என் பார்வை மீறத் துணியாத ஈர்ப்பு விசை நீ. என்னை இத்தனை அழகாகக் கட்டிப்போடும் இந்தக் காந்த வித்தையை எங்கிருந்து திருடி வந்தாய்?
வெண்பாவுக்கு ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறை ஆரம்பமாகிவிட்டது. பரபரப்பாகப் பள்ளிக்குச் சென்று வேலை பார்த்தவளுக்கு வீட்டில் நேரத்தைக் கழிப்பது போரடித்தது. ஏதாவது கற்றுக்கொள்ளலாமென யூடியூபைப் புரட்டிக்கொண்டிருந்தாள்.
அப்போதுதான் க்ரோசே வீடியோ ஒன்று கண்ணில் பட்டது. கல்லூரியில் படித்த காலத்தில் அவளுக்கு க்ரோசே பின்னுவதில் ஆர்வமுண்டு. கீ செயினில் கோர்த்துக்கொள்ள குட்டி குட்டியாய்ப் பொம்மைகள், சில்லறைகள் போட்டுவைக்கும் பைகள் என்று பின்னுவாள்.
இப்போது வீடியோ பார்த்ததும் அதையாவது பின்னலாமென க்ரோசே பின்னுவதற்கான ஊசி, நூல் பண்டில்கள் வைத்திருக்கும் பெட்டியைத் தேடினாள் அவள். அவள் அந்தப் பெட்டியை எடுத்ததும் ஆகாஷ் ஓடிவந்துவிட்டான்.
“அத்தை எனக்குக் கார்டிகன் பின்னித் தருவியா?”
“கார்டிகனா? பின்னிட்டாப் போச்சு. நீ என்ன பண்ணுற, உங்கப்பாகிட்ட தவுசண்ட் ருபீஸ் வாங்கிட்டு வர்ற. அத்தைகிட்ட நூல் ஸ்டாக் இல்லடா கண்ணா!”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர்கள் உரையாடலின் குறுக்கே எழிலன் வந்து நின்றான்.
“எதே? நூல்கண்டு வாங்க தவுசண்ட் ருபீஸா? இதுக்கு நான் ஆன்லைன்ல புது கார்டிகனே ஆர்டர் போட்டுடுவேன்” என்றான் திகைப்போடு.
க்ரோசே பொருட்கள் வைத்திருந்த பெட்டியைத் தூக்கியதால் கைகளில் ஒட்டியிருந்த தூசியைத் தட்டியபடியே எழுந்தாள் வெண்பா.
“வாங்கலாம்தான்! ஆனா நான் ஆகாஷ் கேட்ட மாதிரி கஸ்டமைஸ் பண்ணிப் பின்னுவேன். அவனுக்குப் பிடிச்ச ஸ்பைடர் மேன் ஸ்டைல்லகூடப் பின்னுவேன்” என்று தமையனின் மைந்தனுக்கு ஆசை காட்டி ஆயிரம் ரூபாயைக் கறந்துவிட்டாள்.
“எக்ஸ்ட்ரா நூல் இருந்துச்சுனா அழகா ஹேண்ட்பேக் பின்னி உன்கிட்ட குடுத்துடுறேன். உன் கடையோட கிஃப்ட் செக்ஷன்ல வச்சு வித்துக்க. உன் காசு எனக்கு எதுக்கு?” என்று எழிலனிடம் விளையாட்டாய்ச் சவால் வேறு!
“நீ பின்னுற இந்தப் பேக்கை எவன் வாங்குவான்?”
“என்னை மாதிரி ரசனை உள்ள கேர்ள்ஸ் வாங்குவாங்க. அது ரசனைகெட்ட உனக்கு எப்பிடித் தெரியும்?”
அண்ணனும் தங்கையும் வாய்வார்த்தையாய் வாரிவிட்டுக்கொள்ள ஹேமா தலையிலடித்தபடி வந்து சேர்ந்தாள் அங்கே. செல்லமான சலிப்புதான் அது.
“ஆயிரம் ரூபாக்கு ஏன் இவ்ளோ கணக்கு பாக்குறீங்க?” என்ற அங்கலாய்ப்பும் அவளிடமிருந்து புறப்பட எழிலன் கப்சிப்.
வெண்பாவுக்கு எப்போதுமே மதினியிடம் தணிந்துபோகும் அண்ணன் ஒரு ஆச்சரியச் சின்னம்தான். அதில் அவளுக்குச் சந்தோஷமே! மனைவியை மதிக்கும் ஆண்மகன் அல்லவா அவளது சகோதரன். அப்படியே அவளது தந்தையின் ஜெராக்ஸ் காப்பி.
இருவரையும் குறுகுறு விழிகளால் அவள் ஏறிட்டாள்.
“மதினிகிட்ட ஏதோ மேஜிக் இருக்கு. எல்லாரையும் கண்ணாலயே கட்டிப்போட்டுடுறாங்க” என்று குறும்பாய்ச் சொல்லிவிட்டு மதினியின் தோளில் பாராட்டாய் அவள் தட்டிச் செல்ல ஹேமாவின் முகத்திலோ வெட்கம் தாமரைப்பூவாய் இதழ் பரப்பியது.
நேரே அன்னையிடம் சென்றவள் பாளையங்கோட்டைக்குச் செல்லவேண்டுமெனச் சொன்னாள்.
“எதுக்கு? இந்த வெயிலுல போகணுமா?” என உமையாள் ஆதங்கமாய் வினவ
“க்ரோசே பின்னப் போறேன்மா. ஆகாஷுக்குக் கார்டிகன் பின்னணுமாம். அவன் ஆசையா கேட்டுட்டான். அண்ணன்கிட்ட தவுசண்ட் ருபீஸ் அட்வான்ஸ் வாங்கிட்டேன். பின்னாம இருக்க முடியுமா? என்கிட்ட இருக்குற நூல் பத்தாதும்மா. வாங்கிட்டு வந்துடுறேனே” என்று அன்னையின் தோளைப் பிடித்து அதில் மோவாயைப் பதித்துக் கொஞ்சினாள் வெண்பா.
உமையாளுக்கு அவளை அனுப்புவதில் எல்லாம் மறுப்பில்லை. ஆனால் வெயிலில் அலையவேண்டுமா என்ற கேள்வி மட்டுமே!
“சரி! போய்ட்டு வா! ஆனா ரொம்ப வெளிய சுத்தக் கூடாது”
“சரிம்மா!”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே செண்பகராமன் யாரையோ வரவேற்கும் குரல் கேட்டது.
“அடடே! வாங்க தம்பி! எங்க போயிட்டு வர்றீங்க? இன்னையோட தேர்தல் பிரச்சாரம் கடைசி தேதியில்ல? நல்லபடியா முடிஞ்சுதா?”
தேர்தல் பிரச்சாரம் என்றதுமே வந்திருப்பவன் யாரென வெண்பாவுக்குப் புரிந்துபோனது. அன்று அவளோடு டிரைவ் செல்லவேண்டுமெனக் கேட்டானே! அதற்காக வந்திருப்பானோ? தந்தை இதற்கெல்லாம் சம்மதிக்க மாட்டாரே! போதாக்குறைக்கு எழிலன் வேறு!
வெண்பாவுக்குள் இதயத்துடிப்பின் ஓசை பேரலையாய் எழுந்து அடங்கியது. பதற்றத்தில் கண்கள் அலைபாய உமையாளோடு சேர்ந்து ஹாலுக்கு வந்தாள்.
சாட்சாத் நேத்ரனேதான்! நிகிலனோடு வந்திருந்தான். அவளைப் பார்த்ததும் அவனது விழிகள் முதலில் சுருங்கிப் பின்னர் விரிந்தன, கூடுதல் பிரகாசத்தோடு.
விடுமுறை நாட்களில் வீட்டில்தானே இருக்கிறோமென்று ஆடைகளில் சிரத்தை எடுக்காமல் முழங்கைவரை தொங்கும் ஓவர் சைஸ் டீஷர்ட்டும், கட்டம் போட்ட நைட் பேன்ட்டும் அணிந்து அலையாய் இருக்கும் அடர் கூந்தலைப் பெரிய க்ளட்சில் கொண்டையாய் அடக்கிக்கொண்டு நின்றவளைப் பார்க்கையில் மிகவும் சிறுபெண்ணாகத் தெரிந்தாள் நேத்ரனின் பார்வைக்கு.
யாருமறியாவண்ணம் அவளுக்கு மட்டுமேயான பிரத்தியேக சைகையாய் அவன் ஒற்றைக்கண்ணை மட்டும் சிமிட்டியதில் வெண்பா அதிர்ந்து பின்னர் கண்களால் தனது குடும்பத்தாரைக் காட்டினாள். அவளது உதடுகளில் உறைந்த சிரிப்பு அவனுக்குக் கூடுதல் உரிமையைத் தருவதாய்! அசரவில்லையே நேத்ரன்!
குறும்புச் சிரிப்போடு செண்பகராமன் காட்டிய சோபாவில் நிகிலனோடு அமர்ந்தான்.
“தம்பிக்குக் காபி போடு” என்று உமையாளிடம் சொன்னவர் மகளைக் கண்டிக்கும் பார்வை பார்த்தார்.
அதன் அர்த்தம் – ‘வீட்டுக்கு வந்த உறவினனை வாருங்கள் என முறைப்படி அழைக்கமாட்டாயா?’ என்பதே.
வெண்பா அதைப் புரிந்துகொண்டவளாய் “வாங்க! வாங்க நிகிலண்ணா” என்றதும் அவரது முகத்தில் அமர்த்தல் பாவனை.
மகள் தனது மனக்கிடக்கையைப் புரிந்து நடந்துகொண்டால் தந்தையருக்கு வரும் கர்வத்தின் அடையாளம் அது!
“ஹாய்மா!” என்று நிகிலன் முறுவலிக்க நேத்ரனோ வெறுமெனே தலையசைத்தான் புன்சிரிப்போடு.
இதற்கு மேல் இங்கேயே நின்றால் இவன் ஏடாகூடமாக எதையும் சொல்லுவான். அல்லது செய்வான். எதற்கு வீண் வம்பு என்று கிளம்ப எத்தனித்தவள் பாளையங்கோட்டைக்குச் செல்வது பற்றித் தந்தையிடம் கூற முற்பட்டாள்.
“எனக்கு க்ரோசே பின்ன யார்ன் வாங்கணும்பா. பாளையங்கோட்டை போகணும்” என்றாள் அவள்.
செண்பகராமன் மகளிடம் திரும்பியவர் “இந்த வெயிலுலயா? மத்த நாள்தான் அவசரமா ஸ்கூல் ஸ்கூல்னு ஓடுற. இப்ப லீவ்தானே! வீட்டுல ஓய்வா இருக்காம இது என்ன வீண் வேலை?” என்க
“ஆகாஷுக்குக் கார்டிகன் வேணும்னு சொன்னான்பா. அதான்…” என இழுத்தாள் வெண்பா.
செண்பகராமன் யோசித்தவர் “இந்த மொட்டை வெயில்ல பாளையங்கோட்டை வரைக்கும் ஸ்கூட்டியில போனா…” என்று சொல்லும்போதே இடைமறித்தது நேத்ரனின் குரல்.
“நாங்க வீட்டுக்குத்தான் போறோம் மாமா. எங்க கார்ல வெண்பா வரட்டுமே! திரும்பி வர்றப்ப நான் டாக்சியில அனுப்பி வச்சிடுறேன்” என்றான்.
செண்பகராமனுக்கு ‘சரி’ என்று சொல்லவும் தயக்கம்! மறுத்தாலோ மரியாதையாக இருக்காது என்ற யோசனை.
நேத்ரனுக்கும் வெண்பாவுக்கும் பெரியவர்கள் கிட்டத்தட்ட திருமணப் பேச்சுவார்த்தையை முடித்திருந்தார்கள். அவர்கள் பேசுவதும் பழகுவதும் வைத்து மனதுக்குள் இருப்பதை ஊகிக்கத் தெரியாதவர்களா பெரியவர்கள்! எனவே தயக்கம் உடைய யோசனை சங்கிலி அறுபட சம்மதித்தார் செண்பகராமன்.
“சரிங்க தம்பி! நீ போய் ரெடியாகு. தம்பிக்கு வேற வேலை இருக்கும்”
“சரிப்பா” என்று அவசரமாய்ச் சொல்லிவிட்டுத் தனது அறைக்குள் ஓடி மறைந்தவளைக் கண்களால் கபளீகரம் செய்த நேத்ரனைப் புஜத்தில் அழுத்தி அவளது தந்தை இருக்கிறார் என்று சைகை காட்டினான் நிகிலன்.
பின்னர் அவர்களுக்குள் பேசிக்கொண்டார்கள். ஆண்கள் பேசுவதற்குத் தொழில், உலக அரசியல், நாட்டு நடப்பு என ஆயிரம் விஷயங்கள் இருக்கிறதே!
அவர்கள் பேசும்போதே காபி வந்தது. நிகிலனும் நேத்ரனும் எடுத்துக்கொண்டார்கள்.
“ரவா இட்லி ரெடியா இருக்கு. சாப்பிட்டுட்டுத்தான் போகணும் தம்பி” என்றார் உமையாள்.
“சரிங்க அத்தை”
நல்லப்பையனாகத் தலையாட்டிய நண்பனை நமட்டுச் சிரிப்போடு பார்த்தபடிக் காபியைக் காலி செய்தான் நிகிலன்.
ரவா இட்லிக்குச் சாஹூ செய்தால் எழிலனுக்குப் பிடிக்கும் என்பதால் ஹேமா அதைச் செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டாள்.
அதே நேரத்தில் குளித்து உடைமாற்றிக்கொண்டிருந்த வெண்பாவின் முகத்தில் இன்னும் வெட்கப் புன்னகையின் அலைகள் அடங்கவில்லை.
மெரூன் வண்ணத்தில் சந்தன நிறத்தில் பூக்கள் அச்சிடப்பட்ட காட்டன் கோ-ஆர்ட் ஒன்றை அணிந்துகொண்டவள் கூந்தலை உலர்த்தியபோதே ஹேமாவின் குரல் கேட்டது.
“ரவா இட்லி சூடா இருக்கப்பவே சாப்பிடு வெண்பா.”
சட்டென வெளியே போக நினைத்தவள் ப்ரேக் போட்டாற்போல நின்றாள். பின்னர் கண்ணாடியருகே சென்று தனது தோற்றத்தைச் சரிசெய்தாள்.

குளித்துத் தலையில் சுற்றிய டவல்! அதிலிருந்து சில குட்டை முடிகள் தப்பிக் கன்னத்தை வருடிக்கொண்டிருந்தன. முகம் புத்துணர்ச்சியோடு இருக்க இதழ்கள் இயற்கையான இளம்ரோஜா வண்ணத்தில் பளபளத்தன.
பொட்டில்லாத நெற்றி மட்டும் குறையாய்த் தெரியக் கருப்பு வண்ணப் பொட்டு ஒன்றை ஒட்டிகொண்டவள் தனக்குத் தானே நெட்டி முறித்துத் திருஷ்டி கழித்துவிட்டு வெளியேறினாள்.
உணவு மேஜையில் அவளது தமையனும் தந்தையும் உபசரிக்க நேத்ரனும் நிகிலனும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். அங்கே வந்தவளைக் கண்டதும் நேத்ரனின் விழிகள் காந்தமாய் அவள் மீது ஒட்டிக்கொள்ளத் தந்தைக்கு அடுத்து இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் வெண்பா.
தலையை நிமிர்த்தாமல் ஹாட்பாக்ஸில் இருந்த ரவா இட்லியையும் செராமிக் பாத்திரத்தில் சூடாய் இருந்த சாஹூவையும் எடுத்துக்கொண்டவள் சாப்பிட ஆரம்பித்தாள்.
என்னதான் சாப்பாட்டில் கவனம் செலுத்த முயன்றாலும் அவளது உடலெங்கும் யாரோ மயிலிறகால் வருடுவது போலச் சிலிர்ப்பொன்று ஓடிக்கொண்டிருந்தது. நேத்ரனின் பார்வையின் தீர்க்கம் சொல்லவொண்ணா அவஸ்தையில் ஆழ்த்துவதை அவள் ரசித்தாள் என்றாலும் நேராய் அவனது விழிகளை ஏறிடும் துணிவில்லை.
அந்த விழிகளை அவள் சந்தித்துவிட்டால் அவன் ஏடாகூடமாய் ஏதேனும் சைகை காட்டுவான். அதில் அவள் அதிர ஒருவேளை இதெல்லாம் தந்தையின் கண்களில் பட்டுவிட்டால்?
“நான் பாக்கமாட்டேன்பா” தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தலையைக் குனிந்து ரவா இட்லிகளை விழுங்கினாள்.
ஒருவழியாய்ச் சாப்பிட்டு எழுந்தவள் மீண்டும் தனது அறைக்குள் வரும்வரை நேத்ரனின் பார்வை தன்னைத் தொடருவதை வெண்பாவால் உணர முடிந்தது.
கொஞ்சம் நாணம்! கொஞ்சம் பயம்! கூடவே த்ரில்லாகவும் இருந்தது இந்த அனுபவம்.
மடமடவென ஹேர் ட்ரையரால் கூந்தலை உலர்த்தி நீளமான கூந்தலை மரச்சீப்பினால் ஒரு சின்னச் சிடுக்குக்கூட இல்லாமல் கச்சிதமாக வாரி மேலே மட்டும் க்ளட்ச் மாட்டிக்கொண்டவள் லிப் பாம் போட்டுக்கொண்டாள்.
“அழகு நீ” என்று தன்னைத் தானே ரசித்தவள் “வெண்பா” என்று ஹேமாவின் குரல் கேட்கவும் “இதோ வர்றேன் மதினி” என்றபடி தனது ஹேண்ட்பேக்கை எடுத்துக்கொண்டு வெளியே ஓடினாள்.
நேத்ரனும் நிகிலனும் சாப்பிட்டுவிட்டு அவள் வருவதற்காகக் காத்திருந்தார்கள். வெண்பா வந்ததும் நேத்ரனின் கண்களில் ரசனையும் மெச்சுதலுமாய் ஒரு பார்வை வீச்சு!
“போயிட்டு வாங்க. வெண்பா ரொம்ப நேரம் வெயில்ல சுத்தாத.” என்று சொல்லி மகளை நேத்ரனோடு அனுப்பிவைத்தார் செண்பகராமன்.
காரின் பின்பக்கத்துக் கதவை அவளுக்காகத் திறந்துவிட்டான் நேத்ரன்.
அவள் நாணச் சிவப்பேறிய கன்னங்கள் சிரிப்பில் ஆப்பிளாய்ப் புஷ்ஷென்று ஆகிப்போய், உள்ளே அமர இக்காட்சியைக் கண்ட நிகிலன் தனக்குள் பேசிக்கொண்டான்.
“பிரின்சஸ் ட்ரீட்மென்டாம்! இவன்கூடவே இத்தனை வருஷம் நண்பனா சுத்துறேன். எனக்கு ஒரு ஹியூமன் ட்ரீட்மென்ட்கூட இவன் குடுத்தது இல்ல. ஜெண்டர் பார்ஷியாலிட்டி”
நேத்ரன் கதவை அடைத்தவன் “நீ பேசுனதை நான் கேட்டுட்டேன். இவ்ளோ உயரமா இருக்குறியே! இந்தக் கார்க்கதவைத் திறந்து உக்கார உனக்கு என் உதவி வேணுமா?” என்றபடி காரைச் சுற்றிச் சென்று முன்பக்கத்துக் கதவைத் திறந்தான்.
“ஓஹ்! சார்வாள் குள்ளமா இருந்தா மட்டும்தான் பிரின்சஸ் ட்ரீட்மென்ட் குடுப்பாராம். போடா டேய்”
நிகிலன் அவனுக்குக் கேட்கும் குரலிலேயே சொல்லிவிட்டு முன்பக்கத்து இருக்கையில் அமர்ந்தான். நேத்ரன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரைக் கிளப்பினான்.
கார் வெண்பாவின் வீட்டு காம்பவுண்டைத் தாண்டி வெளியேறியபோது ரியர்வியூ மிரரை அவளது முகம் முழுமையாய்த் தெரியுமாறு சரிசெய்தான்.
அதை அவளும் கவனித்துவிடப் பின்னே திரும்பிக் கண்ணைச் சிமிட்டினான் குறும்புச் சிரிப்புடன்.
வெண்பா பெரிய கண்களால் நிகிலனைக் காட்ட, அவனோ “நான் எதையும் பாக்கலடா. நீங்க நடந்துங்க” என்று முகத்தை மூடிக்கொண்டான்.
அவன் அவ்வாறு சொன்னதும் வெண்பா சிரித்துவிட நேத்ரனும் அந்தச் சிரிப்பில் கலந்தபடியே காரைச் சாலையில் செலுத்தினான்.
“எந்த ஷாப்ல யார்ன் வாங்கணும்?” அவளது முகத்தைக் கண்ணாடியில் பார்த்தபடியே வினவினான் நேத்ரன்.
“தெற்கு ரதவீதியில நிறைய ஷாப் இருக்கு. அங்கதான் நான் எப்பவும் வாங்குவேன்”
உடனே தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான் அவன். பார்த்துவிட்டு ஏதோ யோசித்தான்.
“வெண்பா”
“ம்ம்!”
“அப்பிடியே நெல்லையப்பர் கோவிலுக்குப் போகலாமா?”
சம்மதமாய் அவள் தலையாட்ட அவனது முகத்தில் மந்தகாசப் புன்னகையின் ஊர்வலம்!
“எப்பா புன்னகை மன்னா! நானும் உங்களோட வரலாமா?” நிகிலன் அவனது புஜத்தைச் சுரண்டவும்,
“உன்னை வீட்டுல ட்ராப் பண்ணிடுறேன், ராஜூப்பா உன்கிட்ட ஏதோ பேசணுமாம்” என்று சத்தமாகச் சொன்னவன் ஒரு கையால் அவனது காதைப் பிடித்து இழுத்து “இதுவரைக்கும் நெல்லையப்பர் கோவிலுக்குப் போனதே இல்லையாடா நீ? அப்பிடிப் போகணும்னா தனியா போ. ஏன்டா என்னோட அழகான மொமண்டுக்குள்ள கரடி மாதிரி நுழையுற” என்று கடிக்காத குறையாகக் கடுகடுத்தான்.
அவனிடமிருந்து காதைக் காப்பாற்றிக்கொண்ட நிகிலன் “போடா துரோகி.” என்று பொய்யாய்க் கோபம்கொள்ள அவர்களது இந்தச் சண்டை எல்லாம் பின்னிருக்கையில் அமர்ந்திருந்த வெண்பாவுக்கு வேடிக்கையாகத் தெரிந்தது.
கூடவே இடையிடையே கண்ணாடியின் உபயத்தால் தன்னை ரசிப்பவனின் விழிகள் கொடுத்த இம்சை வேறு அவளை இதமாய் உணரவைக்க அந்தக் கார்ப்பயணம் முழுவதும் வெண்பாவின் வதனத்தில் விகசிப்புக்குக் குறைவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction


