உயிரே அடங்கும் உன் குரலில்
பேச்சிழந்ததே இந்தப் பெண்மை!
விதையற்று விழுந்தேன் மண்ணில்
என் எழுத்துகள் தோற்றம் கணமிதுவோ?
-அட்சரனின் வேதா
“இன்னைக்குக் காலேஜ் லீவு. கொஞ்சம் எனக்கு ஒத்தாசையா வீட்டுவேலை செஞ்சா, நான் டெய்லரிங் கிளாசுக்கு வர்ற பிள்ளைங்களுக்குச் சீக்கிரமா கிளாஸை முடிச்சிடுவேன். ஆனா உங்க செல்ல மகாராணி இன்னைக்கும் பின்வாசல் திண்ணைல உக்காந்து டொக்கு டொக்குனு அந்த லேப்டாப்பைத் தட்டிக்கிட்டிருக்கா. நாலு மனுஷ மக்காகிட்ட பேசுனா தானே தைரியம் வரும்? எப்பவும் லேப்டாப்பே கதினு இருக்குறதெல்லாம் நல்லதுக்கில்ல.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தையல் மெஷின்களின் மீது இல்லாத தூசியைத் துணி கொண்டு துடைத்தபடி, கஜேந்திரனிடம் குமுறிக்கொண்டிருந்தார் இல்லத்தரசியான கனகவல்லி. மூக்குக்கண்ணாடியை மேலேற்றிவிட்டுக்கொண்டு மனைவியை ஏறிட்டார் கஜேந்திரன்.

“அவதான் எழுதுறால்ல. சரஸ்வதி கடாட்சம் இருந்தாதான் எழுத்து வசப்படும் கனகம். உனக்கு என்ன உதவி வேணும்னு சொல்லு, நான் செய்யுறேன்” என்றபடி எழுந்தவரின் கையில் ஒரு பெரிய குறிப்பேடு.
அதன் அட்டையில் ‘வாஞ்சிநாதன் பகுதிநேர நூலகம் – தேன்மலை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அந்தப் பகுதிநேரத் தனியார் நூலகத்தின் நூலகர், பொறுப்பாளர் எல்லாம் கஜேந்திரன் மட்டும்தான்.
மாலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது வரை இயங்கும் அந்தப் பகுதிநேர நூலகமானது, தேன்மலையின் மத்தியிலிருக்கும் ரேஷன் கடைக்கு அருகே தேன்மலை அரண்மனை குடும்பத்துக்குச் சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நூலகத்துக்குக் கொடுத்துவிட்டதால், அந்தக் கட்டிடத்துக்கு வாடகை எதுவும் வசூலிப்பதில்லை அரண்மனை குடும்பத்தினர்.
கஜேந்திரனுக்கும் ஊதியம் எல்லாம் கிடையாது. அவரது முழுநேர வேலை செங்கோட்டையில் இருக்கும் சாமில்லில் மேற்பார்வையாளர் பணி; அதில் நல்ல ஊதியம் கிடைக்கிறது. பணத்திற்காக அந்த வேலை என்றால், வாசிப்பு மீது கொண்ட ஆர்வத்துக்காகப் பகுதிநேர நூலகர் வேலை. அவரது வாசிப்பார்வம்தான் அவரது புதல்விக்கு அப்படியே வாய்த்திருக்கிறது என்று பெருமையாகச் சொல்லிக்கொள்வார் கஜேந்திரன்.
“க்கும்! நீங்களே ஆய்ஞ்சு ஓய்ஞ்சு வீட்டுக்கு வர்றீங்க. ஞாயிற்றுக்கிழமை மட்டும்தான் உங்களுக்கு ஓய்வு. அன்னைக்கும் உங்களை வேலை வாங்க நான் என்ன கல்மனசுக்காரியா?” – கனகவல்லி.
“வேதாவும் டெய்லி குற்றாலம் வரைக்கும் டிராவல் பண்ணி காலேஜுக்குப் போயிட்டு வர்றாளே கனகம்! லீவு நாள் மட்டும்தானே அவளால கதை எழுத முடியுது.”
“அந்தக் கதையைத் தூக்கிக் கரியடுப்புல போட. ‘எழுதுனவன் ஏட்டைக் கெடுத்தான், படிச்சவன் பாட்டைக் கெடுத்தான்’னு பழமொழியே இருக்கு. இவ எழுதி எதை மாத்தப்போறாளாம்? எம்.காமை நல்லபடியா படிச்சு ஒரு வேலைக்குப் போனா குடும்பம் கொஞ்சம் நிமிரும். ரெண்டு வருஷம் வேலைக்குப் போனா, கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சதை எல்லாம் போட்டுக் கல்யாணத்தையும் பண்ணிடலாம். அதை விட்டுட்டுப் பொழுதன்னைக்கும் லேப்டாப்புல மூஞ்சியை மறைச்சுக்கிட்டே இருக்கா. அந்தத் திண்ணை இவ உக்காந்து உக்காந்து தேய்ஞ்சு போச்சு.”
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே பின்வாசலிலிருந்து வீட்டுக்குள் வந்தாள் வேதா. முழுப்பெயர் வேதவதி. இருபத்தொன்றாவது பிறந்தநாள் முடிந்து ஐந்து நாட்களே ஆகியிருந்தன. மலைப்பிரதேசத்தில் சூரியனின் கதிர்கள் வாட்டாததன் காரணமாகச் சரும நிறம் பளீரென்று இருந்தது. அடர்ந்த கூந்தல் இடையைத் தொட்டது; அதைப் பக்கவாட்டுப் பின்னலாகப் போட்டிருந்தாள். காதுகளில் கொக்கியுடன் கூடிய ஆக்சிடைஸ்டு சில்வர் ஜிமிக்கி. நெற்றியில் புருவ மத்தியில் கடுகு அளவுக்குச் சிறிய கருப்புப் பொட்டு. சுடிதாரின் துப்பட்டாவைப் பின் குத்தாமல் அள்ளிப் போட்டிருந்தாள் தோள்களில்.
தந்தையிடமிருந்து பழகிய வாசிப்பு கைவந்ததால், புதினங்கள் எழுதுவதில் ஆர்வமாய் இருப்பவள். வாசிப்புக்குள் மூழ்கியதாலேயே மனிதர்களுடன் அளவளாவுவதில் பிரியமற்றவள். யாரிடமும் சட்டெனப் பேசவும் வராது. கூட்டமாக நான்கு நபர்கள் இருந்தால், அந்த இடத்தில் வேதவதியின் சத்தம் கேட்கவே செய்யாது.
குற்றாலம் பராசக்தி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் முடித்துவிட்டு, முதுகலை முதலாமாண்டு வணிகவியலைப் படித்துக்கொண்டிருக்கிறாள். இளங்கலை படிக்கும்போது தொற்றிக்கொண்ட எழுத்தார்வம் இப்போது அவளை முழுவதுமாக ஆக்கிரமித்துவிட்டது.
ஆன்லைனில் எழுதுகிறேன் என்று சொல்லிக்கொண்டு கதைகளை அமேசான் கிண்டிலில் பதிவிட்டு வருகிறாள். அனைத்துமே மனதை வருடும் இதமான காதலுடன் கூடிய குடும்பக் கதைகள். அவள் வயதுப் பெண்களுக்கு வாழ்க்கை குறித்தும், எதிர்காலம் குறித்தும், வாழ்க்கைத்துணைவன் குறித்தும் இருக்கும் அழகானக் கனவுகளைக் கற்பனையுருவாக்கி, கதைகளாய் நெய்து கதாபாத்திரங்களின் வடிவத்தில் நடமாடவிட்டுக்கொண்டிருந்தாள் வேதவதி.
அவளது அன்னை கனகவல்லி தையல்கலையில் தேர்ந்தவர். வீட்டின் ஒரு பகுதியில் நான்கு தையல் மெஷின்களைப் போட்டுத் தேன்மலைப் பெண்களுக்குத் தையல் வகுப்பு எடுத்துக்கொண்டிருக்கிறார். நிமிர்வான பெண்மணி; கஜேந்திரனுக்கு ஏற்ற துணைவி.
அவருக்கு உதவக்கூடாது என்று வேதவதி எப்போதும் நினைப்பதில்லை. ஆனால், அவருக்கு உதவியாக ஏதேனும் வேலை செய்துகொண்டிருக்கும்போதே அவளது கற்பனை சிறகடிக்க ஆரம்பித்துவிடும். அந்தச் சமயத்தில் அவள் எழுதிக்கொண்டிருக்கும் நாவலின் கதாபாத்திரங்கள், அத்தியாயங்கள், நிகழ்வுகளைக் கற்பனை செய்தபடியே வேலையை அரைகுறையாகச் செய்துவிடுவாள். சமையல் போன்ற வேலைகளில் கையைச் சுட்டுக்கொண்டதும் உண்டு; காய்கறி நறுக்கினாலோ கட்டாயம் ரத்தக்காயம் உண்டாகும்.
இவ்வாறெல்லாம் செய்து கனகவல்லியிடம் வாங்கிக் கட்டிக்கொள்வாள் அவள். அதுவே ஒரு கட்டத்தில் சலிப்பை உண்டாக்கிவிட, ‘ஆளை விடுங்கடா’ என்று வீட்டுவேலைகள் செய்யாமல் மடிக்கணினியோடு ஒதுங்கிக்கொண்டாள். இப்போது போல!
அன்னையின் சத்தம் கேட்டு உள்ளே வந்தவள் இடுப்பில் கையூன்றி அவரை ஆழ்ந்து நோக்கினாள்.

“எல்லா வேலையும் முடிச்சிட்டல்லம்மா? அப்புறம் என்ன?”
சலிப்பாய் ஒலித்தது அவளது குரல். கனகவல்லி கவலையோடு அவளை ஏறிட்டார்.
“வாழ்க்கைக்குத் தேவையானதை விட்டுட்டு கதை, புத்தகம்னு இருக்கியே வேதா. எனக்கு உன் எதிர்காலத்தை நினைச்சு ரொம்ப பயமா இருக்கு. நீ என்னை மாதிரி பொடுபொடுனு பேசுறவளா இருந்துட்டா கூட இவ்ளோ யோசிக்கமாட்டேன். வெளியாளுங்ககிட்ட பேச அவ்ளோ தயங்குற. நாளைக்குக் கல்யாணம் ஆச்சுனா எந்த வேலையும் தெரியல, ஆளும் அமைதின்னு புகுந்தவீட்டுல உன்னை ஏய்ச்சிடுவாங்க. ஒரு ஆபீசுக்கு வேலைக்குப் போனாலும் வாயிருந்தா தான் பொழைக்க முடியும் வேதா. நீ சுபாவத்துல உங்கப்பாவ மாதிரியும் இல்லாம போயிட்டியே. அவரை மாதிரி பக்குவமா வேலை வாங்குற வித்தையும் உனக்கு இல்ல. கதை எழுதுற கற்பனை வளம் இருக்கு, திறமைச்சாலினு எங்கயும் உன்னைக் கொண்டாட மாட்டாங்கடி. இது தந்திரசாலிகளுக்கான உலகம். பொம்பளை தைரியமா நாலு வார்த்தை பேசலனா, அவளோட கடமையைக் குடும்பத்துல செய்யலனா கொத்தித் தின்னுடும்.”
அன்னையின் கவலையைக் கவனித்த வேதவதியின் இதழில் குறுஞ்சிரிப்பு முகிழ்த்தது.
“யாரும் கொண்டாடணும்னு நான் கதை எழுதலம்மா. எனக்குள்ள இருக்குற கற்பனை எழுத்தா வர்றப்ப என் மனசுக்கு இதமா இருக்கு. இது எனக்கு அடிக்ஷன் மாதிரி; இதை விட முடியாது என்னால. ஆபீஸ் வேலைக்குப் போறப்ப வெளியாளுங்ககிட்ட ஜோவியலா பழகக் கத்துக்குறேன். உன் பொண்ணு ஏமாளி இல்ல; என்னை யாராலயும் ஏய்க்க முடியாது. கையைக் காலைச் சுட்டுக்கிட்டாலும் வீட்டுவேலையை என்னைக்காச்சும் ஒருநாள் கத்துப்பேன். உன்னை யாரும் குறை சொல்ல முடியாத மாதிரி கண்டிப்பா நான் இருப்பேன்மா.”
நிதானமாயச் சொன்னவள் அன்னையின் கையிலிருந்த துணியை வாங்கிக்கொண்டாள். “நான் இதைத் துடைக்கிறேன். நீ போய் வேற வேலை இருந்தா பாரு.”
கனகவல்லிக்கு உடனே உருகிவிட்டது. அதிகமாய்ப் பேசிவிட்டோமே என்று கலங்கியவர்,
“என்னமோ போடி. இந்த மனுஷன் புஸ்தகம் புஸ்தகம்னு அலைஞ்சு உன்னையும் கெடுத்துட்டார்” என்று சொல்லிவிட்டுச் சமையலறைக்குள் போய்விட்டார்.
அவர் போனதும் தந்தையின் கையிலிருந்த குறிப்பேட்டைப் பார்த்தபடி மெஷின்களைத் துடைத்தாள் வேதவதி.
“என்ன பாக்குறீங்கப்பா?”
“உங்க காலேஜ் தமிழ் டிபார்ட்மென்ட் ஹெச்.ஓ.டி நாலு புக் நம்ம லைப்ரரிக்கு டொனேட் பண்ணிருக்கார்மா. அதை எழுதி வச்சிட்டிருக்கேன். வேலனைக் கூப்பிட்டு ரேக்ல ஹெச்.ஓ.டி பேரை எழுதச் சொல்லணும்.”
தந்தையும் மகளும் வாசிப்பு, எழுத்து, புத்தகம் பற்றிப் பேச ஆரம்பித்தால் பொழுது போவதே தெரியாமல் பேசிக்கொள்வார்கள். அதென்னவோ புத்தகங்கள் மீது அலாதிப்பிரியம் கஜேந்திரனுக்கு. புத்தகப்புழுவான மகள் ‘இன்ட்ரோவெர்ட்டாக’, பிறரிடம் பழகுவதற்குத் தயங்குபவளாகவும் வளர்வதைப் பற்றி அவர் என்றுமே கவலைப்பட்டதில்லை.
அவரது கலகலப்பான பக்குவமான சுபாவத்துக்கும், கனகவல்லியின் நிமிர்வான தைரியத்துக்கும் பொருத்தமே இல்லாத அமைதியின் திருவுரு தங்களுக்கு எப்படிப் பெண்ணாக வாய்த்தது என்று அவரும் சில நேரங்களில் எண்ணியதுண்டு. ஆனால், மகளின் குணத்தை எப்போதுமே அவளது பலவீனமாக அவர் கருதியதில்லை.
பெண்ணின் அமைதியும் தயக்கமும் அவளுக்கு எதிராகச் சமூகம் கட்டமைக்கப் பார்க்கும் குற்றச்சாட்டுகளுக்கு வலுவூட்டும் என்பது ஒரு பெண்ணாக, தாயாக கனகவல்லி மட்டுமே உணரக்கூடிய நிதர்சனம். அதைச் சொன்னாலும் கஜேந்திரனும் வேதவதியும் புரிந்துகொள்ள மாட்டார்கள்; தேவையற்ற கவலை என்றே எண்ணுவார்கள்.
வேதவதிக்குத் தோழிகள் என்று அவளது பள்ளி, கல்லூரியில் யாருமே கிடையாது. இதே தேன்மலையில் நியாயவிலைக்கடையில் பணியாற்றும் யாழினியும், விடுமுறை காலங்களில் ஊருக்குச் சுற்றுலா வருவது போல வந்து செல்லும் வானதியும் மட்டுமே அவளறிந்த தோழிகள். இன்றும் அவர்களைத் தவிர்த்து வேறு பெண்களிடம் பேசவே அத்தனை யோசிப்பாள்.
தோழமைக்கு அவள் பற்றிக்கொண்டது எழுத்தை. அந்த எழுத்து புத்தகங்களாகக் கைகளில் தவழ வேண்டும் என்பது அவளது ஆசை! இன்றைய நிலைக்குப் பேராசை என்று கூட வைத்துக்கொள்ளலாம்.
என்றேனும் ஒருநாள் இந்த ஆசை நிறைவேறும் என்ற கனவு அவளுக்கு; அவளை ஜீவித்திருக்க வைத்திருப்பதே அந்தக் கனவுதான்.
தந்தையிடம் கண்களில் ஆவல் மின்ன, “ஒருநாள் என் புக்கும் உங்க லைப்ரரியோட ரேக்ல இருக்கும்” என்று அவள் சொல்ல,
“அந்த நாள்ல என்னை விடச் சந்தோஷமான ஆள் யாரும் இருக்கமாட்டாங்க தங்கம்” என்றார் கஜேந்திரன் பூரிப்போடு.
அதென்னவோ பெண் பிள்ளைகளைப் பெற்ற தந்தையருக்குத் தங்களது மகள்கள் வானத்து நட்சத்திரத்தைக் கொண்டு வருவதாகச் சொன்னாலும் அந்த வார்த்தை மீது நம்பிக்கை வைக்கத் தோன்றிவிடும். உனது கனவு அதீதமென்று எந்தத் தந்தையும் தனது மகளின் மனதை முறிக்கமாட்டார்.
“அப்பாவும் மகளும் தமிழ் இலக்கியச் சொற்பொழிவை முடிச்சிட்டீங்கனா சாப்பிட வாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல என் தையல் கிளாசுக்குப் பிள்ளைங்க வந்துடுவாங்க.”
சமையலறையிலிருந்தபடி இருவரையும் சாப்பிட அழைத்தார் கனகவல்லி. இட்லியும் கொத்துமல்லி நறுமணத்தோடு சாம்பாரும் பார்த்த உடனே வயிறு ரீங்காரமிடத் தொடங்கியது.
“இந்தா! உனக்குப் பட்டன் இட்லி பிடிக்கும்ல.”

மகளுக்கு மட்டும் ஒரு ஈடு மினி இட்லிகளை அவித்திருந்தார் கனகவல்லி. ஒரு கிண்ணத்தில் குட்டிக்குட்டியாய் மினி இட்லிகள் சாம்பாரில் குளித்துக்கொண்டிருக்க, மேலே ஒரு டீஸ்பூன் நெய்யை ஊற்றி மகளிடம் கொடுக்க, குதூகலமாய் வாங்கிக்கொண்டாள்.
“என்னைத் திட்டுனதுக்கு லஞ்சமா?”
“இந்த வாயெல்லாம் இங்க பேசு. போன வாரம் கிளாசுல செமினார் எடுக்காம இன்டர்னல் மார்க்கை கோட்டை விட்டதை மறந்துடு.”
“ம்மா!” வேதவதி சிணுங்கவும்,
“விடேன் கனகம். அவ வேலைக்குப் போனா வெளியுலகம் அவளை மாத்திடும்” என்றார் கஜேந்திரன் ஆதுரமாய்.
“என்னமோ போங்க.”
காலையுணவை முடித்துக்கொண்டு நூலகத்துக்குக் கிளம்பினார் கஜேந்திரன்.
“கனகாக்கா!”
வீட்டு வாயிலில் குரல் கேட்டது. கனகவல்லியிடம் தையல் கற்றுக்கொள்ளும் பெண்கள் வந்திருந்தார்கள்.
“உள்ள போங்கம்மா. உங்க தையல் டீச்சர் ரெடியா இருக்காங்க.”
கஜேந்திரன் சொன்னபடி செருப்பை அணிந்துகொள்ள, “என் மவனோட டீச்சர் பஞ்சதந்திர கதை சொல்லணும்னு எழுதி அனுப்பிருக்காங்கண்ணே. நீங்க புக் இருந்தா எடுத்து தருவீங்களா?” என்று வினவினாள் ஒரு பெண்.
“அதை ஏன் அண்ணன்கிட்ட கேக்குறவ? போன்ல நெட் போட்டுத் தேடுனா கிடைக்கப்போகுது” – இது இன்னொரு பெண்.
கஜேந்திரன் மூக்குக்கண்ணாடியை அழுத்தியபடி புன்னகைத்தார்.
“புத்தகத்தோடப் பக்கத்தைப் புரட்டிக் கதை படிக்கிற உணர்வு போன்ல படிக்கிறப்ப கிடைக்காதும்மா. சின்னப்பசங்களுக்குப் புத்தகம் படிக்கக் கத்துக் குடுத்தா போன் அடிக்ஷன்ல இருந்து தப்பிச்சிடுவாங்க. அதான் தங்கச்சி புக் கேக்குது. சரிதானம்மா?”
“ஆமாண்ணே! உங்க லைப்ரரில வர்ற சிறுவர் மலர், தங்கமலர் எல்லாம் என் மவனுக்கு இஷ்டம்.”
“சீக்கிரமே மேஜிக் பாட் மாதிரி இங்கிலீஷ் புக் படிக்க உன் மவனைப் பழகி விடுறேன்மா. கொஞ்சம் கொஞ்சமா படிச்சாதான் நாளைக்கு நுனி நாக்குல பேசுவான்.”
கஜேந்திரன் சொல்லிவிட்டுப் கிளம்ப, அடுத்த சில நிமிடங்களில் மடிக்கணினியோடு வெளியே வந்தாள் வேதவதி.
“யாழினியோட ஆச்சிகிட்ட இந்த நெல்லிக்காய் ஊறுகாயைக் குடுத்துடு.”
ஒரு எவர்சில்வர் டிபன் பாக்ஸில் நல்லெண்ணெய் தாளிப்புடன் கூடிய ஊறுகாயைப் போட்டு மகளிடம் கொடுத்துவிட்டார் கனகவல்லி. அதை வாங்கிக்கொண்டாள் வேதவதி.
“கருக்கல்ல காட்டுல மேட்டுல இந்தப் பொட்டியோட நடமாடாத வேதா. யட்சன் கதை தெரியுமா?”
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

