வாசல் கடக்காத வாசனை மலரிவள்
நேசம் அறியாத நேயக் கனவிவள்
துளிதுளியாய் பெருகும் அன்பின் ஊற்றிவள்
கரையைத் தொடாத அமைதிக் கடலிவள்
துடிக்கும் இதயத்தின் ஓசையைக் கேட்டவறிவாளா?
-அட்சரனின் வேதா
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
பரிகாரப் பூஜை அது இதுவென்று எல்லாம் முடிந்த பிறகு, அருள்மொழியையும் வானதியையும் அருகருகே அமர வைத்துவிட்டார்கள். ஏன் என்று கேட்க முடியாமல் கடனே என்று அவர்கள் அமர்ந்திருக்க, சரியாக அந்நேரத்தில் இலக்கியாவும் சஞ்சயும் வந்துவிட்டார்கள். மணமக்கள் இருவருக்கும் அவர்கள் நெருங்கிய நண்பர்கள் என்பதால் வரவேற்புக்குக் குறைவில்லை.
“மலைக்குக் கீழ ஒரு செக்போஸ்ட், ஊர் எல்லைல ஒரு செக்போஸ்ட், போதாக்குறைக்கு பங்களாக்கு வெளிய நூறு மீட்டர் முன்னாடி ஒரு போலீஸ் செக்கப், அதுபோக மெட்டல் டிடெக்டர் வாசல்னு எவ்ளோ தடவை சோதனை போட்டாங்க தெரியுமா? அதுக்கே முழுசா அரை மணி நேரம் கரைஞ்சிடுச்சுடா அருள்.”
இலக்கியா வானதியிடம் பேச்சு கொடுத்தவள், அவளருகே நின்ற இரு அழகிய பெண்களைக் காட்டி, “யாழினி, வேதா தானே நீங்க? உங்க போட்டோஸ் எல்லாம் நதி என்கிட்ட காட்டிருக்கா. போட்டோவை விட நேர்ல அவ்ளோ அழகு நீங்க ரெண்டு பேரும்” என்று மனதாரப் பாராட்ட, இரு பெண்களும் நாணினார்கள்.

“என்கிட்ட மட்டும் ஏன் காட்டல?” – சஞ்சய் அவசரக்குடுக்கையாய்த் தலை நீட்ட, “போதும்! துடைச்சுக்க. ரொம்ப வழியுது” என்று அவனைக் கேலி செய்தாள் இலக்கியா.
பின்னர் விருந்து ஆரம்பமானதும் வேதவதியும் யாழினியும் கிளம்பினார்கள். கயல்விழி அவசரமாக அவர்களைத் தடுத்தார்.
“என்னடி பொண்ணுங்களா, சாப்பிடாம கிளம்புறிங்க? வாங்க! உன் கூட இவங்களை அழைச்சிட்டு வந்துடு வானதி” என்று அன்புக்கட்டளையிட்டவரின் பேச்சை மீற முடியவில்லை இருவராலும்.
சாப்பிட்டுவிட்டு வானதியிடம் விடைபெற்றவர்களிடம் அட்சரனோடு வந்து நின்றார் கயல்விழி. அவனைப் பார்த்ததும் வேதவதியின் கரம் அனிச்சையாக யாழினியின் முழங்கையைப் பற்றிக்கொண்டது.
“ப்ச்! என்ன வேதா?” – அவள் இரகசியமாய்க் கிசுகிசுக்க, “டி.எம்.டி ராட் ஸ்னாக்ஸ் – இவங்கதான்” என்று வேதவதி சொன்னதும், “அம்மாடி” என்று வாய் திறந்தே சொல்லிவிட்டாள் யாழினி.
“என்னடி ஆச்சு? ரெண்டு பேரும் பேயைப் பாத்த மாதிரி மிரண்டு நிக்குறிங்க?” என்ற கயல்விழியிடம் சிரித்துச் சமாளித்தார்கள் பெண்கள்.
“இவன் அச்சு! நம்ம அருளுக்கும் வானுக்கும் உங்களை மாதிரியே ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட். இவன் கூடப் போங்க. போலீஸ் ஆபீசர்ஸ் கிட்ட பேசி நீங்களும் உங்க ஃபேமிலியும் நிச்சயம், நலங்குக்கு வர்றப்ப கெடுபிடி பண்ணவேண்டாம்னு சொல்லிடுவான். ஒரு நிமிஷம் இருங்க” என்றவர், வேப்பிலைகளை எடுத்து இருவரது கூந்தலிலும் சொருகிவிட்டார்.
அட்சரன் ஏன் என்று பார்வையால் வினவ, “இது மலைக்காடு அச்சு! ராத்திரி நேரம் பொண்ணுங்க தனியா பூ வச்சிட்டுப் போறது நல்லதில்ல. அதனாலதான் வேப்பிலை பாதுகாப்புக்கு” என்றார்.
அட்சரன் நெற்றியில் சரிந்த கூந்தலைக் கோதியவன், “சீரியஸ்லி? நீங்க சி.எம் ஒய்ப் மாதிரியா நடந்துக்குறிங்க? அவருக்குக் கடவுள் நம்பிக்கையே கிடையாதுனு பேசிக்கிறாங்க. ஆனா நீங்க இல்லாத பேய் பூதத்தை எல்லாம் நம்புறிங்க. எப்பிடி உங்களுக்குள்ள செட் ஆகுது?” என்று நம்பாத பாவனையில் கேட்க, அவனது தோளில் அடித்தார் கயல்விழி.
கயல்விழியிடம் அவன் இலகுவாய்ப் பேசுவதை நம்ப முடியாமல் பார்த்தபடி நின்றார்கள் வேதவதியும் யாழினியும்.
“போன மாசம் நீ நம்ம வீட்டுக்கு வந்தப்ப கேட்ட அதே கேள்வி. அப்ப சொன்ன பதில்தான் இப்பவும். ஒருத்தரைப் பிடிச்சுடுச்சுனா அவங்களோட நிறை குறைகளைத் தாண்டி அவங்க மட்டும்தான் நமக்குப் பிரதானமா தெரியுவாங்க. எனக்கு அவர், அவருக்கு நான். அவ்ளோதான்.”

இத்தனை ஆண்டுகால தாம்பத்தியத்தின் தாத்பரியத்தை வெகு எளிதாக அவர் சொல்லிவிட, அதைக் கேட்டுக்கொண்டிருந்த வேதவதியின் கண்கள் பளிச்சிட்டன.
“அத்தை, நான் இந்த டயலாக்கை என் கதைக்கு யூஸ் பண்ணிக்கிறேன்.”
அட்சரன் இருக்கிறான் என்பதையும் மறந்து ஆர்வத்தில் அவள் சொல்லிவிட, “உனக்கில்லாத டயலாக்கா? தாராளமா யூஸ் பண்ணிக்க தங்கம்” என்றார் கயல்விழி சிரிப்போடு.
அட்சரன் நாக்கின் நுனியால் இடதுபக்கத்துக் கன்னத்து உள்சதையை உந்தியவன், “அப்ப கதைல எழுதுறது எல்லாம் இப்பிடி அங்கங்க இருந்து உருவிச் சொருகுறதுதானா?” என்று கேட்கவும், “ஐயோ இல்ல சார்! கதையோட கரு எல்லாமே என்னோட சொந்தக் கற்பனை. ப்ராமிஸ்” என்று குரள்வளையின் தசையைப் பிடித்து வேதவதி சத்தியம் செய்ய, அவனும் கணக்கிடும் பார்வையோடு தலையசைத்தான்.
“பயமுறுத்தாதடா! அவ கதை எல்லாம் நல்லா இருக்கும். நான் தான் படிக்குறேனே. நல்ல பப்ளிகேஷன்ல புக் போட மனசு வை அச்சு.”
“ரெகமண்டேசனா?” – அட்சரன் விளையாட்டாய்க் கேட்க, “சஜசன்னு வச்சுக்கோயேன்” என்றார் கயல்விழி விடாமல்.
“உங்க கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா ஆன்ட்டி?”
“இது உன்னைப் பத்தி பேச்சு வந்தா உன் அங்கிள் சொல்லுற டயலாக்.”
“அவர் ஒன்னும் அங்கிள் இல்ல. சி.எம் சார் மட்டும்தான்.”
விறைப்பாய்ச் சொன்ன அட்சரன் பெண்கள் இருவரிடமும் கிளம்பலாமா என்று கை நீட்டிப் பாதையைக் காட்ட, இருவரும் கயல்விழியிடம் விடைபெற்றார்கள். அவர்களை முன்னே நடக்க விட்டுப் பின்னே வந்தவன், வேதவதியின் நடையில் நிதானமில்லை என்பதைக் கண்டுகொண்டான்.
“பாதைய பாத்து நடக்கலாம். இங்க பேயோ பூதமோ இல்ல.”
மீண்டும் கறார்க்குரல் அவனிடம். மெட்டல் டிடெக்டர் பொருத்தியிருந்த வாயிலருகே காவலர்கள் உட்கார ஒரு அறை போலத் தயார் செய்திருந்தார்கள். அதிலிருந்த அதிகாரியிடம் இருவரையும் காட்டினான் அட்சரன்.
“வானதியோட ஃப்ரெண்ட்ஸ் இவங்க. லோக்கல் பீபிள்தான். செவ்வாய் ஈவினிங் நடக்குற என்கேஜ்மெண்டுக்கு இவங்க பேரண்ட்ஸோட வருவாங்க. அதுபோக எல்லா ஃபங்சன்லயும் இவங்க கலந்துப்பாங்க. கயல் ஆன்ட்டி இவங்களை அடிக்கடி செக் பண்ணி தொந்தரவு குடுக்கவேண்டாம்னு இன்ஃபார்ம் பண்ணச் சொன்னாங்க.”
“சரி சார்! அவங்களுக்கு ஒரு பாஸ் குடுத்திருப்பாங்க. அதோட நம்பர் மட்டும் கேட்டுச் சொல்லுங்க.”
அட்சரன் திரும்பி இருவரையும் பார்க்க, வேதவதி தனது மொபைலில் இருக்கும் பாஸ்களையும் அதன் எண்களையும் காண்பித்தாள்.
“ஓகேம்மா. கிளம்புங்க.”
பெண்கள் இருவரும் ஒரு தலையசைப்போடு அவனிடம் விடைபெற்றார்கள். அவர்களை அனுப்பிவிட்டு வந்தவன், பங்களாவின் பின்வாயிலில் ஏதோ சத்தம் கேட்கவும் என்னவெனப் போய்ப் பார்த்தான்.
மாளிகையின் பின்புறமிருந்த அந்தத் திறந்தவெளித் தாழ்வாரத்தில், சந்தனம் அரைக்கும் கல் வைக்கப்பட்டிருந்தது. வானதியின் திருமணச் சடங்கிற்காகக் கிலோ கணக்கில் சந்தனக் கட்டைகள் வந்திருந்தன. வழக்கமாக இதைச் செய்யும் பெண்கள் வேறு வேலைகளில் மும்முரமாக இருக்க, வயதானப் பெரியவர் ஒருவர் ஒரு மூலையில் அமர்ந்து சந்தனக் கட்டையைத் தட்டையான அந்தக் கல்லில் அரைத்துக்கொண்டிருந்தார். வயதான காலத்தில், பலத்தைக் கூட்டித் தேய்த்த விதம் அவருக்கு மூச்சிரைப்பைத் தந்தது. இதைப் பார்த்தபடி அங்கே வந்த அட்சரன், ஒரு நிமிடம் நின்றான்.
மலைக்கிராமத்தின் குளிர், மூச்சிரைப்பைப் பொருட்படுத்தாது மறுநாள் சடங்குக்கு வேண்டிய சந்தனத்தை அரைத்துக்கொண்டிருந்த பெரியவரைப் பார்த்ததும் இரக்கம் சுரந்தது அவனுக்குள்.
“தாத்தா! நான் வேணும்னா ஹெல்ப் பண்ணட்டுமா?” என்றான் ஆதுரமான குரலில்.
“தம்பி! இது கஷ்டமான வேலை, நீங்க ஏதோ பெரிய இடத்துப் பையன் மாதிரி இருக்கீங்க” என்று பெரியவர் தயங்க, அட்சரன் ஒரு மெல்லிய சிரிப்புடன், “வேலைக்கு ஏது பெரிய இடம் சின்ன இடம்? குடுங்க” என்று கை நீட்டினான்.
அவரும் விலகி அமர, தாழ்வாரத்தில் வாட்டமாகக் கல்லின் அருகே அமர்ந்து தேய்க்க ஆரம்பித்தான். சில நிமிடங்களிலேயே அந்த இடம் முழுக்கத் தூய சந்தனத்தின் வாசனை கம்மியது. அவனது உள்ளங்கைகளிலும், மணிக்கட்டிலும் குளிர்ந்த சந்தனக் குழம்பு தாராளமாகப் படிந்திருந்தது.

“அந்தக் காலத்துல எனக்கும் இது மாதிரிதான் சுருள் சுருளா முடி இருந்துச்சுங்க தம்பி” – பெரியவர் சொல்லவும் சிரித்தான் அட்சரன்.
“அப்பிடியா?”
“ஆமா! என் வீட்டுக்காரிக்கு இந்த முடி மேல கொள்ளைப்பிரியம் பாத்துக்கிடுங்க. என் பேரு வேற கணேசன். என் ராசா ஜெமினி கணேசன் மாதிரி இருக்கியனு பிரியமா சொல்லுவா.”
அந்தக் காலத்து நினைவுகளில் பெரியவர் மூழ்க, அட்சரனுக்கு அவரிடம் பேசுவதில் உற்சாகம் பிறந்தது. பேசிக்கொண்டே சந்தனம் அரைக்க, பெரியவரோ தனது பழைய கதைகளைச் சொல்ல ஆள் கிடைத்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் பேசிக்கொண்டே இருந்தார்.
“என் வீட்டுக்காரிக்கு ஜெமினி கணேசன் பாட்டுனா உயிரு. நான் அதைப் பாடி காட்டுனேன்னா வெக்கப்படுவா பாருங்க! அதைப் பாக்க ரெண்டு கண்ணு போதாது.”
“தாத்தாக்கு எத்தனை பசங்க?”
“நாலு பேரு தம்பி.”
“நாலுதானா? ப்ச்! ஏமாற்றமா இருக்கு தாத்தா.”
“என் பொண்டாட்டிய அதுக்கு மேல சிரமப்படுத்த வேண்டாம்னுதான்.”
சொல்லும்போதே முதியவருக்கு வெட்கம் வந்துவிட்டது. அட்சரனுக்கு இதெல்லாம் புதிதாக இருந்தது. ஆனால் கேட்கப் பிடித்தது.
காதலில் வீழ்ந்த ஆண்கள் செய்யும் பைத்தியக்காரத்தனங்களில் இருக்கும் பரிசுத்தமான அன்பு, ஒரு தாய் தனது சேய் மீது வைத்திருக்கும் அன்புக்கு நிகரானது. அவர்களால் காதலிக்கப்படுகிற பெண்களுக்கே அந்த அன்பின் மகத்துவம் புரியும். மற்றவர்களின் பார்வையில் அது பைத்தியக்காரத்தனமாக இருந்தாலும் காதலிக்கும் மங்கையருக்கு அவை மறக்க முடியாத அற்புதமான நினைவுகள்! அதிலும் நாற்பதாண்டு கால தாம்பத்தியத்தில் இழைந்த காதல் பல மகோன்னதமான ஞாபகங்களைத் தனக்குள் பொதிந்து வைத்திருக்கும். அதை வயோதிகத்தில் பகிர ஆட்கள் கிடைத்தால் போதும் பெரியவர்களுக்கு. இதோ இந்த முதியவருக்கு அட்சரன் கிடைத்தது போல.
யாரிடமும் அவசியமில்லாமல் ஒரு வார்த்தை பேசமாட்டான் அட்சரன். அதே நேரம் தங்களை விடப் பொருளாதாரத்தில் குறைந்தவர்கள் சிரமப்படுவதைப் பார்த்தாலும் அப்படியே கடந்து போகமாட்டான். அந்தக் குணம்தான் பழக்கமற்ற யாரோ ஒரு முதியவருக்காகக் கை வலிக்க அவனைச் சந்தனம் அரைக்க வைத்திருக்கிறது.
அதிலும் அந்தப் பெரியவருக்கு நல்ல சாரீரம். அவரது மனைவிக்குப் பிடித்த பாடல்களை எல்லாம் அவர் பாட, அவனும் அவருக்குக் கம்பெனி கொடுத்தபடி சந்தனத்தை அரைத்தான்.
பாட்டு பாடவா பார்த்துப் பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவைப் போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
அதைக் கவனித்த மற்ற வேலையாட்கள், “என்ன கணேசய்யா! கச்சேரி களை கட்டுது போலயே” என்று உற்சாகப்படுத்த, இன்னும் பாடல் வேகமெடுத்தது இருவரது குரலிலும்.
அங்கமெல்லாம் தங்கமான மங்கையைப் போலே
நதி அன்னநடை போடுதம்மா பூமியின் மேலே
அட்சரன் காற்றில் கை வீசிப் பாடிய அந்நொடி – ஏதோ வெண்பஞ்சு மூட்டை மீது கை பட்டது போல உணர்ந்தான். அந்தரத்தில் நின்ற அவனது கை ஏதோ மென்மையான பொருளைத் தீண்டியிருந்தது. கையை விலக்கப் போனவன், திரும்பிப் பார்த்தபோது அது ஒரு பெண்ணின் இடுப்பு என்று உணர்ந்ததும் அப்படியே திகைத்துப் போனான். கையை எடுக்கவும் முடியாமல், மேற்கொண்டு நகரவும் முடியாமல் அவனது விரல்கள் அவளது இடுப்பில் சந்தனத்தோடு ஒட்டிக்கொண்டிருந்தன.

அங்கே ஒரு காதில் மட்டும் ஜிமிக்கியோடு நின்றவள் வேதவதி! அட்சரன் கையை வீசிய திசை, இன்னொரு காது ஜிமிக்கியைத் தேடியபடி அந்த இடத்துக்கு வந்த வேதவதியின் கொசுவத்துக்கும், புடவை மேல்தலைப்புக்கும் இடைப்பட்ட அந்த மெல்லிய இடுப்புப் பகுதியைச் சரியாக நோக்கியிருந்தது. அதன் விளைவு, அட்சரனின் சந்தனம் படிந்த உள்ளங்கை, வேதவதியின் வெற்று இடுப்பில் ‘பளீர்’ என்று பதிந்திருந்தது.
அவளது மென்மையான இடையில் அவனது விரல்கள் அழுந்தி, அந்தக் குளிர்ந்த சந்தனக் குழம்பு அவளது தோலில் செஞ்சாந்து போலப் படர்ந்தது. அந்தத் திடீர் ஸ்பரிசத்தில் வேதவதிக்குக் கால்கள் நகர மறுக்க, அந்த இடத்திலேயே உறைந்து நின்றாள்.
பங்களாவிற்குப் பூ கட்டவும், இலை போடவும் வந்திருந்த ஊர்க்காரப் பெண் சாந்தா, அந்தத் தாழ்வாரத்தின் வாசலுக்கு எதேச்சையாக வந்தாள். அங்கே அட்சரன் அமர்ந்திருக்க, அவனது கை வேதவதியின் இடுப்பில் ஆழமாகப் பதிந்திருப்பதைப் பார்த்ததும் அவளது கண்கள் விரிந்தன. கையில் இருந்த பூக்கூடை தரையில் விழுந்து சிதறியது.
“ஐயோ! என்னது இது?” – சாந்தாவின் அதிர்ச்சி கலந்த சத்தம் அந்த இடத்தையே உலுக்கியது. பெரியவரும் நிலைமை புரிந்து எழுந்தார். இவை அனைத்தும் கண்ணிமைப்பதற்குள் அரங்கேறிய சம்பவங்கள்!
“அச்சோ! தண்ணி இந்தாங்க தம்பி. அந்தப் புள்ளை கிட்ட குடுங்க.”
அட்சரன் தன் கையை விலக்காமல் அப்படியே எழுந்து நின்றான். அவனது கண்களில் ஒரு குற்றம் புரிந்த உணர்வு! ஆனால் கையை விலக்க ஏனோ தோன்றவில்லை. வேதவதிக்கோ மயக்கம் வராத குறை! தனது இடுப்பில் படிந்த அந்தச் சந்தனக் கறையை விட, சாந்தாவின் அந்தப் பார்வை அவளை நிலைகுலைய வைத்தது. அட்சரன் தன் கைகளைத் துடைக்கக் கூட மறந்தவனாக, வேதவதியின் கண்களையே பார்த்தபடி நின்றான்.
“என்னடி நடக்குது இங்க?” – சாந்தா முறைப்புடன் வரவும், அவளே பதறிப்போய் அவனது கையை அழுத்தமாகப் பற்றி விலக்கினாள். அட்சரன் அப்போதுதான் கனவிலிருந்து விழித்தவனைப் போலத் தலையை உலுக்கிக்கொண்டான். சீராய் அடங்கியிருந்த அவனது சுருள் கூந்தல் இப்போது அவனது முன்நெற்றியில் பரவிப் படர்ந்தது.
“அது… என் ஜிமிக்கிய தொலைச்சிட்டேன்கா. அதைத் தேட வந்தேன்.”
வேதவதி தட்டுத் தடுமாறிப் பேச, அதை நம்பும் பாவனை இல்லை சாந்தாவின் முகத்தில்.
“ஹாங்! நல்லா தேடுன போ! பாத்தாலே தேடிக் களைச்ச மாதிரிதான் தெரியுது” என்று இரட்டை அர்த்தத்தில் அவர் பேசவும், அவளது கண்கள் கலங்கிவிட்டன. அட்சரனுக்கு அதுவே சீற்றத்தை உண்டாக்கியது. ‘இவள் கண் கலங்கினால் ஏதோ காதல் லீலை நடத்தியது போல அல்லவா இந்தப் பெண்மணி சித்தரித்துவிடுவார்.’
“கம்மல் போனா கிடைக்கும். மானம் போனா கிடைக்காது பாத்துக்க.”
“இங்க பாரும்மா! வாய் புளிச்சுதோ மாங்கா புளிச்சுதோனு பேசாத. தம்பி பாட்டு பாடுனப்ப அந்தப் பொண்ணு இடையில வந்துடுச்சு. யாரும் எதிர்பாக்கல இப்பிடி ஆகும்னு. என்ன நடந்துச்சுனு தெரியாம பொம்பளைப்புள்ளைய பத்தி பேசாத.” பெரியவர் அட்சரனுக்காகவும் வேதவதிக்காகவும் வாதாடினாலும், அவர்களை ஒரு தினுசாகப் பார்த்துவிட்டுச் சாந்தா இடத்தைக் காலி செய்ய, அதற்கு மேல் அங்கே நிற்கப் பிடிக்காமல் ஓடிப்போனாள் வேதவதி. அவள் போவதையே சீற்றத்தோடு பார்த்துக்கொண்டிருந்தவனைக் கையிலிருந்த சந்தனத்தின் குளிர்ச்சி கூடத் தணிக்கவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

