“சிங்கத்தின் தலைமையின் கீழ் இருக்கும் கழுதையும் ஜெயித்து விடும். கழுதையின் தலைமையின் கீழ் இருக்கும் சிங்கமும் தோற்றுவிடும்”
-சாணக்கியர்
முற்போக்கு தமிழக விடுதலை கட்சியின் தலைமை அலுவலகம்…
கட்சித்தலைவரும் தமிழக முதல்வருமான வீரபாண்டியனும் கட்சியின் பொதுச்செயலாளர் செங்குட்டுவனும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர்.
எல்லாம் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை தான்.
“தலைவரே தென் மாவட்டங்கள்ல ஜெயிக்கணும்னா கண்டிப்பா சாதி கட்சிகளோட நம்ம வச்சுக்கிட்ட கூட்டணிய முறிச்சிக்க முடியாது… கோவை பக்கம் நம்ம கட்சிக்கு இருக்குற செல்வாக்கு தலைநகரத்துல இருந்துட்டா நம்ம தான் இந்த எலக்சன்லயும் தனிப்பெரும்பான்மையோட ஜெயிப்போம்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
மாவட்ட வாரியாக ஜெயிப்பதற்கான சூட்சுமங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த நேரத்தில் வீரபாண்டியனின் தனிப்பட்ட உதவியாளர் கையில் கோப்பு ஒன்றினை ஏந்தியபடி அவ்வறைக்குள் நுழைந்தார்.
“வணக்கம் சார்! உளவுத்துறை ஐ.ஜி குடுத்த ரிப்போர்ட் இது தான்… இப்ப தான் சி.எம் ஆபிஸ்ல இருந்து குடுத்து விட்டாங்க”
பொதுவாக ஆளுங்கட்சியினர் அரசியல் நிகழ்வுகளைக் கண்காணிக்கவும், மக்கள் மத்தியில் தங்களுக்கு இருக்கும் செல்வாக்கை அறிந்துகொள்ளவும் உளவுத்துறையைப் பயன்படுத்துவது தமிழக அரசியலில் சகஜம் தான்! அதற்கு வீரபாண்டியன் மட்டும் விதிவிலக்கா என்ன?
எதிர்கட்சி தலைவரான சுந்தரமூர்த்தி இருந்தவரையில் வீரபாண்டியனுக்குச் சிம்மச்சொப்பனமாக இருந்தார் என்பது தமிழக அரசியல் அறிந்த உண்மை! அவருடன் அரசியல் களத்தில் இறங்கி பணியாற்றிய ஆதித்யன் அவர்களது கட்சியின் இளைஞரணியை வலுவாக்கிய போதே உளவுத்துறை எச்சரித்தது!
“இப்பிடியே போனா யூத் ஓட்டு ஃபுல்லா அவங்களுக்குத் தான்… அதோட அந்த கட்சியோட ஐ.டி விங் சோஷியல் மீடியால ராப்பகலா வேலை செய்யுறாங்க… த.மு.க கட்சினா என்னனு தெரியாதவங்க கூட அவங்க கட்சிக்கு வச்சிருக்குற ஃபேஸ்புக் பேஜ், குரூப்ப ஃபாலோ பண்ணுறாங்க… அங்க ஷேர் பண்ணுற மீமை லைக் பண்ணுறாங்க… ட்விட்டர்லயும் அவங்க ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்காங்க… போற போக்கை பாத்தா அப்கமிங் எலக்சன் அவங்களுக்குச் சாதகமா தான் இருக்கும்”
சுந்தரமூர்த்தியும் ஆதித்யனும் அகால மரணமடைவதைற்கு ஒரு வாரகாலத்திற்கு முன்னர் உளவுத்துறை ஐ.ஜி மரியாதைநிமித்தம் சந்திக்கிறேன் என்று பெயர் பண்ணிக்கொண்டு பூங்கொத்தோடு சேர்த்து இத்தகவலையும் வீரபாண்டியனின் காதில் போட்டுவிட்டுத் தான் சென்றிருந்தார்.
அவர்கள் மரணத்தகவல் கிடைத்ததும் வீரபாண்டியன் ஆசுவாசமுற்றது என்னவோ உண்மை! அரசியல் நாகரிகம் கருதி சுந்தரமூர்த்தியின் உடல் தகனம் செய்யப்படும் நாளன்று அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்தாலும், அவருக்கு இறுதியஞ்சலி செலுத்த தஞ்சாவூருக்கே சென்றாலும் வீரபாண்டியனுக்குள் இருந்த அரசியல்வாதி தந்தை மகன் இருவரின் மரணத்திலும் குதூகலிக்கத் தான் செய்தார்.
இனி த.மு.க கட்சி வலுவிழந்து போகுமென எண்ணியிருந்த சமயத்தில் தான் எதிர்பாராது நிகழ்ந்தது அருள்மொழியின் அரசியல் பிரவேசம்! அது முற்போக்கு தமிழக விடுதலை கட்சிக்குள் மட்டுமன்றி தமிழ்நாட்டு அரசியலிலும் அதிர்வலையை உண்டாக்கியது.
அதிலும் அருள்மொழி தனது தந்தையின் மறைவால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லுவதற்காக மேற்கொண்ட நடைப்பயணம் அவனை காட்சிக்கு எளியனாக மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்து விட்டது.
அதோடு விட்டானா அவன்! கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் ஆளுங்கட்சி அவர்களின் ஆட்சிக்காலத்தில் கட்டுப்படுத்த தவறிய விலைவாசியைப் பற்றி அவ்வபோது கண்டன அறிக்கை வெளியிடுவது, சட்டமன்ற உறுப்பினர்களை வைத்து மாவட்டவாரியாக போராட்டங்களை முன்னெடுத்தது முதற்கொண்டு இப்போது அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தியைத் தெரிந்து கொள்ள தமிழக மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பது வரை அவன் செய்து வரும் காரியங்கள் அனைத்துமே வீரபாண்டியனின் முதல்வர் நாற்காலிக்கு வேட்டு வைக்கும் காரியங்களே!
வீரபாண்டியன் உதவியாளரிடமிருந்து கோப்பினை வாங்கி மேலோட்டமாக வாசித்தவர் அவரையே அதை மீண்டும் அவரிடம் அளித்து முழுவதுமாக வாசித்து அதன் பொருளடக்கத்தைக் கூறும்படி கேட்டார். உதவியாளரும் கோப்பினை கவனமாக வாசித்து அதன் சாராம்சத்தை கூற ஆரம்பித்தார்.
“எலக்சனுக்கு இன்னும் ஐந்து மாசம் தான் இருக்குற சூழல்ல ஆப்போசிசன் தரப்பு மேல மக்களுக்கு ஒரு ஈர்ப்பு வந்திருக்கு… அதுக்குக் காரணம் அருள்மொழியோட செயல்பாடுகள்… யங் அண்ட் எனர்ஜெட்டிக் பொலிடீசியனை இது வரைக்கும் பாத்து பழகாத தமிழ்நாட்டு மக்களுக்கு அவரோட செயல்பாடுகள் ரொம்ப பிடிச்சிருக்கு… அதோட மக்கள் குறைய கேக்குறதுக்கு தமிழ்நாடு முழுக்க அவர் மேற்கொண்டிருக்குற சுற்றுப்பயணத்தோட முடிவு அவருக்குத் தான் சாதகமா வரும்… ஏன்னா ஓட்டு போட்டதுக்கு அப்புறம் தொகுதியை மறக்குற அரசியல்வாதிகள மட்டுமே பாத்து பாத்து சலிச்சு போன மக்களுக்கு எம்.எல்.ஏ பதவி கூட இல்லாத ஒருத்தர் நேர்ல வந்து தங்களோட பகுதி குறைகள கேக்குறது ரொம்ப பிடிச்சிருக்கு… இதோட விளைவு ஆளுங்கட்சிக்கு அப்கமிங் எலக்சன்ல பெரிய அடிய குடுக்கும்”
உதவியாளர் கோப்பினை முழுவதுமாக வாசித்து அதன் சாராம்சத்தைச் சுருக்கமாக சொல்லி முடிக்கையில் வீரபாண்டியன் சிந்தனைவயப்பட்டிருந்தார்.
சிந்தனையின் முடிவில் “சின்னப்பய தானே, அரசியல் சூட்சுமம் தெரியாம பத்தாவது நாள் ஓடிருவான்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன்யா… இவன் வெவகாரமான ஆளு தான்… இன்னும் தேர்தல்ல ஜெயிக்கல, எம்.எல்.ஏ ஆகல… அரசியல்ல முப்பது நாள் குழந்தை அவன்… இப்போவே அவனோட செயல்பாடு நம்ம கட்சிக்கு அடி விழ வைக்கும்னா அவனைத் தட்டி உக்கார வைச்சே ஆகணும்” என்றார் அவர்.
செங்குட்டுவனும் அதை ஆமோதித்தவர் “இப்ப அவன் மேலயும் அவன் கட்சி மேலயும் உருவாயிருக்குற இந்த இமேஜை உடைக்கணும் தலைவரே! அதுக்கு ஆயிரம் வழி இருக்கு” என்று சொல்லி தந்திரமாய் சிரித்தார்.
அந்த இரு பழுத்த அரசியல்வாதிகளின் குறுக்குப்புத்திகள் இணைந்து திட்டம் தீட்டத் துவங்கின.
அரசியலில் நல்லவர் கெட்டவர் என்று யாருமில்லை. அரசு அதிகாரம் கையிலிருக்கும் மமதையில் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகள் அவர்கள் ஆளுங்கட்சியாக இருக்கும் தருணங்களில் பூசி மெழுகப்படும். ஆனால் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தால் முதலில் அரங்கேறுவது என்னவோ கடந்த ஆட்சியில் பரணில் ஏறிய அரசியல்வாதிகள் மீது பல்வேறு தரப்பினர் அளித்திருந்த புகார்களையும் தொடுத்திருந்த வழக்குகளையும் தூசு தட்டும் பணியே!
இம்மாதிரி காரியங்களுக்கு சுந்தரமூர்த்தி ஒன்றும் விதிவிலக்கானவர் அல்ல! அவரது கடந்த ஆட்சிக்காலத்தில் அவரும் பதவியைப் பயன்படுத்தி சில ஆதாயங்களை அடைந்திருந்தார். அந்த ஆதாயங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகார்கள் அப்போது கிடப்பில் போடப்பட்டது. அதை தான் இப்போது வீரபாண்டியன் குழுவினர் தூசி தட்டப் போகின்றனர்.
அவர்களுக்கு அருள்மொழியைத் தட்டி வைக்க கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள தயாராகி விட்டனர்.
அதே நேரம் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அருள்மொழிக்கு அவனது தமக்கையிடமிருந்து அழைப்பு வந்திருந்தது. அன்றைய தினம் கன்னியாகுமரி மாவட்டத்தில் முகாமிட்டிருந்தவன் காலை முதல் மதியம் வரை அலைந்து திரிந்து மக்களைச் சந்தித்ததில் களைத்திருந்தான்.
அவனுக்கென ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உதவியாளன் அஜய் தான் யாழினியின் மொபைல் அழைப்பை அவனுக்குத் தெரிவித்தான்.
ஹோட்டல் அறைக்குத் திரும்பியதும் யாழினியின் மொபைலுக்கு அழைத்த அருள்மொழிக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது.
“அருள் இன்னைக்கு எல்.ஜே.பி தரப்புல இருந்து ஒரு ஆர்டர் வந்திருக்கு”
எல்.ஜே.பி அதாவது லோக் ஜனதா கட்சி அது தான் அவர்களுடன் கூட்டணி வைத்திருக்கும் தேசிய கட்சி. மத்தியில் ஆட்சியிலிருப்பவர்களும் அவர்கள் தான்! அவர்களிடமிருந்து அப்படி என்ன கட்டளை வந்திருக்கும் என்ற யோசனையுடன் தமக்கையிடம் வினவினான் அருள்மொழி.
“நீ பாலிடிக்ஸ்ல எடுத்து வைக்கிற மூவ்ஸ் அவங்களுக்குப் பிடிக்கலயாம்… உன்னோட சுற்றுப்பயணத்த இதோட நிறுத்திடணும்னு சொல்லுறாங்க”
அருள்மொழிக்கு அவர்களது கட்டளை விசித்திரமாகத் தோன்றவும் “இதுல அவங்க ஆர்டர் போடுறதுக்கு என்ன இருக்கு அக்கா? நம்ம கட்சி வேலைய நம்ம ஸ்டேட்ல செய்யுறதுக்கு இவங்க எப்பிடி தடை சொல்லலாம்? முதல்ல ஏன் சுற்றுப்பயணத்த நிறுத்த சொல்லுறாங்க?” என்று வினவினான்.
மறுமுனையில் யாழினியோ “அப்பாவும் ஆதியும் போனதுக்கு அப்புறம் நம்ம கட்சி தடுமாறும், நமக்கு உதவி பண்ணுற மாதிரி நம்ம கட்சிய கபளீகரம் பண்ணி அவங்களோட காலை தமிழ்நாட்டுல ஊனணும்னு நினைச்சவங்களுக்கு உன்னோட ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதிர்ச்சியா இருந்திருக்கு அருள்… அதோட இப்ப மக்களும் உன்னை பத்தி அங்கங்க பேச ஆரம்பிச்சிட்டாங்க… உனக்கே தெரியும், தமிழ்நாட்டுல தேசிய கட்சிகள் ஜெயிக்கணும்னா மாநில கட்சிகளோட தயவு அவங்களுக்குக் கட்டாயம் வேணும்… அப்பாவும் ஆதியும் இல்லாத நேரத்துல அவங்க கட்சிய தமிழ்நாட்டுல ஸ்ட்ராங் ஆக்க நம்ம கட்சிய யூஸ் பண்ணிக்க நினைச்சாங்க… ஆனா அதுக்கு முன்னாடி நம்ம கட்சி தடுமாறாம அடுத்த தலைமையா உன்னை செலக்ட் பண்ணி இன்னும் பலமானதால அவங்களுக்குப் புகைச்சல்… அதோட வெளிப்பாடு தான் இந்த ஆர்டர்” என்று நீண்ட விளக்கம் அளித்தாள்.
அருள்மொழிக்கு அதைக் கேட்டதும் எரிச்சல் மண்டியது. கூட்டணி கட்சியே என்றாலும் தங்கள் உட்கட்சி விவகாரத்தில் எல்.ஜே.பி தலையிடுவது அவனுக்குப் பிடிக்கவில்லை.
“சப்போஸ் இந்த ஆர்டரை நான் மதிக்கலனா என்ன பண்ணுவாங்க?”
“நம்ம கூட வச்சிருக்குற கூட்டணிய முறிச்சிட்டு ஆளுங்கட்சி கூட சேர்ந்துக்குவாங்க அருள்”
அருள்மொழி சில நிமிடங்கள் யோசித்தவன் “சரிக்கா… இத பத்தி நான் கொஞ்சம் யோசிக்கணும்… பை த வே, இந்த விவகாரத்துல யாரோட தலையீடும் இல்லாம நான் சொந்தமா முடிவெடுக்கணும்னு நினைக்கேன்… ஈவினிங் ப்ரஸ் கான்ஃபரன்ஸ் அரேஞ்ச் பண்ணுறதுக்கு அஜய் கிட்ட சொல்லிடுறேன்… அதுல என்னோட முடிவை அனவுன்ஸ் பண்ணுறேன்” என்றதோடு அழைப்பைத் துண்டித்துவிட்டான்.
சொன்னது போலவே மாலையில் பத்திரிக்கையாளர் சந்திப்பை கூட்டியவன் அவர்களிடம் தமிழக முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவராக அறிவிப்பொன்றை வைத்தான்.
“மத்தியில் ஆட்சியில் இருக்கும் லோக் ஜனதா கட்சியுடனான கூட்டணியிலிருந்து தமிழக முன்னேற்ற கழகம் விலகுகிறது. கட்சியின் தலைவராக உயர்மட்டக்குழுவினர் மற்றும் மூத்த பிரமுகர்களிடம் ஆலோசித்த பிற்பாடு ஆழ்ந்து யோசித்து நான் எடுத்த முடிவு இது”

பத்திரிக்கையாளர்கள் பரபரப்பான செய்தி கிடைத்த மகிழ்ச்சியில் இன்னும் நான்கு கேள்விகளைக் கேட்டு வைத்தனர். அருள்மொழியும் அசராமல் பதிலளித்தான்.
“எதனால இந்த கூட்டணி முறிவு முடிவு?”
“மாநில சுயாட்சினு ஒரு வார்த்தை சொல்லுவாங்க… அத ஆட்சில இருக்குறப்ப மட்டுமில்ல, எதிர்கட்சியா இருக்குறப்பவும் பின்பற்றுறவங்க தான் எங்க கட்சியினர்… அதாவது மாநில அளவில் நாங்க எடுக்குற எந்த முடிவுலயும் மத்தியில் ஆட்சியில் இருக்குற எங்க கூட்டணி கட்சி தலையிடக்கூடாது… தலையிடவும் முடியாது… அப்படி செய்ய முற்பட்டதால எடுத்த முடிவு தான் இந்த கூட்டணி முறிவு”
“இந்த முடிவோட பாதிப்பு நாடாளுமன்ற தேர்தல்ல எதிரொலிக்குமா?”
“கடந்த நாடாளுமன்ற தேர்தல்ல நாப்பதுக்கு நாப்பது ஜெயிச்ச கட்சியோட தலைவர் கிட்ட நீங்க வேற எதாவது கஷ்டமான கேள்விய கேட்டிருக்கலாம்”
அந்தப் பத்திரிக்கையாளர் புன்முறுவல் செய்ய இக்காட்சியைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த வானதியின் புருவங்கள் மெச்சுதலாய் உயர்ந்து இறங்கியது.
தன்னருகே அமர்ந்திருந்த நிதர்சனாவிடம் “பாரேன்… முப்பது நாள்ல இங்கிலீஸ் கத்துக்கிட்டவன் மாதிரி முப்பதே நாள்ல முழு அரசியல்வாதியா மாறி நிக்கிறான் சனா… நாட் பேட், கொஞ்சம் தன்மானமும் இருக்கு… எனி ஹவ், இதோட விளைவு எவ்ளோ மோசமா இருக்கும்னு இந்த தேர்ட்டி டேய்ஸ் பொலிடீசியன் பேபிக்குப் புரியலயே” என்று பரிதாபம் போல காட்டிக்கொண்டு கண்ணிமைகளைக் கொட்டிக் காட்டினாள்.
நிதர்சனா அவள் சொன்ன விதத்தில் பக்கென்று நகைத்தவள் “இத பத்தி யாழினி மேம் உன் கிட்ட சஜசன் கேட்டப்ப நீ சொன்னத தான் அருள் செஞ்சிருக்கான் நதி… ரெண்டு பேருக்கும் சிந்தனை ஒத்து போகுது” என்றாள்.
அதை ஆமோதித்த வானதி “என் ஆசைலாம் ஒன்னே ஒன்னு தான்… அருளோட இந்த முடிவால அவனுக்கு நிறைய பிரச்சனை வரும்… அந்தப் பிரச்சனைக்கு அடிப்படை காரணமா சில மூடி மறைக்கப்பட்ட கேஸ்கள் வெளிய கிளம்பும்… கண்டிப்பா அருளோட ஈகோ அந்த கேஸை கடந்து போக விடாது… அவன் கடந்து போகவும் மாட்டான்… அப்ப தான் நான் நினைச்சது நடக்கும்” என்றவள் அவளது தனிப்பட்ட கோப்பு ஒன்றினை எடுத்து நிதர்சனாவிடம் காட்டினாள்.
“எட்டு வருசமா தேடி தேடி சேர்த்து வச்ச டீடெய்ல்ஸ்… இதுக்குப் பலன் கிடைக்கப் போறத நினைச்சு ஐ ஃபீல் வெரி ஹாப்பி” என்றாள் முகம் விகசிக்க.
நிதர்சனா ஆதுரத்துடன் தோழியை நோக்கியவள் கோப்பின் முகப்புப்பக்கத்தைத் தடவியபடியே
“இத பத்தி அருள் கிட்ட ஒரு வார்த்தை போட்டு வச்சா ஹி வில் ஹேண்டில் திஸ் மேட்டர் இன் பெட்டர் மேனர்” என்கவும் மறுப்பாய் தலையசைத்தாள் வானதி.
“அவன் கிட்ட ஏன் சொல்லணும்? அடுத்து அவனுக்குக் கட்டம் கட்டுவாங்கனு சொல்லி எச்சரிக்க நான் என்ன அவன் கட்சிக்காரியா? இல்லல்ல… எனக்கு என்னோட காரியம் ஆகணும்… அவ்ளோ தான்… ரொம்ப நேர்மையானவளா இத பத்தி அவன் காதுல போட்டு வச்சு அவன் கிட்ட நல்லப்பேர் வாங்குற அளவுக்கு இப்ப இருக்குற வானதி நல்லவ இல்ல… அவன் இந்தப் பிரச்சனைல கஷ்டப்படணும்… அந்தக் கஷ்டம் குடுக்குற வலிய அனுபவிக்கணும்… அப்ப தான் இதுக்குலாம் காரணமானவங்க மேல அவனுக்குக் கோவம் வரும்… அதான் எனக்கு வேணும்” என்றாள் அவள் உற்சாகக்குரலில்.
நிதர்சனா அவளது இந்த ரூபத்தைக் கண்டு வாயடைத்துப் போனாள். இத்தனை ஆண்டுகள் அவளுடன் இருக்கிறாள் தான். கடந்த எட்டாண்டுகளில் அவள் எந்தவித உணர்ச்சிகளுக்கும் இடமில்லாதவளாய் இரும்பாய் இறுகியதை அருகிருந்தே கண்டவள் தான் நிதர்சனா. ஆனால் சற்றும் சம்பந்தமற்ற பிரச்சனையில் அருள்மொழி சிக்காமல் தடுக்கும் வழிகள் அவள் வசம் இருந்தும் அவனிடம் சொல்ல மறுக்கும் இந்த வானதி நிதர்சனாவுக்கு முற்றிலும் புதியவள்!
எப்படி இருந்தவள் என்ற ஒற்றை எண்ணம் கிளறிய ஆற்றாமையை மறைக்காத குரலில்
“இது தப்பு நதி… நம்மளால யாரும் கஷ்டப்படக்கூடாது, வாழ்க்கைல எந்த ஒரு சிச்சுவேசன்லயும் நீதி, நேர்மை தவறி யோசிக்கக்கூடாதுனு சொல்லுறவ நீ… இந்தளவுக்கு நீ மாறுனது எனக்கு ஆச்சரியமா இருக்குடி” என்றாள்.
வானதி அதை கேட்டதும் அடக்கமாட்டாமல் சிரித்தாள்.
“வாட்? நேர்மை, நீதியா? அதுக்குலாம் இப்ப மரியாதை இருக்குதா என்ன? யூ நோ ஒன் திங், சாணக்கியரோட கோட்ஸ் ஒன்னு உண்டு, நேரா இருக்குற மரங்கள் தான் முதல்ல வெட்டுப்படுமாம்; அதே மாதிரி நேர்மையா இருக்குற மனுசங்க தான் முதல்ல பழிக்கு ஆளாவாங்களாம்… நான் இந்த விசயத்துல சாணக்கியருக்குத் தான் சப்போர்ட் சனா” என்று தோளைக் குலுக்கினாள் வானதி.
நிதர்சனாவுக்கு வானதியின் இம்மாற்றம் உவப்பாக இல்லை. அதே நேரம் இம்மாற்றத்திற்கு காரணம் வானதி இல்லை என்பதையும் அவள் அறிவாளே!
மனிதன் என்பவன் வெறும் கற்பாறை மட்டுமே! அவனை நல்லவனாகவோ கெட்டவனாகவோ செதுக்கும் உளியாய் அமைபவை இந்தச் சமுதாயமும் அதன் கட்டமைப்புகளும் தான்! உளி செய்த தவறுக்கு கல்லை பழிப்பது நியாயமாகாது அல்லவா!
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!