“லண்டன்ல ஸ்னாப்சாட் ஆப் இருக்குதா அருள்? இங்க நான் புதுசா ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணிருக்கேன். உன்னைத் தேடிப் பாத்தேன். உஃப், கண்டுபிடிக்க முடியல. நீ இன்னும் அந்தப் பழைய ‘ஈமெயில்‘ காலத்துலேயே இருக்க. அப்டேட் ஆகு அருள்!”
–வானதியின் கடிதம்….
அன்றைய தினம் காலையில் தேன்மலையை நனைத்துக்கொண்டிருந்தது ஜெயவிலாசத்திலிருந்து வந்த மங்கலநாதத்தின் இசை. அருள்மொழி – வானதியின் திருமண முகூர்த்தத்திற்கு இன்னும் சில மணி நேரங்களே பாக்கி இருந்தன.
ஜரிகை வைத்த பட்டு வேஷ்டி, பட்டுச் சட்டையில் தயாரானவனின் கரத்தில் சிறிய பிரேஸ்லெட்டை மாட்டிவிட்டார் அட்சரனின் தந்தை சதானந்தன்.
“இதெல்லாம் எதுக்கு அங்கிள்?” என மறுத்தவனிடம்,

“இன்னைக்கு உனக்குக் கல்யாணம்டா. பொண்ணு மட்டும் தங்கமா ஜொலிச்சா போதுமா?” என்று அவர் கிண்டல் செய்ய, சஞ்சய் சந்தனத்தைத் தொட்டு அவனது புருவங்களிடையே அழகாய்த் தீற்றிவிட்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“மச்சி! உனக்கு மாப்பிள்ளைக் களை வந்துட்டுடா. எனக்கே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கணும் போல இருக்கு” என்று தாடையைப் பிடித்து அவன் கொஞ்ச,
“டேய்! கைய எடு முதல்ல. ஏன்டா என் கூட சுத்துறவன் எல்லாம் இப்பிடியே இருக்குறிங்க?” என்று அருள்மொழி அவனை கேலி செய்தபோதே அட்சரன் அமைதியின் ரூபமாய் அமர்ந்திருப்பதை காண நேர்ந்தது.
“ஆர் யூ ஓகே அச்சு? நேத்து நைட்ல இருந்து நீ ஏன் ஒரு மாதிரி ரெஸ்ட்லெஸா இருக்க?” என விசாரித்தான் அருள்மொழி. அட்சரன் சிரித்தபடி எழுந்தவன்
“எனக்கென்ன? ஐ அம் ஓகே” என்று சொல்ல, அதை நம்ப தான் யாரும் தயாராக இல்லை.
சஞ்சய், இலக்கியாவின் தந்தைமார்களும் அங்கேதானே இருந்தார்கள். அவர்களின் பார்வைக்கு அருள்மொழி அதீத மகிழ்ச்சியில் இருப்பது தெரியவே, அட்சரனை விடுத்து அவனைக் கேலி செய்தார்கள்.
“அவனை விடு தம்பி. நீ ரொம்ப குதூகலமா தெரியுறீயேப்பா? காதல் கல்யாணமோ?” சஞ்சயின் தந்தை அல்லவா! கேலி எல்லாம் அவரது ஜீனிலேயே இருக்கும்.
அருள்மொழி சத்தமாக நகைத்தவன், “தப்பித் தவறி வானதி காதுல இதைப் போட்டுடாதிங்க. அப்புறம் சிரிச்சு சிரிச்சு அவளுக்கு வயிறு வலி வந்து மணமேடைக்கு வரமுடியாம போயிடும்” என்றான்.
“அப்ப கூட உன் கவலை மணமேடை மேல தான் இருக்கு?” இது இலக்கியாவின் தந்தை.
அருள்மொழிக்கு யாருமில்லை என்ற எண்ணம் வந்துவிடக்கூடாதென அவனது நட்புகளைப் போல அவர்களது பெற்றோரும் கவனமாய் இருந்தார்கள். அவனைச் சின்னச் சின்னக் கேலிகளில் இலகுவாக்கினார்கள். ஆனால் அருள்மொழியும் மெய்யாகவே மகிழ்ச்சியில் திளைத்திருந்தான் எனலாம். அவனது மகிழ்ச்சிக்கான காரணம் இந்தத் திருமணம் இல்லை. மெய்யானக் காரணம் இன்னும் சில மணி நேரங்களில் ஜெயசந்திரனைத் தடுமாற வைக்கவிருக்கிறது.
கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டு அனைவரும் திரும்பினார்கள்.
“மாப்பிள்ளை சார் ரெடினா போட்டோஷூட்டுக்குப் போகலாமா? பொண்ணு வெயிட்டிங்” என்றபடி நின்றிருந்தாள் இலக்கியா.
“பார்றா! திடீர்னு நீ என்ன பொண்ணு கெட்டப்ல வந்து நிக்குற?” சஞ்சய் அவளை நக்கல் அடிக்கவும், நிலைவாயிலருகே தொங்கிய பூச்சரத்தால் அவனது தலையில் நச்சென்று அடித்தாள்.
அருள்மொழி தயாராகி நின்றதால் அவனை அழைத்துக்கொண்டு கிளம்பினார்கள் இளசுகள். ஜெயவிலாசத்தின் தோட்டத்தில் போட்டோஷூட் எடுத்தால் பொருத்தமாக இருக்குமெனப் புகைப்படக் கலைஞன் சொல்லியிருக்க, வானதியை அங்கே அழைத்து வந்திருந்தாள் ஸ்ரீநிதி.
“நீங்க போங்கண்ணி. ஜெயன் உங்களைத் தேடுவான்.”
“அது எப்பிடி கல்யாணப்பொண்ணைத் தனியா விட்டுட்டுப் போக முடியும்? வேதாவும் யாழினியும் இருந்தா அவங்க கிட்ட உன்னை ஒப்படைச்சிட்டுப் போவேன்.”
“அவங்க குடும்பத்தோட வருவாங்கண்ணி.”
அவர்கள் பேசிக்கொண்டிருக்கையிலேயே தோழமைகளோடு வந்து சேர்ந்தான் அருள்மொழி. வானதியின் கண்கள் அவனைப் பார்த்ததும் மலரத் துடித்தன. இதழ்களோ புன்னகையைச் சிந்தப் பரபரத்தன. அவற்றைக் கட்டுக்குள் வைக்கப் போராடியவளின் மனம் முதல் முறையாக அவனை ரசித்தது தனிக்கதை.
வேஷ்டியின் நுனியைப் பிடித்தபடி வந்தவனின் முகத்தில் வழக்கத்தைக் காட்டிலும் அதீத மகிழ்ச்சி. எப்போதும் இருக்கும் இறுக்கம் தொலைந்து மென்மையானவனாகத் தெரிந்தான்.
“உன் பிரண்ட்ஸ் வந்தாச்சு. நான் கிளம்புறேன்” என்று விடைபெற்ற ஸ்ரீநிதி, “அருள் மணமேடைக்குப் போறதுக்கு முன்னாடியே உனக்குத் தனியா திருஷ்டி சுத்தணும். வானும்மா கண்ணே உனக்குப் பட்டிருக்கும்” என்று கொளுத்திப் போட்டுவிட்டுச் சென்றாள்.
அருள்மொழி நகைப்பினூடே வானதியைக் கண்களில் நிரப்பிக்கொண்டான். ஸ்கார்லட் சிவப்பில் உடலெங்கும் ஜரிகைகள் ஓடும் பட்டுப்புடவை, நகாசு வேலைப்பாடுகள் கொண்ட தங்க ஆபரணங்களில் பொற்சிலையாய் நின்றவளிடமிருந்து பார்வையை விலக்கவே தோன்றவில்லை.
‘இந்தத் திருமணத்தால் பெரிதாய் ஒன்றும் சந்தோஷமில்லை என நினைத்தாயே?’ மனசாட்சி வேறு சமயம் பார்த்துக் கேலி செய்தது.
முறுவலோடு அவளை நெருங்கியவன், “இதென்ன நோஸ் பின்? நைட்டோட நைட்டா குத்தி விட்டுட்டாங்களா?” என்று வினவ,
“இதைப் பார்த்தா ஒரிஜினல் நோஸ்பின் மாதிரியா உன் கண்ணுக்குத் தெரியுது? மூக்குத்தி இல்லனா அலங்காரம் முழுமையாகாதுனு உன் பெரியம்மா சொன்னதால மேக்கப் ஆர்ட்டிஸ்ட் இந்த ஃபேக் நோஸ்பின்னை அட்டாச் பண்ணி விட்டாங்க” என்றாள் வானதி.
அவனிடமிருக்கும் இலகுவான உடல்மொழிக்கு மாறாய் அவளிடம் கொஞ்சம் கறார்த்தனம் தெரிந்தது. இயல்புக்கு முரண்பட்டு அவள் முரண்டுவதே அவனுக்கு ரசிக்கத் தோன்றுவதாய்!
“உன் முகம் எனக்கு மட்டும் தான் உர்ருனு தெரியுதா?” கண்களைச் சுருக்கிக் கேட்டான்.
“நான் உர்ருனு இருந்தாலோ உம்முனு இருந்தாலோ உனக்கென்ன?”
“எனக்கென்ன? நான் போட்டோல அழகா இருப்பேன். நீ சூனியக்காரி மாதிரி இருப்ப. அப்புறம் உன் இஷ்டம்.”
“சூனியக்காரியை எதுக்குக் கல்யாணம் பண்ணிக்க நினைக்குற? உனக்கேத்த ரதி எவளாச்சும் சொந்தக்காரக் கூட்டத்துல சுத்திட்டிருப்பா. போய் அவ கழுத்துல தாலியைக் கட்டு.”
அருள்மொழி சஞ்சயை அழைத்தான்.
“இவ காத்தால இருந்து பட்டினினு நினைக்குறேன். ஜூஸ் ஏதாச்சும் போடச் சொல்லி வாங்கிட்டு வா. பசியில என்னைக் கடிக்குறா” என்றான் கிண்டலாய்.
“அதெல்லாம் வேண்டாம். அப்புறம் அதுக்கும் உன் பெரியம்மா பேசும். நான் போட்டோஷூட்டிற்கு ரெடி” என்றாள்.
புகைப்படக் கலைஞர் வந்து போஸ்களை விவரிக்கவும் மீண்டும் வானதி தர்க்கம் செய்ய ஆரம்பித்தாள்.
“நோ நோ! இப்பிடியெல்லாம் என்னால போஸ் குடுக்க முடியாது.”
“ப்ச்! என்னடி இது?” – இலக்கியா.
“கம் ஆன்! அவ்ளோ குளோஸா எல்லாம் என்னால அருள் கூட போஸ் குடுக்க முடியாதுடி. ஹி இஸ் மை பிரண்ட்.”
“கல்யாணம் ஆகப்போகுதுடி.”
“அதுக்கு? தேர் இஸ் அ லிமிட்.” தோழியிடம் இரகசியம் பேசிவிட்டுப் புகைப்படக் கலைஞனிடம் திரும்பினாள்.
“இங்க பாருங்க. நான் இங்க நின்னா அவன் அங்க நிக்கணும். அப்பிடி ஏதாச்சும் போஸ் சொல்லுங்க” என்று தூரத்தைக் கையால் அளந்து சொல்ல, அவன் தலையிலடிக்காத குறை.
விலகி நின்றாலும் கியூட்டாய் தெரியும் சில போஸ்களை அவன் சொல்ல, வானதியும் அருள்மொழியும் போஸ் கொடுத்தார்கள். இருப்பினும் தள்ளித் தள்ளியே நிற்க வைத்து எடுத்து என்ன பயன்? ஒரு புகைப்படமாவது அவர்களின் நெருக்கத்தைப் பறைசாற்றுமாறு அமைய வேண்டாமா?
“ப்ரோ கொஞ்சம் குளோஸா நின்னுங்க. ரெண்டு பேருக்கும் நடுவுல நிறைய கேப் இருக்கு பாருங்க.” புகைப்படக் கலைஞன் சொல்லவும், அருள்மொழி வானதிக்கு அருகே நெருங்கி நின்றான்.
“மேம் நீங்க…” என்று ஆரம்பித்த புகைப்படக் கலைஞன், “என்ன? ஹான்?” என்று அவள் புருவம் உயர்த்தி கடுப்பாக விழித்ததில் கப்சிப்பானான்.
‘வேண்டாவெறுப்பா கல்யாணம் பண்ணுறவனுங்க எதுக்குடா என்னைப் புக் பண்ணி என் உசுரை வாங்குறிங்க?’
வாய் விட்டுப் புலம்பாதக் குறையாக அவன் நொந்து போக, இலக்கியா இருவரையும் நோக்கி வந்தாள்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல முகூர்த்தம் நதி. அழகா போட்டோ எடுக்கலாம்னா ஏன்டி இப்பிடி படுத்துற? கொஞ்சம் குளோஸா நின்னு.”
“இதை விட குளோஸா நிக்கணும்னா அவன் கழுத்தைப் பிடிச்சு நான் தொங்கணும். ஐம்பது கிலோ வெயிட்டைத் தாங்குவானானு கேளு. தொங்கித் தொலையுறேன்” தீப்பற்றி எரியாதக் குறையாகச் சீறினாள் வானதி.
“நீ என்னடி இப்பிடி பண்ணுற?” என அவள் சலிக்கையில்,
“நீ போ இலக்கியா! நான் பாத்துக்குறேன்” என்று அவளை அனுப்பி வைத்தான் அருள்மொழி.
அவள் சென்றதும் வானதி அவனை முறைத்தபடியே “என்ன? கழுத்துல தொங்கணுமா இப்ப?” என்று கடுப்போடு நெருங்க,
“அந்த மாதிரி ஆர்வக்கோளாறான போஸ் எல்லாம் தேவையில்ல. ஜஸ்ட் என் கையைப் பிடிச்சுக்க. அது போதும்” என்றான் அவன்.
புகைப்படக் கலைஞனிடம் “ப்ரோ வாங்க” என்று கையசைத்தான்.
அந்த இளைஞன் புகைப்படம் எடுக்கத் தயாராகுகையிலேயே, “என்னால இவன் கையை எல்லாம் பிடிக்க முடியாது” என்று இரு கரங்களையும் வேண்டுமென்றே பின்னே கட்டிக்கொண்டாள் வானதி.
புகைப்படக் கலைஞனான இளைஞன் “ஐயையோ மீண்டும் மீண்டுமா?” என அலற,
“ப்ச்! ஒரு போட்டோவிற்கு போஸ் குடுக்க ஏன் இவ்ளோ படுத்துற வானதி?” எனத் திகைத்தவனாய்க் கேட்டான் அருள்மொழி. அவள் கேட்டால்தானே!
“உன்னைக் கல்யாணம் பண்ணுறது பிளாட்டோனிக் லவ்வரா வாழுறதுக்காக இல்ல. கையைப் பிடிக்கவே அடம் பிடிச்சா மத்தது எல்லாம் ரொம்ப கஷ்டம்” விஷமத்தோடு சொன்னவன், தனது பேச்சின் அர்த்தம் புரிந்து அவள் துடுக்காகப் பேச வாயெடுத்தபோதே தனது கரத்தை அவளது இடையில் பதித்துத் தன்னிடம் இழுத்துக்கொண்டான்.
வானதி முகத்தைத் திருப்பி அருள்மொழியை முறைக்க, விஷமச் சிரிப்போடு அவளைப் பார்த்தபடியே “இப்ப எடு ப்ரோ. இதுதான் பெர்ஃபெக்ட் போஸ்” என்று அவன் சொல்ல, புகைப்படக் கலைஞன் இளைஞனும் தாமதிக்காமல் அக்காட்சியைப் படமாக்கினான்.

வேகமாகத் தன்னிடமிருந்து விலகியவளைக் கழுத்தோடு வளைத்தவன், ஒரு கையைத் தன் இடுப்பில் ஊன்றி அவளது முகத்தை நெருக்கத்தில் ரசித்தவனாய், “எங்க போற? ஒரு போஸ் குடுக்குறதுக்கு எவ்ளோ அழிச்சாட்டியம் பண்ணுன நீ?” என்று விஷமப் பார்வை பார்த்தபடியே சொன்னான்.

வானதி திகைத்து நின்ற தருவாயில், “இந்தப் போஸ்லயும் ஒரு போட்டோ எடுத்துக்க ப்ரோ. இதுதானே முதல்ல நீ சொன்ன போஸ்?” என்று வினவியபடியே ஒரு கரத்தை அவளது கழுத்தைச் சுற்றியும் இன்னொரு கரத்தை அவளது இடையைச் சுற்றியும் படரவிட்டு அவளை நேராக நிற்க வைத்தான்.
அவனது பெரிய ஆகிருதியான தேகத்தின் அணைப்பில் சிற்றுருவமாய் அடங்கி நின்றாள் வானதி. கரங்கள் படர்ந்த இடங்களில் எல்லாம் குறுகுறுப்பு.
எங்கே அவள் மீண்டும் பிரச்சனை செய்வாளோ என்று பதறிய புகைப்படக் கலைஞன் அவசரமாய்க் கிளிக் செய்தான்.
புகைப்படம் எடுத்ததுதான் தாமதம், “போதும். முதல்ல கையை எடு” என வேகமாக விலகியவள், “இதோட போட்டோஷூட் ஓவர். டைம் அவுட் கய்ஸ்” என்று கரங்களை ‘T’ வடிவில் குத்திக் காட்டிவிட்டு யாருக்காகவும் காத்திருக்காமல் விறுவிறுவென நடந்து போய்விட, வேறு வழியின்றி இலக்கியாவும் அவள் பின்னே ஓடினாள்.
புகைப்படக் கலைஞன் அருள்மொழியிடம், “ரொம்ப கஷ்டம் ப்ரோ. அவங்க கூச்ச சுபாவமா இருக்காங்க” என்று சொல்ல அவனுக்கோ சிரிப்பு மட்டுமே.
பின்னர் மணமகனை மேடைக்கு அழைத்தார்கள். அடுத்து மணமகள் முறை. அவள் யாழினி, வேதவதியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தாள் அலங்கரிக்கப்பட்ட இடத்தில்.

“இந்தா பொண்ணுங்களா, அவளை மணமேடைக்கு அழைச்சிட்டு வாங்க” என்று ரமா கட்டளையிடவும் மெல்லிய பரபரப்பு அவளுக்குள்.
மணமேடையில் அருள்மொழி அருகே அமர்ந்த பிறகும் அந்தப் பரபரப்பு போவேனா என அடம்பிடித்தது. மாலை மாற்றியபோது எதேச்சையாய் அவனது கரங்கள் கழுத்தோரம், காது விளிம்பில் உரசிய ஒவ்வொரு முறையும் அமைதியிழந்தது வானதியின் மனம்.
பின்னர் ஹோமகுண்டம் முன்னே அமர்ந்து பெரியவர்கள் செய்யச் சொன்னதைப் பொம்மை போலச் செய்தவளின் மனதினோரமாய் சின்னதொரு வைராக்கியம். தன்னை மறந்ததாய் சொல்லிப் பரிதவிக்க விட்டவனை காலம் முழுக்க பாடாய்படுத்தி எடுக்கவேண்டுமென்ற ஆதங்கம்.
அவனது கையால் மங்கலநாணைக் கழுத்தில் வாங்கியபோது நிமிர்ந்து அருள்மொழியின் விழிகளைப் பார்த்தவள், “இந்த மொமண்டையும்) மறந்துடமாட்டியே?” என்று குத்தலாக வினவ,
“மறந்தாலும் ஞாபகப்படுத்திக்கத்தானே தாலினு ஒன்னை கட்டுறேன்” என்று அவனும் சீண்டலோடு பதிலளித்தான்.

இருவரும் அட்சதை மழையில் நனைந்தபடி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அருள்மொழியின் கண்களில் வெற்றி பெற்ற கர்வம். வானதியின் கண்களிலோ ‘இனி நீ எப்படி தப்பிப்பாய்’ என்ற நிமிர்வு.
அதிலும் அவளது காலில் அவன் மெட்டி அணிவிக்கக் குனிந்தபோது வானதிக்குத் பேரானந்தம். மெட்டி போட்டுவிட்டவன் அந்த விரலைச் சொடுக்குவது போல இழுக்கவும் திடுக்கிட்டவள் நறுக்கென அவனது தலையில் குட்டப் போக, நிமிர்ந்து பார்த்த அருள்மொழி குறும்பாய் நகைத்தான்.
“ஹேய் கப்பிள்! வாங்க! இது நமக்கு நாஸ்டால்ஜியா மொமண்ட்” என அட்சரன் அழைத்ததும் அவனோடு சேர்ந்து நால்வரும் பள்ளிக்காலத்துப் புகைப்படம் போலச் சேர்ந்து நின்றார்கள். ஒருவரையொருவர் முதுகோடு அணைத்துப் புன்னகைக்க அந்தப் புகைப்படம் அவர்களது நட்பின் அடையாளமாய்ப் பதிவானது.

புகைப்படம் எடுத்த பிறகு, அட்சரன் வேதவதியிடம் ஏதோ கேட்பதும் அவள் தயக்கத்தோடு பதிலளிப்பதும் அருள்மொழியின் பார்வையில் விழுந்தது. என்ன ஓடுகிறது இங்கே என யோசனையில் ஆழும் முன்னர் அவனது உள்ளங்கையில் கிள்ளினாள் வானதி.
“ஆசீர்வாதம் வாங்கணும்னு ஐயர் சொல்லுறார். வா.”
முதலில் அவனது பெரியம்மாவும் பெரியப்பாவும் வந்தார்கள். வானதிக்கு அவர்களிடம் ஆசி பெறுவதில் எந்தத் தயக்கமுமில்லை.
“சந்தோஷமா இருக்கணும். யார் கண்ணும் உங்க மேல பட்டுடக்கூடாது” நெகிழ்ந்து போய் கண்ணீருடன் வாழ்த்தினார்கள் ரமாவும் கணேசனும்.
அடுத்து ஜெயசந்திரன் – கயல்விழியின் முறை.
வானதி ஆசி பெறக் குனியும் முன்னர் அவளைத் தடுத்த அருள்மொழி, “நீ இந்தப் பக்கம் வா” என அவளை இடம் மாறி நிற்கச் சொல்ல, அவனது தோளில் கிடந்த அங்கவஸ்திரம் நழுவியது. அது வானதியின் புடவையோடு பிணைக்கப்பட்டிருந்தது. அது தரையில் விழும் முன்னர் கயல்விழி அவசரமாகப் பிடித்துக்கொண்டார். அருள்மொழி அதை வாங்கி இன்னொரு பக்கத் தோளில் அணிந்துகொண்டான்.
இப்போது வானதி ஜெயசந்திரன் எதிரிலும், அருள்மொழி கயல்விழியின் எதிரிலும் நின்றார்கள்.
“இப்ப ஆசீர்வாதம் வாங்கலாம்” என்றவன் முழுமனதோடு கயல்விழியின் காலைத் தொட்டான்.
யாருக்கும் இந்த இடமாற்றம் புரிந்திருக்காது. ஆனால் வானதிக்கு மட்டும் அருள்மொழி தனது தந்தையின் காலைத் தொட விரும்பவில்லை என்பது புரிந்துவிட்டது.
‘இவ்வளவு பிடிவாதமா? இவன் மனதில் என்ன தான் ஓடுகிறது?’
மாலை வரவேற்பிற்கு உடையணிந்து அலங்காரம் முடியும் வரை இதே சிந்தனைதான் அவளுக்கு.
“ரொம்ப அழகா இருக்க வானு” என்று இலக்கியா, யாழினி, வேதவதி மூவரும் புகழ,
“எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. இடையில ரமா ஆன்ட்டி வந்தாங்கனா நான் பாத்ரூம்ல இருக்கேன்னு சொல்லிச் சமாளிங்க” என்றவள் தனது கனமான ரிசப்ஷன் கவுனைத் தூக்கிக்கொண்டு நடந்தாள்.
அவள் போய்க்கொண்டிருப்பது அருள்மொழியின் அறைக்கு. திருமணமானதும் அந்தச் சடங்கு, இந்தச்ச் சடங்கு என அவளுக்கு அவனிடம் பேச அவகாசமே கிடைக்கவில்லை. இப்போது வரவேற்பு தொடங்க நேரமிருக்கிறது என்பதால் அவனிடம் பேச விரைந்தாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

