வேண்டுமென்றே அவளைப் பயமுறுத்த நமட்டுச் சிரிப்போடு கேட்டாள் ஒரு பெண்.
“அட! நீ வேற வாயை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்க மாட்டியா ரோஜா?” என்று அந்தப் பெண்ணை அடக்கிய கனகவல்லி, “யாழினி வீட்டுல உக்காந்து டைப் பண்ணு. மத்த இடத்துக்குப் போனா இருட்டுறதுக்குள்ள வீட்டுக்கு வா” என மகளை அனுப்பிவைத்தார்.
அதென்ன யட்சன் கதை என்று யோசித்தவளாய் யாழினியின் வீட்டுக்கு நடை போட்டாள் வேதவதி.
தையல் வகுப்பு இப்போது ஆரம்பித்தால் மதிய உணவுக்கான நேரம் வரை தொடரும். வேதவதிக்குக் கதைக்கான அத்தியாயத்தை யோசிக்கவும் தட்டச்சு செய்யவும் அமைதியானச் சூழல் தேவை. கனகவல்லியின் மாணவிகள் வந்துவிட்டால் அவர்களின் வீடே ஒரு குட்டித் தொழிற்சாலையாக மாறிவிடும். ‘தக் தக் தக்’ என்ற சத்தம் அடுத்த வாக்கியத்தை அவளைத் தட்டச்சு செய்யவிடாது.
அதனால்தான் அமைதியானச் சூழலைத் தேடி விடுமுறை நாட்களில் வேதவதி ஓடுவாள். அதில் ஒன்றுதான் யாழினியின் வீடு. தேன்மலை நியாயவிலைக்கடையின் விற்பனை அதிகாரியாகப் பணியாற்றும் யாழினிக்கு ஞாயிறு விடுமுறை. அவளும் அவளது பாட்டி மீனாட்சியும் மட்டும்தான் அங்கே இருப்பார்கள். அவளது தாய் தந்தையர் அவள் குழந்தையாக இருந்தபோதே மறைந்துவிட்டார்கள்.
வேதவதி அமைதியாக அமர்ந்து தனது கற்பனையில் மிதந்து அத்தியாயங்களைத் தட்டச்சு செய்வாள். எந்தத் தொல்லையும் இருக்காது; கை வலி கூடத் தெரியாது தட்டச்சு செய்யும் சுவாரசியத்தில்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
வேகநடையில் யாழினியின் வீட்டை அடைந்தவளுக்கு அங்கே நிலவிய ஆழ்ந்த அமைதி தனியொரு இதத்தைக் கொடுப்பதாய்!
“யாழு!”
வேதவதியின் குரல் கேட்டதும் மீனாட்சி பாட்டியின் தலை தெரிந்தது.
“வந்துட்டியா எழுத்தாளினி? உன்னைக் காணோமேனு யாழு கிட்ட சொல்லிட்டிருந்தேன்.”
“கிண்டல் பண்ணாதீங்க ஆச்சி.”
அவள் சுணங்கவும், “சரித்தா! நீ சுணங்காத. எழுது போ. நான் வேங்கடம் மதினி வீட்டுக்குப் போறேன்” என்று புடவையை உதறிக்கொண்டு கிளம்பினார்.
வேதவதி காலணியைக் கழற்றிவிட்டு வீட்டுக்குள் நுழைந்தபோதே பாத்திரங்களைக் கழுவும் சத்தம் கேட்டது.
“இன்னைக்குப் புட்டு அவிச்சேன். சாப்பிடுறியா வேதா?” சமையலறையிலிருந்து கேட்டாள் யாழினி.
“இப்பதான் மினி இட்லி சாப்பிட்டு வந்தேன் யாழு. அப்புறமா சாப்பிட்டுக்குறேன்.”
பதில் சொன்னபடியே கையோடு கொண்டு வந்த நெல்லிக்காய் ஊறுகாய் இருந்த டிபன் பாக்சைச் சமையலறை மேடையில் வைத்தவள் “பத்தாவது அத்தியாயம் பாதியில நிக்குது. அதை டைப் பண்ணப்போறேன்” என்று சொல்லிவிட்டு நடுக்கூடத்துக்குப் போய்விட்டாள்.
நடுக்கூடத்தின் ஜில்லென்ற தள ஓடு பதித்த தரையில் அமர்ந்து, மடிக்கணினியில் தனது கதைக்கான அத்தியாயத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தாள் வேதவதி. யாழினி பாத்திரங்களைக் கழுவி முடித்துவிட்டு வந்தவள், மொபைல் போனை எடுத்துக்கொண்டு அவளருகே அமர்ந்துவிட்டாள்.

வேதவதியை விட மூன்று வருடங்கள் மூத்தவள். அவள் பிறந்ததும் அவளது அன்னை மறைந்துவிட, அவளை மீனாட்சியின் பொறுப்பில் விட்டுவிட்டுப் போன தந்தையும் யாழினியைப் பொறுத்தவரை இறந்தவரே! அன்பான பெண்; தைரியமானவளும் கூட. அனைவரிடமும் சீக்கிரத்தில் பழகிவிடுவாள். அதுவே வேதவதியை அவளுடன் பிணைத்தது எனலாம். எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் அல்லவா!
“வானதி இன்னும் ரெண்டு நாள்ல வந்துடுவா வேதா.”
தட்டச்சு செய்வதை நிறுத்திய வேதவதியின் முகத்தில் குதூகலம்.
“ஜாலிதான்! ஆனா அவ கல்யாணப் பொண்ணாச்சே! முன்ன மாதிரி நம்ம கூடப் பேச நேரம் இருக்குமா? சும்மாவே அவங்க பங்களாவுல ஏகப்பட்ட செக்யூரிட்டி பந்தோபஸ்து இருக்கும். இப்ப கல்யாணம் வேற. நம்மளை உள்ள விடுவாங்களா முதல்ல?”
“அவ நம்ம பிரண்ட் வேதா. நேத்து நைட் என்கிட்ட பேசுனப்ப கூட, நாம எப்ப வேணாலும் அவங்க பங்களாவுக்கு வரலாம்னு சொன்னா. நீ அவ அனுப்புன மெசேஜைப் பாக்கலையா நம்ம வாட்ஸ்அப் குரூப்புல?”
“இல்லையே! நேத்து அசைன்மென்ட் ஒன்னு எழுத வேண்டியது இருந்துச்சு யாழு. எழுதிட்டு அப்படியே படுத்துத் தூங்கிட்டேன்.”
சொன்னவள் உடனடியாக டேட்டாவை ஆன் செய்தாள். தேன்மலையில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிக்னல் கொஞ்சம் பலவீனமாகத்தான் இருக்கும்; ‘4G’யே திணறும். அதனால் சில நொடிகள் தாமதித்த பிறகு வானதி அனுப்பிய வாட்ஸ்அப் செய்தி வந்து சேர்ந்தது அவளது மொபைலுக்கு. அதில் யாழினி சொன்ன தகவலை அனுப்பியிருந்தாள் வானதி. கூடவே வேதவதிக்காக இன்னொரு தகவலும் அனுப்பியிருந்தாள்.
“நீ உன்னோட நாவல் ‘பீனிக்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ்’ மூலமா புக்கா வரணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டிருந்தல்ல. நான் விசாரிச்சுப் பாத்தேன். அவங்களுக்கு ரைட்டர் டைரக்டா புக் அனுப்ப முடியாதாம். நீ ஒரு லிட்டரரி ஏஜென்ட் மூலமா உன்னோட கதையை அவங்களுக்கு அனுப்பிவைக்கணும். அதை அந்த லிட்டரரி ஏஜென்ட் கொஞ்சம் மெருகேற்றி பப்ளிஷிங் ஹவுஸோட எடிட்டருக்கு அனுப்புவாங்க. அந்த எடிட்டருக்கு உன் கதை பிடிச்சதுன்னா அதை புக்கா போடுவாங்க. இதுதான் உலகளவுல இருக்குற பெரிய பதிப்பகங்கள்ல வழக்கம். என் பிரண்ட் ஒருத்தன் லிட்டரரி ஏஜென்சி வச்சிருக்கான். அவன் காண்டாக்ட் டீடைல், மெயில் ஐடி அனுப்புறேன். பேசிப் பாரு. உனக்காக நான் அவன்கிட்ட பேசலாம்தான். ஆனா ‘அச்சு’க்கு ரெகமெண்டேஷன் சுத்தமா பிடிக்காது. நீ உன்னோட சொந்த முயற்சில போனாதானே கெத்து.”
வேதவதிக்கு ஒரே நேரத்தில் தலையில் யாரோ கூடைப் பூவைக் கொட்டியது போல இதமாகவும், சாப்பிடுகிறபோது பற்களில் கடிபடும் சிறுகற்களைக் கடித்தது போலச் சங்கடமாகவும் இருந்தது.
The Helvetas, Alwarpet
thehelvetas_la@gmail.com
இலக்கிய முகவரின் முகவரி, மின்னஞ்சல், தொலைபேசி எண் கிடைத்ததில் இதம்; ஆனால் அவரிடம் அவளே பேச வேண்டுமென்றதும் பயம். யோசனையோடு யாழினியைப் பார்த்தவள் உதட்டைக் கடித்தாள்.
“என்ன பாக்குற? புரூப் பாத்து வச்ச கதை இருந்துச்சுன்னா இவங்களுக்கு மெயில் பண்ணு. அப்புறமா கால் பண்ணிப் பேசு.”
“நான் பேசணுமா?” தயக்கத்தோடு வேதவதி கேட்க, “நீதானே ரைட்டர். அப்ப நீ தான் பேசணும்” என்றாள் யாழினி.
“அது… அவங்க யாருன்னு எனக்குத் தெரியாது. எப்படி… நான்…”
தோழியின் திணறலைப் பார்த்த யாழினி தலையில் அடித்துக்கொண்டாள்.
“அவங்க என்ன உன்னைக் கடிச்சு முழுங்கவா போறாங்க? பேசுடி. உன் கதையை அவங்க செலக்ட் பண்ணிட்டாங்கன்னா நல்லதுதானே?”
“ம்ம்ம்… ஆனா எப்படிப் பேசணும்னு தெரியலையே.”
மீண்டும் யாழினி தலையில் அடித்துக்கொள்ளாத குறை. வேதவதி சிறிது நேரம் யோசித்தபடியே தனது கைவிரல் நகங்களைக் கடித்துத் துப்பியவள், திடுமென முகம் மலர்ந்தவளாய் யாழினியின் கையைப் பற்றிக்கொண்டாள்.
“யாழு, எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுறியா? எனக்குப் பதிலா நீ அவங்ககிட்ட பேசேன்.”
யாழினி சட்டென அவளது கையை விலக்கினாள்.
“இது சரியில்ல வேதா. பேசவே யோசிக்குற ரைட்டர் என்னத்தை எழுதிருப்பாங்கன்னு அவங்க கேட்டுட்டா என்ன பண்ணுறது?”
“பேசுறதுக்கும் எழுதுறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு யாழு? ப்ளீஸ் ப்ளீஸ்.”
கெஞ்சிக் கூத்தாடி யாழினியைக் கரைத்தாள் வேதவதி.
“முதல்ல அவங்ககிட்ட பேசிட்டு அப்புறமா மேனுஸ்கிரிப்ட் அனுப்பலாம் யாழு. ப்ளீஸ்! எனக்கு இருக்குற அதிகபட்ச ஆசையே என் கதையைப் புக்கா பாத்துடணும்ங்கிறது மட்டும்தான். ஒரு புக், ஒரே ஒரு புக் என் கையில வந்துட்டா போதும்! அப்புறம் நான் செத்துப் போனா கூடக் கவலை இல்ல.”
உணர்ச்சிவசப்பட்டுப் பேசியவளின் கையில் பட்டென்று அடித்தாள் யாழினி.
“என்ன பேசுற நீ? இன்னொரு தடவை இப்பிடிப் பேசுனா உன் கன்னம் வீங்கிடும். ஆளையும் மண்டையையும் பாரு. இப்ப என்ன? நான் அந்த லிட்டரரி ஏஜென்சில உனக்குப் பதிலா பேசணும். அவ்ளோ தானே? பேசுறேன்.”
வானதி அனுப்பியிருந்த எண்ணுக்குக் கொஞ்சம் தயக்கத்தோடு தான் அழைத்தாள் யாழினி. என்ன பேசுவது? எப்படிப் பேசுவது? ஒரு முன்னேற்பாடும் இல்லாமல் அவள் தவிக்கையில் தொலைபேசி அழைப்பு இணைக்கப்பட்டது நிறுவனத்திடம்.
“ஹலோ.”
அழுத்தமான ஆண் குரல் செவியில் விழவும், யாழினிக்கே கொஞ்சம் என்ன பேசுவதென்று மறந்த நிலைதான்.
“ஹலோ!”
இரண்டாம் முறையாக அதே அழுத்தமான குரல் ‘யாரடா இது’ எனும் தொனியில் கேட்கவும்,
“ஹலோ நான்… நான் யாழினி பேசுறேன் சார். ஹெல்வட்டாஸ் தானே?” என்று வினவினாள் அவள்.
“ம்ம்! என்ன விஷயமா கால் பண்ணிருக்கீங்க?”

“என் பிரண்ட் ஒருத்தி ஒன் இயரா கதை எழுதிட்டிருக்கா. அவளுக்கு அவளோட கதை புக்கா வரணும்னு ரொம்ப ஆசை. நெட்ல சர்ச் பண்ணிப் பாத்தப்ப உங்க லிட்டரரி ஏஜென்சி பத்தி டீடைல் கிடைச்சுது சார். அவ உங்களோட மெயில் ஐடிக்கு மேனுஸ்கிரிப்டை அனுப்பிவைக்கலாமா?”
“கதை எழுதுறது யாரு?”
“என் பிரண்ட். அவ பேர் வேதா. ஆத்தர் நேம் வேதா கஜேந்திரன்”
“அப்ப அவங்கதானே என்கூடப் பேசிருக்கணும்? நீங்க என்ன அவங்களோட பிராக்சியா?”
வெட்டுவது போல எதிர்முனை வினவியதும், யாழினி பதில் சொல்லத் தெரியாமல் திகைத்தாள்.
“அவ கொஞ்சம் தயக்கமா…”
“இவ்வளோ தயக்கம் இருக்குறவங்க எப்படி கதைகள் மூலமா சென்சிடிவான கருத்துகளை எழுதுவாங்க? பத்தோட பதினொன்னா எழுதுறவங்களுக்கான இடமில்ல ஹெல்வட்டாஸ். உங்க பிரண்ட் எழுதுற எழுத்து யாரையாச்சும் தொந்தரவு பண்ணனும். அதுல வர்ற கருத்துகள் யாரோ ஒருத்தரையாச்சும் சிந்திக்க வைக்கணும். அப்படிப்பட்ட எழுத்தை எழுதுற தைரியம் சாதாரண போன் காலுக்குப் பிராக்சி தேடி ஓடுற ஆளுக்கு இருக்காதுன்னு தோணுது. சாரி! உங்க பிரண்டோட மேனுஸ்கிரிப்டைப் படிக்குறதுக்கு முன்னாடியே நான் ரிஜெக்ட் பண்ணிட்டேன்னு சொல்லிடுங்க.”
“சார் சார்! ப்ளீஸ்! வேதாவோட கனவு இது. நீங்க ஒரு தடவை அவளோட கதையைப் படிச்சுப் பாருங்க. ‘வாய்ச்சொல் வீரர்கள் வாள் வீசமாட்டார்கள்’னு பழமொழியே இருக்கு சார். அவ எழுத்து கண்டிப்பா உங்களுக்குப் பிடிக்கும்.”
யாழினி அவசரமாகச் சொல்லவும், மறுமுனையில் பேசியவனின் குரலில் இறுக்கம் விடைபெற்று, கேலி செய்யும் பாவனை குடியேறியது.
“நீங்க சொல்லுற பழமொழிக்கு அர்த்தம், வீணா உதார் விடுறவங்ககிட்ட செயல்னு ஒன்னு இருக்காதுங்கிறதுதான். ஆனா உங்க பிரண்ட் அவங்களோட தேவைக்குக் கூடப் பேச யோசிக்கிற ரகமா இருக்குறாங்க. அவங்களுக்கு இந்தப் பழமொழி செட் ஆகாது. உங்க பிரண்ட் நேம் என்ன சொன்னீங்க? வேதா… அம் ஐ ரைட்? பியூச்சர்ல இந்தப் பேர்ல ஹெல்வட்டாஸை யாரையும் காண்டாக்ட் பண்ணுனாங்கன்னா, ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிப்பேன், அவங்க கதையை ஏத்துக்குறதுக்கு.”
சொன்னதோடு மட்டுமின்றி அழைப்பையும் துண்டித்தது மறுமுனை. யாழினியின் முகமே கடுகடுவென மாறிப்போனது அந்த மொபைல் அழைப்புக்குப் பிறகு.
“அடியே அவன் என்னை எண்ணெய்யை ஊத்தி காய்ச்சாத குறை. எப்பா! டி.எம்.டி ராட்டை சினாக்ஸா சாப்பிடுவான் போல. முடியலடா சாமி. வானதிக்கு மெசேஜை போடு. அவ பேச சொன்ன ஏஜென்சில ஓவரா ஆட்டிடியூட் காட்டுறாங்கனு சொல்லு.”
புலம்பித் தீர்த்தவள் ஹெல்வட்டாஸ் நிறுவனத்தின் நபர் தன்னுடன் பேசிய அழைப்பின் பதிவை வேதவதிக்குப் போட்டுக் காண்பித்தாள்.

அதில் கேட்ட குரல் வேதவதியின் இதயத்தில் குடிகொண்ட நம்பிக்கையின் மீது ஈயகுண்டாக மோதியது. அந்த ஆடவன் பேசிய ஒவ்வொரு வாக்கியமும் ஒரு சிற்பியின் உளி கல்லின் மீது இறங்குவது போல வேகமாய், அழுத்தமாய் அவளது ஜீவனுக்குள் ஊடுருவியது.
“உங்க பிரண்ட் நேம் என்ன சொன்னீங்க? வேதா… அம் ஐ ரைட்? பியூச்சர்ல இந்தப் பேர்ல ஹெல்வட்டாஸை யாரையும் காண்டாக்ட் பண்ணுனாங்கன்னா, ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிப்பேன், அவங்க கதையை ஏத்துக்குறதுக்கு.”
மானசீகமாக அக்குரல் ஒரு பெரிய கதவை முகத்துக்கு எதிரே யாரோ படீரெனச் சாத்திய உணர்வை கொடுத்தது வேதவதிக்கு. அதிகாரத்தின் உச்சியில் இருப்பவர்களுக்கே உரித்தான அலட்சியம், அவளது தயக்கத்தைச் சுட்டிக்காட்டிய ஏளனம் எல்லாம் தெறித்தது அந்தக் குரலில்.
ஒரு படைப்பாளிக்கு வேண்டியது திறமை மட்டுமில்லை, அசாத்திய துணிச்சலும்தான். அது அவளிடம் இல்லை எனத் தீர்ப்பெழுதிவிட்டு வாசித்திருந்தது அந்தக் குரல்.
யாரோ ஒரு முன்பின் தெரியாத நபர், அவளது எழுத்தின் ஆழத்தைப் பார்க்காமலேயே அவளது ஆளுமைக் குறைவைத் துச்சமாகத் தள்ளிவிட்ட அந்த நிமிடம், வேதவதிக்குள் அதுவரை வேரூன்றி இருந்த சின்னஞ்சிறு நம்பிக்கைகளும் மெல்ல கலையத் தொடங்கின.
புத்தகம் பற்றிய அவளது கனவின் அஸ்திவாரத்தைப் பிடித்து உலுக்கிவிட்டு, வேதவதியின் படைப்பாற்றல் மீது அவளுக்கே ஒரு கணம் சந்தேகத்தை வரவழைத்திருந்தான் அந்தக் குரலின் சொந்தக்காரனாகிய அட்சரன்.
நேரில் சந்திக்காமல் அவளது திறமையை எடைபோட்டவன் குறைத்து மதிப்பிட்டானா அல்லது சரியாகத்தான் அளவிட்டானா என்பதை இனிவரப்போகும் நாட்களில் நிகழப்போகிற வேதவதியுடனான அட்சரனின் சந்திப்புகளே முடிவு செய்யப்போகின்றன.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

