“எல்லாவற்றையும் உதறிவிட்டு வந்தவள் என்று என்னைப் பழித்தாலும் பரவாயில்லை, இனி உனக்காக இந்த உலகம் முழுவதையும் உதற நான் தயார். என் தற்பெருமைகளை உன் காலடியில் சமர்ப்பித்துவிட்டேன், இனி என் அடையாளத்தின் ஒற்றை முகவரி உன் தோள் மட்டுமே!”
-நியதி
கருப்பு வண்ணத்தில் காட்டன் பேண்டும் டஸ்டி பிங்க் நிறத்தில் லினன் சட்டையும் அணிந்து நீளமான கூந்தலை ஹாஃப் அப் ஹேர்ஸ்டைலாக மாற்றியபடி கண்ணாடி முன்னே நின்ற மனைவியை மோவாயில் விரலால் வருடியபடியே சற்று தள்ளி நின்று நோட்டமிட்டுக்கொண்டிருந்தான் நிலவன்.
இங்கே வந்து இரு நாட்களாகின்றன. பகலில் புடவை, இரவானால் காட்டன் இரவு உடை என அணிபவள் இன்று பகலில் பேண்ட் – சட்டை சகிதம் தயாராவது, அதுவும் பிறந்தகத்துக்குச் செல்ல இந்த உடையலங்காரத்தில் தயாராவதில் ஏதோ உள்கூத்து உள்ளதாகவே அவனது மனம் கருதியது.
அவன் தன்னை யோசனையோடு பார்ப்பது நியதிக்கு மட்டும் தெரியாதா என்ன?
“என்னாச்சு உங்களுக்கு? ரொம்ப நேரமா என்னையே பாத்துட்டிருக்கீங்க. டூ யூ ஹேவ் எனி ரொமாண்டிக் ஐடியா? ம்ம்?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
புருவத்தை உயர்த்தி குறும்பாய் வினவியவளுக்குக் கண்கள் சுருங்க அவன் காட்டிய அதிருப்தியே பெரும் திருப்தியாய்!
“நான் இருக்குற மனநிலைக்கு ரொமாண்டிக் ஐடியா எல்லாம் சாத்தியம்னு தோணுதா உனக்கு? நான் உன்னோட ட்ரெஸ்ஸைப் பாத்தேன்” என்றான் அவன் சுள்ளென்று.
நியதி கண்ணாடியிலிருந்து கண்களை அகற்றி அவன் பக்கம் திரும்பினாள். தன்னைத் தன்னையே மேலும் கீழுமாகப் பார்த்துக்கொண்டாள்.
“இந்த ட்ரெஸ்ஸுக்கு என்ன? நல்லாதானே இருக்கு?”
“நல்லா இல்லனு நானும் சொல்லலையே. இப்ப நாம போறது உங்க வீட்டுக்கு. அங்க….”
“அது ஒண்ணும் என் வீடு இல்ல” சூடாய்ப் பதிலடி வந்தது அவளிடமிருந்து.
நிலவன் உடனே இரு கைகளையும் சரணாகதி போலத் தூக்கினான்.
“சரிம்மா! என் தங்கச்சியோட புகுந்த வீட்டுக்கு… போதுமா? அங்க போறப்ப நல்லா ஒரு புடவை கட்டிக்கலாமே?” என்று ஆற்றாமையோடு அவன் வினவ
“அங்க புடவை கட்டிட்டுப் போய் யார் மனசையும் குளிரவைக்கணும்னு எனக்கு எந்தத் தேவையும் இல்ல நிலன். நீங்க கூப்பிட்டதால நான் வர்றேன். இப்பிடித்தான் வருவேன். இஷ்டம்னா கூட்டிட்டுப் போங்க. இல்லனா தனியாப் போங்க” என வேதாளம் முருங்கை மரம் ஏறவும் நிலவன் மேற்கொண்டு எதுவும் சொல்லவில்லை.
பூபேந்திரன் மகளைப் பார்க்க ஆசைப்பட்டார் என முந்தைய நாளிரவில் பிரகாஷிடம் பேசியபோது அவனும் குறிப்பிட்டிருந்தான். இப்போது ஏதேனும் சொல்லிவைத்தால் இவள் பிடிவாதமாய் அங்கே வர மறுத்துவிடுவாள். சும்மாவே என்ன சாக்குப்போக்கு சொல்லிப் பயணத்தைத் தவிர்க்கலாமெனத் திட்டம் போடுகிறாள்.
அவளது ஆடை அலங்காரம் எல்லாம் முடிந்ததும் இருவரும் கிளம்பினார்கள்.
“ஏதாச்சும் கோபத்துல சொன்னாங்கனா முகத்தை முறிக்குற மாதிரி பேசிடாத நியதி. என்ன இருந்தாலும் பெத்தவங்களாச்சே!” என்று வசந்தா எடுத்துச் சொல்ல
“ஏன் அத்தை உங்க சம்பந்தியம்மாக்கு ரெண்டு கொம்பும் ஒரு வாலும் முளைச்சிருக்கா? என்னை ஏதாச்சும் பேசுனாங்கனா அதுல ஒரு கொம்பையாச்சும் உடைச்சுப் போட்டுட்டுத்தான் வருவேன்” என்று பொங்கினாள் நியதி.
வைத்தியலிங்கம்தான் இடையில் புகுந்து மருமகளை அமைதியாக்கினார்.
“இத்தனை வருஷம் கழிச்சுப் போற. ஏன்மா கோபத்தோட படியேறணும்? இங்க வர்றப்ப சந்தோஷமா வந்தல்ல அதே மாதிரி மனநிலையோட போம்மா”
“இந்த வீடு, இங்க இருந்த தருணங்கள் எல்லாம் எனக்குச் சந்தோஷத்தைக் குடுத்துச்சு மாமா. அங்க அப்பிடி இல்லையே. உங்களுக்குத் தெரியாததா?”
“சரிம்மா! சரிம்மா! நிலவன் இருக்கான்ல, உன்னை ஒரு சொல் சொல்ல விட்டுடுவானா?”
“அவர் கண்ணுலதான் பெரியவங்களை மதிச்சே ஆகணும்னு கருப்புத்துணியைக் கட்டிருக்காரே. சரி மாமா! அவங்க பேசலனா நானும் பேசமாட்டேன். எதுவும் சொன்னாங்கனா பதிலடி குடுக்காம வரமாட்டேன்”
முடிவாய்ச் சொல்லிவிட்டு ஜீப்பில் ஏறியவள் டிரைவர் இருக்கையில் அமர பெற்றோரிடம் சொல்லிக்கொண்டு ஜீப் அருகே சென்றவன் கண்ணாடி அருகே குனிந்தான்.
“நான் எங்க உக்காருறது?”
“பக்கத்து சீட் காலியாதான் இருக்கு. ரொம்ப ஆசையா இருந்தா என் மடியில்கூட உக்காருங்க”
இதற்கு மேல் அவனா பேசுவான்? சுற்றி வந்து அவளருகே கிடந்த முன்னிருக்கையை ஆக்கிரமித்தான்.
நியதி அவனைப் பார்த்தபடியே சாவியைத் திருகினாள். மாபெரும் பிளிறலுடன் ஜீப் கிளம்ப அவளுக்கு உற்சாகமாகிவிட்டது.
“எப்ப வாங்குனீங்க இந்த ஜீப்? நல்லா இருக்கு ஓட்டுறதுக்கு”
நிலவன் அனாயாசமாக ஜீப்பை ஓட்டிச் செல்பவளைச் சின்னப் புருவச்சுருக்கத்தோடு பார்த்தான்.
அதைக் கவனித்தவள் “என்ன? ஒரு பொம்பளை ஓட்ட நான் உக்காந்து வரணுமானு மேல் ஈகோ இடிக்குதா?” என்று குத்தலாய் வினவ
“நான் அப்பிடி நினைக்குறவனா? உனக்கு இன்னைக்குக் காலையிலயே மூட் அவுட். யாரைக் கடிக்கணும்னு திரியுற. நான் ஒருத்தன் வாட்டசாட்டமா பக்கத்துல உக்காரவும் வசதியா போச்சுனு கடிக்குற.” என்றான் நிலவன் அவளுக்குக் குறையாத காட்டத்தோடு.
“பின்ன ஏன் புருவம் அப்பிடி நெறியுது உங்களுக்கு?”
“இது ஆச்சரியத்தோட எதிரொலி. நல்லா ட்ரைவ் பண்ணுறனு மெச்சுதலாப் பாத்தது ஒரு குத்தமா?”
திரும்பி அமர்ந்துகொண்டவனின் குரலில் ஆயாசம் கொப்புளித்தது.
நியதி சத்தமாகச் சிரித்துவிட்டாள்.
“நீங்க ஒவ்வொரு தடவையும் உங்க படிப்பை வேலையை நான் குறைவா நினைக்குறதா சொல்லுறப்பவும் எனக்கும் இப்பிடித்தான் இருக்கும் நிலன். நம்ம ரெண்டு பேருக்குள்ளவும் ஒரு மனக்குறை இருக்கு. அதை இன்னொருத்தர் குறைபாடா நினைக்குறதா நாமளே கற்பனை பண்ணிக்குறோம். நான் மேல் ஈகோனு சொன்னது உங்களுக்குச் சுருக்குனு இருக்குல்ல, அதே மாதிரிதான் நீங்க ஒவ்வொரு தடவையும் உங்க படிப்பை நான் குறைவா நினைச்சேன்னு சொல்லுறப்பவும் எனக்கு வலிக்குது. இனி இது மாதிரி நாம ரெண்டு பேரும் பேசிக்க வேண்டாம்”
அவள் நீளமாகச் சொல்லிக்கொண்டே போக அவனோ கண்களை மூடி இரு கைகளையும் மார்பின் குறுக்கே கட்டிக்கொண்டு கண்மூடி இருக்கையில் சாய்ந்துவிட்டான். அதாவது பதில் சொல்ல விருப்பம் இல்லையாம்!
“சொல்லலைனா போயேன்!” என்று வாய்க்குள் முணுமுணுத்தவள் அந்த மஹிந்திரா தார் ஜீப்பை இலாவகமாக ஆலங்குளத்தை நோக்கிச் செலுத்தினாள்.
கண்மூடிக் கிடந்தவனின் மனதில் ஆயிரம் கவலைகள் என்றால் கண்களைத் திறந்து சாலையைக் கவனித்து வண்டியை ஓட்டுவதில் மும்முரமாய் இருந்தவளின் மனதிலோ ஆயிரம் குறைகள்!
ஒருவழியாய் நிலவனின் மஹிந்திரா தார் நியதியின் பிறந்த வீட்டை வந்தடைந்தது. கார்களை நிறுத்தத் தனியாய்ப் போடப்பட்டிருந்த ஷெட்டில் ஜீப்பை நிறுத்திவிட்டு இறங்கினாள் நியதி. கூடவே நிலவனும்.
அவளது கண்கள் மெல்லிய ஈரக்கசிவோடு பிறந்த வீட்டை ஏறிட்டன. தென்னைமரங்கள் கூடுதல் உயரமாய் வளர்ந்திருக்கின்றனவோ!
நிலவன் அவளது கையைப் பற்றவும் திடுக்கிட்டவள் வெகு கவனமாய்த் தனது விழிகளில் இருந்த நீர்ப்படலம் அவனது கண்களுக்குத் தெரியாதவண்ணம் பார்வையைத் திருப்பிக்கொண்டாள்.
“நான் பாத்துட்டேன்” என்று அவன் சொல்லவும் சட்டெனத் திரும்பி அவனை முறைத்தாள்.
“நம்மவங்கனு நினைக்குறவங்க முன்னாடி கண்ணீர் விடுறது கௌரவக் குறைச்சல் இல்ல” என்று அவளுக்குக் குட்டு வைக்கவும் அவன் தவறவில்லை. சொன்னானேயொழிய அவளது கையை விடவில்லை நிலவன்.
இருவருமாய்ச் சேர்ந்து வீட்டுக்குள் நுழைந்தபோது முதலில் எதிர்பட்டவள் நிலா. அவளுக்கு என்ன எதிர்வினையாற்றுவதெனத் தெரியவில்லை.
நியதியை மேலிருந்து கீழாக ஒருமுறை பார்த்தவள் “ம்ம்! கூட்டிட்டுப் போ!” என்று தனது இரட்டைச் சகோதரனிடம் கைகாட்டினாள்.
‘இவள் யார் என்னை அழைத்துச் செல்ல அனுமதி வழங்குவதற்கு?’ என்று புகைந்துகொண்டே கணவனோடு தந்தையின் அறைக்குச் சென்றாள் நியதி.
உள்ளே பேச்சுக்குரல் கேட்டது. அவளது அன்னை விஜயாவும் பூபேந்திரனும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
“நாம செய்ய வேண்டிய கட்டு இருக்கே! கல்யாணமாகி மூணே நாள்ல போயிட்டானு எதையும் செய்யல. இப்ப செய்யாம விட்டா நல்லா இருக்காது. மருமக நம்மளைப் பத்தி என்ன நினைப்பா?”
விஜயா ஏதோ செய்முறைகள் பற்றிக் குறிப்பிடுகிறாரென இருவருக்கும் புரிந்தது. நிலவன் தொண்டையைச் செருமியதும் இரு பெரியவர்களும் திரும்பிப் பார்த்தார்கள். பூபேந்திரனின் கண்களில் அதீத மகிழ்ச்சியும் கண்ணீரும் நிரம்பிவிட விஜயாவோ தனது நெகிழ்ச்சியை மறைத்தவராய் மகளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தார்.
நியதி வெகு கவனமாய் அவரைத் தவிர்த்துவிட்டுப் பூபேந்திரனை மட்டும் நலம் விசாரித்தாள்.
“ஸ்டென்ட் வச்சிருக்காங்கனு நிலன் சொன்னார். எப்பிடி இருக்குப்பா இப்ப?”
மகள் நலம் விசாரித்ததும் பூபேந்திரன் உடைந்து போய்விட்டார். கண்ணீர் பெருக்கெடுக்க நியதியின் புஜத்தை இடித்தான் நிலவன்.
“போய் பேசு!” என்று காதருகே கிசுகிசுத்தான். அவளும் கண்கள் கலங்கத் தந்தை அருகே போய் நின்றாள். உடனே அவளது கைகளைப் பற்றிக்கொண்டார் பூபேந்திரன்.
“எங்க உன்னைப் பாக்காமலே போய் சேர்ந்துடுவேனோனு நினைச்சேன்ல. அப்பிடி என்ன வைராக்கியம் உனக்கு? ஒரு போன்கூட பண்ணாத அளவுக்கு?”
அவர் அழுகையினூடே கேட்க நியதியும் உடைந்துபோனாள்.
“பெரியவங்க நீங்க எல்லாருமா சேர்ந்துதானே என்னை வேண்டாதவளா ஒதுக்குனீங்க. பழைய போனுக்கு ஒரு தடவையாச்சும் ஊருல இருந்து கால் வராதானு நான் பாக்காத நாள் கிடையாது. பெரியவங்களுக்கு இல்லாத பக்குவம் எனக்கு இருக்கணும்னு எதிர்பாக்குறதே அநியாயம். அப்புறம் இந்த வைராக்கியம், குத்தலான பேச்சு எல்லாம் உங்க பொண்டாட்டிக்கு மட்டும்தான் சொந்தமா?”
அழுதபடியே கொந்தளிப்புடன் தந்தையிடம் வினவியவள் இடையே அன்னையைக் கடித்துத் துப்பவும் தவறவில்லை. விஜயா கல்போல அமர்ந்திருந்தார். மனமெங்கும் சீற்றம்! வெளிக்காட்ட விருப்பமில்லை.
பூபேந்திரன் மகளைத் தோளோடு சாய்த்துக்கொண்டார். அதை விஜயா வினோதமாய்ப் பார்த்தார். அதையும் நியதி கவனித்துவிட்டாள்.
‘வயது வந்த பெண் பிள்ளை தந்தையே ஆனாலும் ஆணைத் தொட்டுப் பேசக்கூடாது’
இந்த வீட்டில் அவளுக்குப் போடப்பட்ட விதிகளில் முக்கியமான விதி இது. அவளது துரதிர்ஷ்டம் அவள் பன்னிரண்டு வயதிலேயே பூப்பெய்திவிட, தந்தையின் கையைப் பிடித்து நடக்கக்கூட அந்த வீட்டில் தடைதான்.
இப்போது வேண்டுமென்றே தந்தையின் தோளில் சாய்ந்துகொண்டவள் அன்னையைச் சவாலாய்ப் பார்த்தாள். விஜயாவிடம் பெருமூச்சே பதிலாய்!
பூபேந்திரனிடம் பழங்கதை பேசி நோகடிக்கப் பிரியமில்லை நியதிக்கு. தனது படிப்பு, சென்னை வாழ்க்கை, நட்பு பற்றிச் சுருக்கமாகச் சொன்னாள்.
நிலவன் அங்கே வந்தது, தனக்கும் அவனுக்குமான உரையாடலைச் சொல்லிவிட்டு “நான் வந்தது நிலனுக்காக மட்டும்தான்பா. அவர் சொன்னதாலதான் நான் இங்க வந்தேன். இல்லனா இந்த வீட்டுப்படி ஏறணும்னு எனக்குத் தோணவே தோணாது” என்றாள்.
விஜயா மெதுவாய் எழுந்தார்.
“மருமகன் வந்திருக்கார்ல. சமையல் ஆச்சானு பாத்துட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு வெளியேறினார்.
அவர் போவதையே வெறித்துப் பார்த்த மகளிடம் “அவளுக்கும் உன் மேல பாசம் இருக்கு. ஆனா வெளிக்காட்டிக்க மாட்டா” என்றார் பூபேந்திரன்.
“பாசம் என்ன அவ்ளோ மோசமான விஷயமா? அதை வெளிக்காட்ட ஏன் இவ்ளோ யோசிக்கணும்? மதினிகிட்ட மட்டும் வெளிக்காட்டப் பிடிக்குமோ?”
நிலாவை இடையே அவள் இழுக்கவும் நிலவன் மனைவியை அழுத்தமாய்ப் பார்த்தான். உடனே நியதி அமைதியாகிவிட்டாள்.
பின்னர் தந்தையும் மகளும் பேசிக்கொண்டார்கள். இனி இங்கேதான் இருக்கப்போவதாகச் சொன்னாள் நியதி. பூபேந்திரனுக்கு மகிழ்ச்சி! இடையே நிலா சாப்பிட வருமாறு அவர்களை அழைத்தாள்.
மாமியாரும் மருமகளும் அசைவத்தில் அசத்தியிருந்தார்கள். நிலவனின் அருகே அமர்ந்திருந்த நியதியின் இலையில் முட்டையும், கோழி வறுவலும் வைக்கப்பட அவளது புருவங்கள் உயர்ந்தன.
பரிமாறியவள் நிலாதான்.
“ஏன் மதினி நான் பேண்ட் ஷர்ட் போட்டதால அடையாளம் தெரியலையா உனக்கு?” என்று நியதி கேட்கத் திருதிருவென விழித்தாள் அவள்.
விஜயா மகளைக் காட்டமாய் முறைத்தார். அவரைப் பார்த்தவளின் பார்வையில் ஏளனம் தெறித்தது.
“இல்ல, என் மூஞ்சில மீசை தாடி முளைச்சிருக்கா?” என்று கிண்டலாய் வினவினாள்.
பூபேந்திரன் சங்கடமாய் உணர்ந்தவர் “சாப்பிடுல! உனக்குச் சிக்கன் பிடிக்கும்தானே?” என்று சொல்லவும் நியதி சாப்பிட ஆரம்பித்தாள்.
ஒவ்வொரு வாய் சோறு இறங்கும்போதும் அவ்வளவு மனப்புகைச்சல் அவளுக்கு. சாப்பிட்டுக் கைகழுவிய பிற்பாடு அண்ணன் மகள் துயில் கலைந்து வரவும் அவளை அள்ளிக் கொஞ்சினாள்.
“உனக்கு அத்தை மாதிரியே புருவம் இருக்கு.” என்று குழந்தையின் புருவத்தை நீவிவிட்டாள் சிரிப்போடு.
அப்போது நிலா அவளுக்குச் சாப்பாடு கொண்டுவர, பாத்திரத்தை வாங்கிப் பார்த்தாள் நியதி. அதில் பருப்பும் நெய்யுமாய் இருக்கவும் “உன் மாமியார் வேலையா?” என்று இறுக்கத்தோடு வினவினாள்.
“சிக்கன் சூடு நியதி. பாப்பாக்கு முட்டை இன்னும் குடுக்க ஆரம்பிக்கல”
“சமாளிக்காத மதினி. எங்க ஆடிட்டர் ஆபீஸ்ல பகவதினு ஒரு மேம் இருக்காங்க. அவங்க பேத்திக்கு ஒரு வயசு ஆனதும் நான்-வெஜ் பழக்க ஆரம்பிச்சாச்சு. இன்னும் நீ யார் மனசை ஜெயிக்க இப்பிடி நாடகம் போடுற? இந்த வீடு, இதோட அதிகாரம் எல்லாம் உனக்குத்தான். உன் பிள்ளையைக் கெதியா வளக்கப் பாரு. நல்லவளா நாடகம் போட்டு இனி நீ சாதிக்க எதுவுமில்ல. ஹான், உன் மாமியார் நகை ஒரு முப்பது பவுன் இருக்கும். கவலைப்படாத, நான் அதுல பங்குக்கு வரமாட்டேன்.”
“நியதி…”
நிலவனின் குரல் கேட்டதும் விருட்டென எழுந்தாள் அவள். குழந்தையை நிலாவிடம் கொடுத்தாள்.
“நாம போகலாமா? வந்தாச்சு, பேசியாச்சு, சாப்பிட்டாச்சு” என்று இல்லாத தூசியைத் தோளிலிருந்து தட்டிவிட்டுக்கொண்டாள் அவள்.
அவன் பதில் சொல்லவில்லை. அவளது கையைப் பற்றிக்கொண்டான்.
“ட்வின் சிஸ்டரைச் சொன்னதும் கோபம் பொங்குதோ?” அவன் காதருகே சீறியவள் நிலவன் இழுத்த இழுப்புக்குக் கூடத்தில் போய் நின்றாள்.
அங்கே தந்தையிடம் விடைபெற்றாள்.
“அடிக்கடி வரணும்” என அவர் சொல்ல
“முயற்சி பண்ணுறேன்பா. நான் வேலை தேடணும். ஃபைனலுக்குப் படிக்கணும். டைம் இருந்தா வருவேன்” என்றாள் இயல்பாக.
“அடுத்த தடவையாச்சும் பொண்ணா லட்சணமா வந்தா நல்லா இருக்கும். பக்கத்துவீட்டு சந்தனக்கா அதுக்குள்ள இது என்ன ஆம்பளைப் பய கணக்கா ட்ரெஸ்ஸுனு மூணு தடவை பின்வாசல் தோட்டத்துக்கு வந்து ஆவலாதி பேசிட்டா” புகைச்சலோடு ஒலித்தது விஜயாவின் குரல்.
அதில் தணிந்துபோன எரிச்சல் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது நியதிக்கு.
“நான் என்ன ட்ரெஸ் போடணும்னு எனக்கு யாரும் கிளாஸ் எடுக்கவேண்டாம். நான் என்ன அந்தப் பொம்பளையோட புருஷன் காசுல ட்ரெஸ் வாங்கிப் போட்டேனா? இல்ல உங்க புருஷன் காசுல ட்ரெஸ் வாங்கிப் போட்டேனா? நான் உழைச்சுச் சம்பாதிச்ச காசுல எனக்குப் பிடிச்ச மாதிரி போட்டிருக்கேன். என் புருஷனே என்னைக் கேக்கலையாம். தெருவுல போற அக்கா சுக்காக்கெல்லாம் என் ட்ரெஸ்ஸுல என்ன கண்ணுங்கிறேன்?”
பக்கத்து வீட்டுக்குக் கேட்கட்டுமென சத்தமாகவே பேசியவள் மேற்கொண்டு பேசும் முன்னர் அவளது புஜத்தை அழுத்தியது நிலவனின் கரம்.
விஜயாவோ வாயடைத்துப் போனார். அளவுக்கு அதிகமான கட்டுப்பாடும் விதிமுறைகளும் என்றோ ஒரு நாள் வெடித்துச் சிதறுகையில் கட்டுப்படுத்தியவர்தான் அதீதமாய்க் காயமடைவார். அதுதானே உலகநியதி.
“நாங்க கிளம்புறோம் அத்தை”
கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துச் சென்று ஜீப்பின் முன்னிருக்கையில் அவளை அமரவைத்தவன் உள்ளே வந்து அமர்ந்ததும் பெருமூச்சு விட்டான்.
பின்னர் மனைவியைத் திரும்பிப் பார்த்தான். அவளது முகத்தில் எதையோ சாதித்த ஜொலிப்பு. கொஞ்சம் திகைப்பும் கொஞ்சம் ஆயாசமும் மனதில் மையங்கொண்டன.
“ராட்சசி! என்ன ஆட்டம் போட்டுட்டு வந்திருக்க?” என்று சொன்னபோது அவனது குரலில் கோபமில்லை. வியப்பின் சுவடுகள் மட்டுமே!
“நீங்க என்னை வரச் சொன்னீங்க. பேசக்கூடாதுனு சொல்லலை. என் மேல வருத்தப்பட்டு நோ யூஸ்”
“நான் ஒண்ணும் வருத்தப்படல. அவங்க உன் அம்மா. அந்த உறவை மனசுல வெச்சு இனியாச்சும் வார்த்தையைச் சிதறடிக்காத. உன் ஆதங்கம் புரியுது. அதனால மட்டும்தான் நீ பேசுறப்ப நான் உன்னைத் தடுக்கல.”
“நீங்க தடுத்திருந்தாலும் நான் பேசியிருப்பேன் நிலன்”
சட்டென முகத்தில் அறை வாங்கிய உணர்வு நிலவனுக்கு. ஆனால் அது சடுதியில் மறைந்தும் போனது. இதுதான் நியதி என அவனுக்குத் தெரியாதா?
ஜீப்பைக் கிளப்பினான் அவன்.
“நாம அப்பா ரூமுக்குள்ள நுழைஞ்சப்ப உங்க மாமியார் என்ன செய்முறை பத்தி சொன்னாங்க? கண்டிப்பா உங்க ட்வின் சிஸ்டர் உங்ககிட்ட சொல்லியிருக்கும்”
“தாலி பிரிச்சுக் கோர்க்குறது பத்தி”
“தாலியப் பத்திரமா வச்சிருக்கீங்களா?”
அவள் கேட்டதும் திரும்பி அவளை முறைத்தவனின் கண்களில் கோபாக்கினி.
“அதெல்லாம் இருக்க வேண்டிய இடத்துல இருக்கு” என்று தாடை இறுகப் பதிலளித்தான்.
“அது இருக்க வேண்டிய இடம் என் கழுத்து”
“வீட்டுக்குப் போனதும் தர்றேன். கழுத்துல போட்டுக்க”
“நீங்களே போட்டுவிட்டா ஓகே. இல்லனா எனக்கு அது வேண்டாம்”
“ஏன்டி எல்லாத்துக்கும் நொள்ளைநாட்டியம் பேசுவியா?” அயர்ந்துபோனான் நிலவன்.
“கழட்டுனவர் கையால போட்டுக்கிட்டாதான் எனக்குக் கௌரவம். இல்லனா எனக்கு அது வேண்டாம். என்னை மாதிரி ஒரு பொம்மை செஞ்சு அது கழுத்துல அந்தக் கயிறைப் போட்டு தாலி பிரிச்சுக் கோர்க்குற ஃபங்ஷன் செய்யச் சொல்லிக்கோங்க” என அசராமல் பதில் சொன்னவள் வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட நிலவன் தன் கையை ஸ்டீயரிங் வீலின் மையத்தில் குத்திக்கொண்டான்.
“கை வலிக்கப் போகுது”
“வலிச்சா உனக்கு என்ன? ரெண்டு வருஷமா மனசு அவ்ளோ வலிச்சுது. அதெல்லாம் உனக்குத் தெரியுமா? வந்துட்டா, அக்கறை மண்ணாங்கட்டியைத் தூக்கிக்கிட்டு”
“சரி! அப்ப இன்னும் நாலு தடவை குத்திக்கோங்க. அந்தக் கண்ணாடில குத்துங்க. அதுல குத்துனாதான் நல்லா வலிக்கும்”
அவனைப்போலவே மார்பின் குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு கண்மூடி இருக்கையில் சரிந்துவிட்டாள் நியதி.
‘முதல்ல வீட்டுக்குப் போனதும் தாலிக்கயிறை இவ கழுத்துல போட்டுவிட்டுடணும். இல்லனா இன்னும் இன்னும் பேசுவா இந்த ராட்சசி’
பொருமியபடியே ஜீப்பை விரைந்து செலுத்தினான் அம்பாசமுத்திரத்துக்கு.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction



