“ஒரு மனுசனுக்கு நம்ம குடுக்குற அதிகபட்ச மரியாதை அவங்களை முழுசா நம்புறது… எனக்கு ஒருத்தர் மேல நம்பிக்கை அவ்ளோ ஈசியா வராது… நம்பாத ஆளுங்களை நான் என்னோட க்ளோஸ்ட் சர்க்கிள்ல சேர்த்துக்கவும் மாட்டேன்… எனக்குனு நான் போட்டு வச்ச வட்டத்துக்குள்ள என் ஃபேமிலி அண்ட் ஃப்ரெண்டுக்கு மட்டும் தான் இடம்… மத்தவங்க அந்த வட்டத்துக்குள்ள இதுவரை நுழைஞ்சது இல்ல… அப்பிடி நுழைஞ்சவங்க ரெண்டே ரெண்டு பேர் மட்டும் தான்… நித்திலா அண்ட் இப்ராஹிம்… இப்ராஹிம் மேல நான் வச்ச நம்பிக்கைய இன்னைக்கு வரைக்கும் அவன் காப்பாத்துறான்… நான் தப்பு செய்யுறப்ப எனக்குப் பாயிண்ட் அவுட் பண்ணி காட்டுறான்… அடுத்து நித்திலா… அவளைப் பத்தி பேசுறதுக்கு எதுவுமே இல்ல… தலையில இருந்து கால் வரைக்கும் ஈகோ மட்டுமே இருக்கிற வினோதப்பிறவி… அவளை நம்புனதுக்குப் பரிசா எனக்கு ஏமாற்றத்தோட டேஸ்டை கத்துக் குடுத்துட்டுப் போனவ”
– கிரிஷ்
காலையில் கண் விழித்த நித்திலாவின் மீது சுள்ளென விழுந்த சூரிய ஒளி விடிந்து நேரமாகிவிட்டது என்பதை உணர்த்த சோம்பல் முறித்தபடி எழுந்தாள்.
இன்னும் பால்கனி கதவு திறக்கப்படவில்லை. கடுப்பு மேலிட எட்டிப் பார்த்தவள் அறைக்குள் அங்குமிங்கும் நடமாடிக்கொண்டிருந்த கிருஷ்ணராஜசாகரை எப்படி அழைப்பது என புரியாமல் பற்களைக் கடித்தாள்.
“இங்க பாத்து தொலையேன்”
கடுப்பில் அவள் கத்தியது டெலிபதியாக அவனை அடைந்ததோ என்னவோ நித்திலாவைக் கவனித்துவிட்டு பால்கனி கதவைத் திறந்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“வெல்கம் பேக்”
நக்கலாகச் சொல்லிவிட்டு இரவு முழுவதும் அவளைப் பால்கனியில் தள்ளியதற்காக மன்னிப்பு கேட்காமல் நடந்தவனின் தலையில் நறுக்கென குட்டலாமா என்று கூட நித்திலாவுக்குத் தோன்றியது.
கவுச்சில் துயின்று கொண்டிருந்த அம்ரித்தைக் கண்டதும் அந்த எண்ணம் மறைந்து போனது.
அவன் சுருண்டு படுத்திருந்த விதத்தைக் கண்டதும் நித்திலாவுக்குக் குற்றவுணர்ச்சி. அதை இன்னும் அதிகப்படுத்துவது போல இருந்தது கிருஷ்ணராஜசாகரின் குற்றம் சாட்டும் பார்வை.
முடிந்தவரை அலட்சியப்படுத்தியவள் குளியலறைக்குள் புகுந்துகொண்டாள். அடுத்த நொடியே வெளியே வந்தவள்

“இங்க என்னோட ப்ரஷ் டூத்பேஸ்ட் வச்சிருந்தேன்… எங்க போச்சு?” என்று கிருஷ்ணராஜசாகரிடம் கேட்க
“ரெண்டுக்கும் ரெக்கை முளைச்சு பறந்து போய் குப்பைத்தொட்டிக்குள்ள விழுந்துடுச்சு” என்றான் மொபைலை நோண்டியபடி அலட்சியமாக.
நித்திலா வேகமாக ஓடிச்சென்று வாஷ்பேசினுக்குக் கீழே இருந்த குப்பைத்தொட்டியின் விசையை அழுத்த அதற்குள் அவளது பற்பசையும் ப்ரஷூம் பரிதாபமாக விழுந்து கிடந்தன.
இப்போது அவள் எப்படி பல் துலக்குவாள்? கடுப்பு மேலிட வெளியே வந்தவள்
“நீங்க தானே என் ப்ரஷையும் பேஸ்டையும் குப்பைத்தொட்டில போட்டிங்க? அது ரெண்டும் உங்களுக்கு என்ன பாவம் பண்ணுச்சு?” என்று அவன் கழுத்தை நெறிக்காத குறையாக கேட்க கிருஷ்ணராஜசாகரோ அம்ரித்தைக் காட்டி கத்தாதே என சைகை செய்தான்.
“இப்ப என் பேஸ்டுக்கும் ப்ரஷுக்கும் பதில் சொல்லலைனா உங்க ப்ரஷை குப்பைத்தொட்டிக்குள்ள போட்டுடுவேன்” என மெல்லிய குரலில் மிரட்டினாள்.
கிருஷ்ணராஜசாகர் மொபைலை மெத்தை மீது எறிந்துவிட்டு எழுந்தான்.
வாஷ்பேசினின் அருகே சுவரோடு பதிக்கப்பட்ட அலமாரியைத் திறந்து அதனுள் இருந்த எலக்ட்ரிக் டூத்ப்ரஷ்சை நீட்டினான்.
நித்திலா அதை வாங்கிக்கொண்டாள்.
“என் ஸ்டேண்டர்டுக்கு குறைஞ்ச எதுக்கும் இங்க இடம் இருக்காது” என அவன் கூறவும் சரி தான் போடா என்பது போல பற்பசையைப் பிதுக்கி பல் துலக்க ஆரம்பித்தாள் நித்திலா.
அவளது அலட்சியம் அவனைச் சீண்டிவிட்டது.
“எதுக்கும் வார்ட்ரோப்ல இருக்குற உன் டிரஸை கவனமா பாத்துக்க… அது மட்டமா இருந்துச்சுனா டூத்பேஸ்ட் ப்ரசோட கதி தான் அதுக்கும் வரும்” என்று அமர்த்தலாக உரைத்தவன் அவளது முறைப்பை சட்டை செய்யாமல் அங்கிருந்து அகன்றான்.
சில நிமிடங்கள் கழித்து குளியலறைக்குள் இருந்து திரும்பிய நித்திலா வார்ட்ரோபில் அடுக்கிய தனது உடைகளை எடுத்து மீண்டும் தனது சூட்கேஸில் வைத்து பூட்டினாள்.
அதை பார்க்கும் போது கிருஷ்ணராஜசாகருக்குச் சிரிப்பாக இருந்தது.
“இவ்ளோ கஷ்டப்பட்டு இங்க இருக்கணுமா ஸ்வீட் ஹார்ட்? பேசாம அம்ரித்தை என் பொறுப்புல விட்டுட்டு நீ சிம்லாவுக்கே ஓடிப்போயிடேன்… அங்க போய் காபி ஆத்தி பிழைச்சுக்க”
எகத்தாளமான அவனது பேச்சில் எரிச்சல் மண்டியது நித்திலாவுக்கு.
“பொய் சொல்லி அம்மா கிட்ட இருந்து பிள்ளைய பிரிக்கிறதை விட காபி ஆத்துறது ஒன்னும் கேவலமான வேலை இல்ல… இந்த மாதிரி மனுசன் கிட்ட என் பிள்ளைய விட்டுட்டுப் போனா வருங்காலத்துல அவனும் எந்த மட்டுமரியாதையும் இரக்கமும் இல்லாத ராட்சசனா தான் வளருவான்”
நித்திலாவின் குத்தல் பேச்சு கிருஷ்ணராஜசாகரை உசுப்பேற்றிவிட்டது.
“சொல்லாம கொள்ளாம ஓடிப்போன உன்னை விட நான் என் பிள்ளைய ஒழுக்கமா வளப்பேன் நித்திலா”
“இப்ப நான் மட்டும் ஒழுங்கீனமா பிள்ளைய வளத்திருக்கேனா?”
“உன்னை பாத்து அவன் ஒழுங்கீனமா வளருவான்னு சொன்னேன்… சும்மா புரியாத மாதிரி நடிக்காத”
“என் ஒழுக்கத்துல என்ன குத்தத்தைக் கண்டிங்க சாகர்?”
“தாலி கட்டுன புருசன் உயிரோட இருக்கிறப்ப இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கிறது ஒழுக்கத்துல சேருமாடி?”
“தாலி கட்டுன புருசன் எந்த உணர்வுக்கும் மரியாதை குடுக்காதவனா இருந்தா அவனை விலக்கிட்டு இன்னொருத்தனை கல்யாணம் பண்ணிக்கத் தான் செய்வாங்க”
இருவரும் உச்சஸ்தாயியில் கத்தி சண்டை போட்டதில் அம்ரித் மிரண்டு விழித்துவிட்டான்.
இதுவரை அதிர்ந்து பேசாத அன்னை தந்தையிடம் கத்துவதையும், கனிவே உருவான தந்தை அன்னையிடம் கோபமாகப் பேசுவதையும் பார்த்த சிறுவனின் கண்களில் கண்ணீர் நிரம்பியது.
மகன் விழித்ததை கூட அறியாமல் பிசியாக சண்டை போட்டுக்கொண்டிருந்தவர்கள் “அறிவில்லையா உங்க ரெண்டு பேருக்கும்?” என்ற நர்மதாவின் கோபக்குரலில் சண்டையை நிறுத்தினர்.
அறையின் வாயிலில் கோபாவேசத்துடன் நின்று கொண்டிருந்தார் நர்மதா.
அவரைக் கண்டதும் “பாட்டி” என்று விசும்பியபடி ஓடிப்போனான் அம்ரித்.
அவனைத் தூக்கிக் கொண்டவர் கண்ணீரைத் துடைத்துவிட்டார்.

“அம்ரு குட்டிய பாக்கணும்னு பாட்டி ரூம்ல அத்தை வெயிட் பண்ணுறா… உனக்கு கேம்ப் ஷெட் வாங்கிட்டு வந்திருக்காளாம்… போய் வாங்கிக்கிறியா?” என்று கேட்க அவனும் ஓடிவிட்டான்.
நர்மதா அறைக்குள் வந்து கதவைச் சாத்தினார்.
நித்திலாவும் கிருஷ்ணராஜசாகரும் அம்ரித் அழுததில் குற்றவுணர்ச்சி மேலிட நின்று கொண்டிருந்தனர்.
நர்மதா வேகமாக அவர்களை நெருங்கியவர் கிருஷ்ணராஜசாகரின் கன்னத்தில் பளாரென அறைய அவன் அதிர்ச்சியோடு கன்னத்தைப் பிடித்துக்கொண்டான்.
அவனுக்கு விழுந்த அறையில் நித்திலா அதிர்ந்து போனாள். பின்னர் மனதுக்குள் இவனுக்குத் தேவை தான் என குதூகலித்தாள்.
“பகுமானமா மகனை அம்மா கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்தா மட்டும் போதாது, அவனை சந்தோசமா வச்சிக்கணும்”
“ம்மா”
“பேசாதடா… நானும் எவ்ளோ தான் பொறுமையா இருக்குறது? உன் பொண்டாட்டிய நீ மதிக்கவேண்டாம்… ஆனா யாரோட துணையும் இல்லாம உன் பிள்ளைய பெத்து இத்தனை வருசம் வளர்த்தவளோட ஒழுக்கத்தை நீ எப்பிடி குறை சொல்லலாம்? அவளுக்கான மரியாதைய குடுக்க இஷ்டமில்லனா பிள்ளையோட சேர்த்து அவளையும் இங்க இருந்து அனுப்பிடணும்… அதை விட்டுட்டு ஒழுக்கத்தைக் கொஸ்டீன் பண்ணுற… புருசனா இது வரைக்கும் நீ என்ன பண்ணிருக்க? கடமைய செய்யாதவனுக்கு கை நீட்டி குத்தம் சொல்ல எந்த உரிமையும் இல்ல”
நர்மதாவின் குற்றச்சாட்டில் கிருஷ்ணராஜசாகர் மௌனமாய் நிற்கவும் நித்திலாவுக்கு உள்ளுக்குள் தென்றல் வீசியது.
கேட்க ஆளில்லை என்று என்ன ஆட்டம் ஆடினான்? இப்போது அனுபவிக்கட்டும்.
ஆனால் அடுத்த நொடியே நர்மதாவின் பார்வை நித்திலாவின் பக்கம் திரும்பவும் நான் என்ன தவறு செய்தேன் என விழித்தாள்.
நர்மதா கொஞ்சமும் யோசிக்கவில்லை. அவளது கன்னத்திலும் பளாரென ஒரு அறை விட நித்திலா தடுமாறி விழப்போனவள் கிருஷ்ணராஜசாகர் அவளது புஜத்தைப் பிடித்ததில் சமாளித்து நின்றாள்.
இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை என அவனிடமிருந்து தனது புஜத்தை வெடுக்கனெ இழுத்துக்கொண்டவள் தன் தரப்பு நியாயத்தை நர்மதாவிடம் விளக்க எத்தனித்தாள்.
“ஆன்ட்டி…”
பேசாதே என்பது போல கையுயர்த்தினார் நர்மதா.
“உன் மேல எனக்கு ரொம்ப வருத்தம் இருக்கு… ஆனா அம்ரித் இந்த வயசுல இவ்ளோ பொறுப்பா பேசுறதையும் நடந்துக்கிறதையும் பாத்து உன் வளர்ப்பை நான் பூரிக்காத நாளே இல்லம்மா… புருசன் மேல கோவப்படுறதுக்கு உனக்கு உரிமை இருக்கு… பிள்ளை முன்னாடி நீ கத்தி சண்டை போட்டா அவனோட மனசு பாதிக்கப்படும்னு தெரியாதா? அவன் எழுந்திரிச்சு அழுததை கூட சண்டை போடுற ஜோர்ல நீ கவனிக்கல… நீ இங்க எதுக்கு வந்த? அம்ருவ உன் கூட அழைச்சிட்டுப் போக தானே… அதை விட்டுட்டு ஏன் இவன் கூட சண்டை போட்டு உன் மனநிம்மதிய கெடுத்துக்கிற நித்திலா?”
தனது வருகைக்கான நோக்கத்தை அறிந்துகொண்ட நர்மதாவின் புத்திக்கூர்மையை கன்னத்தின் வலியை மீறி மெச்சிக்கொண்டாள் நித்திலா.
“நீ என் பிள்ளைய பிரிச்சிட்டனு ஆளாளுக்கு மாத்தி மாத்தி அடிச்சிக்கிறிங்கல்ல… சந்தோசமா சண்டை போடுங்க… இனிமே அம்ரித் என்னோட என் ரூம்ல தான் இருப்பான்”
“ம்மா”
“ஆன்ட்டி”
“வாயை மூடுங்க… உங்க வாழ்க்கைய நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து கந்தல்கோலமாக்கிட்டிங்க… உங்க சண்டையில எதுக்கு குழந்தை சிக்கி திண்டாடனும்? குரங்கு கையில சிக்குன பூமாலை மாதிரி என் பேரன் நிலமை ஆகுறதுக்குள்ள நான் சுதாரிச்சிக்கிட்டேன்… இன்னொன்னும் சொல்லிக்கிறேன், உங்களோட சண்டைய பத்தி இன்னும் என் புருசனுக்குத் தெரியாது… மருமகள் மனசு மாறி வந்ததா நம்பி நிம்மதியா இருக்கார்… மகன் தனிமரமா நின்னுடுவானோனு யோசிச்சு அட்டாக் வந்து இப்ப தான் ரெகவர் ஆகிருக்கார்… தயவுபண்ணி அவர் முன்னாடி இப்பிடி சண்டை போட்டு இன்னொரு அட்டாக் வர்ற மாதிரி செஞ்சிடாதிங்க… உங்களுக்குப் புண்ணியமா போகும்”
கையெடுத்துக் கும்பிட்டுவிட்டு அவர் வெளியேறிவிட புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது.
கிருஷ்ணராஜசாகரும் நித்திலாவும் தங்களின் கன்னங்களைத் தடவிக்கொண்டனர்.
எல்லாம் உன்னால் தான் என்ற ரீதியில் ஒருவரை ஒருவர் முறைத்தபடி இருந்தவர்களில் முதலில் அடுத்த வேலையைக் கவனிக்கச் சென்றவன் கிருஷ்ணராஜசாகர் தான்.
கன்னத்தில் விழுந்த அறையை ஒதுக்கிவிட்டு குளிக்க சென்றுவிட்டான் அவன்.
நித்திலா அவன் வந்ததும் குளித்துக்கொள்ளலாமென காத்திருந்தாள்.
இங்கே வந்த நோக்கத்தை மறந்து ஏன் இவனிடம் அடிபிடி சண்டை போடவேண்டும்? நர்மதா சொன்னதும் நியாயம் தானே.
சென்னையோடு அவளுக்கு இருக்கும் இன்னொரு பிணைப்பு ஞாபகத்துக்கு வந்தது.
அப்பா!
நான்காண்டுகளில் அவர் என்னைத் தேடியிருப்பாரா? அவரையும் சைலேந்திரியையும் சந்திக்க மனமின்றி சிம்லாவுக்குச் சென்றதை நினைவுகூர்ந்தவள் தந்தைக்குத் தன் மீது கோபம் இருக்குமோ என யோசித்தாள்.
கோபப்பட்டாலும் பரவாயில்லை. தந்தையிடம் பேசவேண்டுமென மனம் துடித்தது.
அவளது யோசனையைக் களைக்கும் விதமாக குளியலறை கதவு திறக்கு சத்தம் கேட்டது.
நீளமான கால்கள் குளியலறை வாயிலில் இருந்து ட்ரஸ்சிங் டேபிள் நோக்கி செல்வதை கண்டும் காணாதவளாக குளியலறைக்குள் மாற்றுடையோடு புகுந்துகொண்டாள்.
அவள் குளித்து மாற்றுடை தரித்து வெளியே வந்த போது கிருஷ்ணராஜசாகர் அங்கில்லை.
கீழ்த்தளத்திற்கு போயிருப்பான் என்ற சிந்தனையோடு அவளும் கீழே வர ஸ்ரீநயனியோடு விளையாடிக்கொண்டிருந்தான் அம்ரித்.
நித்திலாவைக் கண்டதும் “நித்திம்மா” என்று கட்டிக்கொண்டான்.
நித்திலா ஸ்ரீநயனியிடம் வந்தவள் “அப்பாவ பாக்கப்போகணும் நயனி” என்றாள் மெதுவாக.
ஸ்ரீநயனியோடு செல்லலாமென தோன்றியதற்கு காரணம் சைலேந்திரியின் வாயை அடைக்க அவளால் மட்டுமே முடியும் என்பதே.
“சரி அண்ணி” என ஸ்ரீநயனி கூறும் போதே “அவர் இப்ப நுங்கம்பாக்கம் நியூரி அப்பார்ட்மெண்ட்ஸ்ல இருக்கார்” என்ற கிருஷ்ணராஜசாகரின் குரல் இடையிட்டது.
“ஆனா அவங்க அக்சயா அப்பார்ட்மெண்ட்ல தானே இருந்தாங்க” என ஸ்ரீநயனி கூற
“அங்க வசதி பத்தலனு மிஸ்டர் ஜனார்தனனோட ஒய்ப் அவங்க மகள் கிட்ட சொன்னாங்களாம்… உடனே அவரோட சின்ன மருமகன் மாமியாருக்காக காஸ்ட்லியான அப்பார்ட்மெண்ட்ல வீடு வாங்கி குடுத்தான்” என்றான் கிருஷ்ணராஜசாகர் எள்ளல் தொனியில்.
அவனது எள்ளலில் அவமானத்தில் தத்தளித்தாள் நித்திலா.
சைலேந்திரியும் அவரது மகளும் இன்னும் என்னென்ன செய்து வைத்திருக்கிறார்களோ என நொந்து போனாள் அவள்.
“போறப்ப என் மகனை அழைச்சிட்டுப் போகவேண்டாம்… மாமாவ… ப்ச்… மிஸ்டர் ஜனார்தனனை இங்க கூட்டிட்டு வந்து அம்ருவ காட்டுனா போதும்… அங்க இருக்குறவங்களோட மோசமான பார்வை என் பிள்ளை மேல விழக்கூடாது” என கிருஷ்ணராஜசாகர் கட்டளையிட்டான்.
ஏன் மாமா என்று சொல்லிவிட்டால் இவன் தலை சுக்குநூறாக வெடித்துவிடுமோ?
எப்படி பார்த்தாலும் அவன் சொன்னது என்னவோ சரி தான். நிஹாரிகாவுக்கு இன்னும் குழந்தை இல்லையென சொன்னானே. அதுவே சைலேந்திரிக்கு அம்ரித் மேல் வெறுப்பு வரக் காரணமாகிவிடும். அவரது பார்வையில் அம்ரித் இப்போதைக்குப் படவேண்டாமென நித்திலாவும் எண்ணிக்கொண்டாள்.
சரியென அவனிடம் தலையாட்டியவளுக்கு இன்னொரு செய்தியையும் கூறினான்.
“நீ முன்னாடி யூஸ் பண்ணுன கார் இப்ப இல்ல… நயனி கார்ல போ”
அந்தக் காருக்கு என்னவாயிற்று என நித்திலா விழியால் வினா தொடுத்தாள்.
“உன்னை ஞாபகப்படுத்துற எதுவும் வேண்டாம்னு அந்தக் காரை என்னோட எம்ப்ளாயி ஒருத்தருக்குக் கிப்டா குடுத்துட்டேன்”
அவனது பதிலில் எரிச்சல் மண்டியது. பதிலடி கொடுக்க துடித்த நாக்கு ஆனந்த்சாகரோடு வந்த நர்மதாவைக் கண்டதும் அமைதியாகிவிட்டது.
காலையில் தானே ஆனந்த்சாகர் முன்னிலையில் சண்டையிட்டு விடாதீர்கள் என அவர் கூறினார். எனவே அமைதி காத்தாள் நித்திலா.
ஆனந்த்சாகர் மகனும் மருமகளும் சேர்ந்து நிற்பதை பார்த்ததும் மனம் நிறைந்து புன்னகைத்தார்.
“நல்லா ரெஸ்ட் எடுத்தியாம்மா?” என அவர் பாசமாக வினவ நித்திலாவோ அவரது மைந்தனை பார்த்தாள்.
நீ பால்கனிக்குத் துரத்தி விட்டதை கூறட்டுமா என கண்களால் கேட்டவளிடம் முடிந்தால் சொல்லிக்கொள் என அன்னையைக் காட்டி எகத்தாளமாக சைகையில் பதிலளித்தான் கிருஷ்ணராஜசாகர்.
வேறு வழியின்றி நன்றாக ஓய்வெடுத்ததாக ஆனந்த்சாகரிடம் பொய்யுரைத்தாள் அவரது மருமகள்.
இன்னும் சற்று நேரத்தில் வீட்டில் சூழல் இறுக்கமாகப் போவதை அவர்கள் யாரும் அறியவில்லை.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

