என் அதிகாரத்தை நான் ஆயுதமாகப் பயன்படுத்தவில்லை, அவளை மயக்கும் மெல்லிசையாகவே ஒலிக்கவிட்டேன்; அவளது வெட்கம் கலந்த மறுப்புகளையெல்லாம் மூழ்கடித்து அவளை முழுமையாக எனக்காய் அடிபணிய வைக்க!
நேத்ரன் நிச்சயதார்த்தத்திலிருந்து கிளம்பியது எதனால் எனப் புரியாமல் மறுநாள் பள்ளிக்குச் சேர்ந்தாள் வெண்பா. காலை அவளது வகுப்பு மாணவர்களைப் பெற்றோர் கொண்டு வந்துவிடும் இடத்தில் அவள் நிற்கவேண்டும். அங்கிருந்து வகுப்பறைக்கு அழைத்துச் செல்லவேண்டும்.
நேரே ஸ்டாஃப் ரூமுக்குச் சென்றவள் அவளது ஹேண்ட்பேக்கிலிருந்து கைக்குட்டையை எடுத்தபோது பேனா ஒன்று கீழே விழுந்து உருண்டோடவும் அதை எடுக்கக் குனிந்தாள்.
அதற்குள் ஒரு சிறுகரம் அதை எடுத்து அவளிடம் நீட்டியது.
“குட் மார்னிங் மிஸ்”
அடர்த்தியான இரட்டைப் பின்னல் கருப்பு ரிப்பன் பௌவுடன் சிரிக்க நின்றுகொண்டிருந்தாள் ஒரு சிறுபெண்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“குட் மார்னிங் ஹேமா! லெவன்த் ஸ்டாண்டர்டுக்கு இன்னைக்குப் பேரண்ட்ஸ் மீட்டிங் தானே?” என்று வெண்பா வினவ
“ஆமா மிஸ்! எங்கம்மா வந்திருக்காங்க. அனிதா மிஸைத் தேடி வந்தேன்”
“அவங்க ஹெச்.எம் ரூமுக்குப் போயிருப்பாங்க, இன்னைக்கு மார்னிங் அசெம்பிளி அவங்க பொறுப்பு. நீ அம்மாவோட உன் கிளாஸ் முன்னாடி வெயிட் பண்ணுடா”
“ஓ.கே மிஸ். தேங்க்யூ”
இரட்டை ஜடைப் பின்னல் அசைய சீருடை அணிந்த அந்தப் பதின்வயது சிறுபெண்ணைக் குறுநகையோடு பார்த்துவிட்டுத் தனது வகுப்புமைக் குழந்தைகளை அழைக்க ஒன்றாம் வகுப்பு குழந்தைகளுக்கான நுழைவாயிலுக்குக் கிளம்பினாள் வெண்பா.
பெற்றோர் கேட் அருகே நிற்க குழந்தைகள் அவர்களுக்கு டாட்டா காட்டிவிட்டு உள்ளே வந்தார்கள்.
அந்தக் குழந்தைகளை வகுப்புக்கு அழைத்துச் செல்லக் காத்திருந்த ஒன்றாம் வகுப்பின் இதரப் பிரிவைச் சேர்ந்த ஆசிரியைகளின் வரிசையில் அவளும் போய் நின்றுகொண்டாள்.
குழந்தைகள் வர வர அவர்களைத் தங்களோடு சேர்த்து நிறுத்திக்கொண்டார்கள் ஆசிரியைகள்.
தங்களது வகுப்பு குழந்தைகள் அனைவரும் வந்த பிறகு எண்ணிவிட்டு அவர்களைத் தங்களோடு வகுப்பறைக்கு அழைத்துச் சென்றார்கள்.
குட்டி குட்டியாய் சீருடை இதழ்கள் விரித்து ஓடும் மலர்களாய் இருந்த குழந்தைகளைக் கண்டதும் மற்ற அனைத்தும் மறந்து போய்விட்டது வெண்பாவுக்கு. பின்னர் காலைநேர அசெம்பிளி முடிந்து வகுப்பு ஆரம்பித்துவிட்டது.
இடைவேளையின்போது ஸ்டாஃப் ரூம் வந்த வெண்பாவின் கண்களில் அமுதா பட்டுவிடப் புன்னகையோடு பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு முடிந்ததா என வினவினாள் அவள்.
“ம்ம்! என் கிளாஸ் லீடர் ஹேமா லெவன்த் ஆனுவல் எக்ஸாம்ல மார்க் கொஞ்சம் குறைஞ்சிட்டா, அவதான் ஃபர்ஸ்ட் ரேங்க். ஆனாலும் அவங்கம்மாக்கு வருத்தம் தாங்கல, மகளுக்குப் படிப்புல கவனமில்லனு ஒரே புலம்பல். இந்தத் தடவை கொஸ்டின் பேப்பர் கொஞ்சம் டஃப். அது புரியாம ரொம்ப ஸ்ட்ரிக்டா பேசுறாங்க. ட்வெல்த்துக்கான லெசன்ஸ் நடத்த ஆரம்பிச்சிட்டோம்ல. வெளிய டியூசன் அனுப்பலாமானு கேட்டுட்டுப் போறாங்க. இந்தப் பெத்தவங்களைத் திருப்திப்படுத்தப் பிள்ளைங்க எவ்ளோ போராட வேண்டியிருக்குல்ல?”
அமுதாவின் அங்கலாய்ப்பு ஆச்சரியமாகத் தோன்றவில்லை வெண்பாவுக்கு. ஏனெனில் ஒன்றாம் வகுப்பு பிள்ளைகளிடமே பெற்றோர் இந்த எதிர்பார்ப்பைத்தானே வைத்திருக்கிறார்கள். பதினொன்றாம் வகுப்பு முடித்து பன்னிரண்டாம் வகுப்புக்குள் நுழைபவளின் அன்னை என்றால் கேட்கவா வேண்டும்?
“என்ன மிஸ் பண்றது? ஃபீஸ் கட்டுறாங்க. அதுக்கேத்த மாதிரி பிள்ளைங்க மார்க் வாங்கணும்னு எதிர்பாக்குறாங்க. அவங்க எதிர்பார்ப்பை ஒரேயடியா தப்புனும் சொல்லிட முடியாதுல்ல” என்றாள் வெண்பா பொதுப்படையாக.
காலைநேர இடைவேளை பதினைந்து நிமிடங்கள் நீடிக்கும். அதற்குள் ஆசிரியர்களும் மாணவர்களும் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வகுப்புக்கு வந்துவிடவேண்டும்.
சரியாகப் பதினைந்தாம் நிமிடத்தின் முடிவில் நேத்ரனிடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது வெண்பாவுக்கு. வகுப்புக்குச் செல்லவேண்டுமே!
உடனடியாக அழைப்பை ஏற்றவள் “இப்பதான் ஷார்ட் ப்ரேக் முடிஞ்சுது நேத்ரன், நான் லஞ்ச் ப்ரேக்ல பேசட்டுமா?” என்று வினவ
“சரிம்மா. பை” என்றான் அவன்.
அழைப்பைத் துண்டித்தபோது வெண்பாவின் மனம் கொஞ்சம் வாடித்தான் போனது. நேற்று பாதியில் நிச்சயத்தை விட்டுப் போனவனுக்கு என்ன அவசரமோ? என்ன பிரச்சனையோ?
இந்தப் பதபதைப்பு இரவு முழுவதும் அவளைத் தூங்க விடவில்லை. மொபைலில் அழைத்துத்துப் பேசலாம்தான். ஆனால் தனக்கும் அவனுக்குமிடையே இன்னும் எதுவும் உறுதியாகாத நிலையில் உரிமையாய் அழைப்பது பிணக்காய் போய்விடுமோ என்ற தயக்கம்.
நேரில் அவனிடம் வார்த்தைக்கு வார்த்தை மல்லு கட்டுவது வேறு! தானே அழைத்துப் பேசுவதுதான் பிரச்சனை.
‘ஒருவேளை நான் வேண்டுமென்றே இழைந்து பேசுவதாக எண்ணிவிட்டால்?’
இந்த எண்ணவோட்டத்துடன் வகுப்புக்கு வந்தவள் முதல் வேலையாக இடைவேளையில் சிற்றுண்டியைக் குழந்தைகள் சாப்பிட்டுவிட்டார்களா எனப் பரிசோதித்தாள்.
குழந்தைகளுக்குக் காலை நேரத்தில் சிற்றுண்டியாகச் சத்தான பழங்கள், வெள்ளரிக்காய் கேரட் போன்ற காய்கறிகள், வீட்டிலேயே செய்த அதிக இனிப்பும், எண்ணெய்யுமில்லாத சத்தான சிற்றுண்டிகளைக் கொடுத்துவிடவேண்டும் என்பது பெற்றோருக்கான பொறுப்பு என்றால் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவதை உறுதி செய்ய வேண்டுமென்பது வகுப்பு ஆசிரியரின் கடமை.
அதைச் செய்து முடித்துவிட்டு அடுத்த பாடவேளைக்கான பாடத்தை ஆரம்பித்தாள் வெண்பா. பின்னர் குறிப்பேடுகளில் எழுதிக் கொடுத்தாள். அதற்கு குட்டி மாணவர்களும் தங்களது ஏற்ற இறக்கமான கையெழுத்தில் எழுத ஆரம்பித்தார்கள்.
சிறுகுழந்தைகளுக்கு ஐந்து வயதில்தான் பென்சிலும் பேனாவும் பிடிக்கும் உறுதி கைகளுக்கு வருமாம்! அதற்கு முன்னரே நாம் மழலையர் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்த்து எழுதப் பழக்குவது சரியில்லை என்பார் வெண்பாவின் தந்தை செண்பகராமன்.
ஆனால் என்ன செய்வது? போட்டி நிறைந்த உலகத்தில் ஓடுவதற்கு நம் பிள்ளைகளை நாம் தயார்படுத்தவேண்டியது கட்டாயமாகிவிட்டதே!
சில குழந்தைகள் எழுதச் சிரமப்படக் கைப்பிடித்து எழுத வைத்தாள் வெண்பா.
இந்த ஆசிரியப்பணி அதிலும் இளஞ்சிறார்களுக்கு ஆசிரியையாகப் பணியாற்றுவது அவள் விரும்பியேற்ற வேலை. குழந்தைகளைப் பிடிக்கும் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் அரிச்சுவடியில் இருந்து கற்றுக் கொடுப்பது அவளுக்கே சுவாரசியமாய் தோன்றியது.
“மிஸ் இது நல்லா இருக்கா?”
நோட்டைக் காட்டிய ஒரு மாணவியிடமிருந்து வாங்கிப் பார்த்தவள் “ம்ம்! நல்லா இருக்கே. ஆனா இங்க ‘ஒ’ இல்ல, ‘ஓ’ வரணும். ஓசைனு சொல்லுறப்ப குறில் வருதா? நெடில் வருதா?” என்று வினவ மாணவியும் சரியான பதிலைச் சொல்லிவிட்டாள்.
“இதை ஞாபகம் வச்சு நாளைக்குப் பரீட்சையில சரியா எழுதணும்” மாணவி தலையாட்ட வெண்பாவும் நடந்துகொண்டிருக்கும் தேர்வு குறித்த வேலையில் ஆழ்ந்தாள்.
இப்படியே அடுத்த இரண்டு பாடவேளைகளும் நகர்ந்தன. மதியவுணவுக்கான இடைவேளை வந்ததும் பிள்ளைகளிடம் கொண்டு வந்த உணவை மிச்சம் வைக்காமல் சாப்பிடவேண்டுமெனச் சொல்லிவிட்டு ஸ்டாஃப் ரூமுக்குச் சென்றாள் வெண்பா.
அங்கே சென்றதும் உணவு பாத்திரத்தைத் திறந்தவளுக்கு உள்ளே இருந்து மிளகு சாதத்தின் நறுமணம் நாசியை வருடியது. கூடவே சாப்பிட மிளகு போட்டுச் செய்த மஷ்ரூம் கறியும் இருக்க நாவூறியது அவளுக்கு. அதே நேரம் நேத்ரனிடமும் பேசவேண்டுமே!
கரண்டியால் பூண்டு சாதத்தோடு மஷ்ரூம் கறியைக் கலந்து அதே கரண்டியால் சாப்பிட்டபடியே நேத்ரனின் எண்ணைத் தொடுதிரையில் அழுத்தினாள். அழைப்புக்கான மணியோசை போய்கொண்டிருக்கச் சரியாய் பத்தாம் நொடியில் நேத்ரனின் “சொல்லும்மா” என்ற வார்த்தை இதமாய் வந்து மோதியது அவளது செவிகளில்.
“நீங்கதான் சொல்லணும். மார்னிங் கால் பண்ணுனீங்களே”
“ஹான்! நேத்து பேச்சை பாதியில் நிறுத்திட்டுப் போனேன்ல. அதான் கால் பண்ணுனேன். நிச்சயதார்த்தத்துல எனி கலகம் ஆர் கலவரம்?”

வெண்பா சட்டென நகைத்தவள் “கலகமும் கலவரமும் பண்ண வேண்டிய ஆள் அவரோட பசங்களுக்கு என்னமோ ஏதோனு பதறி அங்க இருந்து போனதால எல்லாம் ஸ்மூத்தா நடந்துச்சு” என்று கிண்டல் செய்தவள் “ஆமா, அது யாரு பசங்க? நீங்க பேச்சிலர்னு நினைச்சேனே. இல்லையா?” என்று சீண்டலாய் வினவ
“அடிப்பாவி!” என்று சன்னமாய் அதிர்ந்தவன் அவளது குறும்புத்தனமான கேள்வியால் சிரித்தே விட்டான்.
“நான் ஸ்பான்சர் பண்ற கபடி டீமோட பசங்க. அவங்களுக்கும் ஊர்க்காரப் பசங்களுக்கும் கைகலப்பாகிடுச்சு. அதான் நான் போக வேண்டிய கட்டாயம்”
“அச்சோ! அப்புறம் என்னாச்சு?”
மறுமுனையில் நேத்ரன் சோம்பல் முறிப்பது கேட்டது.
“என்னாகும்? பிரச்சனை பண்ணுனவங்களை உள்ள தூக்கிப் போட்டாச்சு. என் பசங்கள்ல ஒருத்தனுக்கு ஃபிராக்சர் கால்ல. எலும்பு கூடுற வரைக்கும் அவனால கபடி ப்ராக்டீஸ் பண்ணமுடியாது”
அவன் சொல்லும்போதே குரலில் கவலை இழையோடுவதைக் கவனித்தாள்.
‘பொதுவாக அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், பெரிய வணிகப் பிரமுகர்கள் இம்மாதிரி விளையாட்டு வீரர்களுக்கு ஸ்பான்சர் செய்வது சாதாரணம்தானே? நேத்ரனைப் போன்ற அரசியல்வாதிக்கு யாரோ ஒரு பதின்வயது பையனின் உடல்நிலை குறித்து என்ன கவலை வந்துவிட முடியும்?’
தனக்குள் யோசித்தவளுக்குத் தனது மனம் சொல்வதை முழுவதுமாக ஏற்கவும் பிடிக்கவில்லை. அவளுக்குள் இருக்கும் ஏதோ ஒன்று நேத்ரன் மற்ற அரசியல்வாதிகளைப் போல இல்லையென அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தது. அந்த உணர்வே அவனது குரலில் இப்போது இருக்கும் கவலையைப் போக்கும் விதமாய் ஆறுதல் சொல்ல அவளைத் தூண்டியது.
“கவலைப்படாதிங்க. சின்ன வயசுதானே? எலும்பு கூடுறதுக்கு ரொம்ப மாசம் எடுத்துக்காது. முடவாட்டுக்கால் கிழங்கு சூப் குடிக்கச் சொல்லுங்க. அப்புறம்…”
“அடடே டீச்சரம்மா! நீங்க எப்ப ஆச்சி மாதிரி மருத்துவக்குறிப்பு எல்லாம் கத்துக்கிட்டிங்க?”
“கிண்டல் பண்ணாதிங்க நேத்ரன். நீங்க வருத்தமா பேசுன மாதிரி இருந்துச்சு. அதான் சொன்னேன்”
“நீங்க சொன்ன எல்லாத்தையும் குறிச்சு வச்சிட்டேன். கண்டிப்பா முருகனோட அம்மா கிட்ட சொல்லுறேன்”
“ம்ம்! அப்புறம் எலக்சன் வேலை எப்பிடி போகுது?”
“இன்னும் ஒரு வாரத்துல எலக்சன். கிட்டத்தட்ட வேலை முடிஞ்சுது. அப்புறம் யாருக்கு ஓட்டு போடப் போறீங்க டீச்சரம்மா?”
“நீங்க என்கிட்ட இப்பிடி கேட்கவே கூடாது. யாருக்கு ஓட்டு போடணும்ங்கிறது என்னோட டெசிஷன். எனக்கு உங்களைப் பிடிக்கும்ங்கிறதுக்காக உங்களுக்கு ஓட்டு போட முடியாதுல்ல”
அவள் தெளிவாய் சொல்லவும் நேத்ரனிடம் மீண்டும் அட்டகாசமானச் சிரிப்பு.
“அப்ப டீச்சரம்மாக்கு என்னைப் பிடிக்கும்”
“ஆமா! பிடிக்கும். பிடிக்க மட்டும் தான் செய்யும். இதுக்கு வேற அர்த்தம் எடுத்துக்கக் கூடாது” கண்டிப்பாய் அவள் சொல்லவும்
“நான் எக்ஸ்ட்ராவா எந்த அர்த்தமும் எடுத்துக்கலையே. ஒருவேளை டீச்சரம்மாக்கு அப்பிடி எந்த ஐடியாவும் இருக்கா என்ன?” என அவளிடம் வம்பிழுத்தான் நேத்ரன்.
மறுமுனையில் பதில் சொல்லத் தெரியாமல் வெண்பா திகைத்தாள். அவளால் தீர்மானமாய் ஆம், இல்லை என்று சொல்ல முடியாதபடி தயக்கமெனும் சங்கிலி அவள் மனதைக் கட்டிப்போட்டிருந்ததே!
பெண்கள் பிடித்தத்துக்கும் விருப்பத்துக்குமான வேறுபாட்டை அறிந்தவர்கள். பிடித்தத்துக்காகப் பெரிய முடிவுகளை எடுக்கத் துணியாதவர்கள். எப்போது பிடித்தம் விருப்பமாக முன்னேறுகிறதோ அதுவரை பொறுமை காக்கத் தெரிந்தவர்கள்.
ஆனால் ஆண்களின் மனநிலை வேறுவிதமானது. அவர்களுக்குப் பிடித்த பெண்கள் விருப்பத்துக்குரியவர்களாக வெகுவிரைவில் மாறிவிடுவார்கள். பெண்களின் நுண்ணுணர்வுகளில் வரும் சின்னச் சின்ன தயக்கங்கள் அவர்களுக்குப் புரியாது.
அதன் காரணமாகவே வெண்பாவின் பிடித்தத்தை விருப்பமாகவே கருதியது நேத்ரனின் மனம். அவளால் வாய்விட்டுச் சொல்ல முடியாததை வெட்கமென எண்ணிக்கொண்டது ஒருபுறம் வேடிக்கை.
இப்போதும் அவளது அமைதியை அவன் வெட்கமெனக் கருதிக்கொள்ள அவளோ தயங்க மட்டுமே செய்தாள்.
“எனக்குள்ள என்ன ஐடியா இருக்குனு இப்போதைக்கு என்னால உறுதியா சொல்ல முடியல. நீங்க எலக்சன் வேலையைப் பாருங்க. நாங்க கல்யாண வேலையைப் பாக்கணும்” என்றாள் அமர்த்தலாய்.
“பாருங்க டீச்சரம்மா! லாஸ்ட் எக்ஸாம் எப்ப?”
“கமிங் ஃபிரைடே. அப்புறம் சம்மர் ஹாலிடேஸ்”
“ஓகே! கமிங் ஃபிரைடே டீச்சரம்மா ஃப்ரீயா இருந்தீங்கனா நாம சும்மா ஒரு டிரைவ் போயிட்டு வரலாமா?”
துணிந்து கேட்டுவிட்டான் நேத்ரன். ஆனால் வெண்பாவுக்கோ பதில் சொல்லத் தெரியவில்லை. முதலில் இதற்கு வீட்டார் சம்மதிப்பார்களா என்ற திகைப்பு.
“அது… எங்க வீட்டுல விடமாட்டாங்களே” என்றாள் கடைசி கரண்டி சாதத்தை விழுங்கியவளாய்.
“நான் அத்தை கிட்ட பேசட்டுமா?”
“ஐயோ! வேண்டாம் வேண்டாம்” பதறிப்போய் தடுத்தாள் அவனை.
சும்மாவே நிச்சயதார்த்தத்துக்கு உடை எடுக்கையில் அவன் செய்த கலாட்டாக்களை வைத்து அவளிடம் தினமும் ‘என்ன முடிவு எடுத்திருக்கிறாய்?’ என்று அன்னையும் பெரியம்மாவும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
இதில் இவன் வேறு தனியே அழைத்துச் செல்ல அனுமதி கேட்டான் என்றால் உறுதியே செய்துவிடுவார்கள் என்ற பதற்றம்.
“தனியா டிரைவ் பண்ண என்ன அவசியம் இருக்கு? நாமதான் போன்ல பேசிக்கிறோமே”
என்றாள் சமாளிப்பாய்.
“இப்பிடி பத்து நிமிசம் பேசுறதுல நீ என்ன என்னைப் பத்திப் புரிஞ்சிப்ப? அட்லீஸ்ட் ஒரு மணி நேரம் என்கூட இருந்தாலாச்சும் இவன் எப்பிடிப்பட்ட கிறுக்குன்னு உனக்குப் புரியும்”
“கிறுக்கனா?” – வெண்பா.
“மனசு முழுக்க எவ்ளோவோ ஆசைகளை வச்சுக்கிட்டு எதிர்ல பேசுறவளுக்கு ஸ்பேஸ் குடுக்கணும்ங்கிறதுக்காக எல்லாத்தையும் மறைச்சு நடிக்கிற கிறுக்குத்தனத்தை இவ்ளோ நாள் செஞ்சிட்டிருக்குறவனை வேற எப்பிடிச் சொல்லுறது?”
‘இவன் இப்படிப் பேசினால் என் மனமே என்னைக் கொடுமைக்காரி என்கிறதே!’
“நேத்ரன்!” என்றவள் சிரமத்தோடு “நான் ஓவரா பண்றதா தோணுதா? உங்களை அலைக்கழிக்கணும்னு நான் இந்த மாதிரி செய்யலங்க” என்றாள் சங்கடத்துடன்.
நேத்ரனிடம் பதிலாய் வந்தது சிரிப்பு மட்டுமே. புருவங்களை ஏற்றியிறக்கி ஆட்காட்டிவிரலால் நெற்றியில் கோடிழுத்தபடியே “ம்ம்! படுத்தத்தான் செய்யுற. சட்டுனு ஒரு முடிவைச் சொன்னா நானும் சந்தோசமா எலக்சனை ஃபேஸ் பண்ணுவேன். ஆனா பரவால்ல! டீச்சரம்மாவுக்காகக் காத்திருக்கலாம்! தப்பில்ல” என்றதும் மறுமுனையில் பெருமூச்சு.
“தேங்க்ஸ் நேத்ரன்” என்றவள் “ஐயோ” என்க
“என்னாச்சு?”
“இல்ல… நான் நேத்ரன்னு சொல்லுறதுல உங்களுக்கு…” என அவள் தயங்க
“நீ வாடா போடானு கூடச் சொல்லு செல்லம். நீ கூப்பிடத்தானே எனக்குப் பேர் வச்சிருக்காங்க” என்றான் அவன் துள்ளலானக் குரலோடு.
“கிண்டல் பண்ணுறிங்களா?”
“சேச்சே! நீ என் பேரை உச்சரிக்குறப்ப என் காதுக்கு இதமா இருக்கு. தமிழோட அழகே உச்சரிப்புதான். உன்னோட மயங்கொலிப்பிழை இல்லாத உச்சரிப்பு போதும், என்னை மயக்குறதுக்கு”
அவன் பாட்டுக்குப் பேசிக்கொண்டே செல்ல மறுமுனையில் கேட்டுக்கொண்டிருந்தவளுக்கோ மொபைல் தீண்டிய செவிமடல் சிவந்து போனது.
“நேத்ரன்” என அவஸ்தையோடு அவள் சொல்ல
“அடடா! கேட்டுக்கிட்டே இருக்கலாம் போலயே” என்றான் அவன் ரசனை கலந்த குரலோடு.
“நாம டிரைவ் போறோம். நோ மோர் தயக்கம். இட்ஸ் ஃபைனல். டாட்” என்று அழுத்தத்தோடு முற்றுப்புள்ளி வைத்தான் அவளது தயக்கத்துக்கும் பேச்சுக்கும். அவனது அழுத்தமான பேச்சு கட்டளையாகவே ஒலித்தது வெண்பாவின் செவிகளில். அதுவும் மறுக்க முடியாதக் கட்டளையாய்!
பேச்சு பேச்சாய் இருந்தாலும் காரியத்தில் கண்ணாய் இருந்தான் அந்த இளம் அரசியல்வாதி. அவன் சொல்வதைத் தடுக்க முடியாதவண்ணம் வெண்பாவை ஆளுமையான ரசனையான பேச்சில் கட்டிப்போடவும் செய்துவிட்டான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


