NM Tamil Novels | Tamil Novels

Full Width Radical Red Sliding Messages
✨NM Tamil Novel World உங்களை அன்புடன் வரவேற்கிறது ✨
தளத்தில் ரிஜிஸ்டர் செய்துகொள்ளுங்கள்! உங்கள் கருத்துகளைப் பகிருங்கள்!
© All rights reserved. Any reproduction or illegal distribution of the contents from this site will result in immediate legal action against the person concerned. Tamil Novels and stories here belong to the respective writers and copyrighted to them. NM Tamil Novel World – Nithya Mariappan
கதைகளைத் திருடி PDF போடாதீர்கள்
Dear Ghost writers! கதைக்கருவைத் திருடினால் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்
JellyMuffin.com graphics & Images
Share:
Notifications
Clear all

அந்தி நேரத்து அட்சரங்கள் - டீசர் 3

 
(@nithyamariappankngmail-com)
Member Admin

தேன்மலை அரண்மனையை ஒட்டிய கானகமும் அதில் ஓடும் நதியும் வேதவதியை வசீகரிக்கத் தவறியதே இல்லை. அழகான மாலைப்பொழுதில் கதிரவன் மலைச்சிகரங்களுக்குள் மறையும் முன்னர் தாராளமாக அள்ளி வீசிய ஆரஞ்சு வண்ண கதிர்களில் நதிநீரே ஆரஞ்சு வண்ணம் கொண்டிருந்தது.

நதிக்கரையிலிருக்கும் பெரிய விருட்சத்தின் அடியில் அமர்ந்து தனது கையில் இருக்கும் மடிக்கணினியில் தனது கதையின் அத்தியாயத்தைத் தட்டச்சு செய்துகொண்டிருந்தபோது மரங்களில் குடியிருக்கும் புறாக்கள் சப்தமெழுப்பின. 

அவற்றைத் தொடர்ந்து எங்கிருந்தோ கானாங்கோழி ஒன்று சூரியன் மறைவதை மொத்தத் தேன்மலைக்கும் கத்தி அறிவித்தது.

கானாங்கோழியின் சத்தத்தில் வேதவதியின் விரல்கள் தட்டச்சு செய்வதை நிறுத்தின.

மடிக்கணினியின் வலதுபக்க அடியோரத்தில் இருக்கும் கடிகாரம் திரையில் ஆறு மணி ஆகிறது என்று காட்டவும் பரபரப்போடு எழுந்துகொண்டாள் அவள்.

இந்தக் கானகத்தைத் தாண்டி தேன்மலை அரண்மனை! அதையும் தாண்டிப் போனால்தான் அவளது வீடு இருக்கும் தெரு.

எப்படியும் அரைமணி நேரத்தை இந்த நடைபயணம் விழுங்கிவிடுமெனத் தெரிந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

“அசைன்மெண்டை வீட்டுல இருந்து டைப் பண்ணுனா ஆகாதா? காட்டுப்பக்கம் போனாதான் துரையம்மாக்கு டைப் பண்ண வருமோ?” கிளம்பும்போதே வாதிட்ட அன்னையிடம் ஆறு மணிக்கு முன்னே வீட்டில் ஆஜராகிவிடுவேன் என்று சத்தியம் செய்யாதக் குறையாகச் சொல்லிவிட்டு வந்தவளுக்குக் கதையின் காட்சியைத் தட்டச்சு செய்ததில் நேரம் போனதே தெரியவில்லை.

அவர் தேடுவார் என்பதை விடவும் சூரியன் மறைய மறைய அமைதியான கானகம் கொடுக்கும் அமைதி அவளது நடையை வேகமாக்கியது.

“ஆள் நடமாட்டமில்லாத இடத்துல, காட்டுப்பக்கம் அந்தி சாயுறப்ப யட்சன் வருவான். அந்த நேரத்துல அங்க பொம்பளைப்புள்ளைங்க போனா அவங்களை அவன் தூக்கிட்டுப் போயிடுவான் வேதா. நீ காடு கரைனு சுத்துறப்ப கவனமா இரு”

இதுவும் அவளது அன்னை சொன்ன எச்சரிக்கையே!

அப்போது சிரித்தவளுக்கு இப்போது சின்னதாய் அச்சம் தலைநீட்டியது மனதுக்குள்.

அவளது தந்தை கடந்தவாரம் ஒரு மலையாளப்புத்தகத்தை யாரிடமிருந்தோ வாங்கி வந்திருந்தார். ஐதிக்யமாலா என்ற நாட்டுப்புறக் கதையாடல் புத்தகங்களின் தொகுப்பு அது.

அதில் குபேரனின் செல்வத்தைப் பாதுகாக்கும் யட்சன்கள், யட்சிகள் பற்றிய குறிப்பு எல்லாம் இருக்கிறதென அவர் கதை கதையாய்ச் சொல்ல உறக்கம் வராமல் அதைக் கேட்டு உம் கொட்டியிருந்தாள் வேதவதி.

எல்லாவுமாய் சேர்ந்து அவளை படபடப்பில் ஆழ்த்திய நொடியில் அவளுக்குப் பின்னே இலைச்சருகுகளில் யாரோ நடந்து வரும் சத்தம்!

கூடவே நாசியில் ஏறிய ஏழிலைப்பாலைப்பூவின் நறுமணம்! யட்சனும் யட்சியும் இருக்கும் இடத்தில் இந்தப் பூவின் நறுமணம் இருக்குமென படித்திருக்கிறாள் அவள்.

வேதவதி இதயம் தாறுமாறாகத் துடிப்பதைச் சமாளித்தவளாய் மெல்லத் திரும்பினாள்.

அந்திச்சூரியன் மறைந்து மெல்ல பரவிய இருளில் உயரமான மனிதன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். ஐதிக்யமாலாவில் யட்சனுக்குச் சொல்லப்பட்ட அதே உயரம். அதே சந்தன நிற தேகம். அதே வசீகரப்பார்வை! உடைகளில் மட்டும் தற்கால இளைஞனின் அடையாளம்.

அரண்டு போய்விட்டாள் வேதவதி. மடிக்கணினியை மார்போடு அணைத்துக்கொண்டவள் பின்னோக்கி நகர நகர அந்த உயரமான மனிதன் அவளை நோக்கி தனது பெரிய கால்களை எடுத்து வைத்தான்.

அவன் அவளை நெருங்க அவனது ஆகிருதியானத் தேகத்தின் நிழல் தன்னை மூடுவது போல் ஒரு பிரமை அவளுக்கு.

அந்நேரத்தில் மூளை விழித்துக்கொண்டது.

“மக்குப்பொண்ணே! யட்சனுக்கு நிழல் கிடையாது”

சட்டெனத் தன்னைச் சமாளித்துக்கொண்டவள் ஏதோ பேச வரும் முன்னர் அவனே பேசினான். 

“இங்க பெட்ரோல் பங்க் இருக்குதா?”

அவனது கேள்வியில் அவள் திணறினாள்.

“பெட்ரோல் பங்க்? இங்க...” 

அவள் பதற்றத்தோடு தடுமாற அவன் இறுக்கம் தளர்ந்து சிரித்தான். சற்று தள்ளி கை காட்டினான்.

“அங்க என் கார் நிக்குது. ஃப்ரெண்டோட கல்யாணம்னு கேரளால இருந்து இந்த ஊருக்கு வர்றேன். கூகுள் மேப் ஊருக்குள்ள போக வழிகாட்டாம காட்டுக்குள்ள வழி காட்டிருச்சு. பெட்ரோலும் காலி. நீங்க இந்த ஊர்ப்பொண்ணுதானே? பெட்ரோல் பங்க் எங்கனு சொன்னா நல்லா இருக்கும்”

வேதவதியை விட அவளது மூளை விழித்துக்கொண்டது. 

நண்பனின் திருமணத்துக்காக ஊருக்கு வந்தவன் தனது கார் நின்றதை அவனுக்குப் போன் மூலம் தெரிவிக்கலாமே?

அதையே அவனிடம் கேள்வியாய் கேட்கவும் சன்னப்புன்னகை அவனிடம். அவளது அகன்ற விழிகளில் தெரிந்த கவனமும் கூடுதலாய் பூசியிருந்த அப்பாவித்தனமும் அவனை ஈர்த்தன என்று தனியாய் சொல்லத் தேவையில்லை.

“கேக்கலாம்தான்! ஆனா நெட்வொர்க் கிடைக்கணுமே” தனது ஆர்வத்தைக் குறைக்கும் குரலில் அவன் பேச அவளும் நியாயம் உணர்ந்து பதிலளித்தாள்.

“கொஞ்சம் தள்ளி தான் பெட்ரோல் பங்க் இருக்கு”

“உங்க கூட நடந்து வந்தா அதைக் காட்டுவிங்களா?”

“நானா? யாரும் பார்த்தாங்கனா..”

“லுக்! நான் ஒன்னும் உன் அழகுல மயங்கி உன் கூட வரணும்னு நினைக்கல. உன்னை ஃபாலோ பண்ணியும் இங்க வரல. ஏதோ ஒரு கால்குலேசன்ல இப்பிடி போனா பெட்ரோல் பங்க் வருமாங்கிற யோசனைல வந்தேன். இங்க ஒரு மனுஷ நடமாட்டம் தெரிஞ்சது, அதான் விசாரிச்சேன். தட்ஸ் ஆல். பெட்ரோல் பங்க் எங்கன்னு தெரிஞ்சா சொல்லு. இல்லனா டைம் வேஸ்ட் பண்ணாம நான் அடுத்த வழியைப் பார்த்துப்பேன். எனக்கு நேரம் ரொம்ப முக்கியம்."

அவனது இந்த விறைப்பானப் பேச்சு வேதவதிக்குச் சுருக்கெனத் தைத்தது. இவனைப் போய் யட்சனாக நினைத்தாயே என்று தன்னைத்தானே சபித்துக்கொண்டாள்.

“அப்ப நீங்க அடுத்த வழிய பாருங்க. எனக்கும் நேரம் முக்கியம். எங்க வீட்டுல என்னைத் தேடுவாங்க”

அவனுக்குச் சற்றும் குறையாத அமர்த்தல் தொனியில் பதிலளித்தவள் திரும்பிப் பார்க்காமல் இடத்தைக் காலி செய்தாள்.

****

ஹலோ மக்களே!

சனிக்கிழமை முதல் டெய்லி எபி வரும். காத்திருங்கள் 😍 குட் நைட் 🌝

1769533377-InShot_20260127_222453828.jpg

 

Share your Reaction

Loading spinner

JellyMuffin.com graphics & Images

Be yourself; everyone else is already taken - Oscar Wilde
என் நாவல்களைப் புத்தகமாக வாங்க - Bookshop
என் வாட்சப் சேனல்
என் ஃபேஸ்புக் குரூப்

Quote
Topic starter Posted : January 27, 2026 10:32 PM
(@kothai-suresh)
Honorable Member Member

இன்ட்ரஸ்டிங் 👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 27, 2026 11:24 PM
(@sasikumarmareeswari)
Estimable Member Member

அருமை 👍👍👍👍👍👍

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : January 28, 2026 8:00 AM
(@s-sivananalakshni)
Estimable Member Member

சூப்பர் வேதா. 

 

Share your Reaction

Loading spinner

ReplyQuote
Posted : February 2, 2026 4:59 PM
JellyMuffin.com graphics & Images
JellyMuffin.com graphics & Images