“மத்தவங்க செஞ்ச நல்லதை சாகுறவரைக்கும் மறக்கக் கூடாது. கெட்டது செஞ்சவங்களை உடனே மறந்துடணும்னு சொல்லுவார் எங்கப்பா… ஏன்னா நம்ம மூளை எதை அடிக்கடி ஞாபகப்படுத்திப் பாக்குதோ அதே குணாதிசயம் நம்ம பிஹேவியர்லயும் வெளிப்பட ஆரம்பிக்குமாம்… கெட்டதை நினைக்குற மனசுல வன்மமும் வஞ்சகமும் நிரம்பி வழியும்… அந்த மனசை எந்தச் சந்தோசமான நிகழ்வும் குளிர வைக்காது… பழியுணர்ச்சியும் சூதும் கபடமும் அங்க நிரந்தரமா குடியிருக்க ஆரம்பிச்சிடும்… உங்களுக்கு நடந்த கெட்ட விசயங்களையும் மறக்க முயற்சி பண்ணுங்க… அதை செஞ்ச நபர்களை விட்டு விலகியிருங்க“
– சங்கவி
சங்கவி திருப்பதி மைன்ஸ் அலுவலகத்திற்கு வந்து அன்றோடு ஆறாவது நாள்.
ஜூனியர் அக்கவுண்டண்ட் வேல்ராஜ் ஓரளவுக்கு வரி தாக்கல் பற்றி தெளிவாக தெரிந்து கொண்டான். அவனுக்கு இருந்த சந்தேகங்களை சங்கவியிடம் கேட்டுத் தெரிந்து கொண்டான்.
நாளை ஒரு நாள் மட்டும் தான்! பிறகு இந்த அலுவலகத்திற்கு அவள் வரவேண்டியதும் இல்லை. அவ்வபோது பேச முயற்சிக்கும் சரபேஸ்வரனின் தொல்லையும் இல்லை.
அதற்காக நிம்மதியுற வேண்டியவளின் மனம் மாறாக சோர்ந்து போயிருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதை வெளிக்காட்டாமல் மறைக்க சிரமப்பட்டுப்போனாள்.
நல்லவேளையாக அன்று ராமையன்பட்டியில் இருக்கும் சுண்ணாம்பு குவாரிக்குச் சரபேஸ்வரன் சென்றுவிட்டான்.
இல்லையெனில் அவ்வபோது கேபினிலிருந்து வெளியே வந்து வேலையை மேற்பார்வை செய்யும் சாக்கில் சங்கவியைப் பார்க்க வருபவனின் கண்கள் அவளுடைய இந்த சோர்வைக் கண்டுபிடித்திருக்கும்.
மதியவுணவு இடைவேளையின் போது அலுவலகத்துக்கு வந்தவனுக்கு வேலைப்பளு அதிகமாகிவிட இனி சங்கவியை கவனிக்க அவனுக்கு
ஏது நேரம்?
சங்கவியும் தன்னைக் கடந்து போனவனை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு வேலையில் ஆழ்ந்துவிட்டாள்.
அப்படியே அலுவலக நேரம் முடிந்து வீட்டுக்குக் கிளம்பியவள் சமாதானபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினாள்.
அங்கே உள்ள ‘ஸ்டார் டெய்லர்ஸ்’ கடையில் அவளுக்கு இரண்டு காட்டன் சுடிதார்களையும், அழகுநாச்சிக்கு நான்கு ப்ளவுஸ்களும் தைக்க கொடுத்திருந்தாள்.
தைத்து முடித்துவிட்டதாக கடையிலிருந்து போன் செய்து கூறியிருந்தார்கள். அதை கையோடு வாங்கிக்கொண்டு எதிர்ப்புறம் இருக்கும் கோட்டக்கல் ஆயுர்வைத்தியசாலா கடையில் அழகுநாச்சிக்காக சிறுவில்வாடி கஷாயம் வாங்க சாலையைக் கடக்க காத்திருந்தாள்.
பேருந்துகளும் கார்களும் விருட்விருட்டென வந்து கொண்டேயிருந்தன.
சங்கவி சாலையைக் கடக்க எத்தனித்தபோது அந்தச் சம்பவம் நடந்தேறியது.
பள்ளி சிறுவர்களை ஏற்றி வந்த ஸ்கூல் வேன் ஒன்றிலிருந்து இறங்கிய ஆனந்த், ஓட்டுனர் வேனை அவசரமாகக் கிளப்பியதால் தரையில் குப்புற விழுந்தான்.
ஓட்டுனர் வேனை நிறுத்திவிட்டு இறங்கி வருவதற்குள் சங்கவி பதறியடித்து ஓடிப்போய் அவனைத் தூக்கினாள்.
“எழுந்திரி ஆனந்த்” என அவனை எழுப்பிவிட்டவள் ஓட்டுனரிடம் “பிள்ளைங்க இறங்கறதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம்?”என சீற அவர் பவ்வியமாக மன்னிப்பு கேட்டார்.
“இதை ஸ்கூல்ல சொல்லாத தம்பி… என் வேலை போயிடும்”
ஆனந்துக்கு அவரைக் காண பரிதாபமாக இருந்தது.
அவன் படித்துக் கொண்டிருக்கும் பள்ளி நிர்வாகம் கண்டிப்புக்குப் பெயர் போனது.
நடந்தது தெரியவந்தால் இந்த ஓட்டுனரின் பணி பறிபோகும் வாய்ப்பு உள்ளதென புரிந்து கொண்டவன் பள்ளியில் சொல்லமாட்டேன் என உறுதியளித்த பிற்பாடே அவர் கிளம்பினார்.
அவர் போனதும் “வலிக்குது அத்தை” முனகியவனின் கையைத் திருப்பிப் பார்த்தாள் சங்கவி.

முழங்கை நன்றாக சாலையில் சிராய்த்திருந்தது. காலிலும் காயம் தெரிந்தது.
“கைய உதறு”
சங்கவி சொல்லவும் கையை உதறினான் அவன்.
விழுந்த அதிர்ச்சியில் கண்ணீர் நிரம்பியிருந்தது அவனது விழிகளில்.
சங்கவி அருகிலிருந்த பேக்கரிக்குப் போனவள் தண்ணீர் பாட்டில் வாங்கிக்கொண்டு வந்தாள்.
“இந்தா தண்ணி குடி”
ஆனந்திடம் நீட்ட அவனும் வாங்கி பருகினான்.
“தேங்க்ஸ் அத்தை” என்றபடி பாட்டிலை திருப்பிக்கொடுத்தவனின் முகத்தில் படிந்திருந்த தூசியைத் துப்பட்டாவால் துடைத்துவிட்டாள் சங்கவி.
“என்ன அவசரம் உனக்கு? பாத்து பொறுமையா இறங்கக்கூடாதா?”
“ஏதோ யோசனைல இறங்கிட்டேன் அத்தை”
“இந்த வயசுல உனக்கு அப்பிடி என்ன யோசனை? மன்த்லி எக்சாம்ல மார்க் குறைஞ்சிட்டியா? சப்ஜெக்ட்ல எதுவும் பிரச்சனையா?”
“அதுல்லாம் இல்லத்தை… இது வேற”
சொல்லும்போதே ஆனந்தின் குரல் உள்ளே போய்விட்டது.
அவனிடம் துருவி விசாரிக்க விரும்பவில்லை அவள்.
கால் வலியெடுக்கவும் முகம் சுளித்தான் ஆனந்த்.
“கால் வலிக்குதா? எப்பிடி வீட்டுக்குப் போவ நீ?”
“பரவால்ல அத்தை… நான் சமாளிச்சுப் போயிடுவேன்”
ஆனந்த் தைரியமாகச் சொன்னாலும் சங்கவி அவனைத் தனியே அனுப்ப யோசித்தாள்.
சமாதானபுரத்தில் தான் உமாவின் வீடு இருக்கிறது. பேசாமல் ஆட்டோவில் அனுப்பி வைப்போமா என்ற யோசனையுடன் ஆட்டோக்களை நிறுத்த முயற்சி செய்தாள்.
அது பீக் அவர் என்பதால் ஆட்டோக்கள் அனைத்துமே பயணிகளை சுமந்தவண்ணம் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தன.
ஆனந்துக்குத் துணையாக அவளே போகலாம் தான். ஆனால் உமாவின் முகத்தைப் பார்க்க பிடிக்கவில்லை அவளுக்கு.
யோசித்துப் பார்த்தவளுக்குக் கிடைத்த ஒரே வழி சரபேஸ்வரனை அழைப்பது மட்டும் தான்.
மொபைலில் சரபேஸ்வரனின் எண்ணைத் தேடி அழைக்கப்போனவள் ஒருவேளை அவன் எண்ணை மாற்றியிருந்தால் என்ன செய்வதென்ற யோசனையில் தயங்கினாள்.
“அவன் மொபைல் வால்பேப்பரைக் கூட மாத்தல… நம்பரையா மாத்திருக்க போறான்… நீ கால் பண்ணிப் பாரு… எடுப்பான்” என மனசாட்சி ஊக்குவிக்கவும் சரபேஸ்வரனின் பழைய எண்ணுக்கு அழைத்தாள் சங்கவி.
அதிசயமாக அழைப்பு போனது.
“சொல்லு கவி”
ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுடன் சரபேஸ்வரனின் குரல் மறுமுனையில் கேட்டது.
“சமாதானபுரம் வர முடியுமா சரபன்?”
மெதுவாக வினவினாள் சங்கவி.
அவள் கேட்டதும் மறுமுனையில் சரபேஸ்வரன் சிறகின்றி பறக்க ஆரம்பித்திருந்தான்.
“இதோ இப்பவே வர்றேன் கவி”
அழைப்பு துண்டிக்கப்பட்டதும் ஆனந்திடம் திரும்பினாள் சங்கவி.
“உங்க மாமாக்குக் கால் பண்ணிருக்கேன் ஆனந்த்… அவர் வர்றவரைக்கும் பஸ் ஸ்டாண்ட்ல வெயிட் பண்ணலாம்”
இருவரும் பேருந்து நிறுத்தத்தில் கிடந்த இருக்கைகளை நிரப்பினார்கள்.
அதே நேரம் சரபேஸ்வரன் தனது இருசக்கர தேரில் உற்சாகமாகப் பறந்து வந்து கொண்டிருந்தான்.
இத்தனை நாட்கள் கழித்து தன்னை தனியே சந்திக்க சங்கவி அழைத்திருக்கிறாள் என்றால் காரணம் இல்லாமலா இருக்கும்?
சமாதானபுரம் பேருந்து நிறுத்தத்தில் வந்து அவனது பல்சர் நிற்கும் வரை சரபேஸ்வரனின் உற்சாகத்துக்குக் குறைவே இல்லை.
அங்கே வந்ததும் சங்கவியோடு ஆனந்தும் அமர்ந்திருப்பதைக் கண்டான்.
அப்போதே அவனுடைய உற்சாகத்தில் ஐம்பது சதவிகிதம் காணாமல் போனது.
மீதியை சங்கவியின் பேச்சு போகச் செய்துவிடுமென துல்லியமாக ஆரூடம் சொன்ன தனது மனசாட்சியை அமைதியாக இருக்குமாறு கட்டளையிட்டு விட்டு அவளிடம் ஏன் தன்னை அழைத்தாள் என வினவினான்.
சங்கவி ஆனந்தின் முழங்கையைக் காட்டவும் துடித்துப் போனான்.
“என்னாச்சு? எப்பிடி அடிபட்டுச்சு?”
“ஸ்கூல் வேன்ல இருந்து விழுந்துட்டேன் மாமா… அத்தை தான் என்னைத் தூக்கிவிட்டாங்க”
“பாத்து இறங்கமாட்டியா நீ?”
ஆனந்த் சரபேஸ்வரனின் சீற்றத்தில் மருண்டான். அவனைத் தன்னருகே நிறுத்திக் கொண்டாள் சங்கவி.
“அவனே விழுந்த அதிர்ச்சில இருக்கான்… இப்ப போய் திட்டுறிங்களே… பெருசா ஒன்னும் காயம் இல்ல… பட் கால் வலிக்குது போல… நடக்க முடியாம சிரமப்பட்டான்… ஆட்டோ எதுவும் கிடைக்கல… அதான் உங்களுக்குக் கால் பண்ணுனேன்”
தமக்கை மகனின் நிலை குறித்து வருத்தம் வந்தாலும் சரபேஸ்வரனின் மனம் சங்கவி சொன்ன பதிலில் சுணங்கியது.
ஜங்சனிலிருந்து சமாதானபுரம் வருவதற்குள் என்னவெல்லாம் கற்பனை செய்துவிட்டான். அனைத்தும் கானலாய் போனது.
“என்ன கேட்டுச்சா?”
சங்கவி ஏதோ கூறினாள் போல. அதை சரபேஸ்வரன் கவனிக்கவில்லை.
“என்ன சொன்ன? நான் கவனிக்கல” என்றான் அவன்.
“வலி அதிகமா இருந்தா டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போங்கனு சொன்னேன்” என்றாள் அவள் அழுத்தமாக பார்த்தபடி.
சரபேஸ்வரன் சங்கடமாகப் புன்னகைத்தான்.
“வேலை டென்சன்ல இருந்தேன்.. அதான் கவனிக்கல கவி… சாரி”
“இதுக்கு ஏன் சாரி கேக்குறிங்க? ஆனந்த் ரொம்ப நேரம் கால் வலியோட இருக்கான்… கூட்டிட்டுப் போங்க”
சரபேஸ்வரனும் பைக்கைக் கிளப்பி ஆனந்தை ஏறச் சொன்னான்.
அவன் அமர்ந்ததும் சங்கவிக்கு டாட்டா காட்டினான்.
“பை அத்தை”
“பை ஆனந்த்… பத்திரமா இரு”

அப்படியே கிளம்பி சென்றிருக்கலாம். ஆனால் சரபேஸ்வரன் சங்கவியிடம் வாங்கி கட்டவேண்டுமென விதி இருந்தால் யார் என்ன செய்ய முடியும்?
“நீ ஏன் இங்க வந்த கவி?”
சரபேஸ்வரன் சங்கவியிடம் சாதாரணமாகத் தான் கேட்டான்.
என்னிடம் கேள்வி கேட்க இவன் யார்?
க்ஷண நேரத்தில் அவளது கண்களில் கோபம் மின்னியது.
ஆனந்துக்காக அதை கட்டுப்படுத்திக் கொண்டாள். கையிலிருந்த பிக் ஷாப்பர் பையைக் காட்டினாள்.
“டெய்லர் ஷாப்ல தைக்க குடுத்த ட்ரஸ்சை வாங்க வந்தேன்… அப்ப தான் இவனைப் பாத்தேன்”
“இந்த நேரத்துக்கு உங்க ஊருக்குப் பஸ் கிடையாதே… கொஞ்சம் வெயிட் பண்ணுறியா? இவனை அக்கா வீட்டுல விட்டுட்டு வந்து உன்னைப் ‘பிக்கப்’ பண்ணிக்கிறேன்”
ஆனந்த் இருப்பதால் கோபப்படமாட்டாள் என்ற தைரியத்தில் ‘பிக்கப்பில்’ அழுத்தம் கொடுத்து கேட்டான் சரபேஸ்வரன்.
மீண்டும் சங்கவியின் கண்களில் கோபம் சுடர்விடவும் ஜெர்க் ஆனவன் “தனியா இங்க வெயிட் பண்ணணுமேனு கேட்டேன்… சரி நாங்க கிளம்புறோம்” என்று அரைகுறையாய் முணுமுணுத்தான்.
“தனியா இருக்குறது எனக்கு ஒன்னும் புதுசில்லயே”
கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் குத்திக் காட்டினாள் சங்கவி. சற்று உரத்தக் குரலிலேயே கூறிவிட்டாள்.
அதை கேட்டதும் சரபேஸ்வரனின் முகம் அடிபட்டாற்போல மாறிப்போனது.
மனதிலிருப்பதை மறைக்காமல் உரைப்பது சங்கவியின் பிறவிக்குணம் என்பது சரபேஸ்வரனுக்குத் தெரியும்.
முன்பு தேனாய் இனித்த அவளது வார்த்தைகள் இன்று தேள் கொடுக்காய் மாறி கொட்டுவதற்கு காரணம் அவன் மட்டுமே.
அதைப் புரிந்து கொண்டதால் தானோ என்னவோ, சமீபத்தில் சங்கவியின் பேச்சு வேதனையைக் கொடுத்தாலும் சரபேஸ்வரன் அவளைப் பதிலுக்குக் காயப்படுத்துவதில்லை.
அவள் சொன்னதை அன்று நம்பி அவளுக்குத் துணையாக நின்றிருந்தால் இன்று யாரோ போல எதிரெதிரே நிற்கும் நிலை தனக்கு வந்திருக்குமா?
பழைய சம்பவங்களை சிந்தித்ததும் ஞாயிறன்று பவித்ராவிடம் பேசியது ஞாபகத்துக்கு வந்தது சரபேஸ்வரனுக்கு.
உடனே “சாரி கவி” என்றான்.
மீண்டும் அவன் மன்னிப்பு கேட்டதும் சங்கவிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது.
கொஞ்சம் அதிகமாகத் தான் பேசிவிட்டோமோ?
அவளது கண்களில் இரக்கம் சுரந்தது.
“பவித்ரா என் கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா கவி”
அவ்வளவு தான்! சங்கவியின் கண்களில் இருந்து இரக்கம் மறைந்தது. கடுமை குடியேறிவிட்டது அங்கே.
“கோவப்படாத கவி… அவ நம்ம ஆனந்த் மாதிரி தான… சின்னப்பொண்ணு பயந்துட்டா அப்ப”
“அவ பயத்துக்கு நான் என் வாழ்க்கையையும் காதலையும் விலையா குடுத்துட்டு நிக்குறேன் சரபன்”
கோபத்தைக் காட்ட எவ்வளவோ முயன்றும் சங்கவியின் குரல் பழைய சம்பவங்களின் பாதிப்பால் நடுங்கிவிட்டது.
முகம் கலங்கி கண்கள் ஈரமாகி நாசி துடிக்க கோபக்கார சங்கவி விடைபெற்றுவிட்டாள்.
இழப்பின் வேதனையை மறைக்க போட்டிருந்த கோபக்கவசம் கழண்டதும் அன்றொரு நாள் செய்வதறியாது திகைத்து கையறுநிலையில் நின்றாளே அதே சங்கவி வெளிப்பட்டுவிட்டாள்.
“கவி” குற்றவுணர்ச்சியோடு அழைத்தான் அவன்.
“வேண்டாம் சரபன்… உங்களோட ஆறுதல் எனக்குத் தேவையில்ல… எந்த ஆண், தான் நேசிக்கிற பொண்ணு சிக்கலான நிலமைல இருக்குறப்ப துணையா நிக்க தவறுறானோ அவனுக்கு ஆறுதல் சொல்லுற உரிமை எப்பவும் கிடையாது… கிளம்புங்க”
முகத்தைப் பார்க்காமல் உரைத்துவிட்டு சாலையைக் கடந்து கோட்டக்கால் ஆயுர்வைத்தியசாலாவை நோக்கி போய்விட்டாள் சங்கவி.
சரபேஸ்வரன் கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பியவன் தமக்கையின் வீட்டில் ஆனந்தை இறக்கிவிட்டான்.
பைக் சத்தம் கேட்டதும் எட்டிப் பார்த்த உமா தம்பியைக் கண்டதும் பூரித்துப் போனார்.
ஞாயிறன்று சங்கவியால் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்க வந்திருக்கிறான் என எண்ணிவிட்டார்.
ஆனால் சரபேஸ்வரன் அவரைக் கண்டுகெள்ளவில்லை.
ஆனந்திடம் மட்டும் பத்திரமாக பள்ளிக்குப் போய் வரும்படி அறிவுறுத்திவிட்டு பைக்கைக் கிளப்பினான்.
“ஈஸ்வரா….”
உமா அழைத்தது காற்றோடு கலந்துவிட்டது அவன் பைக்கைக் கிளப்பிய வேகத்தில்.
இன்னும் சிறிது நேரம் நின்று தமக்கையிடம் பேசினான் என்றால் அவனை அறியாமல் தனது இன்றைய நிலைக்குக் காரணம் அவர் தான் என்று சொல்லி நோகடித்துவிடுவோமோ என்ற பயம் முகம் கொடுத்துப் பேசாமல் வேகமாகக் கிளம்ப செய்துவிட்டது.
ஆனால் உமாவோ தம்பியைச் சங்கவி தூபம் போட்டுத் தங்களுக்கெதிராகத் திருப்ப ஆரம்பித்து விட்டாள் என தவறாக அனுமானித்து மனதிற்குள் அவளைச் சபித்தார்.
ஆனந்த் சிலையாய் நின்ற அன்னையின் கரத்தைப் பிடித்தான்.
“நான் ஸ்கூல் வேன்ல இருந்து விழுந்துட்டேன்மா”
மைந்தன் விழுந்ததாக சொன்னதும், மற்ற யாவும் மறந்து பதறிப்போய் அவனைப் பார்த்தார் உமா.
“ஐயோ அடிபட்டுச்சா? டாக்டர் கிட்ட போகலாமா?”
“கால் லைட்டா வலிக்குது… என்னை அத்தை வந்து தூக்கிவிட்டாங்க”
“எந்த அத்தை? யாரைச் சொல்லுற நீ?”
“சங்கவி அத்தை… சமாதானபுரத்துல அவங்க ரோட் க்ராஸ் பண்ண நின்னாங்க.. நான் விழுந்ததை பாத்ததும் ஓடி வந்து தூக்கிவிட்டாங்க… அப்புறம் மாமாக்குக் கால் பண்ணி என்னை வீட்டுல விடச் சொன்னாங்க”
உமாவின் கண்கள் கோபத்தில் கனன்றன.
மகனுக்காக சங்கவி பதறியது அவரது மனதைத் தொடவில்லை.
மாறாக இன்னும் சரபேஸ்வரனின் மொபைல் எண்ணை சங்கவி வைத்திருக்காளா என்ற எரிச்சல்!
தன் தம்பிக்கும் அவளுக்கும் எந்த உறவும் கிடையாதென மானஸ்தி போல பேசினாளே!
உறவை முறித்துக்கொண்டவளுக்கு மொபைல் எண்ணை அழிக்க மட்டும் மனம் வரவில்லையா? இதற்கு என்ன அர்த்தம்?
தன் கணவர் மீது எப்படிப்பட்ட பழியைச் சுமத்தினாள் அவள். எந்தக் காலத்திலும் அவளை உமா மன்னிக்கமாட்டார்.

போதாக்குறைக்கு ஞாயிறன்று சாலையில் வைத்து கணவரை எவ்வளவு கேவலமாகப் பேசிவிட்டாள்.
இதுவரை தனது பேச்சை வேதவாக்காக எண்ணி கேட்டுக்கொண்டிருந்த சரபேஸ்வரனை என்ன மந்திரம் போட்டு வசப்படுத்தினாளோ? மனதுக்குள் சங்கவியை வசை பாடியவர் மகனுக்குச் சிற்றுண்டி எடுத்து வைத்துவிட்டு அன்னையின் மொபைலுக்கு அழைத்தார்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

