“சூடுபட்ட பூனையா என்னை நானே கற்பனை பண்ணிக்கிறேன்… நான் எங்கப்பாவ எவ்ளோ ஆழமா நம்புனேனோ அதே அளவுக்குச் சரபனையும் நம்புனேன்… அந்த நம்பிக்கைக்குப் பாத்திரமா அவர் நடந்துக்கல… அவர் கிட்ட எனக்குக் கிடைச்ச ஏமாற்றத்தால இப்ப அவரோட மாற்றத்தை என்னால ஏத்துக்க முடியல… அக்காவோட பாசமா காதலானு வந்தப்ப அவர் தயங்காம அவங்க அக்காவோட பாசத்தை சூஸ் பண்ணுனார்… மறுபடியும் அவர் அதே போல செஞ்சிடுவாரோனு மனசோட ஓரத்துல ஒரு சின்ன சந்தேகம் இருக்கு… அந்த சந்தேகம் என்னை உறுத்திக்கிட்டு இருக்கு“
–சங்கவி
சரபேஸ்வரன் சங்கவிக்காக வாங்கிய முகப்பு செயினை தனது பெட்டிக்குள் மறைத்து வைத்தான்.
அலுவலகம் போனால் ஏழு நாட்களாக சங்கவி அமர்ந்திருந்த நாற்காலி அவளை ஞாபகப்படுத்தும்.
அதை ஏக்கத்துடன் பார்த்தபடியே வேலையைத் தொடருவான் சரபேஸ்வரன்.
முரளி அண்ட் அசோசியேட்சில் சங்கவியின் நிலையும் அதுவே.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
திருப்பதி மைன்சிலிருந்து வந்த பிறகு சரபேஸ்வரனின் நினைவுகள் அடிக்கடி அவளைத் தடுமாற செய்துகொண்டிருக்கின்றன.
அதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு வேலையைத் தொடர்வது எத்துணை சவாலாக இருந்ததென சங்கவி மட்டுமே அறிவாள்.
இப்படியே நான்கு நாட்கள் கழிந்தன. ஐந்தாம் நாளான சனிக்கிழமையன்று மாலை நான்கு மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பிவிட்டாள் அவள்.
அன்று புரட்டாசி மாத்தின் கடைசி சனிக்கிழமை என்பதால் ஆழியூர் சீனிவாசப் பெருமாள் கோவிலில் வழிபாடு செய்வது சிறப்பு என அழகுநாச்சி கூறியிருந்தார்.
வெள்ளிக்கிழமையே ஆடிட்டரிடம் அனுமதி வாங்கியிருந்தால் சீதாவிடம் சொல்லிக்கொண்டு கிளம்பினாள் சங்கவி.
பேருந்து நிலையத்தில் காத்திருந்தவளுக்குக் கோவிலில் வைத்து சரபேஸ்வரனைச் சந்திக்கப்போவது தெரியாது.
ஆம்! உமாவுக்கு உடல்நிலை சரியாகிவிட்டால் கடைசி புரட்டாசி சனிக்கிழமையில் நடைபெறும் பூஜைக்கான செலவை ஏற்றுக்கொள்வதாக வேண்டுதல் வைத்திருந்தார் குழலி.
உமாவின் தைராய்டு பிரச்சனை ஓயவில்லை என்றாலும் சற்று குறைந்திருந்தது.
எனவே வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக குடும்பத்தோடு ஆழியூருக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார் குழலி.
அவரும் சாரங்கபாணியும் மூர்த்தியின் காரில் உமாவோடு ஆழியூருக்குச் செல்வதாக ஏற்பாடு.
பள்ளி முடிந்ததும் ஆனந்தை அழைத்துக்கொண்டு சரபேஸ்வரன் பைக்கில் அங்கே வந்துவிடுவதாகக் கூறியிருந்தான்.
மூர்த்தியின் கார் சத்தம் வெளியே கேட்கவும் ஃப்ரிட்ஜில் பாலிதீன் கவருக்குள் பொதிந்து வைத்திருந்த மல்லிகை சரத்தை எடுத்துக்கொண்ட குழலி கணவரோடு வீட்டைப் பூட்டிவிட்டுக் கிளம்பினார்.
காரில் ஏறியதும் மகளிடம் மல்லிகை சரத்தை இரண்டாக கத்தரித்து நீட்டினார்.
உமா அதை தலையில் வைத்துக்கொள்ளவும் காரைக் கிளப்பினார் மூர்த்தி.
இனி உறவே வேண்டாமென உதறிவிட்டுச் சென்ற மகள் சமாதானமான மகிழ்ச்சி குழலிக்கு.
வியாழக்கிழமை மகளின் எண்ணுக்கு அழைத்துப் பேசியவர் அழுது மகளின் மனதைக் கரைத்தார்.
எப்படியோ சமாதானம் செய்து கோவிலுக்கும் வரவைத்துவிட்டார்.
“ஈஸ்வரன் ஏழு மணிக்குள்ள வந்துடுவானாம்மா?”
குழலியிடம் கேட்டார் உமா.
“ஆறரைக்கு வந்துடுவான் உமா”
“சீக்கிரம் வரணும்னு வண்டிய ஸ்பீடா ஓட்டக்கூடாது அவன்”
தம்பி மீதிருக்கும் அக்கறையில் கவலைப்பட்டார் உமா.
அவரது அக்கறையைக் கண்டு மனதுக்குள் பொருமினார் மூர்த்தி.
“அப்பிடியே அந்தப் பொண்ணு சங்கவி கோவிலுக்கு வந்துடக்கூடாதுனு வேண்டிக்க உமா… இல்லனா உன் தம்பிய கையில பிடிக்க முடியாது”
அவரது பேச்சில் உமாவின் முகம் தீவிரமாக குழலியோ கவலையில் ஆழ்ந்தார்.
மருமகனின் எண்ணத்தைக் கண்டுகொண்ட சாரங்கபாணிக்கு எரிச்சல் வந்துவிட்டது.
இந்த மனிதன் யாரையும் நிம்மதியாக இருக்கவிடமாட்டான் போல. மகன் மீது உமா அக்கறை கொண்டதும் அவளைக் கோபப்படுத்த முயல்கிறான்.
இவனது வாய்க்கு பூட்டு போட்டே ஆகவேண்டும்.
“மருமகனே! அந்த டியூசன் சென்டர் விவகாரம் என்னாச்சு? எஸ்.பி ஆபிஸ்ல என்ன சொன்னாங்க? பிரச்சனை எதுவும் இல்லயே?”
சாரங்கபாணி விசாரிக்க ஆரம்பிக்கவும் மூர்த்தியின் முகம் போன போக்கை பார்க்க வேண்டுமே!
அப்படியே வாயை மூடிக்கொண்டு காரை ஓட்டியவர் ஆழியூரை அடையும்வரை வாயைத் திறக்கவில்லை.
ஆழியூரை அடைந்ததும் பூர்வீக வீட்டுக்கு முன்னே வந்து இறங்கினர் நால்வரும்.
குழலி கதவைத் திறந்தார்.
“முருகன் கிட்ட வீட்டைச் சுத்தம் பண்ணி வைக்கச் சொன்னேன்… எவ்ளோ சுத்தமா இருக்கு பாரு… அவன் சம்சாரமும் பவித்ராவும் சுத்தபத்தமா வேலை பாக்குறதுல கில்லாடிங்க”
அம்மாவும் மகளும் பேசிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தனர்.
“ஆ! அம்மா”
என்னவென திரும்பிப் பார்த்தால் நிலைப்படியில் கால் இடித்து வலியோடு நின்றார் மூர்த்தி.
உமா பதறிப்போனார்.
கணவரின் காலில் நகம் பெயர்ந்து இரத்தம் வர உமாவுக்கோ அதைக் கண்டதும் இரத்தக்கண்ணீரே வந்துவிட்டது.
குழலி தண்ணீர் பாத்திரமும் காட்டன் துணியும் எடுத்து வர ஓடினார்.
“பாத்து வரக் கூடாதாங்க?”
ஆதங்கமாகக் கேட்ட உமாவிடம் மூர்த்தியால் பதில் சொல்ல முடியவில்லை.
பவித்ரா என்ற பெயரைக் கேட்டதும் கவனம் சிதறி இடித்துக்கொண்டேன் என்றா கூறமுடியும்?
குழலி தண்ணீர் மற்றும் காட்டன் துணியோடு வர உமா கணவருக்கு சிசுருஷைகளை ஆரம்பித்தார்.
சாரங்கபாணி மருமகனின் தடுமாற்றத்துக்கான காரணத்தை ஓரளவுக்கு ஊகித்தவர் அங்கே நிற்க அருவருத்தவராக வெளிப்புற திண்ணைக்குப் போய்விட்டார்.
திண்ணையில் காற்றாட அமர்ந்தவர் வெளிறிய முகத்தோடு தன் வீட்டை நோக்கி வரும் பவித்ராவைப் பார்த்தும் வாஞ்சையாய் தன்னிடம் வருமாறு அழைத்தார்.
அவள் கையில் எவர்சில்வர் பாத்திரமும் சில தம்ளர்களும் இருந்தன.
“உங்க எல்லாருக்கும் அம்மா காப்பி போட்டு குடுத்து விட்டுச்சு தாத்தா… ஆச்சி எங்க?”
சிறுமியின் கண்கள் பயத்தோடு வீட்டுக்குள் சென்று மீள்வதைக் கவனித்தவர் அவளிடமிருந்து பாத்திரத்தை வாங்கிக்கொண்டார்.
“ஆச்சி கிட்ட நான் குடுத்துடுறேன்”
இப்போது அவள் கண்களில் ஆசுவாசம் பரவியது. முகத்தின் வெளுப்பு மாறியது.
“நான் படிக்கணும்… வீட்டுக்குப் போறேன் தாத்தா”
“நல்லா படிக்கணும்… பெரிய வேலைல உக்காந்து அம்மா அப்பாவ கஷ்டப்படாம பாத்துக்கணும்”
ஆதுரமாகப் பேசி அவளை அனுப்பிவைத்த சாரங்கபாணிக்கு ஏனோ காபி சுவைக்கவில்லை.
மனதில் இருந்த ஊகங்கள் ஒன்றோடு ஒன்று கரம் கோர்த்து ஓராண்டுக்கு முன்னர் நடந்த சம்பவத்தின் உண்மைத்தன்மையை ஊர்ஜிதமாக்கவே, மனிதர் கலங்கிப் பேய்விட்டார்.
வீட்டுக்குள் போக மனமின்றி திண்ணையிலிருந்தவாறே மனைவியை அழைத்து காபியைக் கொடுத்தார்.
சிறிது நேரத்தில் ஆனந்துடன் திரும்பி வந்த சரபேஸ்வரன் குளித்து வேறு உடை அணிந்து வந்து திண்ணையில் அமர்ந்ததும் மனதை அழுத்திய பாரத்தை இறக்கி வைத்தார் சாரங்கபாணி.
“பவித்ரா பேரை கேட்டதும் அந்த மனுசன் தடுமாறுறான்… அந்தப் பிள்ளை நம்ம வீட்டுக்குள்ள போக பயப்படுறா… எல்லாத்தையும் யோசிச்சா ரொம்ப அவமானமா இருக்குயா ஈஸ்வரா… நம்ம சங்கவிக்கு அநியாயம் பண்ணிட்டோம்… ஒரு பொண்ணு வாழ்க்கைல விளையாடிட்டோம்யா”
கண்கள் கலங்க தந்தை கூறியதும் சரபேஸ்வரனும் கலங்கிப் போனான்.
“அக்கா வாழ்க்கையும் இந்தாளால நாசமாகுதுப்பா… நம்ம சொன்னாலும் அவ நம்ப மாட்டா… அந்தளவுக்கு அக்காவ அவன் கண்ட்ரோல்ல வச்சிருக்கான்”
தந்தையும் மகனும் கொலுசு சத்தம் கேட்டதும் அமைதியானார்கள்.
குழலியும் உமாவும் ஆனந்தோடு வந்தார்கள்.
“மாப்பிள்ளைக்குக் கால் வலிக்குதாம்… கோவிலுக்கு வரலனு சொல்லுறாருங்க”
“பெருமாள் மனசு வச்சா மட்டும் தான் அவரோட தரிசனம் கிடைக்கும்”
சாரங்கபாணி கேலியாகக் கூறவும் உமா கணவருக்குப் பரிந்துகொண்டு வந்தார்.
“நகம் பேர்ந்துடுச்சுப்பா… பாவம், அவருக்கு வலிக்கும்ல”
“இந்த உலகத்துல யாரும் பாவம் இல்லம்மா”
அறிவுரை போல சொல்லிவிட்டு மைந்தன் மற்றும் பேரனோடு ஆழியூர் மலை மீது இருக்கும் பெருமாளை தரிசனம் செய்ய கிளம்பினார் சாரங்கபாணி.
ஆதிசேஷனே அங்கு மலையாக இருப்பதாக புராண வரலாறு. சிறு குன்றின் மீது படிகட்டுகள் ஏறுவதற்கு வசதியாக இருந்தன.
அன்று கருடசேவை இருப்பதால் கூட்டம் அள்ளியது கோவிலில்.
சாரங்கபாணி மனைவி மக்களோடு கோவிலை அடைந்தவர் பெருமாள் சன்னதியில் திரை போட்டிருக்கவும் கோவில் அதிகாரிகளிடம் பேசப்போய்விட்டார்.
ஆனந்துடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தபோது தான் அழகுநாச்சியோடு நடந்து வந்து கொண்டிருந்த சங்கவியைச் சரபேஸ்வரன் காண நேர்ந்தது.
மனம் குளத்தில் விட்ட மீனாய் உற்சாகத்தில் துள்ளியது.
கத்தரிப்பூ வண்ண காட்டன் சில்க் புடவையை பாந்தமாக அணிந்து கூந்தலில் மல்லிகை சரத்தை வைத்திருந்த சங்கவியை அவனது விழிகள் இமைக்க மறந்து பார்த்தன.
ஆனந்த் சும்மா நிற்காமல் “அத்தை” என அவளை உரக்க அழைத்து விட சங்கவியும் அழகுநாச்சியும் நின்றனர்.
“நல்லா இருக்கிங்களா தம்பி?” சரபேஸ்வரனிடம் சம்பிரதாய
மாக விசாரித்தார் அழகுநாச்சி.
“நல்லா இருக்கேன் அத்தை… பெருமாளை கும்பிட வந்திங்களா?”
கோவிலுக்கு எதற்கு வருவார்கள்? இவன் சம்பந்தமில்லாமல் பேசுகிறானே என எண்ணியவாறே ஆனந்திடம் கால்வலி பற்றி கேட்டாள் சங்கவி.
“சரியாகிடுச்சு அத்தை”
“சரிடா… நடந்து நடந்து எங்கம்மாக்குக் கால் வலிக்குதாம்… நாங்க எங்க ஊர் லேடீஸ் கூட போய் உக்காந்துக்கிறோம்”
சங்கவி மெதுவாக நழுவ அந்நேரத்தில் உமாவின் குரல் கேட்டது.
“பெருமாளோட மோகினி அவதாரத்துல சிவனே மயங்குனாராம்… இங்க என் தம்பி ஈஸ்வரன் நிலமையும் அது தான் போலயே”
நக்கலாகப் பேசியவாறு வந்து நின்றார் அவர்.
அழகுநாச்சியும் சங்கவியும் அங்கிருந்து நகர எத்தனித்தனர்.
“ஒரே ஒரு வித்தியாசம்… பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார்… ஆனா இங்க ஒரு மோகினி பிசாசுல்ல அவதாரம் எடுத்து வந்து என் தம்பி வாழ்க்கைய நாசமாக்க துடிக்குது”
“அக்கா”
பற்களைக் கடித்து கோபத்தைக் கட்டுப்படுத்த சரபேஸ்வரன் முயன்றான்.
அவரது கேலிப்பேச்சில் சங்கவிக்கு சுரீரென கோபம் வர “நீ போய் அவங்க கூட உக்காரும்மா… நான் இப்ப வர்றேன்” என அழகுநாச்சியை அனுப்பி வைத்தவள் உமாவை நெருங்கி நின்றாள்.
வந்தவளை அவர் துவேசமாகப் பார்த்தார்.
“உங்களுக்கு என்ன தான் பிரச்சனை?”
“நீ தான்டி பிரச்சனை… ஏன் என் தம்பியவே சுத்தி சுத்தி வர்ற? ஊருல வேற ஆம்பளையா இல்ல? எவனும் உன்னைக் கல்யாணம் பண்ணமாட்டேன்னு சொல்லிட்டானா? எப்பிடி கல்யாணம் நடக்கும்? பெரியவங்களை மதிக்காம தான்தோன்றித்தனமா நடந்துக்குற அடங்காப்பிடாரிய எவன் கல்யாணம் பண்ணுவான்? நீ வீட்டுக்கு மருமகளா வர்றதுக்கு முன்னாடி குடும்பத்தைப் பிரிக்கிறவளாச்சே… நீயும் ஒரு ஆள்னு உன் கிட்ட நின்னு பேசுறேன் பாரு என்னைச் சொல்லணும்”
சங்கவி சரபேஸ்வரனை முறைக்கவும் அவன் தமக்கையை அமைதியாக இருக்கும்படி கூறினான்.
“உனக்கு என்னாச்சு ஈஸ்வரா? இவ உன் மாமா மேல கேவலமா ஒரு பழிய போட்டானு நிச்சயதார்த்தத்தை முறிச்சவன் நீ… இப்ப என்ன மந்திரம் போட்டு உன்னை மாத்திருக்கா இவ? இவளுக்கு வேற வரன் எதுவும் அமையலனு உனக்கு மறுபடி வலை விரிச்சிருக்காளா?”
“அவ ஒன்னும் என் பின்னாடி சுத்தலக்கா… நான் தான் அவ மனசை மாத்தணும்னு போராடுறேன்… நீ தயவு பண்ணி கிளம்பு… எல்லாரும் வேடிக்கை பாக்காங்க”
சுற்றி நடமாடியவர்களைக் காட்டி அமைதி காக்குமாறு வேண்டிக்கொண்டான் சரபேஸ்வரன்.
“பாத்தா பாக்கட்டும்… இவ யோக்கியதை எல்லாருக்கும் தெரியட்டும்… வெக்கங்கெட்டு உன்னை மயக்க பாக்குற கதை ஊருக்குத் தெரியட்டும் ஈஸ்வரா”
மோகினி பிசாசு! வெட்கம் கெட்டவள்! ஆள்மயக்கி!
அமைதியாகப் பேசி பிரச்சனைகளை முடிவுக்குக் கொண்டுவரலாமென நினைத்தவளை உமாவின் நாகரிகமற்ற வார்த்தைகள் கோபம் கொள்ள வைத்தன.
சரபேஸ்வரன் எங்கே தன்னை மணமுடித்து விடுவானோ என இந்தப் பெண்மணிக்குப் பயம்.
தன்னை அவமானப்படுத்தும் இவருக்கு அந்தப் பயத்தை நிரந்தர தண்டனையாகக் கொடுத்தால் என்ன?
“இன்னொரு வார்த்தை கவியை பத்தி பேசுனா நான் மனுசனா இருக்கமாட்டேன்”
தனக்காக சீறுகிற சரபேஸ்வரன், செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்ட சரபேஸ்வரன், மீண்டும் தன் காதல் கைகூடுமென்ற நம்பிக்கையில் தாலி செயின் வாங்கிய சரபேஸ்வரன்!
எந்தக் கோணத்தில் பார்த்தாலும் அவன் மாறிவிட்டான் என்பது புரிந்தது சங்கவிக்கு.
தன்னை அவதூறாகப் பேசிய உமாவுக்குப் பயத்தையே தண்டனையாக வழங்க முடிவெடுத்தாள் சங்கவி.
“உங்க கூட தனியா பேசணும் சரபன்… வர்றிங்களா?”
இந்தக் கேள்வியில் சரபேஸ்வரனின் மனம் குளிர்ந்து போனது.
அதே குளிர்ச்சியை வானம் தூறல்களை தெளித்து பூமிக்கு அளிக்க உமாவின் இண்கள் சங்கவியோடு கிளம்பத் தயாரான தம்பியை அதிர்ச்சியாகப் பார்த்தன.
“ஈஸ்வரா போகாதடா”
அவரது வார்த்தையைக் காதில் போட்டுக்கொள்ளாமல் சங்கவியோடு கிளம்பினான் சரபேஸ்வரன்.
“நான் வீட்டுக்குப் போகணும்னு நினைக்குறேன் சரபன்… அம்மாக்குக் கால் பண்ணி சொல்லிடுறேன்”
அவனிடம் கூறிவிட்டு அழகுநாச்சியின் எண்ணுக்கு அழைத்து வீட்டுக்குக் கிளம்பும் தகவலைக் கூறினாள் சங்கவி.
பேசிவிட்டுச் சரபேஸ்வரனைப் பார்த்தாள்.
“ஏதோ பேசணும்னு சொன்னியே கவி?”
எதிர்பார்ப்போடு கேட்டான் அவன்.
“பஸ்ல உக்காந்து பேசலாமா?”
குன்றிலிருந்து கீழே தெரிந்த சமதளத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தைக் காட்டி கேட்டாள் சங்கவி.
தூறலில் நனைந்தவாறு இருவரும் படியிறங்கி, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தில் ஏறி அமர வெளியே மழை பெய்ய ஆரம்பித்தது.
பேருந்து கிளம்ப இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்றார் நடத்துனர்.
அவர் முன்னே ஓட்டுனர் அருகே போய் அமர்ந்தார்.
சங்கவி ஜன்னலின் குறுக்கே இருந்த கம்பிகளில் முத்து முத்தாய் கோர்த்து வடியும் மழைநீரைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது இடப்பக்க தோள் சரபேஸ்வரனின் வெம்மையான புஜத்தில் உரசிக்கொண்டிருந்தது.
கம்பிகளில் சொட்டும் நீரோடு விளையாடியவாறே “நீங்க வாங்குன முகப்பு செயின் டிசைன் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்துச்சு… நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா சரபன்?” என அவள் நிதானமாகக் கேட்கவும் சரபேஸ்வரனுக்குள் பூத்தூறலாய் சந்தோசம்!
அடுத்த நொடி முகப்பு செயினுக்காக கல்யாணமா என திகைத்தது அவனது மனம்.
“கவி…”
ஆரம்பித்தவனைப் பேச விடவில்லை அவள்.
“இந்த மாதிரி ஒரு மழை நாள்ல தான் நம்ம முதல் சந்திப்பு நடந்துச்சு… ஞாபகம் இருக்கா?”
கன்னத்தை உள்ளங்கையால் தாங்கி கேட்டாள்.
சரபேஸ்வரனின் இதழ்கள் மென்மையாய் புன்னகைத்தன.
“உன்னை வெறுத்தப்ப கூட நான் அந்த நாளை மறக்கல கவி”
கண்கள் மலர அவன் கூறிய விதமே நான் உன்னை அந்தளவுக்கு ஆழமாகக் காதலிக்கிறேனடி என்பதைச் சொல்லிவிட்டது.
அந்தளவு காதல் தன்னிடம் இல்லை என உறுதியாய் தெரிந்தும் தன்னை அவமானப்படுத்தி தன் பெற்றோரை கலங்கடித்த உமாவை ஆட்டிப் படைக்க கிடைத்த வாய்ப்பாகச் சரபேஸ்வரனிடம் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து விட்டாளே அவள்!
வெளியே பெய்து கொண்டிருந்த மழையும் அந்தப் பேருந்தும் காதலில் உருகிப்போன சரபேஸ்வரனையும், அவன் மீதான காதலை வெளிப்படுத்த தயங்கும் சங்கவியையும் நான்காண்டுகளுக்கு முந்தைய நினைவு வெள்ளத்தில் ஆழ்த்தின.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

