“உனக்கு நம்ம ஸ்கூல் டேஸ் ஞாபகமிருக்கா அருள்? நீ கிரிக்கெட் நல்லா விளையாடுவ. சஞ்சய் உன் கிட்ட அவுட் ஆகிட்டு ‘நோ பால்’னு ஷீட் பண்ணுவான். அப்ப இருந்தே அவன் அட்டென்சன் சீக்கர்தான். இலக்கியா நாம சாப்பிடுற மாதிரி ஸ்னாக்ஸ் எதுவும் சாப்பிடமாட்டா. அப்பவே அவ டயட் கான்சியஸா இருப்பா. நாம அஞ்சு பேரும் சேர்ந்து சீக்ரேட் ஹேண்ட் ஷேக் ஒன்னு நமக்காகக் கண்டுபிடிச்சோம். ஞாபகம் இருக்கா? அதை நாம வீடியோவா ரெக்கார்ட் பண்ணுனோம். நீ இந்தியா வந்தா உனக்குப் போட்டுக் காட்டுறேன்”
-வானதியின் கடிதம்…
புதுடெல்லியின் அதிகாலைப் பனிமூட்டம், இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையை ஒரு மெல்லிய வெள்ளைத் திரையிட்டு மூடியிருந்தது.
சென்னையிலிருந்து வந்து தரையிறங்கிய விஸ்தாரா ஏர்லைன்ஸின் பிசினஸ் வகுப்பிலிருந்து இறங்கினான் அருள்மொழி. அதிகமாய்ப் பொருட்கள் எதுவும் எடுத்துவரவில்லை. ஷோல்டர் பேக் மட்டும். இரண்டு நாளுக்கான உடைகள், அவனது ஆவணங்கள், மடிக்கணினியை மட்டுமே சுமந்திருந்தது அந்தப் பேக்.

அவன் அதிக நாட்கள் டெல்லியில் தங்கப்போவதில்லையே! மறுநாள் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்போகிற வழக்குக்கான நடைமுறைகளை முடித்துக்கொண்டு விமானம் ஏறிவிடப்போகிறான். அனைத்து வசதிகளையும் மான்கடா குழுமமே செய்து கொடுத்திருந்தது. மான்கடா குழுமத்தின் பிரதிநிதி ஓம் கபூர் சொகுசு காரோடு அவனுக்காகக் காத்திருந்தார்.
“வெல்கம் டு டெல்லி சார்!” கைகுலுக்கினார் அருள்மொழியிடம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
காரானது மான்சிங் சாலையில் இருக்கும் தாஜ் மஹால் ஆடம்பர ஹோட்டலை நோக்கி விரைந்தது. ஹோட்டலின் ஒன்பதாவது தளத்தில் அவனுக்காகப் பிரெசிடென்ஷியல் சூட் ஒன்று முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.
பாரம்பரிய முகலாயக் கட்டிடக்கலையின் அழகைப் பிரதிபலித்த அறையிலிருந்து பார்த்தால், இந்தியா கேட் காலை பனியினூடே ஒரு ஓவியம் போலத் தெரிந்தது.
ஓம் கபூர் அவனுக்குத் தேவையான சௌகரியங்களைச் செய்துகொடுத்துவிட்டுக் கிளம்பினார். மான்கடா குழுமம் தொடுக்கவிருந்த வழக்கில் அருள்மொழியோடு சேர்ந்து இந்திய வழக்கறிஞர் விக்ரம் மெஹ்ரா ஆஜராகவிருந்ததால், அவருடன் வீடியோ உரையாடலில் நேரம் செலவானது அவனுக்கு.
ஜஸ்டிஸ் டுடே நிறுவனம், அதன் தலைமை எடிட்டர் விஷ்ணு பிரகாஷ், இந்தச் செய்திகளைச் சேகரித்துத் தவறான தரவுகளுடன் தொலைக்காட்சியில் பேசிய பத்திரிகையாளர் வானதி ஜெயசந்திரன் என அனைவரையும் குறிப்பிட்டிருந்தார்கள்.
மான்கடாவின் எதிர்பார்ப்பு மானநஷ்ட வழக்கு. கூடவே ஜஸ்டிஸ் டுடே ஒளிபரப்பிய செய்திகளை நீக்குவதற்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதி. அதற்கு முழு உத்தரவாதம் அளித்தான் அருள்மொழி.
வானதி இந்த வழக்கில் இருப்பது அவனுக்கு லண்டனிலேயே தெரிந்ததுதான். ஆனால் அவனது இந்திய வருகைக்குக் காரணமான வழக்கு இதுதான் என வானதிக்குத் தெரியாது. இதற்கு அவள் எந்த வகையில் எதிர்வினையாற்றுவாள் என்ற யோசனையில் அவனது இரவு கழிந்தது.
மறுநாள் காலையில் வாட்ஸ்அப் செய்தி அட்சரனிடமிருந்து வந்தது. அருள்மொழிக்கு அலுவலக இடம் ஒன்றை பேசி முடித்துவிட்டானாம். பெரிய தலைவலி விட்டது போன்ற உணர்வு அவனுக்கு. உச்சநீதிமன்றம் கிளம்ப ஆயத்தமானான்.
ஓம் கபூரின் காரில் திலக் மார்க் வந்தடைந்தபோது, உச்சநீதிமன்றத்தின் அந்தப் பிரம்மாண்டமான குவிமாடம், நீதியின் மௌன சாட்சியாகத் தெரிந்தது அருள்மொழிக்கு. இன்று அவன் நீதிக்காகப் போராடப்போவதில்லை. ஆனாலும் துளி கூட அவனுக்குக் குற்றவுணர்ச்சி இல்லை.
கறுப்பு அங்கி அணிந்த வழக்கறிஞர்களின் கூட்டம் அந்தப் பகுதியையே ஒரு எறும்புக் கூடு போல மாற்றியிருந்தது. அதிலிருந்து முகமலர்ச்சியோடு அவனிடம் கைகுலுக்கினார் விக்ரம் மெஹ்ரா.

இருவரும் நீதிமன்ற அறை எண் மூன்றிற்குள் நுழைந்தனர். அங்கே பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகம். முதலில் ‘மெமோ ஆஃப் அப்பியரன்ஸ்’ (Memo of Appearance) தாக்கல் செய்யப்பட்டது. அருள்மொழி ஒரு வெளிநாட்டுச் சட்ட நிபுணராக விக்ரம் மெஹ்ராவுக்குப் பின்னால் அமர்ந்து, குறிப்புகளை வழங்கத் தயாரானான்.
நீதிமன்ற அறைக்குள் இருந்த அந்த மர இருக்கைகள், பழைய காகிதங்களின் மணம், மற்றும் நீதிபதிகளின் வருகைக்காகக் காத்திருந்த அந்த நிசப்தம் என அனைத்துமே அருள்மொழிக்குப் புதியதொரு உணர்வைக் கொடுத்தது.
நீதிபதி வந்ததும் வழக்குக்கான வாதம் ஆரம்பித்தது. விக்ரம் மெஹ்ரா அருள்மொழியின் ஆலோசனைப்படி இந்த வழக்கை அவசரகால மனுவாகத் தாக்கல் செய்திருந்தார். மான்கடா குழுமத்தின் நிர்வான் வனம் பற்றி ஜஸ்டிஸ் டுடே தவறான தரவுகளை வைத்து அவதூறு செய்திகளைப் பரப்புவதாக வாதிட்டார் அவர். நீதிபதி உடனே அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
“இது ஊடகச் சுதந்திரத்துக்கு எதிரா இருக்கு மிஸ்டர் மெஹ்ரா.”
மான்கடா குழுமத்திற்கு இந்தத் தவறான செய்தியால் வணிகரீதியாகவும் நற்பெயரைப் பாதிக்கும் விதமாகவும் உண்டான நஷ்டத்தை ஈடு செய்ய மானநஷ்ட வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாகவும், அதற்காக ஜஸ்டிஸ் டுடே நிறுவனத்திற்கு முறையான லீகல் நோட்டீஸ் அனுப்பவும், தவறான செய்திகளை நீக்கவும் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை வேண்டுவதாகக் குறிப்பிட்டார் விக்ரம் மெஹ்ரா.
இந்த நேரத்தில் அருள்மொழி அவன் சேகரித்திருந்த குறிப்பொன்றை அவரிடம் தள்ளினான். கடந்த இருபத்து நான்கு மணி நேரத்தில் மட்டும் ஜஸ்டிஸ் டுடே தவறான தரவுகள் மற்றும் தகவல்கள் அடிப்படையில் ஒளிபரப்பிய செய்திகள் பற்றிய குறிப்புகள் இருந்தன. அந்தக் குறிப்புகளும் விவரங்களும் நீதிபதியின் பார்வைக்குக் கொடுக்கப்பட்டன. அதைப் படித்துப் பார்த்த நீதிபதி, ஜஸ்டிஸ் டுடேவுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
எதிர்மனுதாரர்கள் இரண்டு வார காலகட்டத்திற்குள் அந்த நோட்டீஸிற்குப் பதிலளிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார்.
கூடவே தவறான தரவுகளின் அடிப்படையில் ஒளிபரப்பிய செய்திகள், சமூகவலைதளப் பதிவுகளை நீக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். நீதிமன்ற வேலை முடிந்ததும் விக்ரம் மெஹ்ராவிடம் விடைபெற்றான் அருள்மொழி.
அன்று மாலையே அவனுக்குச் சென்னைக்கு விமானம். மான்கடா குழுமத்தின் சி.இ.ஓவைச் சந்திக்கும் வாய்ப்பையும் அவர்கள் தரப்பில் தரவிருந்த பார்ட்டியையும் கூடப் பணிவாக மறுத்துவிட்டு விமானம் ஏறியும் விட்டான்.
சென்னையை அடைந்ததும் தர்மலிங்கத்திடமிருந்து அழைப்பு வந்தது அருள்மொழியின் மொபைலுக்கு.
“நீ சென்னைக்குப் போறதா கடைசி வரைக்கும் என்கிட்ட கூட சொல்லலையே அருள்” என மனத்தாங்கலோடு பேசினார் அவர்.

“சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு சொல்லாம போனேன் மாமா. உங்ககிட்ட சொல்லிருந்தா உங்க தலைவருக்குத் தகவல் போய்டுமே” என விளையாட்டு போல அவன் சொல்லவும் தர்மலிங்கமும் பேச்சை மாற்றினார்.
“மெகனும் நானும் நியூசிலாந்து கிளம்புறோம் அருள். எங்களால வானதி கல்யாணத்தை அட்டெண்ட் பண்ண முடியும்னு தோணல. எங்க சார்பா நீ கலந்துக்க முடியுமா?”
தர்மலிங்கம் எந்த விஷயத்திலும் அருள்மொழியை வற்புறுத்தியதில்லை. இம்முறையும் வேண்டுகோளாக மட்டுமே சொல்லவும் அவனும் தங்கச் சம்மதித்தான். அவனது மனதில் ஓடிய திட்டத்திற்காக முன்னரே வானதியின் திருமணத்திற்குச் செல்ல யோசித்திருந்தான். இப்போது தர்மலிங்கமும் சொல்லிவிடவே அவனது வேலை எளிதாகிவிட்டது. யாரும் கேட்டால் கூட தர்மலிங்கத்தின் வேண்டுகோள் என்று சொல்லிவிடலாமே!
முகிலகத்திற்கு வந்ததும் கயல்விழியிடம் இச்செய்தியைச் சொல்லிவிட்டான் அருள்மொழி. அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவரது பூரிப்பு அவனை ஒரு கேள்வியைக் கேட்க வைத்தது.
“உங்களுக்கு ஏன் என் மேல இவ்ளோ பாசம்?”
கயல்விழி பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கவும் சிரித்தான்.
“எனக்குத் தெரியும் அத்தை. என்னை இங்கயே தங்க வைக்க நீங்க எவ்ளோ முயற்சி பண்ணுனீங்க, அந்த முயற்சி தோல்வியடைஞ்சு நான் லண்டனுக்குப் போறதுக்கு முன்னாடி எப்பிடியெல்லாம் அழுதீங்கனு ஒவ்வொன்னும் எனக்குத் தெரியும். தர்மலிங்கம் மாமா என்கிட்ட எதையும் மறைக்கல. உங்களுக்கும் என் பேரண்ட்ஸுக்கும் நேரடி உறவு கூட கிடையாதுனு தர்மலிங்கம் மாமா சொன்னார். அப்புறம் ஏன் இவ்ளோ அன்பு?”
கயல்விழி அவனது சிகையைக் கோதிக் கொடுத்தார்.
“என் புருஷனோட ஃப்ரெண்டா தான் எனக்குச் சுந்தர் அண்ணா அறிமுகமானார். ஆனா ஒரு கட்டத்துல என் குடும்பத்தோட இருந்த உறவு அறுந்து போனப்ப எனக்கு அண்ணனா, என் புள்ளைங்களுக்குத் தாய்மாமனா இருந்தவர் உன் அப்பா. எல்லா உறவுலயும் இரத்தத் தொடர்பு இருந்தா தான் அன்பு வரணும்னு அவசியமில்ல அருள்.”
“எனக்கு ஆதி பிறந்து வருஷமாகியும் மீனாவுக்குக் குழந்தை இல்ல. அவ மனசு நொந்து அழாத நாளே கிடையாது. அவ உண்டானதும் அவளை விட நான் அதிகமா சந்தோஷப்பட்டேன்டா. அவ பொண்குழந்தை வேணும்னு அவ்ளோ ஆசைப்பட்டா. அந்தக் குழந்தைக்கு நானும் அவளும் தேர்ந்தெடுத்தப் பேர்தான் வானதி. ஆனா நீ பையனா பொறந்துட்ட, அதனால அருள்மொழினு வச்சுட்டோம். ரொம்ப நாள் உனக்கு ஜடை பின்னி பூ வச்சு மீனா அழகு பாத்திருக்கா. ப்ச்! என்னமோ ஆரம்பிச்சு என்னமோ சொல்லிட்டிருக்கேன் பாரு.”

தலையிலடித்துக் கொண்டவரிடம் பேச அவனது குரல் நாண்கள் ஒத்துழைக்கவில்லை.
அவனுக்கு ஜெயசந்திரனைப் பிடிக்காது. அவரது அதீத அன்பைப் பெற்றவள் என்பதாலும் ஒரு காலத்தில் அவள் செய்த சின்ன காரியத்தால் பெரும் அனர்த்தம் நேர்ந்ததாலும் வானதியையும் சுத்தமாகப் பிடிக்காது. ஏனோ அவனுக்கு ஆதித்யனையும் கயல்விழியையும் விரோதிக்கத் தோன்றியதில்லை.
ஆதித்யனிடம் பெரிதாகப் பாசம் இல்லையென்றாலும் மரியாதை உண்டு. ஆனால் இப்போது அவனையும் எதிர்வரிசையில் வைக்க வேண்டிய சூழல். அவனைத் துணை முதலமைச்சராக்குவதற்கு ஜெயசந்திரன் திட்டம் போட்டதுதான் இதற்குக் காரணம்.
அருள்மொழியைப் பொறுத்தவரை ஜெயசந்திரனுக்கு யாரை எல்லாம் பிடிக்குமோ அவர்கள் எல்லாம் அவனுக்கு விரோதிகள். விதிவிலக்கு கயல்விழி மட்டுமே!
“உனக்கு ஜெட்லாக் எல்லாம் ஆகாதாடா? உக்காந்து கதை பேசிட்டிருக்க?” கயல்விழி கேலி செய்ய,
“அதெல்லாம் ஆகாது அத்தை. உங்க கூடப் பேசணும்னா சலிப்பே தட்டாது எனக்கு. ஆன்ட்டி மெகனும் உங்களை மாதிரிதான்” என்று லண்டன் கதையைப் பேச ஆரம்பித்தான் அவன்.
அவனால் இலகுவாக உரையாட முடிந்ததில் மனம் இலேசாகியிருந்தது. பேச்சு அவனுடைய நண்பர்களைப் பற்றித் தாவியது.
“அச்சு பையன் கேரளா போறானாம். டைரக்டா அங்க இருந்து தேன்மலைக்கு வந்துடுறதா சொன்னான். இலக்கியாவும் சஞ்சயும் மிச்சம் இருக்குற வேலைகளை முடிச்சிட்டு ஓடி வந்துடுவோம்னு பிராமிஸ் பண்ணிருக்காங்க. நீ ஒருத்தனாச்சும் எங்களோடவே வர்றியே.” என்றவர் அவனது நெற்றித் தழும்பைப் பார்த்தபடி சங்கடமானக் குரலில் வினவினார்.
“ஏதாச்சும் ஞாபகம் வந்துச்சா அருள்?”
தலையில் அடிபட்டு அனைத்தும் மறந்து போய்விட்டதெனச் சொன்ன பன்னிரண்டு வயது அருள்மொழி நினைவுக்கு வந்தான் அவருக்கு. இங்கிருந்து செல்லும் முன்னர் கூட அவனது குடும்பத்தினரின் புகைப்படங்கள், மூன்று நண்பர்களை மட்டுமே அவனது ஞாபகத்தில் திரும்பக் கொண்டுவர முடிந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.
மற்ற அனைவரைப் பற்றிய நினைவுகளும் மறந்துவிட்டன. தர்மலிங்கம்தான் உடனிருந்து யார் யார் என்ன உறவெனச் சொல்லிப் புரியவைத்தார் அவனுக்கு. என்றேனும் ஒரு நாள் முழுவதுமாக அவனுக்கு நினைவு திரும்பிவிடுமென வானதியைப் போலவே கயல்விழியும் நம்பினார்.
அருள்மொழி உதட்டைப் பிதுக்கினான். ஞாபகம் வரவில்லை என்று அவன் தனியாகச் சொல்லவேண்டிய அவசியமில்லையே! கயல்விழியின் முகத்தில் கலக்கம்.
“சரி விடு! ஞாபகம் வரணும்னு விதி இருந்தா கண்டிப்பா ஒரு நாள் எல்லாமே ஞாபகம் வரும்டா. வானதிக்குத்தான் அதுல பெரிய வருத்தம். அவளை நீ மறந்துட்டனு புலம்பாத நாளில்ல.”
கயல்விழியுடனான உரையாடலில் நேரம் போனதே தெரியவில்லை அவனுக்கு. அன்று மாலையே அட்சரன் அவனுக்காகப் பேசி முடித்திருந்த கார்ப்பரேட் அலுவலக பாணி கட்டிடத்தைப் பார்வையிட்டான்.
“இந்தக் கேஸ் முடியுற வரைக்கும் யூஸ் பண்ணிக்க இவ்ளோ பெரிய ஆபீஸ் தேவையா?” என அட்சரன் வினவ,
“நான்தான் சொன்னேனே! நான் ஒரு பிளான் வச்சிருக்கேன்னு” என மீண்டும் பூடகமாகக் கூறினான் அருள்மொழி.
“பிளான்ல ஜெயசந்திரன் இருக்காரா?”
சின்னதொரு முறுவல் அருள்மொழியிடம். அட்சரனிடமும் அந்த முறுவல் தாவியது.
“சிரிக்குறனா இருக்கார்னு தான் அர்த்தம்” என அவனே புரிந்துகொண்டான்.
“இதுல உன் நண்பியும் அடக்கம்” என்றான் அருள்மொழி நமட்டுச் சிரிப்போடு. அட்சரன் இடுப்பில் கையூன்றி முறைக்கவும் அவனது கன்னத்தைப் பற்றி இழுத்தான் அருள்மொழி.

“அவளை ஹர்ட் பண்ணுற மாதிரி எதையும் செய்யாத. அது நம்ம யாருக்குமே நல்லதில்ல” என எச்சரிக்கவும் செய்தான்.
“நீ மிரட்டுனதுக்கு நான் பயந்துட்டேன்டா” என்ற அருள்மொழி மறுநாள் காலையில் அலுவலகத்திற்கு வரப்போவதாகச் சொன்னான்.
“எனக்கு இந்த பூஜை, சாமி நம்பிக்கை எல்லாம் இல்ல. அதனால திறப்புவிழா பூஜைனு எதையும் பண்ணுற ஐடியா இல்ல. நாளைக்கு மானிங் அட்வகேட் விக்ரம் மெஹ்ரா வர்றார். ஒரு லீகல் நோட்டீஸ் அனுப்பவேண்டியது இருக்கு. லோக்கல் பார்ட்டிகளுக்குத் தான். சோ எனக்கு அவகாசமும் இல்ல” என்றான்.
நண்பர்கள் இருவரும் அலுவலகத்திற்குத் தேவையான மேஜை நாற்காலிகள், அவசர இணைய இணைப்புக்கான பொருட்களை மட்டும் வாங்கி வைத்தார்கள்.
அன்றிரவு முகிலகத்திற்கு அவன் வந்தபோது வானதியும் வீட்டில் இருந்தாள். இரவுணவின் போது யாரும் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.
சாப்பிட்டுவிட்டுத் தனது அறைக்கு வந்து சேர்ந்த அருள்மொழி அகத்தியனிடம் மொபைலில் சாட் செய்து கொண்டிருந்தான்.
“டேய் தம்பி! நாளைக்கு ஈவினிங் நீ ஃப்ரீயா இருந்தா சொல்லு. நாம பேசணும்.”
“என்னாச்சுணா? எதுவும் பிரச்சனையா?”
“இது முக்கியமான விவகாரம்டா. உன்னைத் தவிர வேறு யார்கிட்டவும் சொல்ல முடியாது. ஆனா போன்ல பேச வேண்டாம். சமீபகாலமா என் மொபைல் போன் பேச்சை யாரோ ஒட்டு கேக்குற மாதிரி தோணுது. நேர்ல பேசிக்கலாம்” என்றான் அகத்தியன்.
அவனிடம் சாட் செய்து கொண்டிருந்தபோதே அறைக்கதவு தட்டப்படத் திறந்தான் அருள்மொழி. கையில் மொபைலுடன் நின்று கொண்டிருந்தாள் வானதி. அவளது கவனம் தொடுதிரையில் குவிந்திருந்தது.
‘ஆதர்ஷிடம் சாட் செய்கிறாள் போல’ அருள்மொழியின் மனதுக்குள் பொருமல்.
“என்ன?” உள்ளே வரவிடாமல் கதவினருகில் வைத்தே பேசினான்.
“எனக்கு உன் மோதிரவிரல் சைஸும், உன் ஷர்ட் சைஸும் வேணும் அருள்.”
“எதுக்கு?”

“ஆதர்ஷ் அம்மா கேக்க சொன்னாங்க. கல்யாணத்துல மாப்பிள்ளை வீட்டுல இருந்து பொண்ணோட வீட்டுல அண்ணன் முறை உள்ளவங்களுக்கு மோதிரமும் டிரஸ்ஸும் மேடையில வச்சு குடுக்குறது அவங்க வழக்கமாம். ஆதியண்ணாவோட அளவு நேத்தே குடுத்தாச்சு. ஆன்ட்டி நேத்துதானே உன்னைப் பாத்தாங்க. அதான் கேக்க சொன்னாங்க” என்றாள் அவள்.
அருள்மொழிக்குக் காரணமின்றி கடுப்பானது.
“எனக்கு எந்த மோதிரமும் வேண்டாம். கிளம்பு” என விரட்ட முயன்றவனை ஆயாசமாகப் பார்த்தாள் அவள்.
“ஏதோ முறைனு சொல்லுறாங்க. குடுத்தா என்னவாம்?”
“நான் உனக்கு அண்ணனா? அவங்க கேட்டாங்கனா நீயும் வந்து லூசு மாதிரி நிக்குற. அவன் என் அண்ணன் இல்ல, அண்ணன் முறையும் இல்லனு சொல்லவேண்டியதுதானே?”
வானதி அவனை ஏற இறங்கப் பார்த்தாள்.
“என்ன பார்வை உனக்கு?” அதற்கும் சீற்றம் தான் அவனிடம்.
“அப்ப நீ எனக்கு யாரு? ஃப்ரெண்ட் இல்லனு சொல்லிட்ட. இப்ப ஆன்ட்டி ஒன்னு யோசிச்சு கேட்டாங்கனு சொன்னா அதுக்கும் கத்துற. உன் மைண்ட்ல என்னதான் ஓடுது அருள்?”
நிதானமாகக் கேட்டவளை இறுகிய தாடையோடு முறைத்தான் அவன்.
“ஒரு மண்ணும் ஓடல. உன்னை வச்சு வர்ற எந்தப் பொருளும் எனக்குத் தேவையில்ல. அந்தம்மா கிட்ட நீயே சொல்லிடு.”
“ஆன்ட்டி தப்பா எடுத்துப்பாங்க அருள். புரிஞ்சிக்க.”
“உன் வருங்கால மாமியார் மனசைக் குளிரவச்சு எனக்கென்ன ஆகப்போகுது? உனக்கும் எனக்குமே சம்பந்தமில்லனு சொல்லுறேன். நீ எவனோ ஒருத்தனோட அம்மா தப்பா எடுத்துப்பாங்கனு கதை சொல்லுற. யார் என்ன நினைச்சாலும் எனக்கு அதைப் பத்தி கவலை இல்ல. ஒழுங்கா போயிடு. இல்லனா இன்னும் ஏதாச்சும் சொல்லிடுவேன்.”
கடுகடுவெனச் சொல்லிவிட்டுக் கதவை அவள் முகத்தில் அறையாதக் குறையாய்ச் சாத்தினான் அருள்மொழி. வானதிக்கு வந்த கோபத்தில் அவனை வார்த்தையால் கூறு போட்டிருப்பாள். ஆனால் அவனுடனான நட்பை மதிக்கிற ஒரே காரணத்தால் பல்லைக் கடித்துக்கொண்டு இடத்தைக் காலி செய்தாள்.

அருள்மொழி படுக்கையில் வந்து அமர்ந்தவன் “நான் இவளுக்கு அண்ணனா? யாரோ கேட்டாலும் இவளுக்கு அறிவில்ல?” என்று புகைய ஆரம்பித்தான் மானசீகமாக.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

