சுடரோ நிலவோ சுமக்கத் துணிந்தேன்!
தடமோ திசையோ தயங்கி நின்றேன்!
நிழலோ நிஜமோ நிழலில் தவிக்க
அழகிய பிழையில் அலைகின்றேன் தனியே!
-அட்சரனின் வேதா
தனக்காக ஒதுக்கப்பட்ட அறையின் பெரிய சாளரம் அருகே நின்று கையிலிருக்கும் ஐபேடில் வேதவதி ஹெல்வட்டாசுக்கு அனுப்பி வைத்திருந்த மேனுஸ்கிரிப்டை வாசித்துக் கொண்டிருந்தான் அட்சரன்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எல்லாம் வானதியால்தான்.
வேதவதி மேனுஸ்கிரிப்டை அனுப்பியதுமே “நீ கொஞ்சம் வாசிச்சுப் பாரு அச்சு. அப்பதான் நான் ஏன் வேதாவோட எழுத்து மேல இவ்ளோ நம்பிக்கை வச்சிருக்கேன்னு உனக்குப் புரியும்” என்று சொல்லியிருந்தாள் அவள்.
அவளுக்கும் அருள்மொழிக்கும் அன்றைய தினம் மாலையில் நிச்சயதார்த்த நிகழ்வு நடந்தேறுகையில் அந்தப் பரபரப்புக்கிடையே தோழிக்காக அட்சரனிடம் பேசியிருந்தாள்.
எப்போதும் ஹெல்வட்டாசில் வைத்து இலக்கியாவுடன் சேர்ந்து மேனுஸ்கிரிப்டைப் படிக்கும் பழக்கமுள்ள அட்சரன், வானதிக்காக வேதவதியின் கதையைப் படிக்க ஆரம்பித்தான்.
வானத்தில் சிறகடிக்கத் துடிக்கும் ஒரு வண்ணத்துப்பூச்சி அவள். அவளுக்கு வாழ்க்கை என்பது வெறும் எண்களாலோ அல்லது விதிகளாலோ ஆனது அல்ல; அது பெரிய கனவுகளாலும், லட்சியங்களாலும் நெய்யப்பட்டது. சாதிக்க வேண்டும் என்கிற தாகமும், தடைகளைத் தகர்க்கும் வேகமும் கொண்ட அவளுக்கு, இந்த உலகம் பெரிய சவாலாக இருக்கிறது.
கதாநாயகியைப் பற்றி வேதவதி எழுதியிருந்த விதம் இது. வாசித்ததும் ‘நாட் பேட்’ என்றது அட்சரனின் மூளை. தொடர்ந்து வாசிக்கலானான்.
அவள் ஒரு பெண் என்பதால் பெண்ணின் மனநிலையை எழுதிவிட்டாள். கதாநாயகனின் கதாபாத்திரத்துக்கு என்ன நியாயம் செய்திருப்பாள் என்ற ஆர்வத்தோடு மேற்கொண்டு வாசிக்கத் தொடங்கினான் அட்சரன்.
‘தரை இறங்காத கால்களைக் கொண்டவன் அவன். அவனுக்கு வாழ்க்கை என்பது கணக்குப்போட்டுக் காய் நகர்த்தும் சதுரங்க ஆட்டம். கனவுகளை விடக் கண்கூடாகத் தெரியும் நிஜங்களை நம்புபவன். உணர்ச்சிகளை விட அறிவுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அவனது ‘ப்ராக்டிக்கல்’ அணுகுமுறை, பல நேரங்களில் அவனைக் கல்லாகக் காட்டினாலும் அதுவே தனது பலம் என்பான்.’
இந்த வரிகள் ஓரளவுக்குக் கதாநாயகனுக்கு நியாயம் சேர்த்தது போல தோன்றியது அவனுக்கு. அதே நேரத்தில் ‘ஸ்டீரியோடைப்பிங்’ என்ற எண்ணமும் வராமல் இல்லை.

சின்னச் சின்ன இடறல்கள் இருந்தாலும் வேதவதியின் எழுத்தின் வலிமை அவனை முழுக்கதையையும் படிக்கத் தூண்டியது. அவனும் படித்தான். இடையில் படிக்கும்போதே ஒரு காட்சியில் சின்னதாய்ப் புருவச்சுழிப்பு.
நாயகனுக்கும் நாயகிக்கும் திருமணமான பிற்பாடு நாயகி தனது கனவுகள், ஆசைகளில் மூழ்கியிருக்க நாயகனோ அவனது இயல்பிலிருந்து வழுவவில்லை. இது ஒரு கட்டத்தில் அவர்களிடையே சின்ன விரிசலை உண்டாக்குகிறது.
அவளது ஆசைகள் அவனுக்கு நாடகத்தனமாகவும் அவனது ப்ராக்டிக்கல் அணுகுமுறை அவளுக்கு அன்பற்ற வாழ்வாகவும் தெரிகிறது.
இருவரும் பொட்டிக் ஒன்றிற்குத் தீபாவளி ஷாப்பிங் சென்ற இடத்தில் வரும் கருத்து வேறுபாட்டை அழகாக எழுதியிருந்தாள் வேதவதி.
“எனக்கு அந்த லாங் பார்ட்டி கவுன் பிடிச்சிருக்கு. லேவண்டர்ல அழகா லேஸ் வச்சு த்ரீ டி ஃப்ளவர்ஸ் அட்டாச் பண்ணி ரொம்ப அழகா இருக்கு பாருங்க. இதைப் போட்டுக்கிட்டு டிஸ்னி பிரின்சஸ் மாதிரி பெரிய புல்வெளில அந்த லேஸ் கவுன் புரள புரள ஸ்லோ மோஷன்ல ஓடி வரணும்னு ஆசையா இருக்கு.”
“நீ என்ன சின்னக் குழந்தையா? இதை வாங்குறோம்னே வச்சுப்போம், நீ எத்தனை தடவை இதை போட்டுக்க முடியும்? ரெண்டு தடவை மூணு தடவை! அதுக்கு மேல உனக்கே சலிச்சிடும். சப்போஸ் ப்ரெக்னென்சி, டெலிவரினு ஆச்சுனா உன் உடம்புக்கு அந்த் கவுன் சேராமலே போயிடும். சும்மா வாட்ரோப்ல உறங்குறதுக்கு இவ்ளோ செலவு பண்ணணுமா?”
பெரும்பான்மை ஆண்களின் மனநிலையை அந்தக் காட்சி படம்பிடித்துக் காட்டியதாகவே அட்சரன் உணர்ந்தான். ஆனால் ஒரு ஆணாக அங்கே அவன் அறிய விரும்பியது இப்படிப்பட்ட சூழலில் நாயகியின் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதைத்தான்.
அதை வேதவதி அழகாக வர்ணித்திருந்தாள்.
கதாநாயகனின் மறுப்பு தனது உணர்வுகளை அவன் புறக்கணிப்பது போன்ற மாயையைக் கதாநாயகிக்கு உண்டாக்கிவிட்டதென வேதவதி குறிப்பிட்டிருந்தபோது அட்சரனுக்கே ‘பெண்கள் இப்படியெல்லாம் யோசிப்பார்களா’ என்ற திகைப்பு.
‘ஊர் மெச்ச வேண்டுமென உடன்பிறந்த தங்கையரின் திருமணத்துக்குக் கடன் வாங்கிச் செலவு செய்யும்போது எந்த ஆணுக்கும் கடன் வாங்க வேண்டுமா என்ற கேள்வி எழுவதில்லை. உறவுக்காரர்கள் தன்னைப் புகழ வேண்டுமெனக் கடன் வாங்கி வீடு கட்டும்போது இந்தக் கடனுக்கு இவ்வளவு வட்டி கட்ட வேண்டுமே என எந்த ஆணும் யோசிப்பதில்லை. தாய்மாமன் சீர் செய், தங்கை குழந்தைக்கு அதைப்போடு, அக்கா பெண்ணுக்கு இதைப் போடுவென தனது சக்திக்கு மீறிய செலவுகளைத் தன் பெற்றோர் இழுத்துவிடும்போது அது ஆண்களுக்குத் தேவையற்ற செலவாகத் தோன்றுவதேயில்லை. ஆனால் கட்டிய மனைவி வழக்கத்தைக் காட்டிலும் நூறு ரூபாய் அதிகமாக ஒரு பொருளை வாங்கித் தா என்று கேட்டால் மட்டும் ஒரு ஆணுக்குள் இருக்கும் பொருளாதார வல்லுனன் விழித்துக்கொள்வான். தனது தங்கை, தனது பெற்றோர், தனது உறவு என்று வரும்போது தேவையற்ற அனைத்தையும் தலையில் இழுத்துப்போட்டுக்கொள்ளும் ஆணுக்கு மனைவியின் ஆசைக்காகச் சிறு செலவு செய்ய வேண்டுமென்றாலும் அது தண்டச்செலவாகத் தோன்றும். இங்கே பணம் பிரச்சினையில்லை. யாருக்கு நாம் முன்னுரிமை (Priority) கொடுக்கிறோம் என்பதுதான் பிரச்சினை.’
“ஆஃப்டர் ஆல் ஒரு கவுன்! அதுக்காகப் பொண்ணுங்க இவ்ளோ யோசிப்பாங்களா? பிரையாரிட்டி வரை யோசிச்சுப் பொண்ணுங்களோட சைக்காலஜிய அழகா எழுதிருக்கு இந்தப் பொண்ணு.”
வாய்விட்டுப் பாராட்டியவனுக்கு இன்னுமே அந்தக் கவுன் கொஞ்சம் உறுத்தல்தான்.
உறுத்தலை மனதுக்குள் வைத்திருந்தால் என்ன பயன்? உடனே வேதவதியின் மொபைலுக்கு அழைத்தான். மேனுஸ்கிரிப்டின் முதல் பக்கத்தில் எழுத்தாளரின் சுயவிவரம் கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்பது ஹெல்வட்டாசின் விதி.
வேதவதியும் மொபைல் எண்ணைக் குறிப்பிட்டிருந்ததால் அட்சரனுக்கு வேலை சுலபமாயிற்று. அவன் இரண்டு முறை அழைத்தும் அழைப்பு ஏற்கப்படவில்லை என்றதும் கடுகடுப்பு.
உடனடியாக வாட்சப்பில் அவளது எண்ணுக்குச் செய்தி அனுப்பினான்.
“ஹாய்! நான் அட்சரன். என் நம்பரைச் சேவ் பண்ணிக்க. உன் கதைல ஒரு டவுட். அதை க்ளியர் பண்ணிக்க கால் பண்ணுனேன். அட்டெண்ட் பண்ணு.”
வாட்ஸ்அப் செய்தியை அவள் அடுத்த சில நிமிடங்களில் பார்த்துவிட்டு அவளே அட்சரனின் மொபைலுக்கு அழைத்தாள்.
“சொல்லுங்க சார்.”
“நான் ரெண்டு தடவை கால் பண்ணுனேன்.”
“சாரி சார்! அன்னோன் நம்பர்ல இருந்து கால் வந்துச்சுனா நான் அட்டெண்ட் பண்ணமாட்டேன்.”
ரொம்பவும் ஜாக்கிரதைதான் என மனதுக்குள் சொல்லிக்கொண்டவன், தனது உறுத்தலான அந்தக் கவுன் விவகாரத்தைச் சொல்லிக் கேட்டான்.
“அக்கா தங்கச்சிக்கு, அவங்க புள்ளைங்களுக்கு, பேரண்ட்ஸ்க்கு செய்ய வேண்டியது ஒரு ஆணோட கடமை. அதை கவுன் வாங்குற செலவோட கம்பேர் பண்ணுனது எனக்கு அமெச்சூர்த்தனமா தெரியுது வேதா.”

“உங்க கணக்குப்படியே வர்றேன் சார். ஒரு கல்யாணத்தை நடத்த எவ்ளோ செலவாகும்? குறைஞ்சது பதினைஞ்சு லட்சம் ஆகுமா? குழந்தை பிறந்தா, அது வயசுக்கு வந்தா, அதுக்குக் கல்யாணம்னு ஒவ்வொரு தடவைக்கும் குறைஞ்சது இருபத்தஞ்சாயிரம் செலவாகுதுனு வச்சுப்போம். என் ஹீரோயின் கேட்ட கவுனை நீங்க மிண்ட்ரா சைட்ல தேடிப் பாக்கலாம். அதிகபட்சம் நாலாயிரம் ரூபாய்தான். பொட்டிக்ல ரெண்டாயிரம் கூட வச்சிருப்பாங்கனு பாத்தாலும் ஆறாயிரம். ஐடில புராஜெக்ட் மேனேஜரா வேலை பாக்குறவனுக்கு ஆறாயிரம் ரூபாய்க்குப் பொண்டாட்டி ஆசைப்படுறதை வாங்கித் தர்றது ஒன்னும் சிரமம் இல்ல. இங்க கவுனை ஒரு மெட்டஃபரா வச்சுக்கோங்க. அந்த இடத்துல ஒய்ப் ஐம்பது ரூபாய்க்குப் பூ கேட்டாலும் ஆம்பளைங்களுக்கு அது தேவையில்லாத செலவுனுதான் தோணும். வச்சு வாடிப் போற பூவுக்கு ஏன் இவ்ளோ செலவு பண்ணணும்னு லாஜிக்கா யோசிக்கும் ஆம்பளைங்களோட மூளை. அந்த லாஜிக் எல்லாம் பொண்டாட்டி ஆசையா ஒன்னு கேக்குறப்ப மட்டும் ஏன் உதிக்குது? அதைத்தான் நான் பிரையாரிட்டினு சொல்லுறேன். தன்னோட மனைவியோட பிரையாரிட்டி லிஸ்டுல தான் முதல் இடத்துல இருக்கணும்னு துடிக்குற ஆண்கள்ல எத்தனை பேர் தன்னோட பிரையாரிட்டி லிஸ்டுல மனைவிக்கு இடம் குடுக்குறாங்கனு சொல்லுங்க பாப்போம்.”
பேசவே தெரியாதோ இவளுக்கு என்று எண்ணிய அட்சரனிடமே நீண்டதொரு பிரசங்கத்தை ஆற்றியிருந்தாள் வேதவதி. அவளது கதையில் அவனுக்கு வந்த உறுத்தலை அவள்தானே போக்கியாக வேண்டும்.
“பக்கத்துல தண்ணி இருக்குதா?”
“ஹான் இருக்கு!”
“எடுத்துக் குடிச்சிக்க. ரொம்ப பெரிய லெக்சர் குடுத்திருக்க.”
“லெக்சர் இல்ல. இதுதான் ரியாலிட்டி.”
“நீ இதுவரை எத்தனை கல்யாணம் பண்ணிருக்க?”
இந்தக் கேள்வியில் வேதவதி வாயடைத்துப் போனாள். பின்னர் சுதாரித்தாள்.
“எனக்குக் கல்யாணம் ஆகல. ஆனா நான் தினமும் கல்யாணம் ஆன லேடீஸ் கூட பேசுறேன். எங்க அம்மாவே நிறைய சொல்லிருக்காங்க. எங்கப்பா என்னை எப்பவுமே முன்னிலைப்படுத்துவார். ஆனா அம்மாவ அப்பிடி முன்னிலைப்படுத்துனதில்ல. நான் சொல்ல வர்றது ஆண்களுக்கு அன்பு காட்டவே தெரியாதுங்கிறது இல்ல. அன்பு காட்டுற ஆட்களுக்குள்ள தனக்கான ஒருத்தியை அவங்க முன்னிலைப்படுத்த யோசிக்கிறதில்லங்கிறதுதான். புரியுதா சார்?”
அட்சரனுக்கு வேண்டிய பதில் கிடைத்த திருப்தி.
“நல்லா புரிஞ்சுது. இன்னுமே உன் மேனுஸ்கிரிப்ட் பத்தி பேசணும். பட் இது லேட் நைட். இலக்கியாவும் கதைய ஃபுல்லா படிச்சதும் நாங்க டிஸ்கஸ் பண்ணிட்டு அப்புறமா உன் கிட்ட பேசுறேன்.”
“சார்… என் கதை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?” தனக்குள் இருந்த குறுகுறுப்பை வெளிக்காட்டிக்கொள்ளாதக் குரலில் கேட்டாள் வேதவதி.
“பிடிக்காதக் கதைக்காகவா இவ்ளோ நேரம் நீ மூச்சுப்பிடிக்க குடுத்த லெக்சரைக் கேட்டேன்? குட் நைட்.”
அழைப்பைத் துண்டித்தவனுக்கு உறக்கம் வரவில்லை. அடுத்த அறையில் அவனது பெற்றோரிடம் கயல்விழி பேசிக்கொண்டிருந்த சத்தம் வேறு.
திருமண வீடு என்றாலே அங்கே பேச்சுக்கும் சத்தத்துக்கும் குறைவிருக்காது. அற்ப சொற்பமாய் உறங்கினாலும் சோம்பலோ சோர்வோ அண்டாது. உறவுக்காரக் கூட்டத்தின் மகிமை இது.
“இந்த முத்துமாலையில கோர்த்த மாங்கல்யம் என் மாமியாரோடது. அவங்களும் மாமனாரும் கடைசி நாட்கள்ல எங்க கூட தான் இருந்தாங்க. அவங்க போனதும் மாமா இதை என் கிட்ட குடுத்தாங்க. மாமியாரோட பரிசாம். தங்கத்துல பொடிசா செஞ்ச முத்துமாலை. இப்ப இந்த டிசைன் கிடக்குறதேயில்ல.”
“இதை ஏன் மாத்தணும்னு நினைக்குறிங்க? அழகா இருக்கு. உங்களுக்கு வரப்போற மருமகளுக்குக் குடுக்கலாமே.”
“ஹூம்! இந்தப் பையன் பிடி குடுக்கமாட்றானே! இருபத்தெட்டுலயாச்சும் கல்யாணத்துக்குச் சம்மதிப்பியானு கேட்டேன். முப்பத்திரண்டுக்கு முன்னாடி பண்ணுற கல்யாணம் குழந்தைத்திருமணம்னு நக்கலடிக்குறான்.”
பெருமூச்சோடு ராஜேஸ்வரி சொல்லச் சிரித்தார் கயல்விழி.
“அச்சுவோட தொழிலுக்குப் பேச்சுத்திறமை முக்கியம் ராஜி. அவன் எப்ப ஆசைப்படுறானோ அப்ப கல்யாணம் பண்ணிக்கட்டும்.”
“அவன் இஷ்டத்துக்குனு விட்டாச்சு கயல். பேசாம தெருமுனை பிள்ளையார் கோவில்ல அவருக்குப் பக்கத்துல ஒரு பீடம் கட்டி உக்காரவச்சிடலாம்னு தோணுது.”
தனது அன்னை அங்கலாய்ப்பதும் அதற்கு தந்தை சிரிப்பதும் ஸ்பஷ்டமாக அட்சரனின் செவியில் விழுந்தது.
அன்று மாலைதான் இருவரும் தேன்மலைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள். வந்ததும் வானதி – அருள்மொழியின் நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டார்கள்.
அட்சரன் மெதுவாக எழுந்து அவர்களின் அறைக்குள் எட்டிப் பார்த்தான்.
“ஹாய் லேடீஸ்! காலையிலயே பேசிக்கோங்களேன்! தூக்கம் வருது” என்று சொல்ல,
“அவன் சொல்லுறதும் சரிதான்! இன்னும் ரெண்டு நாளுக்கு மெஹந்தி, சங்கீத், ஹல்தினு என்னென்னமோ இந்தப் பொண்ணுங்க ப்ளான் பண்ணிருக்குதுங்க. அங்க ஜாலியா கலந்துக்கணும்னா நாமளும் ரெஸ்ட் எடுக்கணும். அண்ணா! உங்களுக்கு டிரஸ் கொண்டு வரச் சொல்லிருக்கேன். நல்லா ரெஸ்ட் எடுங்க” என்றபடி கயல்விழி விடைபெற்றார்.
“ஆன்ட்டி, தமிழ்நாட்டு சி.எம்மோட மக கல்யாணத்துல வட இந்திய கலாச்சார சடங்குனு தலைப்புச்செய்தி வந்துடப்போகுது.”
“அதெல்லாம் வீட்டுக்கு வெளிய அச்சு.”
கிண்டல் செய்த அட்சரனின் தோளில் அடித்துவிட்டுப் போனார் கயல்விழி.
“நீங்களும் தூங்குங்கம்மா!” என்றவன் தந்தையை ஒரு பார்வை மட்டும் பார்த்துவிட்டுத் தனது அறைக்குச் சென்றுவிட, ராஜேஸ்வரி பெருமூச்சுடன் சதானந்தனைப் பார்த்தார்.
அவர் வழக்கம் போல மொபைலில் கண்ணாயிருக்கவும், “எத்தனை நாளுக்கு இப்படியே இருக்கப்போறிங்க?” என்று ஆதங்கமாய்க் கேட்டார்.
“தூங்கு ராஜி. உன் மகன் சொல்லிட்டுப்போறான்ல” சுருக்கமாய் முடித்துக்கொண்டார் சதானந்தன்.
இதுவுமே அட்சரனின் அறைக்குள் கேட்கத்தான் செய்தது. அலட்சியமாய் அவனுக்குள் தலையைச் சிலுப்பிக்கொண்டது இத்தனை ஆண்டுகால வைராக்கியம்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

