“இரண்டு விசயங்களுக்கு முடிவே கிடையாது. ஒன்று இந்த பிரபஞ்சம்; மற்றொன்று மனித குலத்தின் மடமை”
-ஆல்பர்ட் ஐன்ஸ்டின்
குனியமுத்தூர்…
தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் கோவை தெற்கு பகுதிக்கான மாவட்டச்செயலாளர் தங்கவேலுவுக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் கட்சியின் நம்பகமான நான்கு பிரமுகர்கள், பாதுகாவலாய் சில ஆட்கள் மற்றும் உதவியாளன் சங்கருடன் அமர்ந்திருந்தான் அருள்மொழி.
முந்தைய தினம் மாலையில் தான் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தான். எலும்புமுறிவு குணமாகி ஆர்ம் ஸ்லிங்கை கழற்றியிருந்தான்.
சென்னைக்குக் கிளம்பலாம் என்ற யாழினியிடம் “இங்க எனக்கு முக்கியமான ஒரு வேலை இருக்கு… அதை முடிச்சிட்டு வர்றேன்… நீ கிளம்பு” என்று சொல்லி அனுப்பை வைத்தவன் அப்போதே தங்கவேலுவை அழைத்து தனக்கேற்ற தங்குமிடம் ஒன்றை ஏற்பாடு செய்யும்படி கூறிவிட்டான்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
தங்கவேலுவும் தனக்குச் சொந்தமான பண்ணைவீடு ஒன்று குனியமுத்தூரின் ஒதுக்குப்புறமாக இருப்பதாக கூற அங்கே ஜாகையை மாற்றிக் கொண்டவன்
“இந்த இடத்துல என்ன நடந்தாலும் பப்ளிக் பார்வைக்குப் போகாதுல்ல?” என்று வினவ
“ஆமா தலைவரே! சுத்தியும் தென்னந்தோப்பு இருக்கு… போறதுக்கும் வர்றதுக்கும் ஒரே ஒரு வழி தான்… நம்மாளுங்களை தவிர வேற யாரும் உள்ள நுழைய முடியாதபடி காவலுக்கு ஆளுங்க, எலக்ட்ரிக் வேலினு இந்த வீடு பாதுகாப்பா இருக்கும்” என்றார் அவர்.
“தென்னந்தோப்புக்கு இவ்ளோ பாதுகாப்பு அவசியமா?” என்று அதிசயித்த அருள்மொழியிடம் தனது குடும்பத்தோடு அவ்வபோது இங்கே வந்து செல்வதால் தான் இத்தகைய முன்னேற்பாடுகளைச் செய்திருப்பதாக கூறினார் தங்கவேலு.
அப்படி என்றால் அங்கே என்ன நடந்தாலும் வெளியாட்களின் கவனத்திற்கு தெரியாது! அது போதும் அருள்மொழிக்கு!
முந்தைய நாள் இரவை யோசனையுடன் கழித்தவன் மறுநாள் காலையுணவுக்குப் பிறகு சங்கரிடமும் தங்கவேலுவிடமும் ஒரு பொறுப்பை ஒப்படைத்தான்.
“ஒரு ஆளை இங்க கொண்டு வந்து நம்ம கஸ்டடில வச்சு விசாரிக்கணும்”
“யாரை சார்?” என்ற சங்கரிடம்
“பாஸ்ட் டூ வீக்சா நீங்க யாரை கண்காணிக்கிறீங்களோ அந்த ஆளை தான் சங்கர்… தங்கவேலு நீங்களும் சங்கர் கூட கிளம்புங்க… உங்க ஆளுங்களை வச்சு மத்தவங்களுக்குச் சந்தேகம் வராதபடி அந்தாளை இங்க கொண்டு வந்துடுங்க” என்றான் அருள்மொழி.
வானதியின் வருகைக்குப் பிறகு, தனக்கு நேர்ந்த விபத்துக்குக் காரணமானவனின் நிலை என்ன என்பது குறித்து சங்கரை விசாரிக்க சொல்லியிருந்தான் அவன்.
குடிபோதையில் லாரியைக் கட்டுப்பாடின்றி ஓட்டியதால் தான் விபத்து நேர்ந்துவிட்டது என்று நிரூபணம் ஆனதாலும், யாருக்கும் இறப்பு நேரவில்லை என்பதாலும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய குற்றத்திற்கான அபராதத்தை மட்டும் செலுத்திய அந்த நபரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்ட தகவலை சங்கர் விசாரித்தறிந்து அருள்மொழிக்குத் தெரிவித்தான்.
அதன் பின்னர் தொடர்ந்து இரு வாரங்களுக்கு அந்நபரைக் கண்காணிக்குமாறு சங்கரிடம் பொறுப்பை ஒப்படைத்தவன் டிஸ்சார்ஜ் ஆனதும் முதல் வேலையாக அந்த லாரி ஓட்டுனரைச் சந்திக்க வேண்டுமென சங்கர் மற்றும் தங்கவேலுவிடம் கூறிவிட அவர்களும் அவனது கட்டளையை நிறைவேற்ற கிளம்பிவிட்டனர்.
அவர்கள் சென்றதும் சங்கர் இரண்டு வாரங்களுக்கு முன்னர் அவனிடம் அளித்திருந்த அந்த ஓட்டுனரின் விபரங்கள் அடங்கிய கோப்பினை மீண்டும் ஒரு முறை புரட்ட ஆரம்பித்தான் அருள்மொழி.
பெயர் : ராஜகுரு
வயது : 53
தொழில் : மேகலா லாரி சர்வீஸ், மேகலா கேஸ் ஏஜென்ஸி
குடும்ப உறுப்பினர்கள் : மகள் மட்டும்
முகவரி : 215, நாயக்கர் புது தெரு, சிம்மக்கல், மதுரை 625001.
மேகலா என்பது அந்த ராஜகுருவின் மகள் என்பதும், எட்டாண்டுகளுக்கு முன்னே நடந்த சாலை விபத்தில் அவனது மனைவியும் மகனும் சம்பவ இடத்திலேயே பலியான தகவலும் அந்தக் கோப்பில் அடங்கியிருந்தது.
அதோடு கேஸ் ஏஜென்ஸியைப் பெயரளவில் நடத்திக்கொண்டே கட்டப்பஞ்சாயத்து, ரவுடியிசம் என வாழ்ந்தவர் தான் அந்த ராஜகுரு; ராமமூர்த்தியின் ஆட்கள் ஏவும் குற்றேவல் பணியைச் செய்த இந்நபர் மீது ஏகப்பட்ட வழக்குகள் ஒரு காலத்தில் பதிவான தகவலும் அந்தக் கோப்பில் இடம்பெற்றிருந்தது.
நேரடியாக ராமமூர்த்தியிடம் தொடர்பு கொள்ளும் அளவுக்கு ராஜகுருவுக்குச் செல்வாக்கு இல்லை என்றாலும் ராமமூர்த்தியின் கீழே இயங்கும் சில அரசியல் அடியாட்களுக்கு அவர் மிகவும் நெருக்கமாக இருந்து ராமமூர்த்திக்கு எதிராக செயல்படுபவர்களை இருந்த இடம் தெரியாமல் அழித்த வரலாறையும் கோப்பு வாயிலாக படித்தறிந்திருந்தான் அருள்மொழி.
தங்கவேலுவும் சங்கரும் அந்த ராஜகுருவை அழைத்து வரும் தருணத்திற்காக காத்திருந்தவன் பொழுதை நெட்டித் தள்ள தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.
பொழுதுபோக்கு சேனல்களைக் கடந்து செய்தி சேனல்கள் வசம் அவனை அழைத்துச் சென்றது ரிமோட். திடீரென திரையில் வீரபாண்டியன் வரவும் குறுகுறுப்பு எழ அந்த சேனலைப் பார்க்க ஆரம்பித்தான்.
“எதிர்கட்சி தலைவர் அருள்மொழிக்கு நடந்த ஆக்சிடெண்ட் அரசியல் காரணங்களுக்காக தான் நடந்திருக்குனு அந்தக் கட்சியோட நாடாளுமன்ற உறுப்பினர் யாழினி பத்திரிக்கையாளர் சந்திப்புல சொல்லிருக்காங்களே! அதை பத்தி நீங்க என்ன சொல்ல விரும்புறீங்க?”
வீரபாண்டியன் நக்கலாக சிரித்தவர் “அரசியல் காரணத்துக்காக நடந்ததுனு அவங்க சொன்னாங்கனா அது சரியா தான் இருக்கும்… பெரிய விபத்து நடந்த மாதிரி காமிச்சு மக்கள் கிட்ட இரக்கத்த சம்பாதிக்கிற வழிமுறை இது… அரசியல்னா என்னனு தெரியாத கத்துக்குட்டி தலைவரை தேர்தல்ல ஜெயிக்க வைக்க த.முகவினர் என்னென்ன கோமாளித்தனம் பண்ணுறாங்க பாருங்க… மக்கள் கட்சிக்காரங்களோட செயல்பாட்டை பாத்து தான் ஓட்டு போடுவாங்க… எங்களுக்கு நிறைய எதிரிகள் இருக்காங்க, அவங்க ப்ளான் பண்ணுன ஆக்சிடெண்ட்ல கை போயிடுச்சு, கால் போயிடுச்சுனு சொல்லி ஓட்டுப்பிச்சை கேக்குறதுக்காக போட்ட திட்டம் தான் எதிர்கட்சி தலைவர் அருள்மொழிக்கு நடந்த இந்த விபத்து நாடகம்” என்று ஆணவத்துடன் பதிலளிக்க அதை கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழியின் இரத்தம் கொதிக்க ஆரம்பித்தது.
திரையில் பேசிய நபருக்கு அருள்மொழி உயிர் பிழைத்த கடுப்பு! அதை வெளிக்காட்டாமல் இப்படி பசப்பிக் கொண்டிருந்தார் அவர். ஆனால் அருள்மொழியைப் பொறுத்தவரை இது அவனுக்கு நேர்ந்த பெருத்த அவமானம்! இதற்கு காரணமானவர் ராமமூர்த்தி!
அடங்கா சினத்துடன் வெகு அழுத்தமாக ரிமோட்டின் பட்டனை அழுத்தி சேனலை மாற்றினான் அருள்மொழி.
அதில் ராமமூர்த்தியும் யாழினியும் புன்னகை பூத்த முகத்தினராக எல்.ஜே.பி கட்சியின் தமிழக தலைவரோடு இரண்டு விரல்களை காட்டி சிரித்தபடி பத்திரிக்கையாளர்களின் கேள்வி மழையிலும், கேமராக்களின் ஃப்ளாஷ் மழையிலும் நனைந்து கொண்டிருந்தனர்.
“தமிழ்நாடு முன்னேற்ற கழகமும் லோக் ஜனதா கட்சியும் கூட்டணியாக இணைந்து வரவிருக்கும் தமிழக சட்டச்சபை தேர்தலை சந்திக்கும்! நாடாளுமன்ற தேர்தலிலும் இக்கூட்டணி தொடரும்!”
இனி அவன் மீதிருக்கும் பணமோசடி வழக்கு பிசுபிசுத்துவிடும். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் போடப்பட்ட அவ்வழக்கு அரசியல் காரணங்களாலேயே இழுத்து மூடப்பட்டுவிடும் என்பதில் அருள்மொழிக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
அதற்கு காரணம் எல்.ஜே.பியுடனான த.மு.கவின் கூட்டணி! அதை சாத்தியமாக்கியவர் அவனது சித்தப்பா ராமமூர்த்தி!
“அரசியல் வாழ்க்கை முடியப் போற நேரத்துல உங்களால எனக்கும் கட்சிக்கும் நடந்த ஒரே ஒரு நல்ல விசயம் இது தான்… என்னை சாகடிக்க ப்ளான் பண்ணிட்டு இங்க வந்து எதுவும் தெரியாத மாதிரி சந்தோசமா சிரிச்சு போஸ் குடுக்கிறீங்களா சித்தப்பா? இந்தச் சிரிப்பு தான் உங்களோட கடைசி சிரிப்பு… இது தான் உங்களோட கடைசி அரசியல் பேச்சு… என்னை கொல்ல நினைச்ச உங்களை அரசியல் அனாதை ஆக்குறது தான் இனி என்னோட மெயின் வேலை”
உறுதியாக பழிவாங்கும் வெறியோடு சொல்லி முடித்தான் அருள்மொழி.

பகல் பொழுது மெதுவாக நகர்ந்து மாலையும் மறைந்து இரவு முகிழ்த்தது. அந்தப் பண்ணைவீட்டில் தங்கவேலுவின் ஆட்கள் காவல் காக்க ராஜகுருவுக்காக காத்திருந்தான் அருள்மொழி.
ஒருவழியாக சங்கரும் தங்கவேலுவும் இன்னும் இரு குற்றேவல் புரியும் நபர்கள் சூழ அவரை அழைத்துக் கொண்டு வந்தனர்.
அந்த ராஜகுருவோ ஆய்ந்து ஓய்ந்து போனவரைப் போல தோற்றமளித்தார். அவரை அருள்மொழி அமர்ந்திருந்த உள்ளறைக்கு அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்துவிட்டு அவருக்கு இரு புறமும் அரண் போல நின்று கொண்டனர் அந்தக் குற்றேவல் செய்யும் நபர்கள்.
அருள்மொழி அவரை ஏற இறங்க பார்த்தவன் “எனக்கு ரொம்ப பேசுனா பிடிக்காது… ஒரே ஒரு கேள்வி தான்! என்னை ஆக்சிடெண்ட் பண்ணி கொல்லணும்னு உன் கிட்ட டீல் பேசுனது யாரு?” என்று கேட்க ராஜகுருவோ பதில் கூறாமல் தலையைக் குனிந்து கொண்டார்.
அருள்மொழிக்கு அருகே அமர்ந்திருந்த தங்கவேலு எரிச்சலுற்று “கல்லுளிமங்கன் வாய திறக்குறானா பாருங்க தலைவரே! இவனை மரியாதையா விசாரிச்சா இப்பிடி தான் சீன் போடுவான்… நம்மாளுங்களை வச்சு ரெண்டு போடு போட்டா ரத்தத்தோட சேர்ந்து உண்மையும் தானா வரும்” என்று ஆவேசத்துடன் எழுந்திருக்கவும் அருள்மொழியின் கரம் அவரது கரத்தை அழுத்தியது.
“கோவப்படாதிங்க தங்கவேலு… அவரை அடிக்குறதால உங்களுக்கும் எனக்கும் என்ன கிடைக்கப் போகுது? அடிச்சு துன்புறுத்தி உண்மைய வாங்குறது முட்டாள்தனம்… இப்ப ராஜகுரு உண்மைய சொல்லலைனா அவரை ஒன்னும் பண்ணக்கூடாது… அதுக்குப் பதிலா வீல்சேர்ல உக்காந்து கஷ்டப்படுற அவரோட பொண்ணை ஒரேயடியா மேல அனுப்பி வச்சிடலாம்… என்ன ராஜகுரு, அனுப்பிடுவோமா?” என்று அலட்டிக்கொள்ளாமல் வினவி ராஜகுருவை அதிர வைத்தான் அவன்.
ராஜகுரு வியர்வையைத் துடைத்துக் கொண்ட சமயத்தில் அவரது கண்கள் கலங்கியதை கவனித்தவன்
“பொண்ணுனு சொன்னதும் கண்ணு கலங்குதுல்ல… ஒழுங்கா உண்மைய சொல்லிட்டா உன்னையும் உன் பொண்ணையும் உயிரோட விடுவேன்… இல்லனா என் அரசியல் வாழ்க்கையோட முதல் களபலியே நீயும் உன் பொண்ணும் தான்! வாய திறந்து சொல்லுய்யா” என்று கர்ஜிக்கவும் எச்சிலை விழுங்கிவிட்டு உண்மையைச் சொல்ல தயாரானார் ராஜகுரு.
“நான் இந்த மதுரைல சாதாரண லாரி டிரைவரா இருந்தவன் தான் சார்… அப்பிடியே ஆள் பழக்கம் ஏற்பட்டு எனக்கு ராமமூர்த்தி ஐயாவுக்கு நெருக்கமானவங்க நட்பு கிடைச்சிது… ராமமூர்த்தி ஐயாவோட செல்வாக்கு மதுரையில கொடி கட்டி பறந்த சமயத்துல அவருக்காக அவங்க ஆளுங்க சொன்ன வேலைய எல்லாம் நான் செஞ்சு முடிச்சிருக்கேன்… அதுல சம்பாதிச்ச பணத்தால தான் கேஸ் ஏஜென்ஸி, லாரி சர்வீஸ்னு பிசினஸ் பக்கம் திரும்புனேன்… அதுக்கு அப்புறமும் மறைமுகமா அவருக்காக நிறைய பாவத்த பண்ணிருக்கேன் சார்… ஆனா இதெல்லாம் என் பொண்டாட்டியும் மகனும் ஆக்சிடெண்ட்ல என் கண்ணு முன்னாடி இறந்து போறதுக்கு முன்னாடி வரைக்கும் தான்… எட்டு வருசத்துக்கு முன்னாடி திருப்பரங்குன்றத்துக்குப் போயிட்டு திரும்புனப்ப என் கார் ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு… அதுல என் பொண்டாட்டியும் மகனும் காருக்குள்ள மாட்டி எரிஞ்சு செத்துட்டாங்க.. கார் உருண்ட வேகத்துல நானும் என் பொண்ணும் மட்டும் தூரத்துல போய் விழுந்தோம்… அந்த ஆக்சிடெண்டால என் பொண்ணுக்கு கால் நிரந்தரமா நடக்க முடியாம போயிடுச்சு… செஞ்ச பாவம் எல்லாம் ஒன்னா சேர்ந்து என் குடும்பத்த சின்னாபின்னமாக்கிடுச்சுனு புரிஞ்சு போய் ஒரேயடியா ராமமூர்த்தி ஐயாவோட ஆளுங்க கிட்ட இருந்து விலகி நியாயமா தான் வாழ்ந்துட்டிருந்தேன்…
அப்பிடி இருக்கையில திடீர்னு ஐயாவோட ஆள் ஒருத்தரு உங்களை ரோட் ஆக்சிடெண்ட்ல போட்டு தள்ளணும்னு என் கிட்ட டீல் பேச வந்தாரு… நான் முடியாதுனு எவ்ளோவோ சொல்லி பாத்தேன் சார்… ஆனா அவரு என்னை விடல… நான் மட்டும் ஒத்துக்கலனா என் பொண்ணை கொன்னுடுவேன்னு மிரட்டுனாரு சார்… அவரு சொன்ன வேலைய முடிச்சா தான் என் பொண்ணை விடுவேன்னு ஆளுங்களை வச்சு என் வீட்டை கண்காணிச்சாரு… வேற வழியில்லாம நானும் ஒத்துக்கிட்டேன்… என் கிட்ட இருந்த நியாயத்த ரத்தப்பாசம் ஜெயிச்சிடுச்சு… அவங்க சொன்ன மாதிரி ஒரு ரவுண்ட் குவார்ட்டர் அடிச்சிட்டு லாரிய ஓட்டி உங்களை ஆக்சிடெண்ட் பண்ணுனேன்… மக்கள் கூடுறதுக்குள்ள தப்பிச்சிட்டேன்.. போலீஸ் என்னை பிடிப்பாங்கனு எனக்கு நல்லாவே தெரியும் சார்… நம்ம நாட்டுல தான் குடிச்சுட்டு வண்டி ஓட்டி ஆக்சிடெண்ட் பண்ணுனா பெருசா தண்டனை இல்லையே! மிஞ்சி மிஞ்சி போனா பத்தாயிரம் அபராதம் போடுவாங்க… இல்லனா ரெண்டு வருசம் ஜெயில்ல தள்ளுவாங்க… என் பொண்ணு உயிருக்கு முன்னாடி இதெல்லாம் எனக்குப் பெருசா தெரியல சார்… அவங்க சொன்ன அபராதத்தை கட்டுனேன்… இருந்தாலும் என் லைசென்சை கேன்சல் பண்ணிட்டாங்க… ஆனா என் பொண்ணு உயிரோட தப்பிச்சிட்டா… அது போதும் எனக்கு”
அருள்மொழி அவர் கூறியதைக் கேட்டவன் “நீ சொன்னதுல ஒரு வார்த்தை பொய்னு தெரிஞ்சாலும் உன் பொண்ணு உயிர் அவ உடம்புல இருக்காது” என்க
“நான் சொன்னதுலாம் உண்மை சார்… என் பொண்ணை எதுவும் பண்ணிடாதீங்க… உங்க கிட்ட நான் உண்மைய சொன்னது அவங்களுக்குத் தெரிஞ்சா என்னையும் என் பொண்ணையும் உயிரோட விடமாட்டாங்க சார்… எங்களை விட்டுடுங்க… நாங்க கண்காணாத இடத்துல போய் பிழைச்சிக்கிறோம்” என்று கதறியபடியே கரம் கூப்பினார் ராஜகுரு.
அருள்மொழி அவருக்கு எந்த உறுதியும் கொடுக்கவில்லை.
“உன் கிட்ட இந்த வேலைய ஒப்படைச்சவன் யாரு?”
“வீரய்யன்னு ஒருத்தன் சார்… அவனும் என்னை மாதிரி லாரி டிரைவரா இருந்தவன் தான்… என் கிட்ட வேலைய ஒப்படைச்சிட்டு போனவன் தான்… அதுக்கு அப்புறம் அவன் கிட்ட இருந்து எந்தத் தகவலும் இல்ல… ஒருவேளை நான் பணம் கேப்பேன்னு போனை சுவிட்ச் ஆப் பண்ணிட்டான் போல”
அருள்மொழி அங்கிருந்து வெளியேறியவன் சங்கரையும் தங்கவேலுவையும் தனியே அழைத்து ராஜகுருவின் ஒப்புதல் வாக்குமூலத்தின் உண்மை தன்மையை அறிந்து கொள்ள விரும்பினான்.
“இந்தாளு சொல்லுற மாதிரி இன்னொருத்தர் இதுல இன்வால்வ் ஆனதுக்கு எதாச்சும் சாட்சி இருக்கா?
“இவரோட பொண்ணு மேகலா தான் சாட்சி… அந்தப் பொண்ணும் இவர் சொன்னதை தான் சொல்லிச்சு சார்” என்றான் சங்கர்.
அதன் பின்னர் ராஜகுருவை யாருமறியாவண்ணம் அவரது இல்லத்திலேயே கொண்டு போய் விடும் வேலையை குற்றேவலர்களிடம் ஒப்படைத்த தங்கவேலு அவர்கள் கிளம்பியதும் அருள்மொழியிடம் அடுத்து என்ன செய்ய வேண்டுமென கேட்க
“உங்க ஆளுங்களை வச்சு ராஜகுருவோட வீட்டை கண்காணிக்க ஆரம்பிங்க தங்கவேலு… சித்தப்பாவோட ஆளுங்க நடமாட்டம் அங்க இருந்துச்சுனா எதாவது காரணத்த சொல்லி போலீஸ் கம்ப்ளெய்ண்ட் குடுங்க… இதுக்கு மேல சித்தப்பாவ நான் கவனிச்சிக்கிறேன்” என்று மட்டும் கூறிவிட்டு அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறைக்குள் அடைபட்டுக்கொண்டான்.
மறுநாள் அங்கிருந்து கிளம்பிவிடுவேன் என மொபைலில் அன்னையிடம் தெரிவித்தவன் தனது விபத்திற்கு பின்புலமாக இருந்தது யாரென்று ஐயந்திரிபற அறிந்து கொண்டு சென்னையில் காலடி எடுத்து வைத்தான்.
வந்தவன் கட்சி அலுவலகத்திற்கு செல்லாமல் நேரே வீட்டை அடைந்தான். மகனைக் கண்டதும் மீனாட்சி விசும்ப ஆரம்பிக்க யாழினியும் அகத்தியனும் சேர்ந்து அவரைச் சமாதானப்படுத்தினர்.
அருள்மொழி ஓய்வெடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு அவனது தந்தையின் அறைக்குள் சென்றுவிட மூவரும் அவனது செய்கையை புதிராய் எண்ணி விழித்தனர்.
அந்த அறைக்குள் பெரிய புகைப்படச்சட்டத்திற்குள் சிரித்தபடி இருந்த சுந்தரமூர்த்தியை வைத்த கண் வாங்காது பார்த்தவனின் செவியில் அவரது குரல் எதிரொலித்தது.
“நம்ம வெளியுலகத்துல எப்பேர்ப்பட்ட தகிடுதத்தம் வேணாலும் செய்யலாம்… ஆனா குடும்பத்தாளுங்களுக்கு மட்டும் சாகுற வரைக்கும் உண்மையா இருக்கணும்… ஏன்னா நம்ம இவ்ளோ கஷ்டப்படுறதே அந்தக் குடும்பத்துக்காக தானே!”
கண்களை இறுக மூடிக்கொண்டு “இந்த வார்த்தை தான் இத்தனை நாள் என்னைக் கட்டுப்படுத்துச்சுப்பா… இனிமேலும் இத நான் ஃபாலோ பண்ணுனேன்னா என்னை விட முட்டாள் எவனும் இருக்கமாட்டான்… நான் உங்களுக்கு அடுத்த இடத்துல உங்க தம்பிய வச்சிருந்தேன்… எனக்கு எதிரா அவர் என்னென்னவோ பண்ணியும் நான் நிதானமா தான் இருந்தேன்… இதுக்கு மேல என்னால பொறுமையா இருக்கமுடியாது… அருள்மொழி கிட்ட மோதுனா என்ன நடக்கும்னு நான் அவருக்குப் புரிய வைப்பேன்… என்னை மன்னிச்சிடுங்கப்பா” என்றான் அவன்.
அரசியல் எனும் களத்தில் அவன் விரும்பி இறங்கவில்லை. ஆனால் காலத்தின் கட்டாயத்தால் இறங்கிய பிற்பாடு அதன் மாயக்கரங்கள் அவனைச் சுற்றி வளைத்து அரசியலுக்கே உரித்தான சில குணங்களை அவனுள் விதைத்ததை அருள்மொழியால் தடுக்கவே முடியவில்லை! பதவி மற்றும் அதிகாரத்தின் சுவை இது தான் என்று அவனுக்கு ஆசை காட்டியும் விட்டது. அதிகாரத்தின் பலனை அனுபவித்தவனுக்கு அதை கைவிடும் எண்ணமோ விட்டுக்கொடுக்கும் எண்ணமோ ஏற்படுவது அரிது!
அதை தக்க வைத்துக்கொள்ள எதையும் செய்யலாம் என்ற எண்ணத்தை மட்டும் அவனுள் ஆழமாகப் பதிய வைத்துவிட்டது அரசியல் களம்! அந்தக் களத்தில் அன்றிலிருந்து அவனுக்கு முதல் எதிரி ராமமூர்த்தி! அவரை கத்தியின்றி இரத்தமின்றி, ஆனால் ஏன் வாழ்கிறோம் என்னும் நிலைக்குக் கொண்டு வர திட்டம் தீட்ட ஆரம்பித்தான் அருள்மொழி!
அதே நேரம் ஐ.பி.சியின் தலைமை அலுவலகத்தில் பாலாவிடம் வாதம் செய்து கொண்டிருந்தாள் வானதி.
“நோ வே! உங்க ப்ளேசுக்கு வேற யாரையும் அப்பாயிண்ட் பண்ணுறதா இல்ல பாலா… நீங்க தான் ஃபீல்ட் ஒர்க் டீமுக்கு ஹெட்… நடந்தது வெறும் ஆக்சிடெண்ட் தான்… அதுக்கு ஏன் ஓவர் ரியாக்ட் பண்ணுறீங்க? ஒன்னு சொல்லட்டுமா? அந்த தேதியில உங்களுக்கு ஆக்சிடெண்ட் ஆகி நீங்க ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆகணும்ங்கிறது விதி… நீங்க கோயம்புத்தூருக்குப் போகாம இருந்திருந்தா உங்க ஏரியாலயே அந்த ஆக்சிடெண்ட் நடக்கத் தான் செஞ்சிருக்கும்… நடந்த எதையும் நம்மளால மாத்த முடியாது… இனிமே பாதுகாப்ப பலப்படுத்திடுவோம் பாலா… உங்கள மாதிரி ஒரு ப்ரில்லியண்ட் அண்ட் ஹார்ட் ஒர்க்கரை என்னால இழக்க முடியாது… இந்த ஆக்சிடெண்டுக்குப் பயந்து நீங்க டீம் மாறுறது எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துறது மாதிரி பாலா… ப்ளீஸ் உங்க முடிவை ரீகன்ஸிடர் பண்ணுங்க”
பாலா என்ற பாலசந்திரனுக்கு இன்னும் விபத்தின் அதிர்ச்சி தீரவில்லை. அடிக்கடி கண்ணுக்கு முன்னே அந்தக் காட்சிகள் படம் போல விரிவதும், கனவில் விபத்துக்காட்சிகள் மீண்டும் மீண்டும் வருவதும் தொடர்கதையாகிப் போனதால் அவன் எடுத்த முடிவே வேறு குழுவுக்கு மாறுவது!
ஆனால் வானதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவனுக்கு இந்நேரத்தில் அவசியமானது மனோதத்துவ சிகிச்சையே என்றவள் அதை வெற்றிகரமாக எடுத்துக்கொண்டு மீண்டும் களப்பணி குழுவின் பொறுப்பாளன் ஆகும்படி வலியுறுத்தினாள்.
இவ்வளவு விளக்கியும் அவன் தயங்கினான். வானதிக்கு வேறு வழி தெரியவில்லை. எவ்வளவு தான் விளக்கம் சொல்லுவது? எனவே பொறுத்துப் பொறுத்து பார்த்துவிட்டு கண்டிப்பான கேம்பெய்ன் மேனேஜராக பேசத் துவங்கினாள்.
“இங்க டீம் மாறுறதுங்கிற பேச்சுக்கே இடமில்ல பாலா… நீங்க இல்லனா எங்களால இன்னொரு டீம் ஹெட்டை தேடிப் பிடிக்க முடியும்… ஆனா இந்த ஜாப் போச்சுனா உங்க நிலமை என்னனு யோசிங்க… எனக்கு நிறைய வேலை இருக்கு… ஒன்னு நீங்க ஃபீல்ட் டீம்ல அகெய்ன் ஜாய்ன் பண்ணுங்க, இல்லனா உங்க ரெசிக்னேஷனை குடுத்துட்டு கிளம்புங்க… டைம் எடுத்து யோசிங்க… யூ மே கோ நவ்” என்றவள் அவன் தயக்கத்துடன் கிளம்பவும் தனது வேலைகளில் ஆழ்ந்தாள்.
அப்போது தான் தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் தலைமை அலுவலகத்திலிருந்து நிதர்சனாவின் அழைப்பு வந்தது.
“சொல்லு சனா! எனிதிங் இம்ப்பார்ட்டெண்ட்?” என்றவளிடம் அருள்மொழி சென்னைக்கு வந்த தகவலை தெரிவித்தாள் நிதர்சனா.
“ஓ! அப்ப ஹெட் ஆபிஸ் ஜெகஜோதியா இருக்குனு சொல்லு”
“ப்ச்! அந்த மனுசன் இங்க வரவேல்ல நதி… ஹெட் ஆபிஸ்ல வழக்கமான வேலை தான் நடக்குது”
நிதர்சனாவின் பதிலில் யோசனை வளையத்துக்குள் சென்று வெளியே வந்தாள் வானதி.
“அப்ப சார் கிட்ட என் பேச்சு வேலை செஞ்சிடுச்சு போல… இனிமே நமக்கு வேடிக்கை பாக்க நிறைய இண்ட்ரெஸ்டான கண்டெண்ட்ஸ் கிடைக்கும் சனா… எண்டர்டெயின்மெண்டுக்குப் பஞ்சமில்ல” என்று சொல்லி சிரித்தவளின் பூடகப்பேச்சு நிதர்சனாவுக்குப் புரிந்துவிட்டது.
“இப்ப நீ ஹேப்பியா இருக்கியா?” என்றவளிடம்
“தெரியலயே! சந்தோசம் துக்கம் ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி வாழ்ந்து பழகுனதால இப்ப நான் என்ன ஃபீல் பண்ணுறேன்னு சரியா சொல்ல தெரியல… ஆனா நான் நினைச்சது தான் நடக்கும்னு முழு நம்பிக்கை வந்துடுச்சு… ஓகே! மிஸ்டர் அருள்மொழி வந்ததும் அவர் கிட்ட அடுத்து மீட் பண்ணப்போறது மீனவர்களையா விவசாயிகளையானு டிஸ்கஸ் பண்ணிடுங்க… நான் அந்தந்த ஏரியா இன்ஃப்ளூயன்சர்ஸ் கிட்ட ரிப்போர்ட் வாங்கி அனுப்புறேன்… எது பெனிஃபீஷியல்னு பாத்துட்டு அவரோட சுற்றுப்பயணத்த ஆரம்பிக்கட்டும்” என்று சொல்லி அழைப்பை முடித்துக் கொண்டாள்.
அவளுக்குள் பரபரப்பு ஆரம்பித்தது. அருள்மொழியை அவளால் முடிந்த வரை சீண்டியதன் விளைவு எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு அவளுள் அளவில்லா ஆவல் எழுந்தது. தான் ஆட்டி வைத்தபடி அவன் ஆடவில்லை என்றாலும், தான் எண்ணியதை மட்டுமே அவன் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுள் நிரம்பியிருக்கும் பழிவெறிக்கு இன்னும் வலு கூட்டியது.
இத்தகைய பழிவெறியானது எப்போது அடங்குமென்றால் அதை சுற்றியிருக்கும் ஒவ்வொரு நபரையும் ஒவ்வொரு பொருளையும் ஒரேயடியாக அழித்து முடிக்கும் போதும் தான்! அது வரை பழிவெறி கொண்ட மனதிற்கு ஓய்வென்பதே இல்லை! இதை சொன்னவர் ஜேசன் லாய்ட்!
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction