“ஒரு மனுசனுக்கு நியாயமா யோசிக்கிற புத்தி அவசியம்னு எங்கப்பா அடிக்கடி சொல்லுவார்… யாரோ ஒருத்தருக்கு அநியாயம் நடக்குறப்ப மூனாவது மனுசங்களைத் தட்டிக் கேக்குறது மட்டும் அந்த நியாயபுத்திக்கு அழகு இல்ல… நமக்கு வேண்டியவங்க தப்பு செஞ்சாலும் அவங்களால பாதிக்கப்பட்டவங்க சார்பா யோசிக்கிறது தான் நியாயபுத்தி… நியாயமா யோசிக்கிறவங்களை அன்பு, பாசம், நேசம் இந்த மூனும் தடுமாற வச்சிடும்… அவங்களை ஒரு சார்பா யோசிக்க வச்சிடும்… அதுக்கு பெஸ்ட் எக்சாம்பிள் சரபன்“
–சங்கவி
“நம்ம வீட்டு மோட்டர்ல ஏதோ பிரச்சனையாம்… முருகனைக் கூட்டிட்டுப் போய் என்னனு பாத்துடுய்யா ஈஸ்வரா”
ஞாயிறு விடுமுறை என்பதால் சாவகசமாக எழுந்து தோசை சாப்பிட்டபடியே தொலைக்காட்சியில் சன் மியூசிக் பார்த்துக்கொண்டிருந்த சரபேஸ்வரனிடம் கூறினார் சாரங்கபாணி.
“சரிப்பா”
“குளிச்சு சாப்பிட்டுட்டுப் பொறுமையா போகலாம்… இங்க இருந்து பைக்லயா போகப்போற?
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“ஆமாம்மா… ஏன் கேக்குற?”
“இன்னைக்கு உமாவும் மாப்பிள்ளையும் ஆழ்வார் திருநகரிக்குப் போறாங்க… அவங்க கூட நீ கார்ல போயிடலாம்ல?”
சரபேஸ்வரன் அதிருப்தியோடு தொலைக்காட்சியை ஆப் செய்தான்.
“எனக்கு அந்தாளோட முகத்தைப் பாக்க பிடிக்கலனு தான் கோயம்புத்தூர்ல இருந்து வந்த நாள்ல இருந்து நான் அக்கா வீட்டுப்பக்கம் எட்டிக் கூடப் பாக்கல… நீ அவன் கூட ஒரே கார்ல போகச் சொல்லுற… புரிஞ்சு தான் பேசுறியாம்மா?”
சரபேஸ்வரனின் குரல் உயரவும் குழலியின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.
“சரிய்யா… உன் இஷ்டம்”
அழுகையை அடக்கிக்கொண்டு கூறியவரின் தோளை ஆதுரமாக அணைத்தான் சரபேஸ்வரன்.
“அந்தாளு நல்லவன் இல்லம்மா… முன்னாடிலாம் எனக்கு ஒரு தங்கச்சி இல்லையேனு நான் எத்தனை தடவை புலம்பிருக்கேன்… அந்தாளைப் பத்தி தெரிஞ்சதுக்கு அப்புறம், நல்லவேளை எனக்கு அப்புறம் நம்ம வீட்டுல பொம்பளைப்புள்ளை பிறக்கலனு நிம்மதியா இருந்துச்சு… நீயும் ஒரு பொண்ணு தானேம்மா? உனக்கு அந்தாளு மேல அருவருப்பு வரல? இப்ப கூட அவனோட டியூசன் சென்டர்ல ஏதோ பிரச்சனை பண்ணிட்டான்… அது எஸ்.பி ஆபிஸ் வரைக்கும் போயிருக்குனு கணபதி சொன்னான்”
மகன் கூறிய செய்தி இரு பெரியவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“ஈஸ்வரா என்னப்பா சொல்லுற?”

சாரங்கபாணி தவிப்போடு மகனைப் பார்த்தார்.
“அந்தாளு வேலை பாக்குற ஸ்கூல்ல இருந்து நிறைய ஸ்டூடண்ட்ஸ் அவனோட டியூசன் செண்டருக்கு வருவாங்களாம்… அதுல ஒரு பொண்ணோட பேரண்ட்ஸ் அவன் மேல எஸ்.பி ஆபிஸ் வரைக்கும் போய்க் கம்ப்ளைண்ட் குடுத்திருக்காங்க”
இப்போது பெரியவர்களின் முகத்திலும் அருவருப்பு.
“இதுல்லாம் உமாக்குத் தெரியுமா? தெரிஞ்சா என் மக உயிரையே விட்டுருவாளே?”
அழ ஆரம்பித்தார் குழலி.
“அந்தாளு எப்பவுமே ஆதாரமில்லாம தானே தப்பு செய்வாரு… அக்கா கிட்ட அந்தப் பொண்ணைப் பத்தி தப்பா சொல்லிருப்பான்… அந்தப் பொண்ணே நேர்ல வந்து சொன்னாலும் அக்கா அவனைச் சந்தேகப்படமாட்டா”
கசந்த குரலில் கூறினான் சரபேஸ்வரன்.
சாரங்கபாணிக்குக் கலக்கம் தீரவில்லை.
“கெட்ட குணத்தை முளையிலயே கிள்ளிடணும்… அதை வளர விட்டா அழிக்கிறது கஷ்டம்… நம்ம தான் தப்பு பண்ணிட்டோம் போல”
வாய்விட்டுப் புலம்பிய மனைவியை எப்படி சமாதானம் செய்வார் அவர்?
“சங்கவி சொன்னப்ப நம்ம யாருமே நம்பல”
சரபேஸ்வரன் ஆதங்கத்துடன் சொல்லிவிட்டுச் செல்லக் குழலியின் அழுகை நின்றது.
“நம்ம வீட்டைப் பத்தி பேசுறப்ப ஏன் அவளை இழுக்கிறான் ஈஸ்வரன்? எனக்கு அந்தப்பொண்ணை சுத்தமா பிடிக்கல… அவ மட்டும் ஈஸ்வரன் வாழ்க்கைல வரலனா இந்தப் பிரச்சனைலாம் வந்திருக்குமா?”
“அவ வரலைனா இன்னமும் நம்ம மருமகன் ரொம்ப உத்தமமான மனுசன்னு முட்டாள்தனமா நம்பிக்கிட்டிருந்திருப்போம்… உனக்கு அது தான் வசதியா குழலி?”
கணவர் கடினமாக வினவவும் குழலி வாயடைத்துப்போனார். இப்போதும் மருமகனின் தவறுகளைப் பற்றி அவருக்குக் கவலையில்லை. அது தெரியவரும்போது மகள் வருந்துவாளே என்ற பயம் மட்டுமே.
ஆண் என்றால் அப்படி இப்படி இருக்கத் தான் செய்வான்; அது ஒன்றும் மாபாதகம் இல்லை என்று கருதும் தலைமுறை அவர்.
ஆனால் சாரங்கபாணி நியாயமாக யோசிக்கும் மனிதர். சங்கவியின் உறவைத் துண்டித்தது தவறென அவருக்குப் புரிந்தது. மகனிடம் அவளைப் பற்றி பேசி அவர்கள் விசயத்தில் நல்ல முடிவை எடுக்கவேண்டுமென அவர் தீர்மானித்துவிட்டார்.
அறைக்குள் வந்த சரபேஸ்வரன் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கும் பழக்கத்தை மறந்து வெறுமெனே குளித்துவிட்டு டீசர்ட் ட்ராக் பேண்டுக்கு மாறினான்.
சிகையை உதறிக்கொண்டவன் பைக் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
“மதிய சாப்பாட்டுக்கு வந்துடு ஈஸ்வரா… உனக்காகப் பருப்பு உருண்டை குழம்பு வைக்கப்போறேன்”
சற்று முன்னர் அழுது அரற்றிய குழலியின் குரல் இப்போது தெளிவாக ஒலிக்கவும் நிம்மதியுற்றவன் “சரிம்மா” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.
பைக்கைக் கிளப்பியவன் சமாதானபுரத்துக்கு வந்ததும் அங்கே ஏறிக்கொண்டான் அவனது நண்பன் கணபதி.
அவன் ஏறியதும் பைக்கைத் திருச்செந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் செலுத்தியபடியே பேசினான் சரபேஸ்வரன்.
“இண்டர்னெல் ஆடிட் என்ன லெவல்ல போகுது?”
“அது நல்லபடியா போகுதுடே… எங்க கம்பெனி சென்னை ஹெட் ஆபிஸ்ல ஃபினான்ஸ் மேனேஜர் போஸ்டுக்கு வான்டட் போட்டிருக்காங்க… அப்ளை பண்ணி வை”
“ப்ச்! எதுக்குடா? வெளியூர்ல வேலை பாத்தா, அவசரத்துக்கு ஊருக்கு வரமுடியலனு தான் கோயம்புத்தூர் வேலைய ரிசைன் பண்ணிட்டு இங்க வந்தேன்”
“நல்ல சேலரி பேக்கேஜ்… எதுக்கும் கொஞ்சம் யோசி”
கணபதி தாழையூத்தில் இயங்கிவரும் சிமெண்ட் தொழிற்சாலையில் இண்டர்னெல் ஆடிட்டராகப் பணியாற்றி வருகிறான்.
சிமெண்ட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுமம் அது.
சரபேஸ்வரனுக்கு அந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் எண்ணமில்லை.
உடல்நலமில்லாத தமக்கை! அவளது கணவரோ சரியில்லை. இந்நிலையில் அவன் வெளியூரில் வேலை செய்தால் ஏதேனும் ஒரு அவசரத்துக்குக் கூட உடனே ஊருக்கு வரமுடியாதே!
கணபதிக்கு ரங்கநல்லூரில் ஒரு வேலை இருந்தது. எனவே அங்கே இறங்கிக்கொண்டவன் “வா மாப்ள! டீ சாப்பிட்டுட்டுப் போகலாம்” எனச் சரபேஸ்வரனை அழைத்தான்.
இத்தாலியன் பேக்கரி அவர்களை வரவேற்றது.
இருவரும் பேக்கரியின் முன்னே போடப்பட்டிருந்த நாற்காலியை ஆக்கிரமித்தனர்.

“ரெண்டு டீ, ரெண்டு பன் பட்டர் ஜாம்”
கணபதி ஆர்டர் செய்தபோது திடுமெனச் சங்கவியின் குரல் சரபேஸ்வரனின் காதில் விழுந்தது.
திரும்பிப் பார்த்தவன் அங்கே சங்கவியே நிற்கவும் புன்னகைத்தான்.
இந்த ஆறு மாதங்களில் எத்தனையோ முறை ரங்கநல்லூருக்கு வந்திருக்கிறான். நதியூரைக் கடந்து ஆழியூருக்குச் சென்றிருக்கிறான். அப்போதெல்லாம் கண்ணில் படாதவள் அலுவலகச் சந்திப்புக்கு அப்புறம் அடிக்கடி கண்ணில் படுகிறாள் என்றால் என்ன அர்த்தம்?
கடவுளுக்கே தாங்கள் இருவரும் மீண்டும் இணைவதில் விருப்பமுள்ளது என்று தானே அர்த்தம்!
சரபேஸ்வரன் தங்களது சந்திப்புக்குக் காரணங்களை அடுக்கிக்கொண்டிருக்க சங்கவி அவளது அன்னையிடம் மொபைலில் பேசிக்கொண்டிருந்தாள்.
“என்ன பப்ஸ் வேணும்? இங்க நிறைய வெரைட்டி இருக்கும்மா… பனீரா? வேண்டாம்… அவளுக்கு நெஞ்செரிச்சல் வரும்… டாக்டர் இதெல்லாம் சாப்பிடலாம்னு சொன்னாங்களா?… ம்ம்…. சரி அதையே வாங்கிட்டு வர்றேன்”
அழைப்பைத் துண்டித்தவள் சரபேஸ்வரனைக் கண்டதும் முதலில் திகைத்தாள்.
“பாத்தது போதும்… டீ எடுத்துக்கடே… எதுவும் விவகாரத்தை இழுத்து வச்சிடாத”
முன்பே சங்கவியை அறிந்தவன் என்ற முறையில் கணபதி நண்பனை எச்சரித்தான். சரபேஸ்வரன் அதைக் கேட்கும் நிலையில் இல்லை.
தேநீர் தம்ளரை சுழற்றி சுழற்றி ஆற்றியவனின் பார்வை சங்கவி மீது பதிய அவள் அவனைக் கண்டுகொள்ளாமல் பப்ஸ் வாங்குவதில் மும்முரமானாள்.
“நாலு வெஜ் பப்ஸ், ரெண்டு பாக்ஸ் கப் கேக்… அப்புறம் ப்ரவுனி இருக்கா?”
“இருக்கும்மா”
“அதுவும் குடுத்துடுங்க… எவ்ளோ ஆச்சு?”
ஊழியர் தொகையைச் சொன்னதும் அவள் பர்சை திறக்கப் போகையில் அவரிடம் பணத்தை நீட்டினான் சரபேஸ்வரன்.
சங்கவி நிமிர்ந்து அவனை முறைத்தாள்.
“எதுக்கு நீங்க பணம் குடுத்திங்க?”
“உனக்காக நான் குடுக்கக்கூடாதா?”
“நான் எனக்காக வாங்கல… என் ஃப்ரெண்ட் கோமதிக்காக வாங்குனேன்”
கோமதியின் பெயரைக் கேட்டதும் சரபேஸ்வரனின் பார்வை மாறியது.
“என்ன பேச்சையே காணும்? எந்தக் கோமதினு ஞாபகம் இல்லையா? நீங்க காதல் கவிதை எழுதிக் குவிச்சிங்களே, அந்தக் கோமதி”
“அதுல்லாம் அவளுக்காக எழுதுனது இல்ல கவி”
“போதும்! உங்க சமாளிப்பை கேட்டு எனக்குப் புளிச்சுப் போச்சு” என்றவள் தான் வாங்கியவற்றுக்காக அவன் கொடுத்த தொகையை அவனது உள்ளங்கையில் வைத்து அழுத்தினாள்.
“அவ இப்ப ப்ரெக்னென்டா இருக்கா… என் ஃப்ரெண்டுக்கு என்னோட பணத்துல வாங்கிட்டுப் போகணும்னு ஆசைப்படுறேன்”
சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றவளிடம் பேசும் ஆவல் சரபேஸ்வரனுக்கு.
விரைந்து கணபதியிடம் வந்தவன் “நீ காசு குடுத்துடு மாப்ள… நான் வந்துடுறேன்” என்று பைக் சாவியை எடுத்துக்கொண்டு அவள் பின்னே ஓடினான்.
“என் பைக்ல வா கவி… நான் உன்னை ட்ராப் பண்ணுறேன்”
பைக்கை உருட்டியபடி அவளைத் தொடர்ந்தான்.
அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தாள் சங்கவி.
“உங்க பைக்ல நான் ஏன் ஏறணும்? ஒழுங்கா போயிடுங்க… இல்லனா செக்போஸ்ட்ல இருக்குற போலீஸ் கிட்ட மாட்டிவிட்டுருவேன்”
மிரட்டிவிட்டு அவள் நடக்க, சரபேஸ்வரன் விடாமுயற்சியில் விக்கிரமாதித்யனைத் தோற்கடிப்பவனைப் போல அவளைத் தொடர்ந்து பைக்கை உருட்டிக்கொண்டு போனான்.
செக்போஸ்டைத் தாண்டிப் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் நடந்தவளை அவனும் விடாமல் தொடர்ந்தான்.
“இப்பிடி நடந்து உன் காலைப் புண்ணாக்கணுமா கவி? பைக்ல ஏறு… என்னை யாரும் எதுவும் சொல்லமாட்டாங்க”
“உங்களை ஒன்னும் சொல்லமாட்டாங்க… ஆனா என்னை அசிங்கமா பேசுவாங்க… ப்ளீஸ் டிஸ்டர்ப் பண்ணாம கிளம்புங்க”
கடுகடுத்து பேசியபடி அவள் நடக்க ஆரம்பித்தாள்.
சரபேஸ்வரனுக்கு அவளின் கோபம் அதீதமெனத் தோன்றவில்லை. அவள் பாதிக்கப்பட்டவள். அவனிடம் கோபத்தைக் காட்டும் முழு அதிகாரத்தையும் கொண்டவள்.
மேகம் கறுக்க மழைத்துளிகள் சாரலாய் விழ ஆரம்பித்தன.
போகும் வழியில் ஆலமரத்தடியில் சுடலைமாடன் கோவில் உண்டு. அங்கே சிறிது நேரம் நின்று விட்டுத் தூறல் ஓய்ந்ததும் செல்லலாமென அவன் கூற சங்கவியோ அவனது பேச்சைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.
“நான் ஒன்னும் மழைத்தண்ணி பட்டதும் முளைச்சிடமாட்டேன்”
“மழையில நனைஞ்சா ஒன்னுமில்ல… தூறல்ல நனைஞ்சா தலைவலி வரும்… இந்தத் தலைவலியோட நாளைக்கு எப்பிடி வேல்ராஜுக்கு ஜி.எஸ்.டி பத்தி சொல்லிக் குடுப்ப?”
ஓ! அது தான் இவனது கவலைபோல! யாருக்கு என்ன ஆனால் என்ன? என் வேலை நடக்கவேண்டுமென்ற மனோபாவம்!
நடப்பதை நிறுத்தியவள் “எனக்கு நிமோனியாவே வந்தாலும் நாளைக்கு ஆபிசுக்கு வந்து ஜி.எஸ்.டி ஃபைலிங் சொல்லிக்குடுத்துடுவேன்… கவலைப்படாதிங்க” என்று குத்தலாக மொழிந்துவிட்டு மீண்டும் நடக்கலானாள்.
பைக்கை நகர்த்தி நகர்த்தி சரபேஸ்வரனின் கைகளும் தோள்பட்டையும் வலிக்கத் தொடங்கின. ஆனால் காதல் வந்துவிட்டால் எப்பேர்ப்பட்ட வலியையும் உடல் தாங்கிக்கொள்ள பழகிவிடுமே!
சங்கவி அவனுக்குக் கை வலிக்கும் என்பதால் நின்றாள்.
“இங்க பாருங்க! இப்பிடி பின்னாடி வர்றதால நான் உங்க பைக்ல ஏறி உக்காந்துடுவேன்னு நினைக்கிறிங்களா? கை வலிக்கத் தள்ளிட்டு வர்றதை நிறுத்திட்டு ஒழுங்கா கிளம்புங்க… இன்னைக்கு சண்டே… எங்க ஊரு பொம்பளைங்க மீன் வாங்குறதுக்கு, கறி வாங்குறதுக்கு நடந்து போவாங்க… அவங்க கண்ணுல நம்ம ரெண்டு பேரும் பட்டோம்னா ஊர்ல இன்னும் என் பேர் கெட்டுப்போகும்… ஒருவேளை அது தான் உங்களோட மோட்டிவா?”

சரபேஸ்வரன் இல்லையென மறுத்தான்.
“நீ தனியா நடந்து போறது பாதுகாப்பு இல்லனு உன் கூட வர்றேனே தவிர வேற எந்த உள்நோக்கமும் கிடையாது கவி… நீ என்னை நம்ப மாட்டியா?”
“ஒரு தடவை உங்களை நம்பி மோசம் போயிட்டேன்ல… அதான் இன்னொரு தடவை நம்புறதுக்குப் பயமா இருக்கு”
அவளது பேச்சு சரபேஸ்வரனின் மனதைக் குத்தியது.
“கிளம்புங்க சரபன்”
சொல்லிவிட்டு விறுவிறுவென அவள் நடக்க சரபேஸ்வரன் அதே இடத்தில் நிற்க அப்போது சாலையில் வந்த மஹிந்திரா பொலேரோ அங்கே நின்றது.
அதிலிருந்து பரபரப்போடு இறங்கினார் உமா. கூடவே மூர்த்தியும்.
இருவரும் ஆழ்வார் திருநகரிக்குப் போய்க்கொண்டிருந்தனர். வழியில் சங்கவியையும் அவளைத் தொடர்ந்து செல்லும் தம்பியையும் பார்த்ததும் உமாவுக்கு மூளை வேலை செய்யவில்லை.
வேகமாகக் காரை நிறுத்தும்படி பணித்தார்.
இறங்கியவர் சரபேஸ்வரனிடம் வந்து படபடபக்க ஆரம்பித்தார்.
“என்ன ஈஸ்வரா இதுல்லாம்?”
சங்கவியைக் காட்டி கேட்டார் அவர்.
“சங்கவிக்குத் துணையா வந்தேன்கா”
சரபேஸ்வரன் சாதாரணமாகச் சொல்லவும் உமாவுக்குக் கோபம் வந்துவிட்டது.
உமாவின் குரல் கேட்டுச் சங்கவி நின்றுவிட்டாள். நின்றவள் திரும்பிப் பார்த்த அடுத்த நொடி அவளை நோக்கி வசைமாரி பொழிந்தார் உமா.
“இவ எப்பிடிப்பட்டவனு தெரிஞ்சதுக்கு அப்புறமும் இன்னும் இவளை மறக்கலையா ஈஸ்வரா? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம உன் மாமா மேல எப்பிடிப்பட்ட பழிய போட்டா இவ? இந்தக் கேடுகெட்டவளை தான் நீ காதலிக்கணுமா? இவ வந்தா நம்ம குடும்பம் மொத்தமா அழிஞ்சிடும்டா… அக்கா சொல்லுறேன், கேக்க மாட்டியா நீ?”
அவர் பேசிய வார்த்தைகளில் சங்கவியின் முகம் கறுத்தது.
விறுவிறுவென அவர்கள் அருகே வந்தவள் மூர்த்தியைப் பார்த்த பார்வையில் அருவருப்பு மட்டுமே இருந்தது.
“இப்பிடி ஒரு உத்தம புருசனை வச்சுக்கிட்டு நீங்க என்னைப் பத்தி தப்பா பேசுறிங்களா? அசிங்கமால்ல உங்களுக்கு? அதான் உங்க தம்பிக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லனு சொல்லி எங்களைப் பிரிச்சிட்டிங்கல்ல… இப்ப எந்த உரிமைல என்னை அசிங்கமா பேசுறிங்க? இனிமே பொது இடத்துல வேற யார் கிட்டவாச்சும் என்னைப் பத்தி தப்பா பேசுனிங்கனு கேள்விப்பட்டேன்னா உங்க புருசன் யோக்கியதை என்னனு ஊர் முழுக்க போஸ்டர் அடிச்சி ஒட்டிடுவேன்… அப்புறம் உங்க மூஞ்சிய எங்க கொண்டு போய் வச்சிப்பிங்கனு நானும் பாக்குறேன்”
“ஏய் என் கண்ணு முன்னாடியே என் பொண்டாட்டிய தப்பா பேசுறியாடி?”
மூர்த்தி எகிறிக்கொண்டு வரவும் சங்கவி அவரைப் பார்த்தபடி தரையில் உமிழ்ந்தாள்.
“இன்னொரு தடவை ‘டி’ போட்டுப் பேசுன, தரையில துப்பமாட்டேன்… ஜாக்கிரதை”
ஆட்காட்டிவிரலை நீட்டி அவள் எச்சரிக்கவும் மூர்த்திக்கு அசிங்கமாய் போய்விட்டது.
“புருசனும் பொண்டாட்டியும் முடிஞ்சா மிஸ்டர் சரபேஸ்வரனைக் கன்ட்ரோல் பண்ணுங்க… அதை விட்டுட்டு என் வழில க்ராஸ் பண்ணுனிங்கனா, ஏன்டா இவ கிட்ட வம்புக்குப் போனோம்னு வருத்தப்படுவிங்க… உங்க விசயத்துல நாசுக்கு நாகரிகம் எதுவும் பாக்கமாட்டேன்”
சங்கவி பேசிக்கொண்டே போகையில் “அத்தை” என்ற குரல் கேட்டது.
பேச்சை நிறுத்திவிட்டு காரைப் பார்த்தாள் சங்கவி.
அதன் பின்னிருக்கையிலிருந்து இறங்கிவந்தான் ஆனந்த்.
ஐயோ! இவன் உள்ளேயா இருந்தான்? சிறுவன் காதுபட அநாகரிகமாகப் பேசிவிட்டோமே!
சங்கவி மானசீகமாகத் தன்னைக் கடிந்துகொண்டாலும் வெளிப்பார்வைக்கு எந்த உணர்வையும் காட்டவில்லை.
ஆனந்த் அவர்களை நெருங்கி வந்து நின்றான்.
“அம்மாவும் அப்பாவும் பேசுனதுக்கு சாரித்தை”
சங்கவியின் பார்வை இளகியது.

“இது பெரியவங்க விவகாரம் ஆனந்த்… நீ போய்க் கார்ல உக்காரு”
ஆனந்தும் அவளது பேச்சுக்கு மரியாதை கொடுத்துக் காருக்குள் சென்று அமர்ந்தான்.
உமாவையும் மூர்த்தியையும் துச்சமாகப் பார்த்தாள் சங்கவி.
“பதினைஞ்சு வயசு பையனுக்கு இருக்குற அறிவு கூடச் சில முழு மாடுங்களுக்கு இல்ல”
இவ்வளவையும் வேடிக்கை பார்த்தபடி சரபேஸ்வரன் அமைதியாய் நின்றது அவளுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தது. அக்காவைப் பற்றி ஒன்று சொன்னால் குதித்துக்கொண்டு சண்டைக்கு வருவானே! அந்தச் சரபேஸ்வரனா இவன்?
ஆச்சரியத்தை அடக்கிக்கொண்டு அங்கிருந்து வேகமாக நடக்கத் தொடங்கினாள் சங்கவி.
உமாவும் மூர்த்தியும் கறுத்த முகத்தோடு காரில் ஏறினர்.
கார்க்கண்ணாடி வழியே தம்பியைப் பார்த்தார் உமா.
அவனது வெறித்த பார்வை சங்கவி போன திசைமீது படிந்திருந்தது. கார் கிளம்பிய பிறகும் அவனது பார்வை திசை மாறவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

