“நீங்கள் ஒரு பேராசைக்காரனை பணத்தால் வெல்லலாம்; ஒரு தற்பெருமை பேசும் நபரை அவரிடம் தாழ்ந்து போவது போல பாவனை செய்து வெல்லலாம்; ஒரு முட்டாளை அவனது பேச்சுக்கு உடன்படுவது போல நடித்து வெல்லலாம்; ஆனால் ஒரு புத்திசாலியை அவனிடம் உண்மையைப் பேசுவதன் மூலமாக மட்டுமே வெற்றி கொள்ள முடியும்”
-சாணக்கியர்
வதம்பச்சேரி கிராமம், கோயம்புத்தூர்…
கிராமத்திலிருந்த நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தான் அருள்மொழி. கூடவே ஐ.பி.சி உறுப்பினர்களும், தமிழ்நாடு முன்னேற்ற கழகத்தின் சூலூர் பகுதிக்கான பொறுப்பாளர்களும் வந்திருந்தனர்.
சங்கத்தின் கிராமளவிலான தலைவராக இருக்கும் நடராஜன் தங்கள் பகுதிகளில் நெசவாளர்களுக்கு இருக்கும் சிரமங்களை ஆதங்கத்துடன் அவனிடம் கூறிக் கொண்டிருந்தார்.
“நான் நாப்பது வருசமா நெசவு செய்யுறேனுங்க… எங்கப்பா அம்மா தறி ஓட்ட கத்து குடுத்தப்ப எனக்கு பத்து வயசு… அப்ப இருந்து இந்தக் கை தறிய விடல… எங்களுக்கு கோ-ஆப்பரேட்டிவ் சொசைட்டில இருந்து ஆர்டர் வருங்க… நான் ஒரு மாசத்துல பத்துல இருந்து பன்னிரண்டு சேலை வரைக்கும் முடிச்சு குடுப்பேன்… ஒரு காலத்துல இங்க நூத்துக்கு மேல தறி ஓட்டுறவங்க இருந்தாங்க… இப்ப ஏழே குடும்பம் தானுங்க இதை செய்யுறோம்”
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அந்த ஏழு குடும்பங்களின் தலைவர்களும் அங்கே அமர்ந்திருந்தனர். விசைத்தறி என்ற ஒன்றின் அறிமுகம் பாரம்பரிய கைத்தறி நெசவை நைந்து போகச் செய்த கொடுமை அவர்களின் வதனங்களில் அப்பட்டமாகத் தெரிந்தது.
“என்னை உங்களோட தறி இருக்குற இடத்துக்கு அழைச்சிட்டு போறீங்களா?”
நடராஜன் என்ற அம்முதியவர் தன் இல்லத்தில் தறி ஓட்டும் இடத்திற்கு அழைத்து வந்தவர் அங்கிருந்த உபகரணங்களைக் காட்டி அவற்றின் செயல்பாடுகளை அவனுக்கு விளக்க ஆரம்பித்தார்.
இக்காட்சியை ஐ.பி.சியினர் வீடியோவாகவும் புகைப்படமாகவும் பதிவு செய்தது வேறு விசயம்!
“இது தானுங்க பாவு! நெய்யுறதுக்கு முன்னாடி பாவு சுத்தணும்… இது தான் கொஞ்சம் கஷ்டமான வேலைங்க தம்பி… ஊசில நூல் கோக்குறது மாதிரி தான் இது… நடந்து நடந்து சரி பண்ணனும்… இப்ப பாவு ஓட்டுறதுக்கும் எதோ மிஷினு வந்துருக்குனு சொல்லுறாங்க”
வண்ண வண்ண நூலிழைகள் ஒரு தாங்கியிலுள்ள உருளை வடிவ உபகரணத்தில் இறுக்கமாக பிணைக்கப்பட்டு மறுமுனையில் ஒரு குடுவை போன்ற மர உபகரணத்தில் போய் சுற்றியிருந்தது. இரண்டுக்கும் இடையே இரண்டு மரக்குச்சிகள் இருந்தன.
அனைத்தையும் ஸ்ரத்தையுடன் கேட்டுக் கொண்டிருந்த அருள்மொழி அங்கே வரும் முன்னரே அரசாங்கம் நெசவாளர்களுக்கு வழங்கும் நலத்திட்டங்கள் பற்றிய விவரங்களைக் கரைத்துக் குடித்துவிட்டு தான் வந்திருந்தான். அத்துணை திட்டங்களும் வெற்றிகரமாக செயல்படுவதாக அரசின் புள்ளிவிவரம் கூறியது உண்மையென்றால் இவர்களின் வாழ்க்கைத்தரமும் வருமானமும் உயர்ந்திருக்க வேண்டுமே!
ஆனால் அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை! நலத்திட்டங்களைப் படித்தவன் அரசாங்கத்தின் செயல்பாடுகளை மட்டும் ஆராயமலா வந்திருப்பான்? கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இப்போது பேசத் துவங்கினான் அவன்.
“நீங்க கவலைப்படாதீங்கய்யா… நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அரசாங்கம் குடுக்க வேண்டிய தள்ளுபடி மானியத்தை குடுத்துட்டா உங்க கஷ்டம் எவ்ளோவோ குறையும்… கிட்டத்தட்ட முன்னூறு கோடி மானியம் அதாவது உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பணம் அரசாங்கத்து கிட்ட நிலுவையா இருக்குது… எங்க கட்சி ஆட்சிக்கு வந்ததும் இத நான் கட்டாயம் கவனிக்கிறேன்… சங்கர், ஐயா கிட்ட இன்னும் என்னென்ன பிரச்சனை இருக்குனு தெளிவா கேட்டு நோட் பண்ணிக்கோங்க”
கூடவே வந்திருந்த கட்சி உறுப்பினர்களை மற்ற நெசவாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றி கேட்டறிய சொல்லிவிட்டு ஐ.பி.சியின் களப்பணி பொறுப்பாரைத் தனியே அழைத்தான்.
“இன்னும் எத்தனை வில்லேஜஸ் இருக்கு பாலா?”
“இதோட நாலாவது வில்லேஜ்கு வந்திருக்கோம் சார்… புரோகிராம் ஷெட்யூல் படி இனிமே அடுத்த வில்லேஜ் விசிட் நாளைக்குத் தான்”
“ஓ.கே! அப்ப ஹோட்டலுக்குக் கிளம்பிடலாம்ல?”
“கிளம்பிடலாம் சார்”
அருள்மொழி காரில் அமர அவனுடன் வந்தவர்கள் அடுத்தடுத்த கார்களில் தொடர பாலாவும் அவனும் அமர்ந்திருந்த கார் வதம்பச்சேரியிலிருந்து கிளம்பியது.
அப்போது வானதி பாலாவின் மொபைலுக்கு அழைத்தாள்.
“சொல்லுங்க மேம்” என்றவனிடம்
“எதுவும் பிரச்சனை இல்லையே பாலா? அருள்மொழி சாரோட பாதுகாப்புல கொஞ்சம் கவனமா இருங்க… நமக்குக் கிடைச்ச இன்ஃபர்மேஷன்ஸ் எதுவும் சரியா இல்ல பாலா… பி கேர்ஃபுல்” என்று சற்றே தீவிரமாய் உரைத்தாள்.
“கண்டிப்பா மேம்”
“ஓகே… இப்ப நீங்க எங்க வந்துட்டிருக்கீங்க?” என்று வினவினாள் அவள்.
“இப்ப தான் முத்துக்கவுண்டன்புதூரை தாண்டுனோம் மேம்… அரசூர் கிட்ட நெருங்கிட்டோம்… அப்பிடியே பீளமேடு – புதூர் மெயின் ரோட்டை பிடிச்சிட்டா நேரா லீ மெரிடீயன்ல போய் தான் கார் நிக்கும்”
“குட்… அப்பப்ப எனக்கு வாட்சப்ல அப்டேட் பண்ணுங்க” என்றதோடு வானதி போனை வைத்துவிட பாலாவிடம் வானதி என்ன கூறினாள் என வினவினான் அருள்மொழி.
“உங்களோட சேஃப்டிக்கு எந்தப் பிரச்சனையும் வந்துடக்கூடாதுனு சொன்னாங்க சார்… நம்ம போற லொகேஷனை அப்பப்ப வாட்சப்ல அப்டேட் பண்ண சொன்னாங்க”
“இசிட்? அவ்ளோ அக்கறை உள்ளவங்க கூடவே வந்துருக்கலாமே” என்று கேலியாகப் பதிலளித்த அருள்மொழி அதன் பின்னர் அவளை மறந்து வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.
கார் அரசூரைக் கடந்து பீளமேடு – புதூர் பிரதான சாலையை அடையும் முன்னர் இருந்த வளைவில் திரும்பிய போது தான் அந்த எதிர்பாரா அசம்பாவிதம் நடந்தேறியது.
அந்த இடதுபக்க வளைவில் திரும்பிய போது திடும்மென அதிவேகத்துடன் வந்த சரக்கு ஏற்றி செல்லும் லாரி ஒன்று அருள்மொழி பயணித்து கொண்டிருந்த காரை இடித்துத் தள்ளவே, இடித்த வேகத்தில் அந்தக் கார் குட்டிக்கரணம் அடித்தது.

உள்ளே பாலா தனது மொபைலில் “ரீச்ட் பீளமேடு – புதூர் மெயின் ரோட்” என வானதிக்கு தகவல் அனுப்பிக் கொண்டிருந்தவன் மொபைல் கையிலிருந்து பறக்க நிலைகுலைந்தான். அவனருகே அமர்ந்திருந்த அருள்மொழியின் தலை லாரி இடித்த வேகத்தில் பக்கவாட்டு கதவின் கண்ணாடியில் பலமாக இடிக்க கார் தலைகீழாகக் கவிழ்ந்ததும் அவன் உடலும் காருக்குள் தூக்கி அடிக்கப்பட்டது.
லாரி இடித்த வேகத்தில் கவிழ்ந்த காரின் கண்ணாடிகள் நொறுங்க அப்படியே கவிழ்ந்த தோற்றத்தில் வேகமாய் சாலையில் உரசி சென்று சற்று தொலைவில் போய் ஓய்ந்தது கார். அக்காட்சியைக் கண்டு அருள்மொழியின் காரைத் தொடர்ந்து வந்த மற்ற காரின் ஓட்டுனர்கள் ஸ்தம்பித்து தத்தம் வாகனத்தை நிறுத்தினர்.
இந்தத் திடீர் விபத்தால் உண்டான சத்தத்தில் அதிர்ந்து போன மக்கள் சுதாரித்து காரை நோக்கி ஓடிவருகையில் அந்த லாரி வந்த வேலை முடிந்தது என அங்கிருந்து வேகமாகத் திரும்பி அவினாஷி சாலையில் அதிவேகத்தில் பறந்து மறைந்தது.
அதற்குள் அங்கே வந்து விட்ட மக்களும் பின் தொடர்ந்த கார்களில் இருந்த கட்சி மற்றும் ஐ.பி.சி பிரமுகர்களும் உடனடியாக ஆம்புலன்சை அழைக்க சிறிது நேரத்தில் அங்கே சைரன் சத்தம் ஒலிக்க ஆரம்பித்தது.
அடுத்த சில நிமிடங்களில் கட்சிப்பிரமுகர்கள் மூலம் யாழினிக்கும் ஐ.பி.சி ஆட்கள் மூலம் வானதிக்கும் விபத்து குறித்த செய்தி பரவியது. யாழினிக்கு விபத்து பற்றிய தகவலைக் கேட்டதும் உயிரே கையில் இல்லை.
தந்தையும் ஆதித்யனும் இறந்த சோகம் முழுதாய் மறையாத இந்நேரத்தில் அருள்மொழிக்கும் விபத்து நேர்ந்தால் அவள் என்ன தான் செய்வாள்?
அப்போதும் அவளுக்குப் பக்கபலமாக வந்து நின்ற அகத்தியன் “இந்த தடவையும் நிலமைய நீ தான் சமாளிக்கணும் யாழ்… இன்னும் கொஞ்சநேரத்துல நியூஸ் சேனல்ஸுக்குத் தகவல் போயிடும்… அவங்களை நான் சமாளிச்சிக்கிறேன்… பார்ட்டி மெம்பர்சையும் தொண்டர்களையும் கவியன்பன் பாத்துப்பார்… நீ அத்தைய கவனமா பாத்துக்கணும்… அதுக்கு அப்புறம் ரெண்டு பேருமா கோயம்புத்தூருக்குக் கிளம்புவோம்” என்றான்.
யாழினியும் அவன் சொன்னபடியே முதலில் அன்னையிடம் விவரத்தைத் தெரிவிக்க வீட்டுக்குக் கிளம்பினாள். தகவல் கேட்டதும் மீனாட்சி உடைந்து அழத் துவங்கவும்
“அருளுக்கு எதுவும் ஆகாதும்மா… பயப்படுற மாதிரி எதுவுமில்லனு கட்சியாளுங்க சொன்னாங்க… இன்னும் கொஞ்சநேரத்துல நானும் அகத்தியனும் ஃப்ளைட்ல கோயம்புத்தூருக்குப் போறோம்… நீங்க தைரியமா இருங்கம்மா… இந்தத் தடவை தப்பா எதுவும் நடக்காது” என்று நம்பிக்கையளிக்கும் விதமாய் பேச முயன்றாள்.
ஆனால் முடிக்கும் முன்னரே அவள் குரலும் அழுகையில் கரைந்தது.
அகத்தியன் சொன்னபடியே சற்று நேரத்தில் அருள்மொழிக்கு நேர்ந்த விபத்து தான் அனைத்து செய்தி தொலைக்காட்சிகளிலும் பிரதான செய்தியாக ஒளிபரப்பானது.
“கோவை மாவட்டம் சூளூர் பகுதியைச் சேர்ந்த வதம்பச்சேரி கிராமத்தில் நெசவாளர்களைச் சந்திக்க சென்ற தமிழ்நாடு முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் திரு அருள்மொழி சுந்தரமூர்த்தி நெசவாளர் சந்திப்பு முடிந்து ஹோட்டலுக்குச் சென்று கொண்டிருந்த போது பீளமேடு – புதூர் பிரதான சாலையில் அவர் பயணித்த காரின் மீது எதிரே வந்த லாரி படுவேகத்துடன் மோதியதால் கார் விபத்துக்குள்ளானது. காரை ஓட்டிய ஓட்டுனர் ஞானதிரவியத்தின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அருள்மொழியும் இந்தியன் பொலிட்டிக்கல் கவுன்சிலின் ஊழியர் பாலசந்திரனும் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்”
இச்செய்தியைப் பார்த்துக் கொண்டிருந்த செங்குட்டுவன் உடனே அழைத்தது வீரபாண்டியனைத் தான்!
“தலைவரே! நம்ம நினைச்சது நடந்துடுச்சு… ராமமூர்த்தி கச்சிதமா அவரோட அண்ணன் மகனை ஹாஸ்பிட்டல்ல படுக்கை வச்சிட்டாரு… அவன் பொழைக்கிறது கஷ்டம்னு அவங்க கட்சி வட்டாரத்துல பேசிக்கிறாங்க”
“இனிமே அவன் பொழைக்க மாட்டான்யா… பொழைக்கவும் கூடாது… ராமமூர்த்தி அவரோட கடமைய செஞ்சுட்டாரு… அந்த அருள்மொழி ஹாஸ்பிட்டலைத் தாண்டுனா பொணமா தான் தாண்டனும்… அதை நீ பாத்துக்கய்யா”
செங்குட்டுவனிடம் பேசி முடித்ததும் பெரும் நிம்மதியாக உணர்ந்தார் வீரபாண்டியன். முகத்தில் குரூரப்புன்னகை!
அரசியலில் எதிரிகள் முளைப்பது சாதாரணம் தான்! எதிரிகளற்ற அரசியல் சுவாரசியமற்றது! அப்படி உருவாகும் எதிரிகளை தங்களது கொள்கையால் தோற்கடிக்க வேண்டுமே தவிர அவர்களை அழிக்க நினைக்கக் கூடாது! ஆனால் இதெற்கெல்லாம் தற்கால அரசியலில் இடமில்லை என்பதற்கு சிறந்த உதாரணம் வீரபாண்டியன்.
அதே நேரம் ராமமூர்த்தியின் இல்லத்தில் வருணா அழுத வண்ணம் மீனாட்சியைக் காண கிளம்பினார்.
“மாமாவும் ஆதியும் இறந்த சோகமே இன்னும் தீரலையே! அதுக்குள்ள அருளுக்கும் இப்பிடி ஆகணுமா? யாரு நம்ம குடும்பத்தை அழிக்குறதுக்கு குறி வைக்காங்க? இத்தனை வருசம் மினிஸ்டரா இருந்திங்கல்ல, உங்க செல்வாக்கை வச்சு இப்பிடி செஞ்சவனை கண்டுபிடிங்க”
ராமமூர்த்தி நினைத்த காரியம் நிறைவேறிய மகிழ்ச்சியை வெளியே காட்டாமல் நடித்தவர் மனைவியை எண்ணி மானசீகமாகத் தலையிலடித்துக் கொண்டார்.
“எனக்குனு இருந்த ஒரே ஒரு தடையும் ஒழிஞ்சதுனு நிம்மதியா இருந்தா இவ வேற”
சோகமாக முகத்தை வைத்துக் கொண்டவர் “என் அண்ணன் மகனை இந்தக் கதிக்கு ஆளாக்குனவனை நான் சும்மா விடுவேனா வருணா? அவனைக் கண்டுபிடிச்சு ஏன்டா ராமமூர்த்திக்கு வேண்டுனவங்க மேல கைவச்சோம்னு நினைச்சு துடிக்கிற நிலமைக்கு நான் அவங்கள கொண்டு வருவேன்… இப்ப நீ அண்ணிக்குத் துணையா இருக்கணும்… உடனே அங்க கிளம்பு” என சாதுரியமாகப் பேசி வருணாவை மீனாட்சியின் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டார்.
அவருக்கு இந்தச் சந்தோசத்தைக் கொண்டாட வேண்டும்! வருணா கிளம்பியதும் உதவியாளரை அழைத்தவர்
“மாணிக்கம் நீ ஏற்பாடு பண்ணுன ஆளு வேலைய கச்சிதமா செஞ்சு முடிச்சிட்டான்யா… எனக்கு இருக்குற சந்தோசத்துல தலையும் புரியல, வாலும் புரியல” என்று துள்ளி குதிக்காத குறையாக பேச
“நான் அவனை காண்டாக்ட் பண்ண டிரை பண்ணுனேன் சார்… ஆனா அவன் என் காலை அட்டெண்ட் பண்ணவே இல்ல” என்றார் அவரது உதவியாளரான மாணிக்கம்.
“இனிமே அவன் பேசுனா என்ன? பேசலைனா என்ன? நமக்குக் காரியம் முடிஞ்சிடுச்சு… அது போதும்”
“ஆமா சார்… அப்பிடியே…” என்று அவர் இழுக்க
“சரி சரி… புரியுதுய்யா! உன் மகளுக்கு டாக்டர் சீட் கிடைச்சிடுச்சுனு நினைச்சுக்க… அப்புறம் உன் பையன் ஆசைப்பட்ட இடத்துல ஷோரூம் திறக்குறதுக்கான ஏற்பாட்டை ஆரம்பிக்க சொல்லு” என்றார் ராமமூர்த்தி.
அருள்மொழியின் கதையை முடிக்க ஆள் ஏற்பாடு செய்ததற்கு மாணிக்கத்திற்கு அவர் அளிக்கும் வெகுமதி இது! இப்போது மாணிக்கம் எட்டாவது சொர்க்கத்தில் இருந்தார் என்றால் ராமமூர்த்தியோ மானசீகமாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவே துவங்கிவிட்டார்.
வீரபாண்டியனும் ராமமூர்த்தியும் கொண்டாட்ட மனநிலையில் இருக்க அருள்மொழியின் விபத்து செய்தியைக் கேட்ட வானதியோ எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் ஆகாஷ் கண்ணப்பனிடம் வீடியோ காலில் உரையாடிக் கொண்டிருந்தாள்.
“எல்லா வேலையும் பெர்ஃபெக்டா நடந்திட்டுருக்குனு நினைக்கப்ப இப்பிடி ஆயிடுச்சே வானதி… டாக்டர்ஸ் என்ன சொல்லுறாங்க?”
“கிரி இப்போ தான் கால் பண்ணுனான் சீஃப்… பாலாவும் அருள்மொழியும் ஐ.சி.யூல இருக்காங்க… டிரைவர் இப்ப அவுட் ஆப் டேஞ்சர்னு சொன்னான்… நீங்க ஒரி பண்ணாதிங்க… நான் அடுத்த ஃப்ளைட்ல கோயம்புத்தூர் கிளம்புறேன் சீஃப்”
ஏ.கேவுடனான வீடியோ கால் முடிவுற்றதும் யோசனையில் ஆழ்ந்தாள் வானதி. அங்கிருந்த தொலைக்காட்சி திரையில் கரம் குவித்தபடி புன்னகைத்துக் கொண்டிருந்தான் அருள்மொழி.
அவனது புகைப்படத்திற்கு கீழே “தமிழக அரசியலில் புதிதாக முளைத்த இந்த நம்பிக்கை நட்சத்திரம் சோதனைகளைக் கடந்து மீண்டும் ஜொலிக்க ஆரம்பிக்குமா?” என வார்த்தைகள் ஓடிக் கொண்டிருந்தது.
அந்த வார்த்தையில் வானதியின் இதழ்கள் விரக்தியான புன்னகையில் விரிந்தது. தொலைக்காட்சி திரையில் அருள்மொழிக்காக அழுது துடிப்பவர்களையும், துடிப்பதை போல நடிப்பவர்களையும் பார்த்து உண்டான புன்னகை தான் அது!
இதை விட பெரும் அநியாயம் தனது குடும்ப உறுப்பினர்களுக்கு அரங்கேறியது! யுவராஜ் இதை விட கொடூரமான முறையில் மரணித்தான்! அச்செய்தியெல்லாம் வெளியுலகுக்கு வெறும் ‘செய்தி’யாக மட்டும் தானே இருந்தது.
இதோ இவர்கள் யாரும் அருள்மொழி எனும் தனிமனிதனுக்காகத் துடிக்கவில்லை. அவனுடன் ஒட்டியிருக்கும் கட்சித்தலைவர் எனும் அடையாளத்திற்காகவும், பெரும் வணிகன் எனும் பெருமைக்காகவும் மட்டுமே இந்தத் துடிப்பு எல்லாம்!
அதாவது இவ்வுலகில் ஒரு மனிதனுக்கு நேர்ந்த அவலத்திற்காக மற்றவர்கள் துடிக்கவோ, துடிப்பது போல நடிக்கவோ வேண்டுமாயின் அம்மனிதனுக்குப் பெரும்பின்புலம் இருந்தாக வேண்டும்! அல்லது அவன் பிரபலமாக இருக்க வேண்டும்!
மற்றபடி சாமானியனுக்கு நேர்ந்த அநியாயங்களைக் கவனிக்கவோ அவனுக்காக வருந்தவோ அவனைப் போல சக சாமானியன் கூட முன்வருவதில்லை!
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction