இந்த உலகம் நம்மை எவ்வளவு எளிதில் ‘ஜட்ஜ்’ செய்துவிடும் தெரியுமா? நீ எப்படி இதைச் செய்யலாம், நீ அன்று செய்த காரியத்தின் விளைவால் உன்னை என்னால் நம்ப முடியாது என்று இஷ்டத்துக்கு பழித்துப் பேசும். இந்த உலகம், சமூகம் எல்லாம் வேறு யாரோ அல்ல. நீங்களும் நானும் நம்மை போல பிற மனிதர்களும் தான். அடுத்தவரின் சூழலை அறியாமல் பேசி காயப்படுத்துவது, அவர்கள் அப்படிதான் என்று முத்திரை குத்துவதும் நமக்கு எவ்வளவு எளிதான காரியமாக இருக்கிறது! எந்த ஒரு பிரச்சனையும் நம்மைச் சுற்றி நடக்காத வரை நாம் அனைவரும் அடுத்தவரை ‘ஜட்ஜ்’ செய்வதில் காலத்தை ஓட்டுகிறோம். ஆனால் பிரச்சனைகளின் மையத்தில் நாமே இருக்கையில் உலகம் நம்மை முத்திரை குத்துமே, அப்போது தெரியும் நாம் செய்த காரியம் எவ்வளவு முட்டாள்தனமானது வக்கிரமானது என்பது. அந்தக் கணத்தில் நாம் நமது செயல்பாடுகளில் இருக்கும் குறைகளைத் திருத்திக்கொள்ள முன்வரவேண்டும். இல்லையெனில் நாம் எல்லாம் மனிதர்களே இல்லை!
– அன்பனின் சிந்தனை சிதறல்கள்
ஆரபியும் ராகப்ரியாவும் சென்னைக்கு வந்துவிட்டார்கள். ஞானசேகரனுக்கும் முன்னந்தலை காயம் குணமாகிவிட்டது. அவரிடம் மொபைலில் நலம் விசாரித்துக்கொள்வாள் ஆரபி.
எதையோ இழந்தவளைப் போல இருந்த ஆரபி இயல்புக்குத் திரும்பவும் பழைய ஆரபியாக மாறவும் ராகப்ரியாவின் நட்பும், அவள் சரியான காலத்தில் சொன்ன அறிவுரையுமே காரணம்.
“காதலிச்சது ஒன்னும் தப்பில்லடி ஆரு… யாரும் நான் நல்லவன் இல்ல, பணத்தாசை பிடிச்சவன்னு நெத்தில எழுதி ஒட்டிட்டு வரல.. பழகுனாதான் ஒவ்வொருத்தரோட உள்நோக்கம் என்னனு நமக்குத் தெரியும் ஆரு… நீ ராஜா கூட பழகுனதுல அவனோட கேவல எண்ணத்தைப் புரிஞ்சிக்கிட்ட.. விலகியும் வந்துட்ட… சாக்கடைல விழுந்து வைக்காம தப்பிச்சிட்டடி… அதுக்கு நீ ஸ்வீட் குடுத்து கொண்டாடனுமே தவிர வாழ்க்கையே இருண்ட மாதிரி முகத்தை சோகமா வச்சுக்கிட்டு இருக்க கூடாது”
“உனக்கு என்னைப் பத்தி தெரியும் ப்ரியா… அதனால புரிஞ்சிக்கிட்ட… எனக்கு வரப்போற புருசன் இதை இவ்ளோ ஈசியா எடுத்துப்பானானு டவுட்டா இருக்கு… அப்பிடி வர்றவனை என்னால முழு மனசோட நேசிக்க முடியுமானு சந்தேகமா இருக்கு… காதல் வாழ்க்கைல ஒரு தடவை மட்டும் தான் வரணும்னு சொல்லுவாங்களே? இதுக்கு மேல என்னால என் லைஃப் பார்ட்னரைக் காதலிக்கவே முடியாதா? அந்தக் காதல் உண்மையா இருக்காதா ப்ரியா?”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
கேட்கும்போதே ஆரபியின் கண்கள் கலங்கிப்போயின. இது தானே சமுதாயத்தின் மறைமுக கற்பிதம். காதல் தோல்வியால் பெண்ணானவள் உடைந்து மூலையில் உட்கார்ந்து அழவேண்டும். வாழ்க்கையே போனது என்று நொறுங்கி போய்விடவேண்டும். அதையெல்லாம் மீறி அவள் புதுவாழ்க்கைக்குள் நுழைந்தாள் என்றால் அவளது நேசம் கேலிக்கூத்தாகும்.
‘பொண்ணோட காதல் கைக்குட்டை போல’ என்று பாடல் எழுதி பூரிக்கும் சமுதாயம்தானே நாம் அனைவரும்.
இத்தகைய மூடத்தனமான கற்பிதங்கள் இளம்பெண்கள் மத்தியில் தங்களது நடத்தை குறித்த சந்தேகத்தை உருவாக்கி அவர்களை ஒருவித ‘டயலாமா’வில் ஆழ்த்தும். அதை பற்றியெல்லாம் சமுதாயத்துக்கு என்ன கவலை?
ஆகாயத்தில் போன கந்தர்வனின் பிம்பத்தை நதிநீரில் பார்த்ததால் ரேணுகாதேவியின் மனம் சலனப்பட்டுவிட்டதென கூறி தலையைக் கொய்யச் சொன்ன ஜமத்கனியின் கலியுக அவதாரங்கள் நாம் எல்லாம்!
ஆனால் இதற்கு மாறாக காதல் தோல்வி என்று வருகையில் அங்கே ஆண் பரிதாபத்திற்குரியவனாகிறான். தாடி வளர்ப்பது, சோகப்பாடல் கேட்பது, இவ்வளவு ஏன் காதல் தோல்வியுற்ற ஆண்களுக்காக உருவாக்கப்பட்ட சமீபத்திய ‘சூப் பாய் கலாச்சாரம்’ வரை அனைத்துமே ஆண்கள் காதலில் ஏமாந்ததை இரக்கத்தோடு இந்தச் சமுதாயம் பார்ப்பதற்கான அறிகுறிகள் தானே!
ஆரபியும் அப்படியே யோசித்தாள். மனம் குமைந்தாள். ராகப்ரியா தான் அவளுக்கு நிதர்சனத்தை எடுத்துச் சொல்லி புரியவைத்தாள்.
“ஒரு செடில ஒரு தடவை தான் பூ பூக்கும்னு சொல்லுற டயலாக் எவ்ளோ முட்டாள்தனமானதோ, அதே போல காதல் ஒரு தடவை தான் வரும்னு சொல்லுறதும் முட்டாள்தனம்… காதல் அழகான உணர்வு ஆரு… அதை மதிக்கத் தெரியாதவங்க மேல தவறுதலா காதல்வயப்பட்டுட்டோம்னா அதையே நினைச்சு மனசு நோகணுமா என்ன? நம்மளோட உண்மையான காதலைக் கொண்டாட ஒருத்தன் பிறந்திருப்பான்… அவன் அதுக்கான மரியாதைய குடுப்பான்… அவனை அளவேயில்லாம நேசிக்கலாம்… நடத்தையோட அதை சம்பந்தப்படுத்திப் பாக்கணும்னு அவசியமுமில்ல… என் ஆருவோட இதயமும் அதுல உருவான காதலும் தூய்மையானது.. ராஜா மாதிரி கேவலவாதி அதுக்குத் தகுதியானவன் இல்லனு தெரிஞ்சாச்சு… அந்தக் காதலை உன்னோட வருங்கால கணவருக்காக பத்திரப்படுத்தி வை ஆரு… அவர் வந்ததும் எந்த தயக்கமும் இல்லாம குற்றவுணர்ச்சியோட யோசிக்காம அவரை நேசி… திஸ் இஸ் மை ஹம்பிள் அட்வைஸ்”
கொஞ்சம் கொஞ்சமாகப் பேசி தோழியில் மனதில் நிதானத்தை விதைத்தாள். மெய்யான நேசத்தின் மகிமையைப் புரியவைத்தாள். ஒரு தோழி எப்படி இருக்கவேண்டுமென்பதற்கு உதாரணமாக துன்பம் வரும்போதேல்லாம் ஆரபிக்குத் துணையாய் நின்றாள்.
அதே நேரம் தோழமையைத் தன் சுயநலனுக்காக அடகு வைத்த நிலா குமரனோடு ஊரை விட்டு ஓடிப்போய் திருமணம் செய்துகொண்டாள். அவள் எங்கே போனாள் என்றே தெரியாமல் அவளது பெற்றோர் தடுமாறியபோது ஆரபி பொங்கல் விடுமுறைக்காக நதியூருக்கு வந்திருந்தாள்.
அவளிடம் நிலாவின் அன்னை அழுகையோடு கேட்டதும் குமரனோடு அவள் காதல்வயப்பட்டதைச் சொல்லி,, அவர்களுக்கு ராஜா தான் உதவியிருக்க வேண்டும் என்பதையும் கூறிவிட்டாள்.
காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதில் குமரன் – நிலா தம்பதி ராஜாவோடு மதுரையில் பிடிபட்டார்கள்.
நதியூரின் அருகேயுள்ள ரங்கநல்லூர் காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டவர்களை நிலாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. குமரனோ தன்னையும் ராஜாவையும் குற்றவாளிகளைப் போல காவல்துறையினர் அழைத்து வந்த கோபத்தில் இருந்தான்.
“ஆரு மட்டும் உன் காதலைப் பத்தி சொல்லலைனா நீ எங்க போனியோ என்ன ஆனியோனு நானும் உன் அப்பாவும் பரிதவிச்சு போயிருப்போம்… அவ சொன்னதால தான் உன்னையும் இந்தப் படுபாவியையும் கண்டுபிடிக்க முடிஞ்சுது… இன்ஸ்பெக்டர் சார், என் மக மனசைக் கலைச்சு அவளைத் திருட்டுத்தனமா கல்யாணம் பண்ணுனதை எங்களால ஏத்துக்க முடியாது… இதோ நிக்குறானே இவன் கூட்டுக்கள்ளாளி… இவங்க ரெண்டு பேரையும் சும்மா விடாதிங்க… எங்க மகளை எப்பிடியாச்சும் எங்களோட அனுப்பிவைங்க” என்று காவல்நிலையத்தில் அழுதார்.
அவரோடு சென்ற ஊரார் “ஓஹ்! இந்தக் காதல் விவகாரம் முன்னாடியே ஞானம் மவளுக்குத் தெரிஞ்சதால இந்தப் பய அவன் அம்மையோட வந்து ஞானம் குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டுப் போயிருக்கான்… அவன் சேக்காளி நம்ம ஊருப்பொண்ணைக் காதலிச்சதை அந்தப் பிள்ளை சொல்லி காதலுக்குத் தடையா நின்னுடுவாளோனு பயந்து ரெண்டு பயலும் திட்டம் போட்டு செஞ்சிருக்கானுவ… ச்சே! நம்ம கூட அந்த ஆரபி பிள்ளைய தப்பா நினைச்சுட்டோமேய்யா” என்று தங்களுக்குள் பேசிக்கொண்டார்கள்.
நிலா மேஜர் என்பதால் அவள் குமரனோடு அனுப்பிவைக்கப்பட்டாள். குமரனுக்கும் ராஜாவுக்கும் காவல்துறையினர் எச்சரிக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்கள்.
ஆனால் மூவரின் மனதிலும் ஆரபி மீது வன்மம் உருவானது.
“நமக்கு ஒரு சான்ஸ் கிடைக்கும்… அப்ப அவளை வச்சு செய்யலாம்… இப்ப நீயும் தங்கச்சிமாவும் பாளையங்கோட்டைல கதிர் பாத்து வச்சிருக்குற வீட்டுக்குக் கிளம்புங்க” என்றான் ராஜா. நிலாவும் குமரனும் அதே வன்மத்துடன் கிளம்பினார்கள்.
அன்றைய தினம் ஆரபியின் மேலிருந்த களங்கத்தை ஊரார் தமக்குள் பேசி தீர்த்துக்கொண்டார்கள். முழுவதுமாக உண்மையில்லை என்றாலும் ஆரபியின் நல்லமனதுக்காக அந்தப் பொய் வேகமாக நதியூரில் பரவி ஞானசேகரனின் காதுக்கும் வந்து சேர்ந்தது.
அதுவும் ஜோடிக்கப்பட்டதே என்று அவருக்குத் தெரியும். புறணி என்பது உண்மையைப் பற்றி கவலைப்படாதவர்களால் சர்வ அலங்காரங்களுடன் உருவாக்கப்படும் பொய்! அந்த பொய்யால் கொஞ்சம் மனம் குளிர்ந்தார்கள் ஞானசேகரனும் சுடர்விழியும். ஆனால் ஆரபிக்கு வரன் ஒன்றும் குதிரவில்லை.
ஒவ்வொன்றும் தட்டிப்போய்க்கொண்டே இருந்தது. எந்த வகையிலாவது ஆரபியின் முன்னாள் காதல் அவளுக்கு அமையவிருந்த ஒவ்வொரு வரனையும் தட்டிவிடவே சுடர்விழி ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.
அருகிலுள்ள ஊர்களை விட்டுத் தூரத்தில் வரன் பார்ப்போமென லோக்கல் மேட்ரிமோனி ஒன்றில் ஆரபியின் விபரத்தைப் பதிவு செய்தார். அதன் மூலம் அமைந்த வரனே அன்பரசன்.
மனோகரியும் மார்த்தாண்டனும் பெண்ணின் அன்னைக்குப் பூர்வீகம் தங்கள் பக்கம் என்றதும் செங்கோட்டையில் சுடர்விழி குடும்பத்தைப் பற்றி விசாரித்தார்கள். நதியூரிலும் சில நல்ல மனிதர்கள் ஆரபியைப் பற்றி உயர்வாகச் சொல்லிவிட மனோகரிக்கு இந்தச் சம்பந்தத்தை முடித்துவிடவேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது.
இரு குடும்பத்தாரும் செங்கோட்டையில் சந்தித்துப் பேசிக்கொண்டார்கள். அன்பரசன் நோட்டீஷ் பீரியட்டில் இருந்ததால் விடுப்பு கிடைக்காதென தெரிந்ததும் சுடர்விழி சொன்ன யோசனைதான் தங்கள் பிள்ளைகள் இருவரும் சென்னையில் சந்தித்துப் பேசிக்கொள்ளட்டும் என்பதே!
அவர்களின் பிள்ளைகள் சந்தித்துக்கொண்டார்கள்! முதல் பார்வையிலேயே இருவரின் இதயங்களிலும் நேசவிதை தூவப்பட்டது. இது ஏற்பாட்டுத்திருமணமா காதல் திருமணமா என்று சந்தேகம் கொள்ளும் அளவுக்கு ஆரபியும் அன்பரசனும் ஒருவரை ஒருவர் நேசித்தார்கள்.
ராகப்ரியா சொன்ன வார்த்தைகள் எத்துணை உண்மை என்பதை ஆரபி புரிந்துகொண்டாள். அதே நேரம் அன்பரசனின் கொள்கைகள் அவளைக் கொஞ்சம் மருட்டின. தனது முன்னாள் காதல் தோல்வியைப் பற்றி அவனிடம் கூறாமல் இருப்பது ஒருவித குற்றவுணர்ச்சியில் அவளை ஆழ்த்தியது.
சொல்லவேண்டுமென அவள் துணியும்போதேல்லாம் சுடர்விழியின் மிரட்டல் நினைவுக்கு வரும். அடுத்த நொடியே “சப்போஸ் நான் ராஜாவை பத்தி சொல்லி, அன்புக்குக் கோவம் வந்து என்னை அவர் வெறுத்துட்டா என்ன செய்யுறது? எங்க கல்யாணம் நின்னு போச்சுனா என்னால தாங்கிக்கவே முடியாது… அன்புவ என்னால யாருக்கும் விட்டுக்குடுக்க முடியாது” என்று தனக்குத் தானே சொல்லிக்கொள்வாள்.
அவள் அவனை அளவற்று நேசித்தாள்! அளவின்றி நம்பினாள்! ஃபேரிடேல்களில் இளவரசி சோதனைகளில் சிக்கி இளவரசனால் மீட்கப்பட்டு இறுதியில் இருவரும் இணையும்போது சொல்வார்களே “and they lived happily ever after” என்பது போல அன்பரசனோடு வாழப்போகும் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே தனக்கு நிரம்பியிருக்கும் என கனவு கண்டு குதூகலித்தாள்.
அவர்களின் திருமணம் நடந்து முதல் ஒரு மாதத்தில் சந்தோசத்திற்கு எந்தக் குறையும் இல்லாமல் தானே வாழ்ந்தார்கள். முதல் மாத திருமண நாளுக்கு ஒருவருக்கொருவர் பரிசு வேறு கொடுத்துக்கொண்டார்கள்.
அடுத்த மாதமே இருவரையும் ராஜா மற்றும் ஜானகியின் ரூபத்தில் பிரித்து வைத்து குதூகலித்தது விதி! எப்போது வாய்ப்பு கிடைக்குமென வல்லூறுகளாய் காத்துக் கிடந்த ராஜா, குமரன், நிலா மூவரும் அடிக்கடி பேசிக்கொள்வது போல இல்லாத பொல்லாத பழிகளை அவள் மீது போட்டு அன்பரசனை அவள் மீது கோபம் கொள்ளவைத்துவிட்டார்கள். அவர்களின் சுயரூபத்தை அறியாத ஜானகியும் ஆரபியை வசைபாட அன்பரசன் உடைந்து போனான்.
இருப்பினும் அவர்களிடம் மனைவியை விட்டுக்கொடுக்காமல் இனி தங்கள் வாழ்க்கையில் குறுக்கிடக்கூடாதென எச்சரித்துவிட்டே கிளம்பினான்.
காரில் வருகையில் ஆரபியே தன் வாயால் ராஜாவைக் காதலித்ததாகச் சொன்னதும் முதலில் அவன் உணர்ந்தது ஏமாற்றத்தையே! அடுத்த நொடி எரிமலையாய் வெடித்தது அவனது காதல் கொண்ட இதயம்.
வீடு வரும் வரை அவனது கோபம் குறையவில்லை. வீட்டுக்கு வந்ததும் மைந்தனின் முகம் இறுகிப்போயிருப்பதை வைத்து என்னவென விசாரித்த மனோகரியிடம் வெயிலைக் காரணம் காட்டி அறைக்குள் போய் முடங்கிக்கொண்டான்.
“என்னமோ தென்காசில இருந்து வெயில்ல நடந்து வந்த மாதிரில்ல உன் புருசன் சொல்லுறான்?” மருமகளிடம் கேலி பேசிய மனோகரிக்கு அவளது முகமும் சரியில்லை என்றதும் ஐயம் வந்தது.

மாமியார் ஐயமுறுவதை உணர்ந்த ஆரபி “அதில்லத்தை… ஏசி கார்ல வந்தாலும் ட்ரைவ் பண்ணுன டயர்ட் அவருக்கு… கொஞ்சம் தூங்கி எழுந்திருச்சா சரியாகிடும்… உங்களுக்கு நான் ஹெல்ப் பண்ணட்டுமா?” என்று சமையலறைக்குள் செல்லப் பார்க்க அவளைத் தடுத்தார் மனோகரி.
“சமையல் எல்லாம் முடிஞ்சுது ஆரும்மா… உனக்கும் டயர்டா இருக்கும்… ட்ரஸ் சேஞ்ச் பண்ணிட்டு ரெஸ்ட் எடு… உங்க முகத்தைப் பாத்தாலே சாப்பிடலனு தெரியுது… அதான் அந்த வீட்டுக்குப் போகவேண்டாம்னு சொன்னேன்… உன் புருசன் எப்ப வீட்டு மனுசங்க பேச்சைக் கேட்டிருக்கான் சொல்லு” என்று அவளை அறைக்கு அனுப்பிவைத்தார். கணவனின் கோபத்தைக் கண் முன்னே பார்த்ததில் அரண்டு போயிருந்த ஆரபிக்கு அவர்களின் அறை சிங்கத்தின் குகை போல தோன்றியது. பயத்தோடு கதவைத் திறந்துகொண்டு உள்ளே சென்றவள் அறை நடுவே நாற்காலியில் யோசனையில் நெறித்த புருவத்தோடு அமர்ந்திருந்த கணவனைக் கண்டதும் கால்கள் தரையில் வேரோடிப் போய்விடக் கதவருகே நின்றுவிட்டாள்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

