“சரியானது அல்லது முக்கியமானது என நீங்கள் கருதும் ஒன்றை அடைய உங்களைத் தகுதிபடுத்திக்கொள்வது என்பது கடினமான காரியம் தான். ஆனால் அந்தத் தயார்படுத்திக் கொள்ளும் யுக்தியே சுயமரியாதை, சுயதிருப்தி மற்றும் பெருமையை உங்களுக்குப் பெற்றுத் தரும்”
-மார்கரேட் தாட்சர்
ரீஜென்ஸி ஹோட்டல், மதுரை..
அங்கிருந்து மேலூருக்குச் சென்று கொண்டிருந்தது ஒரு டாக்ஸி. அதனுள் அமர்ந்திருந்தவர்கள் நிதர்சனாவும் வானதியும் தான். மதுரை மண் அவர்கள் பிறந்து வளர்ந்த ஊர். நிறைய சந்தோசமான தருணங்களோடு மறக்க முடியாத சோகங்களையும் அவர்களுக்குப் பரிசாக கொடுத்த பூமி அது.
“எவ்ளோ நாள் கழிச்சு வந்தாலும் சொந்த ஊர் குடுக்குற ஃபீலே தனில்ல நதி”
நிதர்சனா சிலாகிக்க வானதியும் ஆமோதித்தாள். அவளது தந்தையின் அரசுப்பணி காரணமாக அடிக்கடி பணியிடமாற்றம் என்பது தவிர்க்க முடியாதாக மாறிப்போன தருணத்தில் அவள் அன்னையின் தூரத்து உறவில் அத்தை எனும் முறையோடு அவர்களுக்கு உதவியாக வீட்டிற்கு வந்தவர் தான் நிதர்சனாவின் பாட்டி வைதேகி.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அடிக்கடி பள்ளியை மாற்றுவது சரிவராது என்பதால் பதின்வயது வானதி அவருடன் மேலூரிலேயே தங்கிவிட்டாள். அவளுக்குப் பதிமூன்று வயதான போது ஒரு நாள் வைதேகியின் மகளும் மருமகனும் சாலை விபத்தில் மரணித்த தகவல் வர அத்தகவலுடன் கூடுதல் பொறுப்பாக வைதேகியுடன் வந்து நின்றவள் தான் அவரது மகள் வயிற்று பேத்தியான நிதர்சனா.
மலர்விழிக்கு தனது மகள் வயதே ஆன நிதர்சனா மீது வந்த இரக்கம் அவளையும் மகளாக கருதி படிப்புச்செலவை ஏற்க வைத்தது. மகேந்திரனும் வானதி படிக்கும் பள்ளியிலேயே நிதர்சனாவைச் சேர்த்தவர் தங்களுக்கு வைதேகி செய்யும் உதவிக்கு கைமாறாக நிதர்சனாவையும் தங்களது மகளாகவே எண்ணினார்.
இவ்வாறு இரு பெண்களும் ஒன்றாகவே வளர்ந்தனர். நிதர்சனா வானதியின் நட்பிலும், மலர்விழி மகேந்திரனின் பாசத்திலும் பெற்றோரின் இழப்பை சிறிது சிறிதாக மறந்து போனாள்.
பின்னர் பள்ளி கல்லூரி என அனைத்து படிப்பையும் ஒரே இடத்தில் முடித்தனர் இருவரும். இடையே பெற்றோரின் மரணம், யுவராஜின் இறப்பு, வைதேகியின் இழப்பு என எத்தனையோ சோகங்களும் அரங்கேறின.
இருவரின் எண்ணங்களும் ஒரே திக்கில் பயணித்து மீண்டும் டாக்சியை வந்தடைந்த நேரம் டாக்சியோ மேலூரில் ஒரு காலத்தில் அவர்களது புத்தம் புதிய இல்லம் தீக்கிரையான இடத்திற்கு வந்து நின்றது.
அன்றைய விபத்தின் மிச்சம் என்பது போல அரைகுறையாய் இடிந்த செங்கல்லுடன் சிதிலமாய் நின்றது ஒரு காலத்தில் வீடு என்று அழைக்கப்பட்ட அந்தக் கட்டிடம்.
சுற்றி இருந்த நிலத்தில் புதிதாய் முளைத்திருந்தது பரந்து விரிந்த அப்பார்ட்மெண்ட் ஒன்று. சொகுசு ஃப்ளாட்களும் தனிவீடுகளுமாக கேட்டட் கம்யூனிட்டியாக நின்ற அந்த அப்பார்ட்மெண்ட் பகுதிக்கு திருஷ்டி பொட்டு வைத்தாற்போல் சிதைந்த ரூபத்துடன் நின்றது வானதியின் தந்தை கட்டிய கனவு இல்லத்தின் மிச்ச சொச்சம்.
மேற்கூரையோ சுற்றுச்சுவரோ இல்லாது மொட்டையாய் நின்ற அந்த வீட்டின் காரணமாக மகேந்திரனிடம் இருவரும் வாதாடிய தருணங்கள் நிதர்சனாவுக்கு நினைவு வந்தது.
“அங்கிள் அவங்க இவ்ளோ மிரட்டுறாங்கல்ல, அப்புறமும் ஏன் பிடிவாதமா இருக்கீங்க? நீங்க இந்த லேண்டை அவங்களுக்கு குடுத்துடுங்க அங்கிள்… நம்ம வேற எங்கயாச்சும் போயிடலாம்”
கவலையாய் உரைத்த நிதர்சனாவின் கூந்தலை வருடிக் கொடுத்த மகேந்திரனோ
“இல்லடாம்மா! ஒரு நாய் நம்மளை பாத்து குலைச்சா பயந்து ஓடக்கூடாது… ஏன்னா ஓடுறவங்களை பாத்தா நாய்க்கு குஷியாயிடும்… அது துரத்திட்டே ஓடி வரும்… ஆனா நம்ம கண்டுக்காம போயிட்டா அது பாட்டுக்கு அடுத்த ஆளை பாத்து குலைக்க ஆரம்பிச்சிடும்… இவங்க மிரட்டலுக்கு பயந்து நம்ம ஏன்டா நிலத்தை விக்கணும்? இந்த வீடு என்னோட கனவு… இந்தச் சில்லி பசங்க பேச்சுக்குல்லாம் நம்ம பயப்படக்கூடாது” என்று கூறிவிட நிதர்சனாவும் தலையாட்டினாள்.
அதே நேரம் மலர்விழியிடம் புலம்பிய வானதியை அவரும் இதே போல தான் சமாதானம் செய்து கொண்டிருந்தார்.
“நீ ரொம்ப யோசிக்காம ஹாஸ்டலுக்குக் கிளம்பு”
அவர்கள் சொன்னபடி கல்லூரிக்குச் சென்றவர்கள் அடுத்த செமஸ்டர் விடுமுறைக்கு மீண்டும் மேலூருக்கு வந்த சமயத்தில் அவர்களது புதுவீடு கட்டி முடிக்கப்பட்டிருந்தது.
அவளது தந்தையின் கனவு இல்லம் வெகு நேர்த்தியாக கட்டி முடிக்கப்பட்டு புதுமனைப்புகுவிழாவும் அவர்கள் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு முடிந்திருந்தது.
புது வீட்டில் காலடி எடுத்து வைத்த இருவரின் காதிலும் விழுந்தது ராமமூர்த்தியின் அல்லக்கையான ஒரு நபரின் நாராசமான குரல் தான்!
“எங்கய்யாவுக்கு லேண்ட் வேணும்னு சொல்ல சொல்ல கேக்காம வீட்டையும் கட்டி பாலும் காய்ச்சிட்டியா மகேந்திரா? இதே வீட்டுல உனக்கும் உன் முழு குடும்பத்துக்கும் பாலை ஊத்தி இந்த லேண்டை எடுத்துக்குவோம்… பாக்குறியா?”
வானதிக்கு இதைக் கேட்டதும் கோபம் வர அவளது கரத்தைப் பற்றி நிறுத்தினாள் நிதர்சனா. தொடர்ந்து தந்தையின் குரலும் கேட்டது. பின்னர் சில நொடிகளில் அந்நபர் வெளியே வர அவனை இரு பெண்களும் பார்த்து விட்டனர்.
அவர்களை நக்கலாக பார்த்தபடி அவன் கடக்க மலர்விழி இருவரையும் உள்ளே அழைத்து வந்தார். மகேந்திரன் நடந்த சம்பவத்தைக் குறித்து பேசவேண்டாமென சொன்னவர் அமைதியாக வேறு விசயங்களை நோக்கி பேச்சை மாற்றிவிட்டார். அந்த விடுமுறை நாட்கள் அதன் பின்னர் மகிழ்ச்சியாகவே கழிந்தது இரு பெண்களுக்கும்.
இவ்வாறு இருக்க அவர்கள் கல்லூரிக்குத் திரும்பும் தினமும் அருகில் வந்துவிட்டது. அப்படியே இருக்கையில் தான் ஒரு நாள் யாரோ ஹாலில் வைதேகியுடன் பேசுவது கேட்டது அவர்களுக்கு.
“உங்க சிலிண்டர்ல ரெகுலேட்டர் சரியில்லம்மா… இது ஏதோ டூப்ளிகேட் போல… உங்களுக்கு கேஸ் லீக் ஆகுற ஸ்மெல் வந்திருக்கா?”
எரிவாயு குடுவை கொடுக்க வந்த நபர் வைதேகியிடம் பேசிக்கொண்டிருக்க மலர்விழியோ
“இல்லப்பா… லீக் ஆனா கண்டிப்பா மாத்திடுறோம்” என்றார்.
“உங்க நல்லதுக்குத் தான் சொல்லுறேன்… எதுக்கும் நாளைக்கு வேற ரெகுலேட்டர் கொண்டு வந்து மாத்துறேன்” என்றவர் அதன் விலையைக் கூற, வைதேகியும் நமது பாதுகாப்பை விட பணம் பெரிதல்ல என்கவு அவரை மறுநாள் ரெகுலேட்டரைக் கொண்டு வரும்படி பணித்தார் மலர்விழி.
ஆனால் மறுநாள் அந்நபர் வரவில்லை. இரு பெண்களும் செமஸ்டர் விடுமுறை முடிந்து கல்லூரிக்குக் கிளம்பும் போது தான் எரிவாயு சிலிண்டர் சப்ளை செய்யும் நபரைப் போல உடையணிந்த ஒருவர் அங்கே வந்தார்.
சென்ற முறை வந்தவர் இவர் இல்லையே என்ற கேள்வி ஒரே சமயத்தில் அனைவர் மனதிலும் உதயமானது.
அந்நபரோ “மூர்த்தி தான் உங்க வீட்டு அட்ரஸ் குடுத்தான்… ரெகுலேட்டர் மாத்திடலாமா?” என்று கேட்க
“நாளைக்கு வாங்களேன்… இன்னைக்குப் பொண்ணுங்க ரெண்டு பேரும் ஊருக்குக் கிளம்புறாங்க… நாங்க வழியனுப்புறதுக்குப் போறோம்” என்றார் மகேந்திரன்.
அவர்களுடன் யுவராஜூம் சேர்ந்து கொள்ள மூவருமாய் மதுரையை விட்டு அன்று மாலை கிளம்பினர். ஆனால் ஒரு நாள் கழித்து மீண்டும் அங்கேயே வருவோம் என்று அவர்கள் யோசிக்க கூட இல்லை.
அதுவும் பெற்றோரின் மரணச்செய்தி கேட்டு மனம் பதைத்து அல்லவா வந்தனர்!
சமையலறையிலிருந்த எரிவாயு குடுவையில் ஏற்பட்ட கசிவு காரணமாக ஏற்பட்ட தீவிபத்தால் மலர்விழி, மகேந்திரனோடு அவரது நண்பரும் யுவராஜின் தந்தையுமான செந்தில்நாதனும் அறுபது சதவிகித தீக்காயத்தால் உயிரிழந்துவிட்டனர் என்றது அவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை.
அந்நேரத்தில் காய்கறி வாங்குவதற்காக வெளியே சென்றிருந்ததால் வைதேகி மட்டும் தப்பித்தார்.
கடைசியாய் மகேந்திரன் பேசிய காட்சியென மருத்துவமனை செவிலி ஒருவர் வானதியிடம் காட்டிய வீடியோ ஒன்றில் “அ..ப்…ப்…ஆவ மன்னி..ச்ச்..சிடு குட்ட்.ட்டிம்மாஆ” என்று கூறிவிட்டு உயிர் விட்டிருந்தார் அவர்.
“உங்கப்பா அம்மாவோட முகத்தைக் கூட பாக்க முடியாம போயிட்டே கண்ணு”
அவளைக் கட்டிக்கொண்டு அழுத வைதேகியின் தோள் சுருங்கிய கரத்தின் ஸ்பரிசத்தை இப்போதும் உணர்ந்தாள் வானதி.
கூடவே “அந்த ரெகுலேட்டர் மாத்த வந்த ஆளு மேல தான் எனக்குச் சந்தேகமா இருக்கு யுவா… அந்தப் பொலிட்டீசியன் தான் எல்லாரையும் ஆளை வச்சு கொன்னுட்டார்டா… சந்தேகமா இருந்துச்சுனா அப்பாவோட ஆபிஸ்ல கூட விசாரிச்சு பாரு… அந்தாளுங்க அப்பாவ அங்க போயும் மிரட்டிருக்காங்க” என்று யுவராஜிடம் அழுது புலம்பிய காட்சியும்
“நீ கவலைப்படாத… ஒன்னுக்கு மூனு பேரை இழந்திருக்கோம்… இதுக்கு அவங்க பதில் சொல்லியே ஆகணும்” என்று யுவராஜ் கோபமாய் உரைத்த காட்சியும் அவள் கண் முன் திரைப்படம் போல விரிந்தது.
திடீரென தோளில் நிதர்சனாவின் கரம் தொடவும் திரும்பியவள் “இப்பவும் இந்த இடத்த வாங்குறதுக்கு யாருக்கும் தைரியம் வரல போல” என்றாள் கசப்பு வழிந்த குரலில்.
நிதர்சனாவின் மனதில் குமுறல் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாது “இன்னும் அந்தாளோட ஆளுங்க அப்பப்ப இங்க வருவாங்க போல… ஆட்சிமாற்றம் நடந்ததால மால் கட்டுற ப்ளான் ஃப்ளாப் ஆன காண்டுல ராமமூர்த்தி சுத்துனாலும் அவரால மேற்கொண்டு இந்த லேண்ட்ல எதுவும் செய்ய முடியல… மத்த இடத்த மட்டும் அவரோட பினாமி கன்ஸ்ட்ரக்சன் மூலமா அப்பார்ட்மெண்டா மாத்திட்டாரு… இப்பிடி வெறும் இடமா போட்டு வைக்குறதுக்காகவா நாலு பேரோட உயிரை எடுத்தாரு?” என்று ஆதங்கத்துடன் வினவினாள்.
வானதி விரக்தியுடன் முறுவலித்தவள் “நாலு பேரோட உயிர் இந்த லேண்டுக்கான விலை இல்ல சனா… ராமமூர்த்தியோட பகைய சம்பாதிச்சங்கல்ல, அதுக்கான விலை” என்று கூற நிதர்சனாவும் அதை ஆமோதித்தாள்.
அப்போது பக்கத்திலிருந்த அப்பார்ட்மெண்டின் செக்யூரிட்டி அவர்களிடம் வந்து ஏன் இங்கேயே நிற்கிறீர்கள் என வினவவும் இரு பெண்களும் அங்கிருந்து கிளம்பினர்.
இருவரும் மெதுவாய் நகரும் போதே “பாப்பா நில்லும்மா” என்ற ஆண்குரல் ஒன்று அவர்களைத் தடுத்து நிறுத்த நடப்பதை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தனர்.
வந்தவர் யாரென அறிந்ததும் இருவரது கண்களும் பனிக்கத் துவங்க அவரோ இரு கரம் கூப்பி “நல்லா இருக்கீங்களாம்மா?” என்று கரகரத்த குரலில் கேட்டார்.
வானதிக்கும் நிதர்சனாவுக்கும் பதிலளிக்க முடியாத நிலை! அந்நபருக்கும் கண்ணீர் தாரை தாரையாக வழிய ஆரம்பிக்க அங்கே ஒரு சங்கடமான சூழல் நிலவ ஆரம்பித்தது.
***********
ராமமூர்த்தியின் இல்லத்தில் அவர் அமைதியின்றி உலாவிக் கொண்டிருந்தார். அவரது மனைவி வருணா என்னவென வினவிய போது கூட ஒன்றுமில்லை என்று கூறி மறுத்துவிட்டு அறைக்குள் அடைபட்டுக் கொண்ட மனிதர் திடீரென மொபைல் இசைக்கவும் அழைப்பை ஏற்றார். அழைத்தவர் அவரது உதவியாளர் மாணிக்கம் தான்!
“சொல்லுய்யா மாணிக்கம்! எல்லா வேலையும் சரியா முடிஞ்சுதா?”
“முடிஞ்ச மாதிரி தான் சார்… ரெண்டு நாள்ல உங்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும்னு அந்த ஆள் சொல்லிருக்கான்”
“அவன் கூட பேசி பைசல் பண்ணுறத வெளியாளுங்களை வச்சு பண்ணுய்யா… இதுல உன் பேரோ என் பேரோ வெளிய கசிஞ்சா காரியம் கெட்டுப் போகும்”
“நான் எனக்கு நம்பிக்கையான ஆளை வச்சு தான் பேமெண்ட் பேசி முடிச்சிருக்கேன் சார்…. நீங்க நிம்மதியா இருங்க”
உதவியாளர் கொடுத்த உத்திரவாதத்தால் நிம்மதியுற்ற ராமமூர்த்தி இன்னும் இரு தினங்களில் தனக்கு இத்தனை நாட்களாக இருந்து வந்த மனப்போராட்டம் முடிவுறுமென்று பகற்கனவு காணத் துவங்கினார்.
வெறும் மாநாட்டு நிகழ்வுக்கே இம்மாதிரியான கொடூர முடிவுக்கு வந்தவருக்குச் சட்டச்சபை தேர்தலில் இடமில்லை என்றால் அவரது மனநிலை எப்படி மாறும்?
மாநிலத்தில் விட்ட அதிகாரத்தை மத்தியில் பிடிக்க அவருக்கு வாய்ப்பு அளிக்க கட்சித்தலைமை தயாராக இருந்தாலும் மத்தியில் தேர்தல் வரும் வரை காத்திருக்கும் பொறுமை ராமமூர்த்திக்குக் கிடையாதே!
அருள்மொழியைத் தனது போட்டியாக மட்டுமன்றி எதிரியாகவும் கருதத் துவங்கியவருக்கு வானதியின் ரூபத்தில் இன்னும் தீர்க்கப்படாத பழைய கணக்கு ஒன்று உள்ளது என்பதுவும் அது ஒரேயடியாக அவரது அரசியல் வாழ்க்கைக்கே முற்றுபுள்ளி வைக்கும் என்பதுவும் பாவம் தெரியவில்லை.
அதே நேரம் யாருக்கு முடிவு கட்ட அவர் விரும்பினாரோ அந்த அருள்மொழி தேசிய ஊடகமொன்றில் நேரலை நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டிருந்தான்.
நெறியாளர் சக்ஸேனா கிடுக்குப்பிடியாய் கேட்ட கேள்விகள் அனைத்துக்கும் சாமர்த்தியமாக பதிலளித்தான் அவன்.
“ஊழலுக்கு எதிரா மக்களை திரட்ட நினைக்கிற உங்க கட்சிலயே சில ஊழல்வாதிகள் இருக்கிறதா பேசிக்கிறாங்களே… அப்ப இந்த பேச்சுல்லாம் சும்மா வாய் வார்த்தை தானா?”
அவனது தேர்தல் பிரச்சாரத்தின் உயிர்நாடியான ஊழலை வைத்தே கேள்விக்கணைகளைத் தொடுத்தார் அந்நெறியாளர்.
இதை எதிர்பார்த்தே வந்தவனைப் போல எவ்வித சிரமமுன்றி தெளிவாக பதிலளிக்கத் துவங்கினான் அருள்மொழி.

“எங்க கட்சில ஊழல்வாதிகள்னு இது வரைக்கும் குற்றம் சாட்டப்பட்டவங்க யாருமில்ல… ரூலிங் பார்ட்டிக்காரங்க வாயால சொல்லுற வார்த்தைகளை வச்சு எப்பிடி ஒருத்தரை ஊழல்வாதினு சொல்ல முடியும்? யாராவது எங்க கட்சி நபர்கள் மேல ஊழல் புகார் குடுத்திருக்காங்களா? எந்த போலீஸ் ஸ்டேசன்லயாச்சும் அவங்க மேல கம்ப்ளைண்ட் ஃபைல் ஆகிருக்குதா? இல்ல கோர்ட்ல தான் அவங்க மேல ஊழல் வழக்கு நடக்குதா? நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுங்கிறது காழ்ப்புணர்ச்சியால வெளிவர்ற வெற்று வார்த்தை தான் சக்ஸேனா”
“அப்பிடி நிரூபிக்கப்பட்டாலோ புகார் குடுக்கப்பட்டாலோ கட்சித்தலைவரா உங்களோட நிலைப்பாடு எப்பிடி இருக்கும்?”
“நாங்க ஊழல்வாதிகளுக்காக கட்சி நடத்தல… சோ குற்றம் நிரூபிக்கப்பட்டவங்களை கட்சில வச்சுக்கிற அளவுக்கு எனக்குப் பெரிய மனசு கிடையாது மிஸ்டர் சக்ஸேனா… அதோட அவங்களுக்காக ஜெயில் காத்திருக்கிறப்ப எங்க கட்சில அவங்களுக்கு ஏன் இடம் குடுக்கணும்?”
“உங்க மேல சுமத்தப்பட்ட சி.பி.ஐ வழக்குக்கு உங்களோட பதில் என்ன?”
இதற்கு என்ன பதில் கூறுவான் என நெறியாளர் காத்திருக்கியையிலேயே அமர்த்தலான தொனியில் அக்கேள்விக்கான பதிலை அளித்தான் அருள்மொழி.
“இலக்கை நோக்கி நடக்குறப்ப கால்ல இடறுற கல்லை கவனிச்சா நமக்கு முன்னாடி அந்த இலக்கு இன்னொருத்தருக்குச் சொந்தமாகிடும்… என் கவனம் கல் மேல எப்பவும் திரும்பாது… இன்னும் எத்தனை கல் இடறுனாலும் என்னோட இலக்கை நோக்கிய நடை தடைபடாது”
நெறியாளர் புருவம் உயர்த்தி அவனை மெச்சியவர் “வெல்டர் மிஸ்டர் அருள்மொழி… பிசினஸ்மேனான உங்களுக்கு அரசியல் ஒரு புதிய தளம்… இங்க நீங்க காலடி எடுத்து வச்சப்ப அரசியல் பற்றிய உங்களோட பார்வை வேற மாதிரி இருந்திருக்கும்… உங்களோட இந்த எதிர்பாராத அரசியல் பிரவேசம் உண்டாக்குன அதிர்வலைய விட உங்களோட கைது தான் அரசியல் வட்டாரத்துல பரவலா பேசப்பட்டுது… அதை சமாளிச்சு வெளிய வந்த நீங்க இப்ப அரசியலை எந்தக் கண்ணோட்டத்துல பாக்குறீங்க?” என்று வினவ
“எனக்கு நியூ ஃபீல்ட்ல கால் பதிச்சு ஜெயிக்கிறது ரொம்ப பிடிக்கும்… இது வரைக்கும் எக்ஸ்பெரிமெண்டலா நான் நிறைய ஃபீல்ட்ல இன்வெஸ்ட் பண்ணி அதுல ஜெயிக்கவும் செஞ்சிருக்கேன்… நீங்க அரசியலும் எனக்கு நியூ ஃபீல்ட் தான்… உள்ள காலடி எடுத்து வச்சப்ப இருந்த த்ரில் இப்ப வரைக்கும் குறையாம இருக்குனு தான் சொல்லுவேன்… எல்லாம் ஸ்மூத்தா போயிருந்தா கூட அந்த த்ரில் குறைஞ்சிருக்கும்… ஆனா திடீர்னு அரெஸ்ட் ஆனது, ஜெயில் வாசம், அப்புறம் கோர்ட் சீன்ஸ் இது எல்லாமே அந்த த்ரில்லை இன்னும் அதிகமாக்கிடுச்சு… சோ முன்னாடி நியூ ஃபீல்டா தெரிஞ்ச அரசியல் இப்ப எனக்கு இண்ட்ரெஸ்டான கேமா மாறிடுச்சு… பிசினஸ் பாயிண்ட் ஆப் வியூல சொல்லணும்னா இதுல நான் என்னையே இன்வெஸ்ட் பண்ணிருக்கேன்… அதுக்குத் தகுந்த ரிட்டர்ன் கிடைக்கலனா நான் இழக்கப் போறது என்னைத் தான்… ஐ டோன்ட் வாண்ட் லாஸ் மைசெல்ஃப்” என்றான் அருள்மொழி.
அவனது இந்த நேர்க்காணலைப் பார்த்துக் கொண்டிருந்த நிதர்சனா மொபைலை ஹோட்டல் அறையின் ஜன்னல் வழியே வெளியே தெரிந்த காட்சிகளை வேடிக்கை பார்த்தபடி காபி அருந்திக் கொண்டிருந்த வானதியிடம் காட்டினாள்.
“அருள் சாருக்கு இருக்குறது செல்ஃப் கான்பிடன்ஸா இல்ல ஓவர் கான்பிடன்ஸா நதி? மனுசன் இண்டர்வியூல ரொம்ப ஸ்மார்ட்டா ஆன்சர் பண்ணுறாரே”
காபியை சுவைத்தபடியே மொபைலின் திரையில் பேசிக்கொண்டிருந்த அருள்மொழியைப் பார்த்தாள் வானதி.
“அவன் அரசியல்ல தேறிட்டான் சனா… இனிமே நம்ம ஐடியால்லாம் அவனுக்குத் தேவைப்படாது… ஐ மீன் அரசியல்வாதி அருள்மொழிக்குத் தேவைப்படாது… ஆனா அவன் கட்சிக்கு இன்னும் நம்ம ஐ.பி.சியோட ஆலோசனை கட்டாயம் தேவை” என்றாள் அவள்.
நிதர்சனா யோசனையுடன் தலையாட்டியவள் “அப்ப இனிமே நீ பெர்சனா என்ன சஜஷன் குடுத்தாலும் அருள் சார் காது குடுத்துக் கேக்க மாட்டாரா?” என்கவும்
“அவன் என் பேச்சைக் கேக்குற சிச்சுவேசன் கூடிய சீக்கிரமே வரும்… அப்ப அவனை வச்சே என் இலக்கை ஒன்னுமில்லாம ஆக்குவேன் சனா… எத்தனை வருச கோவம் இது? அதை தீர்த்துக்குறதுக்கு எனக்குக் கிடைச்ச பகடைக்காயே அருள்மொழி தான்! அவனை வச்சு தான் ராமமூர்த்தியோட அரசியல் சாம்ராஜ்ஜியத்த அடியோட அழிக்கணும்… கட்டாயம் அந்த நாள் வரும் சனா” என்றாள் வானதி நம்பிக்கையுடன்.
அரசியலை தனது இலக்காய் எண்ணி வெற்றி பெற விரும்பும் அருள்மொழியும், ராமமூர்த்தியின் அரசியல் வாழ்க்கையை ஒன்றுமில்லாமல் ஆக்குவதை தனது இலக்காய் கொண்டு காய் நகர்த்தும் வானதியும் தமது இலக்கை நோக்கிய பயணத்தின் இறுதி கட்டத்தில் நின்று கொண்டிருக்கின்றனர்.
தனது இலக்கை அடைய வானதியை ஆட்டுவிப்பதாக அவனும், தனது இலக்கை அழிப்பதற்காக அருள்மொழியை பயன்படுத்திக்கொள்வதாக அவளும் எண்ணிக்கொண்டிருக்க விதியோ அவர்களை வைத்து நடத்திக்கொண்டிருந்த பரபரப்பான யுத்தகாண்டத்தின் இறுதிப்பகுதியை எழுத ஆரம்பித்து விட்டது.
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction