விரும்பாமல் ஏறிய மாங்கல்யம்
நெருப்பாய் தகித்தது அவன் மனம்
பயத்தில் உறைந்தது பாவையின் இதயம்
அயர்ந்து அதிர்ந்து அழகிய அந்தி!
-அட்சரனின் வேதா
வேதவதி தனது அறைக்குள் உணர்வுகள் மரத்துப்போன நிலையில் அமர்ந்திருந்தாள். ஜெயவிலாசத்தில் நடந்தேறிய கலவரங்கள் யாவும் கனவல்ல, நிஜம் என்பதை அவளது கழுத்தில் இருக்கும் மாங்கல்யம் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

எப்போது அது கழுத்தில் விழுந்ததோ அப்போது வீட்டுக்கு ஓடிவந்தவள் தான். தனது அறைக்குள் அடைபட்டுக்கொண்டாள். ஓடிவரும்போதே அவளது முதுகுக்குப் பின்னே ஊரார் அவளை ஏளனமாகப் பேசுவது போல ஒரு மாயை.
இதோ வந்து அரைமணி நேரமாயிற்று! அவளது பெற்றோரும் அட்சரனின் பெற்றோரும் வீட்டின் ஹாலில் தீவிரமாய்ப் பேசிக்கொண்டிருக்கும் உரையாடல்கள் கதவையும் சுவரையும் ஊடுருவிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாலும், அவற்றில் ஒரு வார்த்தை கூட வேதவதியின் செவியில் ஏறவில்லை.
“நம்ம பசங்க மேல அவங்க சுமத்துற பழியை நாம நம்பலனு நமக்குத் தெரியும். ஆனா அங்க இருந்த சூழ்நிலையை நினைச்சுப் பாருங்க. பிரஸ், சி.எம்மோட அரசியல் வட்டாரத்து ஆளுங்க, ஊர்க்காரங்கனு எல்லாரோட கண்ணுக்கும் நம்ம புள்ளைங்க தப்பா தெரிஞ்சாங்க. அந்தச் சூழ்நிலையை என்னால் முடிஞ்சவரைக்கும் நான் சமாளிச்சிட்டேன். வானதி அவங்கப்பா கிட்ட இங்க நடந்த எதுவும் டிவி சேனல் பத்திரிகைக்குப் போயிடக்கூடாதுனு பேசிட்டிருக்கா. அச்சு, வேதா ரெண்டு பேருமே அவளுக்கு ஃப்ரெண்ட்ஸ். அவளால அந்த நேரத்துல எதுவும் செய்ய முடியலங்கிற மனவுளைச்சல் இருக்கு. நிலைமையை மோசமாக்க வேண்டாம்னு எல்லாரும் யோசிச்சு கடைசியில் எல்லாமே கைமீறிப் போயிடுச்சு. அடுத்து நாம பசங்களோட வாழ்க்கையைப் பற்றி மட்டும்தான் யோசிக்கணும். நீங்க என்ன சொல்லுறீங்கண்ணா?”
ராஜேஸ்வரியும் சதானந்தனும் கஜேந்திரனின் பதிலுக்காகக் காத்திருந்தார்கள். கனகவல்லி சிரமத்தோடு பேச்சை ஆரம்பித்தார்.
“வேதா படிப்பு இன்னும் முடியல. அதுக்குள்ள…” என்றவர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, “இன்னைக்கு ராத்திரி கடந்துடும். ஆனா இங்க அவ இருக்கப்போற ஒவ்வொரு நாளும் சுத்தியுள்ளவங்க பார்வை அவளைக் கூறுபோடும். நான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன் இந்தப் பொண்ணு கிட்ட.. எழுத்து, கதைனு மாயவுலகத்துல வாழாதடினு. இன்னைக்கு அவளுக்கு நிஜவுலகம் எப்படிப்பட்டதுனு தெரிஞ்சிக்கும். தெரிஞ்சு என்ன பிரயோஜனம்? உங்க பையனுக்கு நடந்த எதுலயும் சம்மதமில்ல. அவரை வற்புறுத்தி தாலிச் செயினை மாட்ட வச்சிட்டீங்க. அதே மாதிரி வற்புறுத்தி வாழவைக்க முடியாது. பிடிக்காத ஒன்னைத் திணிச்சா யாருக்குத்தான் ஏத்துக்கத் தோணும்?”
சதானந்தனின் முகத்தில் வேதனை. மகனின் பிடிவாதத்தையும் கோபத்தையும் நேரடியாகப் பார்த்தவருக்கு, அவரது மகளின் வாழ்க்கையை நினைத்துப் பயம் வருவது இயற்கைதானே என்று எண்ணிக்கொண்டார். அதோடு கனகவல்லியையும் கஜேந்திரனையும் சமாதானப்படுத்தவும் ஆரம்பித்தார்.
“அதுக்காக அவங்களை அப்படியே விட்டுடவும் முடியாதுல்லம்மா.”

“விருப்பமே இல்லாத கல்யாணத்தைச் செஞ்சுக்கிட்டு என் ஃப்ரெண்ட் உங்க பையன் கூட வாழ கஷ்டப்படணுமா அங்கிள்?”
கோபக்குரல் ஒன்று வாசலிலிருந்து ஒலித்தபடியே வீட்டுக்கு வந்து சேர, குரலுக்குச் சொந்தக்காரியும் வந்து நின்றாள். யாழினிதான்.
“அங்க அவசரமா தாலியை அவர் கையில குடுத்து மாட்டச் சொன்னது தப்பு ஆன்ட்டி” என்றாள் அவள் இளக்கமின்றி.
ராஜேஸ்வரிக்கு அவள் ஜெயவிலாசத்தில் தனது மைந்தனுக்காகப் பேசிய தருணங்கள் நினைவலையாய்!
“இதைத் தவிர வேற என்ன செஞ்சிருந்தாலும் நாளைக்குக் காலையில என்ன நடந்திருக்கும் தெரியுமா? அங்க நடந்த எல்லாம் நியூஸ் சேனல்ல வந்திருக்கும். என் மகன் இத்தனை வருசமா ஆசையா கட்டிக்காப்பாத்துன அவனோட தொழில், மரியாதை எல்லாம் காத்தோடப் போயிருக்கும். உலகத்தோட முன்னாடி அவன் ஒரு பொறுக்கி ஆகியிருப்பான். அவனை விடு, ஆம்பளை! வேதாவ பத்தி யோசி. இன்னைக்குச் சோசியல் மீடியால எல்லாமே கண்டெண்ட்தான். அதுல ஒரு கண்டெண்டா உன் ஃப்ரெண்ட் மாறியிருப்பா. இந்த ஊர்க்காரங்க அவளைப் பேசாத பேச்செல்லாம் பேசி நோகடிச்சிருப்பாங்க. நிதர்சனம் உன் ஃப்ரெண்ட் எழுதுற கதைல வர்ற மாதிரி ஸ்மூத்தா இருக்காதும்மா. அங்க கஷ்டம்தான் அதிகம்.”
யாழினி அவரது பேச்சிலிருந்த நியாயம் கொஞ்சம் கொஞ்சமாய்ப் புரிபடவும் தணிந்தாள்.
“கல்யாணம் ஆகிட்டா மட்டும் ஜாடை பேசுறவங்க அமைதியாகிடுவாங்களா? அப்பவும் வேதாக்குக் கஷ்டம்தானே?” என்றாள் ஆதங்கத்தோடு.
“அவ கஷ்டப்பட வேண்டாம். எங்க கூட சென்னைக்கு வரட்டும். எங்களுக்குப் பெண் குழந்தை இல்ல. எங்க மகளா அவளைப் பாத்துப்போம். எங்க மேல நம்பிக்கை இல்லன்னா கயல்விழி கிட்ட எங்க குடும்பத்தைப் பத்தி விசாரிச்சுப் பாருங்க. அவங்களும் நாங்களும் பல வருசமா குடும்ப நண்பர்கள்.”
“உங்களை நம்பாம இல்ல. அத்தனை பேர் இருக்குற சபைல நீங்க மட்டும்தான் நிலைமையை யோசிச்சுச் சாமர்த்தியமா முடிவு எடுத்தீங்க. ஆனா இது சரியா வருமா? காலத்துக்கும் நிலைக்குமா? பெத்தவளா என் பயம் அதுதான்.”
தனது மனதிலிருக்கும் பயத்தைச் சொல்லியேவிட்டார் கனகவல்லி. சொல்லப்போனால் கஜேந்திரனின் தயக்கமும் அதுவே.
“என் மகளுக்கு எழுத்துனா உயிர். எங்களுக்கு அவ தான் உயிர். அவளுக்கு இடமாற்றம் தேவைனு எங்களுக்கும் புரியுது. ஆனா அந்த இடமாற்றம் இன்னைக்கு அவ வாழ்க்கைல நுழைஞ்ச உறவை நிரந்தரமாக்குமா? இல்லையாங்கிற கேள்வி எங்களை நோகடிக்குது” என்றவரின் கையை ஆதரவாகத் தட்டிக்கொடுத்தார் சதானந்தன்.
“நம்ம பசங்களுக்கு நாமளா பாத்து அரேஞ்ச் மேரேஜ் பண்ணி வச்சிருக்கிறோம்னு நினைச்சுக்கோங்க. ஒரு சூழ்நிலை நம்மளை மூச்சுத் திணறவைக்குதுனா, அதுல இருக்குற பாதகங்களை மட்டுமே யோசிச்சு வருந்தாம, சாதகமான சில கோணத்தையும் யோசிக்கணும். அப்படி யோசிச்சா நம்ம மனக்கஷ்டத்துக்கான தீர்வு கிடைக்கும்.”
இத்தனை ஆண்டுகாலத் தொழில் அனுபவத்தில் இதைவிடக் கடுமையான சூழல்களை எல்லாம் சந்தித்தவராயிற்றே சதானந்தன்! அந்தப் பக்குவம் அவரது பேச்சில் தெரிந்தது.
“இன்னொன்னையும் நான் சொல்லணும். அவங்களுக்குள்ள இன்னைக்கு நிலைமைக்கு எந்தப் பிணைப்பும் இல்ல, வேதா கழுத்துல இருக்குற தாலியைத் தவிர. அச்சு ஒரு இடத்துலயும் வேதா ஒரு இடத்துலயும் இருந்தா வாழ்க்கை முழுக்க அவங்களுக்குள்ள எந்தப் பிணைப்பும் வராது. ஆளுக்கொரு திக்குல இருக்குறதுக்காகவா அத்தனை பேச்சைக் கேட்டு என் மாமியாரோட தாலிச் செயினை அவ கழுத்துல நான் மாட்டச் சொன்னேன்? என் மகனுக்காக மட்டும் நான் யோசிக்கல, என் மருமகளுக்காகவும் தான் யோசிக்குறேன். வெறும் தாலியை மட்டும் கடனேனு கட்டி அவளை வாழ வைக்கலனா, இந்தத் தாலிக்கான அவசியம்தான் என்ன? பிரிவு அன்பை அதிகமாக்கும்னு சொல்லுறதெல்லாம் எனக்குக் கட்டுக்கதையா தோணும். ஒரு காலகட்டத்துக்கு மேல பிரிவு நிரந்தரமாச்சுனா அது அவங்களுக்குப் பழகிடும். அந்த நிலைமை வரக்கூடாது. நாளைக்குக் காலையில நாங்க சென்னைக்குக் கிளம்புறப்ப எங்க மருமகளோட தான் கிளம்புவோம். அவ கிட்ட பேசிப் புரியவைங்க. எங்களைப் பத்தித் தெரியாம உங்களால அவளை அனுப்பிவைக்க முடியாதுனுதான் வீடு தேடி வந்தோம்.”
யாழினி பெரியவர்களை ஆழ்ந்து பார்த்துவிட்டு வேதவதியின் அறைக்குச் சென்றாள். அங்கே திக்பிரமை பிடித்தாற்போல அமர்ந்திருந்தவளின் தோளைத் தொட்டு உலுக்கி இயல்புக்குக் கொண்டு வந்தாள்.
“என்ன?” எனப் பதறியவளிடம்,
“ஒன்னுமில்ல. டி.எம்.டி ராடோட அப்பாவும் அம்மாவும் உன்னை அவங்களோட அழைச்சிட்டுப் போறதா இருக்காங்க. அதுக்காகப் பேசிட்டிருக்காங்க.”
தோழியர் இங்கே பேசும்போதே ராஜேஸ்வரியும் சதானந்தனும் விடைபெற்றிருந்தார்கள். மெதுவாக வேதவதியின் அறைக்குள் வந்தார்கள் கஜேந்திரனும் கனகவல்லியும். அவர்களைப் பார்த்ததும் எழுந்து நின்ற வேதவதியின் கண்களில் மீண்டும் கண்ணீர் ஊற்று!
“நீ சொன்ன எதையும் நான் கேக்கலம்மா. அங்க யாரும் எதுவும் சொன்னா எனக்குத் திருப்பிப் பதில் பேசக்கூட தெரியாதுனு நீ கவலைப்பட்டப்ப எனக்கு அதோட தீவிரம் புரியலம்மா. ஆனா இன்னைக்கு அப்படியொரு சிட்டுவேஷன் (Situation) வந்தப்பதான் நீ சொன்னதை நான் கேட்டிருக்கணும்னு மண்டைல அறைஞ்ச மாதிரி புரிஞ்சுது. இனிமே நீ சொல்லுறதைத் தவிர வேற எதையும் நான் செய்யப்போறதில்ல. சொல்லும்மா? நான் என்ன செய்யட்டும்?”
அழுதபடியே வினவிய மகளை மார்போடு அணைத்துக்கொண்டார் கனகவல்லி.
“நீ அவங்க கூட மெட்ராசுக்குப் போயிடுறியா வேதா?”
விலுக்கென அவளது தலை உயர்ந்து கண்கள் கலவரத்தோடு பெற்றோரைப் பார்க்க, மகளின் சிகையை வருடிக்கொடுத்தார் கஜேந்திரன்.
“உன்னால கஷ்டம்ங்கிற எண்ணத்துல சொல்லலைடா. உன் கழுத்துல தாலி இருக்கு. அதுக்கான அர்த்தம் கேலிக்கூத்தாகிடக் கூடாதுங்கிற அக்கறைல சொல்லுறோம். நீ என்னைக்கும் எங்களுக்குச் சுமையில்ல. அதே நேரம் நீ இங்க இருந்தா தேவையில்லாத பேச்சைக் கேட்டு உன் மனசு நோகும். உனக்கான இடமாற்றமா நினைச்சுக்க. அங்க போ. அந்த மனுசங்க கூட வாழ முடியுதா, உன்னால அந்தப் குடும்பத்துல பொருந்த முடியுதானு பாரு. முடியலனா நீ தாராளமா இங்க வந்துடலாம். காலத்துக்கும் அப்பா இருக்கேன் உனக்கு. முயற்சியே பண்ணாம இருந்துட வேண்டாமே.”
தந்தை சொல்லவும் தலையாட்டினாள் வேதவதி. அவளது மனக்கண்ணில் வெறுப்போடு கழுத்தில் மாங்கல்யத்தைப் போட்டுவிட்ட அட்சரன் வந்து போனான்.
‘இந்த வெறுப்பை நான் எப்படிச் சமாளிக்கப் போகிறேன்?’
இத்தகைய எண்ணம் உருவானபோதே அவளுக்குள் இன்னொரு வருத்தம் பேரலையாய் எழுந்தது.
‘சி.பி.ஆர் கொடுத்த நேரத்தில் நடந்ததை அவன் என்னிடம் சொல்லியிருக்கலாம். ஒருவேளை எனக்குத் தெரிந்திருந்தால் இந்த அளவுக்குப் பிரச்சினை போவதற்குள் சுதாரித்திருப்பேன். அல்லது அவனுடன் நான் இருந்ததாகச் சொல்லாமல் இருந்திருக்கலாம். அவனும் தவறு செய்திருக்கிறான், நானுமே மௌனமாய் இருந்துவிட்டேன். இங்கே தவறு பரஸ்பரமாகிவிட்டது. அப்படியென்றால் தவறினால் உண்டான சுமையும் பரஸ்பரமாகப் பகிரப்பட வேண்டும் அல்லவா!’
அவளது மனநிலை நடந்ததை ஏற்றுக்கொள்ளப் பக்குவப்பட்டபோது, ஜெயவிலாசத்திலோ அட்சரனின் மனநிலை சூறாவளியாய் மாறியிருந்தது.
இத்தனை நாட்களில் தொழில் விஷயமாக மட்டும் எத்தனை பெண்களைச் சந்தித்திருப்பான்? ஒருவர் அவனிடம் விரல் நீட்டிப் பேசியிருக்க முடியுமா? அவனைக் குற்றம் சாட்டியிருக்கத்தான் முடியுமா?
கைகளைப் பின்னே கட்டிக்கொண்டு அவனது அறையில் கோபத்தோடு அவன் நடந்துகொண்டிருக்க, இன்னொரு பக்கமோ வானதி அவனுக்காகவும் வேதவதிக்காகவும் தந்தையிடம் வாதாடிக்கொண்டிருந்தாள்.
“நீங்க கிடைச்ச சந்தர்ப்பத்தை உங்க ஈகோவைத் திருப்திப்படுத்த யூஸ் (Use) பண்ணிக்கிட்டீங்கப்பா. அவங்க ரெண்டு பேரோட வாழ்க்கையையும் நினைச்சுப் பாருங்க. கடைசி நொடி வரைக்கும் நீங்க இந்த ஊர்க்காரங்க வாயை அடைப்பீங்கனு நான் நம்புனேன். நீங்க என் நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைச்சிட்டீங்க.”
அவள் மனக்குமுறலைக் கொட்டவும், ஆதித்யன் தந்தைக்காகத் தங்கையிடம் எகிற ஆரம்பித்தான்.
“எல்லாம் யாரால ஆரம்பிச்சது? ரிசப்சன் ஸ்டேஜ்ல நின்னவ எதுக்குத் தோட்டத்துக்குப் போன? உன்னைக் காப்பாத்தணும்னு தானே அச்சு பொய் சொன்னான். ஒரு வார்த்தை இடையில புகுந்து நீ பேசி கவர் பண்ணியிருந்தா இந்த வேண்டாவெறுப்பான கல்யாணம் நடந்திருக்குமா? நடந்ததுக்கு நீயும் பொறுப்பு வானதி.”
வானதியின் முகம் இறுகிப்போனது.
“நான் பேச முயற்சி பண்ணலனு உனக்கு யார் சொன்னது? எனக்கு அச்சுவோட கண்ணசைவுக்குக் கூட அதுக்கு அர்த்தம் புரியும். அவன் ஒவ்வொரு தடவையும் ‘நீ தலையிடாத’னு கண்ணால சைகை காட்டுறப்ப எங்க இருந்து நான் பேசுறது?” என்றவள் கண்கள் கலங்க அப்படியே மடிந்து சோஃபாவில் அமர்ந்தாள்.
அவளது மனதில் குற்றவுணர்ச்சி தீவிரமாக மையம் கொண்டிருக்கையில், இயலாமையின் விகிதாச்சாரம் அதீதமாய் இருக்கையில், தன்னைப் பற்றியும் தனது நட்பைப் பற்றியும் சந்தேகிக்கும் சூழல்.
ஜெயசந்திரனுக்கு மகளின் கண்ணீரைக் கண்டுவிட்டால் உலகமே சுற்ற மறந்தது போல இருக்கும். மகளின் அருகே அமர்ந்தவர், “இப்படி வருத்தப்படுறதுக்காகவா ஊரை அழைச்சு உனக்குக் கல்யாணம் பண்ணுனேன்? இப்ப நான் என்ன செய்யணும்? நீ சொல்லு” என்றார் பாசக்காரத் தந்தையாக.

வானதி பெருமூச்சுவிட்டவள், “இங்க நடந்த எதுவும் வெளிய கசியக்கூடாதுப்பா. மீடியா நியூஸ்னு எங்கயும் அச்சுவோட பேர் கெட்டுப்போகக் கூடாது. என்னை யாரும் தப்பா பேசிடக்கூடாதுங்கிற டென்ஷன்ல அவன் செஞ்ச காரியம் அவனுக்கு ப்ளாக் மார்க்கா (Black mark) மாறிடக்கூடாது. இதுல எந்த வகையிலயும் சம்பந்தப்படாதவ வேதா. ஆனா இந்த நிமிஷம் என்னை விட அவ மோசமா மனசு நொந்து போயிருப்பா. இதுக்கு மேல அவளை யாரும் வார்த்தையால நோகடிச்சிடக்கூடாது. ப்ளீஸ்பா!” என்றாள் கண்ணீருடன்.
ஜெயசந்திரன் யோசிக்கக்கூட அவகாசம் எடுக்கவில்லை. அவரது மகளின் வேண்டுகோள் அவருக்குக் கட்டளையாகவே ஒலிக்கும். அதை நிறைவேற்றுவதில்தான் தனது தந்தைமையின் மகத்துவமே அடங்கியிருக்கிறது என்று எண்ணுபவர்.
உடனடியாக ஆதித்யன் மூலமாக வந்திருந்த அனைத்து ஊடகவியலாளர்களிடம் பேசி, ஜெயவிலாசத்தில் நடந்த திருமணம், வரவேற்பு தாண்டிய எந்தக் கிசுகிசுவும் வதந்தியும் ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படக் கூடாது என்று கட்டளையிட்டார். மீறிச் சமூக ஊடகங்களில் அல்லது பிரதான காட்சி ஊடகங்களில் ஏதேனும் தகவல்கள் கசிந்தால், தனிநபரின் தனியுரிமை மீறலாக அது கருதப்பட்டுச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
கூடவே ஆதித்யன் மூலமாய் விருந்தினராய் வந்தவர்களுக்கும் இத்தகவலை அனுப்பிவிட்டார் ஜெயசந்திரன். எல்லாம் அவரது மகளின் கண்ணீருக்காக மட்டுமே! அதன் பின்னரே வானதி நிம்மதியுற்றாள் எனலாம்.
ஜெயவிலாசத்தில் நடந்த எதுவும் வெளியே கசியாது என்ற உறுதி கிடைத்துவிட, ஒரு பக்கம் இலக்கியாவும் சஞ்சயும் அட்சரனைச் சமாதானம் செய்துகொண்டிருந்தார்கள்.
“வேதா சின்னப் பொண்ணு. நீ அத்தனை பேர் முன்னாடி அவ உன் கூட இருந்ததா சொல்லிட்ட. அவ பயப்படமாட்டாளாடா? அவ இயல்பே அதுதான்னு எத்தனை தடவை வானதி சொல்லிருக்கா. நீ ஏன்டா அவ பேரைச் சொன்ன? நானும் வானதி மாதிரி தான் டிரஸ் பண்ணிருக்கேன். என் பேரைச் சொல்லிருக்கலாம்ல.”
அட்சரன் தனது கூந்தலைக் கையால் கோதிக்கொண்டவன், “அப்ப என் கண்ணுல அவ தான் பட்டா. சொல்லிட்டேன்! அதுல நூல் பிடிச்சு அந்தப் பொம்பளை இல்லாதக் கதை எல்லாம் கட்டிப் பேசியே என் வாழ்க்கையை நாசமாக்கிடுச்சு. இந்த வேதா பேசாம இருந்து என் வாழ்க்கையை நாசமாக்கிட்டா” என கொந்தளித்தான்.
சஞ்சய் அவனது கவலையோடு பார்த்தான்.
“ஏன்டா நாசம் கீசம்னு பேசுற? அந்தப் பொண்ணு நல்ல டைப்னு…”
“அவ உலக உத்தமியா இருந்தா கூட எனக்கு வேண்டாம். என்ன நினைச்சுக்கிட்டாங்க அட்சரனை? அந்தச் செயினை அவ கழுத்துல மாட்டிட்டா நான் அவளை என் வாழ்க்கைக்குள்ள அனுமதிச்சிடுவேனா? அங்க இருந்த எல்லாரும் அவங்கவங்க ஈகோவை காட்டிட்டாங்க. இனிமே நான் காட்டுறேன் என் ஈகோவை.”
கோபத்தோடு கையைச் சொடுக்குப்போட்டு அவன் சொன்ன விதமே நண்பர்களை அதிரவைத்தது, அவனுக்குள் இருக்கும் பெருஞ்சீற்றத்தின் அடையாளமாய்!

“தயவுபண்ணி அவ பயந்த சுபாவம், பேசத் தெரியாதுனு எனக்குக் கதை சொல்லாதீங்கடா. அவ வக்கணையா பேசுவா. தேவையில்லாதப்ப பக்கம் பக்கமா லெக்சர் குடுத்ததை இந்தக் காதால கேட்டிருக்கேன். எப்ப பேசணுமோ அப்ப அழுது காரியத்தைக் கெடுத்துட்டா. இந்த பங்களாவை, இந்த ரூமை பாக்குறப்ப எல்லாம் அந்தத் தோட்டத்துல நடந்த ஒவ்வொன்னும் என் மண்டைக்குள்ள ஓடுது. தலை அப்படியே சூடாகுது. ஷிட்!”
சுவரில் காலால் உதைத்தவன் என்ன நினைத்தானோ தெரியவில்லை, மடமடவென தனது உடைமைகள் அடங்கிய பெட்டியை எடுத்துக்கொண்டான். வாட்ரோபைக் காலி செய்தான்.
“டேய் எங்க போற?” இலக்கியாவும் சஞ்சயும் பதற,
“இதுக்கு மேல இங்க இருக்க என்ன அவசியம் எனக்கு? அருள், நதி கிட்ட சொல்லிடுங்க. நான் சென்னைக்குக் கிளம்புறேன்” என்றவன் நண்பர்கள் சொல்லச் சொல்லக் கேளாமல் தரிப்பிடத்தை அடைந்தான்.
இத்தனை நாட்கள் ஓய்விலிருந்த அவனது கறுப்பு வண்ண ரேஞ்ச் ரோவரைத் திறந்து பெட்டியைத் தூக்கிப் பின்னிருக்கையில் போட்டவன், உள்ளே அமர்ந்து கதவை அறைந்து சாத்தினான்.
சஞ்சயும் இலக்கியாவும் அவன் பின்னே ஓடிவந்தவர்கள் திகைத்து நிற்கும்போதே, அட்சரனின் கார் ஜெயவிலாசத்தின் பிரம்மாண்டமான தரிப்பிடத்தை விட்டு வெளியேறியது உறுமலுடன்.
சரியாக ராஜேஸ்வரியும் சதானந்தனும் ஜெயவிலாசத்துக்குள் நுழையும்போது அட்சரனின் கார் அவர்களைக் கடந்து போனது. அவனுக்குத் தன் பெற்றோரைப் பார்க்கக் கூட விருப்பமில்லை. கண் மண் தெரியாத அளவுக்குக் கோபம். அத்துணை கோபத்தையும் ஸ்டீயரிங் வீலில் அட்சரன் காட்ட, தேன்மலையின் மலைப்பாதையில் சீறிக்கொண்டு பாய்ந்தது அவனது கார்.

அவனைப் போலவே நடந்த சம்பவத்தின் சுவடுகளை அங்கேயே விட்டுவிட்டு சென்னையை நோக்கிப் பறந்தது அவனது கறுப்பு ரேஞ்ச் ரோவர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

