“இப்போ ரெண்டு பேரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா?” என்ற ராதிகாவின் குரலில் அமைதியானார்கள் இருவரும்.
“இன்னைக்குச் செஃப்க்கு லீவ் குடுத்தாச்சு! சோ இன்னைக்கு நம்ம மருமகதான் சமைக்கப் போறா! ராகவ் நீ அவளுக்கு ஹெல்ப் பண்ணப் போற! அண்ட் அவ என்ன சொல்லுறாளோ அத மட்டும் நீ பண்ணாப் போதும்! முக்கியமா அவளைத் தொந்தரவு பண்ணாம இருந்தாப் போதும்” என்று கட்டளையிட்டுச் சமையலறைக்கு இருவரையும் அனுப்பிவைத்தார்.
அவர்களுக்காக இல்லையில்லை அவர்கள் சமைக்கப் போகும் உணவுக்காகக் குடும்பத்தினர் ஆவலுடன் காத்திருக்கத் தொடங்கினர்.
கிச்சனுக்குள் நுழைந்ததும் அவந்திகா ராகவிடம் “நான் தாலும், நாணும் ரெடி பண்றேன் ராகவ்! எனக்குக் காபி குடிக்காம கொஞ்சம் தலை வலிக்குது! நீ காபி போடு! ஓகே” என்று கேட்டதும் பலமாகத் தலையாட்டிவிட்டுக் கிளாஸ் டாப்பின் ஒரு பர்னரில் பாலைச் சுட வைத்தான்.
அவந்திகா அவன் காபி போடட்டும் என்று அவனை விட்டுவிட்டு நாணுக்கு மாவு மட்டும் தயார் செய்து வைத்துவிட்டு அவன் கொடுத்த காபியைக் குடித்தாள்.
“எப்படியிருக்கு?” என்று ஆவலுடன் கேட்டவனிடம் மூன்று விரல்களை மட்டும் பதிலாகக் காட்டிவிட்டு வெளியே உள்ளவர்களுக்கும் காபி போடுமாறு கூறியவள் தாலுக்குப் பருப்பை வேக வைத்துவிட்டு நாணுக்கு மாவை எடுத்து உருட்ட ஆரம்பித்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
ராகவும் நல்ல பிள்ளையாகக் கையில் ட்ரேயை எடுத்துக்கொண்டவன் அனைவருக்கும் காபியைச் சென்று கொடுக்க ராதிகா “இந்த ஏப்ரனை மறுபடியும் மாட்டிக்கிட்டியா?” என்று முறைப்புடன் காபியை வாங்கிக்கொண்டார்.
ராகவ் கிச்சனில் நுழைந்தவனிடம் “இந்தத் தால் வேகுதானு மட்டும் பாத்தாப் போதும்! நான் இதச் சுட்டு எடுக்கிறேன்” என்று நீள்வட்ட வடிவில் இருந்த மாவை காட்டவும் ராகவ் சிரித்தான்.
“இப்போ எதுக்குச் சிரிக்கிற?”
“நத்திங்! உன் நாணோட ஷேப்பை நெனச்சா சிரிப்புத் தானா வருது ஜானு” என்று கன்னத்தைக் கிள்ளிவிட்டுப் பருப்பைக் கவனிக்க ஆரம்பித்தான்.
“உன்னோட குக்கிங் நாலேட்ஜ் ஜீரோனு இதுல இருந்தே தெரியுது. இது சப்பாத்தி இல்லடா, ரவுண்டாத் தேய்க்கிறதுக்கு” என்று சொல்லிவிட்டு ஒரு பகுதியில் தண்ணீர் தடவித் தவாவில் மாவை ஒட்டியவள் அரை வேக்காடு வெந்ததும் தவாவை எரிகின்ற தீயில் திருப்பிப் பிடித்து வாட்டினாள்.
அவள் செய்த லாவகத்தைப் பார்த்ததும் ராகவ் “ஜான்சி ராணி நீ நல்லாச் சமைப்ப போல இருக்கு?” என்று கேட்டுக்கொண்டே பருப்பை அடுப்பிலிருந்து இறக்கி வைத்தான்.
“ஓரளவுக்கு வரும்! எக்ஸ்பர்ட் இல்ல!” என்று சொல்லி நெய்யில் பூண்டையும் கொத்துமல்லித் தழைகளையும் அரிந்து போட்டு அந்தக் கலவையை ஒரு பிரஷ் கொண்டு நாணின் மீது தடவினாள்.
“கார்லிக் நாண் ரெடி!” என்று புன்னகையுடன் கூறி அவற்றை ஹாட்பாக்ஸில் அடுக்கி வைத்தாள்.
பின்னர் ராகவுக்கு வாணலியில் போட வேண்டிய மசாலாக்களைச் சொல்லிவிட்டுப் பருப்பை அதில் ஊற்றித் தாலை இறக்கினாள். நெய்யில் சீரகத்தைத் தாளித்துக் கொட்டி அதையும் ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துவிட்டுக் கிஷோரையும் அமரையும் அழைத்து ராகவுடன் சேர்த்து அனைவருக்கும் பரிமாறுமாறு கூறிவிட்டுத் தங்களின் அறைக்குச் சென்றுவிட்டாள்.
அவள் குளித்து முடித்துக் கீழே வரவும் குடும்பம் முழுவதும் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருக்க அவளும் ராகவ் அருகில் அமர்ந்து நாணை எடுக்கப் போனாள்.
அவனோ அவள் அருகில் இன்னொரு பாத்திரத்தை வைக்க “என்ன இது?” என்று பார்வையினால் வினவியவளைத் திறந்து பார்க்குமாறு கண் காட்டினான் அவன்.
உள்ளே நூடுல்ஸ் அவளைப் பார்த்துப் புன்னகைத்தது. மணமும் நன்றாகவே இருந்தது.
“நானே உனக்காகக் கஷ்டப்பட்டு இதைப் பண்ணுனேன் தெரியுமா?” என்று சொல்லவும் அனைவரும் அதைக் கேட்டுச் சிரித்தனர்.
சுமித்ராவோ “இந்த நூடுல்ஸைக் கஷ்டப்பட்டுச் சமைக்க என்னடா இருக்கு?” என்று கேலி செய்ய ராகவ் “வெரி ஃபன்னி தாதி” என்று சொல்லித் தோளைக் குலுக்கினான்.
“என் ஹப்பி கஷ்டப்பட்டுச் செஞ்சதச் சாப்டாம இருக்க முடியுமா? நான் கண்டிப்பாச் சாப்டுவேன்” என்று சொல்லி அதனைத் தட்டில் வைத்து ஃபோர்க்கால் சுற்றி எடுத்து வாயில் வைத்தவளுக்குக் காரத்தில் புரையேறியது.
தண்ணீரைக் குடித்தவளை ராகவ் கவலையான முகத்துடன் பார்த்து “நல்லா இல்லையா ஜானு?” என்று கேட்க அவந்திகா சிரித்துக்கொண்டே அவன் தாடையைப் பிடித்துக் கொஞ்சியவள் “நீ பண்ணுனா அது எப்பிடி நல்லா இல்லாம இருக்கும்? இட்ஸ் பெர்ஃபெக்ட்! ஏ ஒன்” என்று சொல்லிக் காலி செய்தாள்.
அனைவரும் சாப்பிட்டு முடித்ததும் ராதிகா “அவந்திகா லஞ்சுக்கு ஹோட்டல்ல ஆர்டர் பண்ணிடுடா! ப்ரேக் ஃபாஸ்ட் செஞ்சு நீ டயர்ட் ஆயிருப்ப” என்று சொல்லிவிட அவள் ஆப்பில் ஆர்டர் செய்தவள் காரம் இன்னும் நாக்கிலேயே இருக்கத் தண்ணீரைக் குடித்தாள்.
கார்டனைப் பார்த்து இருந்த சோஃபாவில் அமர்ந்திருந்தவளின் அருகில் உட்கார்ந்தான் ராகவ். அவள் பக்கத்தில் ஜக்கை வைத்துக்கொண்டு தண்ணீரைக் காலி செய்வதைப் பார்த்ததும் “என்னாச்சு அவந்திகா? ஏன் இவ்ளோ வாட்டர் குடிக்கிற நீ” என்று சற்றுப் பதற்றத்துடன் கேட்டான்.
அவள் அவசரத்தில் “காரம் ஓவர்! அதான்” என்று தண்ணீரை வாயருகில் கொண்டு சென்றவள் தன் தலையில் குட்டிக்கொண்டாள். பின்னர் அவனைப் பார்த்து “காரம்தான் ஓவர்! பட் உன்னோட நூடுல்ஸ் செம” என்று விரல்களில் அபிநயம் பிடித்தவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான் ராகவ்.
“அவ்ளோ காரம் இருந்தா ஏன் சாப்டுற ஜான்சிராணி?”
“ஒருத்தவங்க பாசமா நமக்காக எது குடுத்தாலும் அதைக் குறை சொல்லாமச் சாப்டணும் ராகவ்”
“அப்போ வருண் பய்யா குடுத்த காபியை ஏன் குடிக்கல?”
“என்னது? பாசமாச் சாப்பாடைக் குடுத்தா அது டேஸ்ட் முன்ன பின்ன இருந்தாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்! பட் பாய்சனைக் குடுத்தா யாராச்சும் சாப்டுவாங்களா?” என்று சொன்னவளைப் பார்த்துச் சிரித்துவைத்தான் ராகவ்.
அதன்பின் வார விடுமுறையன்று இதுவே அந்த வீட்டில் வழக்கமானது. இதனால் அவந்திகாவும் சமையல் கலையில் ஏதோ தேறினாள். மற்றபடி அலுவலகம் செல்வது, ராகவுடன் சண்டை போடுவது எல்லாம் அதுபாட்டுக்கு ஒரு புறம் நடந்துகொண்டே இருந்தது.
விடுமுறைக்கு வந்த அஜ்ஜுவும் அம்புவும் கௌசல்யாவுடன் சேர்ந்து ராகவின் வீட்டுக்கு வந்தவர்கள் அந்தக் குடும்பத்தினரின் நல்ல குணத்தை அனுபவத்தில் உணர்ந்தனர். சுமித்ராவும் அம்புவைப் போலவே அவந்திகாவை வாயாடி என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டார்.
“சென்னைல இருந்து இந்த வார்த்தையக் கத்துக் குடுக்கத்தான் பெங்களூரு வரைக்கும் வந்தியா அம்பு” என்று அவள் கேட்டதுக்கும் அசரவில்லை அவர்.
இதற்கிடையில் உஷாவுக்கு டெலிவரி டேட் அருகில் வரும் நேரம் அது. அந்தச் சமயத்தில் வருணும், ராகவும் லண்டன் செல்லும் சூழ்நிலை. ராகவ் வேண்டாமென்று சொல்லியும் உஷா வருணைச் சென்று வருமாறு அனுப்பி வைத்தாள்.
அவர்களும் லண்டன் சென்று ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில் தினமும் ஸ்கைப்பில் பேசிய வருண் உஷாவுடன் இருக்கும் நேரத்தை மிஸ் பண்ணுவதாகப் புலம்பினான்.
பேசிக்கொண்டிருந்தவளுக்குத் திடீரென்று ஒரு வலி தாக்க அவள் முகம் மாற ஆரம்பித்தது. வருண் பதற்றத்துடன் “உஷா ஆர் யூ ஓகே?” என்று வினவ அவள் முகம் சுழித்து வலியை வெளிப்படுத்தினாள்.
அவந்திகா உஷாவுக்குத் தண்ணீர் கொடுக்க வந்தவள் அவளுக்கு லேபர் பெயின் ஆரம்பித்துவிட்டதைக் கண்டவள் கிஷோரையும் அமரையும் அழைத்து அவளைக் காரில் வைக்குமாறு கூறிவிட்டு வருணை டென்ஷனாக வேண்டாம் என்று திடப்படுத்தி லேப்டாப்பை அணைத்தவள் காரில் சென்று உஷா அருகில் அமர்ந்துகொண்டாள்.
ஹாஸ்பிட்டலை அடைந்ததும் அவளுடைய அணிகலன்களைக் கழற்றி அவந்திகாவின் கையில் கொடுத்துவிட்டுச் சென்றார் நர்ஸ் ஒருவர்.
மருத்துவர் லேபர் வார்டுக்குள் நுழைந்ததும் அவந்திகா “பெருமாளே! எந்தப் பிரச்சனையும் இல்லாம நார்மல் டெலிவரியா இருக்கணும்! என் உஷாக்கு ரொம்பக் கஷ்டம் குடுக்காத ப்ளீஸ்” என்று வேண்டிக்கொண்டே கதவு திறக்கும் நேரத்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.
கிஷோரும், அமரும் பதற்றம் நிறைந்த முகத்துடன் இருக்க, வீட்டினர் அனைவரும் சாய்பாபா கோயிலுக்குச் சென்று திரும்பியவர்கள் பாலா கூறிய விவரத்தைக் கேட்டதும் சிட்டி ஹாஸ்பிடலுக்கு விரைந்தனர்.
ஆனால் அதற்குள் வருண் உஷாவின் சீமந்த புத்திரி இந்த உலகில் அவதரித்துவிட்டாள். நர்ஸ் வந்து பெண்குழந்தை என்று கூறி அவளை முதலில் அவந்திகாவின் கையில் கொடுத்ததும் குழந்தையைத் தாங்கிய அந்நொடி அவளையறியாமல் ஆனந்தக் கண்ணீர் எட்டிப் பார்க்க “என் செல்லக்குட்டி! சித்திடா நான்” என்று குழந்தையைப் பார்த்துச் சொன்னவள் கிஷோர் அமரின் கையில் கொடுத்தாள்.
“ரோஸ் பட் மாதிரி இருக்கா என் ராஜகுமாரி!” என்று சொல்லியபடியே அமர் குழந்தையை நர்ஸிடம் கொடுத்து அனுப்பிவிட்டான்.
எல்லாம் நடந்து சில கணங்களில் குடும்பத்தினர் அனைவரும் வந்துவிட அவந்திகா அவர்களிடம் விவரத்தைக் கூறினாள்.
“கொழந்தை எவ்ளோ அழகு தெரியுமா சித்தி?” என்று அங்கு அவர்களுடன் நின்றுகொண்டிருந்த கௌசல்யாவிடம் விளக்கிக் கொண்டிருந்தாள் அவள்.
உஷாவும் சிறிது நேரத்தில் கண்விழித்தவள் தன் அருகில் கொள்ளை அழகுடன் உறங்கிக் கொண்டிருக்கும் தன் மகளைப் பெருமையுடன் பார்த்தவள் அவளைக் கையில் அள்ளி எடுத்துக்கொண்டாள். கண்களை மூடியபடி மெதுவாக கையை அசைக்கும் அந்தச் சிறிய ரோஜாமொட்டைக் கண்கொட்டாமல் பார்த்தவள் உள்ளே வந்த அவந்திகாவிடம் “ஹனிபி! இவளுக்கு ஒரு நல்ல பேர் சொல்லுடி!” என்று ஆவலுடன் கேட்டாள்.
“ஏய் அதுக்கு என்னடி அவசரம்?”
“பர்த் சர்டிபிகேட்டுக்காகக் கேப்பாங்கடி! நீதான் பேர் வைக்கிறதுல கில்லாடி! என் பொண்ணுக்கு அழகான ஒரு பேர வை பாப்போம்!”
சிறிது நேரம் கூகுளில் தேடியவள் “இன்னைக்கு இவ பொறந்த நேரத்துல பிறக்குற கொழந்தைங்களுக்கு ‘ஆ’ல ஸ்டார்ட் ஆகுற நேம் வைக்கலாம்னு இதுல போட்டுருக்கு. இப்போ என்ன பேரு வைக்கலாம்?” என்று சில நிமிடம் யோசித்தவளுக்கு ஒரு அழகிய பெயர் மூளையில் உதயமாகிவிட்டது.
புன்னகையுடன் உஷாவைப் பார்த்தவள் “என் செல்லக்குட்டிக்கு அழகான ஒரு பேரைச் சித்தி கண்டுபிடிச்சிட்டேன்” என்று சொல்லி அவள் அருகில் குனிந்தாள்.
அவள் தலையை வருடியபடி “ஆராதனா” என்று சொல்லிக் குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டாள்.
உஷாவுக்கும் அந்தப் பெயர் பொருத்தமாகத் தோண, அவள் பிறப்புச் சான்றிதழுக்கு ஆராதனா என்ற பெயரைத் தன் குழந்தையின் பெயராகக் கொடுத்துவிட்டாள்.
பின்னர் குடும்பத்தினர் வந்து குழந்தையை மகிழ்ச்சியுடன் பார்த்து ஆசீர்வதித்தனர். சுமித்ராவுக்குத்தான் இன்னொரு தலைமுறையையும் பார்த்த ஆனந்தம்!
அதே நேரம் மகளையும் மனைவியையும் ஸ்கைப்பில் பார்த்த வருணுக்குச் சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை. ராகவ் அவனது நிலையைக் கவனித்தவன் அவனை அடுத்த ஃப்ளைட்டில் இந்தியா செல்லுமாறும் தான் இங்கே சமாளித்துக் கொள்வதாகவும் கூறிவிட்டான்.
வருணும் தன் மகளைப் பார்க்கச் சிட்டாகப் பறந்து வந்தான் விமானத்தில். ஏர்போர்ட்டில் இறங்கியவன் நேரே மருத்துவமனைக்குச் சென்று ரிசப்ஷனில் அவளது பெயரைச் சொல்லி வார்டைக் கேட்டுக்கொண்டிருக்கும்போது வந்த அவந்திகா அவனைக் கையோடு உஷா இருந்த வார்டுக்கு அழைத்துச் சென்றாள்.
அவனை உள்ளே அனுப்பிவிட்டு ராகவுக்குக் கால் செய்தாள்.
“ஏய்! இந்த நேரத்துல என்ன தூக்கம் உனக்கு? எத்தனை தடவை கால் பண்ணேன் தெரியுமா?”
“ஜான்சி ராணி! கூகுள்ல லண்டன் டைம் செக் பண்ணு ஃபர்ஸ்ட். தூங்கிற நேரத்துல கால் பண்ணிட்டு என்ன தூக்கம்னு வேற கேக்கிற நீ?”
“அய்யோ சாரிப்பா! நான் இந்தியன் டைம் நினைவுலயே பேசிட்டிருக்கேன். சரி பரவால்ல! அதான் இப்போ முழிச்சிட்டல்ல! எப்போ இந்தியா திரும்புறதா ஐடியா?”
“எப்பிடியும் இன்னும் ஒன் மன்த் ஆகும்னு நெனைக்கிறேன்”
“வாட்? என்னைக் கல்யாணம் பண்ணதில இருந்து முக்கால்வாசி நாள் நீ லண்டன்லதாண்டா குப்ப கொட்டுற! யூ ஆர் சோ மீன் ராகவ்” என்ற அவளின் குற்றச்சாட்டு அவனுக்கும் புரிந்தாலும் நிலைமை அப்படி!
முடிந்தளவு சீக்கிரம் வர முயற்சிப்பதாக அவன் கூறவும்தான் அவள் குரலில் ஒரு உற்சாகமே வந்தது. அதன்பின் குழந்தையைப் பற்றிக் கூற ஆரம்பித்தாள்.
“என்ன அழகு தெரியுமா ராகவ்? ரோஸ் பெட்டல்ஸ் கலர்ல அப்பிடியே என்னோட உஷாவை உரிச்சு வச்சுப் பொறந்திருக்கா அவ! தூக்குறப்போ பஞ்சு பொதி மாதிரி அது ஒரு தனி ஃபீல்” என்று சிலாகித்தாள் அவள்.
“பட் எனக்குத் தெரியாது அந்த ஃபீல்லாம்”
“ஏன் தெரியாது?”
“பிகாஸ் நான் இதுவரைக்கும் என் கையால எந்தக் கொழந்தையும் ஏந்துனதில்ல”
“ஓ! அதான் ப்ராப்ளமா? நீ சீக்கிரமா இந்தியாவுக்கு வா! ஏற்பாடு பண்ணிடலாம்” என்ற அவளின் வார்த்தையில் அவனுக்குத் தூக்கம் பறந்தது.
முகமெல்லாம் பிரகாசிக்க “ரியலி?” என்று சந்தேகமாகக் கேட்டவனை முறைத்தவள் திரையைப் பார்த்தபடி “ஆமாடா! நீ வந்ததும் முதல் வேலையா ஆரா குட்டியை உன் கைல குடுக்குறேன்! அப்போ உனக்குப் புரியும் அந்த ஃபீல்” என்று சொன்னதும் அவன் முகம் பிரகாசத்தை இழந்தது.
“அப்போ நீ சொன்ன ஏற்பாடு இதுதானா?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டவனுக்குத் தன் தலையசைப்பைப் பதிலாக அளித்தாள் அவந்திகா.
கூடவே “நீ என்ன நெனச்சே மார்ஷ்மெல்லோ?” என்று கேள்வியாக நோக்கியவளை “நான் என்னென்னவோ நெனச்சேன்! அதலாம் சொன்னா மட்டும் நீ அப்பிடியே புரிஞ்சிகிட்டுத்தான் மறுவேலை பாப்ப! அட போம்மா!” என்று சலிப்புடன் கூறினான் அவன்.
“சரி ரொம்பச் சலிச்சிக்காத ராகவ்! யூ ஹேவ் டு ரிட்டர்ன் டு இந்தியா அஸ் சூன் அஸ் பாசிபிள்” என்று அவள் கட்டளையிடவும் புன்னகையுடன் தலையசைத்தான் அவன்.
அவனுக்கு குட் நைட் சொல்லிவிட்டு அவளும் வருண் உஷாவுடன் சேர்ந்து குழந்தையைக் கொஞ்சுவதற்கு வார்டுக்குள் சென்றாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


