“குடும்பத்துல பிறக்குற முதல் குழந்தை பொண்ணாவும் ரெண்டாவது குழந்தை ஆணாவும் இருந்தா அந்த ஆண் குழந்தைக்கு ரெண்டு அம்மாவோட பாசம் கிடைக்கும்னு ஊர்ப்பக்கத்துல சொல்லுவாங்க… அக்காங்கிற உறவு நிறைய நேரங்கள்ல நமக்கு அம்மாவா மாறிடும்… தம்பிக்காகத் தனக்குப் பிடிச்ச பொம்மைய விட்டுக்குடுக்குறதுல ஆரம்பிச்சு அம்மா அப்பா கிட்ட திட்டு வாங்குறப்ப காப்பாத்துறது வரைக்கும் ஒவ்வொரு அக்காவும் அம்மாவோட மினி வெர்சன்… எங்க உமாக்காவும் அப்பிடி தான் இருந்தா, மூர்த்தி மாமாவ கல்யாணம் பண்ணிட்டுப் போறவரைக்கும்… அதுக்கு அப்புறம் அவர் பேச்சு அவளுக்கு வேதவாக்கா மாறிடுச்சு… அப்புறம் அவளும் மாறிப்போயிட்டா… ஆனா இன்னைக்கு வரைக்கும் மாறாத ஒரு விசயம், அவ என் மேல வச்சிருக்குற பாசம்”
–சரபேஸ்வரன்
திருப்பதி மைன்ஸ் அலுவலகம், ஸ்ரீபுரம்…
“இது புரியுதுல்ல தம்பி? டவுட் இருந்தா கேளுங்க”
வேல்ராஜிடம் டி.டி.எஸ் தாக்கலின்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை விளக்கிவிட்டுக் கேட்டாள் சங்கவி.
“புரியுதுக்கா… இன்னைக்குள்ள வவுச்சரை டேலில ஏத்திட்டு அப்புறமா ரஃபா டி.டி.எஸ் என்ட்ரீஸ் போட்டுப் பாத்துட்டு டவுட் இருந்தா கேக்குறேன்” என்றான் அவன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“சரிப்பா… நீ உன் வேலைய பாரு”
மாலை ஐந்து மணி ஆகிவிட்டது. அனிச்சை செயலாக அன்று நாள் முழுவதும் சரபேஸ்வரனின் கேபின் பக்கம் போய் போய் வந்தன அவளின் விழிகள்.
முந்தைய தினம்போல அவன் அவளிடம் வம்படியாகப் பேச முயலவில்லை.
குற்றவுணர்ச்சியாக இருக்கும் என நினைத்தாலும் மனதின் ஓரத்தில் மெல்லிய ஏமாற்றம் பரவியதை சங்கவி வலுக்கட்டாயமாக மறைத்துக்கொண்டாள்.
“நேத்து நீ ரோட்ல வச்சு கடிச்சு வச்சல்ல… அந்தப் பயத்துல உன்னை ஃபேஸ் பண்ண முடியாம கேபினுக்குள்ள அடைஞ்சு கிடக்குறார் போல” என்று மனசாட்சி வேறு காரணம் சொல்லச் சங்கவி மொபைலில் முகப்புத்தகத்தைப் பார்க்க ஆரம்பித்தாள்.
இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டுக்குக் கிளம்ப வேண்டும் என அவள் தயாராகும்போதே தேநீர் வந்துவிட்டது.
மொத்த அலுவலகத்துக்கும் பக்கத்து டீக்கடையிலிருந்து ஒருவர் தேநீர் கொண்டு வருவார். ஏலக்காய் போட்டு மணமாக இருக்கும் அந்தத் தேநீரை அருந்தினால் அவ்வளவு புத்துணர்ச்சியாக இருக்கும் சங்கவிக்கு.
அவள் முன்னே இருந்த பேப்பர் கப்பில் ஆவி பறந்து கொண்டிருந்தது.
“சமோசா வேணுமா மேடம்?”
தேநீர் கொண்டு வந்த நபர் கேட்கச் சங்கவி பதிலளிக்கும் முன்னர் “வெங்காயபோண்டா இருந்தா குடுங்க” என்று சரபேஸ்வரனின் குரல் கேட்டது.
சங்கவியின் கண்கள் ஆவலாய் அவனைத் தேட கேபின் வாசலில் ஒரு காலை மடித்து சுவரில் சாய்ந்தபடி தேநீரைப் பருகிக்கொண்டிருந்தான் சரபேஸ்வரன்.
உதடுகள் தேநீரைப் பருகியபோதே விழிகள் அவளது அழகை அனுமதியின்றி அல்லவா பருகிக்கொண்டிருந்தன!

“நான் கடைக்குப் போய் எடுத்துட்டு வர்றேன் சார்”
தேநீர் கொண்டு வந்த நபர் செல்லச் சங்கவியின் கண்டனப்பார்வை சரபேஸ்வரனைத் துளைக்கத் தொடங்கியது.
அவனோ காகித கோப்பையை வெற்றிக்கோப்பை போல உயர்த்திக் காட்டி தேநீரைப் பருகும்படி சொல்லிவிட்டு மீண்டும் கேபினுக்குள் தஞ்சம் புகுந்துகொண்டான்.
நாள் முழுவதும் அவனைக் காணாததால் இருந்த பரிதவிப்பு அடங்கி இப்போது அவனது செய்கைகள் உண்டாக்கிய கடுப்பு சங்கவியைத் தொற்றிக்கொண்டது.
மொத்த கடுப்பையும் காலியான காகித கோப்பையில் காட்டி நசுக்கியபோது வெங்காயபோண்டா சூடாக வந்து சேர்ந்தது.
“எனக்கு வேண்டாம்ணே… கேபினுக்குள்ள சார் இருக்கார்ல, அவருக்குக் கொண்டு போய்க் குடுங்க”
அவரும் கேபினுக்குள் சென்றுவிட ஹாலின் மூலையிலிருந்த குப்பைத்தொட்டியில் காகித கோப்பையைப் போட்டுவிட்டு இன்னொரு மூலையிலிருந்த தண்ணீர் கேனிலிருந்து தண்ணீரைப் பிடித்து அருந்தினாள் சங்கவி.
தேநீரோ காபியோ குடித்த பிற்பாடு உடனே தண்ணீர் குடிக்கும் இந்தப் பழக்கத்தை அழகுநாச்சி எத்தனை முறை கண்டித்தும் பயனில்லை.
“ப்ச்! காபி டீ குடிச்சதுக்கு அப்புறம் வாய்ல பால் ஸ்மெல் வரும்… நாக்கு ஒரு மாதிரி நமநமனு இருக்கும்… தண்ணி குடிச்சா அதுல்லாம் போயிடும்மா” என்பாள் சங்கவி.
தண்ணீர் குடித்துவிட்டு கைக்கடிகாரத்தைப் பார்த்தவள் நேரம் ஐந்தே முக்கால் ஆகிவிடவும் சந்தானத்திடம் சொல்லிக்கொண்டு கிளம்பலாம் என்ற முடிவுக்கு வந்தாள்.
அவர் மேல்தளத்திற்கு வந்ததும் அனுமதி வாங்கினாள்.
“இன்னைக்கு புதன்கிழமைல்ல சார்… ஈவ்னிங் சந்தை முடியுறதுக்குள்ள போனா காய்கறி மலிவா இருக்கும்… அம்மாவால சந்தைக்குப் போக முடியாது… இப்ப தான் அவங்க ஹெல்த் கொஞ்சம் பரவால்ல”
“சரிம்மா… நீ கிளம்பு… பத்திரமா போயிட்டு வா”
சந்தானத்திடம் சொல்லிக்கொண்டு வேல்ராஜின் மேஜைக்கு வந்தாள்.
“போயிட்டு வர்றேன் ராஜ்… எதுவும் டவுட்னா கால் பண்ணுப்பா”
“சரிக்கா… பை”
வேல்ராஜ் வவுச்சர்களை டேலி மென்பொருளில் ஏற்ற ஆரம்பித்துவிட சங்கவியும் கிளம்பினாள்.
பருவமழைக்காலம் என்பதால் வானம் தூறல் போட்டுக்கொண்டிருந்தது.
சங்கவி திருநெல்வேலி ஜங்சன் பேருந்து நிலையத்தை அடைந்ததும் நல்லவேளையாக ரங்கநல்லூருக்குச் செல்லும் நகரப்பேருந்து புறப்படத் தயாராகியிருந்தது.
வேகமாக ஏறிக் கிடைத்த இருக்கையில் அமர்ந்தவள் பயணச்சீட்டை வாங்கிய பிறகு காதுகளில் ஹெட்போனை மாட்டிக்கொண்டாள்.
ரங்கநல்லூர் வந்தபிறகு தான் அதைக் கழற்றிவிட்டு இறங்கினாள்.
மாலையில் நல்ல மழை பெய்திருந்தது போல. ஆங்காங்கே மழைத்தண்ணீர் குட்டையாகத் தேங்கிக் கிடந்தது.
அதில் கால் படாமல் தாவித் தாவி வந்தவள் ரங்கநல்லூர் சந்தை கூடும் சமுதாய நலக்கூடத்திற்கு வந்துவிட்டாள்.
வியாபாரிகள் ஆங்காங்கே மினிவேன்களில் காய்கறி, பழங்களை வைத்துவிட்டு வாங்க வரும்படி அழைப்பு விடுத்துக்கொண்டிருந்தனர்.
ஒரு வாரத்துக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக்கொண்டவள் மீண்டும் நதியூர் செல்வதற்கான பேருந்துக்காக ரங்கநல்லூர் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
நடந்து செல்லும்போது தான் மஹிந்திரா பொலேரோ கார் ஒன்று அவளைக் கடந்து போய் மீன் விற்குமிடத்தில் நின்றது.
அதிலிருந்து இறங்கியவரைப் பார்த்ததும் சங்கவியின் மனம் குமுறத் துவங்கியது.
“வாங்க உமாக்கா… ஆளையே பாக்க முடியல… ஆழியூருக்கு வந்துட்டு திரும்பிப் போறிங்களாக்கும்?”
தெரிந்த பெண் ஒருவர் கேட்கவும் போலியான சலிப்போடு பேச ஆரம்பித்தார் உமா, சரபேஸ்வரனின் தமக்கை.
“என் தம்பிக்கு வெள்ளை நெத்திலினா உயிரு… அவனுக்கு நான் தானே பிடிச்சதை செஞ்சுக் குடுக்கணும்… ஸ்ரீபுரத்துல பெரிய கம்பெனில மேனேஜர்னு தான் பேரு, இப்பவும் நான் மீன் குழம்பு வச்சா தான் அவனுக்குப் பிடிக்கும்… இங்க வந்து ஆறு மாசம் ஆகுது… என் வீட்டுப்பக்கம் வர முடியாதளவுக்கு அவனுக்கு வேலை அதிகம்… அதான் நானே அம்மா வீட்டுக்கு மீன் வாங்கிட்டுப் போய்க் குழம்பு வச்சு குடுக்கலாம்னு நினைச்சேன்”
நின்று கொண்டிருந்த சங்கவி அதற்கு மேலும் உமாவின் குரலைக் கேட்கப் பிடிக்காமல் நடக்க ஆரம்பித்தாள்.

இன்னும் தமக்கை ஆட்டிவைத்தபடி ஆடும் பொம்மையாகத் தான் இருக்கிறான் போல!
தம்பிக்குப் பிடித்த சாப்பாட்டில் காட்டிய கவனத்தை அவனுக்குப் பிடித்த வாழ்க்கையை அமைத்துத் தருவதில் உமா காட்டியிருக்கலாம்.
பிடித்த வாழ்க்கையை அமைத்துத் தர இயலவில்லை என்றால் கூடப் பரவாயில்லை. அவனாகத் தேர்ந்தெடுத்த வாழ்க்கைக்கு இடையூறாக நிற்காமல் இருந்திருக்கலாம்.
அதில் ஒன்றைக் கூடச் செய்யாமல் தன் விருப்பத்திற்கு அவனை ஆட்டிப்படைத்த பெரிய மனுசியின் குரலைக் கேட்கும் எண்ணம் சங்கவிக்கு இல்லை.
“நல்லப்பொண்ணை விரும்புன நீ… கல்யாணத்துக்கு அப்புறம் மறுவீட்டுக்குப் போனனா உனக்குச் சாம்பாரும் ரசமும் தான் இவங்க வீட்டுல கிடைக்கும்… இவங்க மரக்கறி சாப்பிடுறவங்களாம் ஈஸ்வரா… அம்மைக்கும் மகளுக்கும் கவுச்சி ஆகாதாம்… அவங்கப்பா கூட அதனால வெஜிடேரியனுக்கு மாறிட்டார்னு கேள்விப்பட்டேன்”
ஒரு காலத்தில் தனது உணவுமுறையைக் கூட நக்கல் செய்தவர் தானே! அவரைப் பற்றி நினைத்தால் வீணாய் மனக்குமுறல் தான் மிஞ்சுமெனப் பேருந்து நிறுத்தத்துக்குச் சென்றுவிட்டாள் அவள்.
அதே நேரம் உமா மீன் விற்கும் பெண்மணியிடமிருந்து வெள்ளை நெத்திலி மீனை வாங்கிக்கொண்டு காரில் ஏறினார்.
“இதுக்கு மேல எப்பக்கா குழம்பு வப்பிய?”
டிரைவர் கேட்கவும் “நைட் இட்லி அவிச்சு மீன்குழம்பு வச்சு குடுத்தா என் தம்பி பிரியமா சாப்பிடுவான்” என்றார் உமா கர்வத்தோடு.
அந்தக் கர்வத்தை மூக்கில் ஜொலித்த வைரமூக்குத்தி இன்னும் அதிகரித்தது எனலாம். கம்பீரமான அழகுடன் கூடிய முப்பத்தேழு வயது பெண்மணி.
மூர்த்தியின் சகதர்மிணி. அவரது மைந்தன் ஆனந்தை விடத் தம்பி சரபேஸ்வரன் மீது உமாவுக்குப் பாசம் அதிகம். உரிமையுணர்வும் அதிகம்.
உலகத்தில் உள்ள சிறந்தவை எல்லாம் தம்பிக்குக் கிடைக்கவேண்டுமென நினைக்கும் சராசரி அக்கா அவர்.
தன்னை விட அவனுக்கு வேறு யாரும் நல்லது நினைத்துவிட முடியாதென்ற கர்வம் உமாவுக்கு என்றுமே உண்டு.
கார் சாலையில் வேகமெடுத்துக்கொண்டிருக்க உமாவின் மொபைலில் மூர்த்தியிடமிருந்து அழைப்பு வந்தது.
உடனே அழைப்பை ஏற்றவர் “சொல்லுங்க மாமா” என்றார்.
“நான் சொன்னபடி ஈஸ்வரனைப் பாக்க தானே போற? இல்ல பூர்வீக வீட்டைப் பாத்த சந்தோசத்துல அங்கயே தங்கிட்டியா?”
மறுமுனையில் அதிகாரத்தொனியில் கேட்டார் மூர்த்தி.
உமாவுக்கு இவ்வளவு நேரம் இருந்த கர்வம் மறைந்துவிட்டது.
“நான் கிளம்பிட்டேன் மாமா… வர்ற வழில ரங்கநல்லூர் சந்தைல ஈஸ்வரனுக்குப் பிடிக்கும்னு வெள்ளை நெத்திலி வாங்குனேன்… நீங்க ஒன்னும் கவலைப்படாதிங்க… நம்ம நினைச்ச மாதிரி ஆழ்வார் திருநகரி பொண்ணை அவனுக்குப் பேசி முடிக்க நானாச்சு.. என் பேச்சை என் தம்பி தட்டவே மாட்டான்”
பவ்வியமாகக் கணவருக்குப் பதிலளித்தார்.
“அவன் பழைய ஈஸ்வரன் இல்லடி… நேத்து அவன் பார்வையே சரியில்ல, தெரியுமா?”

கொதிப்பாய் கேட்டார் மூர்த்தி.
“நான் பாத்துக்கிறேன் மாமா… நீங்க டென்சன் ஆகாதிங்க… டியூசன் சென்டர்ல ஏதோ பிரச்சனைனு சொன்னிங்கல்ல, அதைப் பாருங்க… ஈஸ்வரன் கல்யாணம் முடிஞ்சாச்சுனு நினைச்சுக்கோங்க”
“சரி உமா… பாத்து பத்திரமா போ”
உமாவின் வதனம் மூர்த்தியின் அக்கறையான பேச்சில் ஜொலித்தது. மனம் குளிர்ந்து போனது. கணவனே கண் கண்ட தெய்வம் என வாழும் பெண் அவர்.
உமா திருமண வயதில் இருந்தபோது சாரங்கபாணியின் குடும்பம் சற்று சிரமதிசையில் இருந்தது.
எத்தனையோ மாப்பிள்ளைகள் வேண்டாமெனத் தட்டிக் கழித்த விரக்தியில் இருந்த உமாவைப் பார்த்ததும் பிடித்துப்போய்விட்டதெனக் கூறி வரதட்சணை கூட வாங்காமல் மணந்தவர் மூர்த்தி.
உமாவின் அழகு அப்படிப்பட்டது. முப்பத்தேழிலும் சௌந்தர்யவதியாக மின்னுபவர் இருபத்திரண்டில் பேரழகியாக ஜொலிப்பார். அவரை வேண்டாமென மறுக்க எந்த மடையனுக்கு மனம் வரும்?
பெற்றோரைக் கஷ்டப்படுத்தாத கணவன்! வார்த்தைக்கு வார்த்தை தனது அழகை ஆராதிக்கும் கணவன்! எந்தப் பெண்ணுக்கு இப்படிப்பட்டவனை பிடிக்காமல் போகும்?
உமாவுக்கும் மூர்த்தியைப் பிடித்துப்போனது. அவர்மீது குருட்டு நம்பிக்கை வருமளவுக்கு அன்பு. அவர் சொன்னால் நரக வாசலுக்குப் போகவும் தயாராகும் அளவுக்கு நேசம்.
தன் மீதும் மூர்த்திக்கு அவ்வளவு அன்பு, நேசம் இருக்குமென்ற அதீத நம்பிக்கையே உமாவை இத்தனை ஆண்டுகாலம் கர்வத்தோடு நடமாட வைத்திருக்கிறது.
அந்த நம்பிக்கையை யார் உடைக்க விரும்புகிறார்களோ அவர்கள் எல்லாரும் மூர்த்திக்கு மட்டுமன்றி உமாவுக்கும் எதிரிகளே! அப்படி எதிரியாகிப் போனவள் தான் சங்கவி.
அவளை மீண்டும் தம்பி சந்தித்ததாக மூர்த்தி கூறியதுமே ஆழியூர் சீனிவாசப்பெருமாளிடம் வேண்டுதல் வைத்துவிட்டார் உமா.
“என் தம்பிய பிடிச்ச தரித்திரம் ஒழிஞ்சிடுச்சுனு நினைச்சேன்… அது மறுபடியும் அவன் வழியில குறுக்க வருதே! நான் இருக்குற வரைக்கும் அவ நினைக்குறது நடக்காது… ஆழ்வார் திருநகரி மாலதிய என் தம்பிக்கு நானே கல்யாணம் பண்ணிவைப்பேன்” என அவரிடம் சூளுரைத்தார் உமா.
மாதம் ஒரு முறை ஆழியூரில் சாரங்கபாணி குடும்பத்தோடு வாழ்ந்த பூர்வீக வீட்டைச் சுத்தம் செய்யப் போவார் உமா.
அன்றும் அப்படி கிளம்பியவர் சந்தை அருகில் சங்கவியைப் பார்த்ததும் வேண்டுமென்றே இறங்கி சரபேஸ்வரன் இன்னும் தனது கட்டுப்பாட்டில் இருப்பதை உரத்தக் குரலில் கூறி கர்வப்பட்டார்.
இன்னும் எதுவும் மாறவில்லையென நினைத்துச் சங்கவி சரபேஸ்வரனிடம் இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டுமெனத் திட்டமிட்டே அவ்வாறு பேசினார்.
சங்கவியும் அவரது பேச்சைக் கேட்டுவிட்டு விறுவிறுவென ஓடிவிட சந்தோசமாக இருந்தது உமாவுக்கு.
அதே சந்தோசத்துடன் கோடீஸ்வரன் நகரிலிருக்கும் ஸ்கந்த பவனத்துக்கு வந்தவர் தம்பிக்காக அம்மியில் அரைத்து நெத்திலி மீன் குழம்பு வைத்தார்.
சரபேஸ்வரன் வீட்டுக்குள் வரும்போதே மீன் குழம்பின் நறுமணம் அவனது நாசியைத் துளைத்தது.
ஹாலில் அமர்ந்து தொலைகாட்சி தொடரைப் பார்த்துக்கொண்டிருந்த அன்னையைப் பார்த்ததும் குழம்பு வைத்துக்கொண்டிருப்பவர் யாரென அவனுக்குப் புரிந்துபோனது.
“அக்கா வந்திருக்காளாம்மா?”
அவனது குரல் கேட்கவும் சமையலறையிலிருந்து தண்ணீர் சொம்போடு ஓடிவந்தார் உமா.
“நானே தான்… இந்தா முதல்ல தண்ணிய குடி”
தமக்கை நீட்டிய தண்ணீர் சொம்பை காலி செய்துவிட்டுக் கொடுத்தான் சரபேஸ்வரன்.
“உனக்காக நானே அம்மில அரைச்சு நெத்திலி மீன் குழம்பு வச்சிருக்கேன் ஈஸ்வரா… இன்னும் கொஞ்சநேரத்துல இட்லியும் ரெடியாகிடும்… நம்ம எல்லாரும் ஒன்னா உக்காந்து சாப்பிடலாம்… சரியா? இப்ப போய் முகத்தைக் கழுவிட்டு வா… நான் உனக்குக் காபி போட்டு எடுத்துட்டு வர்றேன்”
உமா அன்பும் அனுசரணையுமாகக் கூறினார்.
போன வாரம் கூட உடல்நிலை முடியாமல் போன தமக்கை அம்மியில் அரைத்துக் குழம்பு வைக்கிறாள் என்றால் ஏதோ தீவிரமான காரணம் இருக்கிறதென புரிந்துகொள்ளச் சரபேஸ்வரனுக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.
“மீன் குழம்பை நீங்க எல்லாரும் சாப்பிடுங்க அக்கா… ஆனந்துக்கும் உன் வீட்டுக்காரருக்கும் எடுத்துட்டுப் போ”
“நான் உனக்காக வச்சேன் ஈஸ்வரா”
உமா ஆதங்கத்துடன் கூறவும் மென்மையாகச் சிரித்தான் சரபேஸ்வரன்.
“நான் கவுச்சி சாப்பிடுறதை விட்டுட்டேன்கா… நீ இட்லி அவிச்சு வை… நான் பொடி வச்சு சாப்பிட்டுக்கிறேன்”
அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் தனது அறைக்குள் போய்விட்டான் அவன்.
தம்பியின் பேச்சு உமாவை அதிர வைத்தது.
“என்னம்மா இவன் இப்பிடி பேசுறான்?”

மனத்தாங்கலோடு அன்னையிடம் முறையிட்டார் உமா.
“வேண்டாம்னா விட்டுடேன் உமா”
அவரும் இவ்வாறு கூற உமாவுக்கு சங்கவியின் ஞாபகம் வந்தது. அவள் சுத்த சைவம். அவளுக்காகத் தம்பி அசைவத்தைத் தவிர்க்கிறானோ?
அந்த எண்ணம் மனதுக்குள் கூடை நெருஞ்சி முள்ளை அள்ளி வீசிவிட இனி உமாவின் மனதில் அமைதிக்கு இடமேது?
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

