சைக்கோபதியால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கான அத்தியாவசியத்தை உணர்வதில்லை. தங்களது குறைபாட்டை அவர்கள் உணராத பட்சத்தில் சிகிச்சைக்கு உடன்படவே மாட்டார்கள். கூடவே சிகிச்சைக்கு உடன்படக்கூடிய மனவலுவும் அவர்களிடம் இருக்காது. அப்படியே சிகிச்சைக்கு உடன்பட்டாலும் தங்களிடம் அச்சிகிச்சையால் உண்டாகும் நேர்மறையான மாற்றங்களை ஏற்றுக்கொள்ள சைக்கோபாத்கள் தயங்குவார்கள். சிலர் கடந்தகாலத்தில் இத்தகைய சிகிச்சைக்கு உடன்பட்டு அது தோல்வியில் முடிந்ததால் இன்னும் அதீத பாதிப்புக்கு ஆளாகியிருப்பார்கள். அதனால் மீண்டும் ஒரு முறை சிகிச்சைக்கு ஒப்புக்கொள்ள அஞ்சுவார்கள். கூடவே இத்தகைய சிகிச்சைக்கான செலவும் அதிகம். அதனால் சாமானியர்களால் இந்தச் சிகிச்சையைச் செய்துகொள்ள இயலாது.
-From therapist.com
இதன்யாவின் முன்னே அமர்ந்திருந்தார் வழக்கறிஞர் மனுவேந்தன். அவரருகே முகங்கொள்ளா கோபத்தோடு ஏகலைவனும் அமர்ந்திருந்தான்.
“ஏகலைவன் சாருக்கு பிசினஸ் ரிளேட்டட் ஒர்க்ஸ் எவ்ளோவோ இருக்கு… சம்பந்தமில்லாத கேசுக்காக அவரை ஸ்டேசன்ல உக்கார வச்சு அவர் டைமை வேஸ்ட் பண்ணிட்டிருக்கிங்க மேடம்” என்றார் மனுவேந்தன்.
“ஓ! அவ்ளோ பிசியான ஆள் எதுக்கு இந்தக் கேஸ்ல முக்கியமான ஆதாரத்தைக் கலைச்சார்? அதுக்கு இப்ப வரைக்கும் அவரால பதில் சொல்ல முடியலையே” என இதன்யா அவரைக் காய்ச்சியெடுக்கும் முடிவோடு பேச ஆரம்பிக்க
“ரத்தச்சொந்தத்தைக் காப்பாத்த வேற வழி தெரியலனு சார் சொன்னாரே மேடம்” என பம்மத் துவங்கினார் மனுவேந்தன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
இதன்யா நம்பாத பார்வை பார்த்தாள் அவரை.
“இந்தக் கேஸ்ல ஏகலைவன் சாருக்கு நேரடி தொடர்பு இருக்குங்கிறதுக்கான ஆதாரம் இல்லாத பட்சத்துல அவரை ஸ்டேசன்ல உக்கார வச்சு விசாரிக்கவேண்டிய அவசியம் என்ன வந்துச்சு மேடம்?”
“மறுபடியும் இவர் முக்கியமான சாட்சி எதையும் கலைச்சிடக்கூடாதுல்ல… அதுக்காக தான் அவரை அரெஸ்ட் பண்ணிருக்கோம்”
ஏகலைவன் கோபமடங்காமல் அமர்ந்திருந்த நாற்காலியைத் தள்ளிவிட்டு எழுந்தான்.
“இந்த சேர் உடைஞ்சுதுனா போலீஸ் ஸ்டேசன் ப்ராப்பர்டிய நாசம் பண்ணுனதா இன்னொரு அலிகேசனும் உங்க மேல விழும்” என இதன்யா அமர்த்தலாக உரைத்ததும் வழக்கறிஞரைக் கோபமாகப் பார்த்தான் அவன்.
அவரோ திணறிப்போனார்.
“இங்க பாருங்க சார்… நாளைக்கு மாஜிஸ்திரேட் முன்னாடி ஆஜர்படுத்துற வரைக்கும் இவர் இங்க தான் இருந்தாகணும்… இப்ப நீங்க கிளம்பலாம்” என்று மனுவேந்தனைக் கிளம்பச் சொன்னாள் இதன்யா.
அவரைப் போகச் சொல்லிவிட்டு தடயவியல் ஆய்வகத்திலிருந்து அறிக்கை வந்துவிட்டதா என மகேந்திரனிடம் விசாரித்தாள்.
அந்நேரத்தில் ஏகலைவன் மனுவேந்தனை அழைத்து இரகசியமாக ஏதோ பேசினான். அவனது கண்கள் அடிக்கடி இதன்யாவின் பக்கம் வந்து மீண்டன.
அதை அவளும் கவனித்துவிட்டாள். ஏன் இந்த நோட்டம் என எண்ணியபடி மகேந்திரனிடம் பேச்சைத் தொடர்ந்தாள்.
மனுவேந்தனோ “கவலையே படாதிங்க சார்… என் கிட்ட சொல்லிட்டிங்கல்ல, வேலை முடிஞ்சுதுனு நினைச்சுக்கோங்க… ஆல்ரெடி நீங்க உங்க வேலைய ஆரம்பிச்சிட்டிங்க… நான் இனி பாத்துக்குறேன்… இனிமே இந்தக் கேஸ் சம்பந்தமா உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது… நாளைக்கு வரைக்கும் மட்டும் பொறுத்துக்கோங்க சார்” என்றார் ஏகலைவனிடம்.
“இந்தக் கேஸ் முடிஞ்சிடலாம் சார்… ஆனா இந்த லேடி என்னைப் போலீஸ் ஸ்டேசன்ல உக்கார வச்சு கேக்க கூடாத கேள்விலாம் கேட்டாளே… அதை என்னால மறக்கவே முடியாது” என்று இதன்யாவைக் கை காட்டி கோபத்தோடு சொன்னான் ஏகலைவன்.
“கோவப்படாதிங்க சார்… நீங்க சொன்னது எல்லாத்தையும் நான் கரெக்டா செஞ்சு முடிச்சிட்டேன்… இன்னைக்கு ஒரு நாள் அந்தம்மா என்ன சொன்னாலும் கண்டுக்காம இருங்க”
மனுவேந்தனின் அறிவுரைக்குச் சரியென தலையாட்டினான் ஏகலைவன்.
அவனது திட்டம் பற்றி ஏதுமறியாதவளாகத் தடவியல் துறையிலிருந்து வரப்போகிற அறிக்கைக்காகக் காத்திருந்தாள் இதன்யா.
அறிக்கையும் வந்தது. அதில் கிளாராவின் சால்வையிலிருந்த இரத்தம் இனியாவுடையது என்ற தகவல் இருந்தது.
முரளிதரன், இதன்யா, மகேந்திரன், மார்த்தாண்டன் இந்நால்வரின் இத்தனை நாள் தேடுதல் வேட்டையின் முடிவு கிளாரா என்று சொல்லாமல் சொன்னது அந்த அறிக்கை.
சொல்லப் போனால் வழக்கே முடிந்துவிட்டது.
கிளாரா உண்மையைச் சொல்லவில்லை என்றாலும் சாந்திவனத்திலிருந்து கைப்பற்ற பாலிதீன் கவரிலிருந்த பொருட்களும், சால்வையும் அவளும் ரோஷணும் சேர்ந்து தங்களின் சுயலாபத்துக்காக இனியாவைக் கொன்றிருக்கிறார்கள் என்ற முடிவுக்குக் காவல்துறையை வர வைத்தன.
முத்துவுக்கும் ஜானுக்கும் இனியாவின் கொலையில் சம்பந்தமில்லை என்றாலும் ரோஷணைப் பற்றிய சில உண்மைகளை அவர்கள் மூலம் கிடைத்தன அல்லவா!
முத்துவின் வாக்குமூலமும், கிளாராவின் வாக்குமூலமும் ரோஷணும் ஒரு கொலையாளி என்பதைச் சொல்லாமல் சொன்னது.
அவனுக்குத் தடயவியல் துறை பற்றிய அறிவு இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் மாட்டிக்கொள்வோமென்ற பயத்தில் இனியாவின் உடலைத் தண்ணீரால் சுத்தம் செய்திருப்பானெனத் தோன்றியது.
ஆக, நிஷாந்துடன் இனியா சேர்ந்திருப்பதைப் பார்த்த ரோஷண் அவன் கிளம்பியதும் இனியாவை வலுக்கட்டாயமாக காட்டுக்குகைக்கு அழைத்துச் சென்றிருக்கவேண்டும். கிளாராவின் கட்டளைப்படி அவளைச் சாத்தானுக்குப் பலி கொடுத்துத் தனது பழிவெறியை நிறைவேற்றிக்கொள்ள நினைத்தவன் முதலில் அவளைக் கொடூரமாகத் தாக்கி அமிலத்தால் அவளது முகத்தைப் பொசுக்கியிருக்கவேண்டும்.
பொதுவாக இம்மாதிரி கல்ட் குழுக்களில் நரபலிக்கு உட்படுத்தப்படும் பெண்களை வன்புணர்வுக்கு ஆளாக்குவதை மனதில் வைத்து இனியாவைப் பாலியல் வன்புணர்வு செய்திருக்க வேண்டும்.
அவளது முகத்திலிருந்த தோலை உறித்து உடலெங்கும் கத்தியால் குத்திய பிற்பாடு அவள் இறக்கவில்லை என்றதும் கழுத்தை நெறித்துக்கொன்றிருக்க வேண்டும். அதுவும் அழுத்திய தடத்தை வைத்து யாரும் அவனைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் செய்திருக்கவேண்டும்.
அவள் மரணித்த பிறகு வன்புணர்வுக்கு ஆளானதற்கு சாட்சி இருக்கக்கூடாதென இனியாவின் உடலின் கீழ்ப்பகுதியைத் தண்ணீரால் சுத்தம் செய்துவிட்டு குகையிலிருந்த உதிரத்தைக் கிளாராவின் சால்வையை வைத்து சுத்தம் செய்திருக்க வேண்டும்.
இதெல்லாம் கிளாராவின் கண் முன்னே நடந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் அவள் அந்நேரத்தில் சாந்திவனத்தில் தன் பிள்ளைகள் மற்றும் கணவனோடு சேர்ந்து காணாமல் போன இனியாவுக்காக வருந்துபவளைப் போல அல்லவா நடித்துக்கொண்டிருந்தாள்.
ஏகலைவன் தனக்குக் கிடைக்க வேண்டுமென்ற வெறியில் மூத்தாள் மகளைச் சாத்தானுக்குப் பலி கொடுக்க கிளாரா சம்மதித்திருக்க வேண்டும். ரோஷண் இனியாவைத் தொடர்ந்து கண்காணித்துக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தனது பழிவெறியைப் போக்கியிருக்கிறான்.
அவனுக்கு ஓநாயைப் பழக்கத் தெரிந்திருக்கிறது. மன அழுத்தத்திற்கு மருந்து சாப்பிடுபவனுக்கு மனப்பிறழ்ச்சி கூட இருந்திருக்கலாம். ஒரு கூட்டத்தையே சாத்தான் பராக்கிரமசாலி என நம்ப வைத்தவனுக்கு அந்தக் கூட்டத்தை வைத்து கொலை நடந்த தடயத்தை அழிப்பது பெரிய காரியமாக இருந்திருக்காது.
மொத்தத்தில் ஒரு பெண்ணின் முறைதவறிய உறவுக்கான ஏக்கமும், ஒரு ஆணின் பழிவெறியும் சேர்ந்து இனியா என்ற இளம்மொட்டை மலர்வதற்குள் கறுக்கி அழித்துவிட்டன.
வழக்கு சம்பந்தப்பட்ட அறிக்கையை முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டு நால்வரும் குவார்ட்டர்சுக்குக் கிளம்பினார்கள்.
வீட்டுக்கு வந்ததும் இதன்யாவின் மொபைலில் ஏதோ மெசேஜ் வரும் சத்தம் .
என்னவென எடுத்துப் பார்த்தவள் இரண்டு தினங்களாக வழக்கமாக வரும் வங்கி பரிவர்த்தனை பற்றிய செய்தி தான் என்றதும் சலிப்பாக வாசிக்க ஆரம்பித்தாள்.
ஒரு பெரிய தொகை அவளது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தி அது. இதோடு கிட்டத்தட்ட பதினைந்தாவது செய்தி. முதல் முறை வந்தபோதே வங்கி மேலாளரின் எண்ணுக்கு அழைத்து விவரம் கேட்டிருந்தாள்.
“ஏதோ ராங் க்ரெடிட் மேடம்… டெக்னிக்கல் ஃபால்டால நடந்திருக்கலாம்” என்றார் அவர்.
மீண்டும் மீண்டும் இம்மாதிரி செய்திகள் தொடர்ந்து வரவும் தன் தந்தையை மேலாளரிடம் பேசும்படி கூறியிருந்தாள்.
அவர் போன நேரத்தில் மேலாளர் பிசியோ பிசி. தனது காவல்துறை வேலையைக் காரணம் காட்டி எந்தக் காரியத்தையும் சாதித்துக்கொள்ளக்கூடாதென்ற கொள்கை கொண்டவள் இதன்யா.
அதனால் அடுத்த வாரம் விடுப்பு எடுத்துக்கொண்டு நேரே வங்கி கிளைக்கே சென்று விவரம் சொல்லி குளறுபடிகளைச் சரி செய்ய வேண்டுமென நினைத்து அப்படியே விட்டுவிட்டாள்.
காரணமின்றி எந்தக் காரியமும் நடப்பதேயில்லை. தவறு என்பது ஒரு முறை நடக்கலாம். தொழில்நுட்பக்கோளாறு எப்போதோ ஒருமுறை ஏற்படலாம். ஆனால் இரு தினங்கள் வாடிக்கையாய் நிகழ்ந்த வங்கி பரிவர்த்தனை ரீதியான தவறுக்கு சிறப்பு கவனம் கொடுக்காமல் விட்டதற்கான விலையைக் கூடிய விரைவில் அனுபவிக்கவிருப்பதை அறியாத இதன்யா மறுநாளோடு இனியாவின் கொலை வழக்கு முடிவடையப்போகிறது என்ற எண்ணத்தில் உறங்கிப்போனாள்.
மறுநாள் விடியல் கிளாரா, முத்து மற்றும் ஜான் மூவருக்கும் சோதனையான நாளாக விடிந்தது. நால்வரோடு சேர்த்து ஐந்தாவது ஆளாக ஏகலைவனும் நீதிமன்றத்திற்கு காவல்துறையினரால் அழைத்துவரப்பட்டான்.
அவனுக்கும் கிளாராவுக்கும் தவறான உறவு இருந்ததாக எப்படியோ ஊடகங்களுக்குத் தகவல் போயிருந்தது.
முண்டியடித்துக்கொண்டு மைக்குகளோடு நெருங்க முயன்றவர்களை விலக்கி நிறுத்துவதே காவல்துறைக்குச் சவாலாகிப்போனது.
ஜீவனற்ற விழிகளோடு வந்த கிளாராவுக்கு இனி சாத்தானே வந்தாலும் தன்னைக் காப்பாற்ற முடியாதென்பது புரிந்துவிட்டது.
ஏகலைவனோ அவளைக் கொலைவெறிப்பார்வை பார்த்தபடி முரளிதரனோடு நடந்து நீதிமன்றத்துக்குள் சென்றான்.
இனியாவின் கொலைவழக்கு விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பிலிருந்து அறிக்கையும், விசாரணை வீடியோக்களும், சாந்திவனத்திலிருந்து சேகரிக்கப்பட்ட ஆதாரங்களும் நீதிபதியின் பார்வைக்கு வைக்கப்பட்டன.
குற்றவாளியென சந்தேகிக்கப்பட்ட நால்வரில் ஏகலைவனின் வழக்கறிஞரான மனுவேந்தனைத் தவிர வேறு யாருடைய வழக்கறிஞரும் உத்வேகத்துடன் வாதாடவில்லை.
தனது கட்சிக்காரரான ஏகலைவனை இந்த வழக்கில் குற்றவாளியாகச் சித்தரிக்க திரைமறைவில் பணப்பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாகச் சொல்லி இதன்யாவின் வங்கி பரிவர்த்தனை அறிக்கையை நீதிபதி முன்னே சமர்ப்பித்தார் மனுவேந்தன்.
இதன்யாவுக்கு அதிர்ச்சியில் கண்ணிமைக்க முடியவில்லை. முரளிதரனும் மார்த்தாண்டனும் என்ன நடக்கிறதென புரியாமல் விழிக்கும்போதே மனுவேந்தன் தனது வாதத்தை ஆரம்பித்தார்.
தனது கட்சிக்காரரான ஏகலைவனின் போட்டி நிறுவனம் அவரது மடிக்கணினியில் உளவுமென்பொருள் வைத்து வேவு பார்த்ததைக் குறிப்பிட்டு இனியாவின் வழக்கில் ஈ.டி.எஸ் என ஏகலைவனைச் சந்தேகப்படுவதற்கான முகாந்திரம் அடிபட்டுப் போவதைக் குறிப்பிட்டார்.
ஏகலைவனின் போட்டி நிறுவனங்களில் ஒன்றிலிருந்து தான் இதன்யாவின் கணக்குக்கு கோடிக்கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டிருக்கிறது என்பதைக் குறிப்பிட்டவர் பணத்துக்காக ஏகலைவன் மீது கொலைக்குற்றம் சாட்ட முயன்றதாக இதன்யா மீது குற்றம் சுமத்தினார்.
சாட்சிகள் வரிசையில் அமர்ந்திருந்த ஏகலைவனின் பார்வை வெற்றிப்பார்வையாவதைக் கவனித்துவிட்டாள் இதன்யா.
விழியெங்கும் கோபத்துடன் அவன் நின்றதை குற்றமுள்ள நெஞ்சின் குறுகுறுப்பாக எண்ணி அலட்சியப்படுத்தியது தவறோ? அடிபட்ட பாம்பு சமயம் பார்த்து கொத்திய பிறகு யோசித்தாள் இதன்யா.
அதை விட திருப்புமுனை ஒன்று முத்து குற்றவாளி கூண்டில் ஏற்றப்பட்டபோது நடந்தேறியது.
முத்துவை விசாரித்தபோது மனுவேந்தன் ஏகலைவனின் மடிக்கணினி எப்படி அவன் வசம் வந்ததென கேட்க அவனோ “ஏகலைவன் சாரை ஒரு தடவை தூத்துக்குடி ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணப்போனேன்… அப்ப சார் லேப்டாப்பையும் மொபைலையும் என் டாக்சில மறந்து வச்சிட்டுப் போயிட்டாங்க… எனக்கு சில பொருட்களைப் பாத்ததும் திருடணும்னு தோணும்… அதனால அந்த லேப்டாப்பையும் மொபைலையும் திருடிட்டேன்” என்றான்.
இது இதன்யா மற்றும் முரளிதரனுக்கு இரண்டாவது அதிர்ச்சி.
நீதிபதி அவனது விசாரணை வீடியோவில் ஏகலைவனே அவற்றை ஒப்படைத்ததாக முத்து சொன்னதைக் குறிப்பிட்டுக் கேள்வி எழுப்பவும்
“அந்த மேடம் தான் ஏகலைவன் சார் குடுத்ததா சொல்ல சொன்னாங்க… அப்பிடி சொல்லலனா இனியாவ நான் தான் கொன்னதா என்னை கேஸ்ல மாட்டிவிட்டிடுவேன்னு மிரட்டுனாங்க.” என்று சொல்லி அவர்களை இன்னும் அதிர்ச்சிக்கு ஆளாக்கினான் அவன்.
தொடர்ந்து முத்து மற்றும் ஜானின் பக்கத்து வாதங்களைக் கேட்ட பிற்பாடு அவர்கள் மீதான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டன.
சாட்சியங்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் இனியாவைக் கொலை செய்த பிரதான குற்றவாளி என ரோஷணும் அதற்கு உறுதுணையாக இருந்து உண்மையை மறைத்த குற்றவாளி என கிளாராவும் அடையாளங்காணப்பட்டார்கள்.
பிரதான குற்றவாளி இறந்துவிட்டதால் அவருக்குத் துணையாக இருந்த கிளாராவிற்கும், பெரியவர் முருகையாவைக் கொலை செய்த வழக்கில் ஜான் மற்றும் முத்துவிற்கும் இந்திய குற்றவியல் பிரிவு 302ன் படி ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
நிஷாந்துக்காக சி.சி.டி.வி ஆதாரத்தை அழித்த விவகாரத்தில் ஏகலைவனுக்கு அபராதம் விதித்த நீதிபதி அவனைத் தவறாக வழக்கில் சிக்க வைத்த விவகாரம் தொடர்பாக இதன்யா மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமெனவும் விசாரணை நடத்தவேண்டும் எனவும் தீர்ப்பளித்தார்.
அன்றைய தினம் இனியாவிற்கு நீதி கிடைத்துவிட்டது. ஆனால் அவளுக்கு நீதி கிடைக்க நேர்மை தவறாமல் போராடி ஆதாரங்களையும் சாட்சிகளையும் சேகரித்த இதன்யாவின் நேர்மையோ களங்கப்பட்டு நின்றது.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

