நிஜத்தின் ஓரம் நின்று
கற்பனை ஆழம் கடந்து
மையில் வரைந்த மையல் கதைகள்
மெய்யில் மெல்லினமாவது என்றோ?
-அட்சரனின் வேதா
அட்சரனின் கார் தேன்மலையின் மலைச்சரிவின் முகட்டிலிருக்கும் முதலமைச்சர் ஜெயசந்திரனின் விருந்தினர் மாளிகையான ஜெயவிலாசத்தின் பிரதான வாயிலருகே வரும்போதே, கமாண்டோக்கள் பாதுகாப்புக்காக ஆங்காங்கே நடமாடிக்கொண்டிருப்பதைக் காண முடிந்தது. காவல்துறை பந்தோபஸ்து அதிகமாக இருந்தது. அட்சரனின் காரைப் பரிசோதித்த காவலர் ஒருவர், அவனிடம் மாளிகைக்குள் செல்வதற்கான ஐ.டி பாஸ் இருக்கிறதா என விசாரித்தார்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அருள்மொழி அவனுக்கு ஏற்கனவே அனுப்பி வைத்திருந்த ஐ.டி பாஸை அட்சரன் காட்டவும், வேகமாகத் தனது கையிலிருந்த டேப்லெட்டில் அவனது பெயர் இருக்கிறதா, ஐ.டி நம்பர் இருக்கிறதா எனச் சோதித்துவிட்டு, மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே அனுமதித்தார் அந்தக் காவலர்.
பல ஏக்கர்களில் விரிந்திருந்த அந்த விருந்தினர் மாளிகை மேகங்களைத் தொட்டுவிடுமளவுக்கு அத்தனை உயரமாய், கம்பீரமாய் இயற்கை அன்னை தன் கைப்பட வரைந்த ஓவியமான தேன்மலையில் நிற்பதைக் கண்ட அவனது விழிகளிலும் அழகை ரசிக்கும் பாவனை.

கேரளாவின் ‘நாலுகெட்டு’ கட்டிடக்கலை பாணியில் மேற்கூரை முழுவதும் பழுப்பு வண்ண ஓடுகளால் வேயப்பட்டு, வாயில் கதவுகள் யாவும் தேக்கினால் செய்யப்பட்டு கட்டிடக்கலைஞரின் அதீத ரசனையைக் கொட்டிக் கட்டப்பட்டிருந்தது அந்த மாளிகை. மாளிகையின் பெரிய நிலைக்கதவின் இரு புற நிலைகளிலும் தசாவதாரக் காட்சிகள் மரத்திலேயே செதுக்கப்பட்டிருந்தன. காரை நிறுத்தும் தரிப்பிடத்திலும் கெடுபிடி. அனைத்தையும் சமாளித்து வீட்டு வாயிலுக்கு வந்தவனிடம் மீண்டும் சோதனை.
உள்ளே நுழைந்தவனை ஆத்தங்குடி தள ஓடுகள் பதிக்கப்பட்டு, நீண்ட அறைகளும் காற்று தாராளமாய் வந்து செல்லும் சாளரங்களுமாய் வரவேற்றது அந்த விருந்தினர் மாளிகை. இப்போது வானதி – அருள்மொழியின் திருமணத்திற்காக மலர்களாலும் விளக்குகளாலும் சொர்க்கலோகம் போல அலங்கரிக்கப்பட்டிருந்தது. மாலை ஆகிவிட்டதால் நவீன எல்.ஈ.டி விளக்குச் சரங்களும், சந்திரனின் பூரண ஒளியும் சேர்ந்து அந்த மாளிகையைத் தங்கமாய் மின்ன வைத்துக்கொண்டிருந்தன.
உள்ளே நுழைந்தவன் அருள்மொழியின் மொபைல் எண்ணுக்கு அழைக்க, சிறிது நேரத்தில் அவனும் ஆஜரானான் நடுக்கூடத்தில். விருந்தினர்கள் குழுமியிருந்த அந்த அறையில் உபசரிப்புக்கும் உற்சாகத்துக்கும் குறைவில்லை. அருள்மொழியோடு புன்னகை ததும்பும் முகமாய் வந்து அட்சரனை வரவேற்றார் வானதியின் அன்னையான கயல்விழி.
“கார் ஏதோ ரிப்பேர்னு அருள் சொன்னான். நீ வர லேட் ஆகிடுமோனு பயந்துட்டேன் அச்சு.”
“அதான் நான் வந்துட்டேன்ல ஆன்ட்டி. நதி எங்க?”
கயல்விழியின் முகத்தில் அயர்ச்சி!
“மூஞ்சியைத் தூக்கி வச்சிட்டு அவ ரூம்ல இருக்குறா. அப்பாவுக்கும் மகளுக்கும் இன்னும் அரைமனசுதான்.”
கயல்விழி குறிப்பிடுவது இந்தத் திருமணம் பற்றி என்று அட்சரனுக்குப் புரியாதா என்ன? “நான் போய் பேசுறேன் ஆன்ட்டி” என்றான் அவன் தன்மையாய்.
“நானும் வரட்டுமா?” அருள்மொழி கேட்க, அவனை ஆராய்ச்சிப்பார்வை பார்த்தவன், “உன்கிட்ட நான் தனியா பேசணும். முதல்ல நதி கிட்ட பேசிட்டு வர்றேன்” என்று சொல்ல, “அவ ரூமுக்கு வழிகாட்ட வரவானு கேட்டேன்டா” என்றான் அவன்.
கயல்விழியை உறவுக்காரப் பெண்கள் அழைக்கவும் அவர் போய்விட, நண்பர்கள் இருவரும் வானதியின் அறைக்குச் சென்றார்கள். மூன்று மாடிகளைக் கொண்ட மாளிகை அது. அதில் வானதியின் அறை இருப்பது மூன்றாவது மாடியில்; அங்கிருந்தபடி தேன்மலையை ரசிக்க அவளுக்குப் பிடிக்கும். அருள்மொழியும் அட்சரனும் அவளது அறைக்குள் பிரவேசித்தபோதும், பெரிய ஜன்னலோரமாய் நின்று எதையோ வெறித்துக் கொண்டிருந்தாள்.

அழகான வெண்பட்டில், வெண்தாமரையில் அமர்ந்திருக்கும் சரஸ்வதி போல அத்தனை வசீகரமாய் இருந்தவளின் வதனத்தில் மட்டும் மெல்லிய இழையாய்ச் சோகம்! திருமணமாகப் போகிற மணப்பெண்ணுக்கான நாணமோ, தடுமாற்றமோ அவளிடம் இல்லை. வெளிறிய வதனமும் இறுகிய மோவாயுமாய் சோகவயப்பட்ட பிம்பம் போல அசையாமல் அமர்ந்திருந்தாள்.
“நதி.”
அட்சரனின் குரல் கேட்டதும் திரும்பியவளின் முகத்தில் கல்யாணக் களையே இல்லை. உணர்வற்றிருந்த விழிகளில் சீற்றம் பரவ, அவை குறிவைத்தது என்னவோ அருள்மொழியை. அட்சரன் நண்பனைப் பார்க்க, அவனோ தோள்களைக் குலுக்கினான்.
“இன்னும் மூணு நாள்ல கல்யாணம். இப்பிடி மார்ச்சுவரில இருக்குற பிரேதம் மாதிரி முகத்தை வச்சிருந்தா யாருக்கு உன்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தோணும்?”
அருள்மொழி இவ்வாறு கேட்டதும் வானதியும் வெடிக்க ஆரம்பித்தாள். “கல்யாணம் பண்ணிக்கோனு உன்கிட்ட நான் கேட்டேனா? உன்னைக் கல்யாணம் பண்ணுறதுக்கு மார்ச்சுவரில பிரேதமா இருந்துட்டுப் போயிடலாம்டா.”
இருவரது தற்குறித்தனமானப் பேச்சைக் கேட்டு அட்சரனின் மூளை சூடாகிப்போனது.
“வாயை மூடுங்கடா ரெண்டு பேரும். கல்யாணமாகப் போற பொண்ணு மாப்பிள்ளை மாதிரியா பேசுறீங்க? எங்கம்மா முன்னாடி இந்த வார்த்தையை எல்லாம் நான் பேசிருந்தேன்னா இந்நேரம் என் கன்னம் சிவந்திருக்கும்” என்றான் உரத்த குரலில். சொன்னதோடு அந்த அறைக்கதவைப் பூட்டவும் செய்தான்.
திரும்பி இருவரிடமும் வந்தவன், “நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கைல ஒன்னு சேர்ந்தா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். ஆனா நீங்க?” என்று சலிப்போடு அவன் கையசைக்கையில் கதவு தட்டப்பட்டது. வேகமாகப் போய்த் திறந்தவன், அங்கே நின்ற ஊழியர் ஒருவர் காபி கோப்பையை அவனிடம் நீட்டவும் வாங்கிக்கொண்டான்.
“தேங்க்ஸ்! கொஞ்ச நேரத்துக்கு இங்க யாரும் வரவேண்டாம்னு சொல்லிடுங்க.”
மீண்டும் கதவு அடைக்கப்பட, காபி கோப்பையானது வானதியின் கைகளில் திணிக்கப்பட்டது. அவள் மறுக்காமல் வாங்கிக்கொண்டாள். ஒரு மிடறு அருந்திய பிறகு அருள்மொழியை ஊன்றிப் பார்த்தவள், “ஹீ ஹேஸ் அ ப்ளான் அச்சு” என்றாள் ஆணித்தரமான குரலில்.
அருள்மொழி அவனிடம் சொன்ன அதே வாக்கியத்தை வானதியும் சொல்லவும் அட்சரனுக்குத் திகைப்பு.
“எனக்குத் தெரியும். இவனை அப்பாக்குச் சுத்தமா பிடிக்காது. அப்பிடிப்பட்டவர் இவனை எப்பிடி மருமகனாக்க சம்மதிச்சிருப்பார்? இவன் ஏதோ பண்ணிருக்கான் அச்சு. ஆனா அது மட்டும் இவனோட பிளான் இல்ல. வேற என்னமோ இருக்கு. இவனோட பிளான்ல ஒரு பகுதியா இருக்க எனக்கு விருப்பமில்ல. கல்யாணம், காதல் இதெல்லாம் ரொம்ப அற்புதமான விஷயங்கள். அதை இவன் சுயலாபத்துக்காகப் பயன்படுத்துறானோனு எனக்குச் சந்தேகமா இருக்கு.”
வானதி தன்னை நோக்கி குற்றம் சாட்டியதில் அருள்மொழியின் முகம் கோபத்தில் சிவக்க, அங்கே ஏதும் ரசாபாசம் ஆகும் முன்னர் அட்சரனின் குரல் ஒலித்தது.
“நீ சொன்னதுக்கு ஏதாச்சும் ஆதாரம் இருக்கா?”
“ப்ச்! இல்ல! ஆனா என்னோட உள்ளுணர்வு சொல்லுது. இவன் பழைய அருள் இல்ல. இவன் என்னோட அருள் இல்ல” சொல்லும்போதே அவளது கண்கள் கலங்கத் தலையைக் குனிந்துகொண்டாள் வானதி. அருள்மொழி அதைக் கண்டும் காணாது போல நின்றான்.
“நான் என்னைக்கும் உன்னோட அருள் இல்ல. அப்பிடி இருக்கவும் எனக்கு ஆசையில்ல” என்றான் விறைப்பாக.
அட்சரன் அவனைச் சூடாய் முறைக்கவும், சட்டென நகைத்தவன், “சும்மா சும்மா கொதிக்காத நண்பா. இவங்கப்பாக்கு இந்தக் கல்யாணம் கௌரவப் பிரச்சினை. நான் இவளைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொன்னதும் சந்தோஷமா ஒத்துக்கிட்டார் அந்தாளு. அவ்ளோதான். இவ ரொம்ப யோசிக்குறா மச்சி” என்றான்.
“எங்கப்பாவை அந்தாளு இந்தாளுனு சொன்னா பல்லை உடைச்சிடுவேன்.”
“முதல்ல உன் கை என் கழுத்து வரைக்கும் வருமானு பாரு. அப்புறம் முகத்தை டச் பண்ணி பல்லை உடைக்கலாம்.”
“அடேய்களா, சிங்கிள் கேப் கிடைச்சாலும் விடாம அடிச்சுக்குறீங்க” என்ற அட்சரன், “நீ காபியை குடி” என்று வானதியிடம் கட்டளையிட்டுவிட்டு, “நீ கொஞ்ச நேரத்துக்கு உன் திருவாயை மூடு” என்று அருள்மொழியிடம் கண்டிப்பான குரலில் சொல்லும்போதே கதவு மீண்டும் தட்டப்பட்டது.
அட்சரன் இவர்கள் மீதிருந்த ஒட்டுமொத்தக் கடுப்போடு கதவைத் திறந்தபோதே, “எவன்டா அது நிலைமை புரியாம கதவைத் தட்டிக்கிட்டே இருக்குறது? கொஞ்சமாச்சும் மேனர்ஸ் இருக்கா?” என்று கடுகடுத்தவன், கதவுக்கு மறுபக்கம் நின்றவளைப் பார்த்ததும் சுழித்த புருவத்தையும் கோபத்தில் இறுகிய மோவாயையும் இயல்புக்குக் கொண்டு வந்தான்.

நொடிப்பொழுதில் முகபாவனையில் வந்த மாற்றம் அவனது உடல்மொழியிலும் தெரிந்தது. பார்வையில் திகைப்பு ஏறி, உடல் உறைநிலைக்குப் போய்விட்டதைப் போலச் சிலையாய் சமைந்து நின்றான்.
ஆங்கில நாவல்களில் ஒரு வரி வரும் – His eyes softened when he saw her. அந்த வரிக்கு உதாரணமாய்ப் பார்வையில் மென்மை பூசி நின்றான் அட்சரன்.
அவனுக்கு எதிரே நின்றவள் வேதவதி. சற்று முன்னர் கானகத்தில் குர்தியில் பார்த்த பெண்ணை, அரைமணி நேர இடைவெளியில் மீண்டும் இவ்வளவு நெருக்கத்தில் பார்த்தவனுக்கு மெய்மறந்த நிலை. பர்பிள் வண்ணத்தில் சிறிய கட்டங்களாய் ஜரிகையோடிய மல் காட்டன் புடவைக்கு, மெஜந்தா வண்ணத்தில் ஜரிகைப் பொட்டுகள் வைக்கப்பட்ட பிளவுஸ் அணிந்து, அடர் கூந்தலை மேலே கிளட்ச் மாட்டி கீழே விரித்துவிட்டபடி நின்றவளை ரசிக்க யாருக்குத்தான் பிடிக்காது?
அவன் கத்தியதில் மருண்டு முகம் சிவந்து போனவளின் விழிகள், இதோ இன்னும் சிறிது நேரத்தில் கண்ணீரைச் சிந்தப் போகிறோம் எனக் கட்டியம் கூறின. அணிந்திருந்த புடவையின் தலைப்பை இறுகப் பற்றிக்கொண்டவள், சற்று முன்னர் கானகத்தில் பார்த்த திமிர்பிடித்தவனைத் திருமண வீட்டில் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அங்கே அவளைப் பயமுறுத்திய பாலைப்பூவின் வாசனை இப்போதும் அவன் மீது; ஒருவேளை பெர்பியூமின் நறுமணமாக இருக்கலாம். அதோடு கலந்து சங்கமித்திருந்தது அவளது சிகையில் சூடியிருந்த மல்லிகைச்சரத்தின் பரிமளம்.
அட்சரனின் முதுகுப்பக்கம் இருந்து “வேதா வந்துட்டியா?” என்று குரல் கேட்டதும், வேதவதியின் முகத்திலிருந்த மருண்ட பாவனை அகன்றது. ‘வேதா’ என்ற பெயரில் அட்சரனும் இயல்பானான்.
“நான்… உள்ள… “ ஆட்காட்டி விரலால் அவனை நகருமாறு அவள் சொல்லவும், அரைமணி நேரத்துக்கு முன்னர் அவள் தன்னை கானகத்தில் அலட்சியமாய்ப் பேசிவிட்டுப் போனது அட்சரனின் நினைவடுக்கில் மின்னலாய் வந்து போனது!
முறைத்த பாவனையோடு அவன் விலகி நிற்க, வெகு கவனமாக அவனை உரசாத வண்ணம் அறைக்குள் நுழைந்த வேதவதி, வானதியைப் பார்த்ததும் குதூகலத்தோடு அணைத்தாள். “நீ ரொம்ப அழகா இருக்க வானு” கன்னம் கிள்ளி அவள் கொஞ்சியதும் வானதிக்கே நாணம் வந்துவிட்டது.
“கீழ உங்க சொந்தக்காரங்க, போலீஸ், கமாண்டோனு ரொம்ப கூட்டமா இருந்துச்சு வானு. யாழு இல்லனா நான் வந்திருக்கவே மாட்டேன்” என்றாள் அவள் கதை சொல்லும் பாவனையோடு.
அட்சரன் கதவை மீண்டும் அடைக்கப் போகவும், “கதையைச் சாத்திடாதிங்க. என் ஃப்ரெண்ட் யாழு வருவா” என்றாள் வேதவதி. அட்சரன் கானகத்தில் நடந்த சம்பவத்தின் நினைவில் அவளைப் புகைச்சலோடு பார்த்தவன், “நான் ஒன்னும் இங்க கதவை பூட்டித் திறக்குற வேலைக்கு வரல” என்றான் காட்டமாக.
‘இவள்தான் அந்த வேதாவாக இருக்கவேண்டும். ஒரு தொலைபேசி அழைப்புக்கு அவ்வளவு தயங்கியவளா என்னிடம் கானகத்தில் அலட்சியமாய்ப் பேசிவிட்டுப் போனது?’
“அச்சு” அதட்டலாய் வானதி குரல் வரவும், அவன் தோள்களைக் குலுக்கிக்கொண்டு வேறு பக்கம் பார்த்தான். ‘அச்சு’ என்ற பெயரில் வேதவதி தடுமாறி, பின்னர் தன்னை நிதானப்படுத்திக்கொண்டாள். அதற்குள் வானதி அருள்மொழியைக் காட்டினாள்.
“அருள்.”
வேதவதியின் முகத்தில் கனிவு படர்ந்தது. “ஹலோ அண்ணா” என்றாள் மெல்லிய குரலில். அவன் தலைசாய்த்துச் சினேகப்பார்வையுடன் புன்னகைத்தான், “ஹாய்மா” என்றபடி.
“இவ வேதா! என் ஃப்ரெண்ட். மேடம் ஒரு ரைட்டர். அச்சுக்குத் தெரியுமே” பொதுப்படையாக வானதி பேச, அட்சரன் திரும்பிப் பார்த்தான்.
வேதவதியால் அவனது பார்வையைச் சந்திக்கவே முடியவில்லை. இவன் தான் அட்சரன் என்று தெரியாமல் காட்டுக்குள் வைத்து கொஞ்சம் அதிகமாய்ப் பேசிவிட்டோமே என்ற சங்கடத்தில் புன்னகைக்க முயன்று முடிவில் தோற்றாள். அட்சரன் பெயருக்குக் கூடச் சிரிக்கவில்லை. ‘அப்படியா’ என்பது போலத் தலையை ஆட்டிவிட்டு அருள்மொழியிடம் வந்தான்.
“அவங்க பேசட்டும். நீ என் கூட வா” என்று அவனைத் தன்னோடு அழைத்துச் செல்ல முற்பட்டான்.
“இவ கதையைப் பத்தி உன்கிட்ட பேசிருந்தேனே அச்சு” வானதியின் குரலால் தடுக்கப்பட்டவன் திரும்பினான். அவனது விழிகள் நிலைபெற்றது என்னவோ வேதவதியின் முகத்தில்.
“ஆரம்பத்துல இருந்து இவங்க கதைக்காக மத்தவங்கதானே பேசுறீங்க. யார் ஆத்தரோ அவங்க தான் என்கிட்ட பேசணும்.”
அழுத்தம் திருத்தமாகச் சொன்னவன் அருள்மொழியோடு வெளியேற எத்தனிக்க, அதே நேரத்தில் வானதியோ வேதவதியின் கையைப் பிடித்து, “போய் பேசு அவன்கிட்ட!” என்று தள்ளி விட, சரியாக அப்போது வானதியின் பக்கம் திரும்பிய அட்சரன் மீதே அவள் மோதிக்கொண்டாள்.

எதிர்பாரா மோதலில் பதற்றமும் விழுந்துவிடுவோமோ என்ற பயமும் அதீதமானதில், அட்சரனின் சட்டையின் ஒரு பகுதியை அவள் பற்றிக்கொள்ள, அவனோ அவள் விழாதவண்ணம் தோள்களைப் பிடித்து நிறுத்தினான். வேதவதி திருதிருவென விழித்தவள் பதறிப்போய் அவனது சட்டையை விடவும், அட்சரனும் அவனது கைகளை விலக்கிக்கொண்டான்.
அவளது பதற்றம் குறையவில்லை என்றதும், “ஹேய்! ஈசி ஈசி! ஒன்னுமில்ல. ஓ.கே” என்று அவளை அமைதியாக்க முயன்றான்.
“எனக்கு ஒன்னும் இல்ல சார். நான்… ரொம்ப நல்லா எழுதுவேன்… ஒரு தடவை என் கதையை…” வார்த்தைகள் தந்தியடிக்க அவள் பேசவும், கையுயர்த்தியவன், “ம்ம்! ஹெல்வட்டாஸ் மெயில் ஐடிக்கு மேனுஸ்கிரிப்டை அனுப்புங்க. மெயில் ஐடி தெரியும்ல?” என்று தலை சரித்துக் கேட்க, “ஹான்! தெரியும் தெரியும்” என்று வேகமாகப் பதில் வந்தது அவளிடமிருந்து.
அட்சரனின் இதழ்களில் அவளது பதற்றமும் அவசரமும் கண்டு புன்னகை அரும்பியது. உதடுகள் கொஞ்சம் வளைய, பற்கள் தெரியாத புன்னகை. வேதவதியின் கண்கள் அவனது புன்னகையில் இமைக்க மறந்து நிலைத்துவிட்டன.
“வா அருள்!”
அவனும் அருள்மொழியும் அங்கிருந்து போய் சில நொடிகள் ஆன பின்னரும், நின்ற இடத்திலிருந்து நகரவில்லை அவள். நகரத் தோன்றவில்லை.
“மெயில் அனுப்பிடு வேதா.”
வானதியின் குரல் முதுகுப்புறம் கேட்டதும்தான் சுயம் தெளிந்தாள். அடுத்த சில நிமிடங்களில் அங்கே யாழினியும் வந்துவிட, மூன்று தோழிகளும் நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்த மகிழ்ச்சியை உரையாடித்தீர்த்துக்கொள்ள எண்ணினார்கள். அதற்குள் திருமணத்திற்கானச் சடங்கைக் காரணம் காட்டி அறைக்குள் வந்த உறவுக்காரப் பெண்கள், வானதியோடு யாழினி, வேதவதியையும் தங்களோடு அழைத்துப்போய்விட்டார்கள்.
“அக்கா, வானுவோட புடவை தலைப்பைப் பிடிச்சுக்கவா? அவ நடக்குறப்ப காலுக்குள்ள அந்த டேஜல்ஸ் போகுது” என்று கேட்டபடி உறவுக்காரப் பெண்களோடு படியிறங்கிய வேதவதி, அருள்மொழியின் தோழனாய் நடுக்கூடத்தில் அமர்ந்திருந்த அட்சரனின் விழிகளைச் சந்தித்ததும் அமைதியிழந்து பரிதவிப்பில் ஆழ்ந்து போனாள். என்னவெனத் தெரியாத, பெயர் சூட்டாத உணர்வொன்றின் பிடியில் அவள் மனம் சிக்கிக்கொண்டதன் அறிகுறியே இந்த அமைதியின்மை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

