தேவையற்ற தூண்டுதல்கள் குறைந்த அளவிலான MAO மற்றும் கார்டிசோல், அதிகளவிலான கொனாடல் ஹார்மோன்களால் ஏற்படுகின்றன. எனவே பெரும்பான்மையான சைக்கோபாத்கள் இத்தகைய நரம்புயிரியல் குறைபாடுகளால் இயல்புக்கு மீறிய நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். இதுவே அவர்களுக்கும் இவ்வுலகிற்குமிடையே பிளவை உண்டாக்குகிறது. தேவையற்ற தூண்டுதல்கள், விரோதம், முரட்டுத்தனம் மற்றும் உணர்வுரீதியான வேதனைகளை வேண்டுமானால் சைக்கோதெரபியின் உதவியால் ஓரளவுக்குக் கட்டுக்குள் கொண்டுவரலாம். மற்றபடி சைக்கோபதியைக் கண்டறியவும் கட்டுக்குள் கொண்டுவரவும் சைகோஃபார்மாதெரபி மற்றும் நியூரோ ஃபீட்பேக் எனப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட கருத்தறிக்கை அவசியம். நீண்டகால சைக்கோதெரபி அதாவது குறைந்தபட்சம் ஐந்தாண்டு கால சைக்கோதெரபியில் சில வகையான சைக்கோபாத்களும், அவர்களது மோசமான நடத்தைகளும் குணமாகியிருக்கின்றன.
-From ‘The hidden suffering of the psychopath’ article of Willem H.J.Martens
“ஜான் அண்ணா”
இனியாவின் குரல் கேட்டதும் ஜானுக்கும் நவநீதத்துக்கும் தூக்கிவாரிப்போட்டது. இருவரும் அதிர்ச்சியோடு அவளைப் பார்க்க இனியாவோ உறுத்து விழித்தாள் இருவரையும்.
அவளருகே நின்று கொண்டிருந்த குமாரி கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் சாமர்த்தியமாகப் பயன்படுத்திக்கொண்டு “பாரு இனியா! நான் சொன்னப்ப நீ நம்பலல்ல… இதுங்க ரெண்டும் நம்ம வீட்டுல கன்னம் வச்சு திருடனும்னு ரொம்ப நாளா திட்டம் போட்டுதுங்க… இன்னைக்குக் கையும் களவுமா சிக்கிடுச்சுங்க… சீ! உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ணுற துரோகிங்க” என உரத்தக்குரலில் ஜானுக்கும் நவநீதத்துக்கும் வசைமாரி பொழிந்தார்.
அந்தச் சத்தத்தில் பள்ளி முடித்து வீட்டுக்கு வந்த நித்திலனும் ஜென்னியும் சமையலறை வாயிலுக்கு ஓடி வந்தார்கள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இனியாவோ நம்பிக்கையற்ற விரக்தியான பார்வையை ஜான் மீது செலுத்தினாள்.
“நீங்க இப்பிடி பண்ணுவிங்கனு நான் எதிர்பாக்கலண்ணா…. அப்பிடி என்ன உங்களுக்குத் தலைபோற கஷ்டம்? எதுவா இருந்தாலும் அப்பா கிட்ட சொன்னா சரி பண்ணிருப்பாரே… ஏன் இப்பிடி பண்ணுனிங்கண்ணா? நவனிக்கா, உங்களை நாங்க எப்பவாச்சும் மட்டமா நடத்திருக்கோமா? அப்பாவும் சித்தியும் உங்களுக்கு ஒரு கஷ்டம் வந்தா உடனே சரிபண்ணுறாங்க தானே… அப்புறம் ஏன் இந்த மாதிரி ஒரு காரியம் செய்ய உடந்தையா இருந்திங்க?”
“இனியாம்மா அது வந்து..”
ஜான் நிலமையை விளக்க முன்வரவும், குமாரி எங்கே தன் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என முந்திக்கொண்டு “விடு இனியாம்மா… நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டுல வச்சாலும் அது தெருவைத் தேடித் தான் ஓடுமாம்… அதை மாதிரி தான் இதுங்களும்… முதலாளி ஐயா எவ்ளோ நல்லது பண்ணுனாலும் திருட்டுப்புத்தி அடங்கல” என விஷத்தைக் கக்கினார்.
இனியாவுக்கு குமாரி மீது கிளாராவைப் போலவே அதீத நம்பிக்கை. பாவம், அவர் சொன்னதை அப்படியே நம்பினாள் அச்சிறுபெண்.
“சரியா சொன்னிங்க குமாரி ஆன்ட்டி… இவங்களை நாய் கூட கம்பேர் பண்ணாதிங்க… ஒரு கவளம் சோறு போட்டா கூட விசுவாசமா அது நம்ம காலைச் சுத்தி வரும்… இவங்க அதை விட கேவலம்… சீ”
கத்தி கூப்பாடு போட்டுவிட்டு அவள் சமையலறையை விட்டு வெளியேற மற்ற வேலையாட்கள் இக்காட்சியைப் பார்த்துவிட்டுத் தங்களுக்குள் முணுமுணுத்தபடி அங்கிருந்து அகன்றார்கள்.
ஜானால் இந்த அவமானத்தைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவரும் நவநீதமும் அவமானத்தில் கூனிக் குறுகி நிற்கும்போதே குமாரி திமிரான சிரிப்போடு அங்கிருந்து போய்விட்டார்.
“இதுல்லாம் தேவையா நவநீதம்? இத்தனை வருசம் உழைச்சதுக்கு இப்ப திருட்டுப்பட்டம் கிடைச்சிடுச்சு… இந்தப் பணத்தை வச்சு சோபியாக்கு ஆபரேஷன் பண்ணியே ஆகணுமா? இப்பிடி சின்னப்பிள்ளை வாயால கேக்கக் கூட பேச்செல்லாம் கேக்குற மாதிரி நிலமை வந்துடுச்சே நவநீதம்”
ஜான் கதறியழுதார். அவரைச் சமாதானம் செய்தாள் நவநீதம்.
“குமாரி சூனியக்காரி சொன்னதை அப்பிடியே இனியா பொண்ணு நம்பிடுச்சுய்யா… நம்ம போய் நிலமைய விளக்குனோம்னா அவ புரிஞ்சுப்பா… இது ஐயா நம்ம புள்ளை ஆபரேஷனுக்குக் குடுத்த காசு தான்னு சொன்னா அவ நம்ம பக்கம் தப்பில்லனு புரிஞ்சிப்பாய்யா”
ஜானும் வேறு வழியின்றி நவநீதம் சொன்னதற்கு உடன்பட்டார். இருவரும் இனியாவின் அறைக்குப் போன போது அங்கே குமாரியும் கிளாராவும் இனியாவிடம் பேசிக்கொண்டிருப்பதைக் கேட்க நேரிட்டது.
“இப்ப உன் கிட்ட வந்து அதுங்க ரெண்டும் நாடகம் போடும் பாரு” இதைச் சொன்னவள் கிளாரா.
“என்ன நாடகம் போட்டாலும் நான் அவங்களை நம்ப மாட்டேன் சித்தி” என்றாள் இனியா.
“நீ நம்ப மாட்டனு தெரியும் இனியாம்மா… ஆனா அதுங்க உன்னை நம்பவைக்கணும்னு விதவிதமா பொய் சொல்லக் கூட தயாரா இருக்குமே” என போலிக்கவலையோடு பேசினார் குமாரி.
நவநீதத்திற்கு குமாரியைக் கொல்லுமளவுக்கு ஆத்திரம். பேசிவிட்டுக் கிளாராவும் குமாரியும் வெளியே வர ஜானோடு சேர்ந்து ஒளிந்து நின்றாள் அவள்.
அவர்கள் போனதும் இனியாவின் அறைக்கு ஜானுடன் போய் நின்றாள்.
இருவரையும் பார்த்தவுடன் இனியாவின் முகத்தில் கோபச்சிவப்பு துளிர்த்தது.
“இனியாம்மா…”
ஜான் பேசத் தொடங்கியதும் போதும் என்பது போல கையுயர்த்தினாள் இனியா.
“இதுக்கு மேல எதுவும் பேசாதிங்க ஜான் அண்ணா… இன்னொரு தடவை இதே போல தப்பு நடந்துச்சுனா அப்பா கிட்ட சொல்லி உங்களை வேலைய விட்டு அனுப்பிடுவேன்” என்றாள் இளக்கமின்றி.
நவநீதமும் ஜானும் கைகூப்பி அழுதனர். அப்போது பிள்ளைகள் அங்கே நிற்பதைக் கவனித்துவிட்டாள் இனியா.
“நித்தி ஜென்னி ரெண்டு பேரும் ஹோம்வொர்க் பண்ண போங்க… அக்கா இப்ப வந்துடுறேன்” என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்துவிட்டு மீண்டும் ஜானிடம் வந்து நின்றாள்.
“அப்பிடி என்ன தான் உங்களுக்குப் பிரச்சனை ஜான் அண்ணா?” என ஆதங்கத்துடன் கேட்டாள்.
ஜான் அழுகையோடு “என் மகளுக்கு ஆபரேஷன் பண்ணனும் இனியாம்மா… அவளுக்கு மூளையில கட்டி… ஐயா கிட்ட சொன்னப்ப ஏழு லச்சம் ரூபா அவர் தான் அம்மாவோட அக்கவுண்டுக்கு அனுப்பி வச்சாரு… ஆனா அம்மா அதை குமாரிக்கு வீடு வாங்க குடுத்துட்டாங்க… இந்த உண்மை ஐயாக்குத் தெரிஞ்சா எங்களை வேலைய விட்டு அனுப்பிடுவோம்னு மிரட்டுனாங்க… அதான் நவநீதம் வேற வழியில்லாம திருடிட்டா… என் புள்ளையோட உயிருக்காக தான் இவ அப்பிடி செஞ்சா இனியாம்மா” என்றதும் இனியாவின் முகத்தில் குற்றவுணர்ச்சி.
சரியாக விசாரிக்காமல் இப்படி திட்டிவிட்டோமே என மனம் வருந்தியவள் “சாரிண்ணா… சாரிக்கா… நான் நடந்தது தெரியாம உங்களை திட்டிட்டேன்… ஐ அம் ரியலி சாரி… அப்பா திரும்பி வந்ததும் நடந்த எல்லாத்தையும் அவர் கிட்ட சொல்லி குமாரி ஆன்ட்டிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க பாக்குறேன்” என்றாள்.
“இல்ல இனியாம்மா… குமாரிய பத்தி உங்களுக்குத் தெரியல… அவ உங்களையே ஐயா கிட்ட திட்டு வாங்க வச்சிடுவாம்மா… அவளுக்குக் கிளாராம்மாவ அவ கண்ட்ரோல்ல வச்சுக்கணும்… அதுக்கு என்ன வேணாலும் பண்ணுவா” என்றாள் நவநீதம்.
“ஆமாம்மா… நீங்க சொன்னாலும் ஐயா உங்க வார்த்தைய நம்ப மாட்டாரு… இதை வச்சு உங்களுக்கும் ஐயாக்கும் இடைல உங்க சித்தி இடைவெளிய உண்டாக்க பாப்பாங்க… இதை இப்பிடியே விட்டுடுங்க இனியாம்மா” என்று ஜான் கரம் கூப்பி அழவும் இனியாவும் தந்தையிடம் எதையும் சொல்லமாட்டேன் என ஒப்புக்கொண்டாள்.
ஆனால் கிளாராவிடமும் குமாரியிடமும் இதற்காக அவள் சண்டை போட்டாள். சொல்லப்போனால் அப்போதிருந்தே கிளாராவுக்கும் இனியாவுக்குமிடையேயான உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது.
கலிங்கராஜனின் பணத்தை வைத்து சோபியாவின் அறுவைச்சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்து அவளும் பூரண உடல்நலமடைந்தாள்.
எல்லாம் சாத்தானின் அருள் என்று பூரித்த ஜான் அந்த மாத சாத்தான் வழிபாடு கூட்டத்தில் அவருக்கு உயிர்பலியாக வெள்ளாடு ஒன்றைக் கொடுத்தார்.
இதற்கு பிறகும் குமாரி தங்களைத் துச்சமாகப் பேசியதை ஜானாலும் நவநீதத்தாலும் மறக்க முடியவில்லை. கிளாராவின் ஆதரவு இருப்பதால் தானே இந்த ஆட்டம் போடுகிறாள் என்று உள்ளுக்குள் கறுவினார்கள் இருவரும்.
எப்படியாவது கிளாராவிடமிருந்து குமாரியைப் பிரிக்க வேண்டுமென சபதம் எடுத்துக்கொண்டார்கள் ஜானும் நவநீதமும்.
அன்றிலிருந்து கிளாராவின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தார்கள்.
அவள் அடிக்கடி ஏகலைவன் பக்கம் சிறப்பு கவனம் செலுத்துவதை ஜான் கண்டுகொண்டார்.
ஏகலைவன் கலிங்கராஜனைக் காண வரும் போதெல்லாம் அதிகப்படி அக்கறை எடுத்து முகம் மற்றும் உடையலங்காரம் செய்து கொண்டு விருந்தோம்புவாள் கிளாரா.
என்ன செய்தாலும் ஏகலைவன் அவளைத் திருமதி கலிங்கராஜன் என்ற கோணத்திலேயே பார்த்து பேசிக்கொள்ளவும் ஒரு கட்டத்தில் சலிப்படைந்து எப்படி அவனது கவனத்தைத் தன் பக்கம் திருப்புவதென்ற ஆராய்ச்சியில் இறங்கினாள்.
அவளது மாய்மாலம் எல்லாம் யார் கண்ணுக்கும் படவில்லை, எவருடைய கருத்தையும் கவரவில்லை என்ற இறுமாப்புடன் உலா வந்தவளுக்கு ரோஷணின் சாத்தான் வழிபாட்டுக் குழு பற்றி போகிற போக்கில் கூறினாள் நவநீதம்.
“ஜான் இருக்காருல்ல, அவரு மகளுக்கு ஆபரேஷனுக்குக் காசு கிடைக்கல… மனசு வருந்தி அந்தச் சாத்தான் வழிபாட்டுல நானும் அவரும் கலந்துக்கிட்டோம்… அதுல கலந்துகிட்ட நேரம் ஐயா மனசு வச்சு காசு குடுத்தாங்க… இப்ப சோபியாவுக்கும் ஆபரேஷன் முடிஞ்சு நல்லா இருக்கா கிளாராம்மா… உங்களை ரொம்ப நாளா ஏதோ கவலை வாட்டுதுனு தோணுது… நீங்களும் எங்க கூட சேர்ந்து இந்த மாச வழிபாட்டுக்கு வர்றிங்களா?” என்று கேட்டு கிளாராவின் ஆசையைத் தூண்டிவிட்டாள் நவநீதம்.
குமாரியின் கட்டுப்பாட்டிலிருக்கும் கிளாராவைத் தங்கள் பக்கம் இழுக்கும் வெறி அவளுக்கு.
முதலில் கிளாராவுக்கு அவளது பேச்சில் நம்பிக்கை இல்லை. கேவலம், ஒரு வேலைக்காரியின் பேச்சைக் கேட்கவேண்டுமா என அலட்சியம் செய்தவள், அவ்வபோது ஜானும் நவநீதமும் வேண்டுமென்றே அவளது காதுபட ரோஷணின் சாத்தான் வழிபாட்டுக்குழுவவைப் பற்றி பேசி அவளது ஆசையை அதிகமாக்கினார்கள்.
எப்படியும் கிளாரா அந்தக் குழுவில் இணைந்துவிடுவாள் என்ற நம்பிக்கை வந்தபோது குமாரியை எகத்தாளமாகப் பார்த்தபடி கடந்தார்கள்
கிளாரா சாத்தான் வழிபாடு குழுவில் இணைவாளென நம்பிக்கையோடு ஜானும் நவநீதமும் காத்திருக்க., அவர்களுக்கு அதிர்ச்சியூட்டும் விதமாக அக்குழுவில் இணைந்தான் முத்து.
ஜான் அவனை மாத வழிபாட்டுக் கூட்டத்தில் பார்த்தபோது கூட நம்பவில்லை.
கூட்டம் முடிந்ததும் முத்துவிடம் விசாரித்தார்.
“உன்னை இங்க பாத்ததுல ரொம்ப சந்தோசம் முத்து… என்னால என் கண்ணையே நம்ப முடியல… நீயா இங்க வந்திருக்க? நானும் நவநீதமும் உன்னைப் பாத்ததும் ஷாக் ஆகிட்டோம் தெரியுமா?” என்றவரிடம்
“நீ இந்தக் குரூப்ல சேர்ந்ததுக்கு அப்புறம் தான் சோபி பாப்பாக்கு உடம்பு சரியாச்சுனு சொன்னல்லண்ணே.. அப்பவே நான் யோசிச்சேன்… ஆனா இதுல சேருற தைரியம் வரல… என்னை விட மோசமா வேலை பாக்குறவனுக்கு போன வாரம் பாலிவுட்ல சான்ஸ் கிடைச்சிருக்குனு ஃப்ரெண்ட் ஒருத்தன் சொன்னான்… அப்ப இருந்து மனசு ஆறலண்ணே… ஃபவுண்டேசன் போடுற ஏர் ப்ரஷ்சை சரியா பிடிக்கக் கூட தெரியாதவன் அவன்… அவன் இன்னைக்கு நம்பர் ஒன் பாலிவுட் ஸ்டாருக்கு மேக்கப் போடப்போறான்… எல்லா திறமையும் இருந்தும் நான் இங்க கால்டாக்சி ஓட்டிட்டு இருக்கேன்… வெறுப்பா இருந்துச்சுண்ணே… எனக்கும் அந்தச் சாத்தான் நல்ல வழி காட்டுவாருனு நம்பி இந்தக் குரூப்புல சேர்ந்திருக்கேன்” என்று குழுவில் இணைந்ததற்கான காரணத்தைக் கூறி முடித்தான் முத்து.
ஜானுக்கு அவன் குழுவில் இணைந்ததில் மகிழ்ச்சியே.
“இனிமே உன் வாழ்க்கைல எல்லாம் நல்லதா நடக்கும்” என்றார்.
சாத்தான் குழுவில் கொடுக்கப்பட்ட போதைப்பொருட்களும், ரோஷணின் பேச்சுத்திறமையும் சாத்தான் சர்வவல்லமை படைத்தவர் என்ற மாய பிம்பத்தை அவர்களுக்குள் உருவாக்க ஆரம்பித்தன. இருவரும் இந்தக் குழு தங்களது வருங்காலத்தைக் குழி தோண்டிப் புதைக்கப்போகிறதென்ற உணர்வின்றி குருட்டு நம்பிக்கையை மட்டும் பற்றிக்கொண்டு ஒவ்வொரு சாத்தான் வழிபாட்டுக்குழு கூட்டத்திலும் கலந்து கொண்டார்கள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

