“போதைக் கணம்ன்னா என்ன தெரியுமா? அது ராஜா சாரோட இசைய கேக்குற நிமிசம்தான். சத்தியமா சொல்றேன், அந்த பீலிங்கை வார்த்தையில சொல்ல முடியாது. ‘தென்றல் வந்து தீண்டும்போது’ அவர் உருகுறப்ப, உண்மையிலேயே யாரோ வந்து தொட்டுப் போன மாதிரி ஒரு சிலிர்ப்பு இருக்கும் பாருங்க! அடடா! செம ஃபீல் அது. ராஜா சார் பாடல்கள் இதமான ஆறுதல்னா, ரஹ்மான் சார் பாடல்கள் உற்சாகமான பவர் பூஸ்டர். ரஹ்மான் சாரோட பாட்டுல புதுமையும் ஸ்டைலும் நிரம்பி வழியும். மனசார சொல்லுறேன், இந்த ரெண்டு ஜாம்பவான்களோட இசையும் என் வாழ்க்கையில இல்லேன்னா, நான் எவ்வளவு மிஸ் பண்ணியிருப்பேன் தெரியுமா? இந்த போதை இருக்கே, இது போதும், லைஃப்ல எவ்ளோ டென்ஷன் இருந்தாலும், அதை எல்லாம் மறக்கடிக்க!
-மிருணாளினி
ஆதிரா ஆர்டர் போட்ட பெயர்ப்பலகை வந்துவிட்டது. அதை பக்கவாட்டுச் சுவரில் மாட்டும் வேலையைச் செய்துகொண்டிருந்தாள் மிருணாளினி.
கர்ணன் இதையெல்லாம் பார்த்தும் பார்க்காதவன் போல ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்தான். கொஞ்சம் கடுப்போடு!
இரயில்வே ஸ்டேசனில் இருந்து வந்ததும் மடிக்கணினியில் முகம் புதைத்துக்கொண்டவனின் பார்வை அவள் அறியாத நேரங்களில் அவளைத் தழுவி மீண்டது.

வந்ததிலிருந்து அவள் ஓய்வாக இல்லை. சிறிது நேரம் ஆன்லைன் வகுப்பைக் கவனித்தாள். பின்னர் விளக்கேற்றி முணுமுணுவென ஏதோ சொன்னாள் தெய்வங்களின் திருவுருவப்படங்களின் முன்னே நின்றபடி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதிலிருந்து சில நிமிடங்களில் அழைப்பு மணி ஒலித்தது.
அவளும் ஆதிராவும் ஆர்டர் செய்த பெயர்ப்பலகை வந்திருந்தது.
“மிருணாளினி தங்கவேலு?”
டெலிவரி எக்சிகியூட்டிவ் இவ்வாறு கேட்டதும் ஹால் சோஃபாவில் இருந்த கர்ணனின் பார்வை ஈட்டியாய் மாறியது அவளிடம்.
‘மிருணாளினி தங்கவேலுவா?’ மனம் காந்தியது காரணமின்றி!
அதை அவள் கவனிக்கவில்லை.
“நான்தான்” என்று புன்னகையோடு சொன்னபடி அவரிடம் கையெழுத்து போட்டுக் கொடுத்துவிட்டுப் பெயர்ப்பலகை இருந்த பெரிய பார்சலைப் பிரித்து அதை மாட்டவும் ஆரம்பித்துவிட்டாள்.
‘Welcome to our Place’
‘Mrunalini & Karnan’
அதை வாசித்ததுமே தனது பெயரை இரண்டாவதாகப் போட்டிருக்கிறார்களே என்ற கடுப்பு அவனுக்கு.

அதை விட கடுப்பு அவனது பொருமல், ஈட்டியாய் மாறிய பார்வை என எதையும் கண்டுகொள்ளாமல் மிருணாளினி அவளது வேலையில் கண்ணாய் இருந்ததே!
கர்ணனுக்கு அவளிடம் பேச ஈகோ இடித்தது. வேண்டும் என்றால் அவளே பேசட்டுமெனக் காத்திருந்தான். எப்படியும் பெயர்ப்பலகையை மாட்டுவதற்குத் தன்னை அழைப்பாள் என எதிர்பார்த்தான்.
ஆனால் அவளே அதை மாட்டி அதிலிருந்த குட்டி கண்ணாடி பூஜாடியில் எல்.ஈ.டி விளக்கு சரங்களை வைத்து விளக்குகளை ஒளிரவைத்து ரசித்தாள்.
மறக்காமல் அந்தப் பெயர்ப்பலகையின் அருகே நின்று செல்ஃபி எடுத்து ஆதிராவுக்கு அனுப்பினாள்.
‘தஞ்சாவூர் கல்வெட்டு கிட்ட நிக்குறா பாரு, இதுக்கெல்லமா செல்ஃபி?’
மைண்ட் வாய்சில் பேசிக்கொண்டவன் அவள் வேலையை முடித்து உள்ளே வரவும் எழுந்தான்.
அவள் நடையை நிறுத்தி அவனை நோக்கவும் “என்ன?” என்றான் அதிகாரமாய்.
‘ஒன்றுமில்லை’ என்பது போல தோள்களைக் குலுக்கிக்கொண்டவள் தனது அறைக்குள் சென்றுவிட்டாள். அவள் போய்விட்டாளா என்று உறுதி செய்துவிட்டு வெளியே வந்தவன் அந்தப் பெயர்ப்பலகையைப் பார்த்தான்.
அழகான வடிவமைப்பு தான்! சிறிய குடுவைக்குள் இருந்த எல்.ஈ.டி விளக்கு சரங்களின் மஞ்சள் ஒலி அத்துணை அற்புதம்!
‘ரசனை உள்ளவள்தான்!’ வழக்கம் போல இதையும் மைண்ட் வாய்சில் சொன்னவனின் முகத்தில் சன்னமாய் ஒரு பிரகாசம்!
பின்னர் வீட்டுக்குள் வந்தவன் தங்களது அறைக்கு வந்தான்.
“நைட் என்ன டின்னர்?”
மொபைலில் இருந்து தலையை நிமிர்த்தியவள் “சாரி?” என்று சொல்ல
“நைட் டின்னருக்கு என்ன சமைக்கப் போறனு கேட்டேன்” என்றான் அமர்த்தலாய்.
“நோ ஐடியா” தோள்களை அசிரத்தையாய்க் குலுக்கியவளின் தலையில் நறுக்கெனக் குட்டலாமா என்ற வெறி!
“நோ ஐடியானா என்ன அர்த்தம்? எனக்கு இப்பவே பசிக்குது”
“அதுக்கு நான் என்ன பண்ணுறது?”
“நீ தான் சமைக்கணும். வேற என்ன?”
மிருணாளினி சட்டென எழுந்தாள்.
“நீங்க சொல்லலைனாலும் நான் சமைப்பேன். எனக்கும் வயிறு இருக்கு. அதுவும் பசிக்கும். அந்த அளவுக்கு ஓர்மை இல்லாம யாரும் கிடக்கல”
அவள் எரிச்சலாய் பேசவும் கர்ணனுக்குத் திகைப்பு.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இந்த மாதிரி பேசுற?”
புரியாமல் கேட்டான் கர்ணன். இத்தனை நாட்கள் இருந்த புகைச்சலைக் கொட்டிவிட்டாள் மிருணாளினி.
“எமோஷனல் பாண்டிங்கை விரும்பாதவர் அதிகாரத்தை மட்டும் ஏன் காட்டுறிங்க? எனக்காக எதையும் செய்யமாட்டேன்னு சொன்னிங்கல்ல, எந்த அடிப்படைல உங்களுக்காக நான் சமைப்பேன்னு எதிர்பாக்குறிங்க? நான் ஃபெமினிஷம் எல்லாம் பேசல. உங்க கிட்ட இருந்து என்ன கிடைக்குதோ அதை மட்டும்தானே நான் திருப்பிக் குடுக்க முடியும்?”
“சோ நீ சமைக்க மாட்ட”
“அதுக்கான அவசியம் எனக்கு இல்லனு சொல்ல வர்றேன். எனக்குப் பசிக்குறப்ப எனக்கு மட்டும் சமைச்சுச் சாப்பிட்டுப்பேன்”
கர்ணன் இடுப்பில் கையூன்றி கேலிச்சிரிப்போடு அவளைப் பார்த்தான்.
“நீ தங்கியிருக்குற இந்த வீடு என்னோடது. கிச்சன் கேபினட்ல மூட்டை மூட்டையா இருக்குற புரொவிசன் என் காசுல வாங்குனது. எனக்காகச் சமைக்க முடியாது. ஆனா நான் வாங்குன வீட்டுல, என் காசுல வாங்குன மளிகை ஜாமானை வச்சு நீ சமைச்சுச் சாப்பிட்டுச் சொகுசா இருப்ப. இதெல்லாம் நீ சொன்ன கொடுக்கல் வாங்கல்ல வராதா?”
மிருணாளினியின் முகம் சிவந்து போனது.
“ஜூன்ல நான் இண்டர்ன்ஷிப்ல சேர்ந்ததும் இந்த மளிகை சாமானுக்கு, இங்க தங்குனதுக்கான காசைக் குடுத்துடுவேன். அப்புறம் எனக்குனு நான் தனியா புரொவிசன் வாங்கிப்பேன். இந்த வீட்டுல தங்குறதுக்கு வாடகை எவ்ளோனு சொன்னா நல்லா இருக்கும்”
ரோசத்தோடு அவள் கேட்க ‘அப்படியா?’ என்ற போலித்திகைப்புடனான பார்வையே அவனது பதிலாய்!
“என்ன கவுண்டர் குடுக்கலையா?” மிருணாளினி கிண்டலாய் கேட்கவும்
“இன்னைக்கு டின்னர் மட்டும் ஸ்விகில ஆர்டர் பண்ணிக்கிறேன். ஆனா நாளைல இருந்து நீ தான் சமைக்குற. முடியாதுனா தங்கவேலு மாமாக்குப் போன் பறக்கும். அப்புறம் உன் இஷ்டம்”
சிரித்தபடியே சொல்லிவிட்டு அவன் ஹாலுக்குப் போய்விட மிருணாளினி அவனுக்குக் கொடுக்காத சாபமில்லை.
‘இந்த இடித்தப்புளிக்கு வெளிச்சாப்பாடு சாப்பிட்டு நாக்கு செத்துவிட்டது. வீட்டுச்சாப்பாடு இவனுக்குச் சின்னதாய் ஆசுவாசத்தைக் கொடுக்கும் என்றால் வாய் விட்டுக் கேட்க என்ன கேடு?’
மனதுக்குள் பொருமினாள் மிருணாளினி
சொன்னபடியே கர்ணன் ஆர்டர் செய்தே சாப்பிட, அவளோ தனக்கு மட்டுமாய் என்ன சமைக்க என்று யோசிக்க ஆரம்பித்தாள்.
ஊரிலிருந்து வரும்போதே காலையுணவுக்காக புட்டு மாவு, இடியாப்ப மாவு எல்லாம் திரித்துக் கொண்டு வந்திருந்தார் உலகம்மை.
இடியாப்பம் பிழிய பொறுமை இல்லை. புட்டு என்றால் சுலபம். தண்ணீர் தெளித்து உதிரியாகப் பிசைந்து புட்டுக்குழலில் வேக வைத்தால் வேலை முடிந்தது.
அவர்கள் வீட்டில் புட்டு செய்தால் பாசிப்பயறும் நாட்டுச்சர்க்கரையும் கலந்து சாப்பிட்டே பழகியவளுக்கு வெறும் புட்டை சாப்பிட மனமில்லை.
ஃப்ரிட்ஜ் நிறைய காய்கறிகள்! எப்போதோ யூடியூபில் பார்த்த பால் புட்டு நினைவுக்கு வர கேரட்டையும் தேங்காயையும் துருவி, கேரட்டை மட்டும் நெய்யில் வறுத்து புட்டு மாவோடு கலந்து பிசைந்தாள்.
பேஸ்டல் மஞ்சள் வண்ணத்தில் மாறிப்போன மாவோடு தேங்காய் துருவலும் கலந்து அடுப்பில் புட்டு குழலை வைக்க சில நிமிடங்களில் அதிலிருந்து கிளம்பிய நறுமணம் கர்ணனின் பசியை மீண்டும் தூண்டுவதாய்!
சாப்பிட ஆசை தான்! ஆனால் உனக்காகச் சமைக்க முடியாதெனச் சொன்னவளிடம் போய் நிற்கவும் பிரியமில்லை.
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை…
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட…
கேட்டு ரசித்த பாடல் ஒன்றை…
மீண்டும் இன்று ஞாபகம் தூண்ட…
என்னை உன்னை எண்ணிதானோ…
எழுதியது போலவே தோன்ற…
என்னை உன்னை எண்ணிதானோ…
எழுதியது போலவே தோன்ற…
கேளாமல் கையிலே…
வந்தாயே காதலே…
என் பேரை கூவிடும்…
உன் பேரும் கோகிலம்…
சமையலறையிலிருந்து அவள் பாடுவது ஸ்பஷ்டமாக கர்ணனின் செவிகளில் ஒலித்தது.
“பார்றா! இளையராஜால இருந்து ரஹ்மானுக்கு முன்னேறிட்டா” எனக் கேலியாகச் சொல்லிக்கொண்டான்.
அதே நேரம் சமையலறையில் இருந்த மிருணாளினிக்கும் தனியே சாப்பிட பிரியமில்லை.
அவனுக்கும் கொஞ்சமாய் ஒரு கிண்ணத்தில் போட்டு நாட்டு சர்க்கரை வைத்து கொண்டு போய் நீட்டினாள்.
கர்ணனுக்கு இளம் மஞ்சளாய் மின்னிய புட்டும், அதிலிருந்து கிளம்பிய நறுமணமும் சாப்பிடும் ஆசையைத் தூண்டினாலும் ஈகோ தடுத்தது.
“நீங்க அதிகாரமா பேசுனிங்க. நானும் பதிலடி குடுத்தேன். ஒத்தையில செஞ்சு திங்குற மாதிரி எங்கம்மா அப்பா என்னை வளக்கல. அது நாகரிகம் இல்லனு எனக்குத் தெரியும்” என்றாள் எங்கோ பார்த்தபடி.
அதன் பின்னர் கர்ணனுக்குமே பிடிவாதம் பிடிக்கத் தோன்றவில்லை. கிண்ணத்தை வாங்கிக்கொண்டான்.

“சைட் டிஷ்சா கடலைக்கறி வச்சிருக்கலாம்” என்ற அமர்த்தலான ஆலோனை வேறு!
வெளியூரில் தனியாகத் தங்கி வேலை செய்யும் ஆண்களின் மனோபாவம் இது.
மனைவி என்ற ஒருத்தி வரும்வரை ஹோட்டலிலும் மெஸ்சிலும் வெந்ததையும் வேகாததையும் தின்றிருப்பார்கள். ஆனால் மனைவி வந்து அவள் சமைத்த உணவு தேவாமிர்தமாகவே இருந்தாலும் அதில் ஒரு குறையைக் கண்டுபிடிப்பார்கள்.
குறைந்தபட்சம் ‘எங்கம்மா இதையே வேற மாதிரி இன்னும் டேஸ்டா செய்வாங்க’ என்ற இடைச்செருகலாவது இருக்கும்.
‘அடேய் இத்தனை நாளா அரைகுறையா சாப்பிட்டதுக்கு இந்தச் சாப்பாடு எவ்ளோவோ மேல்’ என்று அவர்கள் மனசாட்சி சொன்னாலும் அதை மனைவிமார்களிடம் ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.
கர்ணன் மட்டும் வேறு மாதிரியா இருந்துவிடுவான்?
மிருணாளினி அவனது கடலைக்கறி பேச்சை எல்லாம் பொருட்படுத்தாமல் எதிர் சோஃபாவில் அமர்ந்து அவளது தட்டிலிருப்பதைக் காலி செய்ய ஆரம்பித்தாள்.
இரவுணவு திருப்தியாகவே முடிந்தது, கர்ணனின் “ஏலக்காய் தட்டிப் போட்டிருந்தா புட்டு இன்னும் மணமா இருந்திருக்கும்’ என்ற குறைகூறலோடு.
கூடவே “நாளைக்குக் காலைல ப்ரேக்ஃபாஸ்ட் உண்டா?” என்று வேறு கேட்டு வைத்தான்.
அது பணிவானத் தொனி இல்லைதான்! ஆனால் முன்பு போல அதிகாரமாய் நீ செய்தே ஆகவேண்டுமெனக் கேட்கவில்லை என்பதால் ஆமெனத் தலையசைத்தாள் மிருணாளினி.
“லஞ்ச்?”
“உங்களுக்கு வீட்டுச்சாப்பாடு சாப்பிட ஆசையா இருந்தா அதை ஓப்பனா சொல்லுங்க. இதெல்லாம் நான் எமோஷனல் பாண்டிங்குக்கான ஆரம்பம்னு நான் கற்பனை பண்ணிக்க மாட்டேன்”
நேரடியாகவே சொல்லிவிட்டாள் மிருணாளினி. கர்ணனும் தனது மனதிலுள்ளதைக் கண்டுகொண்டாளே என்ற திகைப்போடு கொஞ்சமாய் எழுந்தச் சங்கடத்தையும் விழுங்கியபடி “வீட்டுச்சாப்பாடு கண்டிப்பா வேணும்னு சொல்லமாட்டேன். பட் கிடைச்சா நல்லா இருக்கும்” என்றான் எங்கோ பார்த்தபடி.
மிருணானி கண்களைச் சுருக்கியவள் “இவரு பெரிய தசாவதாரம் கமலஹாசன்! சுத்தி வளைச்சுதான் எதையும் சொல்லுவாரு” என்று வாய்க்குள் முணுமுணுத்துவிட்டு அவனைக் கடந்து போய்விட்டாள்.
இரவில் சீக்கிரமே உறங்கிவிட்டார்கள் இருவரும்.
மறுநாள் காலையில் கர்ணனுக்கு முன்னரே மிருணாளினிக்கு விழிப்பு வந்துவிட்டது.
காலையில் எழுந்ததும் குளித்து தலையில் ஈரத்துண்டைச் சுற்றிக்கொண்டு சமையலறைக்குள் சுழலும் ‘ஃபிக்சனல் தமிழ்ப்பெண்’ இல்லை அவள்.
எழுந்ததும் பல் துலக்கி காலை கடன்களை முடித்து தனக்கு மட்டுமாய் காபி போட்டு எடுத்துக்கொண்டு பால்கனிக்கு வந்தாள்.
அவர்கள் இருக்கும் பூர்வா ரெசிடென்சியல் கம்யூனிட்டியிலிருந்து பார்த்தாலே கிண்டி ரேஷ் கோர்ஸ் தெரியும். கூடவே அடர்ந்த மரங்களோடு கூடிய காட்சியும்!
மிடறு மிடறாக இதமானச் சூட்டோடு நாவை ஸ்பரிசித்து தொண்டைக்குள் இறங்கிய காபியைச் சுவைத்தபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
அவள் நின்ற பால்கனியின் இன்னொரு பக்கச் சுவர் செடிகள் வளர்க்கும் ப்ளாண்ட் வாலாக மாறியிருந்தது. சுவரில் செடிகள் மற்றும் அலங்காரக்கொடிகள் வளர்க்கும் சட்டங்கள் பொருத்தப்பட்டு அவற்றில் விருப்பப்பட்ட செடிகளையும் கொடிகளையும் வளர்க்கும் அமைப்பு அது.
அதில் இங்கிலீஸ் ஐவி கொடிகள் செழித்து வளர்ந்திருந்தன. கொஞ்சம் கட்டுக்கடங்காமல் வளர்ந்திருப்பது போன்ற தோற்றம்.
“கொடிய அப்பப்ப ட்ரிம் பண்ணனும். இவன் அதெல்லாம் செய்ய மாட்டான் போல. கொடியும் அவனை மாதிரியே மனம் போன போக்குல வளர்ந்திருக்கு”
வாய்க்குள் முணுமுணுத்துக்கொண்டாள் மிருணாளினி.
ஆனால் ஒன்று! வீடு வாங்கிய விசயத்தில் கர்ணனின் சாய்ஸ் சிறந்தது என்று ஒத்துக்கொள்வாள் அவள்.
மூன்று படுக்கையறை, மாடுலார் கிச்சன், சாப்பிடுவதற்கேற்ற டைனிங் ஹால், அழகான நவீன பாணி உள் அலங்காரம் என வீடு என்னவோ அத்துணை அற்புதம்!
காபி காலியானதும் மூளை அடுத்து சமைக்கச் செல்லெனக் கட்டளையிட்டது.
முந்தைய தினம் எழிலரசி கிரைண்டரில் இட்லி தோசைக்கு மாவு அரைத்து வைத்து விட்டுப் போனார்.
கிச்சன் மேடையில் ஒரு ஓரமாய் இருந்த மாவு பாத்திரத்தைத் திறந்து பார்த்தவளுக்கு மாவு புளித்திருந்ததே பெரும் மனதிருப்தியாய்!
இல்லத்தரசிகளுக்கு இட்லி மாவு என்பது எத்துணை பெரிய வரப்பிரசாதம் என்பது இப்போது புரிந்தது.
மடமடவென சாம்பாருக்குக் காய்கறிகளை நறுக்கி இட்லிக்கும் மாவு ஊற்றி அடுப்பிலேற்றினாள்.
சாம்பார் தாளிக்கும் நறுமணத்தில் விழித்த கர்ணனுக்கு மனதில் இனம்புரியாத உற்சாகம்! எப்போதும் இதே அறையில் பன்னிரண்டு மணியைத் தாண்டியும் மொபைலை நோண்டிக்கொண்டு தூக்கம் வராத இன்சோம்னியா இரவுகள்தானே அவனுக்குப் பழக்கம். சிலரைத் தனிமை இப்படி வாட்டியெடுப்பது உண்டு.
தன்னோடு ஒருத்தி ஒரே அறையைப் பகிர்ந்து, தன்னுடன் ஒரே படுக்கையில் துணையாய் இருப்பதே தன்னுடன் ஒட்டியிருந்த தனிமையின் நிழலைத் துரத்தியதாய் உணர்ந்தான்.
சோம்பல் முறித்துக்கொண்டு எழுந்தவன் அவனது அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டுச் சமையலறைக்குள் எட்டிப் பார்த்தான்.
காலையுணவைச் சமைத்து முடித்துவிட்டு மிருணாளினி மதியவுணவு தயாரிப்பதில் மும்முரமாகியிருநதாள்.
அவள் காய்கறி நறுக்கும் வேகத்துக்கு அவளது காது ஜிமிக்கிகள் அசைந்தாடுவதே கர்ணனுக்குக் காலைவேளையின் அழகை அதிகரிக்கும் காட்சியாய்!

அவனது பார்வை துளைத்த உணர்வில் அவள் திரும்பிப் பார்த்ததும் “அது… காபி” என்று ஆரம்பித்தான் கர்ணன்.
“நீங்களே போட்டுக் குடிச்சுக்கோங்க. வேலையா இருக்கேன், பாத்தா தெரியல?”
சிடுசிடுப்பாய் ஒலிக்காதக் குரலில் அழுத்தமான அதிகாரம்! முந்தைய இரவில் சமைக்கவில்லையா என்று கேட்டபோது அவனது குரலில் இருந்த அதே அதிகாரம்.
‘நீ என்ன தருகிறாயோ அதைத் திருப்பிக் கொடுப்பேன் என்றாளே! இதுதான் போல’
“சரி”
ஒரு ஓரமாய் அவன் காபி போட அவள் சமைக்கவென நேரம் பறந்தது.
மிருணாளினியும் அவனும் காலையுணவைச் சாப்பிட்ட பிறகு, கர்ணனுக்காக சிறிய மில்டன் டிபன் கேரியர் பாக்சில் சாதம், குழம்பு, பொரியலை வைத்து நீட்டினாள் அவள்.
“தேங்க்ஸ்” என்றபடி வாங்கிக்கொண்டவனுக்கு அவளது இண்டர்ன்ஷிப் பற்றிய நினைவு வந்ததும் சட்டென நின்றான்.
“நீ ஃபர்ஸ்ட் டே ஆபிசுக்கு என் கூடவே வந்துடு. ஹெச்.ஆரைப் பாத்துப் பேசணும்” என்றான்.
தானும் அவனும் ஒரே அலுவலகத்தில் பணியாற்றப் போகிறோமென்பது அவளுக்கும் இப்போதுதான் திடீரென நினைவுக்கு வந்தது.
“எதுக்கு?” புரியாமல் கேட்டாள் மிருணாளினி.
“நாம ஹஸ்பெண்ட் அண்ட் ஒய்ப்னு அங்க இன்ஃபார்ம் பண்ணனும். ஃபியூச்சர்ல நீ என் டீம்ல சேர்ந்து ஒர்க் பண்ணுற சான்ஸ் வரலாம். இல்லனா உன்னோட புராஜெக்ட் டீமுக்கு நான் புராஜெக்ட் மேனேஜரா வரலாம். அப்ப உன் பெர்ஃபாமன்ஸை மதிப்பிடுறப்ப நான் பார்சியாலிட்டி பாத்ததா என் பேர்ல ப்ளாக் மார்க் வந்துடக்கூடாது. இந்த வேலை என் ட்ரீம். அதோட இந்த வருசம் எனக்குக் கரியர் அட்வான்ஸ்மெண்டுக்கான சூழல் இருக்கு. நம்ம ரிலேசன்ஷிப்பால அதுல பிரச்சனை வந்துடக்கூடாது. புரியுதா?”
மிருணாளினி தலையாட்ட அவன் கிளம்பினான்.
அவன் சென்றதும் தனியே இருந்த வீட்டில் நிசப்தம் மட்டுமே அவளுக்குத் துணையாய்!
காலையில் பம்பரமாய் சுழன்று வேலை செய்த உடல் ஓய்வைக் கேட்டுக் கெஞ்சவும் படுக்கையறைக்கு வந்தவள் அங்கே பார்த்த காட்சியில் கடுப்பின் உச்சத்துக்கே போய்விட்டாள்.
ஈர டவலை படுக்கை விரிப்பின் மீது வீசிவிட்டுப் போயிருந்தான் கர்ணன். அதன் ஈரம் விரிப்பில் பரவிவிட்டது.
“எருமை எருமை! ஆச்சி இவனை பொலிகாளைனு சொல்லுறதுல தப்பே இல்ல” என்று கறுவியபடி ஹேர் ட்ரையரை வைத்து அந்த ஈரத்தை உலர்த்த ஆரம்பித்தாள் மிருணாளினி.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

