“வாழ்வில் படிக்க வேண்டுமென்றால் குருவிற்கு மாணவனாய் இரு! அரசியல் படிக்க வேண்டுமென்றால் தலைவனுக்குத் தொண்டனாய் எப்போதும் இருந்து விடாதே! ஏனென்றால் தலைவன் உன்னை வைத்து அரசியல் செய்வானே தவிர அதை உனக்குக் கற்றுத் தர மாட்டான்”
-சாணக்கியர்
ஆஷிஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் அன்றைய தினம் சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தின கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஆண்டுதோறும் டிசம்பர் இரண்டாம் தேதி இத்தினம் அங்கே கொண்டாடப்படுமா என்றால் அதற்கு இல்லையென்ற பதில் தான் பள்ளியின் தரப்பிலிருந்து கிடைக்கும்.
இந்த ஆண்டு மட்டும் என்ன சிறப்பு என்று கேட்டால் அது தான் ஐ.பி.சியின் தேர்தல் யுக்தி. அருள்மொழி மாணவர்களுடன் கலந்துரையாடுவதற்காக பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி அது.
வழக்கமாக இறைவாழ்த்துடன் ஆரம்பித்து நாட்டுப்பண்ணுடன் முடிவடையும் பள்ளி நிகழ்வாக இல்லாமல் இயல்பான கலந்துரையாடலாக அது நடக்க வேண்டுமென்பதே அவர்களின் திட்டம்.
PDF போடாதீர்கள்! Ghost writers, கதைக்கருவைத் திருடாதீர்கள்!
அதன்படி பள்ளி தாளாளர், தலைமையாசிரியர், இதர ஆசிரியர்களுடனான சம்பிரதாய மரியாதை நிகழ்வுகள் முடிவடைந்த பிறகு மாணவர்கள் முன்னே நாற்காலியில் மைக்குடன் அமர்ந்தான் அருள்மொழி.
சற்று தொலைவில் அவனது பாதுகாப்புக்கென உதவியாளர் நின்றிருக்க அவனோ தெளிவான ஆங்கிலத்தில் மாணவர்களுடன் இயல்பாக உரையாட ஆரம்பித்தான்.
“இன்னைக்கு இண்டர்நேஷ்னல் டே ஃபார் த அபாலிஷன் ஆப் ஸ்லேவரி… வாட் இஸ் ஸ்லேவரி இன் யுவர் ஓன் வேர்ட்ஸ்?”
கேள்வியோடு ஆரம்பித்தவனின் கண்கள் மைக்குகள் மாணவர்கள் வசம் இடம் மாறுவதை ஆவலுடன் உற்று கவனித்தன. அவனது கேள்விக்கான பதிலை ஒரு மாணவன் அளிக்கவும் புன்னகையுடன் ஆமோதித்தவன்

“வெல்டன் மை பாய்! யெஸ்! ஸ்லேவரி இஸ் நத்திங், பட் ப்ளைண்ட் ஒர்ஷிப்பிங் ஆப் சம்படி பை ஃபெல்லோ ஹியூமன்… நம்மளோட நிலைய தாழ்த்திக்கிட்டு ஒருத்தரை கண்மூடித்தனமா நம்ம கொண்டாட ஆரம்பிக்கிறோம்னா அது தான் ஸ்லேவரியோட ஸ்டார்ட்டிங் பாயிண்ட்… இதுல இருந்து தான் மாடர்ன் ஸ்லேவரி ஆரம்பிக்குதுங்கிறது என்னோட ஒபீனியன்” என்று கூற அவனது கருத்தை ஆமோதிக்கும் விதமாய் சிலரும் அதற்கு மாற்றுக்கருத்தோடு சிலரும் எழுந்து பேச ஆரம்பித்தனர்.
எதிர்க்கருத்து இருந்தாலும் ஆரோக்கியமான கலந்துரையாடலை மேற்கொள்ள முடியும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் விதமாய் அன்றைய கலந்துரையாடல் அமைந்தது.
“இன்னைக்கு உலகத்துல நாப்பது மில்லியன் மக்கள் நவீன அடிமைத்துவத்தோட பிடியில சிக்கிருக்காங்க… கட்டாயத்திருமணம், பாண்டட் லேபர் சிஸ்டம், ஹியூமன் டிராஃபிக்கிங், குழந்தைத்தொழிலாளர்கள்னு மாடர்ன் ஸ்லேவரியோட கொடூர கரங்கள் இன்னைக்கு இருக்குற ஜெனரேசனை சுத்தி வளைக்கிறது நம்மல்ல நிறைய பேருக்கு தெரியுறது இல்ல… அறியாமை, வன்முறை, மிரட்டல் அப்புறம் அதிகார துஷ்பிரயோகம் இந்த மூனும் தான் ஸ்லேவரிய உரம் போட்டு வளக்குது…
நம்ம யாருக்கும் அடிமையா இருக்கோமானு தினமும் கண்ணாடி பாக்குறப்ப உங்களை நீங்களே கேட்டுப் பாருங்க… கண்டிப்பா இல்லைனு ஆன்சர் வராது… இத அவாய்ட் பண்ணணும்னா முதல்ல நம்ம செய்ய வேண்டியது எந்த விசயத்தையும் அலசி ஆராய்ஞ்சு அதுக்கு அப்புறம் ஏத்துக்கணும்… நிறைய கேள்வி கேக்கணும்… அடிமைப்படுத்த விரும்புறவங்களுக்குக் கேள்வி கேக்குறவங்களை பிடிக்காது… சோ அவங்களே நம்மளை அவாய்ட் பண்ணிடுவாங்க… நெக்ஸ்ட் மிரட்டலை நினைச்சு பயப்படக்கூடாது… உங்களை கீழ தள்ளுறவங்க யாரா இருந்தாலும் எதிர்த்து நின்னு கேள்வி கேட்டுப் பாருங்க, அப்போ தான் சுதந்திரமான வாழ்க்கையோட அர்த்தமே உங்களுக்குப் புரியும்”
மாணவர்கள் கண்ணிமைக்காது அருள்மொழியைக் கவனித்துக் கொண்டிருக்க வெகு நீளமான அந்தக் கலந்துரையாடல் ஐ.பி.சியின் குழுவினரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டது.
அதில் சிறப்பாக கேள்வி கேட்ட மாணவர்களை மேடைக்கு அழைத்து கரம் குலுக்கிப் பாராட்டினான் அருள்மொழி. அந்தக் காணொளி சமூக ஊடகங்களிலும் செய்தி தொலைக்காட்சிகளிலும் வைரல் ஆகுவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் ஐ.பி.சியின் மீடீயா குழுவினரும் த.மு.க கட்சியின் ஐ.டி விங் மக்களும் ஜெகஜோதியாக ஆரம்பித்தனர்.
ஒரு வழியாக அருள்மொழி மாணவர்களுடனான கலந்துரையாடலை முடித்துக் கொண்டு கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த போது அவனது மற்றொரு உதவியாளன் அவனுக்காக காத்திருந்தான்.
அருள்மொழி அரசியலில் அடியெடுத்து வைத்த போதே கட்சிப்பணிகளுக்குத் தனியாகவும் தனது தொழில் சம்பந்தப்பட்ட வேலைகளுக்குத் தனியாகவும் உதவியாளர்களை நியமிக்க வேண்டுமென தீர்மானித்து விட்டிருந்தான்.
அவனது யூனிகார்ன் குழுமத்தின் தினசரி அலுவல்களைக் கவனிக்க நியமிக்கப்பட்ட உதவியாளன் சேகர் தான் அப்போது அருள்மொழிக்காக காத்திருந்தான். அருள்மொழி அரசியல் உதவியாளன் சங்கரை தனது அலுவலக அறைக்கு அனுப்பிவிட்டு சேகரை தனியாக அழைத்து யூனிகார்ன் குழுமத்தின் முதலீட்டாளர்கள் மற்றும் பெருவாரியான பங்குகளை வைத்திருக்கும் பங்குதாரர்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்தான்.
அவனும் அனைத்து விவரங்களையும் கோப்புகளின் உதவியுடன் விளக்கிவிட சேகரை அனுப்பிவிட்டு அலுவலக அறைக்குள் அடியெடுத்து வைக்க எத்தனித்தவனை சங்கரின் குரல் நிறுத்தியது.
“கேம்பெய்ன் மேனேஜர் உங்களுக்காக வெயிட் பண்ணுறாங்க சார்”
அந்தக் குரல் வந்த திசையை நோக்கி திரும்பியவன் சங்கரின் பின்னே கிடந்த நீளமான இருக்கையில் அமர்ந்திருந்த வானதியைக் கண்டதும் கண்களில் சுவாரசியம் கூட “உள்ள வரச் சொல்லுங்க சங்கர்… அப்பிடியே டூ காபி… எக்ஸ்ட்ரா ஸ்ட்ராங் வித் எக்ஸ்ட்ரா சுகர்” என்று இரட்டை விரல்களைக் காட்டிவிட்டு நகர்ந்தான்.
சங்கர் தலையாட்டிவிட்டு வானதியிடம் “நீங்க போகலாம் மேம்” என்க அவளும் அந்த அறைக்குள் பிரவேசித்தாள்.
வந்தவளை இருக்கையைக் காட்டி அமரச் சொன்ன அருள்மொழி அவள் கரங்களில் அமைதியாய் அமர்ந்திருந்த கோப்பினை காட்டி புருவம் உயர்த்தவும்
“எல்லா கான்ஸ்டிடுவன்சிலயும் செல்வாக்கான நபர்கள்னு உங்க பி.ஏ மூலமா நீங்க குடுத்து விட்ட லிஸ்ட்ல இருந்த மெம்பர்ஸ் அண்ட் எக்ஸ் மினிஸ்டர்ஸோட ப்ளஸ் அண்ட் மைனஸ் பத்தின ரிப்போர்ட்… ஃபைனலா எங்க கன்சர்னோட சஜசனையும் ஆட் பண்ணிருக்கேன்” என்றாள் வானதி அமைதியாக.
அருள்மொழி அதை ஒரு கரம் நீட்டி வாங்கும் போதே “கரெக்சன்… உன்னோட சஜசன்னு சொல்லு” என்று கூறவும்
“இம்பாஸிபிள்” என்று வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டவளின் வதனம் எரிச்சலைப் பூசிக்கொண்டது.
அருள்மொழி கமுக்கமாய் சிரித்தபடி கோப்பினை புரட்டும் போதே காபி வந்துவிட சங்கரிடம் இருந்து தனது கோப்பையை வாங்கிக் கொண்டவன் வானதியிடம் மற்றொன்றை எடுத்துக் கொள்ளுமாறு பணித்தான்.
அவளும் காபியை வாங்கிக்கொள்ளவும் சங்கர் வெளியேறினான். ஒரு மிடறு காபி அவள் தொண்டையை நனைத்த போது வெகு இதமாய் உணர்ந்தாள் வானதி.
இயல்பான பழக்கமாய் காபியின் மணத்திற்கு அடிமையான நாசி அதை நுகர்ந்த கணத்தில் கண்கள் தானாய் ரசனையுடன் மூடிக்கொண்டன.
“இந்தப் பழக்கம் மட்டுமாச்சும் மாறாம இருக்குதே! பட் இட்ஸ் அ மிராக்கிள்”
அருள்மொழியின் கேலியில் கண் திறந்தவள் கோபத்தோடு ஏதோ கூற வர அவளைக் கையமர்த்தியவன்
“இன்னும் ஒன் ஹவர்ல நான் யூனிகார்ன் ஆபிஸ்ல இருக்கணும்… சோ இப்போ உன்னோட காச்மூச் பேச்சை கேக்க எனக்கு டைம் இல்ல… கம் டு த பாயிண்ட்” என்று அமர்த்தலாய் மொழிந்தபடி முழு கோப்பை காபியையும் குடித்து முடித்தான்.
வானதி புருவச்சுழிப்புடன் அருந்தி முடித்து கோப்பையை வைத்தவள் “இந்த ரிப்போர்ட்ல இருக்குற நெகட்டிவ் ரிமார்க்ஸ் எல்லாமே அந்தந்த தொகுதிகள்ல இருக்குற எங்க இன்ஃப்ளூயன்சர்ஸ் வச்சு கலெக்ட் பண்ணுன டேட்டா… இது ஃபர்ஸ்ட் லெவல் ரிப்போர்ட்… அடுத்தக் கட்ட ரிப்போர்ட்டுக்கான டேட்டா கலெக்சன் நடந்துட்டே இருக்கு” என்று இயந்திரம் போல கூற அருள்மொழி அந்தக் கோப்பினை புரட்ட ஆரம்பித்தான்.
இடையிடையே பேனா ஸ்டாண்டிலிருந்து எடுத்த கருப்பு பேனாவினால் அதில் எதையோ அடிக்கோடிட்டவன் நடுவில் ஒரு பக்கத்தைப் புரட்டியதும் அதிருப்தியுற்று வானதியை ஏறிட்டான்.
அவள் எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாது இருக்கவும் “இவ வேற, ரீசண்டா ஸ்டேச்சு மோட்லயே சுத்துறா” என்று கடுப்புடன் அவள் முன்னே கோப்பினை விட்டெறிந்தான்.
வானதியின் விழிகள் சினத்துடன் அவனை எரிக்கவும் “வாட் இஸ் திஸ்?” என்று அந்தக் கோப்பில் தனது அதிருப்தியைச் சம்பாதித்த பக்கத்தில் கரத்தால் அடித்துக் கேட்டான் அருள்மொழி.
அதில் ‘திரு. ராமமூர்த்தி, மதுரை மேலூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர்’ என்று எழுதியிருக்க அதனடியில் புகைப்படத்தில் சிரித்த வண்ணம் போஸ் கொடுத்திருந்தார் ராமமூர்த்தி.
வானதியோ இதற்காகவா இவ்வளவு ஆவேசம் என்று பொருள்படும் விதத்தில் இமைகளைச் சுழற்றியவள் அருள்மொழியின் கரத்திற்கு கீழே ‘நெகடிவ் ரிமார்க்ஸ்’ என்று எழுதியிருந்த இடத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை தனது ஆட்காட்டி விரலால் தொட்டுக் காட்டினாள்.
“லுக் ஹியர்… மிஸ்டர் ராமமூர்த்தியோட செல்வாக்கு மதுரை பகுதியில அதிகம் தான்… பட் அந்தச் செல்வாக்கு அவர் செஞ்ச நல்ல காரியத்தால வந்ததானு கேட்டா அதுக்கு ஆன்சர் நோ தான்.. அவர் மேல அந்தப் பக்கத்து மக்களுக்கு இருக்குறது மரியாதை இல்ல, பயம்… பயத்தால வந்த செல்வாக்குக்கு பூரண ஆயுசு இருக்குமானு எனக்குத் தெரியல… ஆனா அதுக்கு நித்திய கண்டம்… அது என்னைக்கு வேணும்னாலும் சரியும் அருள்… மதுரைனாலே ராமமூர்த்தி தான்னு அவர் பிம்பத்த கட்டமைச்சிருக்கார்ல அது அவர் செஞ்ச நல்ல காரியங்களால உருவானது இல்ல… அவர் செஞ்ச தில்லுமுல்லு வேலை, அதால பாதிக்கப்பட்டவங்க லிஸ்ட் எல்லாமே இதுல இருக்கு… இத பாத்துட்டு நீ பேசுனா நல்லா இருக்கும்”
அருள்மொழி எந்தப் பதிலும் அளிக்காது இறுகிய முகத்துடன் கோப்பினை வாங்கிக் கொண்டான்.
அவனது விழிகள் ஒவ்வொரு வரியாக வாசித்தபடியே இடையிடையே வானதி என்ன செய்கிறாள் என்பதையும் ஆராய்ந்தன.
அவள் வழக்கமான இறுகிய பாவனையுடன் அவனது பேனா ஸ்டாண்டை வெறித்தபடி அமர்ந்திருக்க அருள்மொழியும் தனது சித்தப்பா குறித்து அவள் குறிப்பிட்டிருந்த எதிர்மறை குறிப்புக்கள் அனைத்தையும் வாசித்து முடித்துவிட்டு கோப்பிலிருந்து தலையுயர்த்தினான்.
வானதி அவனை என்னவென ஏறிட அவனோ வெகு நிதானமாக “நீ மென்சன் பண்ணிருக்குற எல்லாமே சரினு வச்சுப்போம்… இந்த மாதிரி தப்பு பண்ணாத ஒரு பொலிடிசியனை எனக்குக் காட்டு… அப்புறமா சித்தப்பாவ கேண்டிடேட்டா போடலாமா வேண்டாமானு நான் டிசைட் பண்ணுறேன்” என்றான்.
“அப்பிடி ஒரு அப்பழுக்கில்லாத பொலிடீசியன் இந்த உலகத்துல இல்லனு உனக்கு நல்லாவே தெரியும்… இங்க யார் நல்லவன்னு காட்டுறது என்னோட வேலை இல்ல அருள்… யார் குறைஞ்சபட்சம் கெட்டவன்னு நோட் பண்ணுறது தான் என் ஒர்க்… உன்னோட சித்தப்பா அந்த குறைஞ்சபட்ச கெட்டவன் லிஸ்ட்ல இல்லயே… வாட் கேன் ஐ டூ? என்னோட டீம் எனக்கு ரிப்போர்ட் பண்ணுனாங்க… அத அனலைஸ் பண்ணி நான் ரெடி பண்ணுன ஃபைனல் ரிப்போர்ட் இது… தட்ஸ் ஆல்! இத ஃபாலோ பண்ணி கேண்டிடேட்டை செலக்ட் பண்ணுனா உங்க பார்ட்டிக்கு தான் நல்லது… அப்பிடி இல்லனா எனக்கோ எங்க கன்சர்னுக்கோ எந்த லாஸும் இல்ல… எங்க கடமைய நாங்க செஞ்சுட்டு இந்த எலக்சன் முடிஞ்சதும் அடுத்த எலக்சன்னு போயிட்டே இருப்போம்… ரத்தப்பாசம் உன் கண்ணை மறைக்குது அருள்” என்றாள் வானதி தனது இயந்திரத்தனத்தை விடுத்து எரிச்சல் மேலிட்ட குரலில்.
அருள்மொழி இல்லையென மறுப்பாய் தலையசைத்தவன் “பாசமும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்ல… கட்சிக்காக அவர் எவ்ளோவோ செஞ்சிருக்கார்… அதுக்கு நான் குடுக்கப் போற குறைஞ்சபட்ச மரியாதை… அதாவது நீ சொன்ன குறைஞ்சபட்சம் கணக்கு தான் இதுவும்… அதோட மதுரைல அவ்ளோ செல்வாக்கான மனுசனை விட்டுட்டு வேற யாருக்காச்சும் சீட் குடுத்தா அது பார்ட்டிக்குள்ள பெரிய பிரச்சனைய உண்டாக்கும்… அத சமாளிக்கிற நேரத்துல நான் ரெண்டு பிசினஸ் டீலிங்கை முடிச்சிடுவேன்” என்றான்.
வானதி மெதுவாய் நகைத்தவள் “பாலிடிக்ஸ் ப்ளஸ் பிசினஸ்னு இந்த ரெட்டைக்குதிரை சவாரிய கொஞ்ச நாளுக்கு நிறுத்தி வச்சிட்டு பாலிடிக்ஸ்ல மட்டும் கான்சென்ட்ரேட் பண்ணுறது தான் உன்னோட அரசியல் எதிர்காலத்துக்கு நல்லது அருள்” என்றாள்.
அவள் எதிரே இருப்பவனோ “இந்த அட்வைஸ் உங்க கிளையண்ட் எல்லாருக்கும் குடுக்குறதா? இல்ல ஸ்பெஷலா எனக்கு மட்டும் தானா?” என்று ஏளனமாக கேட்க
“நோ நோ! இது ஒண்ட் அண்ட் ஒன்லி தி கிரேட் அருள்மொழிக்காக மட்டும் தான்… ஏன்னா உன்னை மாதிரி கத்துக்குட்டி பொலிடீசியன் கூட இது வரைக்கும் நாங்க ட்ராவல் பண்ணுனது இல்ல” என்று அதே ஏளனத்துடன் பதிலளித்துவிட்டு எழுந்தாள் வானதி.
அருள்மொழியின் முகத்தில் கடுப்பேறுவதை திருப்தியாக கவனித்தவள் “நீ நான் சொல்லுறத கேக்க மாட்ட… ஆனா ஒன்னு, இன்னைக்கு நீ எடுக்குற முடிவுக்கான விலைய கூடிய சீக்கிரமே குடுப்ப… மார்க் மை வேர்ட்ஸ்” என்று உறுதியானக் குரலில் சொல்லிவிட்டு அவனது பதிலுக்காக காத்திராமல் நடையைக் கட்டினாள்.
அருள்மொழி வெளியேறுபவளைப் பார்த்தபடி சில நொடிகள் அமர்ந்திருந்தவன் தனது முன்னே விரிந்து கிடந்த கோப்பினை மீண்டும் ஒரு முறை வாசிக்க ஆரம்பித்தான்.
வேப்பமரத்துக்கு கிளை முதல் வேர் வரை நெய்யும் பாலும் ஊற்றி வளர்த்தாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. அதே போல தான் தீயவர்களும் என்ற சாணக்கியரின் கூற்று துரோகிகளுக்கும் பொருந்தும்.
என்ன தான் நாம் அவர்களை நன்முறையில் நடத்தினாலும், நாம் அறிந்த அனைத்தையும் கற்பித்தாலும் அவர்கள் அனைத்தையும் நம்மிடமிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் நமக்கு துரோகம் தான் இழைப்பர்! எப்படி வேம்பு என்றால் கசப்பது இயல்போ அதே போலத் தான் துரோகம் என்பது துரோகிகளின் இயல்பு! அதை நம்மால் ஒரு போதும் மாற்ற இயலாது!
இது வாசிப்பிற்கானத் தளம்! இங்கே கதைத்திருட்டுக்கு இடமில்லை!
📚✨ Join NM Tamil Novel World — get exclusive updates, sneak peeks, and the magic of Tamil stories delivered straight to your inbox!
Share your Reaction