“காதல் என்னல்லாம் செய்யும்? அக்கவுண்ட்சும் டேக்சும் கதினு கிடந்தவனை கவிதை எழுத வைக்கும்… எகனாமிக்ஸை ரசிச்சவனை காதலிய ரசிக்க வைக்கும்… காஸ்ட் அக்கவுண்ட் லேபர் காஸ்ட் பத்தி புரியாம தலைய பிச்சுக்கிட்டவனை நம்ம லவ்வ அந்தப் பொண்ணு அக்சப்ட் பண்ணுவாளா இல்லயாங்கிற குழப்பத்தோட சுத்த வைக்கும்… சொந்தக்காரங்க வீட்டு பங்சனுக்குப் போனா ஒருநாள் க்ளாஸ் கட் ஆகும்னு யோசிச்சவனை வேலண்டைன்ஸ் டே எப்பிடி கொண்டாடலாம்னு ப்ளான் போட வைக்கும்… மொத்தத்துல காதல் ஒரு மனுசனை தலைகீழா மாத்திடும்… அதுக்கு நான் உதாரணம்“
–சரபேஸ்வரன்
“இந்த புக்கு எல்லாமே படிச்சிட்டேன்… இந்த வாரம் மாத்திடு கவி… புக்கு இல்லாம எனக்கு நேரம் போகாது”
அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்த சங்கவியிடம் கூறியபடி அவளது ஹேண்ட்பேக்கில் டிபன் பாக்சை வைத்தார் அழகுநாச்சி.
“கண்டிப்பா மாத்தி தர்றேன்… பேசாம நீயும் என்னை மாதிரி ஆன்லைன் ரீடிங்குக்கு மாறிடேன்… லைப்ரரிக்குப் போற வேலை எனக்கு மிச்சம்”
ஹேண்ட்பேக்கை வாங்கிக்கொண்டு சொன்னாள் அவள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“எனக்கு அதுல்லாம் சரிபட்டு வராது… லைப்ரரி புக்குல கிடைக்குற வாசிப்பு அனுபவத்துக்கு நான் அடிமை ஆகிட்டேன் கவி… உன்னை மாதிரி சின்னப்பிள்ளைங்களுக்கு தான் போன்ல கதை படிக்க நல்லா இருக்கும்”
சில பழக்கங்களை மாற்றவே முடியாது. அதில் ஒன்று அழகுநாச்சியின் தமிழ் நாவல் படிக்கும் பழக்கம்.
அவரது தூரத்து உறவு அத்தை ஒருவர் ஏகப்பட்ட தமிழ் நாவல்களை சேகரித்து வைத்திருந்தார்.
அழகுநாச்சியின் கதை படிக்கும் ஆர்வம் பற்றி தெரிந்ததும் தனது அத்தனை வருட புத்தகச் சேகரிப்பை மூட்டையாகக் கட்டிக் கொடுத்துவிட்டார்.
“இந்த புக் எல்லாத்தையும் நீயே வச்சுக்க அழகு… உன் காலத்துக்கு அப்புறம் லைப்ரரிக்குக் குடுத்துடு” என பொறுப்பை அழகுநாச்சியிடம் ஒப்படைத்துவிட்டார் அப்பெண்மணி.
பிரதாப முதலியார் சரித்திரத்தில் ஆரம்பித்து மாத நாவல்கள் வரை அதில் அடக்கம்.
சங்கவி நூலகத்தில் புத்தகங்களை எடுக்க தாமதமாகும்போது அழகுநாச்சி அந்தப் புத்தகச் சேகரிப்பை சரணடைந்துவிடுவார்.
“படிச்ச புக்கை மறுபடி படிக்க உனக்குப் போரடிக்கலயாம்மா?”
“தினமும் பாக்குற அம்மா தான… நான் உனக்குப் போரடிச்சா போயிட்டேன்?”
“நீ என்னோட அம்மா… நம்ம உறவும் புக்கும் ஒன்னாம்மா?”
“நம்ம உறவு ஆத்மார்த்தமானது கவி… எனக்கும் புக்குக்குமான உறவும் அப்பிடி தான்”
இப்படி வாதிடுபவரை எவ்வாறு டிஜிட்டல் எழுத்துலகத்திற்குள் சங்கவியால் அழைத்துச்செல்ல முடியும்?
அன்னையிடம் விடைபெற்று கிளம்பியவள் பேருந்தில் ஏறினாள்.
முந்தையநாள் மாலையில் பவித்ராவிடம் பேசியதாக சரபேஸ்வரன் சொன்னதிலிருந்து அவள் மனதில் ஏகத்துக்கும் ஆதங்கம் நிரம்பியிருந்தது.
அந்த ஆதங்கத்தின் அடிப்படை கடந்த காலத்தில் அவளுக்கு நேர்ந்த இழப்புகள்! அதை அழகுநாச்சியிடம் மறைத்து இயல்பாகக் காட்டிக்கொண்டவளுக்குள் இன்னும் அந்த ஆதங்கம் வீரியம் இழக்காமல் விழித்துக் கொண்டு தான் இருந்தது.
பேருந்து ரங்கநல்லூரை அடைந்ததும் சங்கவிக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது.
கூட்டம் அவ்வளவாக இல்லை என்றாலும் அனைத்து இருக்கைகளும் நிரம்பி பயணிகளின் பேச்சுக்குரல் கேட்க மெல்ல மெல்ல தற்போதைய சூழலுக்குள் இழுக்கப்பட்டாள் சங்கவி.
சூரியன் எஃப்.எம்மில் அனிருத் உபயத்தால் ஒலித்த ‘காவாலா’ பாடல் பேருந்தை அதிரவைத்துக் கொண்டிருந்தது.
கல்லூரி மாணவர்கள் அதை ரசித்தாலும் நடுத்தர வயதினர் எரிச்சலுறுவதைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது.
தனியார் பேருந்துகளில் ஒலிக்கும் அதிர வைக்கும் பாடல்களுக்காகவே ஏறும் கூட்டம் ஒன்று இருக்கிறதே!
பேருந்து ஓட்டுனரும் இளைஞன் தான். கேட்கவா வேண்டும்!
“எப்பா டிரைவரு அந்தப் பாட்டை அமத்தி (ஆஃப் செய்வது) போடுய்யா… செவிட்டுல அறையுற மாதிரி இருக்கு”
பெண்களின் முறையீட்டைச் சிரிப்போடு பார்த்தபடி தங்களுக்குள் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டனர் கல்லூரி மாணவிகள்.
அவர்களின் பார்வை அடிக்கடி படிக்கட்டு பக்கம் போனது.
அங்கே தொங்கியவாறு பயணித்த மாணவர்கள் பக்கம் சென்று மீண்டது.
அதை பார்த்ததும் அவளுடைய கல்லூரி நாட்கள் நினைவுக்கு வந்துவிட்டது சங்கவிக்கு.
கிட்டத்தட்ட நான்காண்டுகளுக்கு முன்னர் அவள் இளங்கலை வணிகவியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தபோது பேருந்து பயணத்தில் சரபேஸ்வரனைச் சந்தித்தாள்.
“டிக்கெட் டிக்கெட்”
நடத்துனரின் குரலில் பழைய நினைவுகள் மேகங்களாய் கலைந்தன.
பயணச்சீட்டை வாங்கிக்கொண்டவள் காலையிலிருந்து தொடாத மொபைலைத் தீண்டி ஜென்மசாபல்யம் கொடுத்தாள்.
தொடுதிரை ஒளிர்ந்ததுமே இரண்டு துண்டிக்கப்பட்ட அழைப்புகளுக்கான நோட்டிபிகேசன் பார்வைக்குக் கிடைத்தது.
அழைத்திருந்தவன் சரபேஸ்வரன்.
எதற்கு அழைத்திருப்பான்? நேற்று மாலை அழைத்தோமே, அந்த கால் லாகில் அவன் அறியாமல் கைபட்டு அழைப்பு வந்திருக்குமோ?
ஒருமுறை என்றால் அப்படி நினைக்கலாம். ஆனால் இருமுறை அழைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கிறதே!
கேள்விகளின் பிடியில் சிக்கித் தவித்தவள் திருப்பதி மைன்ஸ் அலுவலகத்திற்குள் நுழைந்ததும் வேல்ராஜ் எதிர்பட்டான்.
“வாங்க மேடம்… நீங்க வந்ததும் மேனேஜர் சார் அவரைப் பாக்க வரச் சொன்னார்”
அப்படி என்றால் அலுவல்ரீதியான அழைப்பு தான் சரபேஸ்வரனிடமிருந்து வந்திருக்கிறது போல. வழக்கம் போல மொபைலை சைலண்டில் போட்டுவிட்டதால் அழைப்பு வந்ததே தெரியவில்லை.
கேபின் கதவைத் தட்டிவிட்டு உள்ளே சென்றவள் சரபேஸ்வரனிடம் காலை வணக்கம் கூறிவிட்டு அவன் பேசட்டுமென காத்திருந்தாள்.
“மானிங் கால் பண்ணுனேன்… நீ அட்டண்ட் பண்ணல”
“மொபைல் சைலண்ட்ல இருந்துச்சு… பஸ்ல வர்றப்ப பாத்தேன்… ரெண்டு மிஸ்ட் கால் இருந்துச்சு”
“அப்பவே கால் பண்ணி என்னனு கேட்டிருக்கலாமே?”
“அபிஷியலா கால் பண்ணிருப்பிங்க… ஆபிசுக்கு வந்து கேட்டுக்கலாம்னு இருந்துட்டேன்”
“நான் அபிஷியலா கால் பண்ணல… கொஞ்சம் பெர்ஷனலா பேசணும்னு நினைச்சேன்… இன்னைக்கு இந்த ஆபிஸ்ல உனக்கு கடைசி நாள்… ஈவ்னிங் நம்ம வெளிய போகலாமா?”
சரபேஸ்வரன் தயக்கமின்றி கேட்டதும் புருவம் உயர்த்தினாள் சங்கவி.
“நேத்து ஈவ்னிங் நீ சொன்ன வார்த்தைகளை என்னால மறைக்க முடியல கவி… நான் தப்பு பண்ணிருக்கேன்… அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கிறேன்… உன் கிட்ட மனசு விட்டுப் பேசணும் கவி… ப்ளீஸ் வரமாட்டேன்னு சொல்லிடாத”
தன்னை முந்தைய நாள் மாலையிலிருந்து ஒருவித அமைதியின்மை வாட்டி வதைத்துக் கொண்டிருப்பதை சங்கவியாலும் உணர முடிந்தது. எனவே சரபேஸ்வரனோடு தனியே செல்வதற்கு சம்மதித்தாள்.
“ரொம்ப நேரம் என்னால உங்க கூட இருக்க முடியாது சரபன்… அம்மா கொஞ்சம் லேட் ஆனாலும் பதறிடுவாங்க… ஏழு மணிக்காச்சும் நான் பஸ் ஏறணும்”
“ரொம்ப நேரம் ஆகாது கவி… சீக்கிரம் வீட்டுக்குப் போயிடலாம்”
சரபேஸ்வரன் உறுதியளிக்கவும் சம்மதமாகத் தலையாட்டிவிட்டுக் கேபினிலிருந்து வெளியேறினாள் சங்கவி.
அன்றையதினம் அதிகம் வேலை இல்லை. மேலாளர் சந்தானம் வந்தார். பேச்சுவாக்கில் ஏழு நாட்கள் தங்கள் நிறுவனத்திற்கு வந்ததற்கு ஊதியம் உண்டு என விளையாட்டு போல சங்கவியிடம் கூறிவிட்டுப் போனார்.
மாலை ஆனதும் அவளது மொபைலில் வங்கியிலிருந்து செய்தி வந்தது.
அவளது கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி கூறவும் தான் சந்தானம் ஒன்றும் பேச்சுக்குச் சொல்லவில்லை என்பது புரிந்தது.
கிளம்பியபோது வேல்ராஜ் அவளுக்கு நன்றி கூறினான்.
“எப்ப என்ன டவுட் வந்தாலும் தயங்காம கால் பண்ணுங்க தம்பி”
“சரிக்கா… உங்க கிட்ட ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டிங்களே?”
“கேளுங்க தம்பி”
“நீங்களும் அக்கவுண்ட்ஸ் மேனேஜர் ஈஸ்வரன் சாரும் மேரேஜ் பண்ணிக்கப்போறிங்களா?”
இது என்ன புதுக்கதை என்பது போல பார்த்தாள் சங்கவி.
“அப்பிடினு யார் சொன்னாங்க?”
“ரஞ்சிதா மேடம் சொன்னாங்க”
ரஞ்சிதா அந்த அலுவலகத்தில் ‘பெட்டி கேஷ்’ சம்பந்தப்பட்ட கணக்கை கவனிப்பவர்.
வேல்ராஜின் கண்களில் ஆர்வம் தெரிந்தது.
“அப்பிடில்லாம் இல்ல தம்பி… அவங்க சும்மா விளையாட்டுக்குச் சொல்லிருப்பாங்க”
அவனைச் சமாளித்த சங்கவி அடுத்த பத்து நிமிடத்தில் சரபேஸ்வரனின் பல்சரில் ஏறுவதைப் பார்த்தனர் ரஞ்சிதாவும் வேல்ராஜும்.
“நான் தான் சொன்னேன்ல, அந்தப் பொண்ணு நம்ம ஈஸ்வரன் சாருக்கு நிச்சயம் பண்ணுன பொண்ணு… நீ நம்புனியா? இப்ப பாரு, ஜோடியா பைக்ல போறாங்க ரெண்டு பேரும்”
“உங்களுக்கு எப்பிடி தெரியும்?”
வேல்ராஜ் சந்தேகமாகக் கேட்டான்.
“போன வருசம் அவங்களுக்கு நிச்சயதார்த்தம் ஆனப்ப எடுத்த போட்டோவ சாரோட ஃபேஸ்புக் போஸ்டுல பாத்தேன்… அதுல இருந்தது சங்கவியே தான்”
ஆம்! ரஞ்சிதா சொன்னது உண்மையே! சரபேஸ்வரனுக்கும் சங்கவிக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமண பேச்சுவார்த்தையும் நிச்சயமும் முடிந்திருந்தது.
ஆனால் திருமணம் தான் சிலரின் சதியாலும் சரபேஸ்வரனின் குருட்டுத்தனமான பாசத்தாலும் நின்று போனது.
அதன் விளைவாக அவர்களுக்குள் இருந்த காதலும் முறிந்து போனது.
இழந்த காதலை மீண்டும் பெறும் முயற்சியில் இறங்கியிருந்த சரபேஸ்வரன் சங்கவியை அழைத்துக்கொண்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ‘சரவணா ஸ்டோர் & தங்க நகை மாளிகைக்கு’ சென்று கொண்டிருந்தான்.
நெல்லை ஜங்சன் சுற்றுவட்டார பகுதியில் மூர்த்தியின் நடமாட்டம் அதிகமிருக்கும். இதுவும் அவளை அங்கே அழைத்துச் செல்லக் காரணம்.
இன்னொரு பிரத்தியேகக் காரணமும் உள்ளது. அதை சரபேஸ்வரன் மட்டுமே அறிவான்.
பைக்கை தரிப்பிடத்தில் நிறுத்திவிட்டு இருவரும் நுழைந்த இடம் தங்க நகை பகுதி.
சங்கவியை அழைத்துக்கொண்டு தாலி செயினுக்கான பகுதிக்குச் சென்றவன் “முகப்பு செயின் எடுத்துக் காட்டுங்க” என கட்டளையிட்டான்.
விற்பனைப்பெண் ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினார்.
“இது நாலு பவுனும் முன்னூறு மில்லியும் வரும்”
“கம்மியா இருக்கு.. வேற காட்டுங்க”
அவன் சொல்வதைக் கேட்டு மனதுக்குள் பிரமித்தாள் சங்கவி.
நான்கு சவரன் இவனுக்குக் குறைவாம்! பணம் இருக்கிறதல்லவா! பின்னர் குறைவாகத் தானே தெரியும்!
சங்கவி தனக்கும் அங்கே நடப்பதற்கும் சம்பந்தமில்லை என்பது போல காட்டிக்கொண்டாலும் யாருக்கு முகப்பு செயின் வாங்குகிறான் என்ற கேள்வி அவளுக்கும் இருந்தது.
“இந்த மயில் முகப்பு பாருங்க சார்”
“இதுல்லாம் ஓல்ட் பேஷன்… இப்ப ட்ரெண்ட்ல உள்ளதை காட்டுங்க… நீ ஏன் நிக்குற கவி? உக்காரு”
விற்பனைப்பெண்ணிடம் பேசிக்கொண்டே சுவாதீனமாக சங்கவியின் கையைப் பிடித்து அவனருகில் கிடந்த இருக்கையில் அமரச் செய்தான் சரபேஸ்வரன்.
பொது இடத்தில் தங்கள் பிரச்சனையைக் காட்டிக்கொள்ள மனமின்றி சங்கவியும் அமைதியாய் அமர்ந்தாள்.
இறுதியாக அப்படியும் இப்படியுமாக விற்பனைப்பெண்ணை அலைக்கழித்து ஐந்தரை சவரனில் ஒரு முகப்பு செயினை வாங்கிக்கொண்டான் சரபேஸ்வரன்.
கட்டணம் செலுத்துவதற்காக அவன் கிளம்பியதும் விற்பனைப்பெண் சங்கவியிடம் தங்கள் கடையில் நகைச்சீட்டு போடுகிறீர்களா என பேச்சு கொடுத்தார்.
“இல்லங்க… இப்போதைக்கு அந்த ஐடியா இல்ல” மறுத்தாள் சங்கவி.
“கடைசி மாச தவணை நீங்க கட்டவேண்டாம்… சார் தாலி செயினே அஞ்சரை பவுன்ல வாங்கிக் குடுக்காங்க… சீட்டு போடுறதுக்கு வேண்டாம்னா சொல்லப்போறாங்க? தங்கம் மாதிரி பெஸ்ட் முதலீடு எதுவும் இல்ல மேடம்”
விற்பனைப்பெண்ணிடம் இருந்து இலாவகமாகத் தப்பித்து பணம் செலுத்தும் கவுண்டரில் நின்று கொண்டிருந்த சரபேஸ்வரனிடம் சென்றாள் சங்கவி.
அங்கே பணம் செலுத்திவிட்டு “ஜுவல் இங்கயே இருக்கட்டும்… நாங்க ஃபுட் கோர்ட்டுக்குப் போயிட்டு வந்து வாங்கிக்கிறோம்” என்றவன் சங்கவியை லிப்டுக்கு வரும்படி அழைத்தான்.
மின்தூக்கியைப் பார்த்ததும் சங்கவிக்குப் பழைய ஞாபகங்கள் வரவே, அவள் மறுத்தாள்.
“நீங்க போங்க… நான் படி வழியா வர்றேன்”
“ப்ச்… வா கவி”
வெகு உரிமையாகக் கையைப் பிடித்து இழுத்துப் போய் மின்தூக்கிக்குள் நுழைந்தான் சரபேஸ்வரன்.
இருவரும் உள்ளே வந்த போதே கூட்டம் முண்டியடித்துக் கொண்டு நுழைந்தது.
சங்கவி மீது யாரும் இடித்துவிடாமல் அவளை ஓரத்தில் நிறுத்தி அரண் போல நின்று கொண்டான் சரபேஸ்வரன்.
அவளுக்கு முன்னே இருப்பவர்கள் சாய்ந்துவிடக்கூடாதென கையை பக்கவாட்டில் ஊன்றி நின்றவனை ஏனையோர் வினோதமாகப் பார்த்தனர்.
சங்கவி இன்னும் இவன் மாறவில்லை என நெற்றியில் சலிப்பாகத் தட்டிக்கொண்டாள்.
ஃபுட்கோர்ட் வந்ததும் வெளியேறிய நேரத்தில் கூட பாதுகாவலர்களைப் போல அவன் நடந்துகொள்ள சங்கவி கடுப்பாய் அவனை முறைத்தாள்.
“என்னை யாரும் தூக்கிட்டுப் போயிடமாட்டாங்க சரபன்”
“பழகிப்போச்சு கவி”
அப்பாவி போல சொன்னவன் ஃபுட்கோர்ட்டை அடைந்ததும் அவள் அமர்வதற்கு நாற்காலியை இழுத்துப் போட்டான்.
“என்ன சாப்பிடுற?”
“மறந்து போச்சா?”
சாதாரணமாகத் தான் கேட்டாள் அவள்.
“டீ தான? வாங்கிட்டு வர்றேன்”
இருவருக்கும் அவன் தேநீர் வாங்கிக்கொண்டு வரும் வரை முகப்புத்தகத்தில் உலாவியவள் ஒரு ‘ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட்’ வந்திருக்கவும் யாரென பார்த்தாள்.
‘எஸ்.பி சரபேஸ்வரன்’
அதை டெலீட் செய்துவிடலாமா என கை பரபரத்தது. ஆனால் சரபேஸ்வரன் தேநீருடன் வந்து விடவே அமைதியாகிவிட்டாள்.
தேநீரையும் காகித தட்டில் இருந்த சமோசாவையும் அவள் பக்கம் நகர்த்தினான்.
சங்கவி தேநீரை அருந்தி சமோசாவையும் காலி செய்த பிறகு “முகப்பு செயின் பிடிச்சிருக்கா?” என வினவினான்.
“அதை ஏன் என் கிட்ட கேக்கிறிங்க?”
“கழுத்துல போட்டுக்கப்போறவ நீ தான?”
“அவ்ளோ நம்பிக்கையா உங்களுக்கு?”
“ஏன் நம்பக்கூடாதா?”
“அது உங்க இஷ்டம்… ஆனா உங்களை இன்னொரு தடவை நான் நம்புறதா இல்ல”
நிர்தாட்சணியமாக தனது மறுப்பைப் பதிவு செய்தாள் சங்கவி.
“எனக்கு மூர்த்தியோட சுயரூபம் தெரிஞ்சு ஆறு மாசம் ஆகுது கவி”
“ஓ! இது தான் உங்க திடீர் மாற்றத்துக்குக் காரணமா?”
எள்ளலாகக் கேட்டாள் சங்கவி.
“ஆமா… தெரிஞ்சப்ப உன்னை நம்பாம இருந்ததுக்கு நான் எவ்ளோ வருத்தப்பட்டேன்னு எனக்குத் தான் தெரியும்… இருந்தாலும் உன்னை நெருங்க தயக்கமா இருந்துச்சு… மறுபடி எங்க வீட்டுல பிரச்சனை வந்துடுமோனு பயந்தேன்… உனக்கு வேற இடத்துல சம்பந்தம் பேசி வேற கல்யாண ஏற்பாடு நடந்திருக்குமோனு தயக்கம்… பட் சந்தானம் சார் மொபைல்ல உன் போட்டோவ பாத்ததுல இருந்து சின்ன சலனம்… நான் விசாரிச்ச வரைக்கும் உனக்கு வேற சம்பந்தம் எதுவும் வரல”
குறுக்கிட்டாள் சங்கவி.
“வந்த சம்பந்தத்தை உங்க அக்கா உமா கெடுத்து விட்டுட்டாங்க”
சரபேஸ்வரன் திகைக்கும்போதே எழுந்தாள் அவள்.
“உங்களைக் காதலிச்சது, நம்ம நிச்சயம், உங்க மாமாவ பத்தி உண்மைய சொன்னதுக்காக நீங்க நிச்சயதார்த்தத்தை முறிச்சது எதையும் என்னால மறக்க முடியல சரபன்… மாறிட்டேன்னு நீங்க சொல்லுறிங்க.. ஆனா உங்களை நம்புறதுக்கு எனக்குப் பயமா இருக்கு… ஏன்னா உங்களுக்கு உருகி உருகி காதலிக்க தெரியும்… ஊர் மெச்ச நிச்சயம் பண்ணவும் தெரியும்… ஆனா ஒரு பிரச்சனைனு வந்தா, அதுல உங்க வீட்டாளுங்க சம்பந்தப்பட்டிருந்தாங்கனா, என் பக்கம் நியாயம் இருந்தாலும் நீங்க எனக்குத் துணையா நிக்காம கைவிட்டுருவிங்க சரபன்… இது என் மனசுல ஆழமா பதிஞ்சிடுச்சு… இனிமே அதை மறக்க முடியாது… இதுக்கு மேல இங்க இருக்க எனக்கு விருப்பமில்ல… நான் கிளம்புறேன்”
ஹேண்ட்பேக்கை மாட்டிக்கொண்டு ஃபுட்கோர்ட்டை விட்டு வெளியேறினாள் சங்கவி.
விளக்கமளிக்க வாய்ப்பு கூட கொடுக்காமல் செல்பவளைப் பார்த்தவாறு அமர்ந்திருந்த சரபேஸ்வரன் அதோடு கோடி முறையாக தனது பழைய மடமையை எண்ணி தன்னைத் தானே நொந்து கொண்டான்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

