எந்தப் பழக்கத்திற்கும் அடிபணியாதவன், இன்று உன் கண்களின் போதையில் என்னை முழுதாய் இழந்துவிட்டேன். இந்த அழகான அடிமைத்தனத்தின் தவிப்புகளைத் தீர்க்கும் ஒற்றை மறுவாழ்வு மையம் நீ மட்டும்தான்.
ராஜவிலாசம், மகாராஜநகர்…
தயக்கத்தோடு சோபாவில் அமர்ந்திருந்த வெண்பாவிடம் ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தாள் நிருபமா. அவளுக்கு இப்போது கல்லூரி செமஸ்டர் தேர்வு விடுமுறை.
“உங்க குர்தி கலெக்ஷன் நல்லா இருக்கு மதினி. எங்க வாங்குறீங்க?”
குந்தவை அன்பாய்க் கொடுத்துவிட்டுப் போன காக்டெயில் பழச்சாறை அருந்திக்கொண்டிருந்தவள் புன்னகையோடு “விண்டேஜ் கிளாஸட் ஆஃப் கமலினு ஒரு சைட் இருக்கு. அவங்க கலெக்ஷன் எல்லாமே நல்லா இருக்கும் நிரு” என்றாள்.
நிருபமாவின் ‘மதினி’ என்ற அழைப்பு அதிர்ச்சியைத் தராமல் மெல்லிய குதூகலத்தை, உரிமையுணர்வை விதைத்தது வெண்பாவுக்குள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“அப்ப சாரி?”
“சென்னை சில்க்ஸ்ல லினன் நல்லா இருக்கும். எனக்குக் காட்டன் அவ்ளோவா செட் ஆகாதுடா”
நிருபமாவுக்குத் துர்காவைப் போல வெண்பா நட்பாக இருப்பாளா என்ற ஐயம் இருந்தது. நிச்சயதார்த்தத்தில்கூட அளந்துதான் அவளிடம் பேசியிருந்தாள் வெண்பா. நன்றாகப் பழகும்வரை அவள் அதிகமாய்ப் பேசமாட்டாள் என்பது நிருபமாவுக்குத் தெரியாதே!
இப்போதுகூட அவள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் வந்தாலும் முன்பு போல வார்த்தைகளை எண்ணி வெளியிடவில்லை. அக்கறையும் அன்புமாக ஒரு தோழியிடம் பகிர்வது போல இயல்பாக அவள் பேசிய விதம் பிடித்திருந்தது நிருபமாவுக்கு. அதுவும் ‘நிரு’ எனத் தனது குடும்பத்தார் அழைப்பது போல அதே பெயர்ச்சுருக்கத்தைப் பயன்படுத்தியதும் இன்னும் இதமாய்!
“உங்களுக்குப் பனானா கிளிப் ரொம்பப் பிடிக்குமா மதினி? உங்களோடது திக்கான ஹேர்ல. ஹேருக்கு என்ன ஆயில் யூஸ் பண்றீங்க? ஹேர் பேக் போடுவீங்களா?”
நிருபமா வரிசையாய்க் கேள்விக்கணைகளைத் தொடுக்க அயர்ச்சியோ சலிப்போ இல்லாமல் பதில் சொன்ன வெண்பாவைப் பார்த்தபடியே அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தான் நேத்ரன்.
குந்தவை நமட்டுச் சிரிப்போடு மைந்தனின் மோவாயைப் பற்றித் தன் பக்கமாய்த் திருப்பி “நான் இங்க இருக்கேன்டா” என்கத் தனது பிடரியை வருடியபடி அசடுவழிந்தபடி சிரித்தான்.
“உங்களுக்கு நான் வெண்பாவைக் கோவிலுக்குக் கூட்டிட்டுப் போறதுல பிரச்சனை இல்லையே?” என்று கேட்கவும் செய்தான்.
“ஏன்டா இப்பிடிக் கேக்குற?”
“அப்புறம் யாரும் எங்களை ஜோடியா பாத்துட்டு ‘இங்க பாரு, குந்தவையோட மகன் யாரோ ஒரு பொண்ணுகூட சுத்துறான்னு’ சொன்னா உன் வளர்ப்பு…”
‘நிறுத்து’ என்று கையை உயர்த்தினார் குந்தவை.
“எல்லாத்தையும் செஞ்சுட்டு வளர்ப்புனு கதை சொல்லுறதை நிறுத்து. கோவிலுக்குப் போகணும்னா போயிட்டு வா. ஆனா ரொம்ப நேரம் ஒன்னா சுத்தாதிங்க. கண்ணு பட்டுடும்”
“இதெல்லாம் இன்னுமா நம்புற? அப்பாவி அம்மா” என்றபடி அன்னையின் நாடியைப் பிடித்துக் கொஞ்சினான் நேத்ரன்.
“போதும்டா! நீ காரியக்காரன், நைஸா நிகிலனை மாமாகிட்ட கோர்த்துவிட்டுட்டு எனக்கு ஐஸ் வச்சு உன் ரூட்டைக் கிளியர் பண்ணிக்குற. ரொம்பக் குளிருது. கிளம்பு” என மகனின் தோளில் அடித்து அனுப்பிவைத்தார்.
நேத்ரன் வெண்பாவை நோக்கிச் செல்லுபோதே தங்கையின் ஆர்வக்கோளாறான கேள்விகளின் அணிவகுப்பு அவனது செவிகளிலும் நுழைந்தது.
“என்ன மாய்ஸ்சுரைசர் யூஸ் பண்ணுறீங்க? நான் ஆலோவேரா ஜெல் யூஸ் பண்றேன். ஆனா எனக்குச் செட் ஆகல”
வெண்பா அவளிடம் மொபைலில் தான் பயன்படுத்தும் மாய்ஸ்சுரைசரின் புகைப்படத்தைக் காட்டிக்கொண்டிருந்தாள்.
“இதுவா? இது கொரியன் பிராண்ட் ஆச்சே. நம்ம ஸ்கின்னுக்கு நல்லா இருக்குமா?”
“சூப்பரா இருக்கும்”
“அப்ப சன்ஸ்க்ரீன்…” அவளது பேச்சைப் பாதியில் நிறுத்தினான் நேத்ரன்.
“போதும் போதும்! எவ்ளோதான் கேள்வி கேப்ப நீ? உனக்குப் பதில் சொல்லுறதுக்காகவே இவ தனியா ஜூஸ் குடிக்கணும் போலயே”
அண்ணனின் இடையூறால் கடுப்பான நிருபமா அவனை முறைத்தாள்.
“நீ ஏன் எனக்கும் மதினிக்கும் இடையில வர்ற? போ” என அவனை விரட்டக் கைகளை அசைத்தாள்.
நேத்ரன் அந்தக் கையைப் பிடித்து இன்னொரு கையால் அவளது தலையில் குட்டிவிட அவள் பதிலுக்கு அவனது கையைக் கடிக்கவென உடன்பிறந்தவர்களின் வழக்கமான யுத்தம் அங்கே ஆரம்பித்தது.
வெண்பாவுக்கு இது ஆச்சரியமாக இல்லை. ஏனெனில் அவளும் எழிலனும் போடாத சண்டை இல்லை.
“ஆவ்! வலிக்குது எருமை எருமை” என்று நேத்ரனை நிருபமா திட்ட
“என் கையைப் பர்பி மாதிரி கடிச்சப்ப எனக்கு மட்டும் வலிச்சிருக்காதா”
அங்கயற்கண்ணிதான் வந்து நேத்ரனையும் நிருபமாவையும் விலக்கிவிட்டார்.
“என்னடா இது? கல்யாண வயசு வந்தாச்சு. இன்னும் அடிச்சுக்குறீங்க.” என அவர் சலித்துக்கொள்ள இருவரும் ஒருவரையொருவர் முறைத்தபடி பிரிந்தார்கள்.
“நீ கோவிலுக்குப் போகணும்னு சொன்னல்ல? வெண்பாவையும் கூட்டிட்டுக் கிளம்பு” என்று நேத்ரனை விரட்டியவர் “நீ நாளைக்கு எக்ஸாமுக்குப் படிக்க ஆரம்பி. உன் மதினி எங்கயும் ஓடிட மாட்டா. ஃப்ரீ டைம்ல பேசு” என்று நிருபமாவைப் படிக்க அனுப்பிவைத்தார்.
நேத்ரனும் வெண்பாவும் ராஜவிலாசத்திலிருந்து நெல்லை டவுணுக்குக் கிளம்பினார்கள்.
“நிரு உன்னை டார்ச்சர் பண்ணிட்டாளா?” கேலியாய்க் கேட்டவனிடம் இல்லையென மறுப்பாய்த் தலையாட்டினாள் வெண்பா.
“இதெல்லாம் கேர்ள்ஸுக்குள்ள இருக்குற கியூரியாசிட்டியில வர்ற கேள்விகள். இது எப்பவும் எனக்கு டார்ச்சரா தெரியாது” என்றாள்.
“பார்றா! இப்பவே நாத்தனாருக்குச் சப்போர்ட்டா?” என அவன் வினவ
“பண்ணுனா என்ன தப்புங்கிறேன்?” என்றாள் அவள் போட்டியான குரலில்.
“நான் நாத்தனார்னு சொன்னேன். கேக்கலையா டீச்சரம்மாக்கு?” என அவன் கிண்டல் தொனிக்கு மாற
“அதெல்லாம் கேக்குது” என்றவள் அமர்த்தலாய் அவனை ஏறிட நேத்ரனுக்குச் சொல்லப்படாத வார்த்தைகள் உணர்த்திய சம்மதம் எதற்காகவெனப் புரிந்தது.
“இதை நான் எப்பிடி எடுத்துக்குறது?”
“அது உங்க இஷ்டம்”
“என் இஷ்டம்னா நம்ம கல்யாணத்துக்கான சம்மதம்னு கூட நான் எடுத்துப்பேன். அப்புறம் கோவப்படக் கூடாது”
வெண்பா பொறுமையாய் அவனை ஏறிட்டாள். பக்கவாட்டுத் தோற்றத்தில் அவனது கூரிய நாசியும் வடிவான தாடையும் கம்பீரத்தின் இலக்கணமாய்த் தெரிந்தன. சாலையில் கவனமாய் இருந்தவனின் கரங்கள் ஸ்டீயரிங் வீலைப் பற்றியிருந்த விதம், அந்தக் கரத்தின் பாதியை மூடியிருந்த லினன் சட்டையை மடித்து விட்டிருந்த விதம் என ஒவ்வொன்றிலும் நேர்த்தியும் கவனமும் தெரிந்தது.
தோற்றத்தில் மட்டுமில்லை, குணத்திலும் பழகும் விதத்திலும்கூட அவன் அவளைக் கவரத் தவறவில்லைதான். அரசியல்வாதி என்ற ஒரு காரணத்தைத் தவிர அவனை மறுக்க அவளுக்கு வேறு எதுவும் காரணமில்லை எனலாம்.
ஆனால் அவனோடு உரையாடிய சில தருணங்களின் நீட்சி அவனது அரசியல்வாதி அடையாளத்தின் மீதான அவளது அலட்சியத்தைக்கூடப் போக்கடித்துவிட்டிருந்தது.
“உங்க இஷ்டம்னு சொல்லிட்டேன். எதுக்குக் கோவப்படப்போறேன்?”
“புரியுது! இனிமே பெரியவங்ககிட்ட பேசிக்கிறேன்.”
“ம்ம்”
கார் நெல்லையப்பர் கோவிலை நோக்கி விரைந்தது. நெடுஞ்சாலையின் இரைச்சல் மெல்ல விலகி, டவுணின் நெருக்கடியான வீதிகளுக்குள் நுழைந்த கார், நெல்லையப்பர் கோவிலின் கம்பீரமான ராஜகோபுரத்தின் முன்னே சென்று நின்றது. காலைநேர வெயில் அந்தப் பழமையான கோபுரக் கலசங்களில் பட்டுத் தகதகவென மின்னிக்கொண்டிருந்தது.
காரை நிறுத்திவிட்டு இருவரும் வெளியே வந்தார்கள். கோவிலின் வாசலிலேயே பூக்கடைகளில் இருந்து வந்த மல்லிகையின் மணமும், அபிஷேகப் பொருட்களின் வாசனையும் அவர்களை வரவேற்றன. நேத்ரன் தனது ரேபானைக் கழற்றிவிட்டு அங்குமிங்கும் நோட்டமிட்டான்.
கோவிலுக்காகக் கட்டப்பட்ட மாலைகளோடு நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட மல்லிகைச்சரம், மல்லியும் கனகாம்பரமும் கலந்த சரம் எனப் பூச்சரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
அவளுக்காக அடர்த்தியாகத் தொடுக்கப்பட்ட ஒரு முழம் மல்லிகையையும், அர்ச்சனைத் தட்டையும் வாங்கிக்கொண்டான் நேத்ரன்.
கோவிலுக்கு உள்ளே நுழைந்ததும், பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான அந்தக் கற்சுவர்கள் கொடுத்த இதமான குளிர்ச்சி, வெண்பாவின் மனதுள்ளும் ஊடுருவிப் பரவியது.
சந்நிதியில் எரிந்துகொண்டிருந்த நெய்தீபத்தின் வாசனையும், கற்பூரத்தின் மணமும் காற்றில் கலந்திருக்க, நந்தியெம்பெருமானைத் தாண்டி இருவரும் அமைதியாக உள்ளே நடந்தார்கள். நேத்ரன் எந்தப் பந்தாவும் இன்றி, தனது சட்டையின் கை மடிப்புகளை இறக்கிவிட்டு, மிகவும் இயல்பாக அவளருகே நடந்துவந்த விதம் வெண்பாவிற்கு ஆச்சரியமாகவே இருந்தது.
‘அத்துணை பணம்! அத்துணை செல்வாக்கு! இவனிடத்தில் வேறொருவன் இருந்தால் நிச்சயம் அலட்டல் பேர்வழியாகத் திமிரைக் காட்டுபவனாக இருப்பான். ஆனால் இவன் எதற்கும் அசைந்துகொடுக்காமல் இயல்பாய் வலம் வருகிறானே!’
வெண்பாவின் மனதின் குரல் அவன் மீதான அவளது பிடித்தம் விருப்பமாக மாறிவிட்டதன் அடையாளமாய்!
இருவருமாய்ச் சுவாமி நெல்லையப்பரைத் தரிசித்துவிட்டு, அன்னை காந்திமதியம்மன் சந்நிதிக்கு வந்தார்கள். அர்ச்சனை முடிந்து தீபாராதனை காட்டப்படும்போது, வெண்பாவின் மனம் ஒரு விவரிக்க முடியாத நிறைவை உணர்ந்தது. அவள் அறியாமலேயே அவளது விழிகள் அவனருகில் நின்றிருந்த நேத்ரனை நோக்கித் திரும்பின.
இருகைகூப்பி, கண்களை மூடிப் பிரகாரத்தை நோக்கி நின்றிருந்தவனின் முகத்தில் அத்தனை அமைதியும் ஆழ்ந்த பக்தியும் குடிகொண்டிருந்தது. அந்த நொடியில், அவளுக்குள் இருந்த எஞ்சிய தயக்கங்களும் சுக்குநூறாக உடைந்து சிதறின.
‘இவன் எனக்கானவன்தானா?’ என்ற கேள்வி முற்றிலும் விலகி, ‘இவன் எனக்கானவன்தான்!’ என்ற அசைக்க முடியாத உறுதி பிறந்துவிட்ட திருப்தி அவளது முகத்தில் அழகாகத் தேங்கியது.
அவளும் கண்களை மூடிக்கொண்டாள்.
‘இவனது மனம் விரும்பும் வெற்றியை இவனுக்குக் கொடுப்பாயாக இறைவனே!’
மனம் நிறைந்த பக்தியும் நேசமுமாக நேத்ரனின் தேர்தல் வெற்றிக்காக வேண்டிக்கொண்டாள் அவள்.
அங்கே பிரசாதமாகத் தரப்பட்ட குங்குமத்தை நேத்ரன் தன் நெற்றியில் கீற்றாகப் பூசிக்கொண்டு, அவளிடமும் நீட்டினான். அதை வாங்கிக்கொண்டவளின் விரல்கள் லேசாக நடுங்கியது.
முன்பு போலன்றி அவளது மனம் அவன் பக்கம் சாயத் தொடங்கிவிட்டதன் அறிகுறியாக அடங்காத வெட்கமொன்று அழகாய் வந்து அவளிடம் அமர்ந்துகொண்டது.
அந்த வெட்கம் அவனது ஆழ்ந்த பார்வையைத் தாங்க முடியாதவளாக வெண்பாவை மாற்றியிருந்தது. மெதுவாய் அவளது இமைகள் குனிய நேத்ரனோ அதை வேறுவிதமாய்ப் புரிந்துகொண்டான்.
அவளது உள்ளங்கையில் துளியாய் இருந்த குங்குமத்தை மோதிர விரலில் தோய்த்து வெண்பாவின் நெற்றியில் பூசிவிட்டான் நேத்ரன்.

இது எதிர்பாரா சம்பவம்! சட்டென இமைக்குடைகளை உயர்த்தியவள் உதடுகள் பிரிய அழகான பற்கள் மட்டும் கோடாய்த் தெரியத் திகைத்த பார்வை ஒன்றை அவனிடம் வீசினாள்.
“என்னாச்சு? பிடிக்கலையா? பிடிக்கலனா சொல்லிடு”
“பிடிக்கலனு சொன்னேனா? திடீர்னு நீங்க குங்குமம் வச்சுவிட்டதால சின்னதா ஷாக்.” என்றவள் கண்கள் மலரத் தலைசாய்த்து அவனை ஏறிட்டாள்.
“எப்பிடியும் நீங்கதான் உரிமையா என் வகிட்டுல வச்சுவிடப்போறீங்க. அதுக்கான ட்ரையலா இந்த மொமெண்டை எடுத்துக்கலாம்” என்று சொல்லிக் கன்னங்குழியச் சிரித்தாள்.
அன்றைய தினத்தில் மட்டும் தங்களது திருமணத்துக்கான சம்மதத்தைப் பல்வேறுவிதமாய் வெளிப்படுத்திவிட்டவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொள்ளத் தோன்றியது நேத்ரனுக்கு.
அவனது கண்கள் கனிந்த விதமும், அவள் மீது மட்டும் அவை குவிந்த விதமும் அதைத்தான் அடுத்துச் செய்யப்போகிறான் என வெண்பாவுக்குத் தெரிவித்துவிட வேகமாய் அவனது கையைப் பற்றிக்கொண்டாள்.
“கோவில்…” என்று கண்களை விரித்துத் தாங்கள் இருக்கும் சுற்றுப்புறத்தை அவனுக்கு உணர்த்தினாள்.
நேத்ரனிடம் வெற்றிப் புன்னகை! கண்களை இறுக மூடித் தன்னைச் சமாளித்துக்கொண்டவன் அவளோடு கோவிலை விட்டு வெளியே வந்தான். ஆகாஷ் கேட்ட கார்டிகனுக்காக நூல் வாங்க வேண்டுமே!
கோவிலை விட்டு வெளியே வந்ததும், உச்சி வெயில் நெல்லை டவுணின் ரதவீதிகளில் வெம்மையாகப் படர்ந்திருந்தது. மதிய நேரத்தின் சுறுசுறுப்பும் பரபரப்பும் அந்த வீதிகளில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“கார்லயே போலாமா? இல்ல நடந்தே போலாமா?” நேத்ரன் அவளைப் பார்த்துக் கேட்க,
“நடந்தே போலாம் நேத்ரன். கார் இங்கயே இருக்கட்டும். ரதவீதிக்குள்ள கார் எடுத்துட்டுப் போனா இடைஞ்சலா இருக்கும். அதோட, நாம போக வேண்டிய கடையும் இங்க பக்கத்துல தெற்கு ரத வீதியிலதான் இருக்கு,” என்றாள் வெண்பா.
“ஓகே! ஆனா ஒரு கண்டிஷன். தெருவுல அவ்ளோ கூட்டமா இருக்கு, என் கையைப் பிடிச்சுட்டுதான் வரணும். தொலைஞ்சு போயிட்டா உன்னைத் தேட முடியாது,” என்று அவன் சீரியஸாகச் சொல்வது போலக் கிண்டல் செய்ய,
“ரொம்பத்தான் கிண்டல் பண்றீங்க.. நான் என்ன ஸ்கூல் பிள்ளையா தொலைஞ்சு போறதுக்கு? இங்க கூட்டம் அவ்ளோ அதிகமாவும் இல்ல” என்று செல்லமாக முறைத்தாள் வெண்பா.
“பின்ன? உன்னைப் பார்த்தா ஒரு ஸ்கூல் டீச்சர் மாதிரியா தெரியுது? ஸ்கூலுக்குப் போற பிள்ளை மாதிரிதான் தெரியுற! அதுவும் அந்த தொளதொள டீஷர்ட், நைட் பேன்ட்ல பாத்தப்ப ரொம்பச் சின்னப்பொண்ணா இருந்த” என்றபடி, அவளைச் சாலையின் பாதுகாப்பான ஓரத்தில் நடக்கச் செய்து, தான் வாகனங்கள் வரும் திசையில் அவளுக்கு ஓர் அரண்போல நடந்துவந்தான்.
அவனது அந்தச் சின்னஞ்சிறிய அக்கறை வெண்பாவிற்குள் சில்லென்ற சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
இருவரும் தெற்கு ரத வீதியை நோக்கி நடக்க ஆரம்பித்தார்கள். தள்ளுவண்டிக் கடைகளில் சுடச்சுட விற்கப்படும் பஜ்ஜி வாசனையும், இனிப்புக் கடைகளிலிருந்து நெய் மணமும் வீச, அந்தப் பழமையான வீதியின் இருபுறமும் இருந்த பழமையான மரத்தூண்கள் கொண்ட வீடுகளையும், சிறுசிறு கடைகளையும் வேடிக்கை பார்த்தபடியே நடந்தார்கள்.
“என்ன டீச்சரம்மா, ஸ்கூல், பசங்க, எக்ஸாம் பேப்பர்னு எப்பவும் சீரியஸா இருக்குற உங்களுக்குள்ள, நூல் வாங்கி க்ரோசே பண்ற ஒரு கிராஃப்ட்காரி ஒளிஞ்சிருக்கானு எனக்குத் தெரியாமப் போச்சே!” நேத்ரன் அவளைப் பார்த்துப் புன்னகைக்க,
“ஏன்? டீச்சர்னா எப்பவும் புக்கைப் பிடிச்சுட்டேதான் இருக்கணுமா? எனக்கு ஃப்ரீ டைம்ல க்ரோசே பின்னுறது ரொம்பப் பிடிக்கும். அது எனக்கு ஒரு தெரபி மாதிரி. மனசுக்கு அவ்ளோ ரிலாக்ஸா இருக்கும். ஸ்கூல் போற டைம்ல பின்னுறதை விட்டுட்டேன், இப்ப போரடிக்குது. அதான் பின்னப்போறேன்” என்றாள் வெண்பா கண்கள் மின்ன.
“ஓஹோ! அப்ப இனிமே உனக்கு என் மேல கோபம் வந்தா, நான் ஒரு பத்து நூல் கண்டை வாங்கிக் குடுத்துட்டா போதும். நீ பாட்டுக்கு அமைதியா பின்னிக்கிட்டு இருப்ப. எனக்குச் சமாதானப்படுத்துற வேலை மிச்சம்!” என்று அவன் சத்தமாகச் சிரிக்க, வெண்பா அவனது தோளில் செல்லமாக அடித்தாள்.
“உங்ககிட்ட கொஞ்சம் உஷாராதான் இருக்கணும். என்னோட எல்லா விருப்பத்தையும், சூழ்நிலையையும் உங்களுக்குச் சாதகமா மாத்திக்கிறீங்க.”
“அரசியல்வாதியாக்கும்! அப்பிடித்தான் இருப்பேன். எனக்கும் ஏதாவது கார்டிகன், ஸ்வெட்டர் பின்னிக் குடுப்பியா?” என்று அவன் கண்களைச் சிமிட்டினான்.
“நீங்க அதைப் போட்டுட்டு கட்சி மீட்டிங் போறதா இருந்தா சொல்லுங்க, பின்னித் தர்றேன்,” என்று அவளும் பதிலுக்குக் கலாய்க்க, இருவரின் சிரிப்பொலியும் அந்த வீதியின் இரைச்சலையும் தாண்டி அழகாக ஒலித்தது.
அவர்கள் தேடி வந்த அந்தக் கடை தெற்கு ரத வீதியின் பாதியில் இருந்தது. சிறிய கடைதான் என்றாலும், உள்ளே பல வண்ணங்களில் மெர்சரைஸ்டு காட்டன் நூல்களும், அக்ரிலிக் நூல்களும் அடுக்கடுக்காக வைக்கப்பட்டிருந்தன.
உள்ளே நுழைந்ததும் வெண்பாவின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன. ஒரு சிறுமியைப் போல உற்சாகமாகி, மெரூன், பீச், லாவெண்டர் என ஒவ்வொரு நிறமாக எடுத்து, அதன் மென்மையை விரல்களால் தடவிப் பார்க்கத் தொடங்கினாள்.
நேத்ரன் கடையின் ஓரமாக நின்றுகொண்டு, கடையில் இருந்த பொருட்களையெல்லாம் விட்டுவிட்டு, அவளையே இமைக்காமல் ரசித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். அவளது ஆசிரியப் பொறுப்பும், முதிர்ச்சியும் தற்காலிகமாக எங்கோ சென்றுவிட, வண்ணங்களைக் கண்ட சிறுமியின் குதூகலம் அவள் முகத்தில் நிறைந்திருந்தது.
“இந்த கலர் நல்லா இருக்கா நேத்ரன்?” என்று அவள் ஒரு வெளிர் நீல நிற நூலைக் காட்ட,
“உன் சாய்ஸ் எப்ப தப்பா இருந்திருக்கு? என்னை செலக்ட் பண்ணியிருக்கப்பவே தெரியலையா உன் சாய்ஸ் எப்பவும் சரியாதான் இருக்கும்னு?” என்று அவன் உதட்டைக் கடித்துச் சிரிக்க, கடையின் உரிமையாளர் கவனிப்பதற்குள் வெட்கத்தால் முகம் சிவந்தாள் வெண்பா.
“சும்மா இருங்க…” என்று கிசுகிசுத்தவள், தன்னிடம் இருந்த ஊசிகளின் சைஸுக்கு ஏற்றாற்போல இன்னும் சில நூல் கண்டுகளையும், புது டிசைன்களுக்கான ஹூக்குகளையும் தேர்ந்தெடுத்தாள். பில்லைக் கொடுத்துவிட்டு, பொருட்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்தார்கள்.
சூரியன் மேற்கு நோக்கி நகரத் தொடங்கி, உச்சி வெயிலின் தாக்கம் சற்றுத் தணியத் தொடங்கியிருந்தது. அந்த நெரிசலான வீதியில் இரு சக்கர வாகனங்கள் உரசி விடாமல் இருக்க, அவளது தோளோடு தன் தோள் உரசும்படி மிக நெருக்கமாக அவளுடன் நடந்துவந்தான் நேத்ரன்.
“இப்ப டீச்சரம்மாக்கு திருப்தியா இருக்குதா?”
“ரொம்ப்ப்ப. நெல்லையப்பர் கோவில், இந்த டவுண் வீதி, இந்த யார்ன் ஷாப், எல்லாமே எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயங்கள். ஆனா, இதையெல்லாம் இன்னைக்கு உங்களோட சேர்ந்து வர்றப்ப, புதுசா இருக்கு. அடிக்கடி இப்பிடி வரணும்னு ஆசையாவும் இருக்கு,” என்றாள் மெல்லிய, ஆனால் ஆழமான குரலில்.
அவள் சொன்னதன் அர்த்தம் புரிந்தவனாக, நேத்ரன் அவளது கண்களை நோக்கினான். அந்த நெரிசலான தெற்கு ரத வீதியில், அத்தனை மனிதர்களுக்கு மத்தியிலும் அவர்கள் இருவர் மட்டுமே தனித்து ஒரு அழகிய உலகில் நிற்பது போன்ற ஒரு மாயையை அந்தத் தருணம் உருவாக்கியது.
“இனிமே உன் வாழ்க்கையில நடக்குற எல்லா சாதாரண விஷயங்களும், என்னோட சேர்றப்ப இப்பிடித்தான் அழகா, முழுமையா மாறும் வெண்பா. இது அரசியல்வாதியோட வாக்குறுதி இல்ல, உன்னை உயிரா நேசிக்குற உன் நேத்ரனோட வாக்குறுதி,” என்றான் அவளது காதருகே குனிந்து.
“பொதுவா அரசியல்வாதிங்க தேர்தல் முடிஞ்சதும் வாக்குறுதியைக் காத்துல பறக்கவிட்டுடுவாங்க. வேட்பாளர் எப்பிடி? சொன்னதைச் செய்வீங்களா?” என வேண்டுமென்றே அவனைச் சீண்டினாள் வெண்பா.
“எங்க கட்சியும் சரி, நானும் சரி! சொன்ன வாக்குறுதியைக் காப்பாத்துவோம். சொல் ஒண்ணு, செயல் ஒண்ணுனு இருக்குறது எங்களுக்குப் பழக்கமில்ல. நீ எதிர்கட்சி மாதிரி என்கிட்ட குறை கண்டுபிடிக்காம இருந்தா சரி” என அவனும் பதிலடி கொடுக்க அந்தச் சமயத்தில் இருவரும் முகம் மலர அகம் குளிரப் புன்னகைத்தார்கள்.
மனதிலிருந்த தயக்கங்களும் யோசனைகளும் பொடிப்பொடியாய் உதிர அங்கே அழகாய்த் துளிர்த்துப் பிரம்மாண்டமாய் விஸ்வரூபமெடுத்தது காதல்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


