“உன் நெருக்கம் என்னைச் சுட்டெரிக்கும் என்று எனக்குத் தெரியும்; ஆனாலும் உன்னை விட்டு விலகி ஓட நான் கோழையல்ல. என் காதலை என் பிடிவாதம் ஒருபோதும் தோற்கடிக்காது, ஆனால் என் சுயத்தை இழந்து எந்தச் சமரசத்திற்கும் நான் வரமாட்டேன்!”
-நியதி
ஆலிவ் வண்ண லினன் சட்டையின் ஸ்லீவை முழங்கை வரை மடித்துவிட்டபடி ஹாலுக்கு வந்த நிலவன் அங்கே தனக்கு முதுகுகாட்டியபடி நின்று எதையோ செய்துகொண்டிருந்த நியதியைப் பார்த்ததும் ஒரு கணம் உறைந்துபோனான்.
அழகான ஆப்பிள் சிவப்பில் மாங்காய் வடிவ ஜரிகை மோட்டிஃப்கள் போடப்பட்டு அடர்ப்பச்சை பார்டரில் ஜரிகையோடிய மென்பட்டில் அழகுச் சிலையாய் நின்றுகொண்டிருந்தவளின் கூந்தல் அழகாய் அசைந்தாடிக்கொண்டிருந்த காட்சி அவனுக்குத் தேவலோக அப்சரஸை நினைவூட்டியது!
இரண்டு வருடங்களில் உடை அணியும் விதம் மாறியிருந்தாலும் இந்தக் கூந்தலை நகரத்து நாகரிகத்துக்காகக் குட்டையாக வெட்டாமல் எந்தவித ஹேர் சலூன்களிடமும் பராமரிப்புக்கு விடாமல் பத்திரமாகப் பாதுகாத்திருக்கிறாளே என்ற ஆசுவாசம் அவனுக்கு.
அவளிடம் அவனைக் கவர்ந்த விஷயங்களில் முதலிடம் இந்த அடர்கூந்தலுக்கே! இரண்டாமிடம் அவன் ஆழ்ந்து ரசித்த அவளது மைதீட்டிய விழிகள்! கீழிமை, மேலிமை இரண்டிலும் அடர்த்தியான கோடாய் அவள் மைதீட்டும் விதத்தில் விழிகள் தனித்து அழகாய்த் தெரியும் நிலவனுக்கு!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
யோசனைகள் கடந்துபோன அழகான தருணங்களுக்குக் காலப்பயணம் செய்வதில் அவனுக்கு விருப்பமில்லை. தலையை உலுக்கி கவனம் கலைந்தவன் தொண்டையைச் செரும அவனைத் திரும்பிப் பார்த்தாள் நியதி.
கைகளில் எதையோ ஒட்டிக்கொண்டிருந்தாள். அவனைப் பார்த்ததும் பளீர் புன்னகை!
“கிளம்பிட்டீங்களா நிலன்? எனக்கு ஒரு டூ மினிட்ஸ் மட்டும் தாங்க.”
“ம்ம்”
அவனது விழிகள் அவள் கைகளில் ஒட்டிய ஸ்டிக்கர்களில் விழவும் “இது இன்ஸ்டன்ட் மெஹந்தி. நானும் ப்ரீயும்தான் கல்யாணத்துக்குப் போகலாம்னு இருந்தோம். எங்களுக்கு மெஹந்தி வைக்க டைம் இல்ல. அதனால இதை வாங்குனோம். அவளுக்கு நேத்து மிட்நைட் அவங்கம்மாகிட்ட இருந்து கால் வந்துச்சு. அவங்கப்பாக்கு உடம்பு ரொம்ப முடியலனு கோவைக்குப் போயிருக்கா. அவளோட ஸ்டிக்கரையும் சேர்த்து இப்ப நானே ஒட்டிக்கிட்டிருக்கேன்” என நீளமாய் ஒரு விளக்கத்தை அவள் கொடுக்க அதற்கும் உம்கொட்டினானே தவிர பதில் பேசவில்லை.
அவன் தன்னிடம் பேசாமல் தவிர்ப்பது புரிந்ததும் நியதியும் மேற்கொண்டு அவனிடம் பேசி போரடிக்காமல் கூந்தல் அலங்காரம் செய்யப் போய்விட்டாள்.
அவள் அங்கிருந்து நகர்ந்ததும் “உஃப்” எனப் பெருமூச்சு விட்டான் நிலவன்.
‘கொஞ்சம்கூட மாற்றமில்லை என்னிடம். இவள் என் அருகில் இருந்தால் இவளது பிரசன்னம் என்னைப் பாதிக்கிறது. இந்த இரண்டு ஆண்டுகளில் எண்ணற்ற தனிமையான பொழுதுகளில் நான் கொண்ட தவிப்பும் ஏக்கமும் எங்கே என்னை மிஞ்சி இவளிடம் மீண்டும் விழவைத்துவிடுமோ?’
யோசனையோடு ஹாலின் சோஃபாவில் சாய்ந்துகொண்டான் நிலவன்.
சொன்னபடி இரு நிமிடங்களில் திரும்பி வந்தவளின் கூந்தல் க்ளட்சில் அடக்கப்படிக் கீழே விரித்துவிடப்பட்டிருந்தது. கூடுதல் அணிகலனாய் மல்லிகைச்சரம் அங்கே சிரித்தது. கழுத்தில் ஆன்டிக் நெக்லஸ், அதற்குப் பொருத்தமாய் ஜிமிக்கிகள், நெற்றியில் குட்டியாய் அரக்கு வண்ணப் பொட்டோடு அவள் தயார்.
“கேப் புக் பண்ணிட்டேன் நிலன். இன்னும் ஃபைவ் மினிட்ஸ் இருக்கு. நாம போகலாமா?” என வினவத் தலையசைத்தபடி எழுந்த நிலவன் அவன் இருந்த அறைக்குப் போய் மணமக்களுக்கு அவன் வாங்கியிருந்த பரிசை எடுத்துக்கொண்டான்.
இருவரும் வீட்டைப் பூட்டிக் கீழ்த்தளத்துக்கு வந்தார்கள். அப்போதுதான் நியதி வளையல் அணியாததைக் கவனித்தான் நிலவன். ஏனோ அவளது ஆடை அலங்காரத்தில் அது ஒரு குறையாக உறுத்தியது.
“வளையல் எங்க?” என மெதுவாய் அவன் கேட்க
“அதுவா? எல்லா வளையலும் உடைஞ்சிருச்சு. அந்த ரோட் சைட்ல ஒரு ஃபேன்ஸி ஸ்டோர் உண்டு. கேப் அங்கதான் வரும். நான் அங்க வாங்கிக்கலாம்னு இருந்தேன்.” என்றவள் நடக்க நிலவனும் அவளோடு நடக்க ஆரம்பித்தான்.
அவள் சொன்ன ஃபேன்ஸி ஸ்டோர் வந்ததும் ஆப்பிள் சிவப்பில் வளையல்களைத் தேடியவளுக்கு வாய்த்தது என்னவோ அடர்ப்பச்சை வளையல்கள்தான். அவையும் அவளது கரத்தில் நுழைய மறுத்தன.
“ப்ச்” என்றபடி அவள் கரத்தைப் போட்டுப் பாடாய்ப்படுத்துவதைக் காணச் சகியாதவன் “இங்க குடு அதை” என்று பிடுங்கினான் வளையல்களை.
“நிலன் எனக்கு அது சேராது. என் கை முட்டி பெருசு”
“அதெல்லாம் சேரும்”
அதட்டலாய்ச் சொன்னபடி அவன் அவளது ஐவிரல்களையும் மொட்டாய்க் குவித்து வளையல்களை நுழைக்கக் கொஞ்சம் சிரமமாய் இருந்தாலும் முன்பு போல வலிக்காமல் கைக்குள் நுழைந்தன வளையல்கள்.
முதலில் பொன்னிறத்தில் கடா எனப்படும் பெரிய வளையலை அணிவித்துப் பின்னர் பச்சை வண்ண வளையல்களை அடுக்கி அணிவித்தான் நிலவன்.
அந்த வளையலை அவன் அணிவித்தபோதுதான் அவனது பெருவிரலுக்கும் கைக்குமான இடைவெளியில் ‘Niyathi’ என்று அவளது பெயர் டாட்டூவாகப் போடப்பட்டிருந்ததைப் பார்த்தாள் அவள்.

மெதுவாய் அவளது ஒரு கரம் அந்த டாட்டூவை வருடியது.
“இது… இந்த டாட்டூவ இன்னுமா அழிக்கல?” எனக் கேட்டபோது அவளது குரல் தடுமாறியது.
“சில விஷயங்கள், சில உணர்வுகள் நிரந்தரமானது. அதை அழிக்குறதுக்கு நான் ஒண்ணும் நீ இல்ல”
அடுத்த கரத்திலும் வளையல்கள் ஏறின. அதோடு நியதியின் மனதிலும் பாரமொன்று ஏறியது.
இருவரையும் ஏற்றிக்கொள்ள கேப் வந்துவிட அதிகம் பேசாமல் அதிலேறி அமர்ந்தார்கள். சாலையில் கேப் செல்லும்போதே திருமண வீட்டார் தனது தந்தையின் நண்பர் என்பதைத் தெரியப்படுத்தினான் அவளுக்கு.
“மண்டபத்துக்குள்ள நாம ஒண்ணாச் சேர்ந்து போகவேண்டாம். நீ முதல்ல போ. நான் அப்புறமா வர்றேன்”
“என்கூடச் சேர்ந்து வரக்கூட உங்களுக்கு விருப்பம் இல்லையா?”
“எல்லாத்தையும் பாதியில நிறுத்திட்டுப் போனவ நீதான் நியதி”
“நீங்க சம்மதிக்காம நான் போகல நிலன்”
“எனக்கு அதைத் தவிர நீ வேற ஆப்ஷன் குடுக்கல நியதி. நான் முழு மனசோட சம்மதிக்கலனு உனக்குத் தெரியாதுல்ல?”
“நிலன்…”
“நான் அன்னைக்கு விலகிக்கச் சம்மதிச்சது உனக்காக, இன்னைக்கு விலகி நிக்குறது எனக்காக. புரிஞ்சிக்க!”
நியதியின் கண்களில் கண்ணீர்ப் படலம்! சட்டெனத் திரும்பிக்கொண்டாள். அவள் அழுதால் அவனுக்குப் பிடிக்காது. இது அவனது பேச்சுக்கான கண்ணீர் மட்டுமல்ல. அவளுடனான எதையும் வெறுக்காமல் இன்னும் தன்னுடனே வைத்திருப்பவனை ஈராண்டுகாலம் தள்ளிநிற்கவைத்த அவளது மடமை மீதான கோபத்தால் வந்த கண்ணீர்!
அதை அடக்கிக்கொண்டாள். பயணம் முழுவதும் மௌனத்தில் கரைய விஜயா மஹாலும் வந்தது. கேபிலிருந்து முதலில் இறங்கியவள் திருமண மண்டபத்துக்குள் சென்று மறைந்த பிற்பாடு மெதுவாய் அடியெடுத்துவைத்தான் நிலவன்.
அவன் வந்ததுமே அடையாளங்கண்டு ஓடிவந்தார் துளசிராஜா.
“உன்னைக் காணலையேனு தேடுனேன் நிலவா. அப்பா அம்மா எல்லாம் சௌக்கியமா? வா! தாலி கட்டுற நேரம்தான்.” என அவனை அழைத்துச் சென்றார்.
“அக்கா, மாமா எல்லாம் எப்பிடி இருக்காங்க? உங்க எல்லாரையும் கல்யாணத்துல பாத்தது. பசங்க எத்தனை பேரு?”
“நிலாவுக்கு ஒரு பொண்ணு மாமா!”
“அது சரி!….” என அவர் மேற்கொண்டு விசாரிக்கப்போக அதற்குள் பேச்சை மாற்றினான் நிலவன்.
“தொழில் எல்லாம் எப்பிடிப் போகுது மாமா? நான் என் அக்ரோ புராடக்ட் கம்பெனியை இன்னொரு குயிக் காமர்ஸ் ஆப்ல செல்லரா ரிஜிஸ்டர் பண்ணணும் மாமா. அந்த வேலைக்காகவும்தான் சென்னைக்கு வந்தேன்”
பேச்சு தொழில்ரீதியாக மாறியதும் துளசிராஜாவும் அதில் ஆழ்ந்துபோனார். அதே நேரம் அவருடன் பேசும்போதே நிலவனின் விழிகள் மேடை மீது மணமகளுக்குப் பின்னே நின்று அவளது அன்னையுடன் பேசிக்கொண்டிருந்த நியதியை அவ்வப்போது பார்த்து மீண்டன.
மாங்கல்யத்தை அட்சதைத் தட்டில் வைத்து அனைவரிடமும் கொண்டுவந்தபோது சரியாய் மேடை மீதிருந்த நியதியும் அவனைத்தான் பார்த்தாள்.
அவளது விழிகளில் எண்ணற்ற உணர்வுகளின் கலவையாய்க் கொந்தளிப்பும் தவிப்பும் குவிந்து நிற்க நிலவனுக்கு மனம் இளகிப்போனது.
‘அவளும் வருந்தித் தன்னையும் வருத்தி யாருக்கு எதை நிரூபிக்க இந்த வலியுடனான போராட்டம்? நிதானமாய் அமர்ந்து பேசியிருந்தால் தீரக்கூடிய விவகாரத்தைத் தனக்கான சவாலாய் எடுத்துக்கொண்டு வெளியேறியவள் இன்று தனியே நின்று சாதிக்கவும் செய்திருக்கிறாள். ஆனால் இந்தத் தவிப்பும் வருத்தமும் அவளிடமிருந்து அகலவில்லை! இதுதான் தோல்விகரமான வெற்றி போல!’
அவளுக்கு வலித்தால் அவனுக்கும் வலிக்கும். அவளை வார்த்தையால் குத்தும்போது அவளது வலியின் தீவிரம் ஒரு டால் (வலியின் தீவிரத்தை அளவிடும் அலகு) என்றால் அவனுக்கு அது நூறு டால்! அதையும் தாண்டி ஆற்றாமையில் வார்த்தை வெடித்துவிட்டது காலையிலிருந்து.
“கெட்டிமேளம்! கெட்டிமேளம்!”
ஐயரின் குரல் ஒலிக்கவும் மணமக்களை வாழ்த்தி அட்சதையைத் தூவியவன் திருமணத்திற்குப் பின்னரான சடங்குகள் முடிந்ததும் மணமக்களை மேடையேறி வாழ்த்தித் தனது பரிசையும் கொடுத்தான்.
மணமகனும் மணமகளும் அவளைப் புகைப்படத்துக்கு நிற்கச்சொல்லி வற்புறுத்த ஒன்றாய் நின்று புகைப்படமும் எடுத்துக்கொண்டான்.
அவன் பேசுவது, சிரிப்பதை ஓரமாய் நின்று கண்களில் ஏக்கத்தோடு பார்த்த நியதிக்கு அவனில்லாத பொழுதுகளில் தெரிந்ததைவிட இப்போது அதீதமாய்த் தெரிந்தது அவனை இழந்த தனது துரதிர்ஷ்டத்தின் வீரியம்.
“நியதி! வா! போட்டோ எடுத்துக்கலாம்”
மணப்பெண் மதுரிமா அவளை அழைக்கவும் ஆர்வமாய் வந்தவள் மணமக்களை வாழ்த்திப் புகைப்படம் எடுத்துக்கொண்டாள்.
திருமணத்தின் காலை விருந்து முடிந்ததும் துளசிராஜாவோடு ஓரிடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தான் நிலவன். அவன் நிற்குமிடத்திலிருந்து சற்று தள்ளி அவனைப் பார்த்தபடியே சிரித்துப்பேசிக் கொண்டிருந்தார்கள் இளம்பெண்கள் சிலர். இதெல்லாம் நியதியின் பார்வைக்குத் தப்பவில்லை.
மெல்லிய பொறாமை துளிர்விடத் துளசிராஜா நகர்ந்ததும் அவனை நோக்கி விறுவிறுவென முன்னேறினாள்.
“சாப்பிட்டீங்களா?”
“இதைக் கேக்கவா இவ்ளோ வேகமா வந்த?” என்றவனின் பார்வை அவளது பார்வை போன திசையைக் கண்டுகொண்டது. விஷயம் புரிந்துபோனது நிலவனுக்கு.
“இந்தச் சட்டையோட மேல் பட்டன் ரெண்டும் எப்பவும் திறந்துதான் இருக்குமா? அதைப் போடலாமே?”
மெல்லத் தயக்கத்தோடு வினவினாள் நியதி. வார்த்தைகள் மட்டும்தான் அவனுக்கு. பார்வை என்னவோ சற்று தூரத்தில் நின்று ரகசியம் பேசிச் சிரிப்பது போல அவனை சைட் அடித்த பெண்களிடம்தான் நிலைத்திருந்தது.
நிலவனின் கண்களில் இருந்த இறுக்கம் தளர்ந்து சிரிப்பு எட்டிப்பார்த்தது. அது உதடுகளுக்குப் பாய்ந்துவிடாமல் வெகு கவனமாய்ப் பார்த்துக்கொண்டான்.
“ஊர்ல இப்பிடியே இருந்து பழகிப்போச்சு. ஒருவேளை இதெல்லாம் இந்த ஊர் நாகரிகத்துக்குச் செட் ஆகாதுனு சொல்லுறியா?”
கடைசியில் ஒரு ‘ஃ’ வைத்து அவன் கேட்கவும் சட்டெனப் பார்வையை அவனிடம் திருப்பினாள் நியதி.
“நான் சொல்லாத வார்த்தைகளுக்கு நீங்களே அர்த்தம் எடுத்துக்காதீங்க நிலன்”
“நிலவன்”
வந்ததிலிருந்து வெகு உரிமையாய்ப் பெயரைச் சுருக்கி அழைத்தவளிடம் அழுத்தமாய்ச் சொன்னவனின் ஒற்றைப் புருவம் மட்டும் ஏறியிறங்க “நிலன்தான்” என அதைவிட அழுத்தமாய்ச் சொல்லி இரண்டு புருவங்களையும் ஏற்றியிறக்கினாள் அவள்.
“ரெண்டு வருஷத்துல பிடிவாதம் எக்ஸ்ட்ராவா வளர்ந்திருக்கு”
சிலாகிப்பது போலச் சொல்லிவிட்டு வெகு சிரமப்பட்டு அவன் சிரிப்பை அடக்குவதைக் கண்டுகொண்டாள் பெண்.
“அவ்ளோ கஷ்டப்பட்டுச் சிரிப்பை அடக்க வேண்டாம். சிரிப்புக்கெல்லாம் ஜி.எஸ்.டி போடமாட்டாங்க”
அமர்த்தலாய்ச் சொன்னபடியே அவனை நெருங்கியவள் சுவாதீனமாய் அவனது காட்டன் சட்டையின் திறந்திருந்த பட்டன்களைப் போட்டுவிட ஆரம்பிக்க நிலவனின் பார்வையில் இருந்த இளக்கம் இப்போது கனிவாக மாறி நியதியின் மீது மொத்தமாய்க் குவிந்தது.

அவனது ஆலிவ் பச்சை வண்ணச் சட்டையைப் பற்றியிருந்த தளிரவிரல்களில் தொப்பியாய்க் கருஞ்சிவப்பாய்ச் சிவந்திருந்த ஸ்டிக்கர் மருதாணி அவனது விழிகளுக்கு விருந்தளிக்க, கூந்தலில் சூடியிருந்த மல்லிகையும் நிலவனின் நாசிக்கு விருந்தளிக்க நீயா நானா எனப் போட்டி போட்டன.
மனமோ அவள் எடுத்துக்கொண்ட உரிமையை அலாதியாய் ரசிக்க, அவளுடனான இந்த நெருக்கம் சுற்றுப்புறத்தையும், சுற்றியிருந்த மனிதர்களையும் மறக்கடித்தது நிலவனுக்கு.
சட்டெனத் தலையை உலுக்கிக்கொண்டவன் அவளது கரத்தை விலக்கினான்.
“என்னால மதியம் வரை இங்க இருக்க முடியாது. மூணு மணிக்கு ஓர் இன்டர்வியூ இருக்கு” என்றான் உணர்வற்ற குரலில்.
“அப்ப நானும் உங்களோடவே கிளம்பிடுறேன்”
“உன் இஷ்டம்” சுருக்கமாய்ச் சொன்னவன் துளசிராஜா மற்றும் அவரது மனைவியிடம் சொல்லிவிட்டு விடைபெற்றபோது நியதியும் அவனோடு கிளம்பிவிட்டாள்.
“நான் கேப் புக் பண்ணிடட்டுமா?”
“நான் பண்ணுறேன். எனக்கு அந்தளவுக்கு அறிவு இருக்கு”
“நான் எப்பவும் உங்க அறிவைக் குறைச்சுப் பேசுனதில்ல.”
“ஆமா! ஆனா என் தொழிலை எவ்ளோ மோசமா பேசமுடியுமோ அவ்ளோ மோசமா பேசிருக்க. உஃப்! அந்தத் தொழில்தான் என்னை இன்னைக்கு இந்தளவுக்கு முன்னேறவச்சிருக்கு. ஸ்கூல் ட்ராப் அவுட்னு நீ கேலி செஞ்ச நான் இப்ப அழகா இங்கிலீஷ்கூட பேசுறேன்.”
“உங்களோட படிப்பு நமக்குள்ள எப்பவும் பிரச்சனையா இருந்ததில்ல நிலன்.”
“ம்ம்! என் வேலை, என்னோட விவசாயம்தானே உனக்குப் பிரச்சனையா இருந்துச்சு. ப்ச்! விடு! பேசுனா பேச்சு நீண்டுக்கிட்டே போகும். நான் என்னோட அக்ரோ புராடக்ட் கம்பெனிய செல்லரா ரிஜிஸ்டர் பண்ணுறதுக்கான இன்டர்வியூவை அட்டெண்ட் பண்ணனும். அதுக்கான டாக்குமெண்ட் எல்லாம் உன் வீட்டுலதான் இருக்கு. இப்ப போனா அதை ஒரு தடவை சரிபாத்துட்டு ரிலாக்ஸா நான் இன்டர்வியூக்குப் போவேன். கிளம்பலாமா? இல்ல இங்கயே நின்னு எதிரி மாதிரி சண்டை போட்டுக்கணுமா?”
மௌனமாய் அவனோடு கிளம்பிவிட்டாள் நியதி.
‘நான் பேசிய ஒவ்வொன்றும் இவனைக் காயப்படுத்தியிருக்கிறது. யாரையோ வெறுப்பேற்றுவதாய், யாருக்கோ பதிலடி கொடுப்பதாய் எண்ணி என்னவெல்லாம் பேசியிருந்தேன் நான்! அதெல்லாம் இவனுக்கு வலிக்குமே என யோசித்தேனா? இந்த ஈராண்டு தனிமையும், புறக்கணிப்பும் எனக்கு மிகவும் பொருத்தமான தண்டனைகள்தான்!’
சிந்தனையோட்டங்களினூடே கேபில் பயணிக்கும்போதே மொபைலில் ‘agro product producing companies near Ambasamudram’ என கூகுளில் தேடினாள். வரிசையாய் வந்து கொட்டிய தேடலுக்கான விடைகளில் முதல் விடையாய் அவளைப் பார்த்துக் கண்சிமிட்டியது ‘வி.வி அக்ரோ புராடக்ட் பிரைவேட் லிமிட்டெட்’ என்ற நிலவனின் நிறுவனம்.
வலைதளத்துக்குள் நுழைந்தாலோ முதலில் அவனது விவசாயப் பண்ணையின் விர்ச்சுவல் டூர் எனப்படும் பண்ணையைச் சுற்றிக்காட்டும் வீடியோ விரிந்தது. பார்க்கப் பார்க்கப் பிரமிப்பு அடங்கவில்லை நியதிக்கு.
அவனது முழு உழைப்புக்கான உரைகல்லாய் இருந்த அந்த வலைதளத்தை முழுவதுமாய்ப் பார்வையிட்டவள் மீண்டும் நிலவனைப் பார்த்தபோது அவளது பார்வையில் அவன் மீதான மரியாதை கூடியிருந்தது.
‘இவன் நிறைய உழைத்திருக்கிறான். சும்மாவே விவசாயம் மீது தனிப்பெரும் காதல் உள்ளவன் இப்போது இலாபத்தையும் கணக்கில் வைத்துத் திறமையாய்ப் பயிர் செய்து பிறருக்கு வேலைவாய்ப்பையும் நல்கியிருக்கிறான். தனியே இருந்து நான் சாதித்தேன் சாதித்தேன் என்று சொல்வதைவிட இவனது இந்தச் சாதனை அளப்பரியதுதான்!’
அப்பார்ட்மெண்டை அடைந்ததும் நியதியிடம் பேசாமல் அவன் அறைக்குள் போய்விட நேர்காணலுக்குச் செல்பவனின் மனநிலையைக் கெடுக்கும் விருப்பமில்லாதவள் தனது அறைக்குள் புகுந்துகொண்டாள்.
புடவையிலிருந்து இலகுவான உடைக்கு மாறிப் படுக்கையில் விழுந்தாள். ப்ரீத்தியை ரயில் ஏற்றிவிடக் காலையிலேயே கண்விழித்ததும், அன்றைய தினம் கொடுத்த சின்ன அதிர்ச்சியும் பிரமிப்புமாக அசண்டுபோன உடலும் மனமும் தூக்கத்துக்குத் தாவின.
நிலவன் நேர்காணலுக்கான ஆவணங்களை எடுத்துக்கொண்டவன் நியதியிடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாமென அவளது அறைக்கு வந்தபோது தாழ்போடாமல் மூடியிருந்த கதவு அரைகுறையாய்த் திறந்துகிடந்தது.
உள்ளே வந்தவன் அவள் அயர்ந்து உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான் பெருமூச்சுடன்.
‘உறங்குகிறபோது இரண்டு ஆண்டுகளாக என்னை மானசீகமாய் வதைக்கும் ராட்சசி இவள்தானா என்று நானே சந்தேகம்கொள்ளும் அளவுக்கு அத்துணை வெகுளியாய்த் தெரிகிறாள்! இந்த வைராக்கியம் பிடித்தவளுக்கு எப்படிப் பிஞ்சுக் குழந்தை முகம் வாய்த்துத் தொலைத்தது?’
அவள் உறங்கட்டுமெனக் கதவை ஒஞ்சரித்துச் சாத்திவிட்டுக் கிளம்பினான் நிலவன்.
அப்பார்ட்மெண்டை விட்டு வெளியேறிய நிலவன், நேரடியாகக் கிண்டியில் அமைந்திருந்த அந்த முன்னணி குயிக் காமர்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றான்.
இந்தியாவின் பெருநகரங்களில் பத்து நிமிடங்களில் மளிகை மற்றும் காய்கறிகளை டெலிவரி செய்யும் முன்னணிச் செயலி அது. ஏற்கெனவே பல சூப்பர் மார்க்கெட்டுகளுக்குத் தடையின்றி எக்ஸாட்டிக் காய்கறிகளைச் சப்ளை செய்துவரும் ‘வி.வி அக்ரோ’வின் ட்ராக் ரெக்கார்டை அந்த நிறுவனத்தின் ‘கேட்டகரி மேனேஜர்’ ஆராய்ந்து பார்த்தார்.
நிலவனின் பண்ணையில் உள்ள ‘கிளைமேட் கண்ட்ரோல்டு’ தட்பவெப்பம், தரமான விவசாய முறை மற்றும் தினசரி அறுவடை போன்ற தொழில்நுட்பங்களை விளக்கினான் நிலவன். குறிப்பாக, பறிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே குளிர்ச்சியான ‘ரீஃபர் வாகனங்களில்’ நேரடியாக அவர்களின் குடோன்களுக்குச் சப்ளை செய்யும் லாஜிஸ்டிக்ஸ் மாடலை அவன் விளக்கிய விதம் அவர்களை மிகவும் கவர்ந்தது.
நிறுவனத்தின் கமிஷன் விகிதங்கள், பேக்கிங் தரநிலைகள் மற்றும் தினசரி சப்ளை அளவு குறித்த அக்ரிமெண்ட்டில் கையெழுத்திட்டு, அதிகாரப்பூர்வமாகத் தனது நிறுவனத்தை ஒரு ‘வெரிஃபைட் செல்லராகப்’ பதிவு செய்யும் பணிகளை வெற்றிகரமாக முடித்தான்.
அனைத்து வேலைகளும் நேர்த்தியாக முடிந்துவிட்ட திருப்தியோடு, மாலை மங்கும் வேளையில் மீண்டும் ஜி.என். செட்டி சாலையில் உள்ள நியதியின் அப்பார்ட்மெண்டிற்குத் திரும்பினான் நிலவன்.
கதவைத் திறந்தபோதே வீட்டுக்குள்ளிருந்து தேநீரின் நறுமணம் நிலவனின் நாசியைத் தாக்கியது.
அவளைத் தாண்டி உள்ளே வந்தவன் மீண்டும் அறைக்குள் போக எத்தனித்தபோது “நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது நிலன்?” என்று கேட்டது நியதியின் குரல்.
சுறுசுறுவெனக் கோபம் உச்சந்தலைக்கேற வேகமாய்த் திரும்பினான் நிலவன். அவனது கண்களில் தெரிந்த கோபத் தீக்குப் பொருத்தமில்லாத சிரிப்பு இதழ்களில்!
நியதி எச்சிலை விழுங்கியவளாய் “அதாவது… உங்களுக்கேத்த பொண்ணா, உங்களைப் புரிஞ்சிக்கிறவளா, உங்களைக் காயப்படுத்தாத ஒருத்தியை, முக்கியமா உங்களை நேசிக்…” என்று தொடர்ந்து பேசிக்கொண்டே போக அவனுக்கும் அவளுக்குமான இடைவெளி குறைந்த அந்நொடியில் அவளது பேச்சு அந்தரத்தில் தொங்கியது.
அவளும் அவன் நெருங்க நெருங்கப் பின்னடைந்து சுவரில் சாய்ந்துவிட அவளிடம் நெருங்கி நின்றவன் அங்கிங்குச் செல்லாதபடி அவளுக்குக் கரத்தால் அணைபோட்டான்.
நிலவன் அவளைக் கூர்மையாய்ப் பார்த்தவன் “நீ சொன்ன எல்லாத் தகுதியோடவும் ஒருத்தி இருந்தா. காலம் அவளை மாத்திடுச்சா இல்லையானு எனக்குத் தெரியாது. ஆனா ஒண்ணு, என் மனசு அவளைத் தவிர வேற ஒருத்தியை ஏத்துக்காது.” என்க இடையில் நியதி ஏதோ சொல்ல வரவும் சட்டென அவளது உதட்டில் ஆட்காட்டி விரலை வைத்து அமைதியாக்கினான்.
“நான் வேற ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்குறதைச் சட்டமும் ஏத்துக்காது. ஏன்னா முதல் மனைவி இருக்குறப்ப இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறது சட்டப்படி குற்றம். ஆடிட்டர் படிப்பு படிக்குற திருமதி நிலவனுக்கு இது எப்பிடித் தெரியாமப்போச்சு?”
நிதானமாய்க் கண்கள் பளபளக்க அவன் வினவிய கேள்விக்கான பதிலடி சொல்ல முடியாதவளாய்த் திணறிப்போய் நின்றாள் திருமதி நிலவனான நியதி!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


