மறுநாள் மாலையில் மெஹந்தி, சங்கீத் என்று கொண்டாட்டத்தின் வர்ணங்களை அள்ளிப்பூசிக்கொண்டது ஜெயவிலாசம். டி.ஜே இசையோடு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடை சங்கீத் நிகழ்வுக்காகத் தயாராகியிருக்க, நீளநீளமாய் மெஹந்தி கோன்கள் அடுக்கப்பட்ட தட்டுகள் மலர் அலங்காரத்தோடு வைக்கப்பட்டிருந்தன.
அந்த அலங்காரப்பந்தலுக்குக் கீழே ஒரு பூந்தோட்டமே அமர்ந்திருப்பது போல, இளம் பச்சை நிற லெஹங்காவில் வானதி ஜொலித்துக்கொண்டிருந்தாள்.
அவளது கரங்களில் மெஹந்தி பூக்கள் பூக்கத் தொடங்கின. மெஹந்தி வைத்துக்கொண்டிருந்த பெண் அவளது உள்ளங்கையில் ரகசியமாக ‘அருள்’ என்ற பெயரைச் செதுக்க, அதைச் சுலபத்தில் கண்டுகொண்டவளுக்குப் பெரிதாய் நாணமோ சிலிர்ப்போ இல்லை.
மெஹந்தி முடிந்து இரவு நெருங்க, மாளிகையின் புல்வெளிப் பிரதேசத்தில் நவீன மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட மேடை இளசுகளால் வண்ணமயமாக மாறியது. இதுதான் சங்கீத்! ஆடல் பாடல்களின் அதிரடித் தொடக்கம். கானகத்தின் அருகே மாளிகை இருப்பதால் பாடல்களின் சத்தம் என்னவோ குறைவுதான்.

மேடைக்கு எதிரே போடப்பட்டிருந்த இருக்கைகளில் வானதியுடன் அமர்ந்து சங்கீத்தில் ஆடிய ஜோடிகளைப் பார்த்துக் கொண்டிருந்த வேதவதிக்கு, இது ஒரு புதிய அனுபவம். மெல்லிசையின் அதிர்விலும், வண்ணவிளக்குகளின் சௌந்தரியத்திலும் அவளது அடுத்த நாவலுக்கான வரிகள் அவளுக்குள்ளே ஓடிக்கொண்டிருந்தன.
இதற்கிடையே கயல்விழி அவளிடம் வந்து வானதியின் அறையிலிருந்து ஏதோ ஒரு பொருளை எடுத்துவரச் சொல்லவும் எழுந்தவள் வானதியின் அறை இருக்கும் மூன்றாம் தளத்தை அடைந்தாள்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
சங்கீத்தின் அதிரடி இசையும், வர்ண விளக்குகளின் ஜாலமும் அந்த மூன்றாம் தளத்தில் மெல்லக் குறைந்து ஒரு மெல்லிய ரீங்காரமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. கயல்விழி கேட்ட அந்தப் பொருளை எடுப்பதற்காக வேதவதி விறுவிறுவென நடந்து வானதியின் அறைக்குள் நுழைந்தாள்.
அந்தத் தருணம், விதி விளையாடியது. மாளிகையின் பிரதான மின் இணைப்பில் ‘பியூஸ்’ பிடுங்கிக் கொள்ள, ஒரு நொடி தேன்மலைக் கானகமே அந்த மாளிகையை விழுங்கிவிட்டது போன்றதொரு கும்மிருட்டு.
எல்லாம் சில நொடிகள்தான்! ஜெனரேட்டரின் கர்ஜனை ஒலிக்க, விளக்குகள் மீண்டும் உயிர் பெற்றன.
சரியாக அச்சமயத்தில் வேதவதி அறையின் சுவரோரம் இருந்த அந்த அலங்கார விளக்குகளின் சுவிட்சைத் தொட்டாள்.
அடுத்த நொடி, ஒரு பயங்கரமான மின்சாரப் பாய்ச்சல் அவளுக்குள்! அவளது நரம்புகளின் வழியே நீலநிற மின்பொறி ஊடுருவ, அலறுவதற்குக் கூட அவகாசமின்றித் தூக்கி எறியப்பட்டாள் வேதவதி.
ஒரு அழகான கவிதை எழுதப்பட்ட காகிதம் கசக்கி எறியப்பட்டது போல, மூச்சுப் பேச்சு இல்லாமல் தரையிலேயே சுருண்டு விழுந்தாள் அவள்.
நம் இதயம் ஒரு மிகச்சிறிய மின் சமிக்ஞை (Electrical Impulse) மூலமே துடிக்கிறது. வெளியில் இருந்து ஒரு பெரிய மின்சார அதிர்வு உடலில் பாயும்போது, அது இதயத்தின் இயற்கையான தாளத்தைச் சீர்குலைத்து, இதயத்தை அப்படியே முடக்கம் செய்துவிடும். இதனால் நாடித்துடிப்பு குறையத் தொடங்கும்.
மின்சாரம் பாயும்போது நுரையீரலைச் சுற்றியுள்ள தசைகள் கடுமையாகச் சுருங்கி அப்படியே நின்றுவிடும் (Spasm). இதனால் தானாக மூச்சை உள்ளே இழுக்கவோ வெளியே விடவோ முடியாமல் போகும். இந்நிலையில் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு மிகக் கடுமையாகக் குறையும் போது, உடல் தனது இயல்பான நிறத்தை இழந்து நீலம் பாரிக்கத் தொடங்கும்.
அதே தான் வேதவதிக்கும் நடக்கத் தொடங்கியது.
கீழேயோ வேதவதி மூன்றாவது தளத்துக்குப் போய் நேரமாகியும் வராதக் காரணத்தால் குழம்பிப்போன கயல்விழி அட்சரனிடம் வந்தார்.
“அச்சு! வானதியோட ரூமுக்கு வேதா பொண்ணை அனுப்புனேன். கரெண்ட் கட் ஆகுறதுக்கு முன்னாடியே போனவ இன்னும் வரல. என்னனு பாத்துட்டு வாயேன்.”
“சரி ஆன்ட்டி!” என்றவனின் கால்கள் படிகளில் வேகமாக ஏறி மூன்றாவது தளத்தை அடைந்தன.
அதே வேகத்தோடு அறைக்குள் நுழைந்தவனுக்கு அங்கே கண்ட காட்சியில் ரத்தம் உறைந்தது. மலர்ச்செடி ஒன்று வேரோடு பிடுங்கி எறியப்பட்டது போல வேதவதி சுவரோரமாய் கிடக்க, அவளது இதழ்கள் மெல்ல நீல நிறமாக மாறத் தொடங்கியிருந்தன.

“வேதா! வேதா!”
அட்சரன் அவளை உலுக்கினான். அவளது நாடித்துடிப்பு மிக மிக மெலிதாக, இன்னும் சிறிது நேரத்தில் அடங்கும் நிலையில் இருந்தது. அவனது மூளை அடுத்த நொடியே அவளைக் காப்பாற்றும் ‘எமர்ஜென்சி’ மோடுக்கு மாறியது. இப்போது வேதவதிக்குத் தேவை சி.பி.ஆர்.
ஒரு கணம் கூடத் தாமதிக்காமல், அவளது மார்பின் நடுவே தன் கைகளை வைத்து அழுத்தினான்.
ஆனால் வேதவதி கண் விழிக்கவில்லை. வெளிர் நீலமாக மாறிக் கொண்டிருந்த அவளது இதழ்கள், அட்சரனுக்கு அவளது அபாயநிலையை அறிவிக்க, அட்சரன் மெல்லக் குனிந்து, அவளது சுவாசப் பாதையைச் சீர்செய்து, தன் நுரையீரலில் இருந்த மொத்த உயிர்க்காற்றையும் வெளிர்நீல உதடுகளின் வாயிலாக அவளுக்குள் செலுத்தினான்.
அவனது இதழ்கள் அவளது இதழ்களைத் தீண்டிய அந்நொடியில் அவன் மனதில் கல்மிஷமான எந்த எண்ணமும் இல்லை; அது ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவுக்கு அளிக்கும் ‘உயிர்த்தானம்’ மட்டுமே. அவனது மூச்சுக்காற்று அவளது மார்புக்குள் நுழைந்தபோது, ஒரு மெல்லிய அசைவு வேதவதியின் உடம்பில்!
அவன் விடவில்லை. பதற்றத்தில் அவனது நெற்றியில் அரும்பிய வியர்வைத் துளிகள் அவளது முகத்தில் விழுந்து தெறித்தன. அவனது விழிகளில் இருந்த அந்தத் தவிப்பு, ‘இந்தப் பெண்ணுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது’ என்கிற ஒற்றைப் பிடிவாதத்தைச் சுமந்திருந்தது.
மீண்டும் ஒருமுறை அவன் உயிர்க்காற்றைச் செலுத்திய அந்தத் தருணம்… ஒரு நீண்ட, ஆழமான பெருமூச்சோடு வேதவதியின் உடல் விதிர்த்தது. சுவரோரம் சாய்ந்து கிடந்த அந்தப் பூங்கொடி, வசந்தத்தின் முதல் மழையில் நனைந்ததைப் போல மெல்ல அசைந்தது. மூடியிருந்த அவளது இமைக்கதவுகள் பாரம் தாங்காமல் மெல்லத் திறக்க, அட்சரனின் முகம் அவளது மங்கலான பார்வையில் ஒரு கடவுளைப் போலத் தெரிந்தது.
கீழே சங்கீத்தின் இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்த அந்த வேளையில், மேலே அந்தத் தனிமை அறையில், மரணத்திற்கும் வாழ்விற்கும் இடையிலான போராட்டம் மௌனமாக முடிவுக்கு வந்திருந்தது. வேதவதியின் மார்புக்கூடு இப்போது சீராக ஏறி இறங்க, அட்சரன் ஒரு நீண்ட நிம்மதிப் பெருமூச்சை வெளியிட்டான்.
இந்த ஜீவமரண போராட்டம் பற்றி அறியாமல் மாளிகையின் வெளிப்புறம் பூக்கூடைகளோடு நடந்து கொண்டிருந்த சாந்தா, ஜன்னல் வழியே அந்த அறைக்குள் தெரிந்த காட்சியைக் கண்டு ஸ்தம்பித்துப் போயிருந்தார்.
ஏற்கனவே வேதவதியின் அன்னை கனகவல்லி முந்தைய தினம் கடுமையாகப் பேசியதில் அவர் மீது ஒரு மெல்லிய வன்மத்தைச் சுமந்து கொண்டிருக்கும் அவருக்கு, லட்டு போல வேதவதியைக் கலங்கடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டது.
ஜன்னல் திரைச்சீலைகள் விலகியிருக்க, நிலவொளியிலும் விளக்கொளியிலும் அட்சரன் வேதவதியின் முகத்தோடு முகம் சேர்த்துச் சுவாசம் கொடுத்துக் கொண்டிருந்த காட்சி, அவரது கண்களுக்கு ஒரு ‘அநாகரிகமான நெருக்கமாக’ மட்டுமே தெரிந்தது.
அட்சரன் அவளது உயிரை மீட்கப் போராடிக் கொண்டிருக்க, சாந்தாவோ அந்தச் சூழலின் புனிதத்தை அறியாமல், “என்ன ஒரு அநியாயம்!” எனத் தன் மனதிற்குள் வன்மத்தை விதைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து அந்தத் தளம் முடியும் இடத்தில் இருக்கும் சுவரின் பின்னே பதுங்கிக்கொண்டார்.
வேதவதிக்கு மங்கலாகத் தெரிந்த அந்த அறை வெளிச்சத்தில், மிக அருகில் அட்சரனின் முகம் தெரிந்தது. அவனது விழிகளில் தெரிந்த அந்தத் தவிப்பும், நெற்றியில் வழிந்த வியர்வையும் வேதவதிக்குச் சின்னதாய் ஒரு அதிர்ச்சியைக் கொடுக்க எழுந்து அமர்ந்தாள்.
அவள் இயல்பு நிலைக்குத் திரும்புவதை உறுதி செய்துகொள்ளும் வரை அவனது கைகள் அவளது தோள்களை இறுக்கமாகப் பற்றியிருந்தன.
“ஆர் யூ ஓகே வேதா?”
அவனது குரலில் இருந்த அக்கறை அவளுக்குப் பிடித்திருக்க, மரத்துப் போன கையை உதறியவள் “சுவிட்ச் போடுறப்ப ஷாக் அடிச்சிருச்சு” என்றபடி எழுந்து நிற்க முயன்றாள்.
அட்சரன் அந்த அறைக்குள் கண்களை ஓடவிட்டவன், ஒரு ஓரமாய் தண்ணீர் பாட்டில் இருக்கவும் எடுத்து அவளிடம் நீட்டினான்.
“குடி”
வேதவதியும் மறுக்காமல் வாங்கிக் குடித்தாள்.

“தேங்க்ஸ்” என்றவளிடம், “எதுக்கு?” என வினவியபடி பாட்டிலை வாங்கிக்கொண்டான் அட்சரன். “என் மயக்கத்தைத் தெளிய வச்சதுக்கு. ஆனா இந்த எலும்பு வலிக்குது”
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

