“ஒரு கேள்விக்குப் பொதுவா என்ன மாதிரி பதில் வரணும்னு நீங்க எதிர்பாப்பிங்க? ‘ஆமா’ ‘இல்ல’ இந்த ரெண்டும் தானே? ஆனா இது ரெண்டையும் சொல்ல முடியாத தர்மசங்கடமான சூழல்ல என்ன பதில் நமக்குக் கிடைக்கும்? பெரும்பாலான நேரத்துல மௌனம் தான் பதிலா அமையும்… சொல்லப்போனா ஒவ்வொரு ‘ஆமா’ ‘இல்ல’ பதில்களும் ஏதோ ஒரு விதத்துல யாரையோ காயப்படுத்தும்… ஆனா வார்த்தைகள் இல்லாத மௌனம் யாரையும் காயப்படுத்தாது… அந்த நேரத்துல அது திமிரா சிலருக்குத் தோணலாம்… பிடிவாதமா கூட அதைச் சிலர் எடுத்துக்கலாம்… அந்த மாதிரி சமயத்துல மௌனம் கோபத்தைத் தான் உண்டாக்குமே தவிர யாரையும் காயப்படுத்தாது”
-அனுக்ரஹா
“மானஸ் யூ.எஸ்ல செட்டில் ஆகுற எண்ணத்துல இருக்குறான்… அவனுக்கேத்த பொண்ணு இதுவரைக்கும் அமையாதது கூட நல்லதுனு தோணுது மகிழ் சார்… அனு மாதிரி ஒரு அருமையான பொண்ணு தான் எங்க வீட்டுக்கு மருமகளா வரணும்னு எழுதிருக்கு போல”
பெருமிதம் பொங்க பேசிக்கொண்டிருந்தார் மாப்பிள்ளை மானஸின் தந்தை. அதை ஆமோதிக்கும் விதமாகப் புன்னகைத்தார் அவரருகே அமர்ந்திருந்த அவனுடைய அன்னை.
மாப்பிள்ளை மானஸ் ‘ஆறடி உயரம், அழகிய உயரம், ஆப்பிள் போல இருப்பானே’ என்ற பாடல் வரிகளுக்கு நியாயம் செய்யும் தோற்றத்தில் அட்டகாசமாக இருந்தான். வசீகரமாகப் புன்னகைத்தான். பார்வையில் கூட அவ்வளவு கவனம்.
இவ்வளவு ப்ளஸ் பாயிண்ட்கள் இருந்தபோதும் அனுக்ரஹாவுக்கு அந்தச் சம்பந்தத்தில் சம்மதமில்லை. காரணம் இது அவளுடைய தந்தை பேசிய சம்பந்தமாயிற்றே!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எந்தப் பிடிப்பும் இல்லாம பிடித்து வைத்தப் பிள்ளையார் போல அமர்ந்திருந்தவளுக்கு அவர்கள் பேசிய எதையும் கேட்கும் விருப்பமில்லை.
“மானஸை மேரேஜ் பண்ணிக்கிட்டா அனு வேலைக்குப் போகணும்னு அவசியமே இல்ல… அவன் மகாராணி மாதிரி வச்சு பாத்துப்பான்” இது மானஸின் அன்னை.
இவ்வளவு நேரம் அமைதி காத்த மானஸ் திருவாய் மலர்ந்தான்.
“ஈவ்னிங் நான் வொர்க் முடிச்சு வீட்டுக்கு வர்றப்ப இந்த அழகான முகம் எனக்காகக் காத்திருக்கணும்… இதை விட பெரிய சந்தோசம் என்ன இருக்க முடியும்?”
அவனது பேச்சில் நாடகத்தனம் ஒளிந்திருப்பதாகத் தோன்றியது அனுக்ரஹாவுக்கு.
வெறித்தப் பார்வையுடன் அமர்ந்திருந்தவளுக்கு மானஸின் பேச்சால் அன்னையும் தந்தையும் பூரித்துப் புளகாங்கிதம் அடைந்தது எல்லாம் தெரியவில்லை.
பிரபாவதி அவர்கள் அனைவருக்கும் சிற்றுண்டி எடுத்து வந்து கொடுத்ததும் மனதில் பதியவில்லை.
இவ்வளவு ஏன்? தங்கள் வீட்டில் வைத்து இந்த நல்ல காரியம் நடப்பதால் பஜ்ஜியும் போண்டாவுமாக ஆர்வத்தோடு சமைத்துக் கொடுத்துவிட்டு அனுக்ரஹாவின் பதிலுக்காகக் காத்திருந்த தனலெட்சுமியின் கண்களிலிருந்த மகிழ்ச்சியையும் அவள் கண்டுகொள்ளவில்லை.
அவளது நினைவில் உறுத்தியது எல்லாம் தந்தையின் குரலில் இருந்த நம்பிக்கை மட்டுமே.
எப்படியும் அனுக்ரஹா இந்தச் சம்பந்தத்திற்கு சம்மதித்துவிடுவாள் என்ற அதீத நம்பிக்கை. ஏனோ அதை உடைத்து நொறுக்க ஆவல் கொண்டது அவளுடைய உள்ளம்.
‘சரியான தருணம் வரட்டும்! இப்போது தானே காபியும் போண்டாவும் உள்ளே போகிறது! மாப்பிள்ளை தனியே பேசவேண்டும் எனச் சொல்வான் அல்லவா! அப்போது ஒட்டுமொத்தமாக இந்த நம்பிக்கையை ஆணிவேரோடு பிடுங்கி எறிகிறேன்’
அவள் எதிர்பார்த்தது போலவே மானஸ் அவளுடன் தனியே பேசவேண்டுமெனச் சொல்ல அனுக்ரஹாவும் சம்மதித்து எழுந்தாள்.
அவர்கள் தனியே பேசட்டுமென ராகவர்தன் அழைத்துப் போய் விட்ட இடம் பவளமல்லி மரத்தின் அருகே இருக்கும் சிறிய புல்தரை.
அனுக்ரஹா அவனை வெட்டுவது போல முறைக்கவும் “பேசிட்டு வாங்க… ஆல் த பெஸ்ட்” என்று கேலி கலந்த முறுவலோடு சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தான்.
மானஸ் சுற்றி வளைக்கவில்லை. நேரடியாக விசயத்துக்கு வந்துவிட்டான்.
அவன் ஒரு உணவுப்பிரியன். மூன்று வேளையும் சுடச்சுட நாக்குக்கு ருசியாகச் சாப்பிட வேண்டும். அதற்கு சமையல்காரி வைத்துக்கொண்டால் கட்டுப்படி ஆகாது.
இதனால் தான் திருமணம் செய்யப்போகிறேன் என்ற வாக்கியத்தை மட்டும் தவிர்த்துவிட்டான். சொல்லியிருந்தால் ‘கடைந்தெடுத்த பூமர்’ என்ற வசைச்சொல் அனுக்ரஹாவால் உச்சரிக்கப்படலாமென்ற முன்னெச்சரிக்கை.
இன்னும் நிறைய பேசினான். வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஏனென்றால் தனக்கு ஓ.சி.டி உள்ளது. குழந்தைகளைக் கவனமாக வளர்க்க வேண்டும். ஏனென்றால் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பரவிக்கொண்டிருக்கிறது. இதெல்லாம் சாத்தியமாக வேண்டும் என்றால் அனுக்ரஹா இல்லத்தரசியாக இருப்பதே சிறந்தது என்று அழுத்தமாக ஆயிரம் முறை கூறினான்.
ஏனோ எரிச்சல் வந்தது அனுக்ரஹாவுக்கு.
‘இவனை மாதிரி ஆண்கள் எல்லாம் மனைவி படித்தவளாக வரவேண்டுமென எதிர்பார்ப்பார்கள். ஆனால் அந்தப் படிப்புக்கான வேலைக்கு அவள் செல்லக்கூடாது. அந்தப் படிப்பின் நோக்கமே அவர்களுடைய பிள்ளைகளுக்கு ‘ஏபிசிடி’ சொல்லித் தருவது தான் என்ற அசட்டு எண்ணம்’
கடுப்போடு அவனை முறைத்தவள் “எனக்கு ஹோம் மேக்கரா இருக்குற எண்ணம் இல்ல… நீங்க அதுக்கு ஒத்து வர்ற பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க… எனக்கு உங்களைக் கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல… பெரியவங்க கிட்ட நீங்க சொல்லுறிங்களா? நான் சொல்லட்டுமா?” என்று கறாராகக் கேட்க மானஸின் பிஞ்சு இதயம் வெம்பிப் போனது,
“நான் எல்லா விதத்துலயும் பெஸ்டானவன்… என்னை எப்பிடி நீ வேண்டாம்னு சொல்லலாம்?” என்று மனத்தாங்கலோடு கேட்டான்.
“உங்களுக்கு ஏத்த பெஸ்டான பொண்ணு நான் இல்ல சார்… போங்க”
விறுவிறுவென அங்கிருந்து வீட்டுக்குள் வந்தவள் அனைவரும் முன்னதாக மாடிப்படிகட்டில் அமர்ந்து மொபைலில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த ராகவர்தனைக் காட்டமாக முறைத்தாள்.
அவனிடம் சிறிய புருவச்சுழிப்பைத் தாண்டி வேறு எந்த எதிர்வினையும் இல்லாது போக எரிச்சலுடன், வந்திருந்தவர்களிடம் திரும்பினாள்.
“எனக்கு உங்க பையனைப் பிடிக்கல… வேற பொண்ணு பாத்துக்கோங்க” என்று சொல்லிவிட்டு அவளுக்காக அங்கே ஒதுக்கப்பட்ட அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக்கொண்டாள்.
பெண் பார்க்க வந்திருந்தவர்களோடு வீட்டிலிருந்தவர்களும் அதிர அனுக்ரஹாவின் தோழமைகள் அவளைத் தொடர்ந்து சென்றார்கள். அர்ஜூனும் அவர்களுடன் போய்விட மாடிப்படியில் அமர்ந்திருந்த ராகவர்தனின் இதழ்களில் மர்மப்புன்னகை.
“அனு கதவைத் திறடி… எதுக்கு உள்ள போய் லாக் போட்டிருக்க?”
கதவை மடமடவெனத் தட்டினாள் பிரபாவதி.
அவள் பதில் சொல்லவில்லை.
ஹாலில் மானஸ் மற்றும் அவனது பெற்றோரிடம் மன்னிப்பு வேண்டிய மகிழ்வண்ணநாதன் அவர்களை வழியனுப்பி வைத்தார்.
புயலைப் போல அவர் வீட்டுக்குள் வந்த தருணத்தில் அனுக்ரஹாவின் அறைக்கதவும் திறந்தது. புடவையை மாற்றி குர்தி, ஹராம் பேண்டில் இருந்தாள். கூந்தல் அலங்காரம் மட்டும் இன்னும் மாறவில்லை.
“உன் மனசுல நீ என்ன நினைச்சிட்டிருக்க? இப்பிடியா வீட்டுக்கு வந்தவங்களை அவமானப்படுத்தி அனுப்புவ?”
சிடுசிடுவென எரிந்து விழுந்த தந்தையைக் கடுப்புடன் ஏறிட்ட அனுக்ரஹா “எனக்கு அவனைப் பிடிக்கல… அதை நேரடியா சொல்லிட்டேன்… இதுல என்ன தப்பு இருக்கு? பொண்ணு பாத்துட்டுப் போய் பிடிக்கலனு சொல்லுற ரைட்ஸ் கூட ஆம்பளைக்கு மட்டும் தான் இருக்கா?” என்று கத்த அந்த இடமே ரணகளமானது.
அகல்யா நீண்டநாட்களுக்குப் பின்னர் கணவரும் மகளும் நேரடியாக மோதிக்கொள்வதைப் பார்த்து மனமுடைந்துப் போக தனலெட்சுமி அவரைத் தனியே அழைத்துப் போனார்.
தியாகராஜன் நண்பரைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தார்.
“அவ ஸ்ட்ரெய்ட் ஃபார்வேர்டா சொன்னதுல என்ன தப்பு இருக்கு மகிழ்? பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க… அவங்க கருத்தைச் சொல்லுற அளவுக்கு முதிர்ச்சியும் வந்துடுச்சு… புரிஞ்சிக்கடா”
மகிழ்வண்ணநாதன் இதற்கு மேல் கத்தவில்லை. மூக்குகண்ணாடியைக் கழற்றி சட்டையில் துடைத்துக்கொண்டார்.
“எனக்கு இவ மேல சுத்தமா நம்பிக்கை இல்ல தியாகு… எப்ப எந்தப் பிரச்சனைல சிக்குவாளோனு பயமா இருக்குடா… என் மனசை இங்க புரிஞ்சிக்கிட்ட ஒருத்தன் ராகவ் மட்டும் தான்… என்னோட பயம், என் கவலை எல்லாம் அவனைத் தவிர வேற யாருக்கும் புரியாது… என்னமோ போடா”
தியாகராஜன் நண்பரைத் தன்னோடு அழைத்துச் சென்றுவிட மீதமிருந்தவர்கள் அனுக்ரஹா, அர்ஜூன், அவளது தோழமைகள் மற்றும் ராகவர்தன்.
“ஏன்டி அனு அப்பா கிட்ட கத்துற?” என்ற பிரபாவதியை அவள் கண்டுகொள்ளவில்லை.
அவளது பார்வை ‘இங்கே நடப்பதற்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை’ என்பது போல மொபைலில் யாரிடமோ கட்டளையிட்டுக் கொண்டிருந்த ராகவர்தனிடம் பாய்ந்தது.
அவனது விழிகள் அவளது பார்வையைச் சந்தித்த நொடியில் தலையில் வைத்திருந்த மல்லிகைச்சரத்தை வேகமாகப் பிய்த்தெடுத்தவள் சினம் அடங்காமல் அவனது காலடியில் வீசிவிட்டுத் தோட்டத்துக்குப் போய்விட்டாள்.
“அனு” என்று அவளைத் தொடரப்போன அர்ஜூனைப் பார்வையால் நிறுத்தினான் ராகவர்தன்.
“அண்ணா…” என்றவனை ‘பொறு’ என்று சைகை காட்டியவன் “நீ போய் பேசி அவளைச் சமாதானம் பண்ணும்மா” என்றான் பிரபாவதியிடம்.
அவள் போய்விட அர்ஜூன் ராகவர்தனின் அருகே போய் அமர்ந்தான்.
“அனு பேசுனதுல தப்பு எதுவும் இல்லண்ணா… எனக்கு அந்த மைதா ரொட்டிய சுத்தமா பிடிக்கல” என்றான் அவன்.
ராகவர்தனின் முகத்திலிருந்த தீவிர பாவனை மாற சட்டென நகைத்துவிட்டான் அவன்.
அர்ஜூனின் சிகையைக் கலைத்துவிட்டவன், அங்கே மலங்க மலங்க விழித்தவாறு நின்ற ஷாமையும் வித்யூத்தையும் அதே முறுவலுடன் பார்த்தான்.
“ரொம்ப கவலைப்படாதிங்க… இதுதான் ஒரிஜினல் அனு… அவளே காச்மூச்னு கத்துவா… அவளே சமாதானம் ஆகிடுவா… யூடியூபுக்கு ஏதோ கண்டெண்ட் ரெடி பண்ணுறதா சொன்னிங்களே, அந்த வேலைய பாருங்க” என்றான்.
“அதில்ல சார்…” என ஷாம் இழுக்க
“இதெல்லாம் நான் பாத்து பழகுன காட்சிகள்… அங்கிள் ஒரு விசயம் சொன்னா அனு அதைக் கேக்கமாட்டா… கத்துவா… அவரும் பதிலுக்குக் கத்துவார்… அப்பாவும் மகளும் ஒருத்தரை ஒருத்தர் முறைச்சிப்பாங்க… அப்புறம் சமாதானம் ஆகிடுவாங்க… டோண்ட் வொரி… அஜ்ஜூ! நீ இவங்க கூட போய் ஹெல்ப் பண்ணு… எனக்கு நாகர்கோவில்ல கொஞ்சம் வேலை இருக்கு… கிளம்புறேன்” என்று இலகுவாகச் சொல்லிவிட்டு மாடியிலிருக்கும் தனது அறைக்குப் போய்விட்டான் ராகவர்தன்.
ஷாமும் வித்யூத்தும் அர்ஜூனிடம் தங்களது வீடியோவுக்கான ஸ்க்ரிப்டைச் சொல்ல “எங்கம்மாவும் ஆன்ட்டியும் கிச்சன் குயின்ஸ்… உங்களுக்கு ஓ.கேனா அவங்களையே குக் பண்ணச் சொல்லிடலாம்… அனு இருக்குற நிலமைல அவ கட்டாயம் ஒழுங்கா சமைக்க மாட்டா” என்றான் அவன்.
அதுவும் நல்ல யோசனையாகத் தோன்றியது இருவருக்கும்.
அதே நேரம் தனலெட்சுமியும் அகல்யாவைச் சமாதானம் செய்திருந்தார்.
“அப்பாவும் மகளும் இன்னும் எத்தனை வருசத்துக்கு இப்பிடி முறைச்சிக்கிட்டே இருக்கப் போறாங்களோங்கிற கவலை தான் மதினி எனக்கு… மாப்பிள்ளை பிடிக்கலங்கிறதை அனு எடுத்தேன் கவிழ்த்தேன்னு சொன்னது தான் அவருக்குக் கோவம்… உங்களுக்குத் தெரியும்ல, அனு மேல அவருக்கு நிறைய பாசம்… அவ பிறந்தப்ப என் மாமியாரே பிறந்திருக்குறதா சொல்லி சந்தோசத்துல குதிச்ச மனுசன் அவர்… ஹூம்! அவளுக்கு இருக்குற சுதந்திர மனப்பான்மைக்கும் அவரோட அதீத பாதுகாப்பு உணர்வுக்கும் அடிக்கடி முட்டிக்கிது… இதுக்கு எப்ப முடிவு வரும்னு தெரியல”
“நம்ம காலம் மாதிரி இந்தக் காலம் இல்ல அகல் மதினி… அனு இன்னும் பக்குவப்படல… அவளுக்கு அண்ணனோட பயம் புரியல… விடுங்க”
சமாதானமாகி வந்த இரு பெண்மணிகளையும் வித்யூத் தங்களது வீடியோவுக்காகச் சமைக்கச் சொல்ல தனலெட்சுமி உடனடியாகச் சம்மதித்தார். அகல்யாவுக்கு ஒரு மாறுதல் தேவை அல்லவா!
தோட்டத்துக்குப் போன அனுக்ரஹா பவளமல்லி மரத்தின் அடியில் பட்டு போல விரிந்திருந்த புல்தரையில் பொத்தென அமர்ந்துவிட்டாள்.
ஆரஞ்சு வண்ண காம்புடன் அங்கே சிதறிக் கிடந்த பவளமல்லி மலர்கள் அவளது ரசிக உள்ளத்தை ஏனோ கொள்ளை கொள்ளவில்லை.
அவளருகே அமர்ந்த பிரபாவதி தோழியின் கரத்தை ஆறுதலாகப் பற்றிக்கொண்டாள்.
“உன் தலைக்குள்ள என்ன தான் ஓடுது அனு? ரெண்டு நாளா உன் பிஹேவியர்ல இருந்து என்னால எதையும் புரிஞ்சிக்க முடியலடி”
அனுக்ரஹா ஒரு பவளமல்லி மலரை உள்ளங்கையில் வைத்துப் பார்த்துக்கொண்டிருந்தபோதே ராகவர்தன் ராயல் என்ஃபீல்டைக் கிளப்பிய சத்தம் கேட்டது.
அவளது விழிகள் அனிச்சையாக ஒலி வந்த திசை பக்கம் திரும்பின.
பைக்கைக் கிளப்பியவன் அதில் அமர்ந்ததும் திரும்பிப் பார்த்தான்.
இரு ஜோடி விழிகளும் சந்தித்துக்கொண்டன.
சில நொடிகள் நீடித்த பார்வை மோதலில் ஏதோ செய்தி பரிமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். ராகவர்தனின் விழிகளில் கனிவும் அனுக்ரஹாவின் விழிகளில் ஆற்றாமையும் துளிர்த்தெழுந்தன.
“எதுவா இருந்தாலும் நான் வந்ததுக்கு அப்புறம் பேசிக்கலாம்”
ப்ளூடூத்தில் யாரிடமோ பேசியபடி கியரை முறுக்கி கிக்கரை உதைத்தவன் அங்கிருந்து ராயல் என்ஃபீல்டுடன் மறைந்துவிட அனுக்ரஹா நெடிய பெருமூச்சொன்றை இழுத்துவிட்டாள்.
அச்செய்தி அனுக்ரஹாவுக்கானதோ என்ற ஐயம் பிரபாவதிக்கு.
இவர்களின் பார்வை பரிமாற்றம், உடல்மொழி எல்லாம் அவளுக்கு வேறு ஒரு செய்தியை உணர்த்தினாலும் வாய்மொழியாக உறுதியாகாத எதையும் அவள் நம்புவதில்லை. விழிகள் பேசும் மொழிகளுக்கு ஈகோ இல்லை. எப்போது உதடுகளும் மனங்களும் விழிகளின் இக்கோட்பாட்டைப் பின்பற்றுகின்றனவோ அப்போது சில அழகிய மாற்றங்கள் நிகழும்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


