“சில சந்திப்புகள் எதிர்பார்க்காத சிச்சுவேசன்ல நடக்கும்… அந்த சந்திப்பு மறக்க முடியாத தருணமா மாறும்… அப்பிடிப்பட்ட தருணம் தான் நானும் கவியும் முதல்ல சந்திச்ச தருணம்… அதை எப்பவுமே என் மனசு மறக்காது… கொஞ்சம் மோசமான சிச்சுவேசன் வர்றப்ப அந்த மெமரிய மறுபடி ரீவைண்ட் பண்ணி பாப்பேன்… தேன்மிட்டாய கடிக்கிறப்ப ஜீரா நாக்குல சொட்டு சொட்டா பரவி இனிப்போட உச்சத்தை ஃபீல் பண்ண வைக்குமே, அதே மாதிரி என் மனசு கஷ்டப்படுறப்ப அந்த தருணத்தோட நினைவு என் மனசுல சந்தோசத்தைப் பரவ வைக்கும்“
– சரபேஸ்வரன்
நான்காண்டுகளுக்கு முன்பு…
கடைசி நேரத்தில் பேருந்தை தவறவிட்ட அவசரத்தில் கணபதியின் அண்ணன் காண்டீபனின் பைக்கில் அமர்ந்தான் சரபேஸ்வரன். அவனுக்குப் பின்னே கணபதி இடித்துக்கொண்டு அமர பைக் சாலையில் பறந்தது.
அப்போது அவன் சி.எம்.ஏ (Cost and Management Accountant) இண்டர்மீடியட் படித்துக் கொண்டிருக்கும் முதுகலை வணிவியல் இறுதியாண்டு மாணவன்.
அன்றைய தினம் சி.எம்.ஏ இண்டர்மீடியட் தேர்வின் இறுதி பரிட்சை.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவனுடைய கல்லூரியில் தான் தேர்வுமையம் அமைந்திருந்தது. வழக்கமாகச் செல்லும் தனியார் பேருந்து மழை என்பதால் பக்கத்து ஊரான சேரகுளத்தில் பழுதாகி நின்று காலை வாரி விட்டது.
கடைசியாக வந்த பேருந்தில் அவன் ஓடிச் சென்று ஏறும் முன்னர் நடத்துனர் விசிலடித்துவிட அதையும் தவறவிட்டவன் கணபதி காண்டீபனுடன் வரவும் பைக்கில் ஏறிக்கொண்டான்.
வானம் நசநசவென தூறல் போட்டுக்கொண்டிருந்தது.
“பஸ்சை முந்தி போய் நதியூர்ல நிறுத்துண்ணே… நாங்க அங்க ஏறிக்கிடுறோம்”
சரபேஸ்வரன் சொல்ல காண்டீபனும் அந்த அரசு நகரப் பேருந்தைக் கடந்து வேகமாய் போய் நதியூர் பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டான் இருவரையும்.
“ஹால் டிக்கெட் நனையாம பத்திரமா இருக்கானு பாத்துக்கங்கல… நேத்து இந்தப் பய ஹால் டிக்கெட்டுக்காக என்னை அலைய வச்சிட்டான்”
கணபதியைக் காட்டி காண்டீபன் எச்சரித்தான்.
“இருக்குண்ணே… பஸ் வந்துடுச்சு… நாங்க போயிட்டு வர்றோம்”
“நல்லா பரிட்சை எழுதுங்க”
காண்டீபன் பைக்கோடு ரங்கநல்லூருக்குக் கிளம்பிவிட பேருந்து நிறுத்தத்தில் நின்ற மாணவிகள் இருவரோடு ஐக்கியமாகி ஏறத் தயாராயினர் கணபதியும் சரபேஸ்வரனும்.
பேருந்து நின்றதும் இறங்குபவர்களுக்கு சரபேஸ்வரன் வழிவிட்டு நின்றான்.
ஒரு இளம்பெண்ணும் கணபதியும் ஏற பேருந்தின் பின்வாயிலில் பாளை மார்க்கெட்டுக்குப் பூ மூட்டைகளை ஏற்றினார்கள் வியாபாரிகள்.
சரபேஸ்வரன் கணபதியைத் தொடர்ந்து ஏறியபோது கால் கடைசி படியில் இடறி அவன் விழப்போனான்.
அதற்குள் அவனது இருபுறமும் கம்பியை இறுக்கமாகப் பிடித்தபடி வளைகரங்கள் நீள, சரபேஸ்வரனின் உடல் பின்னே நின்ற நபர் மீது மொத்தமாய் சாய்ந்தது.
அந்நபர் அவனது எடையைத் தாங்கிக்கொள்ள அவன் சுதாரித்து பக்கவாட்டு கம்பியைப் பிடித்துக்கொண்டான்.
“தேங்கஸ்ணே”
நன்றி உரைத்தபடி திரும்பியவன் “என்னைப் பாத்தா அண்ணன் மாதிரியா இருக்கு?” என்று குறுஞ்சிரிப்போடு கடந்து சென்ற கருநீல வண்ண சுடிதார் பெண்ணைப் பார்த்ததும் மௌனமாகிவிட்டான்.
பனியில் நனைந்த மலர் என்பார்களே! அதை போல மழைத்தூறல் அவளது வதனத்தை ஆங்காங்கே நனைத்திருந்தது.
பேருந்தின் படிக்கு நேராக இருந்த இருக்கையில் அமர்ந்தாள் அவள்.
“வேடிக்கை பாத்துட்டு மறுபடியும் விழுந்துடாதிங்க… ஒரு தடவை தான் என்னால காப்பாத்த முடியும்… ஓயாம காப்பாத்த நான் வொண்டர் விமன் இல்ல”
அவள் கேலி செய்ததும் மேலே ஏறினான் சரபேஸ்வரன்.
“கம்பிய பிடிச்சுக்கோங்க… இல்லனா காத்துல பறந்துடுவிங்க”
கேலி செய்தவளின் அஞ்சனம் பூசிய விழிகள் குறும்பையும் சேர்த்துப் பூசிக்கொண்டனவோ?
அப்போதெல்லாம் சரபேஸ்வரன் ஒல்லி உடம்புக்காரன். அதை தான் கூறி கிண்டலடித்தாள் அப்பெண்.
அந்நேரம் பார்த்து அவளது துப்பட்டா படபடத்து சரபேஸ்வரனைத் தீண்ட அவனோ எதுவும் பேசாமல் தோழியுடன் அரட்டையடித்தவளை பார்த்துக்கொண்டிருந்தான்.
அவன் பின்னே நின்று கொண்டிருந்த கணபதி விலாவில் குத்தினான்.
“எக்சாமுக்கு இன்னும் கொஞ்சநேரம் தான் இருக்கு… நீ என்னடே பொம்பளை பிள்ளைய வேடிக்கை பாத்துட்டு இருக்க?”
நண்பனின் பேச்சு காதில் விழுந்தாலும் சரபேஸ்வரனுக்குள் இனம் புரியாத உணர்வு மொட்டவிழ்வதை தடுக்க முடியவில்லை.
அவன் இருபாலரும் படிக்கும் கல்லூரியில் தான் படிக்கிறான். அங்கே எந்தப் பெண்ணிடமும் தோன்றாத வினோதமான உணர்வு இவளைக் கண்டதும் ஏன் துளிர்க்கிறது?
யோசிக்கும்போதே அவன் தோளை நனைத்தது மழைத்துளி. அரசுப்பேருந்துகள் மழை நேரத்தில் பயணிகளுக்கு இலவச குளியலை வழங்கும் என்பது சொல்லித் தெரியவேண்டுமா என்ன? அதற்கு ஆழியூர் பேருந்தும் விதிவிலக்கில்லை.
தண்ணீர் ஒழுகாத இடம் தேடியவன் கருநீல சுடிதார் பெண்ணின் இருக்கைக்கு அருகே சென்று நின்றான்.
“நீ அவனை கிண்டல் பண்ணுனல்ல சங்கவி… அதான் நம்ம சீட் பக்கத்துல வந்து நிக்குறான்… நம்ம ஊராளுங்க இதை பாத்தாங்கனா வீட்டுல போட்டுக் குடுத்துடுவாங்க”
சங்கவி! கவி! கவிதை போல அழகான பெயர் என்றது கவிஞன் அவதாரம் எடுத்த சரபேஸ்வரனின் மனசாட்சி.
“தண்ணி ஒழுகாத இடம்னு இங்க வந்து நின்னுருப்பான் கோமதி… அவன் நின்னா நம்மளை ஏன் ஊராளுங்க வேவு பாக்கப்போறாங்க?
“சத்தமா பேசாத பக்கி… அவன் நம்மளை தான் பாக்குறான்”
“நான் அவனை விழாம காப்பாத்துனேன்ல, அதுக்கு தேங்க்ஸ் சொல்ல பாக்குறான் போல”
கோமதி என்ற தோழிப்பெண்ணுக்கு இருந்த படபடப்பில் துளி கூட சங்கவியிடம் இல்லை.
நடத்துனர் பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டு சங்கவியின் இருக்கைக்குப் பின்னிருக்கை காலியாவதைக் காட்டினார்.
சரபேஸ்வரனும் அதில் அமர்ந்து கொண்டான்.
அவளது படபடக்கும் துப்பட்டா அடிக்கடி அவனது கையைத் தழுவி செல்ல கனவு போல இருந்த பேருந்து பயணத்தின் ரம்மியம் சங்கவி இறங்க ஆயத்தமானதும் கலைந்தது.
“லா காலேஜ் இறங்குங்க”
ஷோல்டர் பேக்கோடு இறங்கினாள் சங்கவி.
சட்டக்கல்லூரி மாணவியா இவள்? அப்படி இருந்தால் சீருடை அல்லவா அணிந்திருப்பாள்!
சரபேஸ்வரன் யோசிக்கும்போதே அவள் சாலையைக் கடந்து எதிர்புறம் இருந்த பனிமலர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியை நோக்கி செல்வது தெரிந்தது.
சரபேஸ்வரன் புன்னகையோடு திரும்பினான்.
அவனருகே கணபதி அமர்ந்திருந்தான்.
“நீ எப்ப உக்காந்த?”
ஆச்சரியமாகக் கேட்டான் சரபேஸ்வரன்.
“அந்தப் பிள்ளை போறதை ஜன்னல் வழியா கழுத்தை நீட்டி வேடிக்கை பாத்தல்ல… அப்பவே உக்காந்துட்டேன்”
“சும்மா பாத்தேன்டே… வேற ஒன்னுமில்ல” சரபேஸ்வரன் சமாளித்தான்.
“நம்பிட்டேன் மாப்ள”
பின்னர் அவர்கள் இறங்கவேண்டிய கேண்டீன் பேருந்து நிறுத்தம் வந்ததும் இறங்கிக்கொண்டார்கள் நண்பர்கள் இருவரும்.
கல்லூரியை நோக்கி நடந்து சென்ற சரபேஸ்வரன் தேர்வறையை அடைந்ததும் சங்கவியைப் பற்றிய எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்தான்.
வினாத்தாள் அவன் எதிர்பார்த்தபடி வந்திருக்கவே தேர்வை எவ்வித பதற்றமுமின்றி எழுதி முடித்தான் சரபேஸ்வரன். இண்டர்மீடியட்டில் தேர்ச்சி பெற்று விடுவோமென அவனுக்கு நம்பிக்கை இருந்தது.
தேர்வு முடிந்து வீட்டுக்குக் கிளம்பியபோது கணபதியை மட்டும் போகச் சொன்னான் சரபேஸ்வரன்.
“நீ வரல?”
“எனக்குப் பனிமலர் காலேஜ் பக்கம் சின்னதா ஒரு வேலை இருக்கு… முடிச்சிட்டு வர்றேன்”
“உங்கம்மா நீ எங்கனு கேட்டா என்ன பதில் சொல்லட்டும்?”
“மகாதேவன் சாரை பாக்க போயிருக்கேன்னு சொல்லி சமாளிச்சிடு கணபதி”
“இது கொஞ்சம் கூட நல்லா இல்லடே.. அப்புறம் உன் இஷ்டம்”
அரைமனதாக கிளம்பிப் போனான் கணபதி.
சரபேஸ்வரன் பாளை பேருந்து நிலையத்தில் பேருந்திலேறியவன் பனிமலர் கல்லூரி நிறுத்தத்தில இறங்கி சங்கவியின் வருகைக்காக காத்திருந்தான்.
பேருந்து நிலையத்தில் மாணவிகள் கூட்டம் அலை மோத சங்கவியும் அவளது தோழி கோமதியோடு வந்து சேர்ந்தாள்.
அவர்களைக் கண்டதும் சற்று மறைவாக நின்று கொண்டான் சரபேஸ்வரன்.
“பேங்கிங் சப்ஜெக்ட்ல நல்ல மார்க் எடுத்திருக்க... அதான சார் உனக்கு என்ன கிப்ட் வேணும்னு கேட்டாங்க… உனக்கு அடுத்து மார்க் வாங்குனவங்கல்லாம் வாட்ச், டேப்னு வாங்கிட்டாங்க… நீ என்ன தான் சார் கிட்ட கேக்க போற கவி?”
“பேங்க் எக்சாமுக்குப் படிக்க புக் கேக்கப்போறேன்”
சங்கவியின் பதிலில் மெய் சிலிர்த்தது சரபேஸ்வரனுக்கு. தன்னைப் போல அவளுக்கும் படிப்பில் ஆர்வம் என எண்ணி குதூகலித்தான் அவன்.
அடுத்த நொடியே அவனது குதூகலம் காற்றிறங்கிய பலூனாய் போனது.
“யூ.ஜி முடிச்சதும் எனக்கு மாப்பிள்ளை பாக்குற ஐடியால எங்கம்மா இருக்கு… நான் அப்பா கிட்ட பேங்க் எக்சாமுக்குப் படிக்கப்போறேன்னு சொல்லி வச்சிருக்கேன்… இருபத்தஞ்சு வயசு வரைக்கும் படிக்குறேன் படிக்குறேன்னு சொல்லி கல்யாணப்பேச்சைத் தள்ளிப் போட்டுருவேன்… அதுக்காக தான் நான் சார் கிட்ட புக் கேக்கப்போறேன்”
“நான் கூட நீ திடீர்னு லட்சியவாதியா ஆகிட்டியோனு பயந்துட்டேன் கவி… நல்லவேளை அப்பிடி எதுவும் நடக்கல”
“எனக்கு இருக்குறது ஒரே ஒரு லட்சியம் தான்… முடிஞ்சளவுக்கு லேட்டா கல்யாணம் பண்ணிக்கணும்… அதுக்குள்ள கிடைக்கிற அவகாசத்துல ஏதாச்சும் வேலைக்குப் போகணும்… நிறைய மனுசங்களை சந்திக்கணும்… அம்மா அப்பாவ கடைசி வரைக்கும் பாத்துக்கிற மனதைரியத்தை வளர்த்துக்கணும்”
“இதுக்கும் சம்பாதிக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்?”
“ஒரு பொண்ணுக்குச் சுயசம்பாத்தியத்தை தவிர வேற எதுவும் மனதைரியத்தை குடுக்காதுனு பர்வீன் மேம் சொன்னதை மறந்துட்டியா?”
அவள் பேச பேச சரபேஸ்வரனின் மனதுக்குள் அவள் மீதான பிரமிப்பு சீனப் பெருஞ்சுவர் போல நீண்டுகொண்டே போனது.
முதல் பார்வையில் துளிர்த்த காதல் செடிக்கு அந்தப் பிரமிப்பு நீராய் மாற இலையும் கிளையுமாய் செழிக்கத் தொடங்கியது அவனது காதல்.
கோமதி பேச்சுவாக்கில் தங்களைக் கவனித்துக்கொண்டிருந்த சரபேஸ்வரனைப் பார்த்துவிட்டாள்.
“காலைல நீ காப்பாத்துனவன் ரெண்டடி தள்ளி நின்னு என்னை வெறிக்க வெறிக்க பாக்குறான் கவி”
சரபேஸ்வரன் நின்ற கோணம் அவன் தன்னைப் பார்க்கிறான் என்ற பிரமையை அவளுக்கு உண்டாக்கிவிட்டது.
சங்கவி தாமதிக்காமல் பார்த்தவள் தோழி சொன்னது போலவே அங்கே நின்றவனைக் கண்டுகொண்டாள். சங்கவியைப் பாரத்ததும் முறுவலித்தான் அவன்.
அவளுக்கோ இதை தொடரவிட்டால் தங்களது படிப்புக்கு ஆபத்தாகிவிடுமென எச்சரிக்கை மணி ஒலித்தது.
கோமதியிடம் சொல்லிவிட்டு அவனருகே சென்றாள்.
தன்னை நோக்கி வந்தவளை ஆவலுடன் பார்த்தவன் வந்து நின்றதும் வெட்டுவது போல முறைக்க ஆரம்பித்தவளைக் கண்டு கொஞ்சம் ஜெர்க் ஆனான்.
“நீங்க ஃபிரான்சிஸ் காலேஜ்ல தான படிக்கிறிங்க… இங்க எதுக்கு வந்து நிக்குறிங்க? எதுக்கு என் ஃப்ரெண்ட் கோமதிய பாத்துட்டு இருக்கிங்க?”
தனது கல்லூரி எதுவென அவளுக்குத் தெரிந்திருப்பதை அறிந்ததும் சரபேஸ்வரனுக்கு ஆச்சரியம்!
“உங்களுக்கு எப்பிடி நான் அந்த காலேஜ்னு தெரியும்?”
“காலைல டிக்கெட் எடுத்தப்ப சொன்னிங்கல்ல… அதை விடுங்க… எதுக்கு என் ஃப்ரெண்டை பாத்திங்க? லவ் பண்ணுறிங்களா அவளை?”
துடுக்குத்தனமாக அவள் கேட்க சரபேஸ்வரனுக்குத் தூக்கிவாரிப் போட்டது.
“ஐயயோ ஏன் இப்பிடிலாம் சொல்லுறிங்க?”
அவன் பதறியதும் சங்கவிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“அப்ப சும்மா சைட் அடிக்கிறிங்க… அவ்ளோ தானா? காசா பணமா? சைட் தான, அடிச்சுக்கோங்க… ஆனா இவ்ளோ ஓப்பனா சைட் அடிக்காதிங்க… அவ பாவம், பயந்துட்டா… அவ இருக்குற நிலமைய பாத்தா புட்டார்த்தி அம்மன் கோயிலுக்குக் கூட்டிட்டுப் போய் தண்ணி எறியணும் போல”
அவர்கள் பக்கங்களில் பெண்கள் காத்து கருப்பை கண்டு பயந்துவிட்டால் புட்டார்த்தி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் சென்று தண்ணீர் எறிந்து அதை விரட்டுவது வழக்கம்.
அதை அவள் குறிப்பிடவும் சரபேஸ்வரனுக்கு அவள் தன்னைக் கேலி செய்கிறாளோ என்ற சந்தேகம்.
சங்கவி சிரிப்பை அடக்க சிரமப்பட்ட வித்தில் அந்தச் சந்தேகம் உறுதியாகிவிட்டது.
நான் உன்னைப் பார்க்க வந்தேன் என சொல்லிவிடலாமா? அவன் யோசிக்கும்போதே ஆழியூர் செல்லும் நகரப்பேருந்து வந்துவிட சங்கவி பேருந்தில் ஏற ஓடிவிட்டாள்.
சரபேஸ்வரன் தொடர்ந்து ஏறியவன் முன்னே நின்றவளை பார்த்தபடியே பயணத்தைத் தொடர்ந்தான்.
சங்கவிக்கும் அவனது பார்வை தங்கள் பக்கம் வருவது தெரியாமல் இல்லை.
ஆனால் தன்னைப் பார்க்கிறானா அல்லது கோமதியை நோட்டம் விடுகிறானா என்ற குழப்பம்.
பத்தொன்பது வயதில் எந்த இளம்பெண்ணுக்கும் ஒரு ஆடவன் தன்னைப் பார்க்கும்போது உண்டாகும் குறுகுறுப்பு அவளுக்கும் உண்டானது.
கோமதியிடம் பேசும் போது வார்த்தைகள் கோர்வையின்றி தடுமாற ஆரம்பிக்கவும், சரபேஸ்வரனைப் பார்ப்பதைத் தவிர்த்தாள் அவள்.
நதியூர் வந்ததும் அவளும் கோமதியும் இறங்கிக்கொண்டார்கள். ஆழியூரில் இறங்கிய சரபேஸ்வரன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.
அவன் கல்லூரியில் படித்தபோது சாரங்கபாணியின் குடும்பம் பூர்வீக வீட்டில் தான் வசித்து வந்தது.
வீட்டுக்குள் நுழைந்தவனிடம் தேர்வு எப்படி எழுதினாய், காபி குடிக்கிறாயா, தேர்வு முடிவு எப்போது வருமென குழலி கேள்விகளைத் தொடுத்தார்.
அனைத்துக்கும் பதிலளித்துவிட்டு அறைக்குள் வந்தவனின் மனமெங்கும் சங்கவியின் குறும்பு கூத்தாடும் வதனமே நிறைந்திருந்தது.
அவன் மனதில் தோன்றிய உணர்வுகளை படுக்கையில் கிடந்த எகனாமிக்ஸ் நோட்டில் கிறுக்கத் துவங்கினான்.
குற்றவாளியா நான்?
கைகளில் விலங்காய்
கருநீல துப்பட்டா
துப்பாக்கி தோட்டாவாய்
கருங்குவளை விழிகள்
ஆயுள் தண்டனையாய்
சிறைவாசம் அவள் மனதில்
குற்றம் தான் என்ன?
குழம்பி தவித்தேன் நான்!
பார்த்ததும் அவளிடம் காதலில் விழுந்தது என் தவறாம்!
விழியால் மொழிந்து விலகினாள்
இறகில்லா தேவதை!
அன்றைய தினம் காதலும் பிறந்தது. சரபேஸ்வரனின் மனதிலிருந்து ஒரு கவிதையும் பிறந்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

