“ஒரு சின்ன பற்றுதலுக்காக ஏங்கி நிக்குற மனசு கிடைச்ச துணை பிடிச்சுக்கத் துடிக்கும். அந்தத் துணை ரொம்ப ஜாக்கிரதையோட விலகி நின்னா என்ன செய்யுறது? ஒரு கோவிலோட ராஜகோபுரத்தை தூரமா நின்னு ரசிக்குற ஒருத்தனா விலகி நின்னுடட்டுமா? இல்லனா அழகான நதியோட குளுமையை அதுல படகா மாறி நீந்தி அனுபவிக்கட்டுமா? ரொம்ப குழப்பம் எனக்குள்ள. யார் ஒருத்தியோட விலகல்ல என் தேடலுக்கான விடை இருக்குதோ அவளை நான் எப்பிடி அணுகுறதுங்கிறதுதான் இப்ப எனக்குள்ள இருக்குற பெரிய குழப்பம்”
-பவிதரன்
ஈஸ்வரிக்கு முதல் மாதச் சம்பளம் வந்துவிட்டது. மொபைலில் வங்கி அனுப்பியிருந்த பணம் வரவு வைக்கப்பட்டச் செய்தியைப் படித்ததும் அவளுக்குள் அத்துணை உற்சாகம்.
முதல் வேலையாக மலர்விழியிடம் இந்த நற்செய்தியைப் பகிர்ந்துகொண்டாள்.
“எனக்கு ட்ரீட் கிடையாதா ஈசு?” அவள் ஒரு பக்கம் உரிமையாய்க் கேட்டாள்.
“உனக்கு இல்லாத ட்ரீட்டா? நாளைக்கு ஞாயிறு தானே? நீ உன் மவனோட ஊருக்கு வந்துடு. அம்மைக்கும் மகனுக்கும் சேர்த்து ட்ரீட் வைக்குறேன்” என்றாள் ஈஸ்வரி உற்சாகமாக.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
“நிஜமா வைக்கணும்”
“சத்தியமா மலர்”
தோழியிடம் பேசிவிட்டு அலுவலகத்திலிருந்து கிளம்பினாள் ஈஸ்வரி.
மலர்விழி நூலக அறிவியல் பட்டப்படிப்பை இப்போது படித்துக்கொண்டிருக்கிறாள். அது சம்பந்தப்பட்ட நூல்களை அவளுக்கு வாங்கிக்கொடுத்தால் உபயோகமாக இருக்குமென ஈஸ்வரி யோசித்தது உண்டு.
அவளுக்குச் செய்ய மகிழ்மாறன் இருக்கிறான் என்றாலும் தோழியாய் அவளுக்கு ஏதாவது வாங்கிக்கொடுக்க வேண்டுமென்ற ஆசை எப்போதுமே ஈஸ்வரிக்கு இருக்கும்.
இதோ சம்பளம் வாங்கியாயிற்று! அவர்களின் அலுவலகத்திலிருந்து நேரே ஈகிள் புக் செண்டரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள். ஒரு காலத்தில் அவளும் மலர்விழியும் வேலை செய்த இடம். பழைய நினைவுகள் நெஞ்சோரம் சர்க்கரை பாகாய் தித்தித்தன.
அவள் நடக்கும்போதே பவிதரனின் கார் வர பட்டாம்பூச்சியாய் சிறகடித்த இமைகள் கட்டுப்பாடின்றி ஆவலைக் கொட்டி அந்தக் காரை நோக்கின. கார் சட்டென நின்றதும் தவறு செய்த பிள்ளையாய் தவித்த மனம் பார்வையைச் சாலையில் பதிக்க கால்களோ அடுத்த எட்டு எடுத்துவைக்கத் தடுமாறி அங்குமிங்கும் அலைபாய்ந்தன.
காரிலிருந்து இறங்கிய பவிதரன் அவள் பாளை பேருந்து நிலையத்தைக் கடந்து எங்கே போகிறாள் என்ற யோசனையோடு அவளை நெருங்கினான்.
“வீட்டுக்குப் போகலையா நீ?” சாதாரணமானக் கேள்விதான். ஆனால் கண்களில் இருந்த விசாரிக்கும் தொனி அதை அசாதாரணமானக் கேள்வியாக ஒலிக்க வைத்தது.
“இல்ல! கொஞ்சம் வேலை இருக்கு. அதை முடிச்சிட்டுப் போவேன்”
சுருக்கமாகப் பதிலளித்தாள் அவள்.
“அப்பிடி என்ன வேலை? ஆபிஸ் நேரம் முடிஞ்சா வீட்டுக்குப் போய் பழகு. இப்பிடி ஊர் சுத்துறது நல்லா இல்ல”
பவிதரனின் குரலில் இருந்தது என்ன? காட்டமா? கோபமா? அது எதுவெனப் பிடிபடவில்லை. ஆனால் ஈஸ்வரியின் துடுக்குத்தனம் அந்த உணர்வால் சீண்டப்பட்டு விழித்துக்கொண்டது.
“சுத்திப் பாக்குறதுக்குப் பாளையங்கோட்டை என்ன ஊட்டியா கொடைக்கானலா? நான் மலருக்குப் புக் வாங்க போயிட்டிருக்கேன். அப்பிடியே எங்கம்மா அப்பாக்குப் பிடிச்ச சாப்பாடும் ஸ்வீட்டும் சரவணா பவன்ல வாங்கிட்டு வீட்டுக்குக் கிளம்பிடுவேன். அப்பிடியே ஊர் சுத்துனாலும் என்னவாம்? ஆறு மணிக்கு மேல ஆம்பளைங்க மட்டும்தான் இந்த ரோட்டுல நடமாடணும்னு எங்க எழுதிப் போட்டிருக்கு?”
பவிதரனின் இதழ்க்கடையில் அவளது துடுக்குத்தனமானப் பதிலால் முறுவல் முகிழ்த்தது.
“ரூல்ஸ் எல்லாம் இல்ல. ஆனா போன வாரம் இந்த இடத்துல ஒரு பொண்ணோட கழுத்துல கிடந்த செயினை ஒருத்தன் பறிச்சிட்டு ஓடுனான்னு ஜீவன் சொன்னார். நீ வேற காதுல கழுத்துல எல்லாம் தங்கமா போட்டு மின்னுற”
சொல்லும்போதே அவனது கண்கள் அவளது செவிமடல்களையும் கழுத்தையும் வருடிவிட்டுப் போனது. யாரோ மெல்லிய இறகால் வருடினால் வருமே ஒரு சிலிர்ப்பு, அதைப் பவிதரனின் பார்வையில் உணர்ந்தவளுக்குக் கண்களை உருட்டிப் பார்வையைத் திருப்புவது ஒன்றே வாகாய் கிடைத்த சமாளிப்பாய்!
“நீங்களே கண்ணு வைப்பீங்க போலயே! எல்லாம் சேர்த்து ஒரு பவுன் கூட தேறாது” என்றாள் அவள்.
“இன்னைக்குத் தங்கம் விக்குற விலைக்குக் குண்டுமணித்தங்கம் கிடைச்சாலும் திருடனுக்கு ஜாக்பாட் தான். தெரியும்ல?”
ஈஸ்வரி சட்டெனப் பார்வையை அவனிடமே திருப்பினாள்.
“என்னைப் பயமுறுத்துறதுக்காகத்தான் மெனக்கிட்டுக் காரை நிறுத்திட்டு வந்திங்களா?”
“நீ என் ஆபிஸ்ல வேலை பாக்குற. உன் பாதுகாப்பு என்னோட பொறுப்புதானே? அந்த அக்கறைல சொன்னேன். நீ என் கை காயத்துல கர்சீப் கட்டி விட்டியே, அதே போல அக்கறை”
பவிதரன் சொன்னது என்னவோ சாதாரணத்தொனியில்தான். ஈஸ்வரியின் செவிகள் அதை விசமத்தொனியில் அவளுக்குக் கேட்கச் செய்ததன் விளைவு சின்னதாய் படபடப்பு அவளுக்குள். உதடு குவித்து உஃப் என ஊதிக்கொண்டாள்.
“சரி வா! இப்பிடியே நின்னுட்டிருந்தா நேரம்தான் வீணா போகும். நான் உன் கூட வர்றேன்” என்று அவளைக் காருக்குச் செல்லுமாறு கை காட்டினான் பவிதரன்.
“இல்ல நானே…”
“நான் ஒன்னும் உன்னைக் கடிச்சு முழுங்கிட மாட்டேன்”
ஈஸ்வரி சட்டென அவனை முறைத்தாள்.
“நான் ஒன்னும் அதுக்காகச் சொல்லல. உங்களுக்கு எதுக்குச் சிரமம்னு நினைச்சேன்.”
பதிலளித்தவள் விறுவிறுவென அவனது காரை நோக்கி நடந்தாள். புன்சிரிப்போடு அவளைத் தொடர்ந்தவன் காரில் ஏறி அமர்ந்தான்.
அமர்ந்தவனின் பார்வை மென்மையாய் அவளை வருடவும் ஈஸ்வரியின் சின்ன படபடப்பு இன்னும் அதீதமாவதாய்!
“வாயால முழுங்க வேண்டாம். இந்தப் பார்வையே ஆளை முழுங்குற மாதிரிதான் இருக்கு”
வாய்க்குள் யாருக்கும் கேட்காதவண்ணம் அவள் முணுமுணுத்தாள்.
“இனிமே நார்மலா பாக்குறதுக்கு ட்ரை பண்ணுறேன்” என்றவன் கமுக்கமாகச் சிரித்தபடி காரைக் கிளப்பினான்.
“அது எப்பிடி நான் சைலண்டா சொல்லுறதைக் கண்டுபிடிக்குறிங்க?”
“எனக்கு லிப் ரீடிங் தெரியும்னு சொன்னேனே”
ஈஸ்வரிக்கு அலுவலக முதல் நாள் போலவே இப்போதும் மனதுக்குள் திணறல்.
“ஏய் சண்டைக்காரி! என்னாச்சு? பதில் சொல்ல தெரியலையா?”
வேண்டுமென்றே சீண்டியவனை முகத்தைத் தூக்கிவைத்துக்கொண்டு பார்த்தாள் அவள்.
“நீங்க இப்பிடியே பேசி என் இயல்பையே மாத்திடுவிங்க போல” என்றாள் குறை சொல்வது போல.
பவிதரனிடமோ மந்தகாசப்புன்னகையே பதிலடியாய்!
பேச்சுகள் நீளும் முன்னர் புக் செண்டரும் வந்துவிட இருவருமாய் இறங்கிச் சென்று மலர்விழிக்காகப் புத்தகத்தைத் தேர்வு செய்வதில் மும்முரமானார்கள்.
இடையிடையே தாங்கள் வேலை செய்த பகுதியைப் பவிதரனிடம் காட்டினாள் ஈஸ்வரி.
“அந்த ஸ்டேசனரி செக்சனும் புக் செக்சனும் இருக்கே, அதுலதான் மலரும் நானும் வேலை பாத்தோம். அங்க வச்சுதான் மலர் முதல் முதல்ல கரெஸ் சாரைப் பாத்தா”
பவிதரன் உம் கொட்டிக் கேட்டுக்கொண்டே நின்றவன் ‘எதற்காக இங்கே வந்து இவளுடன் நிற்கிறோம்’ எனத் தன்னைத் தானே மானசீகமாகக் கேட்டுக்கொண்டான்.
இந்நேரம் வீட்டுக்குக் கிளம்பியிருந்தால் பாதி தூரத்தைக் கடந்திருப்பான். அதை விடுத்து ஈஸ்வரியிடம் பேசி, அவளைச் சீண்டி வம்பிழுத்ததில் அப்படி என்ன கிடைக்கிறது தனக்கு?
யோசித்துப் பார்த்ததில் அவள் ஒருத்தியிடம் உரையாடுகையில் அவன் வெறும் பவிதரனாகவே இருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டான்.
சித்தப்பா, சித்தி, மலர்விழியிடம் மட்டுமே வெளிப்படும் அவனது இயல்பை ஈஸ்வரியிடம் வெளிப்படுத்துகையில் அவனுக்கு எந்தத் தடுமாற்றமும் வருவதில்லை என்ற தெளிவும் அவனுக்கு.
ஈஸ்வரி புத்தகம் வாங்கிக்கொண்டவள் “சரவண பவன் போகணும்” என்றதும் சரியெனத் தலையாட்டியவன் காரை ஹோட்டலுக்குச் செலுத்தினான். அதிக தூரம் எல்லாம் கிடையாது என்பதால் சில நிமிடங்களில் அங்கே வந்துவிட்டார்கள்.
மணி ஆறே முக்கால் ஆகியிருந்தது. ஈஸ்வரி மெனுவைப் பார்வையிட்டவள் தந்தைக்கும் அன்னைக்கும் பிடித்ததை ஆர்டர் செய்து பார்சல் உணவுக்குப் பணம் செலுத்தினாள்.
வெளியே இருந்த சாட் கார்னரைப் பார்த்ததும் அவளுக்குள் பானி பூரி சாப்பிடும் ஆர்வம்.
தனியே சாப்பிட சங்கடமாக இருக்கவும் “என் கூட பானி பூரிய ஷேர் பண்ணிப்பிங்களா?” எனப் பவிதரனிடம் கேட்டாள் மெதுவாக.
“ம்ம்! ஆனா பில் நான்தான் குடுப்பேன்”
“அதெல்லாம் வேண்டாம். நான் சாப்பிடணும்னு ஆசைப்படுறதுக்கு நீங்க எதுக்கு குடுக்கணும்?”
“நானும் ஷேர் பண்ணிக்கப்போறேன்ல”
“அதனால என்ன? ஒருவேளை பொண்ணு காசுல சாப்பிட ஆம்பளை ஈகோ இடிக்குதோ?”
கேட்டுவிட்டு ஓரக்கண்ணால் அவள் பார்த்த விதத்தில் அவனுக்குச் சிரிப்பு வந்துவிட்டது.
“சிரிக்குறிங்க. அப்ப அதுதான் உண்மை” என்றாள் ஈஸ்வரி விழிகளை சுருக்கியபடி.
“உனக்கு எப்பிடி நான் என்ன யோசிக்குறேன்னு தெரியுது?”
“உங்களுக்கு லிப் ரீடிங் தெரிஞ்ச மாதிரி எனக்கு மைண்ட் ரீடிங் தெரியும்”
அதிகம் பேசாதவனுக்கு ஈஸ்வரியுடன் வார்த்தைக்கு வார்த்தை அரட்டை அடிப்பது அத்துணை சுவாரசியமாக இருந்தது.
வெகு சிலரிடம் மட்டுமே சுயத்தோடு பழக முடியும். அவர்களிடம் நம்மை நாம் மறைக்க வேண்டியதில்லை. நமது இயல்பை வெளிப்படுத்த தயங்கவேண்டியதில்லை.
அப்படியொருத்தியாக அவன் கண்களுக்கு ஈஸ்வரி தெரிந்தாள்.
பானி பூரியை வாங்கி வாய்க்குள் அதக்கியபோதே அதில் நிரம்பியிருந்த தண்ணீர் அவனது சட்டையை நனைத்துவிட்டது.
புளிப்பும் உரைப்புமாய் நாக்கைச் சுரீரெனத் தாக்கிய ருசி புதுவிதமாய் அவனை இலயிப்பில் ஆழ்த்திய அதே நொடியில் “அச்சோ சட்டைல கொட்டிருச்சே” என்றவளாக சுடிதாரின் துப்பட்டாவால் அவனது சட்டையைச் சுத்தம் செய்த ஈஸ்வரி அவனைத் தடுமாற வைத்தாள்.

ஆணின் உளவியல் சற்று வித்தியாசமானது. வெளிப்பார்வைக்குக் கடினமானவனாக, கம்பீரமானவனாக, முரடாகத் தெரியும் ஆண் இனம் Nurturing என்ற பேணும் குணத்தை அதிகம் விரும்பும். அதையே ஒரு பெண் கொடுத்தால் ஆணின் மனம் அந்தப் பெண்ணின்பால் சரியத் தொடங்கும்.
குழந்தைப்பருவத்தில் முதல் அன்பும், கவனிப்பும் அன்னை என்ற பெண்ணிடமிருந்தே ஆண்களுக்கு ஆரம்பிக்கிறது. இதே அன்பையும் சின்ன சின்ன கவனிப்பையும் இன்னொரு பெண் செய்கையில் அவள் அந்த ஆணின் பார்வையில் அரவணைக்கும் ஒருத்தியாகத் தெரிகிறாள்.
பலவானாகக் காட்டிக்கொள்ளும் ஆணுக்கும் பலவீனமானத் தருணங்கள் வரும். அந்தத் தருணங்களில் துணை நிற்கும் பெண்மீது அவனுக்கு மரியாதை பிறக்கும். அவள் தனக்குக் கொடுக்கும் முக்கியத்துவமாய் அதைப் பார்ப்பான் அந்த ஆண்.
அதோடு இந்த அன்பும், முக்கியத்துவமும் அந்த ஆணுக்குச் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் பிணைப்பை உருவாக்கிவிடும். பல நேரங்களில் வார்த்தைகள் சொல்லாத அன்பை ஒரு பெண் செய்யும் சின்ன சின்ன அக்கறையானச் செயல்கள் ஆணுக்கு அள்ளிக் கொடுப்பதுண்டு.
பவிதரன் ஈஸ்வரியிடம் உணர்ந்தது இவை யாவற்றையும் என்றால் அது மிகையாகாது. சின்னதொரு பார்வை, சில வார்த்தைகளில் கொட்டப்படும் அக்கறை, க்ஷண நேரத்து ஸ்பரிசத்தில் வெளிக்காட்டும் அன்பு இவையனைத்தும் அவளை நோக்கி அவனை ஈர்த்துக்கொண்டிருக்கின்றன.
“பார்சலை வாங்கியாச்சு! கிளம்புவோமா?”
ஈஸ்வரி கேட்கும்வரை அவன் சிந்தனை வலையில் சிக்குண்டிருந்தான். அவள் அழுத்தமாய்ப் பார்க்கவும் “ஹான்! கிளம்பலாமே” என்று அவளோடு நடக்க ஆரம்பித்தான்.
கார் சாலையில் வேகமெடுக்க ஈஸ்வரி மொபைலில் கவனமாகியிருந்தாள்.
நதியூர் வரும் வரை இருவரும் பேசிக்கொள்ளவில்லை.
“என்னை இங்கயே இறக்கிவிட்டுருங்க”
சாலையோரம் இறக்கிவிடுமாறு ஈஸ்வரி சொல்ல
“சித்தப்பா வீட்டுக்குப் போய் நாளாச்சு. அங்கயே உன்னை இறக்கி விடுறேன்” என்றவன் சொன்னபடி சிகாமணியின் வீட்டருகே காரை நிறுத்த அதற்குள் இருந்து இறங்கினாள் அவள்.
“நான் போயிட்டு வர்றேன்” விடைபெற்றவளிடம் தலையசைப்பைப் பதிலாக அளித்தான்.
அவள் போனதும் சிறிது நேரம் சித்தப்பா சித்தியிடம் உரையாடிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான்.
அவன் வீட்டுக்குள் நுழைகையிலேயே நிலவழகியின் குரல் கேட்டது.
அவரும் மதுமதியும் திருவனந்தபுரத்திலிருந்து ரங்கநல்லூருக்கு வந்து ஒரு வாரமாகியிருந்தது.
அடுத்த மாதம் ஒரு முகூர்த்தநாளில் மதுமதிக்கும் தர்ஷனுக்கும் திருமணமென நாள் குறித்திருந்தார்கள். திருமணம் பற்றிய பேச்சு வீட்டில் கேட்டிருந்தால் பவிதரன் அதைக் கவனித்திருக்கமாட்டான்.
அங்கே கேட்ட வார்த்தைகள் ‘பவி’ ‘மூர்த்தியோட மக’ இவையே.
அதைக் கேட்டதும் செவிகளைக் கூர் தீட்டிக்கொண்டு ஹாலுக்கு வந்து சேர்ந்தான் பவிதரன்.
மகனைப் பார்த்ததும் அதிருப்தியை முகத்தில் காட்டினார் நிலவழகி.
“உன்னை மூர்த்தி மகளோட சரவணபவன் ஹோட்டல்ல சீனியப்பன் தம்பி பாத்தாராம். என்ன நடக்குதுய்யா?”
வந்ததும் இம்மாதிரி விசாரணைகளை எதிர்கொள்வது பவிதரனுக்குச் சலிப்பைக் கொடுத்தது. ஏதோ குற்றவாளியை விசாரிப்பது போல இதென்ன தொனி?
“இதுல என்ன இருக்கும்மா? அவ என் ஆபிஸ்ல ஒர்க் பண்ணுறா. மூர்த்தி மாமா..”
“மாமாவா? முதல்ல வாயைக் கழுவு. கூலிக்கு வேலை பாக்குற ஆளை நீ மாமா மச்சான்னு உறவுமுறை கொண்டாடுறதை யாரும் கேட்டா நம்ம குடும்பத்தைப் பத்தி என்ன நினைப்பாங்க?”
வெடித்தார் நிலவழகி. அனைத்தையும் கவனித்த மாணிக்கவேலு எதுவும் பேசினால்தானே? தந்தையும் மகனும் சண்டை போடாதீர்கள் என்று மூத்தமகள் சொன்ன பிறகு மகனிடம் வாதாட அவர் விரும்பவில்லை.
பவிதரனுக்கு அன்னையின் பேச்சில் உடன்பாடில்லை.
“அவ வேலைக்கு வர்றாளா? இல்ல ஆம்பளை பையனை வளைச்சுப்…”
“போதும்” கர்ஜனையாய் அந்த வீட்டின் சுவர்களில் பட்டு எதிரொலித்தது பவிதரனின் கோபக்குரல்.
எப்போதும் பிடிக்காத விசயங்களைப் பேசினால் ‘இப்படி பேசாதீர்கள்’ என்று அழுத்தமாய்ச் சொல்லிவிட்டுக் கடப்பவன். புதிதாய் வெடித்த இந்தக் கோபம் அவனது அன்னைக்கு அதிர்ச்சி அளிப்பதாய்!
‘இவன் என் மகன் தானா?’
நம்ப முடியாமல் நிலவழகி விழிக்கையிலேயே தாடை இறுக பேச ஆரம்பித்தான் பவிதரன்.
“பொருளாதார நிலைய வச்சு யாரையும் மோசமா பேசாதிங்க, குறைஞ்சபட்சம் என் கிட்ட பேசாதிங்க. எனக்குப் பிடிக்கல. இன்னொரு பொண்ணோட நடத்தைய தப்பா பேசுறதுக்கு முன்னாடி நம்ம வீட்டுப்பொண்ணைப் பத்தி யோசிங்க. அவளுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையப் போகுதுனதும் உங்க மேல பழைய காத்து வீசுது போல. இது நல்லதில்லம்மா! இன்னைக்கு இன்னொரு வீட்டுப்பொண்ணை நோக்கி நீங்க வீசுற வார்த்தை நாளைக்கே நம்ம வீட்டுப்பொண்ணுக்கு எதிரா திரும்பும். இனிமே ஈஸ்வரிய பத்தி மோசமான வார்த்தை எதுவும் உங்க வாய்ல இருந்து வரக்கூடாது. வராதுனு நம்புறேன். வராம இருந்தா எல்லாருக்கும் நல்லது”
கட்டளை போல இறுகியக் குரலில் எச்சரித்துவிட்டு அங்கே நிற்கப் பிடிக்காமல் தனது அறையை நோக்கிச் சென்றவன் கதவை ஓங்கி அறைந்து சாத்திய சத்தம் நிலவழகியின் மனதுக்குள் இடி முழக்கமாய் ஒலித்தது.
மகனின் எதிர்காலம் குறித்து அவருக்குப் பல கனவுகள் இருக்கின்றன. மூத்தவளைத் தங்களது தகுதிக்கேற்ற இடத்தில் திருமணம் செய்து வைத்தாயிற்று. அவளது வாழ்க்கையில் எந்தக் குறையுமில்லை.
இளையவளுக்கும் கடவுள் ஒரு வழி அமைத்துக் கொடுத்துவிட்டார்.
அவளது திருமணம் முடிந்ததும் பவிதரனுக்கு ஏற்றவளாக தங்களுடைய அந்தஸ்துக்கு ஏற்ற குடும்பத்துப் பெண்ணொருத்தியைத் தேடி அவனுக்கு மணமுடித்துவைக்கலாமென மனக்கோட்டை கட்டியிருந்தார் நிலவழகி.
சற்று முன்னர் மாணிக்கவேலுவைப் பார்க்க வந்த சீனியப்பன் என்பவர் ஈஸ்வரியோடு பவிதரனை ஹோட்டலில் பார்த்ததாகச் சொன்ன நிமிடத்திலிருந்து அடிவயிற்றில் அக்னி எரியாதக் குறைதான் அவருக்கு.
அனைத்தையும் பார்த்த பிறகும் மாணிக்கவேலு எவ்வித எதிர்வினையும் ஆற்றாமல் இருப்பதே பெரும் எரிச்சலாய்!
“கல்லு மாதிரி இருக்குறிங்க? அவன் என்ன சொல்லிட்டுப் போறான்னு கேட்டிங்களா? இப்பிடியே போச்சுனா இல்லாத வீட்டுக் கழுதைய கட்டிட்டு வந்துடுவான்”
ஆதங்கம் தாங்காமல் கூப்பாடு போட்டார் நிலவழகி. மாணிக்கவேலு நிதானமாய் மனைவியைப் பார்த்தார்.
“மவன் என்ன சொன்னாலும் மண்டைய ஆட்டுன மகராசி தானே நீ. இப்ப என்ன திடீர்னு என்னைப் பேசச் சொல்லுத? இங்க பாரு! நாம பெத்ததுல மூத்தவளைத் தவிர மத்த ரெண்டும் சரியில்ல. நீ ஒன்னு சொன்னா வீம்புக்குனு அதுக்கு எதிர்பதமா நடந்துக்குறவங்கதான் உன் மகனும் இளையமவளும். அதனால கொஞ்சம் அமைதியா இரு. தானா அடங்குற புழுதியை (தூசி) சலங்கை கட்டி ஆடி மறுபடி மறுபடி கிளப்பிவிடாத. அப்புறம் அதே புழுதி உன் கண்ணை உறுத்த ஆரம்பிச்சிடும்”
தெள்ளத்தெளிவாகச் சொல்லிவிட்டுத் துண்டை உதறிய மாணிக்கவேலு அங்கிருந்து போய்விட நிலவழகியோ மனம் பதபதைக்க நின்றார் அங்கேயே!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

