பழி சுமந்த மேகம் பதறியழுதது!
விழிச்சினம்தனில் விறகாய் எறிந்தது!
செய்யாப்பிழைக்குச் செந்நெருப்பானவனே!
உரிமையில்லா உன் கோபம் தீயானது!
-அட்சரனின் வேதா
“முகூர்த்தம் முடிஞ்சதும் கிளம்பிடுவீங்களா? என்ன இது பழக்கம்? ஏன்டிமா வேதா நீயாச்சும் இருக்கச் சொல்லு உன் பேரண்ட்ஸை.”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!

அருள்மொழி – வானதியின் திருமண முகூர்த்தம் முடிந்ததும் மணமக்களுக்கு அட்சதை தூவி வாழ்த்திய கையோடு கிளம்ப எத்தனித்த கனகவல்லியையும் கஜேந்திரனையும் தடுத்த கயல்விழி, வேதவதியிடம் முறையிட்டார்.
“அதில்லம்மா கயலு! பெரிய இடத்து ஆளுங்க வர்றாங்க. பொண்ணு மாப்பிள்ளைய ஆசிர்வாதம் பண்ணியாச்சுல்ல. கிளம்புறோமே! புள்ளைங்க இங்கதான் இருக்கும். வானதிய புருசன் வீட்டுக்கு அனுப்பி வச்ச பிறகுதான் வருவோம்னு சொல்லிட்டுத்தான் வந்துதுங்க” என்றார் யாழினியின் ஆச்சி மீனாட்சி.
கயல்விழி அவர்களைப் போலியாய் முறைத்தார்.
“இங்க பாருங்க பெரியம்மா! எப்பவாச்சும் நானோ என் வீட்டுக்காரரோ இந்த ஊராளுங்களை பெரியவங்க சின்னவங்கனு பிரிச்சுப் பாத்திருக்கோமா? எங்களுக்கு எல்லாரும் வேணும். இன்னைக்குத்தான் அவர் முதலமைச்சர். நீங்க எல்லாம் பாக்க வளர்ந்த மனுசன் அவர். இப்பவும் அவர் மாறல. நீங்க எல்லாம் வந்துட்டுப் பாதில போனது தெரிஞ்சுதுனா அவர் வருத்தப்படுவார் பெரியம்மா.”
அவர் வேண்டிக் கேட்டுக்கொள்ளவும் பெண்கள் வாய் திறந்தார்கள்.
“அதுக்குள்ள வீட்டுக்குப் போய் என்னம்மா செய்யப்போற? மொத்த ஊரும் இங்கதான் இருக்கு. ப்ளீஸ்மா! மதியம் வரை இருந்துட்டுப் போகலாமே”
வேதவதி சொன்னதும் கஜேந்திரனும் கனகவல்லியும் இருக்கச் சம்மதிக்க, கயல்விழி இரு பெண்களையும் விரட்டினார்.
“பெரியவங்களைச் சாப்பிடக் கூட்டிட்டுப் போங்க. வானதி மேடையில தான் இருப்பா. அவளை யாரும் தூக்கிட்டுப் போயிடமாட்டாங்க. அப்படியே தூக்கிட்டுப் போக நினைச்சாலும் என் மருமகன் இருக்குறான். பாத்துப்பான். நீங்க எல்லாரும் சாப்பிட்டுட்டு வந்ததும்தான் மத்த சடங்கு ஆரம்பிக்கும்.”
வேதவதியும் யாழினியும் பெரியவர்களை அழைத்துச் செல்வதைப் பொருமலோடு பார்த்தபடி ஒரு ஜீவன் கடந்தது. அது சாந்தா என்று தனியாக வேறு சொல்ல வேண்டுமா என்ன?
கனகவல்லியையும் கஜேந்திரனையும் இத்துணை மரியாதையாக கயல்விழி நடத்திய விதம் அவருக்கு உருவாக்கிய எரிச்சலை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.
“க்கும்! இவங்க அப்படியே மிராசு குடும்பம், இந்தம்மா ஏன் இந்த தாங்கு தாங்குது? போனா போங்கனு விட வேண்டியதுதானே?” என்று தனக்குக் கிடைக்காத முக்கியத்துவம், பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் தன்னைப் போலவே இருக்கும் கனகவல்லிக்கும் அவரது குடும்பத்துக்கும் கிடைப்பதைக் கண்டு பொறுக்காமல் மனதுக்குள் கறுவிக்கொண்டார்.
போதாக்குறைக்கு ஆங்காங்கே எதேச்சையாக அட்சரனும் வேதவதியும் பேசிக்கொண்டால் கூட அதைத் தவறாக எண்ணிக்கொண்டு, தன்னுடன் மாளிகைக்குக் கல்யாண வேலைக்காக வந்த பெண்களிடம் கிசுகிசு போல புறணி பேசிக்கொண்டிருந்தார்.
“நாம எல்லாம் மான ரோசமுள்ளவங்க. இப்படிப் பிள்ளைய பணக்காரன் கூட பழக விட்டு வேடிக்கை பாக்குற தந்திரம் எல்லாம் நமக்கு வருமா சாந்தாக்கா?”
தன்னைப் போல ஒத்திசைந்து பேசும் ஆட்கள் சேரவும் குஷியாகிவிட்டது சாந்தாவுக்கு.
அன்றைய தினம் முழுவதும் அந்தப் பெண்கள் கூட்டத்தின் கண்கள் கண்காணிப்பு கேமராக்களாக மாறி வேவு பார்த்தது வேதவதியையும் அட்சரனையும்தான்.
மணமக்களின் தோழமைகள் என்ற முறையில் அவர்கள் புகைப்படம் எடுக்க ஒன்றாய் மேடை ஏறினால் கூட முணுமுணுத்துக்கொண்டார்கள்.
இந்த முணுமுணுப்பு எதுவும் சம்பந்தப்பட்டவர்களின் செவிக்குப் போகாததால் எந்தக் களேபரமும் அங்கே ஏற்படவில்லை. எல்லாம் மாலை நேரம் வரைதான்.
மாலையில் ரிசப்சனுக்காக ஷாம்பெய்ன் வண்ணத்தோடு பாஸ்டல் பிங்க் கலந்த நிறத்தில் கற்களும், சீக்வின்ஸ்களும் பதிக்கப்பட்ட அழகான ரிசப்சன் கவுன் தரையில் புரள, பொருத்தமான வைர நகைகளை அணிந்து வானதி தயாரானபோதே பிரச்சினைக்கான பிள்ளையார் சுழி போடப்பட்டது எனலாம்.
தன்னைப் போலவே தோழியருக்கும் உடைகள் வாங்கச் சொல்லியிருந்தாள் அவள்.
அருள்மொழிக்கு நேவி ப்ளூவில் ஷெர்வாணி போல தங்க ஜரி அலங்காரத்துடன் டியூனிக் ஒன்று. அதே போலச் சின்னச் சின்ன வண்ண வேறுபாடுகளோடு அட்சரனுக்கும் சஞ்சய்க்கும்.
ஆண்கள் எந்தப் பிகுவும் செய்யாமல் உடைகளை அணிந்துகொண்டார்கள். ஆனால் பெண்கள் தயங்கினார்கள்.
அதிலும் இலக்கியா ஒரு படி மேலே சென்று, “இன்னைக்கு நீதான் ஹீரோயின். உன்னை மாதிரி நாங்க டிரஸ் பண்ணுனா நல்லா இருக்காது நதி” என்று சொல்லிக்கூடப் பார்த்தாள்.
இறுதியில் வென்றது என்னவோ வானதிதான். வேறு வழியின்றி அவள் சொன்னபடி கவுன்களை அணிந்துகொண்டார்கள் மூவரும்.
“இதைப் போட்டுக்கிட்டு நடக்கவே பயமா இருக்கு. எங்க ஆச்சிக்கு என்னை அடையாளமே தெரியாது” – யாழினி.
“கண்டிப்பா நாம நாலு புதையல் எடுப்போம்” – வேதவதி.
புலம்பினாலும் மிண்ட், பாஸ்டல் மஞ்சள், லேவண்டர் வண்ண கவுன்களில் அத்துணை அழகு மூவரும்.
“இன்னைக்கு ஃப்ரெண்ட்ஸ் எல்லாரோட சேர்ந்து நான் எடுக்கப் போற போட்டோதான் எனக்குப் பொக்கிஷம். இந்த மொமண்ட் எனக்கு ரொம்ப முக்கியம்” – வானதி.
சொன்னபடி ரிசப்சன் மேடையில் நண்பர்களோடு சேர்ந்து அவள் செல்ஃபி எடுத்துக்கொள்ள, அனைவரின் கண்களும் திருஷ்டியாய்ப் பதிந்தன அவர்கள் மீது.

ஊடகங்களும் அனுமதிக்கப்பட்டிருந்தால் இன்னும் அதிகமாய்க் கவரேஜ் அவர்களுக்கு.
அட்சரனின் கவனத்தைக் கூடுதலாக ஈர்த்தது வேதவதி அணிந்திருந்த லேவண்டர் வண்ண கவுன்.
“சோ இது உன் ஹீரோயினோட ஆசை இல்ல. உன்னோட ஆசை. ஆம் ஐ ரைட்?” தலை சாய்த்துக் கேட்டவன் சிரிக்க, வேதவதிக்குத் தனது கண்களையே நம்ப முடியவில்லை.

பின்னர் சுதாரித்துவிட்டு, “அப்படியெல்லாம் இல்ல சார். வானுதான் கம்பல் பண்ணி…” என்றவளை இடைமறித்தவன்,
“ஆமானு சொல்லக் கத்துக்கணும். நீ விரும்புற மாதிரி வகை வகையா கவுன் வாங்கி குடுக்குற புருசன் அமையட்டும்” என்று புன்சிரிப்போடு சொல்லிவிட்டு அங்கிருந்து அவன் அகன்றுவிட, முதல் முறையாக அவனிடமிருந்து கனிவான வார்த்தைகள் வந்ததில் வேதவதிக்கும் மகிழ்ச்சி.
அந்நொடி வரை அவர்களின் மனதுக்குள் எந்தக் கல்மிஷமும் புகவில்லை. தனது தோழியரைப் போலவே அவனிடமும் பதற்றமின்றி உரையாட முடிந்தது வேதவதிக்கு. அதே போல அட்சரனும் முன்பு போலக் கறாராக இல்லாமல் இயல்பாகவே அவளிடம் பேசினான், பழகினான் எனலாம்.
ஆனால் சாந்தாவின் வன்மத்தால் பாதிக்கப்பட்ட மனங்களுக்கு அவர்களது சினேகமான உரையாடல் கூடத் தவறாகத் தோன்றியது.
அனைத்துக்கும் முத்தாய்ப்பாக மேடையில் நின்று கொண்டிருந்த வானதிக்கும் அருள்மொழிக்கும் பிறர் அறியாதவண்ணம் வார்த்தைப்போர் நடந்தேற, அவனை முறைத்தவள் எதுவும் பேசாமல் மேடையிலிருந்து இறங்கினாள்.
எதிர்பட்டவரிடம் “ரெஸ்ட்ரூம் போகணும்” என்று சொன்னவள், போய் நின்றதோ யாருமில்லாத இடமாக அவள் கருதிய பங்களாவின் பக்கவாட்டுத் தோட்டம்.
விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட அந்த இடத்தில் ஆட்கள் யாருமில்லை. பூச்செடிகள் மட்டுமே நிரம்பிய அந்தத் தோட்டத்தில் விருட்சங்களுக்கு ஏனோ இடமளிக்கவில்லை தோட்டக்காரர்.
அந்த நொடி அழுதே தீர வேண்டும் என்று உள்ளுக்குள் ஒரு உந்துதல். அடக்கிவைத்த உணர்வுகள் யாவும் வெடித்துக் கிளம்ப, பெண்ணவளின் விழிகளில் கார்கால மேகங்களின் ஊர்வலம்.
துளியாய் அல்லாது மழையாய் பொழிந்த கண்ணீரோடு விம்மலும் சேர்ந்து கிளம்ப, அவளது முதுகின் பின்னே ஒரு குரல் கேட்டது.
“நதி!”
வந்தவன் அட்சரன். வானதிக்கு நண்பனிடம் தனது கலக்கத்தை மறைக்க விருப்பமில்லை.
“அச்சு” விம்மலோடு அழைத்தவள், அவன் அருகே வந்ததும் அணைத்துக்கொண்டாள்.
அவள் அழுவதற்கு அவன் உறுதுணையாக இருந்தால் மட்டும் போதும் என்பதே இப்போது அவளுக்கு இருக்கும் மனநிலை.
“என்னாச்சு நதி? அங்க அவன் பாயிலர் மாதிரி கொதிக்குறான். இங்க நீ அழுற. உங்களுக்குக் கல்யாணம் ஆகி இன்னும் இருபத்துநாலு மணி நேரம் கூட ஆகல.”
வானதி அழுகையோடு, “அவன் என்னை வெறுக்குறதா சொல்லுறான் அச்சு. நான் ஒன்னுமே பண்ணல அவனை. அவன் ஒரு தடவையாச்சும்… ப்ச்! சொல்லிப் பிரயோஜனம் இல்ல. ரொம்ப நோகடிக்குறான்டா. அவனைத் திட்டுனாலும் எனக்குத்தான் வலிக்குது” என்று சொல்ல, அட்சரன் என்ன செய்ய முடியும் இந்நிலையில்?
தோழியின் கூந்தலை வருடிக்கொடுத்தவன், “என்ன பிரச்சினைனு எனக்குச் சுத்தமா புரியல. ஆனா ஒன்னு மட்டும் சொல்லுவேன். அருள் கெட்டவன் இல்ல. நீன்னா அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனா உன் கிட்ட அதைக் காட்டிக்க மாட்டான்” என்று ஆறுதலாய் மொழிந்தான்.
சரியாக அந்நேரத்தில் ஆளரவற்ற அந்தத் தோட்டத்தில் ஒரு ட்ரோன் (Drone) தாழ்வாகப் பறந்ததை இருவரும் அறியவில்லை. பாதுகாப்புக்காக, டிவி சேனல்களின் கவரேஜுக்காக என்று எண்ணற்ற ட்ரோன்கள் பறந்து அருள்மொழி – வானதியின் திருமணத்தைப் படமாக்கிக்கொண்டிருந்ததால் அதைத் தனித்து யாரும் கவனிக்கவில்லை.

அதில் ஒரு ட்ரோன் செய்தித் தொலைக்காட்சி ஒன்றின் லைவ் ஒளிபரப்புக்கானது.
செய்தித் தொலைக்காட்சியில் லைவ் போவதைத் தனது மொபைலில் கவனித்துக்கொண்டிருந்த கட்சி நபர் ஒருவர் மூலமாக இச்செய்தி கசிந்து, ஒட்டுமொத்த விருந்தினர் கூட்டத்துக்கும் தெரியவர, அங்கே சிறிய கலவரத்துக்கான ஆரம்பம்.
மெல்ல மெல்ல ஆளாளுக்கு முணுமுணுக்க ஆரம்பித்தார்கள்.
அட்சரன் அணிந்திருந்த உடையின் நிறம், வானதியின் ரிசப்சன் கவுனை லைவில் பார்த்து உறுதிபடுத்திக்கொண்டார்கள்.
“தாலி கட்டுன புருசன் மேடைல நிக்குறான். இவ ஃப்ரெண்டு கூட சேர்ந்து தோட்டத்துல கும்மாளம் அடிச்சிட்டிருக்கா. சீ!”
“இதுக்குத்தான் முதலமைச்சர் மகளா இருந்தாலும் பரவால்லனு கல்யாணத்தை நிறுத்தியிருக்கான் அந்த ஆதர்ஷ்.”
தீப்பொறி போல இந்த முணுமுணுப்புகள் ஒன்று சேர்ந்து ஜெயசந்திரன் காதையும் தோட்டத்தையும் அடைந்தபோது, உறவுக்காரக் கூட்டம், கட்சியாட்கள் என ஒரு படையே தோட்டத்தில் அட்சரனைச் சுற்றி வளைத்தது. அட்சரனை மட்டும்தான், ஏனெனில் அங்கே வானதி இல்லை.
“ஃப்ரெண்டுனு சொல்லிட்டு இங்க வந்து கல்யாணம் ஆன பொண்ணைக் கட்டிப்பிடிச்சு உறவாடிருக்க. அருளும் உனக்கு ஃப்ரெண்டு தானே? அவனுக்கு இப்படி ஒரு துரோகத்தை ஏன் பண்ணுன?”
ஜெயசந்திரனின் மகளை அருள்மொழி மணமுடித்தது பிடிக்காமல், அவனது காலஞ்சென்ற பெற்றோரின் தூரத்து உறவுப் பெண்மணி வெகுண்டெழுந்து பேசினார்.
ஆளாளுக்குக் கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்க, இப்போது திருமணத்துக்கு வந்த அனைவரும் தோட்டத்தில் குழுமிவிட்டார்கள்.
அட்சரன் தனியொருவனாய் திணறும்போதே இரும்பாய் இறுகிய முகத்தோடு வந்து சேர்ந்தார் ஜெயசந்திரன். அவரோடு வந்த கயல்விழியின் கண்களில் கண்ணீரோடு பரிதவிப்பு.
“உன் வாய்ல என்ன கொழுக்கட்டையா இருக்கு? வாயைத் திறந்து சொல்லுப்பா. முதலமைச்சர் மக எங்க போச்சு?”
ஆளாளுக்குக் கேள்வி கேட்கவும் கூட்டத்தைக் கிழித்துக்கொண்டு வந்தது அருள்மொழியின் குரல்.
“இன்னொரு வார்த்தை என் ஃப்ரெண்டையோ என் பொண்டாட்டியையோ யாரும் பேசுனீங்கன்னா, திரும்பிப் போறப்ப பேசுறவன் வாய்ல நாக்கு இருக்காது.”
கோபப்பிழம்பாய் தகித்தபடி வந்தவனின் கரம் பிடித்திருந்தது வானதியை.
அட்சரன் பரிதவிப்பாய் நண்பனைப் பார்க்கவும், “உன்னைப் பத்தி யார் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். நீ என்னோட அச்சு” என்றவன்,
“இங்க பாருங்க! நாங்க மூணு பேரும் கிண்டர்கார்டன்ல இருந்தே ஃப்ரெண்ட்ஸ். இவங்க உறவைச் சந்தேகப்படுற உரிமையோ அருகதையோ உங்க யாருக்கும் கிடையாது” என்று அபவாதப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்க எத்தனித்தான்.
“எல்லாம் சரிதான் அருள்! அப்ப நாங்க நியூஸ் லைவ்ல பாத்தது பொய்யா? இதே கவுன், இதே ஹேர்ஸ்டைல்ல நீ தொட்டுத் தாலி கட்டுன பொண்டாட்டி இவனை கட்டி உரசிட்டிருந்ததை மொத்தத் தமிழ்நாடும் பாத்தாச்சு. நீ அப்பாவிடா. இந்தக் குடும்பம் செஞ்ச அநியாயத்தை மறந்துட்டியா அதுக்குள்ள?”
அந்தப் பெண்மணி அருள்மொழியைத் தூண்டிவிட, அங்கிருந்தவர்களின் விழிகளில் துரோகியாகத் தெரிந்தான் அட்சரன்.
வானதி தலைகுனிந்து நிற்பதைப் பார்த்தவனுக்குச் சற்று முன்னர் அவள் வேதனையோடு அழுதது நினைவுக்கு வந்தது. அருள்மொழிக்கும் அவளுக்கும் இடையே இருக்கும் காரணம் புரியாத பிரச்சினை அவளை ஏற்கனவே நோகடித்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தன்னால் அவளது நடத்தைக்கே களங்கம் வருமா எனத் துடித்த அவனது மனம், சட்டென வானதியைச் சமாதானம் செய்துகொண்டிருந்த வேதவதியைப் பார்த்ததும் சடுதியில் ஒரு முடிவை எடுத்தது.
அவன் பிறந்து வளர்ந்த இடத்துக்கும் தேன்மலைக்கும் நிறைய வித்தியாசங்கள் இருப்பதைப் பாவம், அட்சரன் அப்போது உணரவில்லை.
தனது முடிவு இருவரது வாழ்க்கையையே மாற்றுமென அட்சரனுக்குத் தெரியாததால் அவன் தொண்டையைச் செருமினான்.
“என் கூட இருந்தது வானதி இல்ல. வேதா” என்றான் கணீரென்ற குரலில்.
அட்சரனின் பேச்சில் ஒட்டுமொத்தக் கூட்டமும் அதிர்ந்து அமைதியாக, சம்பந்தப்பட்டவளான வேதவதியோ மிரண்டு போய் அவனைப் பார்த்தாள்.
‘என்ன சொல்லுகிறாய் நீ?’ என்ற கேள்வி அவளது விழிகளில்.
அட்சரன் வேகமாக அவளிடம் வந்தவன் அவளது கையைப் பற்றி அனைவரின் முன்னிலையிலும் நிறுத்தினான்.
“இவ… இந்த வேதவதிதான் என் கூட இருந்தா. உடனே அதுக்கும் தப்பர்த்தம் கண்டுபிடித்திடாதிங்க. இந்தப் பொண்ணு எழுதுறானு உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இவளோட லிட்டரரி ஏஜெண்ட் நான். அதைப் பத்திப் பேச நாங்க இங்க வந்தோம். அப்ப எதையோ பார்த்து இவ மிரண்டு போனதால கட்டிப்பிடிக்க வேண்டிய கட்டாயம். அந்த நேரத்துல ட்ரோன் அங்க வந்து எங்களைக் கவர் பண்ணிடுச்சு. இவ கவுனும் வானதியோட கவுனும் ஒரே டிசைன். இந்த லைட் வெளிச்சத்துல ரெண்டு கவுனும் ஒரே மாதிரி பாஸ்டல் கலராதான் தெரியும். அதனால நீங்க எல்லாரும் குழம்பிட்டிங்க.”
மூச்சே விடாமல் பாடம் ஒப்பிப்பதைப் போல அவன் சொல்லி முடிக்கவும் அருள்மொழி அனைவரையும் காட்டமாய் பார்த்தான்.
“கேட்டீங்கல்ல? என்ன ஏதுனு தெரியாம என் ஃப்ரெண்டோட ஒழுக்கத்தைக் கேள்விக்குறியாக்கப் பாத்தீங்களே? இப்ப என்ன பண்ணப்போறீங்க பெரியம்மா? ஒவ்வொருத்தரா வந்து அவன் கால்ல விழுவீங்களா?”
ஜெயசந்திரன் இந்த இடத்தில் மருமகனை அமைதிப்படுத்த முயன்றார்.
“ஏதோ ஆதங்கத்துல பேசிட்டாங்க. ரிசப்சனை கவனிப்போம்.”
அடுத்து அவரிடமே காய்ந்தான் அருள்மொழி.
“இதே மாதிரி உங்க மகனோட ஒழுக்கத்தை யாராச்சும் கேள்விக்குறியாக்குனா அடுத்த வேலைய பாக்க கிளம்புவீங்களா? இதோ இவளையும் நீங்கதானே பெத்தீங்க. இவன் கூட சேர்த்துவச்சு இவங்க எல்லாரும் அசிங்கப்படுத்துனது இவளையும்தானே? நியாயப்படி நீங்க கொதிக்கணும் இந்த இடத்துல.”
“அருள்” அட்சரனின் குரல் உயரவும் அருள்மொழியின் குரல் தணிந்தது.
வேதவதியின் முகமோ இன்னும் தெளியவில்லை. இத்தனை பெரிய கூட்டத்துக்கு நடுவே பேச வேண்டுமென நினைத்தாலும் அவளது குரல் நாண்கள் ஒத்துழைக்கவில்லை.
‘அட்சரன் சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்குமான சிலுவையை, ஒழுக்கரீதியானக் குற்றச்சாட்டை வாழ்நாள் முழுக்க நான் சுமக்க வேண்டுமா?’
பயமும் படபடப்புமாக இருந்தது. யாராவது தனது கையைப் பற்றி ‘உன்னை நான் நம்புகிறேன்’ என்று சொல்லமாட்டார்களா என்ற தவிப்பு!
அவளது பார்வை வட்டத்தில் ஒரு ஓரமாய் அதிர்ந்த முகத்தோடு நின்ற பெற்றோர் பட்டார்கள். யாழினி அவர்களிடம் ஏதோ சொல்லிச் சமாளித்துக்கொண்டிருந்தாள்.
‘இவர்கள்தான் எந்தச் சூழலிலும் என்னைச் சந்தேகிக்க மாட்டார்கள்.’
அவர்களை நோக்கி அவள் அடியெடுத்து வைக்கப் போன அந்நொடியில் கூட்டத்திலிருந்து எக்களிப்புடன் வந்த சாந்தா அவளைத் திணற வைத்தார்.

“இந்தக் கனகம் என்ன ஆட்டம் ஆடுனா? மானங்கெட்ட கழுதைய மவளா பெத்துட்டு இவளுக்கு இம்புட்டு ஆங்காரமா? அந்த ஆங்காரத்தை ஊர் முன்னாடி போட்டு உடைக்குறேன்” என்று மனதுக்குள் சங்கல்பம் எடுத்தவர் அடுத்து செய்த காரியம் அட்சரனையும் வேதவதியையும் ஒரே நேரத்தில் நோகடித்தது.

சந்தர்ப்பவாதி என அவனது பார்வை வேதவதியைக் கடித்துக் குதற, அவளோ செய்வதறியாது திகைக்க, முடிவில் தனது பாட்டியின் மாங்கல்யம் கோர்த்த தங்க முத்துமாலையை வேதவதியின் கழுத்தில் வெறுப்போடு போட்டுவிட்டான் அட்சரன்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

