“உங்கள் எண்ணங்களில் கவனம் செலுத்துங்கள், அவை தான் வார்த்தைகளாக வெளிவரும். உங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்துங்கள், அவை தான் செயல்களாக மாறும். உங்கள் செயல்களில் கவனம் செலுத்துங்கள், அவையே உங்களது பழக்கங்களாக உருபெறும். உங்கள் பழக்கங்களில் கவனம் செலுத்துங்கள், அவை தான் உங்கள் நடத்தையாக கருதப்படும். உங்கள் நடத்தையில் கவனம் செலுத்துங்கள், ஏனெனில் அது தான் உங்கள் தலைவிதியாக அமையும்”
-மார்கரேட் தாட்சர்
தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் தலைமை அலுவலகம்…
கோயம்புத்தூரிலிருந்து திரும்பி வந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு பிறகு கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தான் அருள்மொழி. வழக்கம் போல அனைத்து மாவட்ட செயலாளர்களும் அவனுக்குப் பூங்கொத்து வழங்கி வரவேற்க முன்பே அறிவித்திருந்த பொதுக்குழுவும் ஆரம்பித்தது.
தேர்தல் தேதி அறிவிப்புக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் வேட்பாளர் தேர்வுக்கு விருப்பமனு கொடுப்பது பற்றிய தலைமையின் கட்டளைகளை மாவட்டச்செயலாளர்களுக்குத் தெரிவிக்கவே இக்கூட்டம் கூட்டம் பட்டிருந்தது.
கூடவே தொகுதி வாரியாக கட்சியின் கொள்கைகளை தொண்டர்கள் எவ்விதம் கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்பது பற்றிய கலந்தாலோசனையும் நடைபெற்றது.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
எல்.ஜே.பியுடனான கூட்டணியைப் பேசி முடித்த ராமமூர்த்திக்குப் பாராட்டுகளை வழங்கினான் அருள்மொழி. அவரும் வாயெல்லாம் பல்லாக அவனது பாராட்டை இரு கரம் கூப்பி ஏற்றுக்கொண்டார்.
கூட்டம் முடிவடைந்ததும் தனது அலுவலக அறைக்குள் புகுந்து கொண்டவன் யாழினியை மட்டும் உள்ளே அனுமதிக்குமாறு சங்கரிடம் கூறியிருக்க அடுத்த சில நிமிடங்களில் அவ்வறைக்குள் பிரவேசித்தாள் யாழினி.
யோசனைவயப்பட்டவனாக அமர்ந்திருந்த அருள்மொழியைப் பார்த்ததும் “என்னாச்சு அருள்? கொஞ்சநாளா நீ நார்மலா இல்லையே? நீ கோயம்புத்தூர்ல இருந்து ரிட்டன் ஆனதும் இங்க வருவனு எல்லாரும் எதிர்பாத்தாங்க… ஆனா நீ மீனவர்களை சந்திக்க சுற்றுப்பயணம் போறேன்னு கன்யாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடினு போயிட்டு ரெண்டு வாரம் கழிச்சு கட்சி ஆபிசுக்கு வர்றேன்னு நேத்து தான் சொன்ன… அதோட பொதுக்குழு கூட்டத்த கூட்ட சொன்ன… உன் மனசுல என்ன தான் ஓடுது அருள்?” என்று வினவினாள்.
அருள்மொழி தமக்கையிடம் வெகு நிதானமாக தனது மனதில் ஓடும் அனைத்தையும் கூறிவிட்டான். அதன் ஆரம்பப்புள்ளி அவனுக்கு நேர்ந்த விபத்துக்குக் காரணகர்த்தா யார் என்பதே! யாழினி இளைய சகோதரன் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள்.
இவனை மருத்துவமனையில் படுக்க வைத்த குற்றவுணர்ச்சி கிஞ்சித்தும் இல்லாது தன்னுடன் சேர்ந்து கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்திய ராமமூர்த்தியை இப்போது முழுவதுமாக வெறுத்தாள் யாழினி.
அருள்மொழி ராமமூர்த்தியின் சதி திட்டத்தை விவரித்தவன் “அந்த மனுசனை ஒன்னுமில்லாம ஆக்குறதுக்கு என்னென்ன உண்டோ அத்தனை வேலையையும் அமைதியா பண்ணிட்டிருக்கேன்கா… அவர் மேல இருக்குற அத்தனை கேஸையும் சங்கரை வச்சு விசாரிக்க சொல்லிருக்கேன்… இது எல்லாத்துக்கும் மேல பெரிய அடி என்னன்னா இந்த எலக்சன்ல நீ சொன்ன மாதிரி அவருக்கு சீட் குடுக்கப் போறதில்ல… அவரோட ஆதரவாளர்ல முக்கியமானவங்களை செலக்ட் பண்ணி அவங்களுக்குத் தான் சீட் குடுக்கப் போறோம்… மத்தில வரப் போற எலக்சனை காரணம் காட்டி இந்தத் தடவை சீட் இல்லனு சொல்லிடலாம்… ஆனா இந்த எலக்சனுக்கு அப்புறம் நம்ம கட்சிலயே இடமில்லனு சொல்லி வெளியே அனுப்புறதுக்கான அரேஞ்ச்மெண்டையும் சைலண்டா பண்ணி முடிச்சிட்டேன்… இனிமே அவரைப் பத்தி யோசிக்காம எலக்சனை பத்தி மட்டும் தான் யோசிக்கப் போறேன்” என்றான்.
யாழினியும் அவனது திட்டம் எதற்கும் மறுப்பு தெரிவிக்கவில்லை. அகத்தியன் எத்தனையோ முறை ராமமூர்த்தியைப் பற்றி எச்சரித்திருக்கிறான். அவளுக்குமே அவர் மீது அப்படி ஒன்றும் நன்மதிப்பு இருந்ததில்லை. ஆனால் அருள்மொழியை ஆள் வைத்துக் கொலை செய்யும் அளவுக்கு அவர் தரம் இறங்குவார் என்று யோசித்துப் பார்க்கவில்லை.
இனி அம்மனிதரைப் பற்றிய பேச்சே வேண்டாமென்றவள் நிதர்சனாவை அழைத்தாள். காரணம் முந்தைய தினம் வானதி அவளிடம் தெரிவித்த தகவல்!
நிதர்சனா கையில் கோப்பு சகிதம் வந்தவள் அருள்மொழியிடம் நீட்டினாள்.
“உங்க கட்சி மெம்பர்ஸோட மனநிலை எப்படி இருக்குனு நாங்க டேட்டா கலெக்ட் பண்ணி ப்ரிப்பேர் பண்ணுன ரிப்போர்ட்… இதுப்படி பாத்த உங்க கட்சியோட அடிமட்ட உறுப்பினர்கள் கட்சித்தலைமை மேல அதிருப்தில இருக்குறது தெரிய வந்திருக்கு சார்… இந்த அதிருப்தி உங்க கட்சியோட வோட் பேங்கை பாதிக்கும்… சோ நீங்க முதல்ல கன்சிடர் பண்ண வேண்டியது இதை தான்”
யாழினி இதையே தான் வானதியும் கூறினாள் என்கவும் அருள்மொழி அந்த அறிக்கையை வாசிக்கத் துவங்கினான்.
அதன் முடிவில் கட்சி முக்கிய பிரமுகர்களை ஒன்றிணைத்து அனைத்து மாவட்டங்களிலும் சிறு சிறு கிளைப்பொறுப்புகளை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
நிதர்சனா அங்கிருந்தபடியே வானதியை அழைத்தவள் “நதி உன்னோட சஜஷன்ஸை கேக்குறதுக்காக யாழினி மேம் வெயிட் பண்ணுறாங்க” என்கவும் மறுமுனையில் வானதி பேச ஆரம்பித்தாள்.
“மெம்பர்சோட வருத்தம் என்னனா இத்தனை நாள் கட்சில இருந்தும் கட்சித்தலைமை அவங்களை கண்டுக்கலங்கிறது தான்… சோ டிஸ்ட்ரிக்ட்வைஸ் சின்ன சின்னதா குரூப்ஸ் ஆரம்பிச்சு சீனியாரிட்டி படி அவங்களுக்கு பதவிகள குடுக்கலாம்… ஏற்கெனவே பொறுப்புல இருக்குறவங்கள விட்டுட்டு புது ஆளுங்களை அப்பாயிண்ட் பண்ணலாம்… ஃபார் எக்சாம்பிள், வெர்சுவல் வெல்வேர் குரூப் ஒன்னை எல்லா மாவட்டத்துலயும் ஆரம்பிக்கலாம்… இதுவரை எந்தப் பதவியிலயும் இல்லாத மெம்பர்சுக்கு அந்த குரூப்ல போஸ்டிங் குடுக்கலாம்… இந்த குரூப்பை நீங்க உங்களோட கட்சி வேலைகளுக்கு யூஸ் பண்ணிக்கலாம்.. உங்களுக்காக நாங்க டிசைன் பண்ணுன ஆப் மூலமா இந்தக் குரூப் மெம்பர்சுக்கு நீங்க ஆர்டர் போடலாம்… அவங்களை வச்சே மாவட்ட வாரியா, வட்ட வாரியா இவ்ளோ ஏன் கிராம வாரியா மக்களுக்கு நீங்க செய்ய நினைக்கிற நலத்திட்டங்களை ரொம்ப ஈசியா செய்யலாம்”
யாழினியோடு அருள்மொழியும் இதை கேட்டுக் கொண்டு தான் இருப்பான் என்பது அவளுக்கும் தெரியும். எனவே யாருடைய பெயரையும் குறிப்பிடாமல் பொதுவாக ஆலோசனை அளித்தாள்.
“குட் பாய்ண்ட் வானதி… அருள்! இன்னும் ஒரு வாரத்துல கட்சியோட முக்கியமான பிரமுகர்கள வரவழைச்சு இத பத்தி டிஸ்கஸ் பண்ணிடலாம்” என்றாள் யாழினி.
உடனே அழைப்பிலிருந்த வானதி “எவ்ளோ சீக்கிரம் இத முடிக்கிறீங்களோ அவ்ளோ சீக்கிரம் நல்லது… பிகாஸ் பிப்ரவரி 26 எலக்சன் டேட் அனவுன்ஸ் பண்ணிடுவாங்க… அதுக்கு அப்புறம் உங்களுக்கு ஏகப்பட்ட வேலை இருக்கும்… அதுக்கு முன்னாடி இந்த ப்ராப்ளமை சால்வ் பண்ணிடுங்க” என்றாள்.
அதன் பின்னர் நிதர்சனா அங்கிருந்து கிளம்பிவிட அடிப்படை உறுப்பினர்களின் அதிருப்தியைப் போக்கும் வழிமுறையை செயல்படுத்த கூட்டவிருக்கும் ஆலோசனை குழுவின் தலைமை பொறுப்பை கவியன்பனிடம் ஒப்படைக்குமாறு தமக்கையிடம் கூறிவிட்டான் அருள்மொழி.
“இந்த ப்ராப்ளமை நீயும் கவியன்பனும் பாத்துக்கங்க அக்கா… நான் அடுத்த ரெண்டு வாரம் விவசாயிங்களை மீட் பண்ணணும்… வேட்பாளர் தேர்வு குழுவையும் சீக்கிரம் கூட்டணும்.. எலக்சன் டேட் அனவுன்ஸ் பண்ணுனதும் விருப்பமனு குவிய ஆரம்பிச்சிடும்… அதையும் ஐ.பி.சியோட ரிப்போர்ட்டையும் சின்க் பண்ணி பாத்து தான் கேண்டிட்டேட்டை செலக்ட் பண்ணணும்… நிறைய வேலை இருக்கு” என்றான் அவன்.
யாழினியும் அவன் கூறிய யாவற்றையும் கேட்டவள் அருள்மொழி சொன்னபடியே கவியன்பனோடு சேர்த்து இன்னும் பதினைந்து முக்கிய கட்சிப்பிரமுகர்களைக் கொண்டு குழு ஒன்றை அமைத்தாள்.
அடுத்த சில தினங்களில் அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட வாரியான மெய்நிகர் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டது. தலைவர், செயலாளர், பொருளாளர் என அதன் பதவிகள் அனைத்தையும் இது வரை கண்டுகொள்ளப்படாத கட்சி உறுப்பினர்கள் அலங்கரிக்க ஆரம்பித்தனர்.
அவர்களுக்கு வேண்டியதெல்லாம் கட்சித்தலைமையின் பார்வை தங்கள் மீதும் படவேண்டும் என்பது தான். அது நடந்துவிட்ட மகிழ்ச்சியில் கட்சித்தலைமை மொபைல் செயலி மூலம் அளிக்கும் கட்டளைகளை உடனுக்குடன் நிறைவேற்றினர். அருள்மொழி விவசாயிகளைச் சந்திக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தாலும் அனைத்து விவரங்களும் விடாது அவன் காதுக்கு வந்து விடும்.
மெய்நிகர் குழுவினரின் பணிகளை ஐ.பி.சியினர் தங்களது இன்ஃப்ளூயன்சர்கள் மூலம் கண்காணித்து வந்தனர். எந்தப் பகுதியில் கட்சிப்பணிகள் சுணக்கமடைகிறது, எங்கெல்லாம் இன்னும் ஆட்கள் தேவை என்ற தகவல்களை எல்லாம் அந்த இன்ஃப்ளூயன்சர்கள் வாயிலாக தெரிந்து கொண்டவர்கள் அதையும் அறிக்கை வடிவில் தயாரித்து வானதியிடம் கொடுத்துவிட்டனர்.
இந்த நிகழ்வுகளுக்கிடையே தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் அருள்மொழி கூறியது போல தேர்தல் வேலைகள் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் கட்சியில் விருப்பமனு கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களில் தகுதியான நபரை நேர்க்காணல் மூலம் வேட்பாளராகத் தேர்வு செய்வது கட்சித்தலைமையின் பொறுப்பு. அதன் பின்னர் வேட்பாளர் பட்டியல் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்ட பிறகு தான் வேட்பாளர்கள் வேட்புமனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்வார்கள்.
த.மு.க கட்சியிலும் வேட்பாளர் தேர்வுக்கான விருப்பமனு தாக்கல் ஜெகஜோதியாக நடந்தேறியது. தொகுதி வாரியாக விருப்பமனு கொடுத்து விண்ணபித்தவர்கள் வாயிலாக பெரிய தொகை ஒன்று கட்சிநிதியாக கிடைத்தும் விட்டது. மதுரை தெற்கு தொகுதிக்காக ராமமூர்த்தி விருப்பமனு கொடுத்திருந்தார். அதே தொகுதிக்காக சந்திரகுமாரும் விண்ணபித்த தகவலைக் கேட்டறிந்தாலும் மதுரை தனது கோட்டை என்ற இறுமாப்புடன் அலட்சியமாக இருந்தார் அவர்.
இனி நிராகரிக்கப்பட்ட மனுக்களைத் தவிர்த்து தேர்ந்தெடுக்கப்பட்ட மனுதாரர்களை மட்டும் நேர்க்காணலுக்கு அழைக்க வேண்டும்! மறுநாள் நேர்க்காணல் என்ற நிலையில் ராமமூர்த்தியின் விருப்பமனு நிராகரிப்பட்டது. அதுவும் கட்சித்தலைமையின் கட்டளைப்படி!
தகவல் அறிந்ததும் அம்மனிதர் கொதித்தெழுந்து பல நாட்களுக்குப் பிறகு விவசாயிகளைச் சந்தித்து முடித்துவிட்டு கட்சி அலுவலகத்திற்கு வந்திருந்த அருள்மொழியின் அறைக்குள் புயலென நுழைந்தார்.
“அருள் சாரோட பெர்மிசன் இல்லாம யாரையும் உள்ள அனுப்ப முடியாது சார்” என்ற சங்கரின் எதிர்ப்பை தூளாக்கிவிட்டு உள்ளே நுழைந்தவர் அங்கே சுழல் நாற்காலியில் அமர்ந்து மொபைலில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த அண்ணன் மகன் முன்னே ஆவேசமாக வந்து நின்றார்.
“நிறைய இடங்கள்ல வேர்ஹௌசிங் ஃபெஷிலிட்டி இல்லனு சொன்னீங்கல்ல, அதையும் மேனிஃபெஷ்டோல ஆட் பண்ணிக்கலாம்… அப்புறம் கிராப் இன்சூரன்ஸ் பத்தி நிறைய பேருக்கு அவேர்னெஸ் இல்ல… அத தஞ்சாவூர் வெர்சுவல் குரூப் ஹெட் மணிசேகரன் மூலமா ஸ்டெப் பை ஸ்டெப்பா கிரியேட் பண்ணணும்”
பேச்சினிடையே “அருள்” என்ற ராமமூர்த்தியின் சிம்ம கர்ஜனை கேட்கவும் மொபைல் அழைப்பை அப்போதைக்கு முடித்துக் கொண்டவன் வெகு சாவகாசமாக திரும்பி “என்ன சித்தப்பா?” என்று கேட்கவும் அம்மனிதரின் கோபம் பெருங்கோபமாக உருவெடுத்தது.
“என்னோட விருப்பமனுவை ஏன் நிராகரிக்கச் சொன்ன?”

அருள்மொழி அவரது கோபத்தை ரசித்தபடியே மொபைலை மேஜை மீது வைத்தவன் பேனா ஸ்டாண்டிலிருந்து ஒரு பேனாவை உருவிக்கொண்டான்.
ராமமூர்த்தி தனது பதிலுக்காக காத்திருப்பது தெரிந்தும் அலட்சியமாக பேனாவை சுழற்றியவன்
“உங்களுக்குப் பதிலா உங்க அபிமானிகளோட மனுவ அக்செப்ட் பண்ணிட்டோம் சித்தப்பா” என்க
“அது தான் ஏன்னு கேக்கேன்… என்னை விட மதுரைல வேற எவனுக்குச் செல்வாக்கு இருக்குனு இப்பிடி ஒரு முடிவு எடுத்திருக்க அருள்?” என்று பொங்கினார்.
அருள்மொழி தனது இருக்கையிலிருந்து எழுந்தவன் மேஜையைச் சுற்றி சென்று அவரருகே நின்றான்.
“ரிலாக்ஸ் சித்தப்பா… கூல் டவுன்… முதல்ல உக்காருங்க” என்று அவரது தோளை அழுத்தி அமரை வைத்தபடியே சொன்னதோடு தண்ணீர் தம்ளரை அவர் பக்கம் நகர்த்தினான்.
“இதுக்குலாம் அவசியம் இல்ல அருள்… நீ ஹாஸ்பிட்டல்ல கிடந்த நாள்ல இந்தக் கட்சிக்காக கூட்டணிய பேசி முடிச்சவன் நான்… அதுக்கு கட்சி எனக்குச் செய்யுற கைமாறு இது தானா? என்னோட இத்தனை வருச விசுவாசத்த கட்சித்தலைமை இப்பிடி அவமதிச்சிருக்க கூடாது” என்று வெடித்தார் ராமமூர்த்தி.
அருள்மொழி அவரருகே அமர்ந்தவன் “இப்ப சொன்னீங்கல்ல, அது பாயிண்ட்… நீங்க கூட்டணி பேசுன கட்சிக்கு நம்ம தயவு பார்லிமெண்ட் எலக்சன்ல தேவை… அவங்கள எப்பவும் நம்ம கண்ட்ரோல்ல வச்சுக்கணும்னா நம்ம ரெண்டு பேர்ல ஒருத்தர் சென்ட்ரல்ல பவரோட இருக்கணும்… கட்சித்தலைவர்ங்கிற முறையில என்னோட கவனம் இப்ப தமிழ்நாட்டு அரசியல் மேல தான் இருக்கு… நீங்க மாநில அரசியல்ல கரை தேர்ந்தவர்… இனி உங்களோட கவனம் சென்ட்ரல் பக்கம் திரும்புனா அது நம்ம கட்சிய தேசிய அளவுல பலப்படுத்தும்… அதனால நல்லா யோசிச்சு எடுத்த முடிவு தான் இது… உங்களுக்கு தமிழ்நாடு வேண்டாம் சித்தப்பா… நீங்க தேசிய நீரோட்டத்துல அசைக்க முடியாத அரசியல் சக்தியா மாறணும்… உங்களோட மாற்றம் நம்ம கட்சிய வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு போகும்னு நான் நம்புறேன்… அதனால நீங்க மத்தில எலக்சன் வர்ற வரைக்கும் வெயிட் பண்ணுங்க… அது வரைக்கும் கட்சிக்கு உங்களோட சேவை கட்டாயம் தேவை” என்று நைச்சியமாகப் பேச ஆரம்பித்தான்.
ராமமூர்த்தி அவனது பேச்சில் சமாதானம் அடையவில்லை. ஆனால் அமைதியானார். அந்த அமைதியைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டவன்
“நம்ம கட்சி மேல குடும்ப அரசியல்ங்கிற முத்திரை விழக்கூடாது… அதே நேரம் கட்சியோட தலைமை மாநிலத்துலயும் சரி, மத்தியிலயும் சரி, நம்ம குடும்பத்தாளுங்களை விட்டு வேற கைக்கு மாறிடக்கூடாது… மத்திய அரசியல்ல நம்ம கட்சிய வளர்த்தெடுக்குறதுக்கு உங்கள விட தகுதியான அரசியல்வாதி வேற யாருமில்லங்கிறது என்னோட ஒபீனியன்… இந்த எலக்சன்ல வேண்டாம்.. யூனியன் கவர்மெண்டுக்கு எலக்சன் வர்றப்ப கட்டாயம் அதுல நீங்க முக்கியமான மினிஸ்டர் கேண்டிடேட்டா இருப்பீங்க” என்று சாதுரியமாக அவரது அதிகாரவெறிக்குத் தூபம் போட ராமமூர்த்தியும் அந்தத் தூபத்தில் மயங்கிப் போனார்.
அவன் நகர்த்திய தண்ணீர் தம்ளரை எடுத்துக் கொண்டவர் ஒரே மூச்சில் தண்ணீரைக் காலி செய்தார். பின்னர் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவர்
“ம்ம்… உன் வார்த்தைய நம்புறேன் அருள்… கட்சி அதிகாரம் நம்ம குடும்பத்தாளுங்கள விட்டு போயிடக்கூடாதுனு ஒரு வார்த்தை சொன்ன பாரு, அது என் அண்ணனே வந்து சொன்ன மாதிரி இருந்துச்சு… அதனால நான் மத்தில தேர்தல் வர்ற வரைக்கும் காத்திருக்கேன்… இப்ப கிளம்புறேன்” என்று அழுத்தமாக உரைத்துவிட்டு கிளம்பினார்.
அவர் சென்றதும் தனது இருக்கையில் அமர்ந்தான் அருள்மொழி. அமர்ந்தவன் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பித்தான். சிரித்து சிரித்து கண்ணீரே வந்துவிட அப்போது அவனது அலுவலக அறையின் கதவு திறந்தது.
சிரித்த முகமாய் இருந்தவன் வந்தவளைப் பார்த்ததும் சிரிப்பை நிறுத்தினான். அமருமாறு இருக்கையைக் காட்டியவனிடம் கோப்பினை நீட்டினாள் அங்கே நின்ற வானதி.
ஒன்றுமறியாதவளைப் போல முகத்தை வைத்திருந்தாலும் அவள் இதழ்க்கடையில் அடக்கி வைக்கப்பட்டிருந்த வெற்றிப்புன்னகையையும் கண்களில் தெரிந்த ஜொலிப்பையும் கண்டுகொண்டான் அருள்மொழி.
சிரிக்கமாட்டாளா என்ன? அவளது பரமவிரோதிக்கு பெரிய அடி விழுந்திருக்கிறது அல்லவா!
“ரொம்ப சந்தோசமா இருக்க போல” என்றவனை அமைதியாய் ஏறிட்டவள் தனது முகத்தை ஆட்காட்டிவிரலால் வட்டமிட்டுக் காட்டினாள்.
“இந்த மூஞ்சில எந்த இடத்துல சந்தோசம் தெரியுது?”
“அது முகத்துல தெரியல… உன் கண்ணுல தெரியுது… சித்தப்பாக்கு இந்தத் தடவை சீட் குடுக்கலனு இந்நேரம் உன் காதுக்குத் தகவல் வந்திருக்கும்… அவர் இங்க இருந்து போனப்ப அவரோட முகத்துல இருந்த சோகத்தையும் பாத்திருப்ப… இப்ப உன்னோட சந்தோச பேட்டிரி ஹண்ட்ரெட் பர்செண்டேஜ் சார்ஜ் ஏறியிருக்குமே”
வானதி அமைதியாய் ஆம் என்பது போல தலையசைத்தவள் “என் எதிரிக்கு அடி விழுறப்ப மனசுக்குள்ள ஜில்லுனு ஒரு ஃபீல் பரவுது… ஐ லைக் தட் ஃபீல்… நான் எவ்ளோ ட்ரை பண்ணியும் ஐ காண்ட் ஹைட் மை ஹேப்பினெஸ்… பட் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று கூற அருள்மொழியும் தலையாட்டினான்.
பின்னர் கோப்பினை காட்டி இது என்னவென வினவினான்.
“விருதுநகர், தேனி, சிவகங்கை இந்த மூனு டிஸ்ட்ரிக்ட்லயும் உங்க பார்ட்டி ஆளுங்க சரியா வேலை செய்யுறதில்ல… இந்த ரிப்போர்ட்டை பாரு… பொதுக்கூட்டம் நடக்குறப்ப அங்கங்க நாங்க இஷ்யூ பண்ண சொன்ன உங்க பார்ட்டியோட பேம்ப்லெட், மினி கேலண்டர், பேட்ஜ்னு எதையும் அவங்க இஷ்யூ பண்ணவேல்ல… ஈவன் ஃப்ளாக் கூட கட்டல… இதெல்லாம் கொஞ்சம் கவனிச்சா நல்லது”
“இத சொல்லுறதுக்காகவா நீ வந்த?”
“நோ! இன்னொரு ரிப்போர்ட் இருக்கு பாரு… அதுல எலக்சன் மேனிஃபெஸ்டோல என்ன பாயிண்ட்ஸ் ஆட் பண்ணலாம்னு சஜஷன் குடுத்திருக்கோம்… இது எல்லாமே உங்களுக்காக கிரியேட் பண்ணுன வெப்சைட்ல பப்ளிக் அனுப்புன பெட்டிசன்ல இருந்து கலெக்ட் பண்ணுன டேட்டாஸ்… மக்களோட தேவை என்னனு தெரிஞ்சிக்கிட்டு மேனிஃபெஸ்டோவ டிசைன் பண்ணுங்க… தட்ஸ் ஆல்”
என் வேலை முடிந்தது என்பது போல எழுந்தவள் “ஆமா நீ எந்த கான்ஸ்டுவன்சில நிக்கப் போற? சென்னைல நாலைஞ்சு கான்ஸ்டுவன்சிஸ்ல உனக்கு ஆதரவு அமோகமா இருக்கு… என்னோட கெஸ் படி அதுல ஒன்னை நீ ஃபைனலைஸ் பண்ணிருக்கணும்… அது என்னனு உன் வாயால சொன்னா நல்லா இருக்கும்” என்று கேட்கவும்
“வில்லிவாக்கம்” என்றான் அருள்மொழி.
வானதியின் புருவம் மெச்சுதலாய் உயர்ந்தது. ஏனெனில் அவள் யோசித்த நாலைந்து தொகுதிகளில் வில்லிவாக்கமும் ஒன்று.
“கங்கிராட்ஸ்… வேட்பாளர் பட்டியலை அனவுன்ஸ் பண்ணுற நாளுக்காக வெயிட் பண்ணுறேன்” என்றவள் கிளம்பிவிட்டாள்.
அருள்மொழி அவளது வாழ்த்தை ஏற்றுக்கொண்டவன் அதன் பின்னர் வேட்பாளர் நேர்க்காணல், வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, தேர்தல் அறிக்கை அறிவிப்பு என தேர்தல் பணிகளில் மூழ்கிப் போனான்.
அவனுக்கு உதவியாய் கட்சியின் மூத்த பிரமுகர்கள் தோள் கொடுத்து நின்றனர். ஐ.பி.சியின் ஆலோசனைப்படி வேட்பாளர் பட்டியல் யாருடைய அதிருப்திக்கும் இடமளிக்காதவண்ணம் அதே நேரம் புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கும் விதத்தில் தயாரானது.
பழமையும் புதுமையும் கலந்ததாய் வேட்பாளர் பட்டியல் அமைந்திருந்தாலும், சீட் மறுக்கப்பட்டவர்களின் ஆதரவாளர்களுக்கு அதற்கு பதிலாக கட்சி வாய்ப்பு கொடுத்திருந்ததாலும் யாராலும் வெளிப்படையாக தங்களது வருத்தத்தைக் காட்டிக்கொள்ள முடியவில்லை.
மொத்தத்தில் தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் பட்டியலும் தேர்தல் அறிக்கையும் அரசியல் வட்டாரத்தில் பாராட்டப்பட்டது. ஆனால் ஆளுங்கட்சியினர் வழக்கம் போல அதை மட்டம் தட்டும் கடமையைத் தவறாது ஆற்றினர்.
அதிலும் முதலமைச்சரான வீரபாண்டியனோ தன்னிடம் த.மு.கவின் தேர்தல் யுக்திகள், வேட்பாளர் பட்டியல் மற்றும் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்ட நிருபர்களிடம் வெகு சூடாக பதிலளித்திருந்தார்.
“தேர்தலை தனியா சந்திக்க திராணி இல்லாத எதிர்கட்சியினர் கார்பரேட் யுக்தியை பயன்படுத்தி தயாரிச்ச வேட்பாளர் பட்டியலும் தேர்தல் அறிக்கையும் செல்லாக்காசு மாதிரி… இந்த தேர்தல் எங்களுக்கும் த.மு.க கட்சிக்கும் இடையில நடக்கப் போறது இல்ல… எங்களுக்கும் ஐ.பி.சிக்கும் இடையில தான் நடக்கப் போகுது… இது தமிழ்நாடு… கார்பரேட்காரங்களோட மூளைய விட கரைவேட்டிகளோட வேர்வை தான் இங்க ஜெயிக்கும்”
அவரது இந்தப் பேச்சு த.மு.கவினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உண்டாக்கியது. ஐ.பி.சியினரோ தங்களது தன்மானம் தூண்டப்பட்டதாய் உணர்ந்தனர். விளைவு முன்னிலும் முனைப்பாக கட்சியினரும், ஐ.பி.சியினர் தேர்தல் பணியில் இறங்கினர்.
த.மு.கவுக்கும் எல்.ஜே.பிக்கும் இடையே இருந்த கூட்டணி ஒப்பந்தப்படி அந்தக் கட்சிக்கு இருபத்தைந்து இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. அக்கட்சியினரும் தேர்தல் பணியில் இணைந்து கொள்ள ஆளுங்கட்சியோ தங்களது ஐந்தாண்டு கால சாதனைகளை முன்வைத்து தேர்தல் களத்தில் குதித்தனர்.
ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் மாறி மாறி ஊடக விவாதங்கள், சமூக ஊடகங்களில் மோதிக்கொண்டனர். இவ்வாறாக தேர்தல் திருவிழா வேட்புமனு தாக்கலுடன் இனிதே ஆரம்பித்தது.
அருள்மொழி வானதியிடம் சொன்னபடியே வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தான். அவனுடன் யாழினியும் அகத்தியனும் அயனாவரம் தேர்தல் அலுவலகத்திற்கு வர அவர்கள் உடன் நிற்க வேட்புமனுவைத் தாக்கல் செய்துவிட்டு நேரே அவன் சென்ற இடம் அவனது இல்லம் தான்!
அன்னையிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டவன் நேரே சுந்தரமூர்த்தியின் அலுவலக அறைக்குள் நுழைந்து அவரது புகைப்படத்தைப் பார்த்தபடி நின்றான்.
“நீங்க ஆதிய எங்க கொண்டு வரணும்னு நினைச்சீங்களோ அந்த இடத்துக்குப் போறதுக்கான முதல் படில இப்ப நான் நிக்கிறேன்பா… உங்க கனவை நிறைவேத்துறதுக்கு என்னால முடிஞ்ச வரைக்கும் போராடுவேன்… அதோட என் எதிரியா நிக்குற உங்க தம்பிக்கு அருள்மொழினா யாருனு நிரூபிப்பேன்… இதுக்கு உங்க ஆசிர்வாதம் எனக்கு வேணும்பா”
அதே நேரம் ஐ.பி.சி அலுவலகத்தில் எந்தத் தொகுதிக்கு யார் வாக்குச்சேகரிப்புக்குச் செல்ல வேண்டும், வேட்பாளருடன் யார் பயணிக்க வேண்டும், எவ்வளவு களப்பணியாளர்கள் வாக்குச்சேகரிப்பு கூட்டத்தில் இருக்க வேண்டும் என்ற பட்டியல் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
வானதி தனக்கு கீழே பணியாற்றுபவர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு ஓய்ந்திருந்தவள் வில்லிவாக்கம் தேர்தல் அலுவலகத்தில் அருள்மொழி வேட்புமனு தாக்கல் செய்ததை தொலைக்காட்சியில் செய்தியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
கூடவே மதுரை தெற்கு பகுதியில் சந்திரகுமார் வேட்புமனு தாக்கல் செய்த செய்தியும் வர ராமமூர்த்தி இப்போது எப்படி தவித்துக் கொண்டிருப்பார் என்று எண்ணி குதூகலிக்கத் துவங்கினாள்.
இனி அவரை ஒழிக்க தான் எதுவும் செய்ய வேண்டியது இல்லை! அருள்மொழி அவரைக் கவனித்துக் கொள்வான்!
புன்னகையுடன் தனது மொபைலின் கேலரிக்குள் புகுந்து பெற்றோர் மற்றும் செந்தில்நாதனுடன் தானும் யுவராஜும் இருக்கும் புகைப்படத்தை உயிர்ப்பித்தவள் “உயிர் போனா மட்டும் தான் வலிக்குமா யுவா? உயிரா நினைக்கிற பதவி, அதிகாரம், செல்வாக்கு இதுல்லாம் பறிக்கப்பட்டு ஜீரோவா நிக்குறப்ப வர்ற வலி ரொம்ப கொடூரமானது… அந்த வலியோட ஆரம்பத்தை ராமமூர்த்தி இப்ப அனுபவிச்சிட்டிருப்பார்… இனி அவருக்கு அந்த வலி தான் நிரந்தரம்… அது போதும் நமக்கு” என்றாள் அமைதியாக.
அதிகாரம் இழந்த அரசியல்வாதி இறக்கை வெட்டப்பட்டு கூண்டுக்குள் அடைபட்ட கிளிக்குச் சமமானவன். அவனால் சுதந்திரமாய் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. இலவு காத்த கிளியாக அதிகாரம் எனும் இறக்கை மீண்டும் வரும் நாளுக்காக அவன் காத்திருக்க வேண்டும்! ஆனால் பெரும்பாலும் அரசியலில் ஓரங்கப்பட்டவர்கள் மீண்டு வருவது அரிதே!
PDF திருடாதீர்கள்!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction