பழிகளின் சுமை தீயாய் தொடர
விடாது பரவும் உன் விழிச்சினத்தீ!
உறவில்லா உரிமையில்லா நிலையில்
கோபம் மட்டும் எவ்வகையில் அறம்?
-அட்சரனின் வேதா
ட்ரோன் மூலம் ஒளிபரப்பான காட்சியில் தன்னுடன் இருந்தவள் வேதவதி என்று அட்சரன் சொன்னதும், அவளது கண்கள் முதலில் பீதியுடன் பார்த்தது கனவல்லியின் முகத்தைத்தான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
‘என்ன இது’ என்பது போல மனம் துடிப்பதை கனகவல்லியின் முகபாவனை காட்டிக்கொடுத்துவிட, சிலையாய் சமைந்துவிட்டாள் வேதவதி.
‘அட்சரன் என்னதான் கூட்டத்தைச் சமாளித்தாலும் எனது பெற்றோரைச் சமாளிக்க வேண்டிய கடமை என்னுடையதுதானே? என்ன சொல்லி அவர்களிடம் இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை எனப் புரியவைப்பேன்?’
அந்நேரத்தில் தான் சாந்தா மெதுவாகக் கூட்டத்திலிருந்து எட்டிப் பார்த்தார்.
“ஏன் தம்பி நீங்க ஏஜெண்டா இருக்குற எல்லாருக்கும் இடுப்பைத் தடவி சந்தனம் பூசி விடுவியளா? இல்ல கையைப் பிடிச்சுக் கதை பேசுவியளா? அதை விடுங்க. ஏஜெண்டா இருந்துட்டு உங்க கிட்ட கதை குடுத்த புள்ளைய தனி ரூம்ல உதட்டோட உதட்டை வச்சு முத்தம் குடுப்பியளா?”
மற்ற இரண்டும் வேதவதி அறிந்தவை. ஆனால் மூன்றாவதாய் சாந்தா சொல்லும் சம்பவம் எப்போது நடந்தது? சட்டென அவளது விழிகள் அட்சரனைப் பார்த்தன.
அவனோ பொறுமை நழுவ, “நேத்து வேதாக்குக் கரெண்ட் ஷாக் அடிச்சிடுச்சு. அவ பல்ஸ் குறைஞ்சிட்டே இருந்துச்சு. நான் அவளுக்கு சி.பி.ஆர் குடுத்ததை இந்த லேடி தப்பா புரிஞ்சிக்கிட்டுப் பேசுறாங்க” என்றான்.

“இது நல்லா இருக்கே? மாட்டிக்கிட்டதால கதை கதையா சொல்லுதியளா தம்பி?” என்ற சாந்தாவின் முகத்தில் அப்படியொரு திமிரான பாவனை.
கனகவல்லியும் கஜேந்திரனும் செய்வதறியாது தவிப்பதைக் கண் குளிரச் சாந்தா ரசிப்பதை யார் கவனித்தார்களோ இல்லையோ அட்சரன் கவனித்துவிட்டான்.
“கதை சொல்லுறது கேவலமில்ல. அடுத்தவங்க கஷ்டத்துல இருக்குறப்ப அதைப் பாத்து ரசிக்குறதுதான் கேவலம்” என்றான் சூடாக.
“இது நல்லா இருக்கே! எங்க ஊரு புள்ளைய ஆசை வார்த்தை பேசி செய்யக்கூடாத எல்லாத்தையும் செஞ்சுட்டு இப்ப விஞ்ஞானம் பேசுதியளாக்கும்?”
அட்சரன் கோபத்தோடு அந்தப் பெண்மணியை நெருங்கப் போக, அவசரமாகத் தடுத்தார் ஜெயசந்திரன்.
“என் ஊர்க்காரங்க தம்பி” என்றார் எச்சரிக்கும் தொனியில்.

“என்ன ஊர்க்காரங்க? மை ஃபுட். வேதா என்னைப் பொறுத்தவரைக்கும் ஒரு நல்ல ரைட்டர். அவ மேல வேற மாதிரியான தவறான எண்ணம் எதுவும் எனக்குக் கிடையாது. அவளை அந்தக் கோணத்துல நான் பாத்ததேயில்ல. அவ நதியோட ஃப்ரெண்ட். அவளை கௌரவமா நடத்தணும்னு நதி எனக்கு ஆர்டர் போடாதக் குறை. அப்ப எப்படி நான் இந்த மாதிரியெல்லாம் நடந்துப்பேன்?” என்றான் அட்சரன் கோபம் கொஞ்சமும் குறையாதக் குரலில்.
வேதவதி எந்தப் பதிலும் பேசாமல் சிலையாய் சமைந்திருக்கவும், யாழினி ஓடிப்போய் அவளது கையைப் பற்றினாள்.
“என்ன வேதா இதெல்லாம்?”
வேதவதியும் பதில் சொல்ல முயன்றாள். ஆனால் சுற்றி நின்ற கூட்டத்தைப் பார்த்ததும் குரல் தொண்டையிலேயே சமாதியாகிவிட்டது அவளுக்கு.
“எங்க ஊருக்குக் கல்யாணத்துக்காக வந்தீங்க. வந்த இடத்துல உங்க கைவரிசைய அந்தப் புள்ளை கிட்ட காட்டிட்டு இப்ப தப்பிக்கப் பாக்குறீய. நான் பாத்த எதுவும் பொய்யில்லனு உங்களுக்கே தெரியும். நீங்க மாட்டுனதும் உண்மையத் திரிச்சுப் பேசுதீய தம்பி. எங்க ஊருப் பொண்ணுக்கு நீங்க பதில் சொல்லியே ஆவணும்.”
சாந்தா போலியான போராட்டக் குரலில் சொல்ல, அங்கிருந்த அனைவருமே அட்சரனைப் பார்த்த விதத்தில் சந்தேகம் மட்டுமே!
“சாந்தாக்கா சொல்லுறது சரிதான். இன்னைக்கு அந்தப் புள்ளை கிட்ட போட்டோ எடுக்கப்ப, மேடைல ஏறி இறங்குறப்ப நாலு தடவை பேசுனீய தம்பி. நானே அதை என் கண்ணால பாத்தேன்” இது இன்னொரு பெண்மணியின் குரல்.
அட்சரன் திகைத்துப் போனவன் விறுவிறுவென வேதவதியிடம் வந்து நின்றான்.
“இவங்க சொல்லுற மாதிரி நான் உன்னை எந்தத் தப்பான எண்ணத்தோடவும் அணுகலனு சொல்லு வேதா. இந்தப் பிரச்சினை என் கேரக்டர் சம்பந்தப்பட்டது. செய்யாத ஒன்னுக்கு நான் பழியேத்துக்க முடியாது வேதா.”
அவளின் கையை ஆதரவாகப் பற்றியவனை வேதவதி வெறுமையாய் பார்த்தாள்.
“நான்…. இவங்க…” என்று திணறியவளுக்கு மொத்தக் கூட்டமும் தன்னை ஒழுக்கங்கெட்டவளாகப் பார்ப்பது போலப் பிரமை.
‘Fear of judgement’ அவளது பலவீனம். காதல் கதை எழுதுவது தெரிந்தால் தவறாக எண்ணுவார்களோ என்று சிந்திப்பவளுக்கு இப்போது அக்னிப்படுக்கை மீது நிற்பது போல இருந்தது.
அங்கிருந்த அத்துணை ஜோடிக்கண்களும் அவளைக் குற்றம் சாட்டுவது போலவும், அவளைச் சந்தேகமாய்ப் பார்ப்பது போலவும் காட்சிப்பிழையாய் ஒரு எண்ணம்.
முகத்தை இரு கரங்களாலும் மூடிக்கொண்டவள் சட்டென முழங்காலிட்டு அழ ஆரம்பித்தாள்.
அட்சரன் அவளது முழங்கையைப் பற்றியவன், “இது அழுறதுக்கான நேரமில்ல வேதா. ஏதாச்சும் பேசு” என்று கேட்க, அவனது கையைப் பயத்தோடு உதறிக்கொண்டாள்.
சாந்தாவின் இதழில் வெற்றிப்புன்னகை.
“எங்க ஊருப் புள்ளைக்குப் பொய் சொல்ல வரல தம்பி.” என்றவர் கனகவல்லியிடம் போலியாய் வருத்தத்தைக் கொட்டினார்.
“அவன் இடுப்புல சந்தனம் தடவுனான்னு சொன்னப்ப நீ நம்புனியாக்கா? இப்ப பாரு! ஊர் முன்னாடி டிவில உன் மவளோட மானம் போற அளவுக்குக் கொண்டு வந்துட்டான். கயல்விழியம்மா தப்பான ஒருத்தனை வீட்டுப்படி ஏறவிடாதுனு நம்பிக்கையா சொன்னியேக்கா. இப்ப பாத்தியா? பணக்காரங்களுக்கு ஒழுக்கம், மானம் பத்தி எல்லாம் கவலை இல்ல. இப்ப போனது யாரோட மானம்? நாளைக்கு உன் மவளைப் பொண்ணு கேட்டு வாரவங்க இதைக் கேள்விப்பட்டா அவ வாழ்க்கை என்னாகும்? அதுக்கு யார் பொறுப்பேக்குறது?”
யாழினிக்குச் சாந்தாவின் இந்த வருத்தமும் ஆறுதலும் போலியானவை என்று தெரிந்துவிட்டது.
“போதும்கா. என்ன பேசுறீங்க நீங்க? யாரோட வாழ்க்கைக்கும் யாரோட மானத்துக்கும் இன்னொரு நபர் பொறுப்பெத்துக்க முடியாது. எந்தக் காலத்துல வாழுறீங்க?”
“மீனாட்சியத்தை பேத்தி தானே? உன் சோட்டுக்காரி இந்தத் தம்பி கூட போறதும் வாரதுமா இருந்தது உனக்குத் தெரியாமலா நடந்துச்சு? அது எப்படி யாரும் பொறுப்பேத்துக்க முடியாதுனு சொல்லுவ நீ? நடந்த தப்புக்கு யார் காரணமோ அவங்க பொறுப்பேத்துக்கத்தான் செய்யணும்.”
கனகவல்லியும் கஜேந்திரனும் உடைந்து போன நிலையில் இருக்க, அவர்களது மனவேதனையும் மௌனமும் சாந்தாவுக்கும் அவரைச் சார்ந்த பெண்களுக்கும் வாய்ப்பாகப் போய்விட்டது.
அதிலொரு பெண்மணி ஜெயசந்திரனிடம், “எல்லாம் உங்க கண்ணு முன்னாடி நடந்தும் எதுவுமே சொல்லாம நிக்குறீங்களேய்யா? நம்ம ஊருப் பொண்ணுக்கு நீங்கதானே நியாயம் சொல்லணும்?” என்று கேட்க, அவரோ அருள்மொழியையும் அட்சரனையும் பார்த்தார்.
‘ரெண்டு பயலுவளும் வசமா மாட்டுனாங்க.’
தனது புத்தகத்தை ஏற்றுக்கொள்ளாத அட்சரனை அடிபணிய வைக்க அவருக்குக் கிடைத்த வாய்ப்பாயிற்றே இது! தவறவிடுவாரா என்ன?
“அது எப்படி விட முடியும்? நானும் ஒரு பொண்ணைப் பெத்தவன்” என்றவர் நேரே சதானந்தனிடம் போய் நின்றார்.
”நீங்க மெச்சூர்டானவர். கிராமத்தாளுங்க வெள்ளந்தியானவங்க. அதைப் பயன்படுத்திக்கிட்டு அவங்களை மேனிபுலேட் பண்ண யார் நினைச்சாலும் அது தப்புதானே?”
சதானந்தனும் ராஜேஸ்வரியும் ஏற்கனவே குழம்பிப் போயிருந்தார்கள். இதில் ஜெயசந்திரன் வேறு இவ்வாறு பேசவும் மூச்சுத் திணறியது போல இருந்தது இருவருக்கும்.
“சார்! அச்சுவ பத்தி உங்களுக்குத் தெரியாதா?”
ஜெயசந்திரன் தலையை மறுப்பாய் அசைத்தவர், “அச்சுங்கிறவன் நல்ல மகன், நல்ல நண்பன், இலக்கிய ஆர்வமுள்ள லிட்டரரி ஏஜெண்ட். இதுல எல்லாம் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்ல சதானந்தன். ஆனா அவன் ஒரு ஆம்பளை. அவன் வயசை யோசிச்சுப் பாருங்க. அவன் வயசைக் கடந்து வந்தவங்க நாம” என்று வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போலப் பேச, சதானந்தன் முகத்தை மூடி அழுத வேதவதியைப் பரிதாபத்தோடு பார்த்தார்.
பெண்பிள்ளையைப் பெறவில்லை என்றாலும் அவளது அழுகையும் தவிப்பும் அவரைக் கண்கலங்க வைத்தது.
அட்சரனுக்கு ஜெயசந்திரனின் பேச்சில் கோபம் தூண்டப்பட, “நீங்க முதலமைச்சரா இருக்கலாம். அதுக்காக என் நடத்தையைத் தப்பா பேசுற அதிகாரம் உங்களுக்கு இல்ல. மூணு நாள் பழகுன பொண்ணு கிட்ட இழையுற அளவுக்கு நான் ஒன்னும் பலவீனமானவன் இல்ல. எல்லா ஆம்பளையும் எப்ப சான்ஸ் கிடைக்கும்னு அலையமாட்டான். மரியாதையா பேசுங்க. இல்லனா நடக்குறதே வேற” என்று கர்ஜிக்க, அடுத்த நொடி சதானந்தன் பார்த்தது மனைவியின் முகத்தை.
ராஜேஸ்வரி கண் கலங்கி நிற்கவும், “உன் மகன் மேல இவ்ளோ பெரிய பழி விழுந்திருக்கு. அது உண்மையா பொய்யானு ஆராய வேண்டாம். அதுக்கு இது சரியான நேரமும் இல்ல. ஆனா அந்தப் பொண்ணு இப்ப கலங்கி நிக்குறதுக்குக் காரணம் இவன். அதுக்கு நாமதான் பொறுப்பேத்துக்கணும் ராஜி” என்க,
“சம்பந்தமில்லாத எதுக்காகவும் நான் பொறுப்பேத்துக்க முடியாதும்மா” என்றான் அட்சரன் பிடிவாதமாய்.
சதானந்தன் மகனை ஏறிட்டார். அவனும் அவரைப் பார்த்தான். வாய் வார்த்தைகள் எதுவும் அங்கே பரிமாறப்படவில்லை. அவரது பார்வையின் நிதானம் எத்துணை ஆழமோ அத்துணை ஆழம் அட்சரனின் பார்வையிலிருந்த கோபம்.

ராஜேஸ்வரி இருவருக்கும் இடையே வந்தவர் கண்களால் இருவரையும் வேண்டிக்கொண்டார்.
பின்னர் “இந்தப் பொண்ணுக்கு நான் பொறுப்பெடுத்துக்குறேன். இவளோட படிப்பு, எதிர்காலம் எல்லாம் இனிமே என்னோட பொறுப்பு” என்றார் உறுதியாய்.
“எதிர்காலம்னா? நீங்க தெளிவா சொன்னா நல்லா இருக்கும்.”
ராஜேஸ்வரி தொண்டையைச் செருமியவர், “இந்தப் பொண்ணு படிச்சு முடிச்சதும் அச்சுவுக்கும் இவளுக்கும் கல்யா…” என்று சொல்லும்போதே “ம்மா!” என்று உறுமலாய் கேட்டது அட்சரனின் குரல்.
“கத்தாத அச்சு! நீ என்னை விட உயரமா வளர்ந்திருக்கலாம். பெரிய பெரிய பேச்செல்லாம் பேசலாம். அதுக்காக நீ சொல்லுற எல்லாத்துக்கும் நாங்க தலையாட்ட முடியாதுடா. பாரு அங்க! இங்க எல்லாமே தப்பா இருக்குனு வச்சுப்போம், நடந்த எல்லாமே ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்குனே எடுத்துப்போம். அந்தப் பொண்ணு என்ன பண்ணுனா அச்சு? அவளைப் பாத்தா உனக்குப் பாவமா இல்ல? இங்க சரி தப்பைப் பத்திப் பேச நேரமில்ல அச்சு. ஒரு பொண்ணோட கண்ணீரும் மனவேதனையும் என் மகனைப் பாதிச்சிடக்கூடாது. அது மட்டும்தான் எனக்கு முக்கியம்.”
அன்னையும் மகனும் பேசும்போதே சாந்தா இடைமறித்தார்.
“உங்க பேச்சை எல்லாம் எப்படி நம்புறது? இங்க வாக்கு குடுத்துட்டு அப்புறமா எங்க ஊருப் பொண்ணை ஏமாத்திட்டீங்கன்னா அவளுக்குனு பேச யார் இருக்குறாங்க?” என்று வியாக்கியானமாய் இழுத்தார்.
ராஜேஸ்வரியின் முகம் கடினமானது.
“இதோ வர்றேன்.”
அவர் கிளம்பிப்போக சாந்தாவின் கிண்டல் பேச்சு அவரது முதுகுக்குப் பின்னே கேட்டது.
நேரே அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து நகைக்கடையில் கொடுத்து மாற்றுவதற்காக வைத்திருந்த மாமியாரின் மாங்கல்யம் கோர்த்த முத்துமாலையை எடுத்தார்.
சுமங்கலியாய் வாழ்ந்து மறைந்த அந்த மூதாட்டியின் மாங்கல்யம்தான் இப்போதைய நிலையைச் சரிசெய்வதற்கான ஒரே கருவியெனத் தோன்றியது அப்போது.
விறுவிறுவென நடந்து தோட்டத்தை அடைந்தவர், மைந்தனின் கையில் அதைக் கொடுத்தார்.
“இதை அந்தப் பொண்ணு கழுத்துல போட்டு என் மருமகளா நம்ம கூட அழைச்சிட்டு வா அச்சு.”
அட்சரன் வேகமாக அந்த மாங்கல்யத்தைத் தரையில் தூக்கி வீசினான்.
“பைத்தியமா உங்களுக்கு? யார் என்ன சொன்னாலும் நீங்க எனக்காகப் பேசணும்மா. ஆனா நீங்களே…”
“தம்பி இதைத் தவிர இப்ப வேற வழியில்ல. இங்க பிரஸ் பீப்பிள் நிறைய இருக்காங்க. நீங்க இப்ப வேதாவ கல்யாணம் பண்ணிக்கலனா நீங்க அவளுக்கு ஏஜெண்டா வேலை செய்யுறதைக் காரணமா வச்சு செக்ஷுவலா (Sexually) அந்தப் பொண்ணை மேனிபுலேட் பண்ணிட்டீங்கனு செய்தி பரவும். இப்ப பாலியல் ரீதியான குற்றங்களுக்குத் தண்டனை ரொம்ப சிவியர் (Severe). என் மருமகனோ மகளோ நினைச்சா கூட இந்த சூழ்நிலையில உங்களைப் பாதுகாக்க முடியாது.”
இடையில் புகுந்த ஜெயசந்திரன் பத்திரிகையாளர்களுக்குக் குறிப்பு காட்டுவது போலப் பேசியதை அட்சரன் கண்டுகொண்டான்.
அவருக்கு அடிபணியாததால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி தன்னைத் தலைகுனிய வைக்க அவர் செய்யும் முயற்சியை அறிந்ததும் அவனது கண்கள் கனன்றன.
‘எனக்காக யாரும் துணையாக நிற்க முடியாத நிலையைப் பயன்படுத்திக்கொண்டு இவர் காய் நகர்த்துகிறார். இவரது ஈகோவைச் சீண்டியதற்கான பதிலடியா இது?’
கேள்வியாய் அவன் விழிக்க, ‘ஆம்’ என்பது போல் அசைந்தது ஜெயசந்திரனின் சிரம். அவரது வதனத்தில் வஞ்சத்தின் சாயல்.
சூழ்நிலை தனக்கு எதிராக மாறியிருப்பதை உணர்ந்த அட்சரனின் கோபம் முழுவதும் ஒரு ஓரமாய் அழுது கொண்டிருந்த வேதவதியின் மீது மொத்தமாகக் குவிந்தது.
‘இவள் வாய் திறந்து பேசியிருந்தால் எனக்கு இந்நிலை வந்திருக்காது.’
வானதியிடம் வேதவதியின் பெற்றோர் எங்கே என கேட்டார் ராஜேஸ்வரி.
அவள் கைகாட்ட, கனகவல்லி – கஜேந்திரன் தம்பதியிடம் வந்தவர், “இன்னைக்கு உங்க மகளையும் என் மகனையும் இந்த ஊர் தப்பு சொல்லுது. எனக்கு ஊர்ப்பேச்சுல நம்பிக்கை கிடையாது. அதே நேரம் ஒரு பொண்ணு கண்ணீர் வடிக்க ஏதோ ஒருவகையில என் மகன் காரணமாகிட்டான். நடந்த தப்புக்கான பொறுப்பை அவன் ஏத்துப்பான்” என்றார்.
கஜேந்திரன் மௌனமாக அழுதாரே தவிர வாய் பேசவில்லை.
“எழுத்து எழுத்துனு அதை மட்டுமே நினைச்சு அந்த எழுத்தாலயே இப்படி ஒரு நிலைமைக்கு வந்து நின்னுட்டாளே” இதுதான் கனகவல்லியின் ஆதங்கம்.
நேரே அட்சரனிடம் வந்தவரின் கையில், அவன் தரையில் வீசிய மாங்கல்யம் கோர்த்த முத்துமாலை.
அதை வம்படியாக அவனது கையில் திணித்தவர், “என் பேச்சை நீ மதிப்பனு நம்பி என் மாமியாரோட மாங்கல்யத்தைக் குடுக்குறேன். இன்னொரு தடவை இதைத் தூக்கியெறியதும் அம்மாங்கிற உறவு வேண்டாம்னு விலகுறதும் ஒன்னு அச்சு. முடிவு உன் கையில” என்றார்.

அட்சரனுக்குக் கை கால்களில் விலங்கிட்டு அவனைச் சூழ்நிலைக் கைதியாக்கிய ஒவ்வொருவர் மீதும் கோபம்! இத்தனை பேர் இத்தனை பேச்சு பேசும்போதும் ஓரமாய் அமர்ந்து அழுபவள் மீதோ பெருங்கோபம்!
வெறுப்போடு முத்துமாலையைக் கையில் சுமந்துகொண்டு வேதவதியின் அருகே போனவன், அவளது முழங்கையைப் பற்றி முரட்டுத்தனமாக எழுப்பினான்.
அதில் அவள் தடுமாறி விழப்போக, வேண்டாவெறுப்பாகக் கையைப் பிடித்து நிறுத்தியவன், தனது பாட்டியின் மாங்கல்யம் கோர்த்த முத்துமாலையை கடுஞ்சினத்தோடு அவளது கழுத்தில் போட்டுவிட்டான்.

நீளமாய் மார்பில் வந்து மோதிய அந்த முத்துமாலையைப் பார்த்ததும், கண்ணீர் பெருக்கிக்கொண்டிருந்தவள் மீண்டும் சிலையாய் உறைந்தாள்.
இங்கே நடந்த களேபரம் எதையும் கவனிக்காமல் அழுது கரைந்தவளுக்கு, அட்சரன் தனது கழுத்தில் போட்டுவிட்ட முத்துமாலையைப் பார்த்ததும் இரத்தம் உறைந்து போனது.
அவனது விழிகளில் தெரிந்த வெறுப்பில், தாடையின் இறுக்கத்தில், முஷ்டியாய் நரம்புகள் நெளிய இறுகிய கரத்தில், அவளது முதுகுத்தண்டு சில்லிட்டுப்போனது.
யார் சரி யார் தவறு என்ற விசாரணைக்கு இடமின்றிச் சூழ்நிலைக்கைதியாய் நின்ற இருவரையும் மாங்கல்யத்தால் விலங்கிட்டுப் பிணைத்து விட்டது விதி!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

