“நிராசையும் வேதனையும் வாழ்க்கையோட ஒரு பகுதி. ஏன்னா வாழ்க்கையை நாம பகிர்ந்துக்குற மனுஷங்க நம்மளோட ஜெராக்ஸ் காப்பியா இருக்குறதுக்கான சாத்தியம் குறைவு. அப்ப சில நேரம் ஏமாற்றமும் கழிவிரக்கமும் நம்மளைத் தாக்கும். அதைக் கடந்து நம்ம நிலைப்பாட்டை அவங்களுக்குப் புரியவெச்சு அவங்க மனசுல உள்ள எதிர்பார்ப்புகள்ல எது சாத்தியம்னு நாம புரிஞ்சிக்கிட்டு சண்டையும் சச்சரவும் சமாதானமுமா வாழ்க்கையை நகர்த்துறதுதான் இயல்பான குடும்ப வாழ்க்கை.”
-வசுமதி
திருநெல்வேலியில் மகிழினியின் புதல்வன் பிறந்த நிகழ்வை இனிதே முடித்துவிட்டு, மனநிறைவோடு சென்னைக்குத் திரும்பியிருந்தனர் வசுமதியும் வசீகரனும். கடந்த காலங்களில் தனது அன்னை மற்றும் தங்கைக்கு வசுமதியோடு இருந்த ஊடல்களும் மௌனப் பனிப்போர்களும் இப்போது முற்றிலும் விலகி, ஒரு தெளிவான நீரோடையைப் போல அனைவரின் வாழ்க்கையும் அழகாக நகரத் தொடங்கியிருந்தது.
வசீகரன் வழக்கம் போலத் தன் ஐ.டி நிறுவனத்தில் ஒரு சொல்யூஷன் ஆர்க்கிடெக்டாகத் தன் வேலைகளில் மூழ்கியிருக்க, வசுமதி இப்போது முழுநேரப் பணியிலிருந்து சற்று விலகி, மூன் எஃப்.எம்மில் ரேடியோ ஜாக்கியாக மட்டுமே தன் பணியைத் தொடர்ந்தாள். கர்ப்பகாலத்தின் மென்மையான தருணங்களை அவள் மனதார ரசித்து அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அவளே யோசித்து எடுத்த முடிவு அது.
ஒரு வியாழக்கிழமை மாலை. அலுவலகம் முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான் வசீகரன். அடையாறு பாலத்தின் நெரிசலில் கார் ஊர்ந்து கொண்டிருக்க, எஃப்.எம்மில் வசுமதியின் குரல் ஒலித்தது.
“ஹலோ சென்னை! இது உங்களின் ஃபேவரைட் மூன் எஃப்.எம்! நான் உங்க ஆர்.ஜே வசுமதி. இன்னைக்கு நம்ம ‘வசந்த கால வசீகரங்கள்’ நிகழ்ச்சியில நாம பேசப்போற தலைப்பு…” என்று தேனில் ஊறிய பலாச்சுளையைப் போல ஒலித்த அவளது குரல், அந்த ட்ராஃபிக் நெரிசலின் சலிப்பை வசீகரனுக்குள் துளியும் இல்லாமல் துடைத்தெறிந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவளது குரலில் இருந்த அந்த இயல்பான வசீகரம், ஒரு தேர்ந்த கலைஞனின் விரல் பட்ட வீணையைப் போலக் கேட்பவர்களைக் கட்டிப்போட்டது. நிகழ்ச்சியின் பெயர் ‘வசந்த கால வசீகரங்கள்’ என்பதால், அவள் தன் பெயரையே உச்சரிப்பது போல வசீகரனுக்குத் தோன்றிப் புன்னகையை வரவழைத்தது.
வீட்டிற்கு வந்ததும், சோபாவில் சாய்ந்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவளின் அருகில் வந்து அமர்ந்தான்.
“இன்னைக்கு ஷோ ரொம்ப சூப்பரா இருந்துச்சு வசு. உன்னோட வாய்ஸ்ல ஏதோ ஒரு மேஜிக் இருக்கு. அந்த ‘வசந்த கால வசீகரங்கள்’னு நீ சொல்லும்போது, எனக்காகவே சொல்ற மாதிரி ஒரு ஃபீல்,” என்று கண்சிமிட்டினான்.
“ஓஹ்! ரொம்பத்தான் உங்களுக்கு. நான் என் ஆடியன்ஸுக்காகச் சொன்னேன். மோர் ஓவர் ஷோவோட பேரே அதுதான். நீங்க ஏன் உங்களுக்குனு நினைச்சுக்குறீங்க?” என்று அவள் பொய்க்கோபத்துடன் உதட்டைச் சுழற்ற, அந்தச் சின்ன ஊடலுடன் கூடிய உரையாடலே அவர்களுக்குள் காதலை வளர்த்தது.
“நான் முதல் தடவை உன்னோட ஷோவைக் கேட்டிருக்கேன் வசு. நீ அப்பப்ப சினிமா பாட்டை ஹம்மிங் பண்ணிட்டே கிச்சன்ல வேலை பாப்ப. சில நேரம் அதை நான் கவனிச்சிருக்கேன். அப்ப உன் வாய்ஸ் நல்லா இருக்குனு சொல்லத் தோணும். ஆனா நான் சொன்னதில்ல. இன்னைக்கு ப்ரோக்ராம் கேட்ட அப்புறமும் சொல்லாம விட்டா நல்லாவா இருக்கும்? ஃபைனலி என் பொண்டாட்டி ஒரு பெர்ஃபெக்ட்டான ஆர்.ஜேனு என் மண்டையில இன்னைக்கு உறைச்சிருக்கு. இப்ப உனக்கு ஏதாச்சும் கிஃப்ட் குடுத்தாகணுமே” என்று சொல்லி அவளை அணைத்துக் கன்னத்தில் முத்தமிட்டவன் மெய்யாகவே அந்த வார இறுதியில் அவளை அழைத்துச் சென்று பரிசை வாங்கித் தந்தான்.
“வா வசு, கொஞ்சம் வெளிய போயிட்டு வரலாம்,”
வசுமதியை அழைத்துக் கொண்டு வசீகரன் போய் நின்ற இடம் தி.நகரில் உள்ள ஒரு பிரபலமான நகைக் கடை. அதுவும் அழகான வைர ஆபரணங்களுக்குப் பெயர் போன கடை. முதலில் வசுமதிக்கு ஏதும் புரியவில்லை.
“திடீர்னு எதுக்கு இங்க வந்திருக்கோம் வசீ? எனக்குத்தான் நகை எல்லாம் நிறைய இருக்கே,” என்றாள் குழப்பமாக.
“சும்மா வா…”
அவளைப் பிரத்தியேக வைர நகைப்பிரிவிற்கு அழைத்துச் சென்றான். அங்கே அவளுக்காகவே முன்பதிவு செய்து வைக்கப்பட்டிருந்த அந்தப் பெட்டியைத் திறந்தான். உள்ளே, குட்டி குட்டியான வைரக் கற்கள் பதிக்கப்பட்ட, மிக நேர்த்தியான இதய வடிவிலான பெண்டெண்ட்டை சுமக்கும் ஒரு மெல்லிய தங்க செயின், அதே போல குட்டி குட்டியாய் இதய வடிவக் கம்மல்கள், மற்றும் இதய வடிவத்தில் மத்தியில் மட்டும் வைரங்கள் மின்னும் மெல்லிய தங்க பிரேஸ்லெட் ஆகியவை வெல்வெட் துணியின் மீது மின்னிக்கொண்டிருந்தன.
“ஒரு தடவை நீ என்கிட்ட, இந்த மாதிரி குட்டி குட்டியா டைமண்ட் வெச்ச ஹார்ட் ஷேப் செட் வாங்கணும்னு உன்னோட சின்ன வயசு ஆசையா சொன்ன. அப்ப நிறைய காரணங்களை அடுக்கி உன்னோட இந்த ஆசையை நான் அவாய்ட் பண்ணிருக்கேன். அப்புறம் ஜாப்க்குப் போய் நீயே உனக்குப் பிடிச்ச இன்ஃபினிட்டி செட் வாங்குன. ஆனா என் பங்குக்கு உன்னோட சின்ன ஆசையை நானும் நிறைவேத்தணும்ல. இப்ப உனக்காகவே ஸ்பெஷலா இந்த ஹார்ட் டிசைன் செட் பண்ணச் சொன்னேன். பிடிச்சிருக்கா?” என்று அவன் கேட்டபோது, வசுமதியின் கண்கள் ஆச்சரியத்திலும் ஆனந்தத்திலும் விரிந்தன.
“இது ரொம்ப ரொம்ப அழகா இருக்கு! எனக்காக ஞாபகம் வெச்சு வாங்கியிருக்கீங்களே…” என்றவளின் குரல் தழுதழுத்தது.
கடையின் கண்ணாடியின் முன்னே அவளை நிற்க வைத்து, அந்த மெல்லிய வைரச் செயினை அவளது கழுத்தில் அணிவித்தான் வசீகரன். அவனது கட்டுமஸ்தான விரல்கள் அவளது மென்மையான கழுத்துப் பகுதியை உரச, அவள் லேசாகச் சிலிர்த்தாள். காதுகளில் அந்தக் கம்மலையும், கையில் அந்த பிரேஸ்லெட்டையும் அவனே தன் கையால் அணிவித்துவிட்டான். அந்த வைரத்தின் ஜொலிப்பை விட, அவள் முகத்தில் பூத்திருந்த அந்தத் தாய்மை கலந்த வெட்கத்தின் ஜொலிப்பு பல மடங்கு அழகாக இருந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் வசீ” என்று அவள் நெகிழ்ந்துபோய் அவனது கைகளைப் பற்றிக்கொண்டாள்.
இப்படியே வசந்தம் வீசும் நாட்களாகக் காலம் நகர, வசுமதிக்கும் வளைகாப்புக்கான மாதம் வந்துவிட்டது.
பெரியவர்களால் குறிக்கப்பட்ட நாளில் அவர்களின் கேட்டட் கம்யூனிட்டி அப்பார்ட்மென்ட் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. வசுமதியின் வளைகாப்பிற்காக வீடு முழுக்க மாமரத்து இலைகளாலும், செவ்வந்தி மற்றும் மல்லிகைப் பூக்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
முந்தைய நாளே திருநெல்வேலியிலிருந்து வசுமதியின் பெற்றோர் வீரலட்சுமியும் செல்வராஜும், தங்கை சுகமதியோடு வந்துவிட்டனர். அதேபோல கமலநாதனும் குமுதவல்லியும் வந்து சேர்ந்தனர். மருமகளின் மீது இருந்த பழைய மனக்கசப்புகளையெல்லாம் மறந்து, இப்போது குமுதவல்லி முகம் மலர வசுமதியிடம் பேசிப் பழகியது அங்கிருந்த அனைவருக்கும் ஒரு நிம்மதியைத் தந்தது. தன் குடும்பத்து வாரிசைச் சுமக்கும் மருமகள் என்பதால் குமுதவல்லியின் அக்கறை இப்போது பன்மடங்கு அதிகரித்திருந்தது. அதைவிட முக்கியமான காரணம் ஒன்று இருந்தது.
அது மகிழினி! ஆம்! மதினி தன்னை எப்படியெல்லாம் மருத்துவமனையில் இதமாக உணரவைத்தாள்? தனது நலனைக் கருத்தில் வைத்து என்னவெல்லாம் செய்தாள் என அன்னையிடம் சொல்லி வைத்திருந்தாள் அவள்.
மூன்றாம் மாதம் சமரனோடு புகுந்த வீட்டுக்குச் சென்றபோதும் “இனிமே மதினியைப் பத்தித் தப்பா பேசாதம்மா. அவங்க நல்ல மாதிரிதான். அவங்க உண்டு அவங்க வேலை உண்டுனு இருக்காங்க. உனக்கென்ன குறை? நீ அங்க போனா உன்னை நல்லா கவனிச்சுப்பாங்க. உன்னை மதிப்பாங்க. அவங்க மனசுல வன்மம் வெக்குற டைப் இல்ல. நான் பேச்சுக்காகச் சொல்லல. உண்மையா உணர்ந்து சொல்லுறேன்” என்று அன்னையின் காதில் போட்டுவிட்டுத்தான் போயிருந்தாள்.
அதனால் குமுதவல்லியிடம் இத்தகைய மாற்றம் ஏற்படுவது சாத்தியமாயிற்று!
மண்டபத்தில் வைத்து ஆடம்பரமாகச் செய்வதை விட, வீட்டிலேயே நெருக்கமான உறவுகளை வைத்து எளிமையாகவும் அழகாகவும் வளைகாப்பை நடத்த வசீகரன் ஏற்பாடு செய்திருந்தான். ப்ரஷாந்தியும், காமாட்சி அம்மாவும் காலையிலேயே வந்து வசுமதிக்குத் துணையாக நின்று எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுச் செய்துகொண்டிருந்தனர்.
பச்சை நிறத்தில் அகலமான ஜரிகை வைத்த மென்பட்டுப் புடவையில், தலையெல்லாம் மல்லிகைப் பூச்சரமும், கழுத்தில் வசீகரன் வாங்கிக் கொடுத்த ஆன்டிக் நெக்லஸும், முகத்தில் முழு நிலவின் ஒளியும் ததும்ப, சாட்சாத் மகாலட்சுமியைப் போல மணையில் வந்து அமர்ந்தாள் வசுமதி. அவளது அழகைப் பார்த்து வசீகரனுக்கே திருஷ்டி சுற்ற வேண்டும் போலத் தோன்றியது.
நிகழ்ச்சி தொடங்கவிருந்த நேரம், காலிங் பெல் ஒலித்தது. கதவைத் திறந்த வசீகரனுக்கு இன்ப அதிர்ச்சி. வாசலில் சர்வானந்தனும், மகிழினியும் தங்கள் கைகளில் குட்டிப் பையன் சமரனோடு சிரித்தபடி நின்றிருந்தார்கள்.
“மகிழ்! சர்வா! நீங்க வருவீங்கனு நாங்க எதிர்பார்க்கவே இல்லையே!” என்று வசீகரன் உற்சாகமாக வரவேற்றான் அவர்களை.
“என் மதினிக்கு வளைகாப்பு நடக்கும்போது நான் வராம இருப்பேனா அண்ணா? பாப்பாவைக் கூட்டிட்டு வர முடியுமானு கொஞ்சம் யோசனையா இருந்துச்சு. ஆனா இவர்தான், ‘இல்ல மகிழ், நாம கண்டிப்பா போறோம்’னு சொல்லிக் கூட்டிட்டு வந்துட்டார். சொந்தத்துல ஒரு கல்யாணம்னு அத்தையும் மாமாவும் போயிட்டாங்க. இல்லனா அவங்களும் எங்ககூட வந்திருப்பாங்க” என்றாள் மகிழினி.
பழைய பிடிவாதங்கள் ஏதுமில்லாமல், இப்போது ஒரு பொறுப்பான தாயாகவும், அன்பான நாத்தனாருமாக அவள் மாறியிருந்தது வசுமதிக்குப் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்தது.
“வா மகிழ்! உள்ள வா! சமர் குட்டி எப்படி இருக்கான்? என் தங்கக் கட்டி, அத்தைகிட்ட வாடா” என்று வசுமதி ஆசையோடு கைகளை நீட்ட, சர்வானந்தன் குழந்தையை வசுமதியின் மடியில் எச்சரிக்கையாக வைத்தான்.
தன் பெரிய வயிற்றின் மீது அந்தப் பிஞ்சு உடம்பைச் சாய்த்து வசுமதி முத்தமிட்ட காட்சி, அத்தனை பேரையும் நெகிழச் செய்தது.
வளைகாப்புச் சடங்குகள் இனிதே தொடங்கின. வீரலட்சுமியும் குமுதவல்லியும் இணைந்து வசுமதிக்குச் சந்தனம் குங்குமம் வைத்து, பச்சையும் சிவப்புமுமான கண்ணாடி வளையல்களை அவளது மென்மையான கைகளில் அடுக்கடுக்காக அணிவித்தனர்.
‘க்ளிங்… க்ளிங்…’ என அந்த வளையல்கள் எழுப்பிய நாதம், அந்த வீடு முழுவதுமே ஒரு மங்களகரமான அதிர்வைக் கொடுத்தது.
மகிழினி, சுகமதி, ப்ரஷாந்தி, காமாட்சி அம்மா, ரேவதி என ஒவ்வொருவரும் ஆசையோடு அவளுக்கு வளையல் அணிவித்து, சந்தனம் பூசி, மலர் தூவி ஆசீர்வதித்து, ஆரத்தி எடுத்து வாழ்த்தினர். வசீகரன் அவளுக்குப் பிடித்தமான இனிப்புகளைத் தன் கையாலேயே ஊட்டிவிட்டான்.
வளைகாப்பு முடிந்து அடுத்த ஒரு வாரத்திற்கு அந்த வீடு ஒரு கல்யாண வீடு போலக் கலகலப்பாக இருந்தது. சிரிப்புச் சத்தங்களும், குழந்தை சமரனின் அழுகுரலும், வளையல்கள் உரசும் சத்தங்களுமாக அந்த வீடு நிஜமான உயிர்ப்போடு இயங்கியது.
இந்த ஒரு வாரத்தில், ப்ரஷாந்தி சுகமதியை அழைத்துக் கொண்டு சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு பயணம் சென்று வந்தாள். முதல்முறையாக மெட்ரோவில் பயணித்தபோது உணர்ந்த அதே சந்தோஷத்துக்கு ஈடான சந்தோஷத்தை இப்போதும் அனுபவித்த சுகமதியின் இன்ஸ்டாகிராம் பக்கம் இம்முறையும் செல்ஃபிக்களால் நிரம்பியது.
ஒரு வாரக் கொண்டாட்டம் முடிந்து, அனைவரும் ஊருக்குக் கிளம்பும் நாளும் வந்தது. குடும்பத்தினர் ஒவ்வொருவராக விடைபெற, மகிழினியும் சர்வானந்தனும் சமரனோடு ஊருக்குக் கிளம்பினர்.
“உடம்பைப் பத்திரமா பாத்துக்கங்க மதினி. பாப்பா பிறந்ததும் நாங்க உடனே வந்துடுவோம்,” என்று அன்பாகச் சொல்லிவிட்டுக் கிளம்பினாள் மகிழினி.
வீரலட்சுமி காமாட்சியிடமும் ரேவதியிடமும் மகளை இத்தனை நாட்கள் ஆதுரமாகக் கவனித்துக்கொண்டதற்கு நன்றி சொன்னதோடு இன்னும் சில நாட்களுக்குக் கவனித்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துவிட்டு இன்முகத்தோடு கிளம்பினார்.
அனைவரும் சென்ற பிறகு, வீடு திடீரென ஒரு பெரும் அமைதிக்குப் பழகியது. ஒரு வாரம் தொடர்ச்சியாகப் பலரோடு சிரித்துப் பேசி, நின்று வேலை செய்ததில் வசுமதிக்கு நல்ல அசதி. இரவு உணவு முடித்ததும், படுக்கையறையில் சென்று தளர்வாகச் சாய்ந்து படுத்தாள் வசுமதி.
சென்னை நகரின் மெல்லிய இரவுச் சத்தம் ஜன்னல் வழியே கேட்டுக்கொண்டிருக்க, அறையில் ஒரு இதமான வெளிச்சம் மட்டும் பரவியிருந்தது. குளித்துவிட்டு வந்த வசீகரன், வசுமதியின் சோர்வான முகத்தையும், வீங்கியிருந்த அவளது கால்களையும் பார்த்தான்.
எந்த அலட்டலும் இல்லாமல், இயல்பாகப் படுக்கையின் விளிம்பில் அமர்ந்து, அவளது கால்களைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டான்.
“வசீ என்ன பண்றீங்க? விடுங்க, நான் பாத்துக்குறேன்,” என்று அவள் கால்களை விலக்கினாள்.
“சும்மா இரு வசு. ஒரு வாரமா எல்லாரையும் கவனிச்சு, சரியாத் தூங்காம உன் முகம், கால் எல்லாம் எவ்ளோ வீங்கியிருக்கு பாரு,” என்றபடி, அவளது கெண்டைக்கால்களிலும் பாதங்களிலும் தன் விரல்களால் மெதுவாக அழுத்தம் கொடுத்து மசாஜ் செய்யத் தொடங்கினான். அவனது கட்டுமஸ்தான கரங்கள் அத்தனை மென்மையாக அவளது காலை வருடிப் கொடுத்த விதம், வீங்கிய கால்கள் கொடுத்த வலிக்கு மிகவும் இதமாக இருந்தது.
“எல்லாரும் ஊருக்குப் போனதும் வீடு கொஞ்சம் வெறிச்சோடிப் போன மாதிரி இருக்குல வசீ?” என்று மெல்லிய குரலில் கேட்டாள் வசுமதி.
“ஆமா வசு! ஆனா, உண்மையைச் சொல்லணும்னா, எனக்கு இந்தத் தனிமை இப்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. உன்கூட இப்படி அமைதியா உக்காந்து பேசுறது, உன்னோட பிளே லிஸ்டை ஷேர் பண்ணி ரெண்டு பேரும் சேர்ந்து பாட்டு கேக்குறது, நம்ம குழந்தையைப் பத்திப் பேசுறதுனு இதுக்கு ஈடா உலகத்துல எந்தச் சந்தோஷமும் இல்ல,” என்றான் வசீகரன் தன் மனதின் அடியாழத்திலிருந்து.
அவனது வார்த்தைகளில் இருந்த உண்மையான காதலை உணர்ந்த வசுமதியின் கண்கள் பனித்தன. ஒரு காலத்தில் இதே வீட்டில் தனிமையின் கொடூரத்தை அனுபவித்தவள் அவள். ஆனால் இன்று, அதே தனிமை கணவனுடனான தனிமையாக மாறி அவளுக்கு மனமெல்லாம் மலர் தூவிக்கொண்டிருக்கிறது.
அவளது கால்களை மெதுவாகக் கீழே இறக்கிவிட்டு, படுக்கையில் அவளுக்கு மிக அருகில் வந்து அமர்ந்தான் வசீகரன். அவளது முகத்தின் மீது சரிந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டான்.
“உனக்கு ஒண்ணு தெரியுமா வசு? வளைகாப்புல பட்டுப்புடவை கட்டி, இவ்ளோ பெரிய கூட்டத்துக்கு நடுவுல நீ மணையில என் பக்கத்துல உக்காந்திருந்தப்ப, எனக்கு என்ன தோணுச்சு தெரியுமா?”
“என்ன தோணுச்சு?” என்று அவள் இதழோரம் சிறு புன்னகையோடு கேட்டாள்.
“என் வாழ்க்கையில எனக்குக் கிடைச்ச மிகப்பெரிய பொக்கிஷம் நீதான்னு தோணுச்சு. நான் மட்டும் முன்னாடியே நீ சொன்னதைக் கொஞ்சம் கவனிச்சு உனக்கேத்த மாதிரி கொஞ்சம் மாறியிருந்தா சண்டையிலயும் மனவருத்தத்துலயும் சில மாதங்கள் வீணாப் போயிருக்காதுல்லனு தோணுச்சு. நீ அதே சிரிப்போட சந்தோஷமா இருந்தா மட்டும்தான் இந்த வீடும், என் மனசும் உயிர்ப்போட இருக்கும்னு மனசுல அழுத்தமா பதிஞ்சிடுச்சு,” என்று அவன் உணர்வுப்பூர்வமாகச் சொன்னான்.
அவனது வார்த்தைகளில் நெகிழ்ந்துபோன வசுமதி, தன் இரு கைகளாலும் அவனது முகத்தைத் தனது கரங்களில் ஏந்திக்கொண்டாள்.
“நான் எப்பவோ பழைய விஷயங்களை எல்லாம் மறந்துட்டேன் வசீ. நீங்க எனக்காக மாறுனது, என் ஆசைகளைப் புரிஞ்சு நடந்துக்கறது இதுதான் இந்த வசீகரன் தான் எனக்குள்ள இப்ப நிறைஞ்சிருக்கார். நம்ம பாப்பா பிறந்ததுக்கு அப்புறம், நம்ம வாழ்க்கை இன்னும் அழகா மாறும் பாருங்க,” என்றாள் நம்பிக்கையோடு.
“கண்டிப்பா.” என்ற வசீகரன், அவளது நெற்றியில் மெதுவாகத் தன் இதழ்களைப் பதித்தான். பின்னர் மெல்லக் கீழிறங்கி, அவளது பெரிய கண்களில் ஒற்றியெடுத்தான். அவனது மூச்சுக்காற்று அவளது கன்னங்களைத் தழுவ, அந்த அறையின் அமைதியில் அவர்கள் இருவரின் இதயத் துடிப்பும் ஒன்றிணைந்து ஒலித்தது.
அவளது மென்மையான இதழ்களின் மீது தன் இதழ்களைப் பொருத்தி, ஒரு ஆழமான, காதலும் தாபமும் கலந்த நேசத்தோடும் முத்தத்தைப் பதித்தான் வசீகரன். வசுமதியின் கைகள் அவனது அடர்ந்த கூந்தலுக்குள் புகுந்து அவனைத் தழுவிக்கொண்டன. அந்த இரவின் நிசப்தத்தில், அந்த முத்தம் எதிர்காலத்தின் இனிமைக்கு வரவேற்பாகவும் அமைந்தது.
சில வினாடிகள் கழித்து மெல்ல விலகிய வசீகரன், அவளது கண்களைப் பார்த்துக் காதல் ததும்பும் குரலில் சொன்னான்.
“குட் நைட் வசு”
“குட் நைட் வசீ”
இருவரும் அருகருகே கிடந்த தலையணைகளை ஆக்கிரமித்துக்கொள்ள இவ்வளவு நேரம் அந்த அறையை ஒளிரச் செய்த விளக்கு இருளைக் கவ்வி ஊமையானது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


