“ஒரு பொண்ணு தன் வாழ்க்கைய விட்டு விலக்குன ஆளை ஹேண்டில் பண்ணுற விதத்துக்கும், ஒரு ஆண் தன்னோட வாழ்க்கைய விட்டு விலக்குன பொண்ணை ஹேண்டில் பண்ணுற விதத்துக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. பொதுவா பெண்கள் தன்னோட பார்ட்னரோட நம்பிக்கைய முக்கியமா நினைப்பாங்க. அவங்களோட உறவை பாதிக்குற யாரையும் அவங்க தங்களுக்குள்ள அனுமதிக்கிறதில்ல. ஆண்கள் உணர்ச்சிரீதியான முடிவுகளை எடுக்கமாட்டாங்க. ‘என்னை விட்டுப் போயிட்டியா, நீ இப்ப எனக்கு யாரோ ஒருத்தி’ங்கிற நேரடி அணுகுமுறை அவங்களோடது. பல நேரங்கள்ல இந்த நேரடி அணுகுமுறைய பெண்களால செய்ய முடியுறது இல்ல. முடிஞ்சளவுக்கு விலகி நிக்க தான் பொண்ணுங்க விரும்புவாங்க. அந்த நபரை நேருக்கு நேர் சந்திக்குறதையோ பேசுறதையோ அவங்க விரும்புறதில்ல. ஆண்கள் அப்பிடி ஒதுங்குறதில்ல. நேர்ல சந்திச்சாலும் தில்லா அவங்க எக்ஸை ஃபேஸ் பண்ணுவாங்க. இது எவ்ளோ பெரிய வித்தியாசம்ல?”
-ஆதிரா
ஆதிராவும் புவனேந்திரனும் தங்களது தேனிலவை முடித்துக்கொண்டு திரும்பினார்கள். இருவருக்கும் அவரவர் தொழிலில் மும்முரமாகுவதற்கான வேலைகள் காத்திருந்தன. அதில் அவர்கள் மூழ்கிவிட மலர்விழியின் முதுகலை இறுதியாண்டுக்கான தேர்வும் வந்துவிட்டது.
அவள் தேர்வுக்குப் படிக்கும் நாட்களில் கதிர்காமனைத் தங்களோடு வைத்துக்கொண்டார்கள் புவனேந்திரனும் ஆதிராவும்.
“நான் பாத்துக்குறேன். உனக்கு எதுக்குச் சிரமம்?” என மகிழ்மாறன் சொன்னாலும்
“இதுல என்ன சிரமம் இருக்கு மாறன்? மலர் படிக்கட்டும். அவன் தூங்கிட்டானா மானிங்தான் முழிக்கிறான். ஒன்னும் சிரமமில்ல. நீங்க போய் தூங்குங்க” என்று சொல்லிவிட்டாள் ஆதிரா.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
குட்டிப்பையனும் ஆதிராவுடன் சமத்தாக மெத்தையில் படுத்துக்கொள்வான்.
அவன் வந்த தினத்திலிருந்து புவனேந்திரன் சோஃபா கம் பெட்டில் படுத்துக்கொண்டான். எங்கே தான் உறக்கத்தில் உருண்டுவிடுவோமோ என்ற பயம் அவனுக்கு.
“நீங்க செய்யுற ஆள்தான். டெய்லி படுக்குறப்ப உங்க தலகாணில படுக்குறிங்க. முழிக்குறப்ப என் தலகாணில முழிக்கிறிங்க. நமக்கு நடுவுல கதிர் படுத்திருந்தா கண்டிப்பா நீங்க அவன் மேல உருண்டுடுவிங்க.”
“ஒரு பேச்சுக்குக் கூட நீங்க பெட்ல கதிர் கூட படுத்துக்கோங்க. நான் அங்க படுத்துக்குறேன்னு சொல்ல மாட்டல்ல?”
“சேச்சே! எனக்கு இங்கதான் கம்பர்டபிளா இருக்கு. கதிர் வேற தூக்கத்துல என்னைத் தேடுவான்”
“அவன் மட்டுமா? நானும்தான். ஐ மிஸ் யூ”
கொஞ்சலாகப் பேசியும், குட்டி குட்டி அணைப்பிலும் தங்களது காதலைப் பரிமாரிக்கொண்டார்கள் இருவரும்.
ஆதிரா மில்லுக்குச் செல்லும்போது கதிர்காமனைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிடுவாள். உலகம் எண்ணெய் மில்லில் ஆதிராவின் அலுவலக அறைக்குள் கதிர்காமன் விளையாடுவதற்காக பொம்மைகளையும் வாங்கிப் போடச் சொல்லியிருந்தாள் ஆதிரா.
கதிர்காமனுக்குத் திட உணவு கொடுக்க ஆரம்பித்துவிட்டதால் ஆதிராவுக்கு மதியவுணவை அனுப்பிவைக்கும்போதே எழிலரசி அவனுக்கும் குழைய வடித்த சாதத்தில் பருப்பு காய்கறிகளை மசித்து நெய் ஊற்றி தனியாக ஒரு டிபன் பாக்சில் வைத்து அனுப்பிவிடுவார். ஒரு நாள் நெய்யும் பருப்பும் இருந்தால் மறுநாள் கீரை இருக்கும்.
இடையிடையே பழச்சாறும் வரும். குழந்தையும் சாப்பிடுவது விளையாடுவது, அவ்வபோது தங்கவேலுவோ வினாயகமோ வந்துவிட்டால் அவர்களுடன் ஊர் சுற்ற போவதென ஜாலியாக இருந்தான்.
அவனுக்குப் பல் முளைக்க ஆரம்பித்தபோது காய்ச்சல் கண்டுவிட மலர்விழிக்கோ தேர்வுக்குப் படிப்பதா குழந்தையைக் கவனிப்பதா என்ற தவிப்பு.
சிவகாமியும் ஆதிராவும் கதிர்காமனைக் கவனித்துக்கொண்டார்கள்.
கூட்டுக்குடும்பமாக வாழ்வதில் நிறைய சவால்கள் உள்ளன. அங்கே அனைத்தும் பொதுதான். ‘எனது’ ‘உனது’ என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை. முக்கியமாகக் கூட்டுக்குடும்ப கட்டமைப்பு நீடிக்க வேண்டுமானால் அதற்கு பெண்களின் பங்கு முக்கியமானது.
கூட்டுக்குடும்பங்கள் உழைப்பு சுரண்டலுக்குப் பெயர் போனவை. அப்பாவி ஒருத்தி அனைவருக்கும் வடித்துக்கொட்ட மற்றவர்கள் அவளிடம் அதிகாரம் செலுத்திய கதை எல்லாம் நமது பாட்டி காலத்தில் நிறைய உண்டு.
ஒரு பக்கம் அன்பு, பாசம், பிணைப்பு என்று அழகான முகம் இருந்தாலும் இத்தகைய கருப்பு பக்கமும் கூட்டுக்குடும்ப அமைப்புக்கு உண்டு. அதை யாரும் எளிதில் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
எங்கே அனைவரின் உணர்வுகளும் சமமாக மதிக்கப்படுகிறதோ, எங்கே அனைவருக்கும் சமமான முக்கியத்துவமும் மரியாதையும் கிடைக்கிறதோ, எங்கே அனைவரும் சமமாக பொருளாதாரச்சுமை, உழைப்பு பளுவைப் பகிரத் தயாராக இருக்கிறார்களோ அங்கு மட்டுமே இப்போதைய காலக்கட்டத்தில் கூட்டுக்கும்பம் என்பது சாத்தியமாகும்.
மலர்விழியும் ஆதிராவும் ஒருவரை ஒருவர் அதிகாரம் செலுத்த நினைக்கும் ஓரகத்திகள் இல்லை. இருவருமே மற்றொருவரின் நலனில் பரபஸ்பர அக்கறை காட்டினார்கள் சகோதரிகளைப் போல. சிவகாமியும் இரு மருமகள்களையும் ஒரே மாதிரி நடத்தினார்.
பூ தொடுத்துக் கொடுப்பதில் கூட இருவருக்கும் ஒரே அளவுதான். என்ன ஒன்று, மலர்விழியின் மென்மையான குணத்தின் மீது அவருக்குக் கொஞ்சம் கரிசனம் அதிகம்.
‘மலர் பொண்ணே’ என்ற விளிப்பில் வாஞ்சையையும், ‘ஆதி’ என்ற விளிப்பில் அன்பையும் காண முடியும். சின்ன வேறுபாடுதான். அது எப்போதுமே ஆதிராவுக்கு உறுத்தியதில்லை.
மலர்விழிக்காக புத்தகங்களை வாங்கிக் கொடுப்பது, அவளுக்குப் புரியாத ஆங்கில வார்த்தைகளை விளக்குவதென மாமியார் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக அவளிடம் அக்கறை எடுத்துக்கொள்வதிலும் அவளுக்கு வருத்தம் வந்ததில்லை.
இதெல்லாம் பிறந்தகத்தில் ஆதிராவுக்குக் கிடைத்தவை. ஆனால் மலர்விழி அப்படி இல்லையே! அதைப் புரிந்துகொண்டதால் ஆதிராவால் மலர்விழி மீது பொறாமை படாமல் அவளது மைந்தனைத் தனது மகனாக நடத்த முடிந்தது.
மலர்விழியின் தேர்வு மே மாதம் முழுக்க நடக்கிறது. தேர்வு நாட்களுக்கு இடையிடையே விடுமுறை இருக்கும். அதில் அடுத்தத் தேர்வுக்கு ஆயத்தமாவாள் அவள்.
இந்நிலையில் மலர்விழியின் பிறந்தநாளும் வந்தது. அவளுக்குப் பிடித்த ஆடையை வாங்கிக் கொடுக்க தன்னோடு திருநெல்வேலிக்கு அழைத்துச் சென்றாள் ஆதிரா.
பட்டுச்சேலைகள் பக்கம் கவனம் வைக்காமல் இரு பெண்களும் இலகுவான சேலைகளையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
ஏழு பாஸ்டல் வண்ணங்கள் கிடைமட்டமாக அடுத்தடுத்து இருக்க அவற்றின் இடையே தங்க நிறத்தில் மெல்லிய சின்னதாக கோடு போல ஜரிகை ஓட, பார்டரில் ஒரு விரல் அளவுக்கு தங்கநிற ஜரிகையோடு இருந்த மல் காட்டன் சேலை ஒன்று மலர்விழிக்குப் பிடித்துப் போனது. ப்ளவுசும் பவுடர் ப்ளூ வண்ணத்தில் பொருத்தமாக.இணைத்திருந்தார்கள்.
காட்டன் புடவைகளைப் போல முரடாக இல்லாமல் மல் காட்டன் புடவைகள் மிகவும் மென்மையாக இருக்கும். அணியவும் உடலுக்கு இதமாக இருக்கும். அதனால் கூடுதலாக நான்கு புடவைகள், சிவகாமிக்கு ஒரு செட்டிநாடு காட்டன் என வாங்கிக்கொண்ட பெண்கள் வீட்டுக்குக் கிளம்பியபோது சரியாக கொக்கிரகுளம் அருகே ஆதிராவின் கார் பிரச்சனை செய்து ஓடாமல் நின்றுவிட்டது.
“அச்சச்சோ! இது வேற” என ஓரங்கட்டியவள் என்ன பிரச்சனை என பார்க்க இறங்கியபோதே அந்தப் பக்கமாக வந்த இன்னொரு கார் நின்றது. அதிலிருந்து இறங்கினான் அவினாஷ்.
தொழில்ரீதியான பிரச்சனை ஒன்றுக்காக கலெக்டர் ஆபிசில் பணியாற்றுகிற உறவினர் ஒருவரைப் பார்க்க வந்திருந்தான் அவன். விக்கிரமசிங்கபுரம் திரும்புகையில் ஆதிராவையும் அவளது காரையும் கண்டவன், யோசனையோடு இறங்கினான்.
“என்ன பிரச்சனை?” என்று வினவியபடி வந்தவனை ஆதிரா கண்டுகொண்டால் தானே!
அவனோ விடாமல் “என்னனு சொன்னா நான் பாத்துடுவேன் ஆதிரா” என்றான்.
“நான் உங்க கிட்ட உதவி கேக்கல அவினாஷ். தேடி வந்து பேச்சு குடுத்து அசிங்கப்படாதிங்க” என்றாள் முகத்திலடித்தாற்போல.
காருக்குள் இருந்த மலர்விழி அவனை ஏற்கெனவே பார்த்திருந்ததால் அடையாளம் கண்டுகொண்டாள். ஆதிராவிடம் தேவையில்லாமல் பிரச்சனை செய்கிறானோ என்ற ஐயத்தோடு அவளும் காரிலிருந்து இறங்கினாள்.
“என்ன பிரச்சனைக்கா? புவன் மாமாக்குக் கால் பண்ணலாமா?” என்றவள் சொன்னது கார் பிரச்சனைக்கு மட்டுமில்லை, அவினாஷுக்கும் சேர்த்துதான் என்று அவனுக்குப் புரிந்தது.
“நான் ஜஸ்ட் ஹெல்ப் பண்ணலாம்னு…”
“தேவையில்லனு சொன்னேன்” ஆதிராவின் குரல் சூடானதும் அவினாஷின் முகம் கறுத்தது. அவன் ஒன்றும் உதவும் நோக்குடன் வரவில்லை. இதை வைத்து வேறு ஏதாவது பிரச்சனை செய்யலாமா என்ற எண்ணம்தான் அவனுக்கும்.
அதை முறியடிக்கிறாளே என்ற எரிச்சல் அவினாஷுக்கு.
புவனேந்திரன் எண்ணுக்கு அழைத்தாலோ அரவிந்த் அழைப்பை ஏற்றான்.
“அடுத்த மாசம் மினிஸ்டர் நம்ம ஹோட்டல்ல தங்க வர்றார் மேம். அதைப் பத்தி ஆபிசர்ஸ் சிலர் பேச வந்திருக்காங்க. சார் மீட்டிங்கில இருக்குறார்” என்றான் அவன்.
புவனேந்திரனைத் தொந்தரவு செய்ய விரும்பாதவள் அரவிந்திடம் கார் மெக்கானிக் யாரையாவது அனுப்ப முடியுமா என்று கேட்டு தனது சூழலை விளக்கினாள்.
அவனும் சிறிது நேரத்தில் புவனேந்திரனின் கார் வரும் என்று சொன்னதோடு வந்தும் சேர்ந்தான். அதுவரை சில அடிகள் இடைவெளி விட்டுக் காரோடு நின்றான் அவினாஷ். அவனை இரு பெண்களும் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் அவனது உள்ளுணர்வு ஏதோ சொன்னதால் அங்கேயே நின்றான். அவனது கண்களும் காதுகளும் ஆதிராவின் பேச்சில் கூர்மையுற்றிருந்தன.
“கதிர் பையனுக்கு இன்னும் ரெண்டு ட்ரஸ் வாங்கியிருக்கலாமோ? நேத்து தங்கவேலு மாமா அவன் ட்ரஸ் குட்டியா ஆகிடுச்சுனு சொன்னார்”
“அவன் கடகடனு வளருறான்கா. இந்த மாசம் வாங்குற ட்ரஸ் அடுத்த மாசம் அவனுக்குக் குட்டி ஆகிடும். மில்லுல விளையாடுறதுக்கு அந்த ட்ரஸ் போதும்”
அவர்களின் பேச்சை ஒட்டுக் கேட்டவனுக்குக் கதிர் என்பது யாரென ஓரளவுக்கு நினைவிருந்தது.
‘அப்படி என்றால் ஆதிரா அந்தக் குழந்தையை மில்லுக்கு அழைத்து வருகிறாள் போல’ குறித்துக்கொண்டான் மனதில்.
அந்நேரம் அரவிந்த் காரோடு வந்துவிட்டான். கூடவே மெக்கானிக்கையும் அழைத்து வந்திருந்தான்.
“நீங்க சாரோட கார்ல போவிங்களாம் மேடம். உங்க கார்ல என்ன ஃபால்ட்னு பாத்து இவர் சரி பண்ணிடுவார். நைட் சார் உங்க கார்ல வீட்டுக்கு வந்துடுறதா சொல்ல சொன்னார்”
“மீட்டிங்கில இருக்குறவர் கிட்ட ஏன் கார் பத்தி சொன்னிங்க அரவிந்த்?”
“உங்க கிட்ட இருந்து சின்னதா மெசேஜ் வந்தாலும் சார் கன்வே பண்ணச் சொல்லிருக்கார் மேடம்”
ஆதிரா சிரித்துக்கொண்டாள். அவளது கண்களில் மெல்லிய கர்வம். அவர்களது பேச்சைக் கேட்டவண்ணம் நின்ற அவினாஷுக்கோ எரிச்சல்.
‘இவள் பெரிய உலக அழகி! இப்படி இவளுக்காக உருகுகிறானே! ஆண் பிள்ளையாக அதிகாரம் காட்ட வேண்டிய இடத்தில் இருப்பவன் இப்படி ஒவ்வொன்றுக்கும் உருகினால் இந்தப் பெண்கள் தலையில் ஏறி அமர்ந்துகொள்வார்கள் என்பது தெரியாத முட்டாள்!’ என்ற ஆற்றாமை புவனேந்திரன் மீது.
அதே எரிச்சலும் ஆற்றாமையும் சூழ கடுப்போடு காரைக் கிளப்பிக்கொண்டு போய்விட்டான் அங்கிருந்து.
ஆதிராவும் மலர்விழியும் புவனேந்திரனின் காரில் குலவணிகர்புரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.
எடுத்து வந்த புடவைகளை மாமியாரிடம் காட்டினார்கள் இருவரும்.
“இது உங்களுக்கு” என்று சொல்லி அவரிடம் செட்டிநாடு காட்டன் புடவை ஒன்றை கொடுத்தாள் ஆதிரா.
“நல்லா இருக்குடி ஆதி” என்று ஆசையோடு புடவையை வருடியவர் “ஹான்! சொல்ல மறந்துட்டேன், இன்னைக்கு நைட் பன் தோசை செய்யச் சொல்லிருக்கேன். உங்க ரெண்டு பேருக்கும் அதுவே போதுமா? இல்ல தனியா இட்லி பண்ண சொல்லிடட்டுமா?” என்று வினவ
“நீங்க ஏதோ புது ரெசிபிய யூடியூப்ல பாத்துட்டிங்க போல” என ஆதிரா கிண்டலடிக்க
“ஹூம்! வாரத்துல ஒரு நாள் வாய்க்கு ருசியா சாப்பிடலாம். அதுக்கு மேல ஒரு நாள் கூட சாப்பிட இந்த மாறன் அலோ பண்ண மாட்டான். அந்த ஒரு நாளாச்சும் புதுசா சாப்பிட்டுக்குறேன்” என்றார் சிவகாமி.
அவர் சொன்ன விதத்தில் இரு பெண்களும் நகைத்தார்கள்.
அன்றைய இரவு புவனேந்திரன் வீடு திரும்பியபோது அவனிடம் அவினாஷைச் சந்திததைச் சொல்லிவிட்டாள் ஆதிரா. அவனோ அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் உம் கொட்டியபடி மெத்தையில் அமர்ந்து விளையாடிக்கொண்டிருந்த கதிர்காமனைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
“என்ன நீங்க இவ்ளோ சாதாரணமா உம் கொட்டுறிங்க?”
“வேற என்ன செய்யணும் நான்?”
“உங்களுக்கு அவன் என்னை மீட் பண்ணுனா அன்கம்ஃபர்டபிளா ஃபீல் ஆகலையா?”
“அப்பிடி ஃபீல் ஆகுறவன் உன் மில்லுக்கும் அவனோட சூப்பர் மார்க்கெட்டுக்கும் டீல் போட விட்டிருப்பேனா? ப்ச்! அவன் யாரோ ஒருத்தன். இவ்ளோதான் என் மைண்டுல அவனைப் பத்தின எண்ணம்”
“இருந்தாலும் சின்னதா ஒரு எரிச்சல் கூடவா இல்ல?”
“இல்ல” என அவன் தோள்களைக் குலுக்கவும் ஆதிராவுக்கே ஆச்சரியம்.
அவனது அலுவலக அறையில் மதுமதியைப் பார்த்தபோது அவளுக்கு எரிச்சலும் அசௌகரியமும் வந்தது உண்மை. ஆனால் புவனேந்திரனுக்கு ஏன் அப்படி எல்லாம் இல்லை?
“உன் வாழ்க்கையில இருந்து வேண்டாம்னு நீ தூக்கியெறிஞ்ச ஒருத்தன் மேல எனக்கு நல்லெண்ணமே இல்லாதப்ப அவனுக்கு வேல்யூ குடுத்து நான் ஏன் இன்செக்யூர்டா ஃபீல் பண்ணனும்? அவன் உன் கிட்ட பேச முயற்சி பண்ணுனாலும் நீ அதுக்கேத்த பதிலடிய குடுத்திருப்ப. ஏன்னா அதுதான் ஆதியோட ஸ்டைல். இதெல்லாம் எனக்குத் தெரியாதா பொண்டாட்டி? ஸ்கூல் பொண்ணு மாதிரி நீ ஏன் ஜெலஸ் ஆகலனு கேக்காம தூங்கு”
புவனேந்திரன் இவ்வாறு சொன்னதும் ஆதிராவுக்கு உச்சி குளிர்ந்து போனது.
‘தன்னால் அவினாஷைச் சமாளிக்க முடியுமென நம்புகிறானே இவன்’
அதே நேரம் அவளது மனசாட்சி அவளைக் குறுக்கு விசாரணை செய்தது.
“நீ மட்டும் ஏன் இவ்ளோ அழுத்தமான நம்பிக்கைய அவன் மேல வைக்க மாட்ற?” அறை வாங்கியது போல உணர்ந்தாள் ஆதிரா.
அவளுக்குப் புவனேந்திரன் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. ஆனால் அதையும் தாண்டி அவன் மனதில் மதுமதியின் வாழ்க்கை வீணானதால் அவள்மீது ‘சாஃப்ட் கார்னர்’ ஒன்று இருக்கிறதோ என்ற எண்ணம். அது கூட அவள் மீது இருக்கக்கூடாதென்ற வீம்பு.
இது என்ன மாதிரியான உணர்வென ஆதிராவுக்கே தெரியவில்லை. இந்த ஒரு விடயத்தில் புவனேந்திரன் தன்னை மிஞ்சிவிடுகிறான் என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு.
அவளது இந்த உணர்வே அவனைக் காயப்படுத்தவிருக்கிறது என்பதை அப்போது ஆதிரா அறியவில்லை.
அதே நேரம் அவள் யாருக்குப் பதிலடி கொடுத்திருப்பாள் என்று புவனேந்திரன் நம்புகிறானோ அந்த அவினாஷ் ஆதிராவுக்குப் பதிலடி கொடுக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறான் என்பது கணவன் மனைவி இருவருக்கும் தெரியவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

