“கடவுளே! மதுமதிய பத்தி நினைச்சாலே எனக்குள்ள ஒரு அசௌகரியம் பரவுது. சந்தேகமில்ல, அசௌகரியம். அவளைப் பத்தி அவர் பேசுறதில்ல. அவரோட வாழ்க்கைல அவளுக்கு இடமும் இல்ல. ஆனாலும் அவ அவரைச் சந்திக்கிறதை என்னால தடுக்க முடியல. அவ புவனை நெருங்க நினைக்குறா. அதுக்கேத்த மாதிரியான சூழ்நிலைய புவனும் அமைச்சுக் குடுத்துடுறார். செக்யூரிட்டி அப்டேட், சாப்ட்வேர் பொறுப்பை வேற ஒருத்தர் கிட்ட குடுங்கனு க்ளவுட் பீ டெக்னாலஜி கிட்ட அவர் பேசலாமே! அதை ஏன் செய்யமாட்டேங்குறார்? அவர் மூவ் ஆன் ஆகி வருச்கணக்காகுது. ஆனா என்னால தான் மதுமதிய பத்தி உண்டாகுற எண்ணங்களை விட்டு மூவ் ஆன் ஆக முடியல”
-ஆதிரா
அலமேலுவும் வைத்தியநாதனும் வீட்டில் நடைபெற்றுக்கொண்டிருந்த வேலையைக் குழப்பத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவினாஷோ உற்சாக மனநிலையோடு ஊழியர்களுக்கு ஆணையிட்டுக்கொண்டிருந்தான்.
“காம்பராவ பூசி வருசக்கணக்காகுது. உள்ள சுண்ணாம்பு பூச்சு பூசி வெள்ளை அடிக்கணும். காம்பராவோட சுற்றுப்பக்கத்து மர அடைப்புக்கு வார்னிஷ் பூசி கரையான் மருந்து அடிக்கணும். எல்லாத்தையும் செஞ்சு முடிக்க மூனு நாள் டைம். பேசுன கூலிக்கு மேல தருவேன். எனக்குக் காரியம் சரியா நடக்கணும்”
இத்தனை வருடங்கள் சீண்டப்படாமல் கிடந்த காம்பரா என்ற தானிய சேமிப்பு அறையை இப்போது பழுது பார்க்க வேண்டிய அவசியமென்ன என்ற கேள்வி அவனது பெற்றோரிடம்.
வேலையாட்களிடம் உடனடியாக வேலையை ஆரம்பிக்குமாறு சொல்லிவிட்டு அவினாஷ் பணத்தைக் கணக்கிட்டு அவர்களின் சூப்பர்வைசரிடம் நீட்டினான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“இப்ப எதுக்கு இந்த வேலைய செய்யுற அவினாஷ்? காம்பரா ரூமைத் திறந்தே நாளாகுதே” வைத்தியநாதன் வினவ அவனோ சிரித்தான்.
“சூப்பர் மார்க்கெட்டுக்கு வாங்குற ஸ்டாக்கை வைக்க ஸ்டோர் ரூம் பத்தலப்பா. இன்னொரு ஸ்டோர் ரூம் கட்டுறதுக்குப் பதிலா நம்ம காம்பராவ சரி பண்ணி அதை ஸ்டோர் ரூமா பயன்படுத்திக்கலாம்னு இருக்கேன்”
வைத்தியநாதனுக்கும் அது சரியென்று பட்டது. அந்தக் காம்பரா அறை அவரது தந்தை காலத்தில் அறுவடை முடிந்து வரும் தானியங்களை வருடக்கணக்கில் பாதுகாத்து வைக்கும் சேமிப்பு அறையாக இருந்தது. கொஞ்சம் சிறிய அறைதான்.
சுண்ணாம்பு மணல் கலவையால் கட்டப்பட்ட சுவர்கள் மீது மர அடைப்புகள் வைக்கப்பட்டு மரத்தால் உருவாக்கப்பட்ட அறை போல தோற்றமளிக்கும். உட்புறச்சுவர்களில் சுண்ணாம்பு அடிப்பது வருடத்துக்கு ஒரு முறை செய்வார்கள்.
அதெல்லாம் அந்தக் காலம். இப்போது வயல்களில் இருந்து நேரடியாக நெல்லை வியாபாரி வாங்கிக்கொள்கிறார். நெல் அவித்து காய வைத்து பக்குவப்படுத்தும் அவசியம் இல்லாமல் போய்விட்டது. எனவே காம்பராவும் கவனிப்பாரற்று போனது.
அவர்களின் வீட்டின் பின்வாயில் அறைக்கு சற்று முன்னே காம்பரா அறை இருக்கும். அதற்குள் மூட்டையை வைக்க வேண்டுமானால் மரப்படியில் ஏறி உள்ளே இறங்கி வைக்கவேண்டும். இறங்குவதற்கு வசதியாக உட்புறமும் மரப்படிக்கட்டுகள் உண்டு.
பூச்சிகள், ஈரப்பதம் அனைத்திலிருந்தும் அந்த அறை தானியங்களை வருடக்கணக்கில் பாதுகாக்கும். பொருட்களை எடுக்க வேண்டுமானால் ஏணியை உபயோகிக்க வேண்டும் என்பதால் ஆண்கள் மட்டுமே அந்த அறைக்குள் புழங்குவார்கள்.
அதே நேரம் என்.எஸ்.என் நிவாசத்தில் மலர்விழியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஆதிரா வாங்கிக் கொடுத்த ஏழுவண்ண மல் காட்டன் புடவையில் அழகியாக ஜொலித்தவளை விட்டு கண்களை அகற்றவே மகிழ்மாறன் சிரமப்பட வேண்டியதாயிற்று.
அதைக் கவனித்த ஆதிரா நமட்டுச்சிரிப்போடு “கதிருக்குத் தம்பி பாப்பா வேணுமா தங்கச்சி பாப்பா வேணுமா?” என்று கிண்டல் செய்ய மலர்விழி நாணத்தில் சிவந்து போனாள்.
“எந்தப் பாப்பாவா இருந்தாலும் இவனோட அம்மா லைப்ரேரியன் கோர்ஸ் முடிச்சு வேலைக்குப் போனதுக்கு அப்புறம்தான்” என்றான் மகிழ்மாறன்.
“உங்க பார்வை அப்பிடி சொல்லையே மாறன்?” மீண்டும் ஆதிரா கிண்டல் செய்ய சன்னச்சிரிப்பு அவனிடம்.
“கதிருக்குத் தங்கச்சி பாப்பா, தம்பி பாப்பாவ குடுக்குற கடமை எங்களுக்கு மட்டும்தான் இருக்குற மாதிரி பேசக்கூடாது ஆதி” என்றான் அவன் அமர்த்தலாக.
“ப்ச்! அவளை மதினினு கூப்பிடு மாறா. எத்தனை தடவை சொல்லுறது?” என வழக்கம் போல சலித்துக்கொண்டார் சிவகாமி.
சற்று முன்னர் மலர்விழி வெட்டிய கேக்கை வேலைக்காரப்பெண்மணியோடு சேர்ந்து துண்டுகளாக்கிக் கொண்டிருந்தபடி இளையவர்களின் பேச்சில் செவியைப் பதித்திருந்தவர் மகிழ்மாறனிடம் சொல்ல அவனோ அசட்டையாகத் தோளைக் குலுக்கினான்.
“அவ இப்பவும் என் கண்ணுக்குக் குட்டிப்பொண்ணு ஆதிராதான். இந்த உறவுமுறை எல்லாம் சொல்லி அழைச்சா அவளே சிரிச்சிடுவா. அப்பிடித்தானே?”
“சரியா சொன்னிங்க. உங்கத்தை இருக்காங்கல்ல, அவங்க கண்ணு கழுகு கண்ணு. அவங்க வீட்டுக்கு விருந்துக்குப் போனப்ப உங்களை நான் மாறன்னு கூப்பிட்டதைக் கவனிச்சு மாமானு கூப்பிடச் சொன்னாங்க. அதெல்லாம் மலருக்கு மட்டுமே சொந்தமான அழைப்பு சித்தினு சமாளிச்சு வச்சேன்”
“நல்லா பேசுறிங்க ரெண்டு பேரும். சொந்தக்காரங்க இப்பிடி நீங்க பேர் சொல்லி கூப்பிட்டுக்குறதைப் பாத்தா பின்னாடி பேசுவாங்கடி”
“பேசுனா பேசட்டும் அத்தை”
“க்கும்! எப்பிடியோ போங்க” என்றபடி அவள் கையில் கேக் துண்டுடன் கூடிய சிறிய தட்டைக் கொடுத்தார் சிவகாமி.
புவனேந்திரன் கதிர்காமனைக் கொஞ்சியபடி சோஃபாவில் அமர்ந்திருந்தான். அவனருகே அமர்ந்தவள் “கேக் வேணுமா?” என்று கேட்டு அவனுக்கு ஊட்டிவிட குழந்தையும் கேக்குக்காக அலைபாய்ந்தான்.
“நீ சுகர் சாப்பிடக்கூடாது கதிர். கதிருக்கு ஜூஸ் கொண்டு வாங்க” என்று சொன்னவள் வேலையாள் கொண்டு வந்ததும் பழச்சாறை ஷிப்பர் பாட்டிலில் அடைத்து புவனேந்திரனிடம் கொடுத்தாள்.
கதிர்காமன் ஷிப்பர் பாட்டிலில் இருந்த பழச்சாறை அருந்தியதில் கேக்கை மறந்தான்.
குழந்தைகளுக்கு ஒரு வயது வரை வெள்ளை சர்க்கரை கொடுக்கவே கூடாது என்பது மருத்துவரின் அறிவுரை. ஐந்து வயது வரை பேக்கரி ஐட்டங்கள், பிஸ்கட்டுகளைக் கொடுக்க வேண்டாம் என்றும் சொல்லியிருந்தார்.
அதனாலேயே கதிர்காமனுக்கு இனிப்புகள், கேக், பிஸ்கட் கொடுப்பதில்லை மலர்விழி. அன்பு காட்டுகிறேன் என்ற பெயரில் யாரும் கொடுப்பதற்கும் அவள் அனுமதிப்பதில்லை.
அதை அறிந்தவள் என்பதால் ஆதிராவும் கதிர்காமன் எதை உண்ணவேண்டும் என்பதில் கவனமாக இருப்பாள்.
ஆதிரா ஊட்டிய கேக்கைச் சாப்பிட்டுக் கொண்டிருந்த புவனேந்திரனின் மொபைலுக்கு அரவிந்திடமிருந்து அழைப்பு வந்தது. அவனுக்குப் பதிலாக ஆதிராவே அழைப்பை ஏற்றாள்.
“சொல்லுங்க அரவிந்த். இன்னைக்கு மதியம் புவன் ஹோட்டலுக்கு வந்துடுவார்”
“மறுபடியும் சாப்ட்வேர்ட்ல பிரச்சனை மேடம்”
“என்ன?”
அன்று காலையில் மென்பொருளை அப்டேட் செய்யுமாறு நோட்டிபிகேசன் வந்ததும் அப்டேட் செய்ததைக் கூறியவன் அதன் பின்னர் மென்பொருள் வேலை செய்வதற்கு திணருகிறது என்றான்.
அரவிந்த் பிரச்சனையை விளக்கியதும் புவனேந்திரனிடம் அதைக் கூறினாள் ஆதிரா. மொபைலை வாங்கிக்கொண்டவன் க்ளவுட் பீ டெக்னாலஜி அலுவலகத்திலிருந்து மென்பொறியாளர் வந்தாயிற்றா என வினவினான்.
“மதிமதி வந்திருக்காங்க சார்”
கொஞ்சம் சலிப்பாக இருந்தது புவனேந்திரனுக்கு. இதோடு இரண்டாவது முறை. தேனிலவுக்குச் செல்வதற்கு முன்னர்தானே பிரச்சனை வந்தது.
“சரி! அவங்களை என்னனு பாக்கச் சொல்லுங்க. நான் வந்துடுறேன்”
ஆதிரா நீட்டிய கேக் துண்டை விழுங்கியவன் “ஐ நீட் டூ கோ ஆதி. சாப்ட்வேர்ல மறுபடியும் பிரச்சனை.” என்றபடி கதிர்காமனை அவளிடம் ஒப்படைத்தான்.
மகிழ்மாறன் இதைக் கவனித்தவன் “இதோட ரெண்டாவது தடவை பிரச்சனை வருது. நீ எதுக்கும் அவங்களோட சீனியர் புராஜெக்ட் மேனேஜர் கிட்ட இதைப் பத்தி பேசுண்ணா. காசைக் கொட்டிக் குடுத்திருக்கோம். அதுக்கேத்த சர்வீஸை அவங்க தரணும்ல” என்க
“சரிடா! இன்னைக்கு நான் அதைத்தான் செய்யப்போறேன்” என்றபடி கிளம்ப ஆயத்தமானான்.
ஆதிராவின் முகம் வாடிப்போனது.
மென்பொருளில் இருக்கும் பிரச்சனையை டயக்னைஸ் செய்கிறேன் பேர்வழியாக மதுமதி அங்கே வந்திருப்பாள். அன்று போல இன்றும் புவனேந்திரனின் அறையில் அமர்ந்து வேலை பார்ப்பாள். நினைத்தாலே கசந்தது ஆதிராவுக்கு.
அவள் முகம் மாறியதும் புவனேந்திரன் கன்னத்தில் தட்டிக்கொடுத்தான்.
“இன்னைக்கு நான் சொன்ன மாதிரி ஃபேமிலி டின்னர் நம்ம ஹோட்டல்ல தான். அதுக்குள்ள இந்தப் பிரச்சனை முடிஞ்சிடும் ஆதி. சரியா?”
சரியெனத் தலையசைத்து அவனை வழியனுப்பிவைத்தாலும் ஆதிராவின் மனதில் மதுமதியைப் பற்றிய எண்ணங்கள் உறுத்திக்கொண்டே இருந்தன.
புவனேந்திரன் ஹோட்டலுக்குச் சென்றபோது மதுமதி மும்முரமாக பிரச்சனையைச் சரி செய்துகொண்டிருந்தாள்.
“இதோட ரெண்டாவது தடவை. இதுதான் நீங்க சாப்ட்வேர் டெவலப் பண்ணுற லெட்சணமா? ஐ வாண்ட் டூ டாக் வித் யுவர் சீனியர் புராஜெக்ட் மேனேஜர்.”
அவன் கடுகடுத்ததும் சட்டென எழுந்து நின்றவள் “சின்ன பக் (bug) தான் சார். நான் கிளியர் பண்ணிடுவேன்.” என்றாள் உறுதியானக் குரலில்.
“இப்பிடி சின்ன சின்னதா இன்னும் எத்தனை தடவை பிரச்சனை வரும்? இதெல்லாம் நீங்க டெஸ்டிங்கில கவனிக்கலையா?” எனக் காட்டமாகக் கேட்டவன் தனது இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.
அரவிந்த் மூலமாக சீனியர் புராஜெக்ட் மேனேஜரிடம் பேசவும் செய்தான்.
“செக் அவுட், இன்வென்டரி கொஞ்சம் அதிகமாகுற நேரத்துல சாப்ட்வேர்ல அப்டேட் சேர்ந்துச்சுனா இந்த மாதிரி பிரச்சனைகள் வர்றது சகஜம் சார். சர்வதேச மார்க்கெட்ல இருக்குற சாப்ட்வேரை நீங்க பயன்படுத்துனாலும் இந்தப் பிரச்சனை வரும். ஆனா நாங்க இதைச் சொல்லி தப்பிக்க விரும்பல. இன்னொரு தடவை இதே ப்ராப்ளம் வராத மாதிரி எங்க ஸ்டாஃப் சரி பண்ணிடுவாங்க” என்றார் அவர்.
அன்றைய மாலை வரை மதிமதி போராடியும் அவளால் பிரச்சனையைச் சரி செய்ய முடியவில்லை. போராடுகிற மாதிரி காட்டிக்கொண்டாளோ என்னவோ!
அதே நேரம் ஆதிராவுக்கு வாக்கு கொடுத்திருந்த புவனேந்திரனோ வீட்டுக்குக் கிளம்பினான். மென்பொருளை அப்டேட் செய்வதற்கு முந்தைய வெர்சனின் பேக்கப் வைத்து வாடிக்கையாளர்களின் வருகை, வெளியேற்றம், மற்ற இன்வெண்டரிகள் பற்றிய விவரத்தைப் பதிவு செய்யுமாறு அவன் கட்டளையிட்டிருந்ததால் ஹோட்டலின் அன்றாட அலுவல் பாதிக்கப்படவில்லை.
வீட்டுக்குச் சென்று இரவு டின்னருக்குத் தயாராகி மொத்தக் குடும்பமும் என்.எஸ்.என் கார்டனியா ஹோட்டலுக்கு வந்தபோதும் வேலை தொடர்ந்து நடப்பதாகச் சொன்னான் அரவிந்த்.
“அது ஒரு பக்கம் நடக்கட்டும். பர்த்டே செலிப்ரேசனுக்கு ஏற்பாடு எல்லாம் தயாரா?” என அவனிடம் கேட்டு உறுதிபடுத்திக்கொண்டு அனைவரையும் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டான் புவனேந்திரன்.
அவன் சென்றதும் அரவிந்திடம் யாருக்குப் பிறந்தநாள் என்று மெதுவாக விசாரித்தாள் மதுமதி.
“மலர்விழி மேடமோட பர்த்டே. அதுக்கு புவன் சாரும் ஆதிரா மேடமும் பர்த்டே செலிப்ரேசனுக்கும் டின்னருக்கும் அரேஞ்ச் பண்ணிருக்காங்க”
அவன் சொல்ல சொல்ல மதுமதியின் மனதுக்குள் தீ எரிந்தது.
“எங்க குடும்பத்தை அண்டி பிழைச்சவ இன்னைக்கு ராணியா வாழுறா. என் தலையெழுத்து இதையெல்லாம் பாத்து சகிச்சிக்கிற இடத்துல நான் இருக்குறேன்” என மனதுக்குள் கறுவிக்கொண்டாள் அவள்.
பிறந்தநாள் கொண்டாட்டத்துக்கான அறைக்குள் புவனேந்திரன் வந்ததும் பிரச்சனை முடிந்ததா என வினவினாள் ஆதிரா.
“இன்னும் முடியல. மதுமதி ஒர்க் பண்ணிட்டிருக்காங்க”
அவனது வாயில் மதுமதியின் பெயர் வந்ததுமே ஆதிராவின் நெஞ்சு எரியாதக் குறை. கடுப்பை மறைத்துகொண்டு அடுத்து வந்த பிறந்த நாள் கொண்டாட்டம், இரவு விருந்தில் கவனமானாள்.
கொஞ்சம் கொஞ்சமாய் கொண்டாட்ட மனநிலையில் ஆழ்ந்தவளுக்கு மதுமதியைப் பற்றிய ஆற்றாமை மறைந்தே போனது.
எல்லாம் அனைவருக்கும் முன்னராகச் சாப்பிட்டு முடித்துக் கை கழுவுவதற்காக ஆதிரா செல்லும்வரை மட்டுமே!
ஆதிரா கை கழுவி டிஷ்யூவில் துடைத்துக்கொண்டிருக்கையில் கழிவறை கதவு திறந்தது. அங்கிருந்து வெளியே வந்தவளின் முகத்தில் மர்மச்சிரிப்பு. அவளைக் கண்டதும் ஆதிராவின் முகத்தில் கோபச்சிவப்பு.
“ரொம்ப சந்தோசமா இருக்குற போல. புவன் கையில வச்சு தாங்குறாரோ?”
சீண்டும் குரலில் கேட்டவள் மதுமதியே. அவளிடம் சீண்டலை விட பொறாமையே அதிகம் வெளிப்பட ஆதிராவோ கர்வமாக அவளை நோக்கினாள்.
“நீ என்னைப் பாத்த உடனே கண்டுபிடிக்கிற அளவுக்கு அவர் என்னைச் சந்தோசமா வச்சிருக்குறார்” என்றாள் திமிரோடு.
மதுமதி பற்களைக் கடித்தபடி சிரித்தாள்.
“உன் முந்தானையைப் பிடிச்சிட்டு ஆதி ஆதினு கொஞ்சிக்கிட்டே இருக்குறாரா? ஏன் கேட்டேன்னா எங்களுக்கு எங்கேஜ்மெண்ட் முடிஞ்ச நேரத்துல என்னையும் அப்பிடித்தான் கொஞ்சுனார். மனுசனுக்கு என் கிட்ட அவ்ளோ மயக்கம்.”
பழங்கதை பேசி ஆதிராவின் மனதில் சலனத்தை உருவாக்க முயன்றாள்.
“ஓஹ்! புவன் மட்டும்தான் அப்பிடியா? உன் எக்ஸ் ஹஸ்பெண்ட் எப்பிடி? ப்ச்! உன்னைக் கண்டுக்கலையோ? அதான் டிவோர்ஸ் வாங்குனியா?” என அவளை நேரடியாகவே சீண்டினாள் ஆதிரா.
ஆதிராவின் நக்கலானச் சீண்டலில் மதுமதியின் முகம் கோபத்துக்குத் தாவியது. ஆனால் அதை அவள் வன்மத்தோடு வெளிக்காட்டவில்லை.
“நான் டிவோர்ஸ் வாங்குனதே புவன் கூட வாழணும்ங்கிற என் ஆசைக்காகதான்.” என்றவள் “ஆனா நீ குறுக்க வந்துட்ட. நீ மட்டும் வராம இருந்திருந்தா என்னால புவனை மறுபடி என்னை நேசிக்க வச்சிருக்க முடியும். முதல்ல அந்த மலர் சனியன் எனக்கு உதவுறேன்னு சொல்லி கழுத்தறுத்தா. அடுத்து நீ எங்க ரெண்டு பேருக்குள்ள வந்துட்ட. வெற்றிகரமா நீ அவரைச் சொந்தமாக்கிக்கவும் செஞ்சிட்ட” என வஞ்சினத்தோடு உரைத்தாள்.
ஆதிரா அலட்டிக்கொள்ளாமல் தோள்களைக் குலுக்கினாள்.
“யூ ஆர் அ லூசர். அதுக்கு நான் என்ன செய்ய முடியும்?”
“இந்தத் தெனாவட்டு, அலட்சியத்துக்கு நான் பதிலடி குடுக்கணும்ல. நான் புவன் கூட பேசுனா உனக்குப் பிடிக்காதுல்ல. ஆனா பாரேன், மாசமாசம் செக்யூரிட்டி அப்டேட்னு நான் இங்க வர்றப்ப எல்லாம் அவர் கூட பேசிட்டிருக்கேன். அவரோட ஆபிஸ் ரூம்ல அவர் கிட்ட நின்னு சாப்ட்வேர் அப்டேட் பத்தி அவருக்கு விளக்கிட்டிருக்கேன். அப்ப எல்லாம் அவரோட பெர்ஃபியூமோட ஃப்ராக்ரன்ஸ் என்னை எங்களோட நிச்சயதார்த்தம் நடந்த நாட்களுக்கு இழுத்துட்டுப் போயிடும். நான் நெருக்கமா நின்னு பேசுறப்ப அவருக்கும் அந்த ஞாபகம் வரும்தானே?”
ஆதிரா அருவருப்போடு அவளைப் பார்த்தாள். ‘பிறன் மனை நோக்காதே’ என்று ஆண்களுக்கு மட்டும் நீளமாக எழுதிவைத்து விட்டார்கள். மதுமதி போன்ற அடுத்தவள் கணவன் மீது கண் வைத்துத் திரியும் பெண்களுக்கு அது கேவலமானக் காரியமென யார் இடித்துரைப்பது?
அவளது அருவருப்பை எல்லாம் மதுமதி கண்டுகொள்ளவில்லை.
“நீ அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சந்தோசமா இருக்கல்ல. ஆனா சின்னதா ஒரு உறுத்தல் உனக்குள்ள என்னை நினைச்சு வந்துட்டுப் போகும். வரணும்! அதுக்குதானே நான் மாசமாசம் இங்க வர்றேன். புவன் எனக்கு மறுபடி கிடைக்குறது கஷ்டம். ஆனா கிடைக்காம போனதுக்குக் காரணமான உன்னை நான் சலனத்தோடவே வச்சிருக்கலாம்ல. ஐயோ இன்னைக்கு முப்பதாம் தேதி, மதுமதி ஹோட்டலுக்கு வருவா. இந்நேரம் அவ புவன் ரூம்ல அவர் கிட்ட நின்னு பேசிட்டிருப்பா. அவரோட பேசுற சாக்குல…”
“சீ வாயை மூடு! என்னடி நீ மேனியாக் மாதிரி நடந்துக்குற?” கோபத்தோடு ஆதிரா பேசவும் மதுமதிக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“நீ என்ன வேணாலும் சொல்லிக்க. என்னோட பிரசன்னம் உன்னை நிம்மதியா இருக்க விடாது. நீ அமைதியில்லாம தவிப்ப. மனவுளைச்சலுக்கு ஆளாவ. இதுதான் எனக்கும் புவனுக்கும் இடையில வந்ததுக்கு உனக்கு நான் குடுக்குற தண்டனை. நீ புவன் கிட்ட எனக்குப் பதிலா வேற ஸ்டாஃபை வரச் சொல்லுங்கனு சொன்னா, அவருக்கு நீ சந்தேகப்படுறதா தோணும். த்சூ! பாவம் நீ!”
கண்கள் பளபளக்க போலியான பரிதாபத்தோடு கூறினாள் மதுமதி.
மற்றவர்களின் மனவேதனையில் மகிழ்ச்சி அடைவதும், ஒருவரை அமைதியில்லாமல் சலனத்தோடு தவிக்கவிட்டு மனவுளைச்சலை உருவாக்கி அதன் மூலம் அதிகாரத்தை உணர்வதும் ஒரு சிக்கலான மனநிலை. இது சாடிசம் (sadism).
மதுமதி ஆதிராவுக்குக் கொடுத்துக் கொண்டிருப்பது ஒரு வகையான உளவியல்ரீதியான சித்திரவதை அல்லது அத்துமீறல் (Psychological Trespass) ஆகும்.
புவனேந்திரன் மீது கடல் அளவுக்கு நம்பிக்கை இருக்கிறது ஆதிராவுக்கு. ஆனாலும் மதுமதி இப்போது சொன்னது போல அவளும் புவனேந்திரனும் சந்திக்கையில், பேசுகையில் மதுமதியால் தனக்குள் உண்டாகும் மனவுளைச்சலை அவளால் தவிர்க்க முடியவில்லை. கிட்டத்தட்ட இது ஒரு மனரீதியான தாக்குதல்.
இதோ இப்போது வெளிப்படையாகச் சொல்லிவிட்டாள் மதுமதி. இனியாவது புவனேந்திரனிடம் அவளைப் பற்றி பேசலாம்தான். ஆனால் தொழில்முறை முடிவுகளில் தலையிடமாட்டோமென பரஸ்பர ஒப்பந்தம் அவர்களுக்குள் இருக்கிறதே!
தன்னெதிரே சாடிஸ்டிக் சிரிப்புடன் நின்ற மதுமதியை வெறுப்போடு பார்த்தாள் ஆதிரா.
“என்னாச்சு? ஏன் சைலண்ட் ஆகிட்ட? என்னை இந்த ஹோட்டலுக்கு வரவிடாம தடுக்க உன்னால முடியும்னு நினைக்குற?” எனத் திமிராய் அவள் கேட்க எவ்வளவோ முயன்றும் கட்டுப்படுத்த முடியாதக் கோபத்தில் அவளது கன்னத்தில் பளாரென அறைந்துவிட்டாள் ஆதிரா.
மதுமதி தடுமாறியபடி வலித்த கன்னத்தைப் பிடித்துக்கொண்டாள்.

“தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை. ஆமா! நீ ஒவ்வொரு தடவை இங்க வர்றப்பவும் உன்னையும் புவனையும் நினைச்சு என் மனசு சலனப்படுது. நீ இங்க வந்தா என்னால அமைதியா இருக்க முடியல. நான் எதையோ நினைச்சு தவிக்குறேன். அதுக்காக நீ ஜெயிச்சிட்டதா அர்த்தமில்ல. உன் எல்லை எதுவோ அங்க நிக்குறது உனக்கு நல்லது. அடுத்த மாசம் ஹோட்டலோட சாப்ட்வேர் அப்டேட்டுக்கு நீ வரக்கூடாது. வந்தா, எந்த வேலைய வச்சு நீ இதெல்லாம் செய்யுறியோ அந்த வேலையே இல்லாம போயிடும். ஞாபகம் வச்சுக்க”
கடுங்கோபத்தோடு அவளை எச்சரித்த ஆதிரா அங்கிருந்து வெளியேறிய வேகத்தில் வெளியே நின்ற புவனேந்திரன் மீது மோதிவிட்டாள். அவளை விழாமல் தாங்கி நிறுத்தியவனின் முகமோ இறுகிப்போயிருந்தது.
ஆதிராவை நெடுநேரம் காணவில்லை என்றதும் கை கழுவுமிடத்துக்குத் தேடி வந்தவன் மதுமதி – ஆதிராவின் உரையாடலுடைய இறுதிப்பகுதியில் ஆதிரா பேசியதைக் கேட்டதும் இறுகிப்போய்விட்டான்.
‘மதுமதியின் வருகை ஆதிராவைச் சலனப்படுத்துகிறது. அவள் அமையிழந்து தவிப்பது, அச்சம் கொள்வதும் தன் மீது அவளது நம்பிக்கை இல்லை என்பதை அல்லவா காட்டுகிறது’
புவனேந்திரனின் மனதில் அடி விழுந்தது அந்நொடியில்!
“புவன்.. இவ..”
“எதையும் பேசவேண்டாம் இங்க” என்றவன் விறுவிறுவென அங்கிருந்து போய்விட்டான். ஆதிரா கலங்கிப் போய் நின்றாள் அங்கேயே.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

