“என்னோட எம்.பி.ஏ கம்ப்ளீட் ஆனதும் டாட் என்னை சாகர் பெட்ரோ கெமிக்கல்ஸோட மேனேஜிங் டைரக்டரா பொறுப்பேத்துக்கச் சொன்னார்… சாகர் குரூப் ஆல்ரெடி எஸ்டாப்ளிஷ் ஆன ஒரு ப்ராண்ட்… அதோட எம்.டியா போய் உக்காந்து டாட் சொல்லுற மாதிரி சேஃப்ஜோன்ல பிசினஸ் பண்ணுறதுல எனக்குப் பெருசா உடன்பாடு இல்ல… ஐ வாண்ட் டு டேக் ரிஸ்க்ஸ்… ஐ லைக் டு டேஸ்ட் தி சக்சஸஸ் அண்ட் ஃபெயிலியர்ஸ்… ஐ விஷ் டு க்ரியேட் மை ஓன் பிசினஸ் கிங்டம்… மலைச்சிகரத்துல ஒவ்வொரு ஸ்டெப்பா எடுத்து வச்சு கை கால்ல அடிவாங்கி ஏறி நிக்கிறதுல உள்ள த்ரில், பாராசூட்ல போய் இறங்குனா கிடைக்காது… சோ நான் ராகுலோட ஹெல்பால மார்க்கெட்டை ஸ்டடி பண்ணுனேன்… ட்ரடிஷ்னல் பிசினஸ் தவிர்த்து ட்ரெண்டிங்ல இருக்குறதை மட்டும் செலக்ட் பண்ணுனேன்… அந்த அனாலிசிஸ்ல காஸ்மெட்டிக்ஸ் அண்ட் ஸ்கின்கேர் ப்ராடக்ட்ஸ் புரொடக்சன் டாப்ல வந்துச்சு… இது தான் ராந்த்வா காஸ்மெட்டிக்ஸ் அண்ட் ஸ்கின்கேர் ப்ரைவேட் லிமிட்டட் பிறந்த கதை”
– கிரிஷ்
லாங்வுட், சிம்லா…
அண்ணி என்று அழைத்தபடி ஓடிவந்து அணைத்துக்கொண்ட ஸ்ரீநயனியை அன்போடு கட்டிக்கொண்டாள் நித்திலா.
ஓடி வந்தவள் இடித்ததில் தடுமாறி கீழே விழுந்த விக்ரம் இடுப்பைத் தேய்த்துக்கொண்டு எழுந்து அவளை முறைத்தான்.
நித்திலாவிடம் இருந்து விலகியபோது ஸ்ரீநயனியின் விழிகள் கலங்கியிருந்தது. கல்லூரியில் படிக்கும்போதே நித்திலா மீது அவளுக்கு மரியாதை அதிகம். அவளே அண்ணியாக வந்தபோது மட்டற்ற மகிழ்ச்சியுற்றாள். அந்த மகிழ்ச்சிக்கு ஆயுள் குறைவாக இருந்தது தான் காலக்கொடுமை!
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
நித்திலாவுக்கோ தங்கை இருந்தும் இல்லாத நிலை. நிஹாரிகா என்றுமே நித்திலாவை ஒரு மனுஷியாக மதித்ததில்லை. தங்கை மீது காட்டவேண்டிய பாசத்தை ஸ்ரீநயனியிடம் காட்டுவாள் நித்திலா.

அவளது சிகையை ஆதுரத்துடன் கோதினாள் நித்திலா.
“பப்ளி கேர்ளா இருந்த ஸ்ரீநயனியா இது? பெரிய கம்பெனில நல்ல பொசிசனுக்குப் போனதும் மெச்சூரிட்டி வந்துடுச்சு குட்டிமாக்கு” என்றாள்.
“அங்க பப்ளி கேர்ளா இருந்தா ஏறி மிதிச்சிடுவாங்கண்ணி… கார்பரேட் பாலிடிக்ஸ் நம்ம ஊரு பாலிடிக்சை விட கேவலமா இருக்கும்”
ஸ்ரீநயனியின் பேச்சை முன்பு போலவே ரசித்த நித்திலா இடுப்பைத் தேய்த்தபடி நின்ற நண்பனை அவளிடம் அறிமுகப்படுத்தினாள்.
“இவன் என்னோட ஃப்ரெண்ட் விக்ரம்”
“அட நம்ம அலர்ட் ஆறுமுகம்… ஹாய் எப்பிடி இருக்கிங்க?”
ஸ்ரீநயனி கிண்டலாக விசாரிக்க நித்திலா சிரித்தாள். விக்ரம் வலித்த இடுப்பை நொந்தபடி நின்றவன் அவளை முறைத்தான்.
“உன் நாத்தனார்ல, அதான் லொல்லு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு”
“அப்பவும் உங்களை விட கம்மி தான்”
“எனக்கு லொல்லா? மரியாதையா ஏர்போர்ட்ல இருந்து ரிசீவ் பண்ணி இங்க கூட்டிட்டு வந்ததுக்கு என்னை இடிச்சு தள்ளிட்டு ஓடுன உங்களை விட லொல்லு அதிகமாக்கும்?”
இருவரும் விடாமல் வாதிடுவதைப் பார்த்து சிரித்த நித்திலா ஸ்ரீநயனிக்குத் தேநீர் தயாரிக்கப் போய்விட்டாள்.
ஸ்ரீநயனி தன்னிடம் தனியாகச் சிக்கிக்கொண்ட விக்ரமை மேலும் கீழுமாகப் பார்த்தாள்.
அவனுக்கோ புதிதாய் அறிமுகமானப் பெண்ணின் குறுகுறு பார்வையில் கூச்சம் வந்துவிட்டது.
ஸ்ரீநயனி அவனருகே வந்தவள் “எங்க அண்ணிய கல்யாணம் பண்ணிக்கனும்னு டிசைட் பண்ணிருந்திங்களாமே” என்று கேட்க
“ஆமா! நித்திலா தான் கல்யாணம் பண்ணிக்கலாமா விக்கினு கேட்டா” என்றான் அவன்.

“ஓ! அப்ப யார் வந்து கல்யாணம் பண்ணிக்கலாமா விக்கினு கேட்டாலும் நீங்க ஓ.கே சொல்லிடுவிங்களா?”
விழிகள் விரிய அப்பாவி போல கேட்டவள் தன் வாயைப் பிடுங்கி வார்த்தைகளை வர வைக்கப் பாக்கிறாள் என்பது விக்ரமுக்குப் புரிந்துபோனது.
“ஏன்? எதுக்கு இந்த ரத்தவெறி என் மேல?” அங்கலாய்த்தான் அவன்.
“என்னை ஸ்காமுக்குப் பிறந்த செவன் பாயிண்ட் ஃபைவ்னு சொல்லி திட்டுனிங்கல்ல… மறந்து போச்சா?”
ஒரு மைக்ரோ செகண்டில் ஸ்ரீநயனி வில்லியாக மாறியதைக் கண்டுக்கொண்டான் விக்ரம்.
ஆஹா! இது தான் விசயமா?
“வெளிநாட்டு நம்பர்ல இருந்து கால் வந்தா ஸ்காம்னு எங்க டெலிகாம் நெட்வொர்க்ல சொன்னாங்க மேடம்… அதான் அப்பிடி சொன்னேன்”
“ஓ! பை த வே, செவன் பாய்ண்ட் ஃபைவ்னா என்ன?”
ஆர்வம் தாளாமல் விசாரித்தாள் நித்திலா. இதுவரை இப்படி ஒரு வார்த்தையை அவள் கேட்டதில்லை. விக்ரமோ அவளுக்குப் புரியாததை விளக்கும் ஆசிரியரின் பாவனையில்
“செவன் பாயிண்ட் ஃபைவ்னா தமிழ்ல என்ன?” என்று கேட்க
“ஏழு புள்ளி அஞ்சு” என்றாள் அவள் அமர்த்தலாக.
“ப்ச்! என்னம்மா நீ, கணக்கு பாடம் படிக்காமலா ஆல்பபேட் இன்கார்பரேசன் வரைக்கும் போன?”
‘ஙே’ என விழித்த ஸ்ரீநயனிக்கு சட்டென பொறி தட்ட “ஏழரை… நீ என்னை ஏழரைனா சொன்ன? நான் என்ன சனியனாய்யா? என்னமோ நீ பெத்து பேர் வச்ச மாதிரி ஏழரைனு சொல்லி திட்டிருக்க? உன்னைலாம் இடிச்சிருக்கக்கூடாது… வேம்பயர் மாதிரி கடிச்சிருக்கணும்” என தாம் தூமென குதிக்க ஆரம்பித்தாள்.
விக்ரம் அவளை அமைதியாகும்படி கையமர்த்தினான்.
“பொறுமை! பொறுமை சாமி! எங்க மம்மி சனி, சனியன்ங்கிற வார்த்தையெல்லாம் சொல்லக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா வார்ன் பண்ணிருக்காங்க… அதான் இண்டேரக்டா சொன்னேன்… ஸ்காம் கால்னு நினைச்சதும் சனியனே திட்டாம கண்ணே கண்மணியேனு கொஞ்சவா முடியும்? கூல் மேடம்”
ஸ்ரீநயனி அவன் சொன்ன விளக்கத்தில் கொஞ்சம் சமாதானமானாள். நித்திலாவும் தேநீர் கோப்பைகளோடு வந்தாள். விக்ரமுக்கும் ஸ்ரீநயனிக்கும் கொடுத்தவள்
“நயனி விக்கியும் உன்னை மாதிரியே டீ டெவில்… சம்மர்ல கூட சுடச்சுட டீ குடிப்பான்” என்றாள் கிண்டலாக.
அப்படியா என்பது போல பாவனை செய்துவிட்டு தேநீரை அருந்தியவள் பேச்சோடு பேச்சாக மொபைல் வழியே என்ன ஸ்காம் செய்துவிடுவார்கள் என விசாரித்தாள் அவனிடம்.
“என்னங்க மொபைல் நெட்வொர்க் கம்பெனி வச்சிருக்கிங்க… இது கூட தெரியாதா? இப்பல்லாம் மொபைலுக்கு ஃபாரீன் நம்பர்ல இருந்து கால் வருது, இல்லனா லோன் குடுக்குறோம்னு மெசேஜ் வருது… அந்த மெசேஜ்ல உள்ள லிங்கை க்ளிக் பண்ணிட்டோம்னா என்னென்னமோ பேஜ் ஓப்பன் ஆகி குளோஸ் ஆகிடும்… அடுத்து கொஞ்சநேரத்துல நம்ம வாட்சப்புக்கு மெசேஜ் வருது… நீ மட்டும் நாங்க கேக்குற பணத்தை தரலனா உன் போட்டோவையும் உன் கான்டாக்ட்ல இருக்கிற லேடீஸ் போட்டோவையும் வச்சு கிங்கிலி பிங்கிலி பண்ணி நெட்ல போட்டுருவோம்னு மிரட்டுவாங்க… நம்மாளுங்க மானம் மரியாதைக்குப் பயந்து பணத்தைக் குடுத்துடுறாங்க” என விவரித்தான் விக்ரம்.
“கிங்கிலி பிங்கிலியா? அடுத்த கோட்வேர்டா?”
“மார்ஃபிங் செய்யுறதை இன்டேரக்டா சொன்னேன்ங்க”
“எதுக்கு சார் கோட்வேர்ட் பேசி குழப்புறிங்க? வீ ஆர் அடல்ட்ஸ்… வொய் டோண்ட் வீ டாக் ஓப்பன்லி?”
“அஃப்கோர்ஸ்”
அமர்த்தலாக தோளைக் குலுக்கினான் விக்ரம்.
இருவரும் பேசிக்கொண்டிருக்கையிலேயே தனது உடமைகளை எடுத்து வைத்துவிட்டாள் நித்திலா. அன்று மாலை விமானத்தில் அவளும் ஸ்ரீநயனியும் சென்னைக்குக் கிளம்பவிருக்கிறார்கள்.
ஆம்! ஸ்ரீநயனி அவளிடம் விவரித்த திட்டத்தின் ஒருபகுதியாக நித்திலா சென்னைக்குச் செல்லவிருக்கிறாள். அதுவும் சாகர் நிவாசுக்கு!
போகவே கூடாதென தீர்மானித்த இடம் தான். ஆனால் அம்ரித்தை மீண்டும் தன்னோடு அழைத்து வர வேறு மார்க்கம் தெரியவில்லையே!
அம்ரித்தை அழைத்து வருவது மட்டும் அவள் நோக்கமில்லை. இனியொரு முறை நித்திலாவிடமிருந்து அம்ரித்தை பிரிக்கும் தைரியம் கிருஷ்ணராஜசாகருக்கு வரக்கூடாதென எச்சரிக்க வேண்டும்.
அவன் செய்த கேவலமான காரியத்திற்கு நாக்கை பிடுங்குவது போல நறுக்கென நான்கு கேள்விகள் கேட்கவேண்டும். இம்முறை அவன் விளையாடியது அவளது பலகீனத்தோடு. இப்படியே விட்டால் நித்திலா என்பவளை இஷ்டத்துக்கு அடக்கிவைக்கலாம் என்ற தப்பெண்ணம் அவனுக்கு வந்துவிடக்கூடும்!
மாலையில் விமானம் ஏற்றுவதற்காக சாவித்திரியும் விக்ரமும் வந்தனர்.
சாவித்திரி நித்திலாவிடம் பொறுமையாக இருக்கும்படி வேண்டிக்கொண்டார். அனைத்து இடத்திலும் கோபப்படும் அவசரக்காரி இல்லை நித்திலா என்பதை அறிந்தவர் அவர். இருப்பினும் தாய்ப்பாசத்தால் அவள் இயல்பை மீறி நடப்பதை சமீப நாட்களில் கண்ணுற்றதால் இந்த அறிவுரையை வழங்கினார்.
இரு பெண்களும் விமானமேறி சென்னைக்கு வந்து சேர்ந்தபோது இரவாகிவிட்டது.
ஸ்ரீநயனி மட்டும் வருவாளென்ற எண்ணத்தோடு காரை விமானநிலையத்துக்கு அனுப்பியிருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
ஓட்டுனருக்கு நித்திலாவைக் கண்டதும் திகைப்பு. சின்ன முதலாளியின் மனைவி இத்தனை நாட்கள் கழித்து வீட்டுக்குத் திரும்பி வருகிறாள் என்ற ஆச்சரியம்.
அதே ஆச்சரியத்தோடு சாகர் நிவாசுக்குக் காரை கொண்டு வந்தவர் தரிப்பிடத்தில் இறங்கி கார்க்கதவைத் திறந்துவிட்டார்.
நித்திலா அவரிடம் ஏதோ கூறிவிட்டு ஸ்ரீநயனியோடு சாகர் நிவாசுக்குள் அடியெடுத்து வைத்தாள்.
கிட்டத்தட்ட நான்காண்டுகள் கழித்து இங்கே வருகிறாள்! வீட்டுக்குள் வரும் போதே பழைய நினைவுகள் மனதில் ஆக்கிரமித்தன. அவை தன்னை பலவீனமாக்குவதற்குள் தலையை உலுக்கி விரட்டியடித்தாள் நித்திலா.
அம்ரித் மேல்தளத்திலிருந்து ஓடிவந்தவன் ஹாலில் நின்று கொண்டிருந்த நித்திலாவைக் கண்டதும் உற்சாகம் கரைபுரண்டோட “நித்திம்மா” என்று கூவியபடி ஓடோடி வந்தான்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் கழித்து மைந்தனைக் கண்ட நித்திலா அவனை கண்ணீர் மல்க தூக்கிக்கொண்டாள்.
கன்னங்களில் முத்தமழை பொழிந்தவள் “நித்திம்மா உனக்குச் சர்ப்ரைஸ் குடுக்குறதுக்காக வந்தேன் அம்ரு” என்க
“அப்ப நீங்க போயிடுவிங்களா? இங்கயே இருங்க நித்திம்மா… நீங்க நான் டாடி எல்லாரும் இங்கயே இருப்போம்” என்றான் அவன் ஆசையோடு.

நித்திலா நிராசையோடு ஸ்ரீநயனியை ஏறிட்டாள். அவளுக்கு அண்ணியின் நிலை வருத்தத்தைக் கொடுத்தது. எடுத்ததும் மலையை உடைக்க முடியாதல்லவா! ஆறுதலாக அண்ணியின் கையை அழுத்தி தைரியம் கொடுத்தாள் ஸ்ரீநயனி.
அம்ரித் சென்று வெகுநேரமாகியும் வரவில்லையே என கேம் விளையாடிக்கொண்டிருந்த கிருஷ்ணராஜசாகர் கீழ்த்தளத்திற்கு விரைந்தான்.
அதே நேரம் நர்மதாவோடு தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஆனந்த்சாகரும் வீட்டுக்குள் அவரோடு நுழைந்தார்.
மூவரும் ஒரே நேரத்தில் வீட்டின் நடுஹாலில் அம்ரித்தோடு நின்று கொண்டிருந்த நித்திலாவைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
நித்திலா தன் வீட்டிற்கு வரவே மாட்டாள் என அழுத்தமாக நம்பிய கிருஷ்ணராஜசாகருக்குத் தான் அதிர்ச்சி அதிகம்.
பெரியவர்களுக்கு என்னவோ ஆனந்த அதிர்ச்சி தான்.
ஸ்ரீநயனியும் தனது குடும்பத்தைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் மல்க நின்றாள்.
அங்கே நிலவிய அமைதியை உடைத்தவள் நித்திலா தான்.
“நல்லா இருக்கிங்களா அங்கிள்? பிசினஸ்லாம் நல்லபடியா போகுதா?”
மாமனாரிடம் வெகு இலகுவாக விசாரித்தவள் தப்பித்தவறி கூட மாமியார் பக்கம் திரும்பவில்லை. நர்மதாவும் மகளை ஓடி வந்து அணைத்தாரே தவிர நித்திலாவிடம் நெருங்கவில்லை.
ஆனந்த்சாகருக்கு மருமகள் அங்கே வந்ததில் மகிழ்ச்சி.
“இப்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன்மா… நம்ம ஃபேமிலி இப்ப தான் கம்ப்ளீட் ஆகிருக்கு” என்றவர் பழைய சம்பவங்களைப் பேசுவதற்கு தடையுத்தரவு பிறப்பித்தார்.
மைந்தனிடம் நித்திலாவை அவனது அறைக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார் அவர்.
நித்திலா பொறுமையாக வருவாளென அவன் தானே அவரிடம் கூறியிருந்தான்.
ஓட்டுனர் நித்திலாவின் உடமைகளைக் கொண்டு வர அதை கிருஷ்ணராஜசாகரின் அறையில் வைக்கும்படி பணித்தார் ஆனந்த்சாகர்.
நித்திலாவின் பார்வை கிருஷ்ணராஜசாகரின் திகைத்த உடல்மொழியைக் கேலியாக வலம் வந்தது.
அம்ரித்தை ஆனந்த்சாகரிடம் ஒப்படைத்துவிட்டு அவனைக் கேட்காமல் மாடிப்படியேறினாள் அவள்.
நர்மதா மைந்தனை போகும்படி கூறியவர் மகளைத் தன்னோடு அழைத்துச் சென்றார். ஆனந்த்சாகர் பேரனோடு மனைவியையும் மகளையும் தொடர அவரது மகனோ வேகமாக நித்திலாவைத் தொடர்ந்து படிகளில் ஏறினான்.
நித்திலா மனதில் தோன்றிய பழைய ஞாபகங்களைச் சிரமத்தோடு ஒதுக்கித் தள்ளிவிட்டு ஒரு காலத்தில் அவர்களின் உலகமாக இருந்த அறைக்குள் நுழைந்தாள். பணியாள் ஒருவர் உடமைகளை வைத்துவிட்டுச் சென்றதும் உள்ளே வந்தான் கிருஷ்ணராஜசாகர்.
அங்கே இருந்த சோபாவில் சாவகாசமாக சரிந்து அமர்ந்திருந்த நித்திலாவிடம் விரைந்தவன் அவளது கையைப் பற்றி முரட்டுத்தனமாக எழுப்பினான்.
“அன்னைக்கு அவ்ளோ பேசுன… இப்ப எதுக்கு என் வீட்டுக்கு வந்திருக்க? என் மகனை என்னை விட்டுப் பிரிக்கலாம்னு ப்ளான் பண்ணி வந்திருக்கியா? சொல்லுடி”
கோபம், இயலாமை, பயம் மூன்றும் கலந்த குரல் அது! பயப்படாமல் இருக்கமுடியுமா என்ன?
அவனது கரம் முழங்கையை இறுக்கமாகப் பற்றிய விதத்தில் வலியெடுத்தது நித்திலாவுக்கு. வலியைப் பொறுத்துக்கொள்ளாதவளாக கையை உதறி அவனிடமிருந்து விலக்கிக்கொண்டவளின் கண்களில் அத்துணை கோபம்!
கிருஷ்ணராஜசாகரின் கோபத்தை விட பன்மடங்கு வீரியமான கோபத்தோடு பளாரென அவனது கன்னத்தில் அறைந்தாள் நித்திலா.
அறைந்ததோடு நிற்காமல் வெறுப்போடு அவனது சட்டைக்காலரைப் பற்றியவள்
“யூ ராஸ்கல்! எனக்கு மறுபடியும் கேன்சர் வந்துடுச்சுனு சீப்பா கேம் ப்ளே பண்ணி என் பிள்ளைய என் கிட்ட இருந்து பிரிச்சவன் நீ… இன்னொரு வார்த்தை பேசுன, உன்னை என் கையால கொன்னு போட்டுருவேன்” என்றாள் கோபம் அடங்காமல்.

கிருஷ்ணராஜசாகருக்கு அவள் தன்னை அறைந்ததில் வந்த ஆத்திரத்தை விட இவளுக்கு உண்மை எப்படி தெரிந்தது என்ற திகைப்பே அதிகம்!
பெண்கள் மென்மையானவர்கள் என யாரெனும் இனி அவனிடம் உளறினார்கள் என்றால் இதோ இப்போது நித்திலா அறைந்தாளே அதே போல அறைந்தே அவர்களைக் கொன்றுவிடுவான்.
ஏனெனில் நித்திலா அறைந்ததில் கன்னத்தில் அவ்வளவு வலி. கைவிரல்களை மடக்கி முஷ்டியாக்கி கன்னத்தில் இடித்து வலியைச் சமாளித்தான்.
தன்னெதிரே காளி ரூபம் எடுத்தவளைப் போல நின்றவளைக் கேலியாகப் பார்த்தவன்
“சோ நான் பண்ணுன எல்லாத்தையும் நீ கண்டுபிடிச்சிட்ட… குட்… இப்ப இங்க எதுக்கு வந்திருக்க? அம்ருவ உன் கூட அழைச்சிட்டுப் போகவா? இல்லனா உன்னோட மரணபயத்தோட விளையாடிப் பாத்த என்னை பழிவாங்கவா? உன்னால இந்த ரெண்டையும் பண்ண முடியாது நித்திலா… இதெல்லாம் செய்யணும்னா நீ என்னை மாதிரி எந்த இடியட்டிக் செண்டிமெண்டும் இல்லாத பிறவியா இருக்கணும்… அன்பார்சூனேட்லி ஒரு எறும்பு தண்ணில தத்தளிச்சா கூட இலைய தூக்கிப் போட்டு காப்பாத்துற அளவுக்கு நீ இளகுன மனச்சுக்காரி… இந்த லெச்சணத்துல நீ என்னைக் கொலை வேற பண்ணப்போறியா? உன் முன்னாடி தானே நிக்குறேன், எங்க கொன்னு தான் பாரேன்” என சவால் விட்டான்.
ஏற்கெனவே கண்மண் தெரியாத கோபத்தில் இருந்தவள் அவனது சவாலில் சீண்டப்பட்டாள்.
மீண்டுமொரு முறை அவனது கன்னத்தைப் பதம் பார்க்கும் வெறியோடு கையை ஓங்கியவள் ஓங்கிய கரத்தைக் கிருஷ்ணராஜசாகர் இறுக்கமாகப் பற்றி இறக்கி முதுகோடு சேர்த்து முறுக்கிப் பிடிக்கவும் வலியில் முகம் சுளித்தாள்.
கிருஷ்ணராஜசாகர் அவள் பின்னே நின்றவன் முறுக்கிய கையை விடாமல் காதோரம் பேசினான்.

“எதுவுமே ஒரு தடவை தான் தவறும் நித்தி… நீ இஷ்டத்துக்கு அடிச்சிக்கனு நான் கன்னத்தைக் காட்டிட்டு நிப்பேனா? நினைச்சதும் கை ஓங்குற இந்தப் பழக்கம் எப்ப வந்துச்சு உனக்கு? ஆபரேஷன் பண்ணுன உடம்பாச்சேனு இரக்கப்பட்டா நீ என் கன்னத்தையே டார்க்கெட் பண்ணுற பாத்தியா?”
“இப்ப நீ என் கையை விடப்போறியா இல்லையா? வலிக்குதுடா”
“மரியாதை மரியாதை… நான் உன்னை விட பெரியவன்”
“நீ பண்ணுன கேவலமான காரியத்துக்கு மரியாதை ஒன்னு தான் குறைச்சல்… பெத்த பிள்ளைய அம்போனு விட்டுட்டுப் போயிடுவோமோனு நான் துடிச்ச துடிப்பு எனக்குத் தான் தெரியும்… உனக்கு அம்ரு வேணும்ங்கிறதுக்காக நீ என்னை மரணபயத்துக்கு ஆளாகி ரசிச்சிருக்க… இந்தக் காட்டுமிராண்டித்தனத்துக்கு நீ என்ன பதில் சொல்லப்போற?”
வேதனையோடு சொன்னவள் மீண்டும் ஒருமையில் விளித்து வைக்க கிருஷ்ணராஜசாகர் அவளது கரத்தை விடுவித்தான்.
நித்திலா அவன் முறுக்கியதில் சிவந்து வலித்த கரத்தைத் தடவிக்கொண்டவள்
“எந்த செண்டிமெண்டும் இல்லனு சொல்லுறவனுக்கு மகன் மேல மட்டும் பாசம் வருதா? அம்ரு நான் கூப்பிட்டா வரமாட்டான்ங்கிற தைரியத்துல நீ ஆடுறல்ல… உன் கண் முன்னாடியே நான் அவனை என் கூட சிம்லாவுக்கு அழைச்சிட்டுப்போவேன்… நான் அன்னைக்கு மரணபயத்துல அனுபவிச்ச வேதனைய விட ஆயிரம் மடங்கு வேதனைய உனக்கு நான் குடுப்பேன்… இது நடக்கும்” என்றாள் சவால் விடும் தொனியில்.
கிருஷ்ணராஜசாகர் செவிமடலைத் தேய்த்தான்.
“முடிஞ்சா செஞ்சு காட்டுடி… இப்ப ஓரமா போ… நானும் அம்ருவும் பாதில விட்ட கேமை முடிக்கணும்”
அலட்சியமாகச் சொல்லி அவளை விலக்கி நிறுத்திவிட்டுச் சென்றான் கிருஷ்ணராஜசாகர்.
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction

