நம் பழைய செருப்பைத் தைப்பதற்கு அந்தத் தொழிலை நன்றாய்ப் பழகிய தொளிலாளியிடமே கொடுக்கிறோம். ஆனால், ஒரு நாட்டின் ஆட்சிப் பொறுப்பை மட்டும் பசப்பாகப் பேசி ஓட்டைப் பறிக்கும் வாய்சொல் வீரர்களிடம் ஒப்படைத்து விடுகிறோம்.
-பிளேட்டோ
தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் தலைமை அலுவலகம்…
சுந்தரமூர்த்தியும் ஆதித்யனும் ஹெலிகாப்டரோடு மாயமாகி இருபது மணி நேரம் கடந்திருந்தது. கட்சி அலுவலகத்திலும் வாயிலிலும் கூடிய தொண்டர்கள் கூட்டம் கலையவில்லை.
யாழினிக்குத் துணையாக அகத்தியன் கட்சி அலுவலகத்திலேயே இருந்துவிட அருள்மொழி வீட்டில் அன்னைக்கு ஆறுதல் கூறிக்கொண்டிருந்தான்.
நேற்றிலிருந்து சாப்பிடாமல் கண்ணுறங்காது அழுது கொண்டே இருக்கும் அன்னையை அவனால் சமாளிக்க முடியவில்லை. ஏதேனும் நல்ல செய்தி காதில் விழாதா என்ற எதிர்பார்ப்புடன் வீட்டில் செய்தி தொலைகாட்சி ஓடிக்கொண்டே இருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அழுதுட்டே இருந்தா உங்க உடம்பு தான் கெட்டுப் போகும்மா… ப்ளீஸ், அழாதிங்க” என்று மீனாட்சியைத் தோளணைத்தவனுக்கு மொபைலில் அழைப்பு வர அன்னையிடமிருந்து விலகி அந்த ஹாலின் ஓரமாய் நின்று பேச ஆரம்பித்தான்.
“சொல்லுங்க சுரேஷ்” என்றவன் மறுமுனையில் சுரேஷ் சொன்ன செய்தியில் திக்பிரமை பிடித்தவனைப் போல அசையாது நிற்கையிலேயே செய்தி தொலைகாட்சியில் பிரசன்னமானார் இந்திய ஒன்றியத்தின் உள்துறை அமைச்சர்.
“கனத்த இதயத்துடன் திரு சுந்தரமூர்த்தி அவர்களின் மரணம் பற்றிய செய்தியை அறிவிக்கிறேன். அவரது மறைவு கட்சிக்கும் நாட்டுக்கும் மட்டுமன்றி அவரது குடும்பத்துக்கும் பேரிழப்பு. அவரது மறைவால் வாடுவோருக்கு அரசின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்”
அருள்மொழி இரட்டை அதிர்ச்சியைத் தாங்க இயலாதவனாக அன்னையை ஏறிட அவரோ “என்னங்க என்னைய விட்டுட்டுப் போயிட்டிங்களா? கண்ணா ஆதி கடைசில உன் முகத்த கூட நான் பாக்கலயேடா” என்று கதறியழத் துவங்கினார்.

மறுமுனையில் சுரேஷோ “அருள் சார் அங்க இருந்து மூனு பாடிய ரெஸ்கியூ பண்ணிருக்காங்க… எரிஞ்சு போன உடம்பு மழை நிக்காம பெஞ்சதால டி-கம்போஸ் ஆயிடுச்சுனு ஆந்திரா சீஃப் செகரட்டரி சொல்லிட்டார்… வருத்தமான விசயம் தான்… ஆனா இப்ப தான் நீங்க தைரியமா இருக்கணும்” என்றான்.
அருள்மொழி அழைப்பைத் துண்டிக்க கூட ஸ்ரமணை இல்லாதவனாக மொபைலை நழுவ விட்டவன் அதிர்ச்சியில் மயக்கத்திற்கு செல்லும் அன்னையத் தாங்க ஓடினான்.
அதே நேரம் த.மு.க கட்சியின் அண்ணாசாலை அலுவலகம் தொண்டர்களின் கூச்சலாலும் அழுகுரலாலும் களேபரமாகி இருந்தது. தந்தையின் அலுவலக அறையில் ஒடுங்கி போய் அமர்ந்திருந்தாள் யாழினி.
அவளது விழிகள் தந்தையும் தம்பியும் சேர்ந்து நிற்கும் புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தது.
“யாழி உனக்கு என்னால ஆறுதல் சொல்ல முடியாதும்மா… ஆனா கொஞ்சம் நிதானமா யோசி… இப்போ நீ எமோஷனலா வீக் ஆனா பார்ட்டிய யார் வழிநடத்துறது? சியர் அப் யாழி! இன்னும் கொஞ்சநேரத்துல ஆந்திரால இருந்து பாடிய தஞ்சாவூர் எடுத்துட்டுப் போயிடுவாங்க… அருளையும் அத்தையையும் நீ தான் சமாதானப்படுத்தணும்… அதுக்கு நீ முதல்ல தைரியமா இருக்கணும்”
அகத்தியன் மந்திரம் சொல்வது போல மனைவியைத் தேற்றிக் கொண்டிருந்தார்.
வெளியே ஓவென்ற தொண்டர்களின் கூச்சல்! செய்தி தொலைகாட்சிகளிலோ மீண்டும் மீண்டும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் நல்லமலா காட்டுப்பகுதியில் வட்டமிட்ட வீடியோக்களும், ஆந்திரா தலைமை செயலர் பேட்டி கொடுக்கும் வீடியோக்களும் மட்டுமே மாற்றி மாற்றி ஒளிபரப்பப்பட்டுக் கொண்டிருந்தன.
“முன்னாள் தமிழக முதலமைச்சர் சுந்தரமூர்த்தியும் அவரது மகன் ஆதித்யனும் தேர்தல் பரப்புரைக்காக சென்ற பெல் 222 என்ற ஹெலிகாப்டர் நேற்று காலை நல்லமலா காட்டுப்பகுதியில் திசைமாறி மரக்கூட்டங்களில் மோதி வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. இந்த மோசமான விபத்தில் சுந்தரமூர்த்தியின் உதவியாளரும் பைலட்களும் மரணமடைந்துள்ளதாக தகவல்கள் வருகிறது. சடலங்களை மீட்டெடுக்கும் பணி முழுவீச்சில் நடந்து முடிந்த நிலையில் நேற்று முழுவதும் பெய்த மழையின் காரணமாக வெடித்து சிதறிய சடலங்கள் அழுகும் தருவாயில் உள்ளதாக ஆந்திர தலைமை செயலர் ராஜேஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்”
அடுத்து சில நிமிடங்களில் பரபரப்பான இசைக்கு பிறகு தொலைகாட்சியில் உதயமானார் ராமமூர்த்தி.
அழுகையில் நனைந்த கண்களைத் துடைத்துக் கொண்டவர் “தலைவரோட மரணம் கட்சியோட ஒவ்வொரு அடிமட்ட தொண்டனுக்கும் எவ்வளவு வலியை குடுக்கும்னு புரியுது. மேய்ப்பனை இழந்த ஆடுகளா கட்சி தொண்டர்கள் தடுமாறுறதை பாக்குறப்ப மனசு வலிக்குது… சீக்கிரம் பொதுக்குழுவ கூட்டி கட்சிய வழிநடத்துற ஆளை தேர்வு செய்யுற கடமை எனக்கு இருக்கு” என்றார்.
“கட்சியோட அடுத்த தலைவரா நீங்க தேர்ந்தெடுக்கப்படலாம்னு வெளிய செய்தி உலாவுதே சார்… அதை பத்தி உங்க கருத்து?”
“தொண்டர்கள் விரும்புனா என் உடல் பொருள் ஆவி எல்லாத்தையும் கட்சிக்காகவும் தமிழக மக்களுக்காகவும் அர்ப்பணிக்க நான் தயாரா இருக்கேன்… நன்றி வணக்கம்”
இச்செய்தியைக் கண்டதும் யாழினி ராமமூர்த்தியை எண்ணி கடுஞ்சினமுற்றாள்.
ஆவேசத்துடன் எழுந்தவள் “கூடப் பிறந்த அண்ணனுக்கு வந்த கொடூர சாவை பத்தி கவலையில்லாம அடுத்த தலைவராகுறதுக்கு ப்ளான் போடுறார்… இவரை போய் அப்பா துணைத்தலைவராக்கி அழகு பாத்தாரே… இதுக்கு மேலயும் நான் உடைஞ்சு போய் உக்காந்துருக்கிறதுல அர்த்தமில்ல அகத்தியன்… நான் பேசுறேன் தொண்டர்கள் கிட்ட” என்றபடி தந்தையின் மரணம் கொடுத்த துக்கத்தை விழுங்கி விட்டு அடுத்த கட்ட அரசியல் நகர்வை எதிர்கொள்ள தயாரானாள்.
அதே நேரம் இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சிலின் தலைமை அலுவலகத்தில் இச்செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்தாள் வானதி. அவளருகே அமர்ந்திருந்த நிதர்சனாவோ
“எரியுற வீட்டுல புடுங்கிற வரைக்கும் லாபம்னு இருக்காரே இந்த மனுசன்… அண்ணன் மேல பாசமில்லாம இருக்கட்டும்… ஆனா ஆதித்யன் சாரோட ஏஜ் சாகுறதுக்கான ஏஜா நதி? அத பத்தி கூட இவர் யோசிக்கல பாரேன்” என்று பொருமினாள்.
“அது தான் நாற்காலியோட பவர்… அதுக்கு இரத்தபாசமே கிடையாது சனா… பதவியோட சுகம் மட்டும் தான் அதுக்குத் தெரியும்… அந்தச் சுகத்த அனுபவிக்கிறதுக்காக அது யாரையும் காவு வாங்கும் சனா… எனக்கு இது ஆச்சரியமா தெரியல” என்று தோளைக் குலுக்கினாள் வானதி.
அலட்சியம் போல காட்டிக் கொண்டாலும் அவளது மனம் ஆயிரம் கணக்குகளைப் போட்டது. அவளுக்கு ஏ.கேவிடம் இருந்து அழைப்பு வரவும் சிந்தனை கலைந்து அழைப்பை ஏற்றாள்.
“சுந்தரமூர்த்தி ஆதித்யன் ஃபியூனரலுக்கு நம்ம கன்சர்ன் சார்பா நீங்க தான் போகணும் வானதி”
“ஸ்யூர் சார்… நான் கிளம்ப ரெடியாகுறேன்” என்றவள் சொன்ன கையோடு தஞ்சாவூர் கிளம்பவும் ஆயத்தமானாள்.
அன்றைய தினமே சுந்தரமூர்த்தி, ஆதித்யன் மற்றும் ராமநாதனின் உடல்கள் அவரவர் குடும்பத்தினர் வசம் ஒப்படைக்கப்பட்டது. பைலட்களின் உடல்கள் சற்று தொலைவில் சிதறிக் கிடந்ததால் அவற்றை ஒப்படைப்பதில் காலதாமதம் ஏற்பட்டது.
சுந்தரமூர்த்தியின் உடல் அரசு மரியாதையுடன் தஞ்சாவூர் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கே பலத்த பாதுகாப்புடன் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் அவர்கள் வழக்கப்படி இறுதி சடங்கு நிகழ்த்தப்பட்டது. அந்த முக்கியப் பிரமுகர்களில் வானதியும் ஒருத்தி. மலர் வளையம் வைத்ததுடன் ஒதுங்கியவளை அகத்தியனின் உதவியாளர் மரியாதையுடன் இறுதி சடங்கு நிகழும் இடத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
மீனாட்சி கணவர் மற்றும் மூத்தமகனின் முகத்தைக் கூட கடைசியாய் காணும் பாக்கியமற்று போனேனே என்று கதறியழுத காட்சியைக் கண்ட வானதிக்கு மனதில் பழைய நினைவுகள் கிளர்ந்தெழ தொடங்கியது.
“உங்கப்பா அம்மாவோட முகத்தைக் கூட பாக்க முடியாம போயிட்டே கண்ணு”
தன்னைக் கட்டிக்கொண்டு அழுத மூதாட்டியின் தோள் சுருங்கிய கரத்தின் ஸ்பரிசத்தை இப்போது கூட தனது கரங்களில் உணர்ந்தவளின் கண்கள் அவளறியாது கலங்கியது மீனாட்சிக்காக. மற்றபடி சுந்தரமூர்த்தி ஆதித்யனின் மறைவெல்லாம் அவளுக்குச் சற்றும் சம்பந்தமற்றவை.
அவர்களுக்காக அவள் கலங்க வேண்டிய அவசியமேது! அவர்கள் மட்டுமில்லை, எந்த அரசியல்வாதியின் மறைவுமே அவளுக்குள் வருத்தத்தை உண்டாக்கியதில்லை.
இறுதி சடங்கு செய்வதற்கு ராமமூர்த்தி வந்த போது இரு ஜோடி கண்கள் அவரை வெறுப்புடன் நோக்கியது. அதிலொருத்தி அவரது தமையனின் மகள் யாழினி.
தந்தை இறந்த கணத்தில் கூட கட்சித்தலைமையைக் குறி வைத்த சித்தப்பாவின் நரித்தந்திரத்தின் முன்னே அவளின் இளம் அரசியலறிவு மண்டியிடுமா அல்லது போராடுமா என்ற கேள்வியோடு வானதி அவளை ஏறிட்டாள்.
வழக்கமான காட்டன் சேலை, இறுக்கமான முகம், கழுத்தளவு நீளமே உள்ள கூந்தல் எப்போதும் போனிடெயிலாய் தொங்கும். அன்றோ கொண்டையிட்டிருந்தவள் கரங்களை மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்ற கோலம் அவளின் உறுதியைச் சொல்லாமல் சொன்னது.
கிட்டத்தட்ட உணர்ச்சியை வெளிக்காட்டாத கல் போல நின்றிருந்தாள் எனலாம்!
வானதிக்கு அவளை பார்த்து இரக்கம் தான் வந்தது. அரசியல்வாதிகளும் வி.ஐ.பிக்களும் சந்தோசமோ துக்கமோ எதுவாயினும் பொதுவெளியில் தங்கள் உணர்வுகளைக் கவனமாக கையாள வேண்டும். இல்லையெனில் அவை ஊடகங்களின் வாய்க்கு அவலாகும். அல்லது ஊராரின் கேலிப்பேச்சுக்கு இலக்காகும்.
அவர்களுக்கு மனம் விட்டுச் சிரிக்கவும் உரிமையில்லை. வாய் விட்டு அழவும் சுதந்திரம் இல்லை. என்ன வாழ்க்கை இது?
அதிலும் யாழினியின் தற்போதைய நிலை மிகவும் கவலைக்கிடமானது. தந்தை தம்பியின் மறைவோடு எப்போதடா தலைமையைக் கைப்பற்றுவோம் என ஆளாய் பறக்கும் ராமமூர்த்தியையும் அவள் இப்போது சமாளித்தாக வேண்டும்.
தன்னைக் கவனத்துடன் உறுத்து விழித்த வானதியை யாழினியும் பார்த்து விட்டாள். யாரிவள் என்று அவள் யோசிக்கும் போதே அவளருகே நின்றிருந்த அகத்தியன் யாழினியின் காதில் முணுமுணுப்பது தெரிந்தது.
அதன் பின்னர் வானதியை நோக்கி முறுவலித்தவள் அருள்மொழி வரவும் இத்தனை நேரமிருந்த உறுதி மறைய முகம் மாறினாள். அருள்மொழி ஒரே நாளில் ஆளே மாறி போயிருந்தான்.
உறங்காத விழிகள், சோர்வான கவலை கப்பிய முகம், அடுத்து என்ன என்று புரியாத சூழல் என துயரத்தின் மொத்த உருவாய் நின்றவனின் கண்கள் வானதியிடம் சென்று மீண்டது.
அடுத்தடுத்து இறுதி சடங்குகள் நிகழ்ந்தன. சுந்தரமூர்த்தி ஆதித்யன் என இருவரையும் தனித்தனியே எரியூட்டிய போது அருள்மொழியின் கண்கள் கலங்கிப்போனது.
அவன் இழந்தது தந்தையையும் தமையனையும் மட்டுமல்ல. அவனது குருவையும், வழிகாட்டியையும் தான். அவனது தோள்கள் தளரும் போதே ஆதரவாய் வந்து நின்றான் அகத்தியன்.
“இதுவும் கடந்து போகும் அருள்… இல்லனா நீ இத கடந்து தான் ஆகணும்… வீ ஹேவ் நோ அதர் ஆப்சன்… இது கழுகுகளும் நரிகளும் வாழுற உலகம்… இங்க மனுசனா இருந்தா பிழைக்க முடியாது… அரசியல்ல காலியிடம் வராதானு ஏங்குனவங்களுக்கு நம்ம துக்கம் கொண்டாட்டமா இருக்கும்” என்று சொன்னதோடு அவன் பார்த்தது ராமமூர்த்தியைத் தான்!
அருள்மொழிக்கு அவனது சொற்கள் புரிந்தாலும் அதை ஏன் தன்னிடம் உரைக்கிறான் என்ற குழப்பம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அவனது தற்போதைய கவலை அன்னையை எண்ணித் தான். அவரும் தந்தையும் மனமொத்த தம்பதியினர் என்ற பதத்திற்கு அர்த்தமாக வாழ்ந்தவர்கள்.
துணையை இழந்த ஒருவருக்கு இருக்கும் துக்கத்தை விட ஆயிரம் மடங்கு துக்கம் மீனாட்சிக்குள் இருக்குமென்பதை அவரது மைந்தன் புரிந்து கொண்டதால் அவரை எப்படி இயல்புநிலைக்குத் திருப்புவது என்ற சிந்தனையில் ஆழ்ந்தான்.
அதே நேரம் சுந்தரமூர்த்தியும் ஆதித்யனும் சாம்பலான அடுத்தச் சில மணிநேரத்தில் கட்சிக்குள் உட்கட்சிப்பூசல் ஆரம்பித்தது. ஒரு சாரார் ராமமூர்த்தியை அடுத்த தலைமையாய் வழிமொழிந்தனர்.
இன்னொரு சாராரோ “ஏன் தலைவரோட பொண்ணு இருக்குல்ல? அதை கட்சி தலைமைக்குக் கொண்டு வந்தா என்ன?” என சுந்தரமூர்த்தி மீதிருக்கும் விசுவாசத்தால் முறுக்கிக் கொண்டனர்.
ராமமூர்த்தியின் தரப்பினரோ ஒரு பெண்ணை தலைமையாய் ஏற்று அவளது கட்டளைக்கு அடிபணிவதெல்லாம் ஆகாத காரியமென கூறியதோடு “எங்க ஐயாவ தலைவர் ஆக்கலனா அவர் தனியா போய் கட்சி ஆரம்பிச்சு எலக்சன்ல போட்டியிடுவார்” என்று கிட்டத்தட்ட மிரட்டியதில் யாழினி யோசனையில் ஆழ்ந்தாள்.
வானதி அகத்தியனின் உதவியாளனோடு வந்தவள் யாழினியிடம் “நான் கிளம்புறேன் மேம்… அகத்தியன் சார் வெளிய போயிருக்கிறதா இவர் சொன்னார்” எனவும்
“இன்னைக்கு பார்ட்டியோட பொதுக்குழுவ இங்க இருக்குற ஹோட்டல்ல கூட்டலாம்னு அகத்தியன் சொன்னார்… அது ரிலேட்டடா தான் அவர் இப்போ போயிருக்கார்” என்று பதிலளித்தாள்.
வானதிக்கு யாழினியின் சுரத்தற்ற குரல் ஒரு மாதிரியாக தோன்றவும் “நீங்க இன்னும் உங்க ஃபாதர் அண்ட் பிரதரோட லாஸ்ல இருந்து விடுபடலனு தோணுது… நம்ம என்ன ஃபீல் பண்ணுனாலும் இறந்தவங்க திரும்பி வரமாட்டாங்க மேம்… நம்மளால முடிஞ்சது அவங்க ஆசைப்பட்டத செஞ்சு காட்டுறது மட்டுமே… சுந்தரமூர்த்தி சாரும் ஆதித்யன் சாரும் எதுக்கு ஆசைப்பட்டாங்கனு தெரிஞ்சா அதை செய்ய டிரை பண்ணுங்க” என்று ஆறுதலும் அல்லாது ஊக்கமும் அல்லாது இரண்டும் கெட்டானாய் ஒரு சொற்பொழிவை ஆற்றினாள்.
யாழினியோ விரக்தியாய் “அப்பாக்கு மறுபடியும் தமிழ்நாட்டில ஆட்சிய பிடிக்கணும்னு ஆசை… அரசியல்வாதிக்கு இருக்க கூடிய நேச்சுரலான நாற்காலி ஆசைனு எல்லாரும் நினைக்கலாம்… ஆனா அவர் அந்த நாற்காலில உக்காரவச்சு அழகு பாக்க நினைச்சது என் தம்பி ஆதிய… அவனும் இப்ப இல்ல… ஆசைப்பட்டவரும் இல்ல… அவரோட ஆசைய நிறைவேத்துற வாய்ப்பும் என் கைய விட்டுப் போயிடுமோனு மனசு தவிக்குது… இத வெளிய சொல்லவும் முடியல… அரசியலுக்கு வந்ததும் யாழினினா இப்பிடி தான்னு எனக்குனு நான் ஒரு முகமூடி போட்டுக்கிட்டேன்… அந்த முகமூடில தெரியுற முகத்துல கம்பீரமும், அழுத்தமும் மட்டும் தான் இருக்கணும்ங்கிறது எனக்கு நானே எழுதிக்கிட்ட விதி… அதை மீறி இயல்பா யார் கிட்டவும் சஜஷன் கேக்க முடியல… ஐ அம் ஹெல்ப்லெஸ் நவ்” என்றாள் எங்கோ வெறித்தபடி.
வானதி அவளைக் கூர்ந்து கவனித்தவள் சுரேஷிடம் “சார் நான் மேம் கூட கொஞ்சம் தனியா பேசணும்… இஃப் யூ டோண்ட் மைண்ட்…” என்று இழுக்கவும் அவன் விடைபெற்றுக் கொண்டான்.
அவன் நகரவும் தன்னை விசித்திரமாக நோக்கிய யாழினியைப் புன்னகையுடன் எதிர்கொண்டவள்
“என்ன மேம் உள்கட்சி பூசல் ஆரம்பிச்சிடுச்சா? எல்லா கட்சிலயும் தலைமைக்கான வேகண்ட் உண்டாகுறப்ப இப்பிடி நடக்குறது வழக்கம் தான்… ஆனா கட்சியோட ஃபியூச்சரை நினைச்சு உழைக்கிற சிலர் சரியான நேரத்துல எடுக்குற முடிவால கட்சி சேப் ஆகும்… இப்போ அந்த இடத்துல நீங்க இருக்கீங்க” என்று பூடகமாய் கூற
“ப்ச்! என்னால தலைமை பதவில உக்கார முடியாது மிஸ்…”
“வானதி மகேந்திரன்” என இடையிட்டாள் வானதி.
“மிஸ் வானதி, அரசியல்ல பெண்கள் இருக்கலாம்… எப்பிடி இருக்கலாம்னா எம்.எல்.ஏவா இருக்கலாம்… எம்.பியா இருக்கலாம்.. இவ்ளோ ஏன் மினிஸ்டரா கூட இருக்கலாம்… ஆனா தலைமை பதவில ஒரு பொண்ணு இருந்தா அதை சக அரசியல்வாதிகளால ஏத்துக்கவே முடியாது… என்னோட விசயத்துலயும் அது தான் நடக்கும்” என்றாள் யாழினி.
வானதி அவளின் கூற்றை செவிமடுத்தவள் புன்னகை மாறாதவளாக “ஏ.கே சார் அடிக்கடி சொல்லுவார், நமக்கு கிங்கா ஆகுறதுக்கான பாக்கியம் இல்லனா வருத்தப்படக்கூடாதாம்… கிங்மேக்கரா மாறிடணுமாம்… சொல்லப்போனா கிங்கா இருக்குறத விட கிங்மேக்கரா இருக்குறதுல ஒரு த்ரில் இருக்கு மேம்… நான் சொன்னதை கொஞ்சம் யோசிங்க” என்று கூறவும் யாழினியின் முகம் யோசனைவயப்பட்டது.
வானதி அதை தனது பாதி வெற்றியாக எண்ணிக்கொண்டவள் “இன்னொன்னும் சொல்லுவேன்… அதிகப்பிரசங்கினு நீங்க நினைச்சாலும் ஐ டோண்ட் கேர்… அந்தக் காலத்துல ராஜா இறந்துட்டார்னா அவருக்கு வாரிசு இல்லனா அவர் கூட பிறந்தவங்களை ராஜாவா அரியணைல அமர வைப்பாங்க.. சப்போஸ் அவருக்கு வாரிசு இருந்தா யுவராஜா யாரோ அவன் தான் ராஜாவா அரியணைல உக்கார தகுதியானவன்… இது மொனார்சிக்கு மட்டுமில்ல, இப்போ இருக்குற அரசியல் சூழ்நிலைக்கும் ஒத்து வரும்… யோசிச்சு முடிவு பண்ணுங்க… நான் கிளம்புறேன்” என்று திரியைத் தூண்டும் பணியைச் சிறப்பாகச் செய்துவிட்டு அங்கிருந்து நடையைக் கட்டினாள்.

வழியில் சோர்ந்த முகத்துடன் அருள்மொழி எதிர்படவும் அவனை நோக்கி புன்னகையை வீசியவள் “சீக்கிரமே மீட் பண்ணுவோம் மிஸ்டர் அருள்மொழி” என்று பூடகமாக உரைத்துவிட்டு அவனது பதிலை எதிர்பாராமல் சென்றுவிட அருள்மொழி செல்பவளையே குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஆனால் வானதியின் பூடகப்பேச்சிற்கான அர்த்தம் அன்றைய இரவு கட்சி பொதுக்கூட்ட முடிவில் அவனுக்குத் தெரிந்து போனது. அதில் அவனை கட்சித்தலைமைக்கு பரிந்துரைத்த யாழினியை அதிர்ச்சியோடு பார்த்தவன் அவளது முன்மொழிதலை தொடர்ந்து எழுந்த வழிமொழிதல்களைக் கண்டு திகைப்பில் ஆழ்ந்தான்.
முணுமுணுத்த சில குரல்களையும் யாழினி அவளது பாணியில் சமாளித்தாள்.
“அருளுக்கு அரசியல் ஞானம் இல்லனா என்ன? அவனுக்குத் துணையா நான் இருக்கேன்… உங்களை மாதிரி மூத்த அரசியல்வாதிகள் இருக்கீங்க, போதாக்குறைக்கு சித்தப்பா இருக்குறார்… உங்களோட அரசியலறிவு அவனுக்கு ஆலோசனை குடுக்க போதாதா என்ன? நீங்க எல்லாருமா சேர்ந்து அவனை ஒரு நல்ல தலைவரா மாத்துவீங்கனு நான் நம்புறேன்… உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருக்குல்ல?” என்று முணுமுணுத்தவர்கள் வாயாலேயே அருள்மொழி தான் அடுத்த தலைவர் என சொல்ல வைத்தாள் சுந்தரமூர்த்தியின் மகள்.
பொதுக்கூட்ட முடிவை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டனர் சிலர். சிலரோ முணுமுணுப்புடன் வெளியேறினர். அதில் குழப்பத்துடன் இருந்தவன் அருள்மொழி மட்டுமே!
“நான் எப்பிடி பார்ட்டிக்குத் தலைமை தாங்குறது? அதுக்கான எந்த தகுதியும் எனக்கு இல்ல”
அகத்தியனிடம் முணுமுணுத்தவனை அமைதிப்படுத்தினான் அவன்.
“நீ கட்சியோட அடிப்படை உறுப்பினர் தானே… ஒவ்வொரு அடிப்படை உறுப்பினருக்கும் கட்சித்தலைமைக்கு வர்றதுக்கு அதிகாரம் இருக்கு அருள்”
“அப்போ மெம்பர்ஸ் வேற யாரையாச்சும் அனவுன்ஸ் பண்ணலாமே”
“அந்த வேற யாரோ ஒருத்தர் சுந்தரமூர்த்திக்குப் பிறந்தவரா இருந்தா கட்டாயம் அதை தான் யாழினி பண்ணிருப்பா”
“அது ஏன் யாழினிக்காவா இருக்கக்கூடாது மாமா?”
“இங்க ஒரு பொண்ணோட தலைமைல வேலை செய்ய சிலருக்கு ஈகோ ப்ராப்ளம் அருள்… யாழினி தலைமைப்பதவிக்கு வந்தா கட்சி உடையும்… நீ தலைவரா வர்றதுல ரெண்டு ப்ளஸ் பாயிண்ட்ஸ் இருக்கு… நம்பர் ஒன் நீ சுந்தரமூர்த்தியோட வாரிசு, சோ உங்கப்பாவோட விசுவாசிகளோட ஆதரவு காலத்துக்கும் கட்சிக்கு இருக்கும்… நம்பர் டூ, நீ ஒரு ஆண், சோ பொண்ணுக்குக் கீழ வேலை செய்யமாட்டோம்னு கட்சியை உடைக்க ப்ளான் பண்ணுறவங்களோட திட்டமும் குளோஸ்… ரொம்ப யோசிக்காத அருள்… யாழி எதையும் அவசரமா செய்ய மாட்டா… அவ உன்னை முன்மொழிஞ்சது தான் சரி”
அதே நேரம் கூட்டம் முடிந்து அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆதரவாளர்கள் சூழ நடுநாயகமாய் அமர்ந்திருந்த யாழினி இழந்த கம்பீரத்தை மீட்டெடுத்தவளாய்
“அருள்மொழி சுந்தரமூர்த்தியை ஏகமனதாய் எங்களுடைய தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறோம்… கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும் என்று சொல்வது போல சுந்தரமூர்த்தியின் மகனது அரசியலறிவை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம்… அவருக்குத் துணையாய் ஆலோசனை அளிக்க எங்கள் கட்சியின் மூத்த அரசியல்வாதிகள் காத்திருக்கின்றனர்… அரசியலில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டுமென வெற்றுக்கூச்சலிடுபவர்கள் அல்ல நாங்கள்.. அருள்மொழியைத் தலைவராக்கி அதற்கு பிள்ளையார் சுழி இட்டவர்கள் தான் எங்கள் கட்சியினர்… இனி கட்சிப்பணி தங்குத்தடையின்றி நடைபெறும்… நன்றி!” என்று கூறி கரம் குவித்தாள்.
அவளது முகத்தில் பழைய கம்பீரமும் நிமிர்வும் மீண்டிருந்தது. அதே நேரம் அவளுக்கு உறுதுணையாய் இருப்பதாக வாக்களித்த ராமமூர்த்தியின் முகம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கறுத்து சிறுத்துப் போனது.
இக்காட்சிகள் அனைத்தையும் செய்தி தொலைகாட்சியின் யூடியூப் சேனலில் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள் வானதி.
“கேம் ஸ்டார்ட்ஸ் நவ்” என்று உச்சரித்த அவளது உதடுகள் ஏளனச்சிரிப்பில் வளைய கரங்களும் முகமும் இறுகிப்போனது.
அவள் சொல்லும் விளையாட்டில் பகடைக்காயாய் ஆகப் போவது யாரென தெரிந்திருந்ததால் விதி செவ்வனே ஆட்டத்தின் போக்கை வேடிக்கை பார்க்கும் பார்வையாளனாய் காத்திருக்க ஆரம்பித்தது.
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction