ளியைத் தலையில் போட்டுக்கொள்வார்களா?
அவளது அமைதி அவனுக்குச் சிரிப்பு மூட்டியது. அடுத்த நொடியே சிரிப்பை அழித்துக்கொண்டவன்
“ஸ்கூல், காலேஜ்ல நீ என்னோட கண்காணிப்புல இருந்த வரைக்கும் சின்ன தப்பு கூட செஞ்சதில்ல… எந்தப் பிரச்சனைலயும் மாட்டுனதில்ல… முக்கியமா க்ரிமினல் அஃபென்ஸ் எதுலயும் உன் பேர் இன்வால்வ் ஆனதில்ல… அதை மறந்துடாத” என்றான்.
“எப்பவும் என்னைக் கண்காணிக்கிற ஹியூமன் சி.சி.டி.வி இல்லாம நான் மத்த மனுசங்களைப் போல இயல்பா சந்தோசமா வாழ ஆரம்பிச்சிருக்கேன்னு கூட நீ சொன்னதை எனக்கேத்த மாதிரி நானும் சொல்லலாம்”
அனுக்ரஹா பதிலடி கொடுக்க ராகவர்தனின் கண்களில் மெல்லிய எரிச்சல் படர்ந்தது.
“தண்ணி, போதைனு தள்ளாடுறதும், கொலைகேஸ்ல மாட்டுறதும் தான் இயல்பான வாழ்க்கைனு இத்தனை நாள் எனக்குத் தெரியாம போயிடுச்சே” என்றான் அவன்.
“அது எங்க எல்லாரையும் மீறி நடந்த விபத்து… அதுக்காக ஒரேயடியா நீ என்னைக் குத்தம் சொல்லமுடியாது… இன்னொன்னையும் ஞாபகம் வச்சுக்க… எப்பவும் என்னை ரேடார் மாதிரி கண்காணிக்க நீ பிறக்கல… என்னைப் பாத்துக்க எனக்குத் தெரியும்”
பிடிவாதமாக உரைத்தவளின் உறுதியில் ராகவர்தன் அமைதியானான். ஆனால் அவனது ரேடார் விழிகள் வேலைநிறுத்தம் செய்யவில்லை.
மற்றவர்களின் பார்வைக்கும் அவனுடைய பார்வைக்கும் பத்து வித்தியாசங்களைக் கண்டுபிடித்துவிடுவாள் அனுக்ரஹா.
கருவிழிகள் அங்கிங்கு நகராமல் கண்ணிமைக்காமல் எப்படி ஒருவனால் அதிகநேரம் பார்வையை ஒருத்தியின்மீது நிலைக்க முடிகிறதென ஆச்சரியப்படுவாள், இப்போது போல.
என்னவோ அவனது பார்வை அழுத்தமாகப் படிந்தாலே அவளுக்குள் உதறல் ஆரம்பித்துவிடும். பயமா? பதற்றமா? அல்லது வயதுக்குரிய நாணமா? என்னவென அறியாள்! ஆனால் நிச்சயம் அவளை இயல்பாக உணரவைக்கும் பார்வை அல்ல அவனுடையது.
“எதுக்கு நீ ஆணியடிச்ச மாதிரி பாக்குற?” என்று கேட்டவள் அவன் மேஜையிலிருந்து இறங்கி தன்னை நோக்கி வரவும் புடவையின் நுனியைக் கொத்தாகப் பற்றிக்கொண்டாள்.
ராகவர்தன் சுவாதீனமாக அவள் சூடியிருந்த மல்லிகைச்சரத்தின் ஒரு பக்கத்து ஹேர்பின் விலகி சரம் சரிந்திருப்பதைக் கண்டு அதை எடுத்து மீண்டும் சரியாக வைத்துவிட்டான்.
இதெல்லாம் சில நொடிகளில் நடந்தேறிய சம்பவம்.
“இதுக்குத் தான் பாத்தேன்” என்று நிதானமாக உரைத்தவன் அங்கே நிற்காமல் சென்றுவிட அனுக்ரஹா அவனை என்ன கணக்கில் சேர்ப்பதெனத் தெரியாமல் விழிக்கையிலேயே
“பாத்திங்களா ஆன்ட்டி? இதுக்காகத்தான் தனியா வந்திருக்காங்க” என்று பிரபாவதியின் குரல் கேட்டது.
“என் கண்ணால பாத்த அப்புறமும் நம்ப முடியலடி பிரபா… ரெண்டும் எலியும் பூனையுமா இருக்கும்… அப்ப இத்தனை நாளா எங்க கிட்ட இதெல்லாம் மறைச்சிருக்காங்க” எனத் தொடர்ந்து ஒலித்த அகல்யாவின் குரலில் அவர்கள் இருவரின் எண்ணப்போக்கை உணர்ந்து அவசரமாக மறுப்புரை கூற வந்தாள் அனுக்ரஹா.
“நானும் சௌமியும் பேச வந்தோம்…. அவன் எங்களை ஃபாலோ பண்ணிட்டு வந்தான்… அவ்ளோ தான்”
“பாத்தா அப்பிடி தெரியலையே” – பிரபாவதி.
“டி அனு! உங்கப்பாக்கு மட்டும் இது தெரிஞ்சுதுனா ரொம்ப சந்தோசப்படுவார்டி”
குதூகலித்த அன்னையின் உற்சாகத்துக்கு அடிப்படையே இல்லை என்பதை எவ்வாறு புரியவைப்பதெனத் தெரியாமல் மலங்க மலங்க விழித்தபடி நின்றாள் அனுக்ரஹா.
அதே நேரம் மகிழ்வண்ணநாதனிடம் பேசிக்கொண்டிருந்தான் ராகவர்தன்.
“நாளைக்கு அந்த மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை இங்க வரச் சொல்லிருக்கேன் ராகவ்… இன்னும் அகல் கிட்ட கூட சொல்லலை இதைப் பத்தி… இங்க வச்சு பொண்ணு பாத்துட்டாங்கனா அவங்களுக்கும் அலைச்சல் மிச்சம்” என்றார் அவர்.
“நல்லது அங்கிள்… நீங்க சொன்னதுமே அந்தப் பையனைப் பத்தி விசாரிச்சிட்டேன்… எந்தக் கெட்டப்பழக்கமும் கிடையாது… அனுக்கு ஏத்த மாப்பிள்ளை அவன்” என்று நிதானமாகச் சொல்லிக்கொண்டிருந்தான் ராகவர்தன்.
சற்று முன்னர் உரிமையுடன் அனுக்ரஹாவின் பூச்சரத்தைச் சரி செய்தவன் அடுத்தச் சில நிமிடங்களில் அவளுக்குப் பார்த்த மாப்பிள்ளை வீட்டைப் பற்றி விசாரித்த தகவலை அவளது தந்தையிடம் கூறிக்கொண்டிருக்கிறான். உண்மையில் அவன் மனதில் என்ன தான் உள்ளது? அதை அவனே சொல்லும் வரை காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


