அபிமன்யூவும் அஸ்வினும் வீட்டை விட்டு கிளம்பிய சில மணி நேரங்களில் வாசுதேவனின் கார் பார்த்திபன் வீட்டிற்குள் நுழைந்தது. நீண்டநாட்கள் கழித்து அந்த வீட்டுக்கு வந்த வாசுதேவன் வரவேற்பறையில் அமர்ந்து கொண்டிருந்த தங்கையை கண்டதும் “சுபிம்மா!” என்று அன்பொழுக அழைக்க அவர் வெளிநாடு சென்று திரும்பிய அண்ணனை வீட்டுக்கு சென்று பார்க்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கையில் அவரே வீடு தேடி வந்ததை அறிந்ததும் மகிழ்ந்தார்.
“அண்ணா” என்றபடி எழுந்து நின்ற தங்கையை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டார் வாசுதேவன். “எங்க என்னோட மருமகன்களை காணும்?” என்று கேட்க சுபத்ரா “ரெண்டு பேரும் உங்களை பார்க்க தானே கட்சி ஆபிஸுக்கு போறோம்னு சொல்லி கெளம்புனாங்க” என்று சொல்லி யோசனையுடன் பார்த்தார்.
வாசுதேவன் “விடு சுபிம்மா! உன் மகன் இப்போ வெறும் அபிமன்யூ இல்ல. எம்.எல்.ஏ ஆயிட்டான்ல, அதனால சில வெளிவிவகாரங்களை கவனிக்க போயிருப்பான். ஜானு குட்டி எங்கே? காலேஜுக்கு போயிட்டாளா?” என்று மற்றவர்களை பற்றி விசாரிக்க அண்ணனும் தங்கையும் பொதுப்படையாக பேசி கொண்டனர்.
பேச்சு பார்த்திபனை குறித்து மாறவும் சுபத்ரா முகம் கலங்க ஆரம்பிக்க, வாசுதேவன் அவரை சமாதானப்படுத்தினார்.
“சுபிம்மா! அரசியல் வேற, குடும்பம் வேற. நீ ரெண்டையும் போட்டு குழப்பிக்காதடா! பார்த்தி இன்னும் கொஞ்ச நேரத்துல சகா கூட வந்துடுவாரு. உனக்கே தெரியும் அவருக்கு நீயும், இந்த குடும்பமும் தான் எல்லாமேனு. அவர் எந்த தப்பும் பண்ணலடா. இப்போதைக்கு என்னால உன் கிட்ட இதை மட்டும் தான் சொல்ல முடியும். பார்த்தியை விட்டு நீ விலகுனா அவரு உடைஞ்சு போயிடுவாரு சுபிம்மா” என்று சொல்லிவிட்டு தங்கையின் தலையை வருடி கொடுக்க
சுபத்ரா “அப்போ அவரு மேல எந்த தப்பும் இல்லையா அண்ணா?” என்று ஆவலுடன் கேட்டுவிட்டு அண்ணனது முகத்தை பார்த்தார். தங்கையின் கேள்விக்கு வெளிப்படையாக பதிலளிக்காமல் “பார்த்தி எப்போவுமே இந்த மாதிரியான பெரிய தப்பெல்லாம் பண்ண மாட்டாரு. இதுல்லாம் எதிர்க்கட்சியோட சதி சுபிம்மா .நீ வேணும்னா பாரு அவர் இந்த கேஸை இல்லாம ஆக்கிட்டு சீக்கிரம் வெளியே வந்துடுவாரு” என்று சொல்ல சுபத்ராவுக்கு கணவன் மீது சின்னதாக நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அந்த சந்தோசத்துடனே ஜாமினில் வெளிவந்த பார்த்திபனை எதிர்நோக்கி காத்திருக்க சிறிதுநேரத்தில் சகாதேவனுடன் வந்து சேர்ந்தார் பார்த்திபன்.
சுபத்ராவுக்கு அந்த சில நாள் பிரிவிலேயே கணவர் சோர்ந்து போனவராக தெரிய அவர் வீட்டினுள் நுழைந்ததும் கண்ணிலிருந்து கண்ணீர் வழிய நின்றார். பார்த்திபன் மனைவியின் கண்ணீரை கண்டதும் பதறியவராய் “சுபிம்மா! என்னாச்சு? ஏன் அழுற? எனக்கு ஒன்னும் இல்லம்மா. அங்க சாப்பாடு கொஞ்சம் சரியில்ல. அதான் டயர்டா தெரியுறேன். நீ கண்ணை துடைச்சுக்கோ” என்று மனைவியை சமாதானப்படுத்த வாசுதேவன் இருவரையும் ஒருவாறு சேர்த்து வைத்துவிட்ட திருப்தியோடு பார்த்திபன், சகாதேவனிடம் சொல்லிக் கொண்டு கிளம்பினார்.
வீட்டை விட்டு வெளியே வந்து காரில் ஏறியவர் போனில் கால் வரவும் “ம்ம்..சொல்லுடா! எல்லாம் சரியா தான் போகுது. நீ எதுக்கும் பார்த்தி வீட்டு மேல ஒரு கண்ணை வச்சுக்கோ. இந்த விஷயத்துல நான் யாரையுமே நம்ப போறது இல்ல, என்னை தவிர” என்று சொல்லி போனில் யாருக்கோ கட்டளையிட்டுவிட்டு அழைப்பை துண்டித்தார். அவர் பேசி முடித்ததும் கார் கிளம்பியது.
சகாதேவன் அண்ணன் மகனுக்கு அழைத்து பார்த்திபன் வீடு வந்த விவரத்தை சொல்ல அவன் மகிழ்ச்சியுடன் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு வீட்டை அடைந்தான்.
வீட்டிற்குள் நுழையும் போதே அம்மாவும் அப்பாவும் பழைய படி பேசி கொண்டிருந்ததை கண்டவன் வேகமாக சென்று தந்தையை அணைத்துக் கொண்டான். பார்த்திபன் “என்னென்னவோ நடந்து போச்சு அபி. ஆனா எனக்கு நம்பிக்கை இருக்கு. எல்லா பிரச்சனையும் சீக்கிரமா முடிஞ்சுடும்” என்று நம்பிக்கையுடன் கூறியவர் அபிமன்யூவின் பின்னால் நிற்கும் அஸ்வினையும் அணைத்து கொண்டார்.
“அபி எதையும் யோசிக்காம செஞ்சு முடிச்சுடுவான். அதனால தான் நான் உன்னை எப்போவுமே அவன் கூட இருக்க சொல்லுறேன்பா. நீ நிதானமா யோசிப்ப. அதே நிதானத்தை கொஞ்சம் இவனுக்கும் கடன் குடுடா” என்று கேலி செய்தபடி பேச வீட்டில் போன சந்தோசம் திரும்பி வந்த மாதிரி இருந்தது அனைவருக்கும். ஆனால் அபிமன்யூவிடம் இன்னும் சுபத்ரா முகம் கொடுத்து பேசவில்லை.
**********************************************************************************
இவ்வாறு இருக்க ஸ்ராவணி பக்கத்து வீட்டு வானரங்களின் தொல்லையை சமாளிக்க இயலாதவளாய் எரிச்சல்பட்டு போனாள். அவர்கள் தரும் தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்ததே தவிர குறையவில்லை. போலீசுக்கு கூட பயப்படாதவர்களை அவள் என்ன தான் செய்து வழிக்கு கொண்டு வருவது என்று யோசித்தவண்ணம் இருக்கையிலேயே எதிர் ஃப்ளாட் ஜெகன்நாதன் சுப்பிரமணியத்திடம் பேச வந்திருந்தார்.
அவரின் மகள் கல்லூரிக்கு செல்லும் போது லிஃப்டில் பக்கத்துவீட்டு வாலிபர்கள் கலாட்டா செய்வதாக கூறியவர் அதை ஏன் என்று கேட்க சென்றதற்கு ஸ்ராவணி வீட்டை அவர்களின் அண்ணனுக்கு விற்கும் வரை இந்த மொத்த அப்பார்ட்மெண்டையும் நிம்மதியாக இருக்க விட மாட்டோம் என்று அவர்கள் சொல்லி வெளியேற்றி விட்டதாக சொல்லி மனவருத்தத்தை பகிர்ந்து கொண்டார்.
இவை அனைத்தையும் ஸ்ராவணியும் அவளின் அறையிலிருந்து கேட்டுக்கொண்டு தான் இருந்தாள். ஆனால் எக்காரணத்துக்காகவும் அபிமன்யூவிற்கு வீட்டை கொடுக்க அவள் மனம் ஒப்பவில்லை.
இப்படியே ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வந்து புலம்ப அவளால் வேலையில் கவனம் செலுத்த முடியா நிலை. அன்று ஞாயிறு. சுப்பிரமணியம் அப்பார்ட்மெண்டில் குழந்தைகள் விளையாடும் நீச்சல் குளத்தை வேடிக்கை பார்க்க போனவர் மயங்கிய நிலையில் மற்ற ஃப்ளாட்காரர்களால் தூக்கிவரப் பட மேனகாவும் ஸ்ராவணியும் பதற்றத்துடன் என்னவென்று கேட்க அவர்கள் சுப்பிரமணியம் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது தான் தெரியும். எப்படி உள்ளே விழுந்தார் என்று யாருக்குமே தெரியாது என்க அந்நேரம் பக்கத்து ஃப்ளாட்டிலிருக்கும் அபிமன்யூவின் ஆட்களில் ஒருவன் “அவரு ஒன்னும் செத்து போகலையே! எங்க அண்ணனுக்கு வீட்டை குடுக்க டிலே பண்ணுனா இன்னும் கொஞ்ச நாளில அதுவும் நடக்கும்” என்று சொல்லிவிட்டு திமிராக நின்றான்.
ஸ்ராவணிக்கு வந்த கோபத்தில் அவனை அறையச் செல்ல அதற்குள் மேனகா வந்து அவளை இழுத்துக் கொண்டாள். “வனி நீ வயலண்டா பிஹேவ் பண்ணனும்னு தான் அவங்க இதல்லாம் பண்ணுறாங்க. அவங்க எதிர்பாக்கிற மாதிரி நடந்துக்க போறியா நீ?” என்று சொல்லி அமைதிப்படுத்தியவள் சுப்பிரமணியத்தை தூக்கி வந்தவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பி வைத்தாள்.
நல்ல வேளையாக வேதா அந்நேரம் கோயிலுக்கு சென்றிருக்க அவர் வருவதற்குள் சுப்பிரமணியமும் விழித்து விட்டார். அவருக்கு சூடாக காபி போட்டு கொடுத்த மேனகா “மாமா! நீங்க எப்பிடி குளத்துக்குள்ள விழுந்திங்க?” என்று கேட்க அவர் குழப்பத்துடன் “நான் A3ல இருக்கிறான்ல குட்டிப்பையன் அவன் தண்ணில விளையாடுறதை பார்த்துட்டு இருந்தேன்டா. அப்போ யாரோ முதுகுல கை வைச்சு தள்ளுன மாதிரி இருந்துச்சு. தண்ணில விழுந்ததும் மூச்சு திணறி மயக்கம் வந்ததுக்கு அப்புறமா எனக்கு எதுவுமே நியாபகம் இல்லடா” என்றார்.
ஸ்ராவணி இறுகிய முகத்துடன் இதனை கேட்டு கொண்டிருக்க சுப்பிரமணியம் மெதுவாக “வனி! நம்ம இந்த வீட்டை அவங்களுக்கே குடுத்துடுவோம்டா” என்று சொல்ல அதை கேட்டு திகைத்தனர் ஸ்ராவணியும், மேனகாவும்.
ஸ்ராவணி சிலிர்த்தவளாய் “முடியாதுப்பா! நான் செத்தாலும் அந்த அபிமன்யூவுக்கு இந்த வீட்டை குடுக்க மாட்டேன். அவன் என்ன நெனச்சிட்டிருக்கான்? இவன்லாம் ஒரு எம்.எல்.ஏ? ஏதோ தேர்ட் ரேட்டட் ரவுடி மாதிரி நடந்துக்கிறான்? சரியான திமிரு பிடிச்சவன்” என்று அவனுக்கு வசவுகளால் மாலை போட சுப்பிரமணியத்துக்கு இந்த பிரச்சனை எங்கே போய் முடியுமோ என்று கவலை வராமல் இல்லை.
ஸ்ராவணி தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காதவள் ஒரு கட்டத்தில் கலங்கி போனாள், அதற்கு காரணம் மேனகா. வழக்கம் போல அவளும், மேனகாவும் ஒன்றாக வீட்டுக்கு கிளம்ப அந்த நேரம் பார்த்து அவளுக்கு எதோ கால் வரவும் ஸ்ராவணியை மட்டும் அனுப்பிவிட்டு ரகுவுடன் அவள் வெளியே சென்றாள்.
ஸ்ராவணி இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் வீடு திரும்பியவள் இரவு நீண்ட நேரம் ஆகியும் மேனகா திரும்ப வராததை கண்டு பதறியவள் ரகுவுக்கு போன் செய்து விஷயத்தை கேட்க அவனோ அவள் ஆறு மணிக்கே கிளம்பி விட்டாளே என்று ஸ்ராவணியின் தலையில் குண்டை தூக்கி போட்டான். அவனிடம் ஏதேதோ சொல்லி சமாளித்து போனை வைத்துவிட்டு ஹால் சோஃபாவில் டென்சனுடன் அமர்ந்திருக்கும் பெற்றோரை பார்த்தாள்.
இருவருமே மருமகளை நினைத்து சாப்பிடாமல் காத்திருக்க காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதும் ஸ்ராவணி ஓடிச் சென்று கதவை திறந்தாள். அங்கே தலையில் கட்டுடன் நின்று கொண்டிருந்த மேனகாவை கண்டதும் “மேகி” என்று அணைத்து கொள்ள அதற்குள் சத்தம் கேட்டு வந்த வேதா அவள் தலையிலிருக்கும் கட்டை பார்த்துவிட்டார்.
“மேகிம்மா! என்னடா ஆச்சு?” என்று அவர் கண்ணில் நீர் நிரம்ப அவளை உள்ளே அழைத்து செல்ல அவளோ வரும் வழியில் அவள் வந்த ஆட்டோவில் ஒரு கார் இடித்துவிட்டதாக கூற சுப்பிரமணியம் ஸ்ராவணியை ஒரு பார்வை பார்க்க அவள் கலங்கிப் போனாள்.
மேனகாவை அழைத்து கொண்டு வேதா சென்று விட சுப்பிரமணியம் “நான் மறுபடியும் சொல்லுறேன்டா வனி! இந்த வீட்டை கேக்கிறவங்களுக்கு வித்துடும்மா! எனக்கு நீங்க ரெண்டு பேரு தான் முக்கியம். நாங்க இன்னும் ரெண்டு நாள்ல அமெரிக்கா போயிடுவோம். உங்களை இங்கேயே விட்டுட்டு போனா எங்களால நிம்மதியா அங்கே போகமுடியாது” என்று வருத்தத்துடன் உரைக்க அவளுக்கும் இப்போது இந்த விளையாட்டு போகும் பாதை சரியில்லை என்று தோன்றியது.
இதற்கு ஒரு முற்றுப்புள்ளியாக இந்த வீடு இருக்குமானால் அதை விற்க அவள் கனத்தை இதயத்துடன் தயாரானாள். ஆனால் இது தந்தை ஆசையாக வாங்கிய வீடாயிற்றே என்று எண்ணும் போதே அவள் கண்ணில் கண்ணீர் நிறைய வேதாவிடம் சொல்லிவிட்டு அறையிலிருந்து ஹாலுக்கு வந்த மேனகாவின் பார்வையில் கண்ணீர் நிரம்பிய விழிகளுடன் நிற்கும் ஸ்ராவணி விழுந்தாள்.
ஒரு நிமிடம் அவளால் இதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அவள் அறிந்த வரைக்கும் ஸ்ராவணி அழுது அவள் பார்த்ததே இல்லை. அப்படிப்பட்டவள் கண்ணில் கண்ணீரை கண்டதும் மேனகாவுக்கு மனம் வலித்தது. சிலையாக சமைந்து அமர்ந்திருந்த ஸ்ராவணியின் அருகில் சென்று அமர்ந்தவள் “வனி! உனக்கு கஷ்டமா இருக்குனா நீ வீட்டை விக்க வேண்டாம்டி” என்று சொல்ல ஸ்ராவணி கன்னத்தில் வழிந்த நீரை துடைத்து கொண்டு “இட்ஸ் ஓகே மேகி! இந்த வீட்டை வித்துட்டா எல்லா கேமும் ஒரு முடிவுக்கு வந்துடும்னு எனக்கே தோணுது. என்ன, இந்த வீட்டோட ஒவ்வொரு செங்கல்லயும் அப்பாவோட உழைப்பும், கனவுகளும் இருக்கு. அது இனிமே நமக்கு சொந்தமில்லைனு நெனைக்கிறப்போ தான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு” என்று சொல்லிவிட்டு மேனகாவை கட்டிக் கொண்டாள்,.
சிறிது நேரம் கழித்து அவளை விட்டு விலகியவள் யோசனையுடன் உறங்கச் சென்றாள். அவளை கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்து கொண்டிருந்த மேனகாவும் அவளை பின்தொடர்ந்து சென்றவள் மனக்கலக்கத்துடனே தூங்கிப் போனாள்.
*******
மறுநாள் காலையில் விழித்த ஸ்ராவணியிடம் அவளின் தந்தை தாங்கள் பொருட்களை ஒழுங்கு படுத்தி அட்டைப்பெட்டிகளில் எடுத்து வைத்துவிடுவதாக கூறியவர் மாலையில் அவள் வரும் நேரத்தில் எல்லாம் தயாராக இருக்கும் என்றும் அனைவரும் ஒன்றாக சேர்ந்தே அண்ணா நகரில் இருக்கும் அவர்களின் பூர்வீக வீட்டுக்கு சென்று விடலாம் என்று சொல்லிவிட்டு அவரின் அறைக்குள் புகுந்து கொண்டார்.
ஸ்ராவணி வீட்டின் பத்திரங்களை எடுத்து வைத்துக் கொண்டு மேனகாவுடன் அலுவலகம் சென்றாள். வேலையில் கவனமின்றி அவள் நடமாட ரகுவிடம் ஒரு விவரம் கேட்க போன மேனகாவின் காதில் விழுந்தது அனுவின் குரல்.
“நல்ல வசதியானவனா பாத்து கல்யாணம் பண்ணிக்கனும். சப்போஸ் அவன் ஓவரா பண்ணுனானு வையேன், டிவோர்ஸ் பண்ணிட்டு அவன் கிட்ட இருந்து ஜீவனாம்சமா ஒரு பெரிய அமவுண்டை கறந்துட வேண்டியது தான்”
மேனகாவுக்கு அதை கேட்கவே நாராசமாக இருந்தது. அவளுக்குமே கல்யாணத்தில் நம்பிக்கை இல்லை தான். ஆனால் அது ஒரு புனிதமான பந்தம் என்ற விஷயத்தில் அவளுக்கு மாற்றுக்கருத்து என்றைக்கும் இல்லை. “இந்த அனுவுக்கு பணத்தை தவிர வேற எதுவுமே கண்ணுக்கு தெரியாது” என்று தலையிலடித்துக் கொண்டு ரகுவின் கேபினுக்குள் சென்றாள் அவள்.
அதே நேரம் ஸ்ராவணிக்கு போன் செய்த சுப்பிரமணியம் பொருட்களை எல்லாம் அண்ணா நகர் வீட்டுக்கு மாற்றிவிட்ட விவரத்தை கூறியவர் பக்கத்து ஃப்ளாட் இளைஞர்களிடம் விவரத்தை கூறிவிட்டதாக சொல்ல அவள் அனைத்துக்கும் உம் கொட்டிவிட்டு போனை வைத்தாள்.
மாலையில் தந்தை மற்றும் அன்னையை கேபில் அனுப்பிவிட்டுக் கடைசியாக வீட்டை ஒரு முறை பார்த்தாள் ஸ்ராவணி. மேனகா வீட்டின் வாயிலில் நின்றவள் “இங்கேயே நின்னா மனசுக்கு கஷ்டமா தான் வனி இருக்கும். நம்ம கிளம்பலாம் வா” என்று அழைத்து செல்ல அன்றும் அவளின் கண்கள் கலங்கிவிட்டது.
அவள் இருக்கும் மனநிலையில் அவளால் வண்டியை ஓட்டமுடியாது என்று மேனகாவே ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்ய அந்நேரம் பார்த்து ஸ்ராவணிக்கு போன் வர அவள் எடுத்து “ஹலோ” என்றாள்.

“என்ன ஸ்ராவணி சுப்பிரமணியம் உங்க வீட்டை ….ப்ச்…என் வீட்டை காலி பண்ணிட்டிங்களா?” என்று கிண்டலாக பேசியவன் அபிமன்யூ. அவள் இருக்கும் மனநிலையில் அவனுடன் பேச அவளுக்கு துளியும் விருப்பமில்லை. கடுப்புடன் அழைப்பை துண்டிக்க போக அதற்குள் அவன் அவசரமாக “இன்னும் டூ டேய்ஸ் உனக்கு டைம். அதுக்குள்ள வீட்டோட பேப்பர்ஸ் என்னோட பேருக்கு மாறணும். பட் யூ டோண்ட் வொர்ரி. உன் வீட்டுக்கு மார்க்கெட் வேல்யூவை விட அதிகமா குடுத்தே வாங்கிக்கிறேன். அப்போ பிராப்பர்ட்டி ரிஜிஸ்ட்ரேசன்ல இன்னும் ரெண்டு நாள் கழிச்சு மீட் பண்ணுவோம். பை! குட் நைட்” என்று போனை வைத்தான் அவன். அவள் முகம் போன போக்கை கண்டதும் மேனகா “யாரு வனி போன்ல?” என்று கேட்க ஸ்ராவணி இறுகிய முகத்துடன் “அபிமன்யூ! இன்னும் ரெண்டு நாள்ல வீட்டோட பேப்பர்ஸ் அவன் பேருக்கு மாறணுமாம். ரிஜிஸ்ட்ரேசன் ஆபிஸ்ல மீட் பண்ணுவோம்னு சொல்லுறான்” என்றபடி ஸ்கூட்டியில் ஏற மேனகா மனதின் வலியை மறைத்தபடி இத்தனை நாள் வாழ்ந்த இடத்தை ஒரு முறை பார்த்தவள் பெருமூச்சுடன் வண்டியை அண்ணா நகர் வீட்டை நோக்கி செலுத்த ஆரம்பித்தாள்.
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction