“பொதுவாக சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கும் வேடதாரிகள் தங்களை அமைதிப்புறாக்களாகக் காட்டிக்கொள்வர். அதே சமயம் அரசியல் மற்றும் இலக்கியவுலகத்தினரோ தங்களை கழுகுகளைப் போல காட்டிக் கொள்வது வழக்கம். ஆனால் அவர்கள் யாவரும் கழுகு வேடம் தரித்த எலிகளும் நாய்களுமே!”
-ஆண்டன் செக்காவ் (ரஷ்ய நாடகம் மற்றும் சிறுகதையாசிரியர்)
கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த அந்த பங்களாவிற்கு அன்றைய தினம் உயிர்ப்பு வந்திருந்தது. காரணம் அதன் உரிமையாளரான ராமமூர்த்தி அவரது சகாக்களுடன் கட்சித்தலைமைக்குத் தெரியாமல் இரகசிய கூட்டமொன்றை அங்கே நடத்திக் கொண்டிருந்தார்.
“டிசம்பர் இருபத்தெட்டுக்கு இன்னும் பத்து நாள் தான் இருக்கு தலைவரே! மாநாடு வேலை வேற சுறுசுறுப்பா நடந்திட்டிருக்கு… இந்த நேரத்துல நீங்க எங்களை ஏன் திடீர்னு சென்னைக்கு வரச் சொல்லிருக்கீங்க?”
அங்கே குழுமியிருந்தவர்களில் அவருக்கு நெருக்கமானவரான சந்திரகுமார் கேள்வி எழுப்ப ஏனைய உறுப்பினர்கள் ராமமூர்த்தியின் பதில் என்னவோ என ஆவலாய் அவரது முகத்தை நோக்கினர்.
“இந்த மாநாட்டு வேலை நடந்திட்டிருக்கப்பவே உங்கள்ல சிலர் தனியா ஏதோ வேலை பாக்குறதா என் காதுக்கு செய்தி வந்துச்சு… அத விசாரிக்க தான் இந்தக் கூட்டத்த கூட்டிருக்கேன்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அவர் சொல்லி முடிக்கவும் அங்கிருந்தவர்களில் மூவர் மட்டும் தங்கள் உணர்ச்சிகளை வெளிக்காட்டாது மறைக்க அரும்பாடு பட துவங்கினர். அவர்கள் வேறு யாருமில்லை, சந்திரகுமாருடன் சேர்ந்து அருள்மொழிக்காக களத்தில் இறங்கி பணியாற்றுவோம் என உறுதியளித்திருந்த தெய்வநாயகமும் மந்திரமூர்த்தியும் தான்!
தங்களின் அரசியல் எதிர்காலமா? விசுவாசமா? இருமனதாய் திண்டாடி முந்தையதை தேர்ந்தெடுத்திருந்த அம்மூவருக்கும் இப்போது மாட்டிக்கொண்டோமோ என்ற பயம் பீடித்துக் கொண்டது.
ஆனால் ராமமூர்த்தி திடீரென சத்தமாய் நகைக்கவும் அவர்களுக்குக் குழப்பமானது. அவர் புரியாமல் விழிக்கும் தனது கோஷ்டியினரைப் பார்த்து
“நான் நினைச்சதை விட வேலைய ரொம்ப சரியா பண்ணி முடிச்சிருக்கீங்கய்யா… எல்லா வேலையையும் ஒரே ஆளா செய்யுறதுக்குப் பதில் மூனு பேரும் மாவட்ட வாரியா வேலைய ஷேர் பண்ணி செஞ்சிங்க பாத்திங்களா, அங்க நிக்குறீங்க நீங்க மூனு பேரும்… உங்கள மாதிரி விசுவாசிகள் இருக்குற வரைக்கும் என்னை இந்தக் கட்சில யாரும் அசைக்க முடியாது” என்று கூறவும் தான் அவர்களுக்கு நிம்மதியானது.
அசட்டுச்சிரிப்புடன் “எல்லாம் உங்க கிட்ட கத்துக்கிட்ட அரசியல் பாடம் தானுங்கய்யா” என்றனர் மூவரும்.
ராமமூர்த்தி கர்வத்துடன் சிரித்தவர் “பாவம் அந்த அருள்மொழிக்கு மதுரை மாநாடு நடக்குறதோட உண்மையான காரணமே தெரியாது… அவனுக்காக கூட்டம் கூட்டி நான் பேசப் போறதா நினைச்சிட்டிருப்பான்” என்று கூற அந்த மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
அவரது இந்தக் கர்வத்தை அடித்து நொறுக்குவதற்கு அவன் என்றோ பிள்ளையார்சுழி போட்டு திட்டமும் தீட்டி அதற்காக காய் நகர்த்திக் கொண்டிருப்பதை ராமமூர்த்தி தான் அறியவில்லை.
அத்தோடு வானதி யுவராஜின் மரணம் குறித்து கூறியிருந்த தகவல்களை வைத்து சங்கர் மூலமாக தந்தையின் ஆட்சிக்காலத்தில் நடந்த காவல்துறை கஸ்டடி மரணங்கள் பற்றிய விவரங்களை சேகரித்த அருள்மொழிக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ஊடகத்துறையில் அவனுக்கு இருக்கும் நண்பர்கள் வாயிலாகவும் அகத்தியன் மூலமாகவும் சங்கர் யுவராஜின் மரணம் பற்றிய விவரங்களைச் சேகரித்திருந்தான்.
“மகேந்திரன்ங்கிற பி.டபிள்யூ.டி டிப்பார்ட்மெண்ட் ஆபிசரும் அவரோட மனைவியும் அவங்களோட புது வீட்டுல சிலிண்டர் வெடிச்சதால நடந்த தீவிபத்துல இறந்த கேஸ்ல ஒரு பிரபல அமைச்சருக்குத் தொடர்பு இருக்குனு யுவராஜ் கம்ப்ளைண்ட் குடுத்திருக்கார் சார்… அதுக்கு எவிடன்ஸும் கலெக்ட் பண்ணிருக்கார்… அத போலீஸ் கிட்ட ஹேண்ட் ஓவர் பண்ண ஸ்டேசனுக்குப் போனவர் ஹார்ட் அரெஸ்ட்ல இறந்துட்டதா ப்ரஸ்ல நியூஸ் வந்திருக்கு… அவருக்கு போஸ்ட்மார்ட்டம் பண்ணுன டாக்டரும் ஹார்ட் அரெஸ்ட்னு தான் சொல்லிருக்கார்… ஆனா விசாரிச்ச வரையில அந்த அமைச்சர் தன்னோட செல்வாக்கை யூஸ் பண்ணி யுவராஜை போலீஸை வச்சே அடிச்சு கொன்னுட்டார்னு அந்த ஸ்டேசன் கான்ஸ்டபிள் ஒருத்தர் சொன்னார்… இந்த விசயம் டிப்பார்ட்மெண்ட்ல எல்லாருக்கும் தெரியும்னும் சொன்னார்… அந்த மினிஸ்டர்…” என்று யாரந்த நபர் என பெயரைச் சொல்ல தயங்கி நிறுத்தினான் சங்கர்.
அருள்மொழி அனைத்தையும் கேட்டுவிட்டு “அந்த மினிஸ்டர் தான் என்னோட சித்தப்பா ராமமூர்த்தி” என்று நிறுத்த சங்கரின் தலையும் ஆமென்பதற்கு அடையாளமாக அசைந்தது.
“அகத்தியன் மாமா எல்லா டீடெய்லையும் சொன்னார்… மதுரை மேலூர் ஏரியால ஸ்பென்சர், ஃபீனிக்ஸ் மாதிரி பெரிய மால் ஒன்னு கட்டுறதுக்கு சித்தப்பா ஆசைப்படுறதா அப்பா சொல்லி நான் கேட்டிருக்கேன்… அதுக்கு இடைஞ்சலா அந்த லேண்ட்ல ஒரு பார்ட்டை வாங்கி வீடு கட்ட நினைச்ச மகேந்திரனை நம்ம கட்சியாளுங்களை வச்சு மிரட்டிருக்கார்… அவர் முடியாதுனு திட்டவட்டமா சொன்னதால புதுவீடு கட்டுற வரைக்கும் காத்திருந்து அவரோட சேர்த்து அவர் ஒய்ஃப், ஃப்ரெண்ட் செந்தில்நாதனையும் சிலிண்டர் வெடிச்சு நடந்த ஆக்சிடெண்ட்ங்கிற போர்வைல கொன்னுருக்கார்… இறந்து போன மகேந்திரனோட பொண்ணு அந்தச் சமயத்துல காலேஜ் ஹாஸ்டல்ல இருந்ததால தப்பிச்சிட்டா… அப்புறம் இறந்து போனவங்கள்ல ஒருத்தரான செந்தில்நாதனோட மகன் யுவராஜ் அங்க இருந்த சி.சி.டி.வி ஃபுட்டேஜை ஆதாரமா வச்சு போலீஸ்ல கம்ப்ளைண்ட் குடுத்தான்… அவனை போலீஸ் கஸ்டடில கொல்ல சொன்னதும் சித்தப்பா தான்… இந்த விசயம் வெளிய கசியாம அவனோட டெத் ஹார்ட் அரெஸ்ட்டால நடந்துச்சுனு மூடி மறைக்கிறதுக்கு அவருக்கு உதவி பண்ணுனது என்னோட அப்பா”
அவன் நிதானமாக கதை சொல்வது போல அகத்தியன் தன்னிடம் கூறிய யாவற்றையும் சங்கரிடம் கூற, சங்கருக்கோ இந்தத் தகவலை தனது வாயால் கூறும் தர்மச்சங்கடத்திலிருந்து தப்பித்த நிம்மதி!
“நீங்க போகலாம் சங்கர்…. ஹான்! அதுக்கு அப்புறம் அந்த மகேந்திரனோட பொண்ணு என்ன ஆனானு எதாச்சும் தகவல் கிடைச்சுதா?” என வினவியவனிடம்
“அந்தப் பொண்ணை அவ ஃப்ரெண்டோட பாட்டி வில்லேஜுக்குக் கூட்டிட்டுப் போனதா அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க சார்… அந்தப் பாட்டியும் கொஞ்சநாள்ல இறந்துடுச்சுனு சொன்னாங்க… அப்புறம் அந்தப் பொண்ணும் அவ ஃப்ரெண்டும் என்ன ஆனாங்கனு யாருக்குமே தெரியல” என்றான் சங்கர்.
“ஓ! இட்ஸ் ஓகே… இவ்ளோ டீடெய்லை நீங்க கலெக்ட் பண்ணுனதே பெரிய விசயம்… நான் மட்டுமே இதை பத்தி விசாரிச்சிருக்கலாம்… பட் ஒரு விசயத்தை ஒன்னுக்கு ரெண்டு பேர் விசாரிச்சா கிடைக்கிற ரிசல்ட் ரொம்ப அக்யூரேட்டா இருக்கும்னு நினைச்சேன்… நான் நினைச்ச மாதிரியே இருக்கு… ஓகே! யூ மே கோ நவ்” என்று அவனைச் செல்லுமாறு கட்டளையிட்டான்.
சங்கர் சென்றதும் அவர்களது தேர்தல் பணிக்காக ஐ.பி.சி தரப்பில் உருவாக்கப்பட்டிருந்த இணையத்தளத்தைப் பார்வையிடத் துவங்கினான். அதில் அவர்கள் கட்சியின் சமூக வலைதளப்பக்கங்களும் இணைக்கப்பட்டிருக்கும். அதில் தினசரி அவனது கட்சிப்பணிகளைப் பற்றிய பதிவுகள் சமூக வலைதள அட்மினால் பதிவேற்றப்படும்!
இவ்வாறு வேலைகள் அதன் போக்கில் நடந்தாலும் அவ்வபோது கண்காணிப்பது நல்லது தானே!
அப்போது கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. மீண்டும் சங்கரே தான்!
ஆனால் இப்போது வந்த போது வேறொரு தகவலுடன் வந்திருந்தான். நேஷ்னல் மீடியா ஒன்றின் செய்தி தொலைக்காட்சிக்கு அவன் அளிக்கவிருக்கும் நேர்க்காணல் பற்றி நிதர்சனா அனுப்பியிருந்த குறிப்பை கொண்டு வந்திருந்தவன்
“நெக்ஸ்ட் வீக் நீங்க குடுக்க போற இண்டர்வியூல பேசவேண்டிய இம்ப்பார்டெண்ட் பாயிண்ட்ஸ் பத்தி நோட்ஸ் குடுத்திருக்காங்க சார்” என்றான்.
அருள்மொழி அதை வாங்கி மேஜை மீது வைத்தவன் “ஓகே! நீங்க போகலாம்” என்றவன் அந்தக் குறிப்புகள் அடங்கிய கோப்பினை வாசிக்க ஆரம்பித்தான்.
அதில் கூறப்பட்டிருந்த தகவல்களை வாசித்து முடித்தவன் வானதியை மொபைலில் அழைத்தான்.
அவனது அழைப்பை ஏற்றவள் என்னவென வினவ “இப்ப தான் ஐ.பி.சி டீம் அனுப்புன இண்டர்வியூ நோட்ஸ் பாத்தேன்… ஸ்டார்ட்டிங் டு எண்ட் ஊழலை ஒழிக்கிறது தான் எங்களோட உயிர்மூச்சுங்கிற ரீதில நோட்ஸ் குடுத்திருக்காங்க.. இதை அப்பிடியே நான் ஃபாலோ பண்ணுவேன்னு உங்களுக்கு என்ன நம்பிக்கை?” என்று பதிலுக்கு அவளிடம் கேள்வி கேட்டான் அவன்.
“அதுல இருக்குறது ஜஸ்ட் இம்ப்பார்ட்டெண்ட் பாயிண்ட்ஸ் தான்… நீ அதை தான் மீடியா முன்னாடி பேசணும்னு நாங்க கட்டாயப்படுத்தல… அங்க என்ன மாதிரி கொஸ்டீன்ஸை கேப்பாங்கனு தெரியாது இல்லையா? இது ஜஸ்ட் ஒரு ட்ராஃப்ட்… அவ்ளோ தான்… நீ பாலிடிக்ஸ்ல எண்டர் ஆனதுல இருந்து இப்ப வரைக்கும் என்னென்ன சம்பவங்கள் நடந்துச்சோ அத உன் பாணில அங்க கேக்குற கேள்விக்கு ஏத்த மாதிரி பதிலா மாத்தி சொல்லிப் போற… பட் அதுக்காக எலக்சன் பாயிண்ட் ஆப் வியூவ விட்டுடக் கூடாதுல்ல… அதான் அந்த நோட்ஸை பிரிப்பேர் பண்ணிருக்காங்க” என்றாள் வானதி.
“ம்ம்! அது எல்லாம் சரி… நான் யுவராஜோட டெத் பத்தி எல்லா டீடெய்லையும் கலெக்ட் பண்ணிட்டேன்” என்று மறுமுனை சொன்னதும் அமைதியானவள்
“இப்ப உனக்கு நான் சொன்னதுல நம்பிக்கை வந்துடுச்சா?” என்று கேட்க
“இவ்ளோ நடந்தும் நீ எங்க பார்ட்டி ஜெயிக்கிறதுக்காக ஏன் வேலை பாக்குற? இதுல எதாச்சும் உள்குத்து இருக்குதா?” என்று படுதீவிரத்தொனியில் கேட்டான் அருள்மொழி.
வானதி அவனது கேள்வியில் ஒரு நொடி திகைத்தவள் பின்னர் சத்தமாக சிரித்தாள். அந்தச் சிரிப்பு அவனுக்கு என்னவோ சமாளிப்பாகவே தோன்றியது என்பது வேறு கதை!
ஆனால் சிரித்தவளோ தனது எண்ணமே வேறு என்று அடுத்தடுத்த சில நிமிட பேச்சுவார்த்தையில் அவனுக்குப் புரியவைத்துவிட்டாள்.
“உங்க கட்சிக்காக வேலை பாக்குறது எங்களோட கன்சர்ன்… நான் அதுல ஒரு எம்ப்ளாயி… எனக்குக் குடுக்கப்பட்ட வேலை உங்க பார்ட்டிக்காக எலக்சன் ஸ்ட்ராடஜி டிசைன் பண்ணுறது, அத எக்ஸிகியூட் பண்ணுறது… அத செய்யுறதுக்குத் தான் எனக்கு சேலரி குடுக்குறாங்க அருள்… நான் வாங்குற சம்பளத்துக்கு உண்மையா உழைக்கிற கேட்டகரி… அதோட கொஞ்சம் யோசியேன், எல்லாத்துக்கும் காரணமான மிஸ்டர் ராமமூர்த்தி அரசியல்ல பெரிய தலை… அவரோட அண்ணன் மகனான உன்னாலயே அவரை சமாளிக்க முடியல… நான் யாரு? ஆப்டர் ஆல் உங்கள மாதிரி அரசியல்வாதிங்களுக்கு ஓட்டு போடுற ஒரு சாமானிய பொண்ணு… என் வேலைய யூஸ் பண்ணி அவரை என்னால என்ன பண்ணிட முடியும்னு நீயே சொல்லு… அதை விடு, எங்களுக்கு அவர் பண்ணுன பாவத்துக்கு பழி வாங்கணும்னு நினைச்சிருந்தா நான் ஏன் இத்தனை வருசம் சும்மா இருக்கப் போறேன்?” என்று சாமர்த்தியமாக வினவினாள் வானதி.
“நீ சான்ஸ் கிடைக்கிறதுக்காக காத்திருந்திருந்தியோனு தோணுது”
ஒரே பதிலில் வானதியின் இத்தனை நாள் திட்டத்தின் ஆணிவேரை பிடித்து விட்டான் அவன்.

“ஜோக் பண்ணாத அருள்… ஃபியூச்சர்ல உங்க பார்ட்டிக்காக எங்க கன்சர்ன் வேலை பாக்கும்னு தெரிஞ்சே நான் ஐ.பி.சில ஜாயிண்ட் பண்ணுன மாதிரி நீ பேசுற… நாங்க உங்களுக்காக வேலை பாக்கப் போகுறது எனக்கு மட்டும் திவ்விய திருஷ்டில தெரிஞ்சிடுச்சா? ஆக்ஸ்வலி அப்கமிங் தமிழ்நாடு அசெம்ப்ளி எலக்சன்ல உங்க பார்ட்டிக்காக நாங்க வேலை பாக்கணும்னு டீல் பேச வந்தவர் அகத்தியன் சார்… அவர் சொன்னப்ப இத நாங்க நம்பவே இல்ல… ஏன்னா தமிழ்நாடு அரசியலும் அரசியல்வாதிங்களும் ரொம்பவே வித்தியாசமானவங்க… எங்களோட இந்த மார்டன் பாலிட்டிக்ஸ் டேக்டிக்ஸ், ஸ்ட்ராடஜிய அவங்க நம்பவே மாட்டாங்க… கட்டாயம் உங்கப்பா இதுக்கு ஒத்துக்க மாட்டார்னு தான் கடைசி வரைக்கும் எங்க கிட்ட சீஃப் சொன்னார்… உன்னோட ஃபாதர் எங்க கூட டீல் சைன் பண்ண ஒத்துக்கிட்டத முதல்ல என்னால நம்பவே முடியல… இந்த மாதிரி சிச்சுவேசன்ல என்னை உங்க பார்ட்டிக்கான கேம்பெய்ன் மேனேஜரா அப்பாயிண்ட் பண்ணுனது எனக்கே சர்ப்ரைஸ் தான்! இதுல நான் எங்க இருந்து உள்குத்து செய்யுறது? காமெடி பண்ணாம நேஷ்னல் மீடியாக்கு குடுக்கப் போற இண்டர்வீயூல எப்பிடி ஸ்மார்ட்டா ஆன்சர் பண்ணலாம்னு யோசி” என சாதாரணமாகப் பேசி இந்த வாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணினாள் வானதி.
ஆனால் அருள்மொழி அவ்வளவு எளிதில் அவளது வார்த்தைகளை நம்புவானா என்ன?
“சரி நீ சொல்லுற மாதிரியே வச்சுக்கலாம்… நீ சான்ஸ் கிடைக்கிறதுக்காக காத்திருக்கல… ஆனா கிடைச்ச சான்ஸை யூஸ் பண்ணி ஸ்மார்ட்டா ப்ளே பண்ணலாம்னு கூடவா யோசிக்கல?”
வானதி இந்தக் கேள்வியில் வாயடைத்துப் போனாள்.
“அடப்பாவி! என் ப்ரெய்னுக்குள்ள புகுந்து எல்லாத்தையும் வாசிச்சவனாட்டமே பேசுறானே… நாட் பேட்! அரசியல்வாதி மூளை வேலை செய்யுது… ஒருவேளை இவன் போட்டு வாங்க நினைக்கிறானோ?”
அவளுக்குள் என்னென்னவோ தாறுமாறான சிந்தனைகளும் கேள்விகளும் ஓட அதை குரலில் காட்டிக்கொள்ளாது சமாளித்தாள்.
“இது வரைக்கும் என்னோட வேலைய பயன்படுத்தி மிஸ்டர் ராமமூர்த்திக்கு எதிரா நான் என்ன செஞ்சிட்டேன்னு நீயே யோசி”
“ரொம்ப ஸ்மார்ட்டா பதில் சொல்லுறியாக்கும்? யாழினிக்கா கிட்ட நீ சொன்ன ராஜாக்கு அப்புறம் யுவராஜா தான் வரணும்ங்கிற கதை எனக்குத் தெரிஞ்சு போச்சு வானதி”
இப்போது அமைதி காப்பது மட்டுமே வழி!
“என்ன பதிலையே காணும்? சித்தப்பா பார்ட்டியோட தலைவரா ஆகக்கூடாதுனு அக்கா கிட்ட நீ தான் கொளுத்தி போட்டுட்டு போயிருக்க… அது எப்பிடியோ பத்தி எரிஞ்சு நான் பார்ட்டியோட லீடர் ஆனதும் சித்தப்பா கட்சில ஓரங்கட்டப்பட்டதா நினைச்சு தவிச்சிருப்பார்… அந்த தவிப்பு உனக்குக் கொண்டாட்டமா இருந்திருக்கும்ல… சும்மா சொல்லக்கூடாது… நீ நல்லா மைண்ட் கேம் விளையாடுற”
இது பாராட்டா அல்லது வஞ்சப்புகழ்ச்சியா? எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்! வாயை மட்டும் திறக்கக்கூடாது!
அருள்மொழி விசமமாய் சிரித்துக் கொண்டவன் “லுக் வானதி! உனக்கும் உன் ஃபேமிலிக்கும் நடந்தது பெரிய ட்ராஜடி தான்! அதுக்கு நான் ரொம்பவே வருத்தப்படுறேன்… ஆனா என்னால என் சித்தப்பாவ ஒரேயடியா ஓரங்கட்ட முடியாது… அவரோட அபிமானிகள் எல்லாரும் என் பக்கம் வர்ற வரைக்கும் அவரை என்னால பகைச்சுக்க முடியாது… அவர் இருக்குற பார்ட்டியோட தலைவரா கட்சிமானத்த காப்பாத்த எங்கப்பா என்ன செஞ்சாரோ அதை தான் நானும் செய்வேன்… நான் அவரை எனக்குக் கீழ வச்சுக்க ஆசைப்படுறேனே தவிர எனக்கு எதிர்ல இல்ல… உனக்கு நான் சொல்ல வர்றது புரிஞ்சிருக்கும்னு நினைக்கேன்… சோ ப்ளீஸ் ஸ்டாப் யுவர் சில்லி சைல்டிஷ் மைண்ட் கேம்ஸ், அண்ட் கேரி ஆன் யுவர் ஒர்க் பேபி” என்று கூறிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.
வானதி அருள்மொழிக்குத் தனது திட்டம் முழுவதுமாகத் தெரியாவிட்டாலும் எப்படியோ தன் மன எண்ணத்தை கண்டுகொண்டான் என்ற அதிர்ச்சியில் மூளை ஸ்தம்பிக்க அமர்ந்துவிட்டாள்!
அப்படி என்றால் அவளால் இனி ராமமூர்த்தியை எதுவும் செய்ய இயலாதா? மனதுக்குள் ஏமாற்றம் அலையாய் எழும்பி வர அதை அடக்க முடியாமல் திண்டாடியவள் கைகளில் தலையைப் புதைத்த வண்ணம் கண் மூடிக்கொண்டாள்.
நமது செயல்களின் பலனாக தோல்வி கிட்டுமாயின் உடனே சோர்ந்து போக வேண்டிய அவசியமில்லை. அந்தத் தோல்விக்கு அர்த்தம் நாம் முட்டாள் என்பது இல்லை! இன்னும் நமது புத்திசாலித்தனத்தை நாம் முழுமையாக வெளிப்படுத்தவில்லை என்பதே!
Ghost Writers!இங்கே உள்ள கதைக்கருவைத் திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction