சில பேர் “எப்பப் பார்த்தாலும் புக்கும் கையுமா இருக்கா”னு என்னைப் பத்தி கிண்டலா சொல்லுவாங்க. அவங்களுக்கு என்ன தெரியும்? மனுசங்களை விட அட்டைக்குள்ள அடைபட்டிருக்குற இந்தக் காகிதங்களுக்குள்ள இருக்குற உலகம் எவ்ளோ அழகானதுன்னு! ஒவ்வொரு புத்தகமும் ஒரு புது உலகம். ஒவ்வொரு பக்கமும் ஒரு புது அனுபவம். ஒரு நிமிஷத்துல ஒரு கிராமத்துக்குள்ள போகலாம், இன்னொரு நிமிஷத்துல ஒரு மலை உச்சிக்குப் போகலாம், இல்லன்னா ஒரு பெரிய வரலாற்றுப் போருக்குள்ளயே போயிடலாம்! சில நேரம் தோணும், இந்த உலகத்துல என்னை மாதிரியே யாரும் இருக்க மாட்டாங்களான்னு. ஆனா, இந்த புத்தகங்கள் அதை மாத்திடும். அதுல இருக்குற கதாபாத்திரங்கள், அவங்களுடைய உணர்வுகள்… அதையெல்லாம் படிக்கும்போது, “ஓ! என்னைப் போலவே யோசிக்கிறவங்க இங்கயும் இருக்காங்க போல!”னு ஒரு நிம்மதி கிடைக்கும்.
-விழியின் மொழிகள்
“எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு. அண்ணாச்சிக்குக் குடுக்க வேண்டிய பாக்கி ரெண்டாயிரம் ரூவாதான். அவர் ஏன் ரெண்டாயிரத்து ஐநூறு கேக்காரு?”
கவலையோடு சொன்னபடி சமையல்கட்டிலிருக்கும் துவரம் பருப்பு டப்பாவிலிருந்து கூடுதலாக ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளை எடுத்து கணவர் சிகாமணியிடம் நீட்டினார் குழலி.

அதை அசட்டுச்சிரிப்புடன் வாங்கிக்கொண்டார் சிகாமணி.
“அண்ணாச்சி நம்மளை ஏமாத்த மாட்டாரு குழலி. மனுசங்களை நம்ப கத்துக்க” என்று வெள்ளந்தியாக உபதேசம் செய்தவர் கிளம்ப எத்தனித்தபோது நடுக்கூடத்தில் மாட்டியிருந்த கண்ணாடியைப் பார்த்து நெற்றியில் பொட்டை ஒட்டிக்கொண்டிருந்த அந்த இளம்பெண் திரும்பினாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நில்லுப்பா! நானும் காலேஜுக்குக் கிளம்பிட்டேன். சேர்ந்து போவோம்” என்றபடி சுடிதாரின் துப்பட்டாவை இரு பக்கம் அலை அலையாக விரித்து ஊக்கு குத்திவிட்டு ஷோல்டர் பேக்கை மாட்டிகொண்ட அந்த இளம்பெண்ணை ஆயாசமாகப் பார்த்தார் குழலி.
“நீயாச்சும் போய்க் கணக்கைச் சரி பாத்து பணம் குடு மலர். உங்கய்யனை உடன்பிறந்தான் ஈசியா ஏமாத்துன மாதிரி ஊராளுங்களும் ஏமாத்திடுறாவ” என்று கவலையாய்ச் சொன்னவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் அந்த இளம்பெண் மலர்விழி.
ஐந்தடி உயரம். மாசு மருவற்ற வதனம். கிராமத்துப் பெண் என்றதும் மஞ்சள் பூசிய முகம், எண்ணெய் வைத்துச் சீவிய பின்னிய கூந்தல் என்று பாரதிராஜா காலத்துக் கிராமத்துப் பெண்ணைக் கற்பனை செய்துவிடாதீர்கள்!
புதிய மாடல் ஆன்ட்ராய்ட் மொபைல் புழக்கத்தில் ஆரம்பித்து அமேசான் டெலிவரி ஆட்களின் காலடித்தடம் வரை அனைத்தும் பழகிப்போன இக்காலத்துக் கிராமத்தில் வளர்ந்த பெண் அவள்.
அழகான மஞ்சள் வண்ண காட்டன் சுடிதாரில் அஜ்ரக் ப்ரிண்டில் குட்டி குட்டி மலர்கள் சிரிக்க, அதே வண்ணத்தில் லெகின்சும் துப்பட்டாவும் அணிந்து குளித்த ஈரம் போகாத கூந்தலை மேலே மட்டும் முடியெடுத்து க்ளட்ச் மாட்டியிருந்தாள். நெற்றி மத்தியில் சின்னதாக அரக்குவண்ணப் பொட்டு. முகத்திலும் கழுத்திலும் கொஞ்சம் போல பான்ஸ் பவுடரின் வாசம். அதிகமாகப் போட்டால் பொங்கலுக்குச் சுண்ணாம்பு அடித்தது போலாகிவிடும் அவளுக்கு. அதனால் பவுடரில் மட்டும் கவனம். மற்றபடி காதும், கை, கழுத்தில் தங்க முலாம் பூசிய அணிமணிகளின் ஆதிக்கமே!

அன்னை கொடுத்த மதியவுணவு டிபன் பாக்சை பேக்கில் வைத்தவள் தந்தையோடு நதியூரின் தெருவில் நடைபோட ஆரம்பித்தாள்.
அது பெரிய நகரம் எல்லாம் இல்லை. சின்னதாக டீக்கடை, மளிகை பொருட்கள், காய்கறிகள் விற்கும் மளிகைக்கடை, நகரப்பேருந்துகள் மட்டும் நிற்கும் பேருந்து நிறுத்தம், தாமிரபரணியின் கிளை கால்வாய், குளம், வயல், பூந்தோட்டமென கிராமத்தனம் நிரம்பிய ஊர்.
மலர்விழி தந்தையோடு அண்ணாச்சி கடையை அடைந்தவள் “போன மாசம் வாங்குன பலசரக்கு ஜாமான் ரெண்டாயிரம் ரூபாதானே மாமா! ரெண்டாயிரத்து ஐநூறு கேட்டிங்களாம்” என்று விசாரிக்க
“எனக்கு ரெண்டாயிரத்து ஐநூறுனுதான் ஞாபகம் இருக்கு” என்றார் அவர்.
மலர்விழி தனது பேக்கிலிருந்து சிறிய கையடக்க நோட் ஒன்றை எடுத்தவள் அவரிடம் நீட்டினாள்.

“இது போன மாசம் பலசரக்கு ஜாமான் வாங்குன கணக்கு. எல்லாம் சேர்த்து ரெண்டாயிரம் வருது” என்று காட்டினாள் அமைதியாக.
அண்ணாச்சி தன் தலையில் அடித்துக்கொண்டார். அவருக்கும் வயதாகிறதே! ஞாபகமறதி வரலாம் அல்லவா!
இன்னும் ஐந்து நூறு ரூபாய் நோட்டுகளோடு கரத்தை நீட்டியபடி இருந்த சிகாமணியிடம் “பாக்கி எதுவுமில்ல சிகாமணி” என்று சொல்ல அவரும் அசட்டுச்சிரிப்போடு பணத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டார்.
அப்பாவி மனிதர்! யார் என்ன சொன்னாலும் நம்பிவிடும் குணம்! கள்ளங்கபடம் துளியுமில்லாதவர். அதனால்தானோ என்னவோ அவரைச் சுலபத்தில் அனைவரும் ஏமாற்றிவிடுகிறார்கள் என்று வருத்தப்படுவார் குழலி.
யாரிடம் அதட்டிப் பேசவோ, அடாவடியாக நடக்கவோ சிகாமணிக்குத் தெரியாது. உடன்பிறந்த அண்ணனுக்குச் சொந்தமான பூந்தோட்டத்தை மேற்பார்வை செய்து வருகிறார். அந்த வரும்படியில் குடும்பம் நடக்கிறது.
யாரும் கண்ணைக் கசக்கிக்கொண்டு மனைவிக்கு உடல்நிலை சரியில்லை, குழந்தைக்குப் பள்ளிக் கட்டணம் கட்ட பணமில்லை என்று சொல்லிவிட்டால் யோசிக்காமல் கையிலிருக்கும் காசை கொடுத்துவிடுவார்.
கொடுத்த பணத்தைத் திரும்ப கேட்டு வாங்கும் சாமர்த்தியமும் கிடையாது. ஊரார் பார்வைக்குச் சிகாமணி ஒரு ஏமாளி. என்ன சொன்னாலும் சிரித்துவிட்டுக் கடக்கும் அசட்டு மனிதன். அந்த ஊர் பாஷையில் சொல்லப்போனால் ‘கூறுபாடு இல்லாதவர்’.
அவருக்கும் சேர்த்து புத்தியோடு பிழைக்கக் குழலி கற்றுக்கொண்டார் எனலாம்.
அவர்களது புத்திரியான மலர்விழியோ இருவரைப் போலவும் கிடையாது. அமைதியோ அமைதி ரகம். அம்மா அப்பா மீது உயிர். அதற்காக கொஞ்சிக்கொண்டே திரியும் ரகமில்லை.
அவளுக்குத் தோழி என்று இருப்பவள் அவளோடு படிக்கும் ஈஸ்வரி மட்டுமே. பக்கத்துவீட்டுப்பெண். அவளும் மலர்விழியும் சிறுவயதிலிருந்தே தோழிகள். பள்ளி, கல்லூரிகளில் ஒரே வகுப்பு வேறு.
“என்ன மாமா, இன்னைக்கும் ஏமாற பாத்தியலா?” என்று ஆரவாரத்தோடு வந்து நின்றவளைப் பார்த்துச் சத்தமாகச் சிரித்தார் சிகாமணி.

“இதுல ஏமாற என்னல இருக்கு? அண்ணாச்சிக்கு நினைவு வந்தா இன்னொரு ஐநூறு ரூவாக்கு பலசரக்கு குடுத்துட மாட்டாரா?” என்று அவர் கேட்க
“கண்டிப்பா குடுக்க மாட்டார் மாமா. உங்களை மாதிரி அவர் அப்புராணி இல்ல. இனியாச்சும் யார் என்ன சொன்னாலும் பணத்தை நீட்டாதிய” என்றாள் அவள்.
“சரில சரில! நீங்க கிளம்புங்க. பஸ் வந்துடும். நான் தோட்டத்தைப் பாக்கப் போறேன். மதினி மத்தியானம் வர்றதா சொன்னாங்க”
சிகாமணி அங்கிருந்து போய்விட மலர்விழியும் ஈஸ்வரியும் நகரப்பேருந்துக்காகக் காத்திருக்க ஆரம்பித்தார்கள்.
“எனக்கு அக்கவுண்ட்சை நினைச்சா கடுப்பு மண்ணாங்கட்டியா வருது ஈசு”
“உனக்குமா? எனக்கும்தான் மலர். பேசாம இன்னைக்கு அக்கவுண்ட்ஸ் ஹவரை கட் அடிச்சிடுவோமா?”
ஈஸ்வரி கேட்கவும் சரியெனத் தலையாட்டினாள் மலர்விழி கண்களில் ஆர்வத்தோடு.
அந்நேரத்தில் மலர்விழியின் மொபைல் சிணுங்கியது. தொடுதிரையில் ‘மது அக்கா’ என்ற பெயர் வரவும் ஆசையாக அழைப்பை ஏற்றாள்.
“ஹாய் மதுக்கா”
மறுமுனையிலோ சிடுசிடுவெனப் பதில் வந்தது.
“நேத்து மதியம் உனக்குக் கால் பண்ணுனேன். மகாராணி எடுக்க மாட்டிங்களோ?”
“போன்ல பேலன்ஸ் இல்லக்கா. அம்மா கிட்ட காசு கேக்க முடியாது. நேத்து ஈவ்னிங்தான் புக் ஷாப்ல சம்பளம் குடுத்தாங்க. அப்புறம் ரீசார்ஜ் பண்ணுனேன்”
“சரிசரி! ஆஊனா பஞ்சப்பாட்டை எடுத்து விடாத. நேத்து புவன் காலேஜுக்கு வந்தாரா?”
“தெரியலையேக்கா”
“நீ அங்கதானே படிக்குற? ரெண்டு நாளுக்கு முன்னாடி கூட சொன்னேனே, புவன் அங்க வரப் போக இருந்தார்னா சொல்லுடினு. அதைக் கூட கவனிக்காம அங்க என்ன வெட்டி முறிக்கிற?”
“இண்டர்னல் வரப்போகுதுக்கா. அதுக்கு ப்ரிப்பேர்…”
“ஆமா நீ படிச்சு ரிசர்வ் பேங்க் கவர்னர் ஆகப் போற பாரு! நான் சொன்னதைச் செய். இல்லனா இந்த மாசம் உங்கப்பாக்குச் சம்பளம் கட் ஆகிடும் பாத்துக்க”

மலர்விழி ஏதோ சொல்லப்போக அவளிடமிருந்து மொபைலைப் பிடுங்கினாள் ஈஸ்வரி.
“பஸ் வந்துடுச்சுக்கா. அப்புறமா பேசுவா மலர்”
அழைப்பைத் துண்டித்து தோழியை முறைத்தாள்.
“அவ கிட்ட ஏன் பணிஞ்சு போறடி? ரொம்ப ஓவரா ஆடுறா”
“ப்ச்! என்ன பண்ண சொல்லுற? அப்பா அவங்க தோட்டத்துல வேலை பாக்குறார். அதை வச்சுதான் குடும்பம் ஓடுது. அதுல மண்ணள்ளி போடமுடியுமா?”
சலித்துக்கொண்டாள் மலர்விழி. மதுமதியின் தந்தை மாணிக்கவேலுவும் மலர்விழியின் தந்தை சிகாமணியும் உடன் பிறந்த சகோதரர்கள்.
ஒரே தாய் வயிற்றில் பிறந்த இரு மகன்களில் ஒருவன் கடைந்தெடுத்தச் சுயநலவதியாக, பணத்தாசை கொண்டவனாக, ஏமாற்றுக்காரனாக இருக்க, மற்றொருவனோ அப்பாவியாக, ஏமாளியாக, வெள்ளை உள்ளம் கொண்டவனாக இருந்தது படைப்பின் வினோதம்!
மாணிக்கவேலு முதலாம் ரகம். சிகாமணி இரண்டாம் ரகம். சிகாமணியின் குணத்தை மாணிக்கவேலு தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார் என்று குழலி மலர்விழியிடம் அடிக்கடி கூறுவார்.
“எங்கப்பாவும் பெரியப்பா மாதிரி காரியக்காரரா இருந்திருந்தா நாங்களும் இந்நேரம் அவங்களை மாதிரி வசதியா வாழ்ந்திருப்போம். ஹூம்! எங்கப்பா அப்பாவி. அவரால ஊரை அடிச்சுப் பிழைக்க முடியாது. அதான் காலத்துக்கும் பெரியப்பா கிட்ட கூலிக்காரனாவே இருந்திட்டிருக்கார்”
மலர்விழி சொன்னதும் ஈஸ்வரிக்கு மனம் தாங்கவில்லை. சிகாமணி மீது அவளுக்குப் பரிவு உண்டு. அவரை யாருக்கும் பிடிக்கவில்லை என்றால் கட்டாயம் அந்நபர் மிருக குணமுள்ளவராகத்தான் இருக்க முடியும் என்பாள்.
அவருக்குப் பிழைக்கத் தெரியாமல் இருக்கலாம். ஆனால் நல்ல உள்ளம் இருக்கிறதே! அதே குணம்தான் மலர்விழிக்கும் என்பாள் ஈஸ்வரி.
“உன் பெரியப்பா உங்கப்பாவ நடத்துற மாதிரி உன்னை அந்த மது நடத்துறா. நீயும் அவ சொல்லுற எல்லாத்துக்கும் தலையாட்டுற. ஒன்னு மட்டும் தெரிஞ்சிக்க. அவ ஒன்னும் உன்னைத் தங்கச்சியா நினைக்கல. நினைச்சிருந்தா அவ நிச்சயதார்த்தத்துக்கு நீ வரவேண்டாம்னு சொல்லிருப்பாளா?”
மலர்விழிக்கு மட்டும் இதெல்லாம் தெரியாதா என்ன? மதுமதியின் ஈகோ தனது தந்தையை, தங்களது குடும்பத்தின் பொருளாதார நிலையைப் பாதித்துவிடக்கூடாதென அவள் யோசிக்கிறாள். அவள் ஒன்றும் சினிமாவில் வரும் கதாநாயகி இல்லை.
கீழ்நடுத்தர வர்க்கத்தில் பிறந்த பெண்ணால் எல்லா இடத்திலும் சுயமரியாதையைக் கடைபிடிக்க முடியாது. அன்றாட வாழ்க்கையில் அவர்களுக்குச் சவால்கள் அதிகம். அதை எப்படி சமாளிப்பதென யோசிப்பதில் சுயமரியாதை, புரட்சி எல்லாம் நினைவுக்கு வராது.
மலர்விழியும் அப்படியே! மதுமதி ஏதாவது சொன்னால் அவள் செய்வாள். முடியவில்லை என்றால் இரண்டு வார்த்தைகள் திட்டினால் கூட கேட்டுக்கொள்வாள். அதற்காக அவள் முதுகெலும்பு இல்லாத புழு இல்லை.
புத்தகங்கள் மீது அவளுக்கு அளவற்ற ப்ரேமை உண்டு. அதனால்தானோ என்னவோ நூலகர் ஆகவேண்டுமென்ற எண்ணம் அவளுக்குள் வேரூன்றிவிட்டது.
“அதெல்லாம் என்ன படிப்பு? ஒழுங்கா பி.காம் படிச்சுட்டு எந்தக் கம்பெனிலயாச்சும் கணக்கு எழுது” என்று அவளது இளங்கலை நூலக அறிவியல் படிப்புக்குத் தடையுத்தரவு போட்டவர் மாணிக்கவேலு.
அவரை எதிர்த்து எதையும் செய்ய முடியாத நிலை. இளங்கலை வணிகவியலைப் படிக்கும்போதே நூலக அறிவியலில் சர்டிபிகேட் கோர்ஸ் ஒன்றை அண்ணாமலை பல்கலைகழகத்தின் வாயிலாக முடித்தாள். நல்லவேளையாக அவள் படிக்கிற என்.எஸ்.என் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அங்கிருந்தே அண்ணாமலை பல்கலைகழகத்தில் விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு இருந்தது. படிக்கும்போதே பாளையங்கோட்டையிலிருக்கும் பிரபல புக் ஷாப்பில் பகுதிநேரப் பணிக்குச் சேர்ந்துவிட்டாள்.
இதோ அந்தச் சம்பளத்தை வைத்துத் தனது படிப்புச்செலவைச் சமாளிக்கிறாள். அவளுக்கு அரசு நூலகர் ஆகவேண்டுமென விருப்பம். அதற்கு நூலக அறிவியலில் பட்டம் வாங்க வேண்டும்.
இந்தப் பகுதிநேர வேலைவாய்ப்பை வைத்து அந்தப் பட்டப்படிப்பை படிக்க முடியாது. எனவே முதுகலை முடித்த கையோடு தனியார் கல்லூரிகளில் இருக்கும் நூலகங்கள், தனியார் நூலகங்களில் வேலை கிடைத்தால் அதில் சேர்ந்து பட்டப்படிப்பில் இணையலாமென்ற எண்ணம்.
இப்படி ஒரு கனவைத் தனக்குள் சுமந்துகொண்டிருப்பவளைத்தான் மதுமதி அடிக்கடி ‘அசமந்தம்’ என்று நக்கலடிப்பாள். தன்னைப் போல பொறியியல் படிக்கும் அறிவில்லை! நுனிநாக்கில் ஆங்கிலம் புரளவில்லை! அதனால்தானோ என்னவோ மலர்விழியைப் பற்றி அவளுக்குக் குறைவான எண்ணம்.
தோழியர் இருவரும் பேருந்திலேறி அவரவர் எண்ணப்போக்கில் நேரத்தை ஓட்டிவிட்டுக் கல்லூரிக்கும் வந்து சேர்ந்தார்கள். அன்று முதல் வகுப்பு கணக்குப்பதிவியல் என்பதால் ஈஸ்வரிக்கும் அவளுக்கும் கட் அடிக்கும் எண்ணம் வந்துவிட்டது.
அப்படியே ஒதுங்கி கல்லூரி நூலகத்திற்கு போயிருந்தால் கூட தப்பித்திருப்பார்கள். அவர்களின் நேரம், மதுமதி சொன்னாளே என்று கரெஸ்பாண்டெண்டின் அறை பக்கம் எட்டிப் பார்க்கலாமென அங்குமிங்கும் அலைந்து திரிந்ததில் கணக்குபதிவியல் எடுக்கும் பேராசிரியையிடம் வசமாக மாட்டிக்கொண்டார்கள் இருவரும்.

“போன இண்டர்னல்ல ரெண்டு பேரும் அக்கவுண்டன்சில பார்டர்ல பாஸ் ஆனிங்க. எந்தத் தைரியத்துல க்ளாஸ் கட் அடிக்குறிங்க? வாங்க ஹெச்.ஓ.டி கிட்ட”
மெய்யாகவே தோழியர் இருவரும் கணக்குபதிவியலில் ஏதோ ஒப்பேறுவார்களே தவிர சுத்தமாக அந்தப் பாடம் அவர்களுக்கு வராது.
அந்நேரம் பார்த்து வணிகவியல் துறையில் இருந்து வந்த இன்னொரு பேராசியர் துறைத்தலைவர் கரெஸ்பாண்டெண்டைப் பார்க்கப் போயிருப்பதாகச் சொல்ல, பேராசிரியை அவர்களிருவரையும் அங்கேயே இழுத்துச் சென்றார்.
“கரெஸ்பாண்டெண்ட் ரூம்லதான் பிரின்சிபல் சார் இருக்காங்க. உங்க ரெண்டு பேருக்கும் அவர் டோஸ் விட்டாதான் பொறுப்பு வரும்.”
பேராசிரியை இவ்வாறு சொல்ல, ஈஸ்வரியோ மலர்விழியின் காதில் கிசுகிசுத்தாள்.
“புவன் சார் ரொம்ப நல்லவர். இந்த ஆமை போட்டுக் குடுத்தாலும் அவர் நம்மளை ஒன்னும் சொல்லமாட்டார். நீ வேற அவரோட வருங்கால மச்சினி. நான் உன் ஃப்ரெண்ட். நம்மளை மன்னிச்சிடுவார்”
“நான் மதுக்காவோட தங்கச்சினு புவன் சாருக்குத் தெரியாது ஈசு”
“நம்ம தெரிய வச்சிடுவோம்”
இப்படி உஷாராகப் போன இருவரும் கரெஸ்பாண்டெண்டின் அலுவலக அறையில் புவனேந்திரனுக்குப் பதிலாக வேறு ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அதிர்ந்தே போனார்கள்.
“ஸ்டூண்ட்சை ஏன் இங்க அழைச்சிட்டு வந்திருக்கிங்க மீனா மேடம்?”
வணிகவியல் துறைத்தலைவரும், கல்லூரி முதல்வரும் ஒரே குரலில் கேட்க பேராசிரியை மீனா அவர்கள் வகுப்பைக் கட் அடித்த விவரத்தைக் கூறினார்.
“நான் சொன்னா கேக்குறதில்ல சார். அதான் உங்க கிட்ட அழைச்சிட்டு வந்தேன்”
இவ்வளவு பேச்சு நடக்க, மலர்விழியோ கரெஸ்பாண்டெண்டாக அமர்ந்திருந்த மகிழ்மாறனைப் பார்த்து விக்கித்து நின்றாள். அவனது பார்வையும் அவள் மீதிருந்து அங்கே இங்கே நகரவில்லை.

இந்த மனிதன் இங்கே என்ன செய்கிறான்? யோசித்தவளின் பார்வை பெயர்ப்பலகை மீது படிந்தது.
‘மகிழ்மாறன் – கரெஸ்பாண்டெண்ட் & சேர்மன்’ புவனேந்திரனின் பெயர் அங்கில்லை! அப்படியென்றால்?
“மேம் சொல்லுறது உண்மையா? ரெண்டு பேரும் க்ளாசை கட் அடிச்சிங்களா?” முதல்வர் காய்ந்தார். துறைத்தலைவரோ கரெஸ்பாண்டெண்ட் முன்னிலையில் தனது துறையைச் சேர்ந்த வகுப்பு மாணவிகள் இப்படி வந்து நிற்கிறார்களே என்ற எண்ணத்தில் கடுகடுவென முறைத்தார்.
அவர்கள் யாரையும் மலர்விழி கவனித்தாளில்லை. அவளது பார்வையும் கவனமும் மகிழ்மாறன் மீதே ஊன்றிவிட்டது.
மகிழ்மாறன்! மாறா! மூளைக்குள் விறுவிறுவென அவனைச் சந்தித்த முதல் நாள் நினைவுக்கு வந்தது.
“வேண்டாம் மாறன்! இவனுக்கு வாட்டர் பாட்டில் மட்டும் வாங்கிக்கிறேன். இந்த புக்ஸ் எல்லாம் அமேசான், ஃப்ளிப்கார்ட்ல இதை விட மலிவா கிடைக்கும்”
ஒரு பெண்ணின் குரல் கேட்டுப் புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டிருந்த மலர்விழி நிமிர்ந்தாள்.
அவளது இடத்திலிருந்து வலப்பக்கம் திருப்பினால் ஸ்டேசனரி ஐட்டங்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்குத் தேவையானப் பொருட்கள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன.
அங்கே நின்றபடி ஒரு வாட்டசாட்டமான ஆடவனிடம் பேசிக்கொண்டிருந்தாள் அப்பெண். அவளருகே நின்று கொண்டிருந்த சிறுவனோ அங்கே அடுக்கிவைக்கப்பட்டிருந்த வண்ணமயமானச் சிறுவர் கதை புத்தகங்களை ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தான்.
குழந்தைக்குச் சோறூட்டவே மொபைலில் யூடியூப் காட்டும் இந்தக் காலத்தில் புத்தகத்தைப் பார்த்து ஏங்கிய அச்சிறுவன் மலர்விழிக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தான்.
“மேடம்” சற்று சத்தமாக அப்பெண்ணை அழைத்தாள் அவள்.
அந்தப் பெண்ணோடு சேர்த்து அவளருகே நின்ற ஆடவனும் திரும்பினான்.
அப்பெண்ணின் விழிகளில் இருந்த சினேகமான பாவனை, அவளது இதழ்களில் இருந்த சிரிப்பு இந்த இரண்டும் அவனிடம் மிஸ்சிங்.
தினசரி உணவுக்குப் பதிலாக கல்லையும் கான்க்ரீட்டையும் குழைத்துச் சாப்பிடுவான் போல! அத்துணை இறுக்கம் அவனது முகத்தில்! போதாக்குறைக்கு அவன் அணிந்திருந்த ரிம்லெஸ் கண்ணாடி வேறு அந்த இறுக்கத்துக்குக் கறார் ரூபத்தை வழங்கிவிட மொத்தத்தில் எதற்காக அந்தப் பெண்ணை அழைத்தோம் என்பதையே மறந்து நின்றாள் மலர்விழி.
“சொல்லுங்க” என்று அந்தப் பெண் அழுத்தமாக உரைக்கவும்
“அது… குழந்தைக்குக் கதை புத்தகம் பிடிச்சிருக்குனு நினைக்குறேன்” என்றாள் அச்சிறுவன் பார்த்துக்கொண்டிருந்த புத்தகத்தைக் காட்டி.
அப்பெண்ணோ மறுத்தாள்.
“ட்ரெயின் ட்ராவல் முடியுறதுக்குள்ள புக்கைக் கிழிச்சிடுவான்” என்றாள்.
“நோ மம்மி! இந்தத் தடவை நான் கிழிக்க மாட்டேன். ப்ராமிஸ்”
சிறுவன் சத்தியம் செய்தபடி அந்த ஆடவனைப் பார்த்தான்.
‘எனக்காகப் பேசேன்’ என்ற செய்தி அவனது விழிகளில்.
அவ்வளவுதான்! இவ்வளவு நேரம் கல்லும் கான்க்ரீட்டும் என கற்பனை செய்தவளுக்கே அதிர்ச்சியூட்டும் விதமாக மெல்லிய புன்னகை அந்த ஆடவனின் இதழில்!

ட்ரிம் செய்யப்பட்ட தாடி, அளவாய் தெரிந்த மீசையோடு அவன் புன்னகைப்பதைப் பார்க்க அத்துணை வசீகரமாக இருந்தது.
‘அழகாகச் சிரிப்பவர்கள் பெரும்பாலும் சிரிப்பதேயில்லை’
மனதுக்குள் நினைத்துக்கொண்டவள் “அமேசான், ஃப்ளிப்கார்ட்ல விலை குறைவா இருக்கலாம். ஆனா புக்கோட அட்டையைத் தொட்டு ரசிச்சு, அதுக்குள்ள இருந்து வர்ற வாசனையை நுகர்ந்து அனுபவிச்சு வாங்குறது கடைல மட்டும்தானே சாத்தியம் மேடம். வாசிப்பு பழக்கமே இல்லாத தலைமுறைல உங்க மகன் புக் வேணும்னு கேக்குறது பெரிய விசயம். ஒரே ஒரு தடவை வாங்கி குடுங்க. இதைக் கிழிச்சான்னா ‘புக் சரஸ்வதி, அதைக் கிழிக்கக்கூடாதுனு’ சொல்லுங்க. அவன் கேட்டுப்பான். அப்பிடித்தானே குட்டிப்பையா?” என்று அச்சிறுவனைக் கேட்க
“ஆமா ஆன்ட்டி” என்று சொல்லி மலர்விழியின் குட்டி இதயத்தில் அணுகுண்டு வீசினான் அவன்.
“ஆன்ட்டியா?” உதடு துடிக்க, சிறுபிள்ளை போல கேட்டுவிட்டு அவன் கை காட்டிய புத்தகத்தை எடுக்கச் சென்றவளுக்கு ரிம்லெஸ் கண்ணாடி ஆடவனின் உதட்டுக்குள் சிறைபட்ட சிரிப்பு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
புத்தகத்தை வாங்கியதும்தான் சிறுவனின் முகத்தில் எவ்வளவு சந்தோசம்!
“எவ்ளோ?” அந்த ஆடவன் கேட்க
“மு…முப்ப… முன்னூறு சார்” என்றாள் மலர்விழி தடுமாற்றத்துடன்.
“டிஸ்கவுண்ட்?”
“ஹான்?”
“வெளிய போர்டுல குழந்தைங்க படிக்கிற புக்சுக்கு பத்து சதவிகிதம் டிஸ்கவுண்ட்னு போட்டிருக்குதே! அந்த டிஸ்கவுண்ட் எவ்ளோனு கேட்டேன்”
அவன் சாதாரணமாகவே பேசினான். ஆனால் மலர்விழிக்குத்தான் அது அதட்டல் தொனியாகத் தோன்றியது.
“டிஸ்கவுண்ட்” என்று பரபரத்தவள் கால்குலேட்டரைத் தேடினாள்.
“இங்க இருக்கு” தனக்கு அருகே இருந்த புத்தக அடுக்கின்மீது வைக்கப்பட்டிருந்த கேசியோ கால்குலேட்டரை அவன் எடுத்து நீட்டவும் மலர்விழிக்குச் சங்கடமாகப் போனது.
‘என்னவாயிற்று எனக்கு? இப்படி இவன் முன்னே ஏன் தடுமாறித் தொலைக்கிறேன்?’
படபடத்த மனதை அடக்கிக்கொண்டு தள்ளுபடி கழித்து மிச்சமுள்ள தொகைக்குப் பில் போட்டுப் புத்தகத்தை நீட்டினாள் அவள்.
“கடைக்கு வர்ற கஷ்டமர்ஸ் கிட்ட லாவகமா பேசத் தெரிஞ்சா மட்டும் போதாது. டென்சன் இல்லாம சூழ்நிலைய கையாளவும் தெரியணும்”
அமர்த்தலாக, அதட்டலாக அவளிடம் சொல்லிவிட்டுப் புத்தகம் இருந்த பையை வாங்கிக்கொண்டு கிளம்பினான் அந்த ரிம்லெஸ் கண்ணாடிக்காரன்.
மலர்விழியால் மலங்க மலங்க விழிக்க மட்டுமே முடிந்தது அப்போது! இப்போது போலவே!
அந்த ரிம்லெஸ் கண்ணாடிக்காரனே கல்லூரியின் கரஸ்பாண்டெண்ட் மற்றும் சேர்மனாக வந்து அமர்வான் என்று அவள் என்ன கனவா கண்டாள்?

“நான் ஒரு கேள்வி கேட்டேன்! அதுக்கு இன்னும் பதில் வரல” அதிகாரமாய்க் கேட்டவனின் முன்னே மேஜையிலிருந்த பெயர்ப்பலகையில் ‘மகிழ்மாறன் – கரஸ்பாண்டெண்ட் & சேர்மன்’ என்று எழுதியிருந்ததை மீண்டும் ஒரு முறை வாசித்தவளுக்கு மெல்ல கண்கள் இருட்டிவிட, கல்லூரியின் கரெஸ்பாண்டெண்ட் அலுவலக அறையின் தரையில் பொத்தென மயங்கி விழுந்தாள் மலர்விழி.
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction