“காதலிக்க ஆரம்பிச்சதும் மனசுக்கு ரெக்கை முளைச்சிடும்… பாதி நேரம் அது நம்ம கிட்ட இருக்கிறதை விட நம்ம யாரை விரும்புறமோ அவங்க பின்னாடி தான் சுத்தும்… அந்த நேரத்துல நம்ம காதல் கைகூடுமா இல்லயாங்கிற டென்சன் மட்டும் தான் அதுக்கு இருக்கும்… வேற எதையும்
யோசிக்குற அளவுக்கு மனசுக்கு அப்ப பக்குவம் இருக்காது… அந்த மனசுல காதல் வேகமா புகுந்துடுமே தவிர ஆழமா பதியாது… நிறைய ப்ரேக்கப்புக்கு அவசரமான காதல் தான் காரணம்னு நான் சொல்லுவேன்“
– சரபேஸ்வரன்
ஆழியூர்…
ஓராண்டுக்கு முன்பு வரை சாரங்கபாணியின் குடும்பம் வசித்து வந்த பூர்வீக வீட்டில் போரிலிருந்து தண்ணீர் எடுக்கும் மோட்டரில் பிரச்சனை.
வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுப் போன உமா பெற்றோரிடம் அந்த விவரத்தைக் கூறியதால் ஞாயிறன்று சரபேஸ்வரனை அங்கே அனுப்பி வைத்திருந்தார் சாரங்கபாணி.
அவனோ தானும் தமக்கையும் சங்கவியிடம் வாங்கிக் கட்டிக் கொண்டதை யோசித்தவாறு நடுகூடத்தில் படுத்திருந்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஈஸ்வரா”
ப்ளம்பர் முருகனின் குரல் வீட்டு முற்றத்திலிருந்து கேட்டது.
படுத்திருந்தவன் எழுந்து வாயிலுக்கு வந்தான்.
அவனைக் கண்டதும் வாய் நிறைய புன்னகைத்தார் முருகன்.
“வாங்கண்ணே… சாப்பிட்டிங்களா?”
“அதுல்லாம் ஆச்சு ஈஸ்வரா… நீ சாப்பிட்டியா இல்லயா? முகம் ஏன்டே வாடிப் போய்க் கிடக்கு? வீட்டுக்கு வந்து சாப்பிடு முதல்ல… அப்பறம் வேலைய பாப்போம்… இன்னைக்கு உன் மதினி அதிசயமா இட்லி அவிச்சிருக்கா”
“நான் சாப்பிட்டுட்டு தான் வந்தேண்ணே… வெயில்ல பைக் ஓட்டுனதால கொஞ்சம் டயர்டா இருக்கு… வேற ஒன்னுமில்ல”
கிராமத்து மக்களின் நற்குணம் இது தான். யாருடைய வயிறும் முகமும் வாடினால் அவர்கள் பொறுக்க மாட்டார்கள். அதிலும் முருகனுடைய குடும்பமும் சாரங்கபாணியின் குடும்பமும் நீண்டகால பழக்கம் கொண்டவர்கள். உறவுமுறை வைத்துப் பேசுமளவுக்கு நெருங்கிய பழக்கம்.
“பவித்ரா எப்பிடி இருக்காண்ணே?”
முருகனிடம் விசாரித்தான் சாரங்கபாணி.
“இப்ப கொஞ்சம் பரவால்ல ஈஸ்வரா… முன்ன மாதிரி எடுத்ததுக்குலாம் சுணங்காம நல்லா படிக்குறா… சித்திரைல நம்ம ஊர்ல கொடை வந்துச்சுல்ல, அப்ப அம்மனுக்குக் கெடா நேர்ந்து விட்டேன்… அந்த ஆத்தா என் பிள்ளை உடம்புல இருந்த காத்து கருப்பை ஓட வச்சிட்டா ஈஸ்வரா”
முருகன் பேச பேச சரபேஸ்வரனின் முகம் மாறியது.
“தொண்டை வறண்டு போன மாதிரி இருக்குண்ணே… மதினிக்குப் போன் பண்ணி உப்பு போட்டு எலுமிச்சை ஜூஸ் கொண்டு வரச் சொல்லுறிங்களா? பேசிக்கிட்டே வேலைய பாப்போம்”
“இப்பவே சொல்லுறேன்”
முருகன் மொபைலுடன் நகர சரபேஸ்வரனின் சிந்தனைகள் பவித்ராவுக்காகத் தன்னிடம் வாதாடிய சங்கவியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தன.
“பதினாலு வயசு தான் இவளுக்கு… குழந்தைங்க இவ… இவளை வச்சு நான் பொய் சொல்லி என்ன சாதிக்கப் போறேன்?”
அவள் எவ்வளவு தூரம் கெஞ்சினாள்! காது கொடுக்கவில்லையே அவன்! காலங்கடந்த ஞானம்!
முருகன் போன் பேசிவிட்டு வந்ததும் வேலையை ஆரம்பித்தார்.
சுவாரசியமாகப் பேசுவதில் வல்லவர். சொந்த தொழில் செய்பவர்களுக்குப் பேச்சுத்திறமை கட்டாயம் இருக்க வேண்டும் அல்லவா!
பேச்சினிடையே மூர்த்தி இங்கே வருவதுண்டா என விசாரித்தான் சரபேஸ்வரன்.
“உன்னைப் போல அவரும் இங்க முன்ன மாதிரி வர்றதில்ல ஈஸ்வரா… நானும் மதினியும் அவரோட டியூசனுக்குப் பவித்ராவ அனுப்பலாம்னு விசாரிச்சோம்… பட்டிக்காட்டு பிள்ளைங்களுக்கு அங்க இடம் கிடையாதுனு மூஞ்சில அடிச்ச மாதிரி சொல்லிட்டாரு… நம்ம உமாக்கா முகத்துக்காக அமைதியா வந்துட்டேன்”
முருகனின் மனத்தாங்கலுக்கு என்ன ஆறுதல் கூறுவான் அவன்?
“விடுங்கண்ணே… அந்த மெத்தப் படிச்ச மேதாவியோட டியூசனை அவரே கட்டிக்கிட்டு அழட்டும்… நம்ம பவித்ராக்கு டியூசன் தேவையில்ல”
“பதினொன்னாம் கிளாசுக்கு வேற ஸ்கூலு பாக்கணும்ல ஈஸ்வரா… நம்ம ஆனந்து படிக்கிற ஸ்கூல்ல நல்லா சொல்லிக் குடுப்பாங்களாம்… அவர் சொன்னா சீட் ஈசியா கிடைக்குமேனு பாத்தேன்…
இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் பவித்ரா எலுமிச்சை சாறை கொண்டு வந்தாள்.
சரபேஸ்வரனைப் பார்த்ததும் ஆச்சரிய முறுவலோடு வந்தாள்.
“நல்லா இருக்கிங்களாண்ணே?”
அவளின் கபடமற்ற பேச்சில் குற்றவுணர்ச்சி கிளர்ந்தெழ மத்திமமாகத் தலையசைத்தான் அவன்.
பவித்ரா இருவருக்கும் எலுமிச்சை சாறை தம்ளர்களில் ஊற்றி நீட்ட இருவரும் வாங்கி அருந்தினர்.
“பவித்ராவோட ஸ்கூல் அட்மிசன் பத்தி கவலைப்படாதிங்கண்ணே… எங்க எம்.டி பேசுனா அட்மிசன் கிடைச்சிடும்… பவித்ரா டென்த்ல நல்ல மார்க் எடுத்தா மட்டும் போதும்… என்ன பவி, நல்ல மார்க் எடுப்பல்ல?”
பவித்ராவிடம் கேட்டபடியே முருகனிடம் அவளின் மேல்நிலை படிப்புக்கு உத்திரவாதம் அளித்தான் சரபேஸ்வரன்.
“அதுல்லாம் எடுப்பேன்ணே… ஆனா டியூசனுக்குப் போகமாட்டேன்”
பவித்ராவின் பிடிவாதத்துக்குக்கான காரணம் சங்கவி சொன்னதாக இருக்குமோ?
ஐயம் உதித்தது அவனது மனதில்.
முருகன் வேலையில் ஆழ்ந்த சமயத்தில் அவனிடம் தம்ளரை வாங்க வந்தவள் சொன்ன விசயத்தில் சரபேஸ்வரனின் குற்றவுணர்ச்சி இன்னும் அதிகரித்தது எனலாம்.
“கவி மதினிக்கு என் மேல ரொம்ப கோவம்… பெருமாள் கோயிலுக்கு வந்தப்ப கூட என் கிட்ட பேசாம போயிட்டாங்கண்ணே… அவங்களை உங்க எல்லார் கிட்டவும் ஏச்சு வாங்க வச்சேன்ல… அதை அவங்க இன்னும் மறக்கல”
பரிதாபமாகக் கூறினாள் பவித்ரா.
“அன்னைக்கு சங்கவி சொன்னதுலாம்….”
“மதினி சொன்னது உண்மை தான்… எங்கம்மா தான் இதை வெளிய சொல்லக்ககூடாதுனு சொல்லிட்டுண்ணே… அப்பிடி சொன்னா செத்துடுவேன்னு சொல்லிச்சு… அதான் உங்க கிட்ட மதினி பேசுனப்ப நான் அமைதியா நின்னேன்… இப்ப வரைக்கும் எங்கப்பாக்குக் கூடத் தெரியாது”
சரபேஸ்வரனின் சந்தேகம் ருசுவானது. சங்கவி அபாண்டமாய் எதுவும் பேசிடவில்லையென இப்போது புரிகிறது.
என்னவெல்வாம் அவளைப் பேசிவிட்டோம் என மனதுக்குள் நொந்து போனான்.
“சரி… நீ இதை வேற யார் கிட்டவும் சொல்லாத… சங்கவி கோவம் தீர்ந்துடும்”
ஆறுதல் சொல்லி அவளை அனுப்பி வைத்தான்.
முருகன் மோட்டரைச் சரிசெய்து முடிக்கும்வரை அவன் அமைதியாய் யோசித்தவண்ணம் இருந்தான்.
“மோட்டர் சரியாகிடுச்சு ஈஸ்வரா… போட்டுப் பாரு”
மோட்டர் ஓட ஆரம்பித்துத் தண்ணீர் டேங்க் நிரம்பியதும் முருகன் பணத்தை வாங்கிக்கொண்டு கிளம்பிவிட்டார்.
சர்வேஸ்வரன் மோட்டரை ஆப் செய்துவிட்டு வீட்டைப் பூட்டினான்.
மாடி பூட்டியிருக்கிறதா எனப் பார்த்துவிட்டுப் பைக்கைக் கிளப்பினான்.
காலையில் இருந்த குளுகுளு வானிலைக்கு மாறாக நண்பகல் வெயில் சுட்டெரிக்கத் துவங்கியது. அதைப் பெருட்படுத்தாமல் பைக்கை ஓட்டியவன் நதியூர் வந்ததும் வேகத்தைக் குறைத்தான்.
சாலையிலிருந்து பிரிந்து செல்லும் வழியில் போனால் சங்கவியின் வீடு வந்துவிடும்.
அவளது தந்தை காலமான தகவல் தாமதமாகத் தான் அவனுக்குத் தெரிய வந்தது. அதைப் பற்றி விசாரித்தபோது கூடச் சங்கவி கோபம் கொண்டாளே!
அழகுநாச்சியிடம் ஆறுதலாகப் பேசிவிட்டுப் போவோமென முடிவெடுத்தவன் சங்கவியின் வீட்டை நோக்கிப் பைக்கைச் செலுத்தினாள்.
பைக்கை முன்வாயிலிலிருந்த வேப்பமர நிழலில் நிறுத்திவிட்டுத் திறந்திருந்த வீட்டுக்கதைவைத் தட்டினான்.
பக்கத்து வீட்டு லெட்சுமி அழைக்கிறாரோ என வாயிலுக்கு வந்த அழகுநாச்சி சரபேஸ்வரனைப் பார்த்ததும் திகைத்துப்போய் நின்றார்.
“உள்ள வரலாமா அத்தை?”
வெகு இயல்பாகச் சரபேஸ்வரன் கேட்க அழகுநாச்சிக்கு என்ன சொல்வது என்று புரியாத நிலை.
மகள் உள்ளே கோமதியுடன் பேசிக்கொண்டிருக்கிறாள். கட்டாயம் இவனைக் கண்டால் கோபம் கொள்வாளென அவர் தவிப்போடு நிற்கையிலேயே “வாசல்ல நின்னு என்னம்மா பண்ணுற?” என்று கேட்டபடி வந்து சேர்ந்தாள் சங்கவி.
வாசலில் வைத்துச் சரபேஸ்வரனை மகள் திட்டி ஏதேனும் ரசாபாசம் ஆகிவிடக்கூடாதென வேகமாக அவனை வரவேற்றார்.
“வாப்பா… உள்ள வா”
சரபேஸ்வரன் படியில் காலெடுத்து வைக்கவும் அவனை முறைத்தாள் சங்கவி.
“ஏன்பா நிக்குற? உள்ள வா”
அழகுநாச்சி அழைக்கவும் சங்கவியின் முறைப்பால் உண்டான தயக்கத்தை உடைத்துவிட்டு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தவன் நடுஹாலுக்கு வந்து சேர்ந்தான்.
அவனைக் கண்டதும் வேகமாக எழப்போனாள் கோமதி.
“மெதுவாங்க”
அக்கறையாய் அவன் சொற்களை உதிர்க்க கோமதி சங்கடத்தில் நெளிந்தபடி அமர்ந்தாள்.
அழகுநாச்சி சங்கவியிடம் அவனுக்குக் குடிக்க தண்ணீர் கொண்டு வரும்படி கூறி சமையலறைக்குள் அனுப்பி வைத்தார்.
அவளும் முறைத்தபடியே கடந்தாள்.
“வீட்டுல எல்லாரும் நல்லா இருக்காங்களா தம்பி?”
“நல்லா இருக்காங்க அத்தை… மாமா தவறுனது எனக்குத் தெரியாது… கணபதி தான் சொன்னான்… தெரிஞ்சிருந்தா வந்திருப்பேன்”
இவன் வந்தால் மட்டும் என்னவாகி இருக்குமெனச் சமையலறையில் நொடித்துக்கொண்டாள் சங்கவி.
“அவர் விதி முடிஞ்சுது… போய்ச் சேர்ந்துட்டார்… எமன் கூட்டிட்டுப் போகணும்னு நினைச்ச உயிரை நம்ம இழுத்துப் பிடிச்சு வைக்க முடியாதுல்ல தம்பி?”
“திடீர்னு என்னாச்சு அத்தை?”
கணவரின் இறப்புக்குக் காரணம் என்னவென்பது நினைவுக்கு வரவும் கண் கலங்கினார் அழகுநாச்சி.
இவ்வளவு நேரம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கோமதி எழுந்து அவரது தோளை அழுத்தினாள்.
“முடிஞ்சதை நினைச்சு அழாதத்தை”
“நான் எதுவும் தப்பா கேட்டுட்டேனா அத்தை?”
கலக்கமாகச் சரபேஸ்வரன் வினவவும் சமையலறையிலிருந்து புயலைப் போல வந்து சேர்ந்தாள் சங்கவி.
“எல்லாத்துக்கும் உங்க அக்கா தான் காரணம்”
“கவி”
அதட்டினார் அழகுநாச்சி.
“நீ சும்மா இரும்மா… அக்காவோட யோக்கியதை என்னனு இந்தப் பாசக்காரத்தம்பிக்குத் தெரியட்டும்”

“நான் சொன்னா கேக்க மாட்டியா கவி? நீ உள்ள போ”
அழகுநாச்சி கோபமாக ஆணையிடவும் சங்கவி அமைதியானாள்.
சரபேஸ்வரனைப் பார்த்தார் அவர்.
“என் வீட்டுக்காரர் இறந்ததுக்கு யாரும் காரணமில்ல… அவருக்குத் தூக்கத்துல மாரடைப்பு வந்து இறந்துட்டார்… யாருக்கும் கெட்டது நினைக்காத மனுசன்… அதான் அவருக்கு நல்ல சாவு வாய்ச்சுது… இவ சம்பந்தமில்லாம முடிச்சு போட்டுத் தப்பா நினைச்சிட்டிருக்கா… இதுக்கு மேல சங்கவியை என்னால கட்டுப்படுத்தி வைக்க முடியாது… கோவத்துல இவ எதுவும் சொல்லுறதுக்கு முன்னாடி நீங்க கிளம்புங்க தம்பி”
அதற்கு மேல் அவர்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பாமல் அங்கிருந்து கிளம்பினான் சரபேஸ்வரன்.
அவன் ஸ்கந்தபவனத்துக்கு வந்து சேர்ந்தபோது வீடு வழக்கத்தைவிட அமைதியில் ஆழ்ந்திருந்தது.
ஞாயிறன்று ‘ஒருமணிநேர ஸ்பெஷல்’ என்ற பெயரில் தொடர்களைப் போட்டுக் கழுத்தறுக்கும் டிவி சேனலின் அலறல் இல்லை.
யோசித்தபடி வீட்டுக்குள் வந்தவன் நடுஹாலில் ஓய்ந்து போய்க் கண்ணீர்த்தடம் பதிந்த கன்னங்களோடு அமர்ந்திருந்தார் குழலியைப் பார்த்ததும் திகைத்தான்.
மைந்தனைக் கண்டதும் ஆற்றாமை பொங்கியது குழலிக்கு.
“என்னாச்சும்மா?” என அவன் கேட்டது தான் தாமதம் உடைந்து அழத் தொடங்கினார்.
அவரது விசும்பலைக் கேட்டு அறைக்குள் இருந்து வந்த சாரங்கபாணியின் வதனத்தில் இன்னும் ஆறாத கோபச்சூடு மிச்சமிருந்தது.
தந்தையிடம் என்ன நடந்தது என்று பார்வையில் வினவினான் சரபேஸ்வரன்.
“உமா வந்திருந்தா ஈஸ்வரா”
அவனுக்கு இப்போது புரிந்து போயிற்று அன்னையின் கண்ணீருக்கான காரணம்.
“நான் சங்கவிக்குத் துணையா போனதை சொல்லி அக்கா சண்டை போட்டாளாப்பா?”
“உமாக்கும் நம்ம வீட்டுக்கும் இனிமே சம்பந்தமே இல்லனு கத்திட்டுப் போறாரு மாப்பிள்ளை”
சரபேஸ்வரனுக்கு எரிச்சல் மண்டியது.
“அந்தாளுக்கு இப்ப என்ன தான் பிரச்சனையாம்?”
சாரங்கபாணி பதிலளிக்கும் முன்னர் குழலியின் குரல் கேட்டது.
“சங்கவி ரோட்டுல வச்சு அவரை மரியாதைக்குறைவா பேசிருக்கா… நீ அதை வேடிக்கை பாத்துட்டு நின்ன கோவம் அவருக்கு… பொண்ணா அவ? ஒரு ஆம்பளை முகத்துல துப்புவேன்னு சொல்லிருக்கா… இதுலயே அவளோட வளர்ப்பு லெச்சணம் தெரியுது”
“போதும்மா”
இறுகிப்போன குரலில் சரபேஸ்வரன் அழுத்தமாகக் கூறவும் குழலியின் பேச்சு நின்றது.
மகனைத் தவிப்போடு பார்த்தார்.
அவன் கையைப் பற்றிக்கொண்டார்.
“அந்தப் பொண்ணு நம்ம குடும்பத்துக்கு வேண்டாம் ஈஸ்வரா… அவ இந்த வீட்டுக்குள்ள வந்தா உன் அக்கா உறவை நம்ம மறந்துடணும்னு உமா சொல்லுறாய்யா… பெத்த வயிறு பகீருனு இருக்கு… எனக்கு என் பிள்ளைங்க எங்க காலத்துக்கு அப்புறமும் ஒன்னா இருக்கணும்னு ஆசை… சங்கவி உங்களை ஒன்னா இருக்கவிட மாட்டா ஈஸ்வரா… புரிஞ்சிக்கய்யா”
சாரங்கபாணி மனைவியின் சொற்களில் அதிருப்தியானார்.
“உமா பிடிவாதத்துக்காக ஈஸ்வரனோட சந்தோசத்தை அடகு வைக்க முடியுமா குழலி?”
அதட்டினார் அவர்.
குழலி மகனையும் கணவரையும் தீர்மானமாகப் பார்த்தார்.
கண்ணீரைத் துடைத்துக் கொண்டார்.
“சங்கவிய எனக்கும் பிடிக்காது… அவ இந்தக் குடும்பத்துக்குச் சரிபட்டுவர மாட்டா… சரியோ தப்போ உமாவோட வீட்டுக்காரர் இந்த வீட்டு மருமகன்… அவரையும் என் மகளையும் மதிக்காதவளை என்னால மருமகளா ஏத்துக்க முடியாது”
சாரங்கபாணி ‘சீ’ என்பது போல மனைவியைப் பார்த்தார்.
மருமகன் செய்த கேடு கெட்ட வேலைகளைப் பற்றி தெரிந்த பிறகும் அவனை ஆதரித்துச் சங்கவியை வெறுக்கிறாள் என்றால் என்ன அர்த்தம்?
இதற்கு மகனது எதிர்வினை எப்படி இருக்குமென அவனது முகத்தைப் பார்த்தார்.
அதில் எதற்கும் அசைந்து கொடுக்காத பாவனை நிரம்பியிருந்தது.
“யாருக்குப் பிடிச்சாலும் பிடிக்கலனாலும் எனக்குச் சங்கவி மட்டும் தான் பொண்டாட்டி”
உறுதியாகத் தனது முடிவைக் கூறிவிட்டான் சரபேஸ்வரன்.
புன்னகைத்த தந்தையையோ திக்பிரமை பிடித்தது போல நின்ற அன்னையையோ அவன் கவனிக்கவில்லை. தனது அறைக்குப் போய்விட்டான்.
அங்கே வந்ததும் படுக்கையில் விழுந்தவன் ஏன் அம்மாவும் அக்காவும் தனது மனதைப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள் எனக் குமுறினான்.
மூர்த்தியைப் பற்றி உண்மை தெரிந்த நாளிலிருந்து அவன் மனம் குற்றவுணர்ச்சியில் புழுங்கித் தவிக்கிறது.
சரியாகப் புரிந்துகொள்ளாமல் சங்கவியுடன் எந்தச் சம்பந்தமும் இல்லை எனும் முடிவுக்கு வந்ததை எண்ணி அவன் வெட்கப்படாத நாளே இல்லை.
இருப்பினும் அவளுடனான உறவைப் புதுப்பிக்க நினைக்கவில்லை. காரணம் அன்னையும் அக்காவும்.
அவர்கள் மனதை வருத்தக்கூடாதென யோசித்து ஒரே ஊரில் வேலை செய்தபோதும் அவளைச் சந்திக்க எண்ணவில்லை.
வாழ்நாள் முழுவதும் தனியாகவே வாழ்ந்துவிடும் முடிவில் இருந்தவனை மீண்டும் சங்கவியைப் பற்றி யோசிக்க வைத்தது சந்தானத்தின் மொபைலில் இருந்த அவளது புகைப்படம்.
அதைப் பார்த்தபிறகு விலகியிருக்க மனமின்றி சந்திப்புக்கான காரணத்தை உருவாக்கியவன் அவள் மனதில் இழந்த இடத்தைப் பிடிக்கப் போராடிக் கொண்டிருக்கிறான்.
ஆனால் யாருக்காகச் சங்கவியை உதறினானோ, அவளை விட்டு விலகியிருந்தானோ அவர்கள் சரபேஸ்வரனின் காதல் கொண்ட மனதின் தவிப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை.
அவர்களின் பிடிவாதமே பிரதானமென நிற்கிறார்கள். இனி அவன் மட்டும் ஏன் பொதுநலமாக யோசித்து வாழ்க்கையை இருளுக்குள் கழிக்க வேண்டும்?
சரபேஸ்வரன் முடிவெடுத்துவிட்டான், இனி சங்கவியுடன் தனது வாழ்க்கையைப் பிணைத்துக்கொள்ள வேண்டுமென்று! அதற்குச் சங்கவியின் சம்மதம் மட்டுமே அவனுக்குத் தேவை. அவள் சம்மதிப்பாளா?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

