பிணைந்தவர் காதலில் பிழையெனத் தன்னை,
இணைந்தவர் நடுவே இடியென உணர்ந்தாள்!
உருகிய நேசத்தில் உதித்ததோர் தடையாய்,
கருகிய நெஞ்சோடு கலங்கினாள் பாவை!
-அட்சரனின் வேதா
“பரிட்சை எழுதக் கூட இங்க வர விருப்பமில்லனா அந்தளவுக்கு என் மக மனசு விட்டுப் போயிருச்சாங்க?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கனகவல்லி கலக்கத்தோடு கஜேந்திரனிடம் கேட்டார். முகத்தில் வாட்டம்.

“ஏன் அத்தை அப்பிடி யோசிக்குறீங்க? நான்தான் அவளை மெட்ராஸ்ல படிக்கச் சொன்னேன். அதுக்குக் காரணமும் இருக்கு அத்தை”
யாழினி அப்போதுதான் மீனாட்சியிடம் சொல்லிவிட்டுக் கனகவல்லியின் வீட்டுக்கு வந்திருந்தாள். அன்றைய தினம் ஜெயசந்திரன் அனுப்பிவைத்தார் என ஒரு நபர் வந்து வேதவதியின் கல்லூரி சம்பந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் வாங்கிக்கொண்டு கையோடு கஜேந்திரனையும் கல்லூரிக்கு அழைத்துச் சென்றார்.
கனகவல்லிக்கு முதலில் காரணம் புரிபடவில்லை. ஆனால் செல்லும் வழியிலேயே சம்பந்தி சதானந்தனின் மொபைல் அழைப்பு மூலம் விஷயம் விளக்கப்படவே கஜேந்திரனுக்கும் அதில் முரண்பாடில்லை.
ஜெயசந்திரன் மூலமாக லயோலாவில் வணிகவியல் முதுகலையில் வேதவதிக்கு இடம் உறுதியானது. அதுவே கடுமையான போராட்டத்துக்குப் பிறகுதான் கிடைத்தது என்றார் சதானந்தன்.
அவள் இடைப்பட்ட காலத்தில் கல்லூரி மாறப்போவதால் இரு கல்லூரிகளிலும் சில வழிமுறைகளைச் செய்யவேண்டியது அவசியம்.
குற்றாலம் கல்லூரி சம்பந்தப்பட்ட வேலைகளைச் செய்ய ஜெயசந்திரன் தனக்கு வேண்டிய ஒருவரிடம் கட்டளையிட்டிருந்தார். சென்னையில் செய்யவேண்டிய வேலையைச் சதானந்தனே செய்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
இன்னுமே ஊருக்குள் வேதவதியைப் பற்றிய பேச்சு அடங்கவில்லை. தேர்வுக்கு அவள் வந்தாலும் இதே பேச்சுகள் அவள் மனதை நோகடித்துவிடும். அதற்கு அவள் சென்னையில் படித்தால் தேவலை என்ற எண்ணம் வலுப்பட்டது கஜேந்திரனுக்கு.
அன்றைய தினம் கல்லூரிக்குச் சென்று கல்லூரி நிர்வாகத்திடம் ‘No Objection Certificate’க்கு விண்ணப்பித்துப் பின்னர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூலமாக அவளது மாற்றுச் சான்றிதழைப் பெறுவதற்கான வேலைகளையும் செய்து முடிக்கப்பட்டது.
அதுபோக இரு பல்கலைக்கழகங்களின் பதிவாளர் எனப்படும் ரெஜிஸ்ட்ராரிடம் அவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்தனை வேலைகளையும் கனகவல்லியிடம் கஜேந்திரன் கூறியபோது அவரது கவலையோ வேறு திக்கில் இருந்தது.
“அவ அங்க இருந்தாதானே அத்தை அவங்களுக்குள்ள ஒரு பிணைப்பு வரும். அவங்க அத்தையும் மாமாவும் தங்கமானவங்க. வேதாவ சொந்த மகள் மாதிரி பாத்துப்பாங்க. நீங்க கவலைப்படாதிங்க. ரொம்ப தேடுச்சுனா நீங்களே மெட்ராசுக்குப் போய் மகளைப் பாத்துட்டு வாங்க. அவ இங்க வராம இருக்குறது நல்லது”
கஜேந்திரனும் யாழினியும் எடுத்துச் சொன்ன பிற்பாடு கனகவல்லியும் மனதைத் தேற்றிக்கொண்டார். யாழினி சொன்னது போல சம்பந்திகள் இருவரும் மகளை அன்பாக நடத்துவதை அவள் மூலமாக அறிந்திருந்தார்.
கூடவே ராஜேஸ்வரியும் அவ்வப்போது கனகவல்லி கஜேந்திரனிடம் பேசுவார். எவ்வித அலட்டலுமின்றி இயல்பாக அவர் பேசிய விதமே அவர்களைத் தடையின்றி அட்சரனின் குடும்பத்தோடு உறவை வளர்த்துக்கொள்ள ஊக்கியது எனலாம்.
வேதவதியின் கல்லூரி சம்பந்தப்பட்ட வேண்டுகோளை நிறைவேற்றிய கையோடு அவளது இன்னொரு ஆசையான பகுதிநேர வேலைக்காகத் திருமூர்த்தி நகரில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் கிளைக்கு அவளை அழைத்துச் சென்றார் சதானந்தன்.
இரண்டு தளங்களுடன் பளபளத்த சூப்பர் மார்க்கெட்டும் அதன் முன்னே பிரம்மாண்டமாய் நிழல் பரப்பியிருந்த குல்மொஹர் மரமும் முதல் பார்வையிலேயே வேதவதிக்குப் பிடித்துப் போயின.

வெளியே ஒரு ஓரமாய்ச் சிற்றுண்டி ஸ்டால் ஒன்று இருந்தது. வெஜ் ரோல், பானிபூரி, பாவ் பாஜி வகையறாக்களோடு டீயும் காபியும் கிடைக்கும் என்றார் சதானந்தன்.
கட்டிடத்தின் பக்கவாட்டில் தரிப்பிடத்தில் ஊழியர்களின் ஸ்கூட்டிகள், பைக்குகள் மற்றும் சைக்கிள்கள் நின்றன.
இரு தளங்களுக்கும் இரண்டு சூப்பர்வைசர்கள், அது போல பொருட்களை அருகிலிருக்கும் கோடவுனிலிருந்து கொண்டு வந்து வைக்கும் பணியாளர்கள், கடைக்குள் அந்தந்தப் பிரிவில் அந்தந்தப் பொருட்களை அடுக்கும் விற்பனை ஊழியர்கள், காலாவதி தேதி சரி பார்க்கும் ஊழியர்கள் என்று அந்தப் பரந்து விரிந்த சூப்பர் மார்க்கெட்டில் ஊழியர்களுக்குப் பஞ்சமில்லை.
உள்ளே மெல்லிசைப் பாடல் ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. பில் போடும் கவுண்டரில் தீவிரமாய் வேலை பார்த்துகொண்டிருந்தார் ஒரு ஊழியர்.
அவரிடம் மருமகளை அறிமுகப்படுத்தினார்.
“இனிமே இந்த ப்ராஞ்சை மேற்பார்வை செய்யப்போறது என் மருமகள்தான். எனக்குக் குடுக்குற எல்லா மரியாதையையும் இவளுக்கும் குடுக்கணும். லயோலால இன்னும் கொஞ்சநாள்ல ஜாயின் பண்ணப்போறா. அதுவரை மார்னிங் வருவா. அதுக்கு அப்புறம் ஈவ்னிங்ல இருந்து இங்க இருப்பா”
வேதவதிக்குப் புதிய மனிதர்களைக் கண்டதும் படபடப்பாக இருந்தது. அனைவரும் அவளை விட வயதில் மூத்தவர்களாக இருந்தார்கள். சிலர் மட்டுமே இளையவர்கள்.
சதானந்தனைப் பார்த்த அந்த ஊழியர்களின் விழிகளில் தெரிந்த விசுவாசமும் மரியாதையும் வேதவதிக்கு அவர் தனது ஊழியர்களிடம் நடந்துகொள்ளும் விதத்தைப் புரியவைத்துவிட்டன.
அதே மரியாதை கலந்த பார்வையோடு வேதவதிக்கும் வணக்கம் சொன்னார்கள்.
யாரும் அங்கே அவளைக் குறித்து தேவையற்ற கேள்விகளை எழுப்பவில்லை. பார்வையால் கூட ஆராய்ச்சி செய்யவில்லை. சதானந்தனின் மருமகள் என்ற அறிமுகம் மட்டுமே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது.
அதுவே வேதவதிக்குப் பெருத்த நிம்மதியைக் கொடுத்தது.
பிறரின் பார்வையில் ஜட்ஜ் செய்யப்படுவதை விரும்பாதவள் ஆயிற்றே! இந்தச் சூழலும் மனிதர்களும் அவளை மரியாதையோடு ஏற்றுக்கொண்ட விதமே அவளது மனதுக்குப் பெரும் ஆறுதலாய்!
பொருட்கள் அடுக்குகளில் கச்சிதமாக வைக்கப்படுவதையும் கூம்பு வடிவ ஸ்டாண்ட் ஒன்றில் தள்ளுபடிக்கான பொருட்கள் எடுத்து வைக்கப்பட்டிருப்பதையும் கவனித்தாள் வேதவதி.

“நம்ம கோடவுனுக்குச் சரக்கு வந்த தேதி, எக்ஸ்பயரி டேட் எல்லாம் ரெக்கார்ட் பண்ணி வச்சிருப்போம். எக்ஸ்பயரி டேட் முடிஞ்சதும் டீலருக்குப் பொருளைத் திரும்பி அனுப்பிடணும். யாருக்கும் நஷ்டம் வரக்கூடாதுனா எக்ஸ்பயரிக்கு மூணு மாசம் முன்னாடியே இந்த மாதிரி டிஸ்கவுண்ட் சேல் போட்டுருவோம். ராஜி சூப்பர் மார்க்கெட்டோட எல்லா கிளைலயும் இதுதான் வழக்கம். இன்னைக்கு நீ சும்மா சூப்பர் மார்க்கெட்டைச் சுத்திப் பாரு. கொஞ்சம் கொஞ்சமா வெண்டார், டீலர் டீடெய்ல்ஸ் எல்லாம் உனக்குத் தர்றேன். அதெல்லாம் மெதுவா தெரிஞ்சிக்கலாம்.”
பேசியபடியே அந்தச் சூப்பர் மார்க்கெட்டில் தனக்கென இருக்கும் குட்டியான கண்ணாடி கேபினுக்குள் மருமகளோடு நுழைந்தார் சதானந்தன்.
“இனிமே இது உன்னோட ஆபிஸ் ரூம். நீதான் இந்த சூப்பர் மார்க்கெட்டோட மேனேஜர்.”
அவர் சொன்னதும் வேதவதியால் கண்ணிமைக்கக் கூட முடியவில்லை.
“நானா? மாமா ஏதாச்சும் சின்ன வேலையா இருந்தா போதுமே”
சதானந்தன் அமைதியாகப் புன்னகைத்தவர் மருமகளை நாற்காலியில் அமருமாறு பணித்தார். அவள் தயக்கத்தோடு அமர்ந்தாள்.
“எனக்கு இன்னும் சில மாசத்துல அறுபது வயசாகப் போகுதும்மா. என்னோட நாப்பதாவது வயசுல இந்தச் சூப்பர் மார்க்கெட்டை ஆரம்பிச்சேன். அன்னைக்கு ஆரம்பிச்ச ஓட்டம் இன்னும் நின்ன பாடில்ல. இந்தச் சுமைய மகன் பகிர்ந்துப்பான்னு எதிர்பார்த்தேன். அவனுக்கு ஈகோ. வேற வழிய பாத்துட்டுப் போயிட்டான். இலக்கியம், எழுத்துனு அவன் உலகமே வேற. அவனுக்கு இந்தத் தொழில் ஒட்டாதுனு புரிஞ்சதால நானும் வற்புறுத்தல. அவன்கிட்ட இல்லாத ஆர்வத்தை நான் உன்கிட்ட பாத்தேன் வேதாம்மா. எல்லா வேலையும் ஆரம்பத்துல பிரம்மாண்டமா தெரியும். அப்புறம் உனக்கு அதுல நெளிவு சுளிவு தெரிஞ்சதும் சுலபமாகிடும். இந்த ஒரு ப்ராஞ்சை நீ பாத்துக்கிட்டா எனக்கும் என் சுமையில ஒரு பாகம் குறைஞ்ச மாதிரி இருக்கும். இங்க யாரும் உன்னை மரியாதைக்குறைவா பேசமாட்டாங்க.”
அவரது பேச்சிலிருந்த தளர்வைப் புரிந்துகொள்ள அவளுக்கு அதிகநேரம் எடுக்கவில்லை.
உலகத்தின் பார்வைக்கு நான்கு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சொந்தக்காரர் அவர். ஆனால் அவரது பத்தொன்பது வருட ஓட்டத்தில் எங்கேனும் சின்ன இளைப்பாறுதல் கிடைக்காதா என்று அவர் ஏங்காத நாளில்லை.
நிற்காமல் ஓடிய ஓட்டத்தின் விளைவே இப்போதைய சமுதாய அந்தஸ்தும் செல்வச்செழிப்பும். பிடித்த ஓட்டமாகவே இருந்தாலும் ஒரு கட்டத்தில் மனமும் உடலும் ஆசுவாசமுற ஓய்வை நாடுகிறதே!
தன் மீது சதானந்தன் வைத்த நம்பிக்கைக்காக மனமுவந்து அங்கே பணி செய்ய சம்மதித்தாள் வேதவதி.
தினசரி என்னென்ன வேலைகளை அவள் செய்யவேண்டுமென ஒரு பட்டியல் போட்டுக் கொடுத்துவிட்டார் சதானந்தன். கூடவே ஐபேடும்.
“இதுல வெண்டார், டீலர் லிஸ்ட் இருக்கு. பொறுமையா தெரிஞ்சிக்க. எல்லா ஸ்டாஃப்ஸையும் தட்டிக் குடுத்து வேலை வாங்க கத்துக்க. அதே நேரம் நீ மேனேஜர் பொறுப்புல இருக்குறதையும் அவங்க மனசுல பதிய வச்சிடணும். இங்க அதிகமா உனக்கு வேலை இருக்காது. போரடிக்கும். அப்பிடி நேரத்துல தாராளமா உன் கதைகளை எழுதலாம்”
சதானந்தன் சொன்னதில் கடைசி வாக்கியத்தை மட்டும் மறுக்கத் துணிந்தாள் வேதவதி.
“எனக்கு எழுத்து வேண்டாம் மாமா. இனி அது எனக்கு ஒட்டாது.”
“நீ இன்னும் பிரச்சனையோட பாதிப்பை மட்டும் மனசுல வச்சு பேசுற வேதா. ஒரு நாள் அந்தப் பாதிப்பு மறைஞ்சிடும். அப்ப கதைகளை உன் மனசு தேடும். நீ விடுற இந்த இடைவெளி அந்தச் சமயத்துல உன்னைத் திணறடிச்சிடும். புரியுதா?”
வெறுமெனே தலையாட்டினாள் வேதவதி. ஆனாலும் மீண்டும் எழுத்தைப் பற்றி யோசிக்கும் திடமில்லை அவளது மனதுக்கு.
சதானந்தன் கொடுத்த ஐபேடில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் முகவர்களின் பெயர்களைப் பார்க்க ஆரம்பித்தாள். சின்னச் சின்ன சந்தேகங்களை அவரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாள்.
சதானந்தனும் மருமகள் கேட்ட சந்தேகங்கள் அனைத்தையும் தீர்த்துவைத்தார் எனலாம்.
இதற்கிடையே இலக்கியாவின் மொபைல் எண்ணிலிருந்து வேதவதியின் மொபைலுக்கு அழைப்பு வந்தது. தேன்மலையில் மொபைல் எண்ணை அவளிடம் பகிர்ந்திருந்தாள் வேதவதி.
உடனே அழைப்பை ஏற்றவள் “சொல்லுங்க இலக்கியா” என்றாள்.
“எப்பிடி இருக்குற வேதா? சென்னை பிடிச்சிருக்கா?”
“நான் நல்லா இருக்குறேன். சென்னை இப்பதான் பழக ஆரம்பிச்சிருக்கு எனக்கு”
“உன் கதை எங்ககிட்ட இருக்கு. அதை மறந்துட்டியா?”
கதை என்றதும் மெல்லிய கசப்புணர்ச்சி பரவியது வேதவதியின் மனதில்.
“அது… எனக்கு இப்போதைக்கு புக் மேல இண்ட்ரெஸ்ட் இல்ல இலக்கியா. அதை மறந்துடுங்க.”
“என்ன? நான் உன் கதைய முழுக்கப் படிச்சு ப்ரிண்ட் எடுத்தாச்சு. சில இடங்கள் கொஞ்சம் இடறலா இருக்கு. அதைப் பத்தி நேர்ல டிஸ்கஸ் பண்ணனும்னு கால் பண்ணுனா நீ மறந்துடுனு சொல்லுற. ஒழுங்கா நீ இப்பவே ஹெல்வட்டாஸ் வர்ற”
“இப்பவா? நான் மாமா கூட சூப்பர் மார்க்கெட்ல இருக்குறேனே”
“அங்கிள் கிட்ட போனைக் குடு”
வேதவதி மொபைலைச் சதானந்தனிடம் நீட்ட அவரும் வாங்கிக்கொண்டார்.
“என்னடாம்மா?… அப்பிடியா?… நானும் கொஞ்சநேரம் முன்னாடி வேதாக்குப் புரியவைக்க ட்ரை பண்ணுனேன்… சரிதான் நீ சொல்லுறதும்… ஆமா ஆமா, எழுத எழுதத்தான் எழுத்து திருந்தும்… சரிடா, நான் இப்பவே அனுப்பி வைக்குறேன்”
அழைப்பைத் துண்டித்தவர் “வேதாம்மா! இலக்கியாவ பாத்துப் பேசிட்டு வந்துடுறியா? நம்ம ரமேஷை ட்ரைவ் பண்ணச் சொல்லுறேன்” என்றதும்
“வேண்டாமே மாமா” எனச் சங்கடமாய்த் தவிர்த்தாள் அவள்.
“அங்க போனா உன் மனசு மாறலாம்மா. அதுக்காகத்தான் சொல்லுறேன்”
வேதவதி சில நிமிடங்கள் யோசித்தாள். பின்னர் ஹெல்வட்டாஸ் செல்ல சம்மதித்தாள்.
“கார் உங்களுக்குத் தேவைப்படுமே. இங்க ஆப்ல கேப் புக் பண்ணலாம்னு வானதி சொல்லிருக்கா. அது மட்டும் எனக்குச் சொல்லித் தாங்க மாமா. நானே போய்ப்பேன்”
சதானந்தனுக்கு அவளைத் தனியே அனுப்பவே யோசனையாக இருந்தது.
“தனியா மேனேஜ் பண்ணிடுவியாடா?”
“நீங்கதானே சொன்னீங்க. எல்லா விசயமும் முதல்ல பிரம்மாண்டமா இருக்கும்னு. இந்தச் சிட்டியும் எனக்கு அப்பிடித்தான் இருக்கு. நான் இங்க சர்வைவ் பண்ண கத்துக்கணும்ல மாமா”
சதானந்தனின் முகத்தில் மெச்சுதல் புன்னகை. வேதவதியின் மொபைலில் வாடகை கேப் புக் செய்வதற்கான அனைத்துச் செயலிகளையும் இன்ஸ்டால் செய்து கொடுத்தவர் உடனடியாக அவளது ஜிபே எண்ணுக்குப் பணமும் அனுப்பிவைத்தார்.
“ஏன் மாமா இதெல்லாம்? அப்பா குடுத்த பணமே இருக்கு”
“அட இது உன் சேலரி அட்வான்ஸ்னு நினைச்சுக்கம்மா”
வேதவதியின் முகத்தில் முறுவல் பூத்தது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

